Thursday, April 14, 2011

இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 14)

"1971 கிளர்ச்சியை நடத்தியவர்கள் ஒரு பெரு முதலாளியைக் கூட கொல்லவில்லை..." - மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகதாசன். 1987 ல் தொடங்கிய இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது, பல பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் கொல்லப் பட்டனர். (ஜேவிபியின் மொழியில், வர்க்க எதிரியை ஒழித்துக் கட்டுதல்.) அன்று வந்த தினசரிகளில் முதல் பக்கத்தில் எப்போதும் ஏதாவது அரசியல் படுகொலை பற்றிய செய்தி வந்து கொண்டேயிருக்கும். பெரு முதலாளிகளின் கொலைகள் நிச்சயமாக முழு இலங்கையையும் உலுக்கியது. "சிறிலங்காவின் பெரிய வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகள் யாரும் நாட்டில் இல்லை. எல்லோரும் வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டார்கள் போலும்..." என்று நாங்கள் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசிக் கொள்வோம். உண்மையிலேயே எமக்குத் தெரிந்த "லலிதா ஜுவலறி" போன்ற பெரிய நகைக் கடைகளின் முதலாளிகள் இந்தியா சென்று தங்கி விட்டனர். அங்கிருந்த படியே வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது கிளர்ச்சிக்கு, ஜேவிபி இயக்கம், தன்னை முழுமையாக தயார் படுத்தி இருந்தது. ஆயுதங்கள் சேகரிப்பது தொடக்கம், இலக்குகளை தீர்மானிப்பது வரை ஏற்கனவே ஒழுங்கு படுத்தியிருந்தனர். 1971 கிளர்ச்சி சிறுபிள்ளைத் தனமானது என்று எழுந்தமானமாக முடிவு செய்து விட முடியாது. அன்றைய நிலையில், அரசுடன் மோதுவதற்கு போதுமான தயாரிப்பு வேலைகள் முடிய முன்னரே போர் தொடங்கி விட்டது. முன்னாள் ஜேவிபி மத்திய குழு உறுப்பினரும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான லயனல் போபகே கூறுகிறார்: "இலங்கை அரசு, பிரேதப் பரிசோதனை இன்றி உடல்களை தகனம் செய்யும் சட்டம் கொண்டு வந்தது. எம்மை அழித்தொழிப்பதற்காகவே அந்த சட்டம் கொண்டு வரப் பட்டது. கிராமங்களில் ஜேவிபி உறுப்பினர்களை போலிஸ் வேட்டையாடியது. எதிரி எம்மைத் தாக்குவதற்கு முன்னர், நாம் எதிரியைத் தாக்க வேண்டும், என்ற சேகுவேராவின் கொள்கையின் படி விரைந்து செயற்பட வேண்டியிருந்தது." அன்று கியூபா புரட்சியின் புகழ் இலங்கையிலும் பரவியிருந்தது. ஜேவிபி இயக்கமானது சேகுவேராவின் ஆயுதப்புரட்சிக் கோட்பாடுகளை பின்பற்றி வந்தது. அன்று மக்கள் அவர்களை "சேகுவேராக் காரர்கள்" என்று அழைத்ததும் காரணத்தோடு தான். ஜேவிபி கிளர்ச்சியினால் சேகுவேராவின் பெயர் கிராமங்களிலும் பரவியிருந்தது. ரோகன விஜேவீர தான் சேகுவேரா என்று பாமர மக்கள் நம்பிய காலம் ஒன்று இருந்தது.

ஜேவிபி தலைவர் ரோகன விஜேவீர, (சீன சார்பு) கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர். இரகசிய வேலைத்திட்டங்கள் காரணமாக, சதியில் ஈடுபட்ட சந்தேகத்தில் வெளியேற்றப் பட்டார். கட்சித் தலைவர் சண்முகதாசன் ஒரு தமிழர் என்பதால், ஆழ்மனதில் குடிகொண்டிருந்த இனவாதம் காரணமாக ரோகன தானே வெளியேறியதாகவும் இன்னொரு காரணம் கூறப் படுகின்றது. ரோகன ஒரு கேஜிபி ஏஜென்ட் என்ற சந்தேகமும் கட்சிக்குள் நிலவியது. மொஸ்கோ லுமும்பா பலகலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற ரோகன, படிப்பை விட அரசியலில் அதிக ஈடுபாடு காட்டினார். லுமும்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் பலரை, கேஜிபி பயன்படுத்தி வந்தமை இரகசியமல்ல. ஆயினும், ரோகன பற்றிய குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை. ரோகனவும், ஜேவிபியும் மாவோயிஸ்ட்கள் என்று சோவியத் யூனியன் குற்றம் சாட்டி வந்தது. அதே நேரம், வட கொரியாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாக இலங்கை அரசு குற்றம் சாட்டியது. எது எப்படி இருந்த போதிலும், சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய வல்லரசுகள், 1971கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவி செய்துள்ளன.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாவோவின் வழியை ஏற்றுக் கொண்டவர்கள் பிரிந்து சென்றனர். இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக, ஒரு தமிழரான சண்முகதாசன் தலைமையில் ஒரு அகில இலங்கைக் கட்சி உருவானது.
சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினர், யாழ் குடாநாட்டில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அடுத்ததாக வடக்கில் ஒரு வர்க்கப் புரட்சிக்கு அடித்தளமிட்ட தருணத்தில் விழித்துக் கொண்ட ஆதிக்க சாதியினர், தமிழ்த் தேசியம் பேசத் தொடங்கினார்கள்.
ஜேவிபி யின் தோற்றுப் போன
ஆயுதப்புரட்சி, பிற இடதுசாரி கட்சிகளையும் கடுமையாக பாதித்தது. ஜேவிபி சந்தேகத்தின் பேரில், கம்யூனிஸ்ட்டாக அடையாளம் காணப்பட்ட அனைவரையும் அரசு கைது செய்து துன்புறுத்தியது. சிங்கள பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த யாழ் தமிழ் முதலாளிகள், தமக்கு எதிரான தொழிற்சங்கவாதிகளை காட்டிக் கொடுத்தனர். இதனால், யாழ்ப்பாணத்தில் பல தமிழ் கம்யூனிஸ்ட்கள், ஜேவிபி என்று குற்றம் சாட்டப் பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இன்றைக்கும் தமிழ் முதலாளித்துவ சக்திகள், தமிழ் மக்களுக்கு ஜேவிபி எனும் இனவாதப் பூதத்தைக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதை கண்கூடாக காணலாம். தமிழகத்தை சேர்ந்த இடதுசாரி அறிவுஜீவிகள் சிலரும், ஈழத் தமிழர்களின் வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் முதலாளித்துவ சதிக்கு துணை போகின்றனர்.

சண்முகதாசன் 1971 கிளர்ச்சி பற்றிய குறிப்புகளில் பின்வருமாறு எழுதியுள்ளார்: "பிரிட்டிஷ்காரர்கள் கற்பித்த பாராளுமன்ற ஜனநாயகத்துடன் மக்கள் பிணைக்கப் பட்டுள்ளனர். கொந்தளிப்பான உலகில், இலங்கை வன்முறையற்ற அமைதிப் பூங்கா என்ற மாயையை உருவாக்கியுள்ளனர். அந்த நம்பிக்கைகள் தற்போது நொறுங்கிப் போயுள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு பிற்போக்குவாத தலைமையின் தவறான வழிநடத்தலின் கீழ் தமது உயிரைத் துச்சமாக மதித்து போராடினார்கள். எமது மக்கள் புரட்சிக்கு தயாரானவர்கள் அல்ல என்ற கருத்து தவறென நிரூபிக்கப் பட்டுள்ளது...." (Chapter 6: An Analysis of the April 1971 Events in Ceylon [pp.82-96])
பிற்காலத்தில் வெகுஜன அரசியலில் ஈடுபட்டு இனவாதம் பேசும் இன்றைய ஜேவிபி தலைவர்கள், வர்க்கப் போராட்டத்தின் எதிரிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வலதுசாரி தமிழ் ஊடகங்கள், ஜேவிபியின் இனவாதப் பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. 71 கிளர்ச்சியை "சிங்கள பேரினவாதிகளின் வன்முறைப் போராட்டம்" என்று, தமிழ் இனவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில் இலங்கையின் சிங்கள, தமிழ் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேருவதைத் தடுப்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது. ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சி, மக்களை புரட்சிக்கு வழிநடாத்திச் செல்லத் தவறியதன் விளைவை இலங்கை இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தெற்கில் ஜேவிபியும், வடக்கில் ஈழ தேசிய இயக்கங்களும் வர்க்கப் புரட்சிக்கு எதிர்த் திசையில் மக்களை வழிநடாத்திச் சென்றனர்.

1971 ல், முதலாவது கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட ஜேவிபி தலைவர்கள், யாழ் கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப் பட்டனர். அப்போது அவர்கள் சார்பில் பல மனித உரிமை மீறல் வழக்குகள் போடப்பட்டன. பிரபல தமிழ் வழக்கறிஞர் குமார் பொன்னம்பலம் கூட ஜேவிபி தலைவர்களை விடுவிக்க வழக்காடினார். அப்போது ரோகன, "வக்கீல் பீஸ் எவ்வளவு?" என்று வினவிய பொழுது, "நான் கேட்கும் தொகையை உங்களால் கட்ட முடியாது," என்று குமார் பதிலளித்தார். அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கென்பதால், அதை சவாலாக எடுத்து இலவசமாக வாதாட முன் வந்தார். (குமாருடன் கூடச் சென்ற நண்பர் ஒருவர் வழங்கிய தகவல்.) இதே நேரம், தென்னிலங்கையில் இருந்து ஜேவிபி தாக்குதல் குழு ஒன்று யாழ்ப்பாணம் சென்றது. யாழ் கோட்டை சிறையுடைத்து தலைவர்களை மீட்பது அவர்கள் திட்டம். தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே, திட்டம் அம்பலமாகி, பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். சிங்கள தெற்கிற்கும், தமிழ் வடக்கிற்கும் இடையிலான மொழி என்ற தடைச் சுவரை, சிறிலங்கா அரசு சாதுர்யாமாகப் பயன்படுத்தி வந்துள்ளது. தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களை, வடக்கே தமிழர்கள் வாழும்
யாழ்ப்பாணத்தில் சிறை வைத்தது. அதே போன்று, வடக்கே ஈழ விடுதலை போராட்டத்தில் கைது செய்த தமிழ் இளைஞர்களை, தெற்கே சிங்களவர்கள் வாழும் காலியில் சிறை வைத்தது.

ஜேவிபிக்கு வடக்கில் உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ இருக்கவில்லை. தாக்குதல் அணியில் வந்த சிங்கள இளைஞர்களுக்கு, தமிழ் பேசத் தெரிந்திருக்கவில்லை. இது போன்ற குறைகளே தாக்குதல் திட்டம் தோல்வியுற்றதற்கு காரணம், என்று கூறப் படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அன்று ஜேவிபி உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பில் வசித்தவர்கள், இவர்கள் மத்தியில் ஆதரவு இருந்துள்ளது. சுன்னாகம் ஜேவிபி கோட்டையாக திகழ்ந்ததாக அந்தப் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். அன்று சுன்னாகத்தில் கணிசமான உழைக்கும் வர்க்க சிங்களவர்கள் வாழ்ந்ததும், அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சுன்னாகத்தின் இடதுசாரிப் பாரம்பரியம் காரணமாக, பலர் பிற்காலத்தில் தோன்றிய மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பில்" சேர்ந்திருந்தனர். 71 கிளர்ச்சியின் போது, சுன்னாகம் அனல் மின் நிலையத்தை தாக்குவதற்கு ஒரு ஜேவிபி அணி வந்து மறைந்திருந்தது. அந்தத் திட்டமும் தோல்வியுற்றதால், தப்பியோடிய ஜேவிபி உறுப்பினர்கள் ஆனையிறவு தடைமுகாமில் பிடிபட்டனர். அன்று பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் நாதன், பிடிபட்ட இளைஞர்களை விசாரணை இன்றி கொலை செய்தமைக்காக, அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

தெற்கில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப் படுவதற்கு சாதி வேற்றுமை காரணமாக இருந்தது. வடக்கிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. வட இலங்கையில், ஜேவிபியின் கொள்கைகளால் கவரப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோகன விஜேவீர, யாழ் குடாநாட்டில் பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். முன்னர் சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தலித் கிராமங்களில், ரோகன விஜேவீரவுக்கு வரவேற்பிருந்தது. அன்று நடந்த தேர்தலில் யாழ் குடாநாட்டில் ரோகனவிற்கு சில ஆயிரம் ஓட்டுகள் விழுந்தன. கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் ஜேவிபியில் இணைந்திருந்தனர். மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையாக உள்ள தோட்டத் தொழிலாளர்கள், தலித் மக்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள், ஆதிக்க சாதிகளை சேர்ந்த பிற்போக்காளர்கள். பிற்போக்குத் தலைமையால் விரக்தியுற்ற மலையக இளைஞர்கள், ஜேவிபியை புரட்சிகர சக்தியாக பார்த்ததில் வியப்பில்லை. அதே நேரம், யாழ் மையவாத சிந்தனை கொண்ட தமிழ் தேசியவாதிகளும், அவர்களை தமிழீழப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. (சில இடதுசாரி இயக்கங்கள் விதிவிலக்கு)

ஜேவிபி மலையகத் தமிழர்களை "இந்தியர்களாக" கருதியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது. முன்னாள் மத்திய குழு உறுப்பினரான லயனல் போபகே, கட்சி சார்பாக தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்திருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பல முற்போக்கான அம்சங்கள் காணப்பட்டன. இருப்பினும், ரோகன விஜேவீர அந்த அறிக்கையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகின்றது. மத்திய குழுவில், ரோகனவுடன் நடந்த விவாதத்தின் பொழுது, மற்ற உறுப்பினர்கள் தலையாட்டிப் பொம்மைகளாக இருந்ததாக போபகே நினைவு கூறுகிறார். அதாவது ரோகன விஜேவீர தனக்கு விசுவாசமானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை நிர்வகித்து வந்தார். மேலும் இந்திய விஸ்தரிப்புவாதம், இந்திய வம்சாவளித் தமிழர்கள், இவை தொடர்பான தவறான கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டு. தாம் சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த சமயம், சீன-இந்திய யுத்தம் நடந்து கொண்டிருந்ததாகவும், அதிலிருந்தே "இந்திய விஸ்தரிப்புவாதக் கொள்கை" எழுந்ததாக முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஈழ விடுதலை இயக்கங்களின் உள்ளே நடந்ததைப் போன்று, ஜேவிபி அமைப்பினுள்ளும், தலைமையுடன் முரண்படுவது துரோகமாகக் கருதப்பட்டது. தனிநபர்கள் கருத்து முரண்பாடு கொண்டு அமைப்பை விட்டு வெளியேறினால், இலகுவாக "மரண தண்டனை" நிறைவேற்றினார்கள். ஒரு குழுவாக பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாமல் இருந்தது. ஜேவிபி இரண்டாவது கிளர்ச்சியை தொடங்குவதற்கு, சில வருடங்களுக்கு முன்னதாக, பாரிய பிளவு ஏற்பட்டது. முக்கிய மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பலர், ஜேவிபியை விட்டு பிரிந்து சென்றார்கள். என்பதுகளின் தொடக்கத்திலும், ஜேவிபி தலைமறைவாக இயங்கி வந்தது. அதனால் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள், ஒரு புறம் அரச படைகளுக்கு அஞ்ச வேண்டியிருந்தது. மறு புறம், தம்மைத் தேடி கொலைவெறியுடன் அலையும் முன்னாள் தோழர்களிடம் இருந்தும் பாதுகாப்பு தேட வேண்டியிருந்தது.

முன்னாள், இந்நாள் ஜேவிபி உறுப்பினர்கள் பல தடவைகள் மோதிக் கொண்டனர். சகோதர சண்டையில் இரண்டு பக்கமும் பலர் மரணமுற்றனர். அன்று ஜேவிபியை விட்டு வெளியேறியவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டார்கள். ஆனால், தென்னிலங்கையில் யுத்தம் நடந்த 1987 -1989 காலப் பகுதியில், இன்னும் சில குழுக்கள் ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்றன. அவர்கள், அரசுடன் சேர்ந்து துணைப்படையாக இயங்கினார்கள். இதனால், அரச படைகள், ஜேவிபி தவிர்த்து, வேறு பல ஆயுதக் குழுக்களும் மக்கள் மேல் அதிகாரம் செலுத்தினார்கள். முப்பதாண்டு கால ஈழப்போரில் தமிழ் மக்கள் எந்தெந்த கொடுமைகளை அனுபவித்தார்களோ, அவற்றை சிங்கள மக்கள் அந்த இரண்டாண்டுகளில் அனுபவித்தார்கள். கொலை செய்வது தேசிய விளையாட்டாகியது. கொலை செய்வதற்கென்றே, அரசினால் ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. நாடு முழுவதும் கொலையுதிர்காலம் ஆரம்பமாகியது.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

1 comment:

Mohamed Faaique said...

கடைசி வரிகள் சூப்பர்... நல்லாயிருக்கு..
நான் எவ்வளவு காலம் தேடிய செய்திகள் இன்று கிடைக்கிறது