Wednesday, December 21, 2016

ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (நான்காம் பாகம்)

"தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் நிறையப் பேருண்டு. படிப்பறிவில்லாத பாமரர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், ஒரு சில வணிகவியல் பட்டதாரிகளும் அப்படிச் சொல்வது ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம். ஏனென்றால், பொருட்களை சந்தைப் படுத்தல் தொடர்பான மார்க்கெட்டிங் பாடத்தில், மிகத் தெளிவாக வர்க்கப் பிரிவினைகள் பற்றி விளக்கி இருப்பார்கள்.

சந்தைப் படுத்தலில் வர்க்க வேறுபாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார விதி. பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சி, உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்பதும், அதற்குப் பின்னரே வர்க்க வேறுபாடுகள் தோன்றின என்பதும், எமது நாட்டு பாட நூல்களில் எழுதப் படவில்லை. இலங்கையும் ஒரு காலத்தில் ஆங்கிலேய காலனியாக இருந்ததையும், அப்போது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி அறிமுகப் படுத்தப் பட்டதையும் பலர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனது தந்தைக்கு வர்க்கங்கள் பற்றிய புரிதல் இருந்தது. அதை அவராகவே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கூடவே ஒரு பிழையான தகவலையும் சொன்னார். இலங்கையில் "மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக" கூறினார். எனது தந்தை மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் கூட, அப்படித் தான் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது 28 வயது வரையும், அதை நானும் உண்மை என நம்பி இருக்கிறேன். அப்போது நெதர்லாந்தில் சந்தித்த ஒருவர் மூலம் அறிவுக் கண் திறந்தது. அவர் நெதர்லாந்தில் ஜனநாயகத்தில் அதிக அக்கறை செலுத்தும் D66 என்ற கட்சி உறுப்பினரான இளம் பெண் ஆவார். இலங்கையில் உள்ள வர்க்கங்களின் விகிதாசாரம் பற்றி விசாரித்த பொழுது, நான் அப்பா சொன்ன விளக்கத்தை அப்படியே ஒப்புவித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. நெதர்லாந்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைவு என்று சொன்னார். நான் சொல்வது உண்மையானால், இலங்கை உலகிலேயே தனித்துவமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.

உண்மையில் அதற்குப் பிறகு தான், நானும் வர்க்கங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதே வருடம், நெதர்லாந்தில் பல்கலைக் கழக நுழைவுப் பரீட்சைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது வரலாறு, மற்றும் சமூகவியல் பாட நூல்களில் வர்க்கம் பற்றி எழுதி இருந்ததை ஆழமாக படித்தறிந்தேன். 

மேற்குலக நாடுகளில் உள்ள வர்க்க முரண்பாடு பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வர்க்க மக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள் என்ற உண்மையை, நானும் காலம் தாழ்த்தித் தான் அறிந்து கொண்டேன் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதினான்கு வயது வரைக்கும், நானும் தெய்வ நம்பிக்கை கொண்ட, ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட சாதாரணமான சிறுவனாகத் தானிருந்தேன். எனது முதலாவது கட்டுரையும் சைவ சமயம் பற்றியது தான். கடவுளை வழிபடுவது பற்றி நான் எழுதிய கட்டுரை கொழும்பு சைவ முன்னேற்றக் கழகம் வெளியிட்ட ஆண்டு மலரில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் சிவபுராணம் மனனம் செய்து ஒப்புவித்து பரிசு வாங்கி இருக்கிறேன். தேவாரம் பண்ணோடு பாடுவதற்கு அறிந்து வைத்திருந்தேன். பெரிய புராணம், கந்தபுராணம் நூல்களை எல்லாம் வாசித்திருந்தேன். 


அந்த வயதில் எனக்குள் எழுந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், எதற்காக பணக்காரர்களுக்கு வசதியை அள்ளிக் கொடுத்து, ஏழைகளை கஷ்டப் படுத்தி, மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டும்? அந்த வயதிலேயே, இந்துகளின் "கர்ம வினைப் பயன்" கோட்பாடு அபத்தமாகப் பட்டது.  நான் அறிந்த வரையில் ஏழைகள் தான் அதிக நேரம் கோயில்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

சிறு வயதில், எனது பெற்றோருடன் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பதைக் கண்டேன். கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களும் கடவுளிடம் பிச்சை தான் கேட்டார்கள். ஆனால், அதை அவர்கள் நாகரிகமாக வரம் என்று சொன்னார்கள். வெளியே வந்த பக்தர்கள் தம்மிடம் இரந்தவர் தட்டில் சில்லறைகளை போட்டார்கள். அதை அவர்கள் பிச்சை என்றார்கள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எனக்கு ஒரு தத்துவத்தை போதித்தார்கள். ஒரு சாதாரணமான பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுள் எப்படி சக்தி படைத்ததாக இருக்க முடியும்?

யாழ் மேட்டுக்குடியினரின் பாடசாலை என்று பெருமை தேடிக் கொள்ள விரும்பிய யாழ் இந்துக் கல்லூரி, ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தனது மாணவர்களை மூளைச்சலவை செய்து வந்தது. நான் படித்த காலத்தில் ஓர் இந்து அறிஞர் ஆன்மீக சொற்பொழிவாற்ற வந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் கேள்வி கேட்கச் சொன்னார். "இலட்சக் கணக்கான குழந்தைகள் பாலின்றி தவிக்கும் நாட்டில் எதற்காக சாமி சிலைகளுக்கு குடம் குடமாக பால் ஊற்றுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்டான்.

அதற்கு அவர், "கடவுளுக்கு பாலபிஷேகம் செய்தால் அவர் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கிடைக்க அருள் செய்வார்." என்று சொல்லிச் சமாளித்தார். ஆனால், அந்தப் பதில் எங்களை திருப்திப் படுத்தவில்லை. சாமிக்கு பாலபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டு கால வழக்கம். ஆனால் வறுமை இன்னும் ஒழியவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் பாலும் கிடைப்பதில்லை. பாவம், இதற்கெல்லாம் பதில் கூறும் அளவிற்கு அந்த ஆன்மீக அறிஞர் படித்திருக்கவில்லை.

இலங்கை ஒரு "மதச் சார்புள்ள நாடு". அங்கு பள்ளிக்கூடத்தில் மதத்தை பிரித்துப் பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பாடசாலைகளில், ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். "சரஸ்வதி கல்விக் கடவுள்" என்பது ஒரு சாட்டு மட்டுமே. 

நான் படித்த காலத்தில், எட்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டோம். நாரதரை, சரஸ்வதியை கிண்டலடிக்கும் பகுத்தறிவு நாடகம் அது. ஏதோவொரு புத்தகத்தில் நான் தான் அதை வாசித்து விட்டு நாடகமாக்குவோம் என்று சொன்னேன். நான் அதில் பெண் வேடமிட்டு, அதாவது சரஸ்வதியாக நடித்திருந்தேன். நாடகத்தில் இருந்த நகைச்சுவை வசனங்கள் மாணவர்களை சிரிக்க வைத்தன. பலருக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நாங்கள் ஒன்பதாவது, அல்லது பத்தாவது வகுப்புப் படிக்கும் பொழுது, யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கண்காட்சிகள் நடந்தன. யாழ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கண்காட்சி பார்க்க சென்றிருந்தோம். அப்போது, பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மூளையின் செயற்பாடுகள் குறித்து படம் கீறி வைத்திருந்தனர். மூளாய் (இடத்தின் பெயர்) வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த இடத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன தகவல்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. எமக்கு சிறுவயதில் இருந்தே கடவுளைப் பற்றிய அச்சவுணர்வு திணிக்கப் படுகிறது. அது மூளையில் சேமிக்கப் படுகிறது. வளர்ந்த பின்னர் நாங்கள் அதை உண்மை என்றே நம்புகின்றோம் என்றார். தான் கடவுள் இல்லை என்று சொல்லி வருவதாகவும், அதனால் தனக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்றும் சொன்னார். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர் தான், நூலகத்தில் இருந்து மனோதத்துவ நூல்களை இரவல் எடுத்து வாசித்தேன். கடவுளை நம்புவது மனிதர்களின் உளவியல் பிரச்சினை என்பது அதற்குப் பிறகு தெரிய வந்தது.

நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்களது வகுப்பில் சசிகாந்தன் என்ற நண்பன் இருந்தான். இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்ப தாளில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்திருந்தான். அவன் ஒரு நாள் வகுப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "கடவுள் இல்லை" என்பதே அந்த அதிர்ச்சியான தகவல். வகுப்பில் கெட்டிக்கார மாணவனான அவனை எல்லோரும் விஞ்ஞானி என்று அழைப்போம். தானாகவே சில கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறான். அப்படியான ஒருவன் கடவுள் இல்லை என்று வாதிடும் பொழுது அலட்சியப் படுத்த முடியவில்லை.

எமது வகுப்பில் அடிக்கடி கடவுள் பற்றிய வாக்குவாதங்கள் நடந்தன. சிலர் சசிகாந்தனை தீவிரமாக எதிர்த்தார்கள். பலர் குழம்பினார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே அவன் சொன்னதைக் கேட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடவுள் பற்றிய எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் தந்தான். ஓய்வுநேரங்களில், வண்ணார்பண்ணையில் இருக்கும் அவனது வீட்டுக்கு சென்றும் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது எனக்கு வேறு தொடர்புகள் மூலமாக, மார்க்சியம் பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தது. அது பற்றிய தகவல்களை சசிகாந்தனுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்ற நேரம், என்னிடம் விசாரித்து ஈரோஸ் இயக்கத் தொடர்பை பெற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தான். சில வருடங்களுக்குப் பின்னர், போர்ச் சூழல் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவிய இனந் தெரியாத நோய்க்கு பலியாகி இறந்ததை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் அப்போது புலம்பெயர்ந்து சென்று விட்டேன்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், சாதி, வர்க்கம், மதம் என்பனவற்றுக்கு இடையிலான நெருங்கிய உறவு தெரிய வந்தது. இவையெல்லாம் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருந்தது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்து கொண்டு நிலைத்து நிற்கின்றன.

சாதிப் பாகுபாடு காரணமாக, ஒரே மதத்தை சேர்ந்த மக்களை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டுப்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அப்போது அடக்குமுறையாளர்கள் பக்கம் நின்ற கடவுள் எவ்வாறு சக்தி படைத்தவராக இருக்க முடியும்? இதே கேள்வி தான் கொழும்பில் தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் கொல்லப் பட்ட நேரத்திலும் எழுந்தது. நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து விட்டு, இன ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தால் அங்கும் கடவுளின் சக்தி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

வட பகுதியில் நடந்த விமானக் குண்டுவீச்சுகளில் இந்துக் கோயில்கள் சேதமானதை நேரில் கண்டிருக்கிறேன். அப்போது "இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போயின?" என்று சாதாரண பாமர மக்களே கேட்டிருக்கிறார்கள். போர்ச் சூழலில் வாழ்ந்த படியால், அதன் குரூரங்களை நேரில் கண்ட படியால், என்னைப் பொருத்தவரையில் அது கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது.

போரில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த பிறகும், பலர் கோயில்களில் தவமிருந்தார்கள். இங்கே தான் கடவுள் பற்றிய மனோதத்துவக் கோட்பாடு உதவுகின்றது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்ட மக்கள் ஒன்றில் புரட்சி செய்வார்கள் அல்லது கடவுளிடம் முறையிடுவார்கள்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2.வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!

No comments: