Tuesday, December 20, 2016

தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(மூன்றாம் பாகம்)

 ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், வேலிப் பிரச்சினைக்கு பக்கத்து வீட்டுக் காரனுடன் சண்டை பிடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தம்முயிரை அர்ப்பணித்து போராட முன்வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. வேலியோரம் நட்ட மரத்தை சரித்து விட்டு, ஆறங்குலம் தள்ளி புதிய வேலி கட்டி, சிறு துண்டு காணியை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள் பலர் இருந்தனர். பக்கத்து வீட்டுக்காரன் அதைக் கண்டு பிடித்து, வாக்குவாதப் பட்டு, கத்தி எடுத்து வெட்டுப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தவர்கள் வேலிக்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், எல்லையோர நகரமான வவுனியாவில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தவர் மீது அவநம்பிக்கை எழக் காரணம் அவர்களது பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) மனப்பான்மை. கொழும்பில் வசித்த தமிழர்களில், அவர்கள்  பெரும்பாலும் அரசாங்க உத்தியோகங்களில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது மாதிரி, கொழும்பில் வேலை செய்து கொண்டு, மணி ஓடர் மூலம் ஊரில் இருந்த பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான வருமானமாக மணி ஓர்டர் பொருளாதாரம் இருந்தது. அந்த நேரம் கொழும்பில் வாழ்ந்த என்னுடைய அப்பா, அம்மாவும் அவர்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர்.

கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த பலர் கொழும்பு வாசிகளாகி விட்டனர். இலங்கையின் பொருளாதார மையத்தில் வீடெடுத்து, உத்தியோகம் பார்த்துக் கொண்டு, நகரத்தின் வசதிகளை அனுபவித்து வந்தனர். 1958, 1977, 1983 என்று அடுத்தடுத்து இனக்கலவரங்கள் நடந்த போதிலும் கொழும்பை விட்டு செல்லவில்லை. கலவரம் நடக்கும் பொழுது அகதிகளாக யாழ்ப்பாணம் சென்று, அதிக பட்சம் ஒரு மாதம் இருந்து விட்டு கொழும்புக்கு திரும்பிச் செல்வார்கள். 1983 க்குப் பின்னர் ஒரு பகுதியினர் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த விடயங்களை நான் எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், "சிங்களவனிடம் அடி வாங்கிய" ஒரு காரணத்தால் மட்டும் யாரும் போராட வருவதில்லை. இனக் கலவரக் காலத்தில் கொழும்பில் நடந்த படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சொத்தழிவுகளை அனுபவித்தவர்கள் கொழும்புத் தமிழர்கள். நாங்களும் அந்தக் கோரக் கதைகளை சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டு வளர்ந்தோம். இருப்பினும், ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட கொழும்புத் தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தது.

உண்மையில், ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டம் கொழும்பில் தான் தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தற்காப்பு நடவடிக்கையாக கூட எதுவும் நடக்கவில்லை. அவர்களில் யாரும் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் இணையவில்லை. அதற்கு மாறாக, தலைநகரில் தாம் ஏற்கனவே செய்து வந்த தொழில்களை தொடர்ந்தார்கள்.  

அதற்குக் காரணம் கொழும்புத் தமிழரின் பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை அன்றி வேறென்ன? ஆயுதப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன், வீட்டைத் துறந்து, பதவியை இழந்து, தலைமறைவு வாழ்க்கை வாழத் தயாராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசியத் தலைவர்களும் கொழும்பில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் கொழும்பில் தான் தமிழ்த் தேசிய கொள்கை வகுப்பது சம்பந்தமான கூட்டங்களை நடத்தினார்கள். நான் சிறுவனாக இருந்த காலங்களில், அந்தக் கூட்டங்களுக்கு அப்பாவுடன் சென்று வருவது வழக்கம். அதைத் தவிர, சைவ சமயத்தின் பேரில் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் சங்கங்களும் செயற்பட்டு வந்தன.

யாழ்ப்பாணத்தை விட, கொழும்பில் தான் தமிழ்க கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருவதாகவும், பக்தியோடு கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை இங்கே அதிகம் என்றும் அப்பாவும், அம்மாவும் அடிக்கடி சொல்லி வந்தனர். மதமும், கலாச்சாரமும் அந்தஸ்தின் அடையாளமாக இருப்பதை நான் கொழும்பில் கண்டுகொண்டேன்.

1983 இனக்கலவரத்திற்கு முன்னரே நாங்கள் கொழும்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். அது வரையும் கொழும்பு வாசிகளாக இருந்த நாங்கள், யாழ்ப்பாணவாசிகளாகி விட்டோம். எனது வாழ்க்கையில் நடந்த இந்த மாற்றம் தான், ஈழப் போராட்ட அரசியலிலும் நாட்டம் கொள்ள வைத்தது. நாங்கள் தொடர்ந்தும் கொழும்பில் வாழ்ந்திருந்தால், இன்று நானும் எனது நண்பர்கள் மாதிரி எதாவதொரு நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். அரசியல் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.

