Friday, December 16, 2016

அலெப்போவின் முள்ளிவாய்க்கால்


சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அது ரஷ்ய விமானக் குண்டுவீச்சுகளின் பின்னர், சிரிய அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரியாவின் ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை என்று கருதப் படுகின்றது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதியில் வெல்லப் போவது யார், தோற்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அலெப்போ யுத்தம் இருந்துள்ளது.

சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. அனேகமாக எல்லா "விடுதலை" இயக்கங்களும், அல்கைதா அல்லது ஐ.எஸ். பாணியில் அமைந்த, இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் தான். சுன்னி முஸ்லிம் சமூகத்தினரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய அந்த இயக்கங்கள், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும், ஷியா முஸ்லிம்களையும் இனச் சுத்திகரிப்பு செய்து விட்டன. (சிரியா அடிப்படையில் ஒரு பல்லின கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் குழுமங்களின் தேசம்.)

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், சிரிய இராணுவம் ஆட்பலம், ஆயுதபலம் குறைந்திருந்த படியால், அலெப்போ போன்று பல பிரதேசங்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களினால் கைது செய்யப் பட்ட, அல்லது அவர்களிடம் சரணடைந்த சில நூற்றுக் கணக்கான படையினர் பொது இடங்களில் கழுத்து வெட்டிக் கொல்லப் பட்டனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருந்தன.

சரணடைந்த சிரியப் படையினர் மட்டுமல்ல, ஷியா, கிறிஸ்தவ மற்றும் பல சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும், "தவறான இனத்தில் பிறந்த காரணத்தால்" படுகொலை செய்யப் பட்டனர். வாழ்வா, சாவா போராட்டத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, சிரிய இராணுவத்தினரும், சிறுபான்மை சமூகத்தினரும் அதிபர் ஆசாத் தலைமையின் கீழ் அணிதிரண்டனர். அப்படியானவர்களுக்கு ஆசாத் மீதான விசுவாசத்தை விட, தாம் சார்ந்த சமூகங்களின் பாதுகாப்பு முக்கியமாகப் பட்டதால் போர் தீவிரமடைந்தது. கிறிஸ்தவ, ஷியா, அலாவி போன்ற சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த வீரர்களை கொண்ட National Defence Force (NDF) என்ற ஊர்காவல் படைகள் சிரிய இராணுவத்தின் பக்கம் நின்று போரிட்டன.

இதற்கிடையே லெபனான் ஹிஸ்புல்லாவும் ஆசாத்திற்கு உதவியாக வந்தது. லெபனானில் எண்பதுகளில் நடந்த தசாப்த கால உள்நாட்டுப் போரில், சிரிய அரசு ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தை ஆதரித்திருந்தது. அந்த செஞ் சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக, ஆயிரக் கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் தொண்டர் படையணியாக சிரியா போர்க்களத்தில் குதித்தனர். அவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் வல்லரசாக கருதப் படும் ஈரானும், தன பங்கிற்கு இராணுவ ஆலோசகர்களை அனுப்பி இருந்தது. இவர்கள் எல்லோரும் அலெப்போ யுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்கள் எவை? 
மேற்குலகால் ஆதரிக்கப் பட்ட அந்தக் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம் சமூகத்தினர். சிரியாவில் மதத்தால் முஸ்லிமாக இருந்தாலும், சுன்னி, ஷியா, அலாவி என்று ஒவ்வொரு முஸ்லிம் மதப் பிரிவினரும் தம்மை தனித் தனியான இனமாக கருதிக் கொள்கிறார்கள். ஆகையினால், இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்கள் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை சுன்னி- முஸ்லிம் பிரிவினர் மீது திணித்து வந்தன. மது பாவனை தடை செய்யப் பட்டது. இசைத்தட்டில் பாடல்கள் கேட்பது கூட தடை செய்யப் பட்டது. பெண்கள் முகத்தை மூடும் கருநிற அங்கி அணிய கட்டாயப் படுத்தப் பட்டனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்திற்கும் இடையில் பெரிய கொள்கை வேறு பாடு எதுவும் கிடையாது. ஐ.எஸ். இயக்கம், சுன்னி- முஸ்லிம் சமூகத்தவரின் ஏக பிரதிநிதி தான் மட்டுமே என்று உரிமை கோருகின்றது. ஏனைய இயக்கங்களை "துரோகக் குழுக்கள்", "ஒட்டுக் குழுக்கள்" என்று குற்றஞ் சாட்டி தடை செய்துள்ளது. இதனால் அடிக்கடி சகோதர யுத்தங்கள் நடந்துள்ளன.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இயக்கங்கள் பற்றிய விபரம்:

1. சுதந்திர சிரிய இராணுவம்
சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய சுன்னி- முஸ்லிம் அதிகாரிகள், படையினர் உருவாக்கிய இயக்கம். அவர்களை "நல்ல போராளிகள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்கா நேரடியாக உதவி செய்து வந்தது. மேற்கத்திய ஊடகங்களில் அவர்கள் "மிதவாதிகளாக" காட்டப் பட்டனர். ஆனால், நடைமுறையில் சுதந்திர சிரிய இராணுவம் கூட இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் தான். மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் இருக்கலாம். ஆனால், அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். உண்மையில் சுதந்திர சிரிய இராணுவம் என்பது பல குழுக்களின் ஐக்கிய முன்னணி. அதற்கென பொதுவான தலைவர் எவரும் இல்லை.

2. நூர் அல் டின் அல் சென்கி (Nour al-Din al-Zenki)
மிகச் சிறிய இயக்கம். போராளிகளின் மொத்த எண்ணிக்கை 1500 இருக்கலாம். மத அடிப்படைவாத ஜிகாத்திற்காக போராடும் இந்த இயக்கத்திற்கு சி.ஐ.ஏ. நேரடியாக ஆயுதங்களை கொடுத்துதவி வந்தது! நிச்சயமாக, தாம் ஒரு ஜிகாதி இயக்கத்திற்கு உதவினோம் என்ற உண்மையை அமெரிக்கா வெளியில் சொல்லப் போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர், சிரிய அரசுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக ஒரு 12 வயது சிறுவனை கழுத்து வெட்டி கொலை செய்த கோரக் காட்சி வீடியோ பதிவாக வெளியாகி உலகம் முழுவதையும் உலுக்கி இருந்தது. அந்தக் குரூரச் செயலை செய்த பெருமை இந்த இயக்கத்தை சேரும்.

3. அஹ்ரர் அல் ஷாம் (Ahrar al-Sham)
ஆப்கானிஸ்தனில் தாலிபான் செய்தது போல, சிரியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க விரும்பும் கடும்போக்கு இயக்கம். 2014 ம் ஆண்டு வரையில் ஐ.எஸ்.சுடன் சேர்ந்து இயங்கி வந்தது. ஆனால், ஐ.எஸ். காரர்கள் இந்த இயக்கத்தின் போராளிகள் சிலரை சுட்டுக் கொன்ற படியால் பிரிந்து சென்று தனியாக இயங்கியது. ஐ.எஸ். சிரியாவுக்கும் அப்பால், உலகம் முழுவதும் இஸ்லாமியப் புரட்சியை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. அதற்கு மாறாக அஹ்ரர் அல் ஷாம் சிரியாவுக்குள் நின்று கொள்கிறது. மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை இருபதாயிரம் இருக்கலாம்.

4. பதே அல் ஷாம் (Fateh al-Sham)
மிக முக்கியமாக, அல்கைதாவுடன் தொடர்புடைய இயக்கம் இது தான். அல் நுஸ்ரா என்றால் எல்லோருக்கும் தெரியும். அண்மைக் காலத்தில் தான் பதே அல் ஷாம் என்று பெயர் மாற்றியது. தீவிரவாதம் இல்லாத, மிதவாத இயக்கமாக காட்டுவது அதன் நோக்கம். இதன் மூலம் சர்வதேச ஆயுத, நிதி உதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டது. நீண்ட காலமாக, அல்நுஸ்ராவுக்கும், ஐ.எஸ். இற்கும் அடிக்கடி சகோதர யுத்தம் இடம்பெற்று வந்தது. இத்தனைக்கும் இரண்டுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் கிடையாது. அல்நுஸ்ராவும் இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் ஜிகாத் போராட்டம் நடத்துவதை குறிக்கோளாக கொண்ட இயக்கம் தான். அதனால் சர்வதேச தொண்டர்களின் உதவியும் கிடைத்திருந்தது. பல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமிய இளைஞ்ர்கள், சிரியாவுக்கு போராடச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அல் நுஸ்ராவிலும், இன்னொரு பகுதியினர் ஐ.எஸ். இலும் சேர்ந்தனர். எதிர்பாராத விதமாக அவ்விரண்டு இயக்கங்களின் சகோதர யுத்தத்டிற்குள்ளும் அகப்பட்டுக் கொண்டனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர், சிரிய அரச படையினரின் அடுத்த கட்ட படை நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. தற்போது அதற்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. வட மேற்கில், அலெப்போவில் இருந்து வெளியேறிய கிளர்ச்சிக் குழுக்கள் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இடிலிப் பிரதேசம். மற்றது, வட கிழக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ராக்கா பிரதேசம்.

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதி நாலாபுறமும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. அந்நிய நாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டு விட்டன. அதனால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், துருக்கி எல்லையோரம் உள்ள இடிலிப் என்ற நாட்டுப்புறப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே சனத்தொகை குறைவு. ஆனால், துருக்கி ஊடாக கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது அவசியம்.

போருக்குள் அகப்பட்ட பொது மக்களின் நிலை என்ன? நிச்சயமாக பொது மக்களில் கணிசமான அளவு பிரிவினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக போராளிகளின் குடும்பத்தினர் இறுதி வரையில் இயக்கங்களோடு இருந்தனர். அலெப்போ நகரின் பகுதிகளை அரச படைகள் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டிருந்த நேரம், இயக்கப் போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். மக்களும் அவர்களோடு இழுபட்டுச் சென்றனர். தற்போது அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து விட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்துள்ளனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர் நடந்ததாக சொல்லப் படும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் உண்மையா? போரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அந்தத் தகவல்கள் யாவும் கிளர்ச்சி இயக்கங்களின் ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. அவை எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது கேள்விக்குறி தான். அவை சுதந்திரமான ஊடகவியலாளரால் உறுதிப் படுத்தப் படவில்லை. (இது மேற்குலக அணுகுமுறை)

உண்மையில் போர் நடந்த இடத்தில் எந்தவொரு மேற்கத்திய ஊடகவியலாளரும் இருக்கவில்லை. இருப்பினும், பிரித்தானியாவிலும், துருக்கியிலும் உள்ள சிரிய கிளர்ச்சியாளரின் ஊடக மையங்கள் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவை வெளியிடும், ஒரு பக்கச் சார்பான தகவல்களுக்கு மேற்குலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. மறுபக்கத்தில், சிரிய அரச ஊடகங்களும், ரஷ்ய ஊடகங்களும் கூட ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. அவற்றில் உண்மை எது, பொய் எதுவென்பது யாருக்கும் தெரியாது.

கிளர்ச்சிக் குழுக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் எதிர்பார்த்திராத அலெப்போவின் வீழ்ச்சி ஒரு பெரிய அதிர்ச்சி. இறுதி நேரத்தில் முற்றுகையை விலக்கிக் கொள்ளுமாறு ரஷ்யா ஊடாக அழுத்தம் கொடுத்தும் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆகையினால், இனி வருங்காலத்தில் ஆசாத் அரசு மீது போர்க்குற்ற விசாரணை கொண்டு வருவதற்காக தற்போதே படுகொலைகள் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

உண்மையில் சில சரணடைந்த போராளிகளும், இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய மக்களில் சிலரும், அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப் படலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு காலமும், மேற்குலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்த, மத அடிப்படைவாத வன்முறைக் கும்பல்களின் ஆட்சி நடந்த நேரம், அங்கு நடந்த குற்றங்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மேற்குலகின் முக்கியமான பிரச்சினை "இஸ்லாமியப் பயங்கரவாதம்" அல்ல!

சிரிய அரச படைகளினால் அலெப்போ முற்றுகைப் போர் ஆரம்பமான போதே, கிளர்ச்சிக் குழுக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் என்று காலம் கடத்தி வந்தன. ஆனால், அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

தோல்வியின் விளிம்பில் நிற்கும், கிளர்ச்சிக் குழுக்களில் உள்ள போராளிகள் அலெப்போ வீழ்ச்சியின் பின்னர் மனமுடைந்து காணப்படுகின்றனர். உண்மையில், இறுதியாக நடந்த போரில் அவர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டது. அரச படைகளும் அதற்கு உடன்பட்டன. அல்கைதாவுடன் தொடர்புடைய எண்ணாயிரம் போராளிகளும் மேற்குலக உதவியுடன் வெளியேற்றப் பட்டதாக அரச படைகள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தான், மேற்குலக ஊடகங்கள் "பதே போராளிகள்" என்று குறிப்பிடுகின்றன. அது அல்நுஸ்ரா இயக்கம் என்பதை மறைக்கின்றன.

மேற்குலக நாடுகள் மற்றும் செஞ் சிலுவைச் சங்கம் போன்றவற்றின் தலையீடு காரணமாக, கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேறும் பொது மக்களையும், போராளிகளையும் கொண்டு செல்வதற்கு பேருந்து வண்டிகள் அனுப்பப் பட்டன. அவர்களை இடிலிப் பிரதேசத்தில் கொண்டு சென்று விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கிளர்ச்சிக் குழுக்கள் பொது மக்களை தம்மோடு பணயக் கைதிகளாக பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அதை உறுதிப் படுத்த முடியவில்லை. போராளிக் குடும்பங்கள், இயக்க ஆதரவாளர்கள் ஆகிய பொது மக்களும் அவர்களுடன் செல்லக் கூடும். அவர்களைத் தவிர ஏனைய மக்கள் பலவந்தமாக கொண்டு செல்லப் படுவதையும் தவிர்க்க முடியாது.

இறுதிப் போர் இடிலிப் பகுதியில் நடைபெறவுள்ளது என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து விட்டது. அதாவது, அலெப்போவில் இருந்து வெளியேறிய இயக்கங்கள் அங்கு தமது பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் போரினால் இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான மக்களும் தங்கியிருப்பார்கள். அதனால், இடிலிப் பிரதேசத்தை கைப்பற்றும் போரில் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெருமளவு பொது மக்களும் கொல்லப் படலாம். அதை இப்போதே மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எதிர்வு கூறி விட்டனர்.

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: