நெதர்லாந்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. காலியாக இருக்கும் வீட்டை உடைத்து குடிபுகுவது சட்டவிரோதம். அந்தக் குற்றத்திற்கு அதிகபட்சம் இரு வருட சிறைத்தண்டனை கிடைக்கும். இப்படியான சட்டம் இப்போது தான் அமுலுக்கு வருகிறதென்றால், அதற்கு முன்னர் வீடு உடைத்து குடி புகுவது சட்டப்படி செல்லுபடியாகுமா? ஆமாம். ஒரு வருடத்திற்கு அதிகமாக பாவிக்கப்படாத கட்டிடத்தில், யாரும் வசிப்பதற்கான சுவடே இல்லாத பட்சத்தில் குடி புகுதல் சாத்தியமே.
இந்தக் கட்டுரைக்கு "வீடு உடைப்பாளர் சங்கம்" என தலைப்பிட நினைத்திருந்தேன். சரியான சொற்பதம் தமிழில் கிடைக்கவில்லை. அதனை ஆங்கிலத்தில் சொன்னால் கூட அர்த்தம் பிழையாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புண்டு. நெதர்லாந்து மொழியில் "Krakers " என்பது ஒரு சமூக அரசியல் அமைப்பு. குறிப்பாக எழுபதுகளின் இறுதிப்பகுதியில், அதாவது பணக்கார வாழ்க்கை வசதிகளுடன் கூடவே ஆரம்பித்தது அந்த இயக்கம். எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், கிராக்கர்ஸ் இயக்கத்திற்கு சமூக அந்தஸ்தை தேடிக் கொடுத்தது.
அவர்கள் ஏன் யாரோ ஒருவரின் சொத்தான, காலியாக இருந்த வீட்டை உடைத்து குடி புக வேண்டும்? நாட்டில் வீடற்றவர்கள் வசிப்பதற்கு இடம் தேடுகிறார்கள். அரசினால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. தனது குடிமக்கள் வசிப்பதற்கு வீடு ஒழுங்கு பண்ணுவது அரசின் பொறுப்பு என்று, அரசியல் நிர்ணயச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. (இலங்கை, இந்திய சட்டங்களிலும் அவ்வாறு உள்ளது. அங்கே மர நிழலின் கீழ் வசிக்கும் மக்களுக்கு யார் எடுத்துச் சொல்வார்கள்?) இருப்பினும் அரசு அந்த அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவில்லை என்று வழக்கு போட முடியாது.
பணக்கார மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள், குடி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் கடமையை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்தன. அவை ஐரோப்பிய வரலாற்றில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. ஒரு காலத்தில் இருந்த குடிசைகள் நிறைந்த கிராமங்களை இன்றைய மேற்கு ஐரோப்பாவில் காண முடியாது. எல்லாமே வசதியான குடியிருப்புக்களை கொண்ட கிராமங்களாக மாறி விட்டன. நகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் எழும்பின. கிராமவாசிகள் பலர் நகரங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆயிரம் இருந்தாலும், நெதர்லாந்து "வளர்ச்சியடைந்த நாடுகள்" வரிசையில் இடம்பிடித்தாலும், அங்கே அனைவருக்கும் இன்னும் வீடு கிடைக்கவில்லை. சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப வீடுகள் கட்டப்படவில்லை. அல்லது இப்படியும் கூறலாம். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் அதிக வாடகைப் பணத்தை கொடுக்கும் வல்லமை எல்லோரிடமும் இல்லை. இதனால் சமூக நலன் வீட்டுத்திட்டம் ஒன்று உருவானது. வீடுகளை, கட்டிடங்களை கட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மலிவான வீடுகளையும் கட்டிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. வருமானம் குறைந்தவர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்தது. நெதர்லாந்தில் மட்டுமல்ல, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் உங்களுடைய உறவினர்கள் வசிப்பது பெரும்பாலும் இந்த சமூக நல வீடுகளில் தான்.
தற்போது பிரச்சினை என்னவென்றால், பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆடம்பர குடியிருப்புக்களை கட்டுவதில் நாட்டம் காட்டும் அளவிற்கு, மலிவு விலை வீடுகளை கட்டுவதில் அக்கறைப்படுவதில்லை. இதனால் வருமானம் குறைந்தவர்கள் வருடக்கணக்காக வீட்டிற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை. உதாரணத்திற்கு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பதினைந்து வருடங்களாக வீட்டிற்கு காத்திருப்பவர்கள் அநேகம். இந்த லட்சணத்தில் முன்னாள் சோஷலிச நாடுகளில் மக்கள் வீடுகளுக்காக காத்திருந்ததை கிண்டலடித்தார்கள். மலிவு விலை வீட்டு மனைகளை கட்டும் நிறுவனங்களுக்கு அரசு மானியம் கிடைத்து வந்தது. தற்போது அது நின்று விட்டது போலும்.
உயர்கல்வி, தொழில் காரணமாக பலர் நகரங்களுக்கு வந்து வாழ விரும்புகிறார்கள். நகரங்களில் வாழ்பவர்களிலும், புதிதாக திருமணம் செய்தவர்கள் தனிக்குடித்தனம் போக விரும்புகின்றனர். இன்னோரன்ன காரணங்களால் வீடுகளுக்கான கேள்வி உயருமளவிற்கு, வீடுகள் கிடைப்பதில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக மாணவர்கள் அதிக வாடகை கொடுத்து வீடுகளில் தங்க வேண்டிய நிலை. மற்றவர்கள் பிறர் வீடுகளில் ஒதுங்கி வாழ்ந்து கொண்டே வருடக்கணக்காக காத்திருக்கிறார்கள்.
வீடற்றோர் அவலத்தை அரசுக்கு உணர்த்துவதற்காக இடதுசாரி இளைஞர்கள் சிலர் ஆரம்பித்தது தான் கிராக்கர்ஸ் இயக்கம். அதற்கு ஒரு தலைவர், செயலாளர் கிடையாது. அமைப்பில் உள்ளவர்கள் எந்தக் கட்டுப்பாடும் அற்று சுய விருப்புடன் இயங்குபவர்கள். ஒரு பொதுவான கொள்கை அவர்களை இணைக்கின்றது. கிராக்கர்ஸ் முதலில் நகரில் எங்காவது யாராலும் உரிமை கோரப்படாத, ஒரு பாழடைந்த கட்டிடம் கண்ணில் தென்படுகிறதா என்று பார்ப்பார்கள். அதில் யாராவது வசிக்கிறார்களா என்று அவதானிப்பார்கள். வருடக்கணக்காக அது பூட்டிக் கிடக்கிறது எனக்கண்டால், கதவை உடைத்து உட்புகுவார்கள். முதலில் அந்தக் கட்டிடத்தை துப்பரவாக்கி, திருத்தி, கதவுக்கு புதிய பூட்டைப் போட்டு தமது சொந்தமாக்குவார்கள். புதுப் பொலிவுடன் தோன்றும் கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம், தண்ணீர் என்பனவற்றிற்கு தமது பெயரில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்வார்கள். கவனிக்கவும்: இதனை சட்டம் தவறாக கருதவில்லை. உண்மையில் யாரும் வசிக்காத, உரிமை கோரப்படாத கட்டிடங்களில் குடியிருப்பது சட்டவிரோதமாகாது.
ஆனால் இந்த சமூக இயக்கத்தை அரசு எதிரியாக கருதுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில வேளை, அவ்வாறு உடைக்கப்பட்டது அடுக்கு மாடிக் கட்டிடமாக இருந்தால், அதன் பகுதிகளை தனித்தனி வீடுகளாக்கி பிறருக்கு குறைந்த வாடகைக்கு கொடுப்பார்கள். அனேகமாக முதலாளித்துவ அரசுக்கு எதிரான இடதுசாரிக் குழுக்கள், இத்தகைய கட்டிடங்களில் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். முதலாளித்துவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அங்கிருந்து தான் திட்டமிடப்படுகின்றன. தலைமறைவாக இயங்க விரும்புவோரின் நிரந்தர வாசஸ்தலம் அதுவாக இருக்கும். ஏனெனில் அரச பதிவுகளை செயற்படுத்தும் பிரதிநிதிகளுக்கு அங்கே வரவேற்பில்லை. பொதுவாக ஒரு வீட்டை வாங்கியவர் யார், வாடகைக்கு இருப்பவர் யார் என்ற விபரமெல்லாம் அரசாங்கத்தால் பதியப்பட்டிருக்கும். இதனால் பொது மக்களை கட்டுப்படுத்துவது இலகு. ஆனால் உடைக்கப்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர் விபரம் அரசிற்கு தெரியாது. இதனால் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப் பட்ட அகதிகள், விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கூட அங்கே புகலிடம் தேடுகின்றனர். அவர்களுக்கு தாராளமாகவே புகலிடம் வழங்குவதுடன் இலவசமாக தங்க வைக்கப்படுகின்றனர்.
தீவிர இடதுசாரி ஆர்வலர்கள், நாடுகடத்தப்பட இருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், இவர்களுக்கெல்லாம் புகலிடம் வழங்கும் கட்டிடங்கள் சில நேரம் பொலிஸ் படைகளினால் தாக்கப்படும். பொதுவாக நகரில் இவ்வாறான கட்டிடங்கள் இருப்பது பொலிசிற்கு நீண்ட காலமாக தெரிந்திருக்கும். கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். ஆனால் எப்போதாவது ஒரு ரியல் எஸ்டேட் முதலாளியின் கண்ணில் பட்டால், அவ்வளவு தான். நகர மத்தியில் இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் ஒரு வர்த்தக ஸ்தாபனம் திறக்கலாமே என்று அவர் மனதில் ஐடியா தோன்றும். உடனே பொலிஸ் நிலையம் சென்று அந்தக் கட்டிடம் தனக்கு சொந்தமானது என முறைப்பாடு செய்வார். அந்த முறைப்பாடை வாங்கிக் கொள்ளும் பொலிஸ் உடனே நடவடிக்கை எடுக்கும். தண்ணீரை பீச்சியடிக்கும் பீரங்கி, கண்ணீர்ப் புகை குண்டுகள் சகிதம், "Robocop" பாணி உடையணிந்த கலகத் தடுப்பு பொலிசார் களத்தில் இறங்கி விடுவார்கள். வன்முறை பிரயோகித்து கட்டிடத்தை மீட்டெடுப்பார்கள். குடியிருந்தவர்கள் பொலிஸ் நடவடிக்கையை எதிர்த்தால் கைது செய்து கொண்டு செல்வார்கள். சில நேரம் வீடு உடைப்போர் அமைப்பை சேர்ந்தவர்கள், அந்த தருணத்தில் பொலிசாருடன் "உரிமைப்போரில்" இறங்குவார்கள்.
மேற்படி சம்பவங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது இடம்பெறும். இதெல்லாம் அவர்களுக்கு பழகிப் போன சமாச்சாரம். பொலிஸ் நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்னர் கூட வீட்டை உடைத்தவரும், பொலிஸ்காரரும் தெருவில் நின்று சிநேக பாவத்துடன் உரையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். கிராக்கர்ஸ் அமைப்பிற்கு பசுமைக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு வழங்கினார்கள். அவர்கள் சார்பு நியாயத்தை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தார்கள். தற்போது அந்தக் காலம் மலையேறி விட்டது. கடந்த பொதுத்தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகள் பெருமளவு வாக்குகளைப் பெற்றுள்ளன. இவற்றுடன் கிறிஸ்தவ மத அடிப்படைவாத கட்சிகளும் சேர்ந்து காலியான கட்டடங்களை உடைத்து குடிபுகுவதை சட்டவிரோதமாக்கியுள்ளன. கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயகக் கட்சியும் ஒத்துழைத்துள்ளது. புதிய சட்டத்தின் படி ஒரு வருட தண்டனையும், பொலிஸ் நடவடிக்கையை வன்முறை கொண்டு எதிர்த்தால் இரண்டு வருட தண்டனையும் வழங்கப்படும்.
கிராக்கர்ஸ் அமைப்பை சட்டம் கொண்டு தடுத்து விடலாம். ஆனால் சமூகத்தில் நிலவும் வீட்டுப் பிரச்சினைக்கு என்ன தீர்வு? அனைவருக்கும் அரசாங்கம் வீடு வழங்கி விட்டதா? அதிக வருமானம் பெரும் வசதி படைத்தவர்களுக்கும், வருமானம் குறைந்த வசதியற்றவர்களுக்குமான இடைவெளி அதிகரித்து செல்கின்றது. அரச மட்டத்தில் பணம் படைத்தவர்களின் செல்வாக்கு அதிகரிக்கின்றது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வற்புறுத்தலால் மேற்படி தடைச் சட்டம் கொண்டு வந்திருக்க வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் முதலாளிகளின் மகுடிக்கு அரசு ஆடினால், பணக்கார நாட்டில் வசதியற்ற மக்கள் தெருவோரம் மர நிழலின் கீழ் படுக்கும் காலம் வரும்.
5 comments:
நல்ல பகிர்வுக்கு நன்றி.
அடிக்கடி பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சிங்கக்குட்டியாருக்கு நன்றிகள் பல.
வித்தியாசமான தகவல்.
பகிர்ந்ததிற்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி
நல்ல பதிவு நண்பரே...
Post a Comment