யாழ்ப்பாண வாழ்க்கையில், வர்க்கங்களுக்கு இடையில் ஊடாட முடிந்தது. எங்களது உறவினர்கள் மத்தியில் கூட இரண்டு வர்க்கங்களை காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிலர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்தனர். மறுபுறத்தில், பலர் கூலித் தொழிலாளர்களாக ஏழ்மையில் வாழ்ந்தனர். அப்போது பதினாறு வயதாகி விட்டதால் சமூகத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓய்வுநேரம் கூட எவ்வாறு மாறுபடுகின்றது என்பதைக் கண்கூடாக கண்டேன். மேட்டுக்குடியினர் ஓய்வு நேரத்தில் கூடியிருந்து, அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம், ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினர் எந்தவித அரசியல் ஆர்வமும் இன்றி வாழ்ந்தனர். ஒரு சிலர், ஓய்வு நேரத்தில் குடிப்பதும், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு பொருளாதாரச் சுரண்டல் பற்றிய அறிவு கிடையாது என்று மேட்டுக்குடியினர் நினைக்கின்றனர். அது தவறு. கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் நண்பர்களுடனான உரையாடலில் அவர்களே பல தகவல்களை சொன்னார்கள். தங்களை வேலைக்கு வைத்திருக்கும் தொழில் வழங்குனர்கள், எவ்வாறு குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதை அவர்கள் என்னிடம் விளக்கமாக கூறி இருக்கிறார்கள்.

ஒரு தடவை அப்பா நூலகத்தில் விற்கப் பட்ட பழைய நூல்களை கட்டுக் கட்டாக வாங்கி வந்திருந்தார். அவற்றிற்குள் சில மார்க்சியப் புத்தகங்களும் இருந்தன. லெனின் எழுதிய "நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" என்ற சிறிய நூலும் இருந்தது. அப்போதே அதை வாசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு இலகுவாக எழுதப் பட்டிருந்தது. அந்த நூலைக் கொண்டு சென்று, கூலித் தொழில் செய்யும் நண்பர்களுக்கு காட்டி விளங்கப் படுத்தினேன். லெனின் எழுதிய பல கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். அதற்குக் காரணம், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உள்ளது என்பது தானே?

இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்று சொல்லப் படுவதற்கு ஏற்றவாறு யாழ்ப்பாண பொருளாதார அமைப்பும் இருந்தது. பிரிட்டிஷ் காலனிய காலத்தில் கட்டப் பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையை தவிர வேறு தொழிற்துறைகள் அங்கே இல்லை. அதனால், இந்த இரண்டு தொழிலகங்களை தவிர வேறெங்கும் குறிப்பிட்டளவு தொழிலாளர் வர்க்கம் உருவாகி இருக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் மில்க்வைற் சவர்க்காரம் எல்லாக் கடைகளிலும் விற்பனை செய்யப் பட்டது. உடுப்புகள் கழுவுவதற்கு பாவிக்கப் பட்ட சன்லைட் சவர்க்காரம் ஒரு தென்னிலங்கை சிங்களத் தயாரிப்பு. அதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்து தமிழ் முதலாளியின் உள்ளூர் தயாரிப்பாக மில்க்வைற் இருந்தது. யாழ் குடாநாட்டைப் பொருத்தவரையில், பெருமளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையை கொண்டிருந்தாலும் அது தனி ஒரு முதலாளியால் நடத்தப் பட்டது.

நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நல்லூர்க் கோயிலுக்கு போவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பிக் குளிக்க வேண்டும். நல்லூர்க் கோயில் சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த படியால் நடந்து சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவோம். 

நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புற வீதி

நாங்கள் நல்லூர் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும், அங்கே மில்க்வைற் முதலாளியை அல்லது அவரது எடுபிடிகளை காணலாம். "சிவநெறிச் செல்வர்", "கொடை வள்ளல்", என்று தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக் கொண்ட மில்க்வைற் முதலாளி தனது பக்தியை பறைசாற்றிக் கொண்டிருப்பார். தேவாரம், திருவாசகம் அடங்கிய சிறு பிரசுரங்களை பக்தர்களுக்கு  இலவசமாக விநியோகித்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு பிரசுரத்திலும் "இது மில்க்வைற் அன்பளிப்பு" என்று தவறாமல் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும், பக்தர்களுக்கு தேவாரப் புத்தகம் அன்பளிப்பு செய்யும் சாட்டில், விளம்பரம் தேடும் மில்க்வைற் முதலாளியின் செயல் அருவருப்பை ஊட்டியது. அவரது கடவுள் பக்தி போலியானது என்பது புரிந்தது. யாழ் இந்துக்கல்லூரி சுற்றாடலில் தான் மில்க்வைற் தொழிற்சாலையும் அமைந்திருந்தது. அப்போது தமக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தகவலும் எமது காதுகளுக்கு எட்டியிருந்தது.

வீட்டில் தாயை பட்டினி போட்டு விட்டு மகன் அன்னதானம் செய்தானாம். அது மாதிரி, மில்க்வைற் முதலாளி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்தார். அதைக் கூட ஒழுங்காக கொடுப்பதில்லை. அவரது சவர்க்காரத் தொழில் நட்டத்தில் ஓடியதாக சாட்டுச் சொல்ல முடியாது. (அளவுக்கு மிஞ்சி பணம் சேர்ந்ததால் தானே "கொடை வள்ளல்" ஆனார்?) யாழ் குடாநாட்டு கடைகள் எங்கும், மில்க்வைற் சன்லைட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையானது. சிறுவயதில் பொதுவுடமைக் கருத்துக்களை இயல்பானதாக உள்வாங்கிக் கொள்வதற்கு மேற்படி அனுபவங்கள் காரணமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் முதலாளி தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உழைப்பை சுரண்டுவதும், அவ்வாறு திருடிய பணத்தில் பக்திமானாக கொடை வள்ளல் வேஷம் போடுவதும், சிறு பிள்ளைகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்கள். 

இதற்கெல்லாம் யாரும் மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களைப் படித்து பட்டம் வாங்கியிருக்கத் தேவையில்லை. படிப்பறிவில்லாத பாமரத் தமிழர்களுக்கும் இலகுவாகப் புரியும். ஆனால், ஒரு சில மெத்தப் படித்த தமிழ் அறிவுஜீவிகள் மட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளாத காரணம் என்ன? அவர்களுக்கு அந்தளவு அறிவு இல்லையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: