Monday, September 22, 2008

ஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனை

ஜெர்மனி, கெல்ன் நகரில் பிரமாண்டமான மசூதி நிர்மாணிக்கப்படுவதை எதிர்த்து "இஸ்லாமிய எதிர்ப்பு மகாநாடு" கூட்டப்பட்டது. ஜேர்மனிய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் எதிரெதிர் ஆர்ப்பாட்டம் நடத்தி தெருச்சண்டையில் இறங்கியதால், அந்த மகாநாடு பின்னர் நகரசபை உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்டது.

இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மீண்டும் ஐரோப்பாவில் சூடுபிடித்து வருகின்றது. ஒரு காலத்தில் அகதிகள் எதிர்ப்பு, பின்னர் குடியேறிகள் எதிர்ப்பு என்று இனவாத கொள்கைகளை வெகுஜன அரசியாலாக்கும் தீவிரவலதுசாரி சக்திகள் தற்போது, குறிப்பாக 11 செப்டம்பர் 2001 க்கு பின்னர், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தாமே வெள்ளை-ஐரோப்பிய பாதுகாவலர்கள் என்று காட்ட முனைகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மனி கெல்ன்(ஆங்கிலத்தில் Cologne) நகரில் பிரமாண்டமான மசூதி ஒன்றை, அந்த நகர் சனத்தொகையின் 12 வீதமான துருக்கிய முஸ்லிம்கள் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் யாவும் பூர்த்தியான நிலையில், தற்போது அந்த மசூதியை சுற்றி சர்ச்சை தொடங்கியுள்ளது. கெல்ன் நகர அனுதாபிகள் என்ற பெயரில் சிலர் மசூதி வேண்டாம் என்று கோரும் கையெழுத்து வேட்டை நடத்தியதாக தெரிகின்றது. அதே நேரம் சில வெகுஜன ஊடகங்கள் சார்பாக பொதுமக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி 30 வீதமானோர் மசூதி கட்டுவதை எதிர்ப்பதாகவும் தெரியவருகின்றது. அவர்களது பிரச்சினை எல்லாம் மசூதியின் பிரமாண்டம், அதன் கோபுரங்களின்(மினரெட்) உயரம் என்பவை தாம். அதை வைத்தே "இஸ்லாமிய எதிர்ப்பு மகாநாடு" கூட்டப்பட்டது. அதற்கு பிற ஐரோப்பிய நாடுகளின் தீவிர வலதுசாரிக்கட்சி பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர். சாதாரண ஜெர்மனியர்களும் ஆதரிப்பாளர்கள் என்பதால், இந்த பிரச்சினையை வைத்தே பிராந்திய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இத்தாலியில் நவபாசிச "லீகா நோர்த்" கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், அங்கே புதிய மசூதிகள் கட்டுவதற்கு தடை போடப்படுகின்றது. சில நகரங்களில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த மசூதிகள் சில இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. இஸ்லாமியர் அதிகமாக வாழும் மிலான் நகர மசூதி மூடப்பட்டு, முஸ்லிம்கள் நகர விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடத்தும் காட்சி, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் செய்தியாகியது.

அனேகமாக தாராளவாத கொள்கையை தாராளமாக கடைப்பிடிக்கும் சில பணக்கார ஐரோப்பிய நாடுகள்(உதாரணத்திற்கு இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள்) தான் மதச்சுதந்திரம் என்ற பெயரில், விரும்பியபடி மசூதிகளும், கோயில்களும் கட்ட அனுமதி கொடுக்கின்றன. இவை கட்டுவதற்கு தேவையான பணம் கொடுப்பது அந்த இடங்களில் வாழும் மத நம்பிக்கையாளரும், அந்த மதத்தை சேர்ந்த வர்த்தகர்களும் மட்டும் அல்ல. அரசாங்கமும் வெளிநாட்டு தொழிலாளர் கட்டிய வரிப்பணத்தில் ஒரு பகுதியை அம்மக்களின் தேவைகளுக்காக திருப்பிக்கொடுப்பது என்று கூறி, மசூதி அல்லது கோயில் கட்டும் செலவின் ஒரு பகுதியை கொடுக்கின்றது. இந்த நாடுகளில் குறிப்பிட்ட அளவு மதச்சார்பற்ற இந்து அல்லது முஸ்லீம் சமூகங்களை சேர்ந்தவர்கள் கோயில்களுக்கோ, மசூதிகளுக்கோ போவதில்லை. இவர்களின் வரிப்பணத்தை கூட அரசாங்கம் கோயில்/மசூதி கட்ட வழங்குகின்றது.

ஐரோப்பிய அரசுகளின் இத்தகைய "சிறுபான்மையினர் கொள்கை" பல்வேறு மட்டங்களில் இருந்தும் விமர்சனங்களை ஏற்கனவே எழுப்பியிருந்தது. முதலாவதாக மதச்சார்பற்ற அரசாங்கம் என்பதை உறுதிப்படுத்தும்முகமாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. கணிசமான ஐரோப்பிய மக்கள் தேவாலயங்களுக்கு போகாததால், ஒன்றில் கைவிடப்படும் அல்லது அருங்காட்சியகமாக மாறும் தேவாலயங்கள் ஒரு புறமிருக்க, தற்போதும் பெருமளவு வழிபாட்டாளர்களை ஈர்க்கும் கத்தோலிக்க தேவாலயமோ, அல்லது புரடஸ்தாந்து சபைகளோ அரச உதவிகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாவதாக வரிப்பணத்தை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் அரசாங்க கொள்கை, சிறுபான்மையினர் (வெளிநாட்டு குடியேறிகள், அல்லது இந்துக்கள், முஸ்லிம்கள்) என்று வந்து விட்டால் மட்டும் கோயில்கள், மசூதிகள் கட்டுவதற்கென்று தாராளமாக செலவழிப்பதேன்? இங்கே தான் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தனது பூர்வீக குடிகளான, வெள்ளை-ஐரோப்பியருக்கு மதம் தேவையில்லை. ஆனால் வெளிநாட்டு குடியேறிகள் மதம் வளர்த்து, மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இதனால் ஊரை இரண்டுபடுத்தும் காரியமும் நிறைவேறுகின்றது. ஒருபக்கம் கோயில்கள், மசூதிகள் என்று திருப்திப்படும் சிறுபான்மையினம். மறுபக்கம் தமது கிறிஸ்தவ பாரம்பரியம் நலிந்து வருகையில் அந்நிய மதங்கள் வளர்ந்து வருவதையிட்டு கவலை கொள்ளும் பெரும்பான்மையினம். இந்த முரண்பாடுகளை சில இடதுசாரிக் கட்சிகளும், சிறுபான்மையின முற்போக்காளரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையில் பிற மதங்களை சகித்துக் கொள்ளும் போக்கு அபிவிருத்தியடைந்த ஐரோப்பாவை விட அபிவிருத்தியடையும் நாடுகளில் அதிகம் எனலாம். இதற்கு காலனியாதிக்க வரலாறும் ஒரு காரணம் தான். பலருக்கு வியப்பாக இருந்தாலும், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பல மதங்களும் அனுபவிக்கும் சுதந்திரம், ஐரோப்பாவில் கடந்த ஐம்பது வருட மிதமான வளர்ச்சியாக உள்ளது. உதாரணத்திற்கு மத விடுமுறை தினங்கள். இலங்கையிலும், இந்தியாவிலும் அனைத்து மதங்களது விசேட தினங்களும், தேசிய விடுமுறை தினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பா இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. தற்போதும் கிறிஸ்தவ விசேட தினங்கள் மட்டுமே தேசிய விடுமுறை தினங்களாகும். ஐரோப்பா முழுமையான மதச்சார்பற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வெகுதூரம் போகவேண்டியுள்ளது.
________________________________________________________________________ முன்னைய பதிவுகள் :
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
_______________________________________________________

1 comment:

Dr.Anburaj said...

தனது பூர்வீக குடிகளான, வெள்ளை-ஐரோப்பியருக்கு மதம் தேவையில்லை. ஆனால் வெளிநாட்டு குடியேறிகள் மதம் வளர்த்து, மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இதனால் ஊரை இரண்டுபடுத்தும் காரியமும் நிறைவேறுகின்றது.
தங்களது கருத்து பிழையானது. சலுகைகள் சிறுபான்மையினருக்குதான் வழங்க முடியும்.பெரும்பான்மை மக்களுக்கு வழங்க நடைமுறையில் சாத்தியப்படாது.மிக அதிக தொகை தேவைப்படும். அது சலுகையாக இருக்காது.திட்டம் ஆகிவிடும். கால ஓட்டத்தில் குடியேறிய மக்களும் தேசிய நீரோட்டத்தில் கலப்பாா்கள்.தாராளவாதகொள்கை கொண்ட நாடுகளை குடியேறும் மக்கள் நாசம் செய்யாமல் இருப்பாா்களாக.