Wednesday, December 28, 2016

எழுபதுகளில் பொருளாதாரப் பிரச்சினை, எழுந்தது ஈழக் கோரிக்கை!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஏழாம் பாகம்)

கடந்த முப்பதாண்டு கால இலங்கை வரலாற்றில், தேசியவாத, இனவாத, மதவாதக் கருத்துக்கள் முன் எப்போதும் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகமாகக் காணப் படுகின்றது. அதே நேரம், இலங்கையின் பொருளாதாரம் முதலாளித்துவத்தை, குறிப்பாக நவ தாராளவாத கொள்கையை சிறப்பாக நடைமுறைப் படுத்தி வருவதையும் காணலாம். இவ்விரண்டு போக்குகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனது கடந்த கால வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு, அதை இங்கு ஆராய்கிறேன்.

இலங்கையில் இன்று தீவிரமாக தமிழ்த் தேசியம் பேசுவோர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினராக இருப்பார்கள். அதாவது, மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை இலகுவாக நிரூபிக்கலாம். அவர்களில் தொண்ணூறு சதவீதமானோர் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார்கள். அதனால் கிடைத்த நன்மைகளை அனுபவிக்கிறார்கள். அதாவது, படித்து பட்டம் பெற்று, ஏதாவதொரு உத்தியோகம் பார்ப்பவர்களாக அல்லது வணிகத் துறையில் இருப்பார்கள்.

இது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களாகவே ஒத்துக் கொள்ளும் உண்மை. சிங்களத் தேசியவாதிகள், முஸ்லிம் தேசியவாதிகள் யாரென்று பார்த்தால், அவர்களும் மேற்படி வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.
- சமூகத்தில் மேன்நிலை அந்தஸ்தில் இருப்பவர்கள்.
- வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
- முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள்.
- கம்யூனிசத்தை, இடதுசாரியத்தை வெறுப்பவர்கள்.

சிங்கள-தமிழ்-முஸ்லிம் எந்த சமூகத்தை சேர்ந்த தேசியவாதியாக இருந்தாலும், மேற்படி அரசியல் கொள்கைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் நவ தாராளவாத பொருளாதாரத்தின் குழந்தைகள். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இந்த இளைய தலைமுறையினர். அதே காலகட்டத்தில் தான் இலங்கையில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்தது. முதலாளித்துவத்திற்கு சேவை செய்பவர்களை உருவாக்குவதற்காக, பாடத் திட்டங்களில் கூட மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன.

முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடாக இருந்த படியால், நிலப்பிரபுத்துவ எச்சங்களும் பரவலாக காணப் பட்டன. குறிப்பாக எழுபதுகளில் கூட, யாழ்ப்பாண தமிழ்ச் சமூகம் சாதிய கட்டுமானங்களை கைவிட்டிருக்கவில்லை. அதனால் தான் தேசியவாதம் அங்கு காலூன்றுவதற்கு சிறிது காலம் எடுத்தது. தெற்கில் சிங்களத் தேசியவாதம் தோன்றி பல தசாப்தங்களுக்கு பிறகு தான், வடக்கில் தமிழ்த் தேசியவாதம் நிலை கொண்டது. அதற்கான காரணம் என்ன?

அப்போது வட மாகாணத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். இலங்கையின் தொழிற்துறை முழுவதும் தெற்கில் தான் காணப்பட்டன. கொழும்புத் துறைமுகம் பெருமளவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது. இந்தியாவில் இருந்து கூட தொழிலாளர்கள் வந்து வேலை செய்தார்கள். ஆனால், வடக்கில் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை தவிர வேறெந்த தொழிற்துறையும் அங்கே இருக்கவில்லை.

முதலாளித்துவம் வரும் போதே தன்னோடு சேர்த்து வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு வரும். அதாவது, ஒரு நாட்டில் முதலாளித்துவ உற்பத்திகள் அதிகரிக்கும் பொழுது, ஒரு பக்கம் முதலாளிய- பூர்ஷுவா வர்க்கமும், மறுபக்கம் உழைக்கும்- பாட்டாளி வர்க்கமும் உருவாகும். அது பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளை சீர்குலைப்பதால், சாதிய முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. தென்னிலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதனால், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அங்கே சிங்களத் தேசியவாதம் இருந்து வருவதில் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

ஒரு நாட்டில் தொழிற்துறையும், அதை சார்ந்த தொழிலாளர்களும் அதிகரிக்கும் நேரம், அங்கே இடதுசாரிக் கட்சிகள் பலம் பெறுவதையும் தவிர்க்க முடியாது. அது இலங்கையிலும் நடந்தது. எமது வீட்டில் நடக்கும் அரசியல் கலந்துரையாடல்களில், தவிர்க்கமுடியாமல் இடதுசாரிகள் பற்றிய கதைகளும் அடிபடும். அதற்குக் காரணம் இருக்கிறது. ஐம்பதுகள், அறுபதுகளில் கொழும்பில் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெறும்.

பாலா தம்பு என்ற தமிழ் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் பற்றி, எமது வீட்டில் அப்பாவும், அவர்களது நண்பர்களும் அடிக்கடி பேசுவார்கள். அன்று அவர்கள் மிகவும் மதித்த அரசியல் தலைவர்களில் பாலா தம்புவும் ஒருவர். அப்போது நான் சிறுவனாக இருந்த படியால், பல விடயங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. இருப்பினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிப் பேசும் பொழுது, அது பற்றித் தெரியாமல் இருக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் மத்தியதர வர்க்கத்தினர் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கவில்லை. தமக்குக் கீழே இருந்த பாட்டாளி வர்க்கத்துடன் தங்களையும் சேர்த்து ஒரே உழைக்கும் வர்க்கம் என்ற எண்ணம் இருந்தது. எனது பெற்றோரின் தனிப்பட்ட கருத்துக்களும் அப்படித் தான் இருந்தன. அதனால், அன்று நடந்த வேலைநிறுத்த போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவளித்தனர். அப்போதெல்லாம் அரச ஊழியர்களும் பங்கெடுத்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் ரீதியாக எனது அப்பாவும் ஒரு வலதுசாரி தான். தமிழ்த் தேசியவாதி தான். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும், அவர் எதையும் பிரச்சார நோக்கில் பேசவில்லை. நியாயம் எங்கே இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தார். தற்போதுள்ள வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மாதிரி, "தமிழரின் சுய நிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாத இடதுசாரிகள் நாசமாகப் போகட்டும்!" என்று சாபம் போடவில்லை. அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்கள் பக்க நியாயங்களை ஏற்றுக் கொள்வதும் அவசியம் என்றுரைத்தார்.

உண்மையில், முதன்முதலாக ஜேவிபி யை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் என் தந்தை தான். அவர் வேலை செய்த இடத்தில் ஜேவிபி ஆதரவாளர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூலம் கிடைத்த ஜேவிபியின் தமிழ்ப் பிரசுரங்களையும் எனக்கு வாசிக்கத் தந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஒரு பிரசுரமும் அவற்றில் இருந்தது. அது இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. அப்போது அதைப் புரட்டி வாசித்திருக்கிறேன். ஆனால், அதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு அரசியல் அறிவு போதுமானதாக இருக்கவில்லை.

அதற்காக, அப்பா அன்று ஜேவிபியை ஆதரித்தார் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அன்றிருந்த நிலைமை வேறு. பிற்காலத்தில் எவ்வாறு தமிழ் மக்கள் புலிகளின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கினர் என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அன்று ஜேவிபி தொடர்பாகவும் இருந்தது. கணிசமான அளவு சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும், மறைமுகமாக ஜேவிபிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி இருந்தனர். அதற்குக் காரணம், அரச இயந்திரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அரசின் மீது எல்லோருக்கும் விமர்சனம் இருந்தது. அவர்கள் ஜேவிபி வடிவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்.

மேலும் ஜேவிபி குட்டி முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியது. தாய்மொழியில் கல்வி கற்ற, கீழ் மத்தியதர வர்க்க இளைஞர்களை கவர்ந்திருந்தது. அப்போதிருந்த சிறிமாவோ அரசும் சோஷலிசத்தை ஆதரிப்பதாக சொல்லிக் கொண்டது. சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தது. ஜேவிபி சோஷலிச இலங்கைக்காக ஆயுதமேந்திப் போராடுவதாக அறிவித்த நேரம், அந்த நாடுகள் எதுவும் ஆதரவு வழங்கவில்லை. மாறாக, ஜேவிபி கிளர்ச்சியை மூர்க்கமாக ஒடுக்கிய சிறிலங்கா அரசை ஆதரித்தன. ஆயுதங்களும் கொடுத்துதவின.

உலகில் எந்த நாட்டினதும் ஆதரவு கிடைக்காத நிலையில், அல்லது அப்படி எதையும் எதிர்பார்க்காத காரணத்தால், ஜேவிபி "மண்ணுக்கேற்ற மார்க்சியம்" ஒன்றை உருவாக்கி இருந்தது. அதில் தேசியவாதத்தின் கூறுகளும் அடங்கி இருந்தன. சர்வதேச அளவில், வட கொரியாவும், கம்பூச்சியாவும் இது போன்ற மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தன. வட கொரியாவில் கிம் இல் சுங், கம்பூச்சியாவில் பொல் பொட் ஆகியோரைப் பின்பற்றி, இலங்கையில் ரோகன விஜேவீர புதிய சித்தாந்தம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.

எழுபதுகளில் ஒரு குழப்ப நிலை இருந்தது. பலருக்கு சரியான அரசியல் பாதை எதுவென தெரிவு செய்ய முடியாமல் இருந்தது. அன்றைய இலங்கையின் சமூக பொருளாதாரமும் அதற்கான முக்கிய காரணம். அந்நிய நாட்டு இறக்குமதி பெருமளவு குறைக்கப் பட்டது. இலங்கை தற்காப்புப் பொருளாதாரத்தை பின்பற்றியது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் அரசால் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அரசு தான் நாட்டில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக இருந்தது. பெரும்பான்மையான மத்திய தர வர்க்கத்தினர் அரச ஊழியர்களாக இருந்தனர்.

அன்று பங்குச் சந்தை என்ற சொல்லையே யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அப்படி எதுவும் இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தனியார்மயம் புகுத்தப் பட்டு பங்குச் சந்தை உருவானது. அப்போது பல பெரிய நிறுவனங்களின் மதிப்பு பங்குகளாக பிரிக்கப் பட்டு, பொது மக்களுக்கும் விற்பனை செய்யப் பட்டது. எனது அப்பாவும் சில பங்குகள் வாங்கி இருந்தார். அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விளையாட்டுப் போன்றிருந்தது. எதிர்கால பொருளாதாரத்தில் பங்குச் சந்தை வகிக்கப் போகும் பிரதானமான பாத்திரம் குறித்து அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இலங்கையில் வாழும் மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, "சோஷலிசம் அல்லது இடதுசாரியம் பிடிக்காது" என்பதாக இன்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அன்றும் முதலாளித்துவத்தை ஆதரித்த லிபரல்வாதிகள் பலர் இருந்தனர். அவர்கள் யாரென்று பார்த்தால், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வாழும் மேட்டுக்குடியினராக இருப்பார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மொத்த சனத்தொகையில் அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இருக்காது. அன்று அவர்களது குரல் பெரிதாகக் கேட்கவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஒரு வலதுசாரி, முதலாளிய ஆதரவாளரான என் தந்தையே சோஷலிசத்தையும் ஆதரித்தார்! அதற்குக் காரணம் என்ன தான் முதலாளித்துவத்தின் மீது பற்று இருந்தாலும், சோஷலிசம் தவிர்க்க முடியாதது என நம்பினார். உதாரணத்திற்கு, சிறிமாவோ காலம் பற்றிய அப்பாவின் விமர்சனங்களை எடுத்துக் காட்டலாம்.

பொதுத் தேர்தலில் சிறிமாவோ ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டு, ஜே.ஆர். தாராளமயம் கொண்டு வந்த காலத்தில் தான், அப்பா அந்த விமர்சனத்தை முன்வைத்தார். பொருளாதார விடயத்தில் அந்த அரசாங்கத்தின் குறிக்கோள் நல்லது தான். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது தான். சிலவேளை, இன்னும் சில வருடங்கள் போயிருந்தால் அதன் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. மக்கள் கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேலும் சகிக்க முடியாது என்ற நிலைமையில் தான் தேர்தலில் தோற்கடிக்க வைத்தனர்.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று சொல்லி, சிறிமாவோ அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக ஏழாண்டுகள் ஆட்சி நடத்தியது. வெளிநாட்டு இறக்குமதி நிறுத்தப் பட்டு, உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டம் என்ற பெயரில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன. விவசாயம் அதன் மையப் பொருளாக இருந்தது. அரசு மானியங்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தது.

எங்கும், எப்போதும் விவசாயம் பற்றிய பேச்சாக இருந்தது. அன்று மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த பலர் விவசாயிகளாக மாறி இருந்ததை, இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒரு சாதாரணமான ஆசிரியர் கூட, மாதாந்த சம்பளப் பணத்தில் இருந்து சேமித்த தொகையில், ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்தார். வன்னியில் நிலம் இன்னும் மலிவாகக் கிடைத்தது. படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் அரசு இலவசமாகவும் நிலம் கொடுத்தது.

மத்திய தர வர்க்க உத்தியோகம் பார்த்தவர்கள், விவசாயத்தை ஒரு பகுதி நேரத் தொழிலாக செய்து வந்தனர். அதன் மூலம் இரட்டிப்பு வருமானம் கிடைத்தது. அதனால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் பலருண்டு. எனது பெற்றோரும் அவர்களில் அடக்கம். எனது அப்பாவும் அடிக்கடி வன்னிக்கு சென்று விவசாயம் செய்து விட்டு வருவார்.

அந்தக் காலத்தில் "கமத்தொழில் விளக்கம்" என்ற சஞ்சிகை பிரபலமாக இருந்தது. பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு பற்றிய கட்டுரைகள், படங்களுடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. எல்லோருக்கும் புரியக் கூடிய மொழிநடையில் எழுதப் பட்டிருக்கும். எங்கள் வீட்டில் அது கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. அவற்றை வாசித்து எனது விவசாய அறிவையும் பெருக்கிக் கொண்டேன். பாடசாலையில் தொழிற்கல்வி ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைமை வந்த நேரம், நான் விவசாய பாடம் தெரிவு செய்து படித்தேன். என்னைப் பொறுத்தவரையில், மிகவும் இலகுவான பாடங்களில் அதுவும் ஒன்று.

மேற்குறிப்பிட்ட காலப் பின்னணியை வைத்துப் பார்க்கும் பொழுது, அன்றிருந்த மக்கள் சோஷலிசத்தை சிறந்ததாக நினைத்ததில் தவறேதும் இல்லை என்பது தெளிவாகும். சிறிமாவோ காலத்தில் உணவுப் பொருட்கள், உடைகள், பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்தது. அதனால் ஏராளமான மக்கள் கஷ்டப் பட்டனர். இதற்கிடையே, ஓரிரு வருடங்கள் பருவ மழை பெய்யாத படியால் வரட்சி நிலவியது. அரசு செயற்கை மழை உருவாக்க எத்தனித்தும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

எழுபதுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றமும் இலங்கைப் பொருளாதாரத்தில் பெரியளவு தாக்கம் செலுத்தியது. அது சமூக அரசியலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. மழை வீழ்ச்சி குறைந்த படியால் விவசாயம் பாதிக்கப் பட்டது. பஞ்சம் ஏற்பட்டது. இறக்குமதிக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கமே அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்படியான பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்ட மக்களின் மனக்குமுறல் அரசியலில் எதிரொலித்தது.

பொதுத் தேர்தலில் சிறிமாவோவின் சுதந்திரக் கட்சிக்கு படுதோல்வி கிட்டியது. எதிர்பாராத விதமாக வடக்கு, கிழக்கில் அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக வந்தது. அது முன்வைத்த தமிழீழக் கோரிக்கை பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடுவதாக சொன்ன விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களும் அதிகரித்தன.

ஆகவே, இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வது போன்று, "ஒன்றுபட்ட தமிழ் இன உணர்வும், தமிழீழத்திற்கான வேட்கையும்" ஈழபோருக்கான உந்துசக்திகளாக இருக்கவில்லை. அதற்கான சமூகப் பொருளாதார காரணிகளை யாரும் ஆராய்வதில்லை. இலங்கையில் சிறிமாவோ அரசும், இந்தியாவில் இந்திராகாந்தி அரசும், இறக்குமதியை தடுத்து உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

அந்தக் காலத்தில் இரு நாடுகளிலும் வெவ்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இது கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பாகப் போனது. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி கடத்தல் படகுகள் சென்று வந்தன. அது ஒரு சட்டவிரோத பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. குட்டிமணி போன்ற கடத்தல்தொழிலில் ஈடுபட்ட சிலர், துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர்.

தமிழ்நாட்டுடன் கடத்தல் வியாபாரம் செய்து வந்த அரசியல் ஆர்வலர்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரை கைக்குள் வைத்திருந்தார்கள். ஒரு இரகசியமான ஆயுதக் குழுவின் உருவாக்கத்திற்கு அவை போதும். ஒரு காலத்தில் TELO "முதன் முதலாக தோன்றிய இயக்கம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தது. குட்டிமணி, தங்கத்துரையை தலைவர்களாகக் கொண்ட TELO இயக்கம் பற்றி நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பிட்ட காலம் பிரபாகரனும் அதில் இருந்தார். 1983 வெலிக்கடை சிறைப் படுகொலைகளில், குட்டிமணி, தங்கத்துரை கொல்லப் பட்டதும், இயல்பாகவே ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகியது.

அதை விட, எழுபதுகளில் மழைவீழ்ச்சி குறைந்த படியால், விவசாயம் பாதிக்கப் பட்டதும் மக்களை வேறு திசையில் சிந்திக்க வைத்திருந்தது. அதுவே கூட்டணி தமிழீழத்தை முன்மொழிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான ஆதரவாகவும் மாறி இருந்தது. தென்னிலங்கையில் சிங்கள வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து யு.என்.பி. க்கு வாக்களித்தனர். அதே தான் வட இலங்கையிலும் நடந்தது. தமிழ் வாக்காளர்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தான், த.வி.கூ. க்கு வாக்களித்தனர். அன்று இலங்கையில் நடந்த மாற்றம் ஒன்று தான். ஆனால், காலப்போக்கில், சிங்களவர்களும், தமிழர்களும், அதனை இன முனைப்புக் கொண்ட அரசியலாக மொழிபெயர்த்துக் கொண்டனர்.

(தொடரும்) 

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3.தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4. ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்? 
5. ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!
6. தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி

No comments: