Monday, September 29, 2008

"சியாட்டில் சமர்"- அமெரிக்காவின் அந்த ஐந்து நாட்கள்

1999 ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் சியாட்டில் நகரம் போர்கோலம் பூண்டது. ஆமாம்,Microsoft தலைமையகம் அமைந்துள்ள அதே சியாட்டில் தான். அங்கே உலக பொருளாதாரத்தை தனது கைக்குள் வைத்திருக்கும், "உலக வர்த்தக கழகத்தின்"(WTO) மேல்மட்ட மகாநாடு ஆரம்பமாகவிருக்கிறது. உலகமயமாதலுக்கு எதிரான இளைஞர்கள், பல்வேறு இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள், சியாட்டில் நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, WTO கூட்டத்தை குழப்ப தீர்மானிக்கின்றனர். தமது எதிர்ப்பை ஜனநாயக முறையில், அஹிம்சாவழியில், ஆனால் தந்திரோபாய வியூகங்கள் மூலம் காட்ட விளைகின்றனர்.

அமைதியான முறையில் நடந்த பேரணி, போலிஸ் தலையிட்டு கலைக்க முயன்றதால், வன்முறை தலைதூக்குகின்றது. நகரில் பெருமுதலாளிகளின் வர்த்தக நிலையங்கள் உடைத்து சேதமாக்கப்படுகின்றன, பொருட்கள் சூறையாடப்படுகின்றன. அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை, புரட்சி என்ற கெட்டகனவு வந்து பயமுறுத்துகின்றது. நவம்பர் மாத பனிக்குளிருக்குள், அந்த ஐந்து நாட்களும் இளைஞர்கள், போலீசுடன் மூர்க்கமாக மோதுகின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் இளம்சமுதாயம், வர்க்கப் போராட்டத்திற்கு தயாராக உள்ள பாட்டாளிகள், அமெரிக்காவுக்குள்ளேயே தருணம் பார்த்து காத்திருக்கின்றனர், என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய அந்த ஐந்து நாட்கள்.
BATTLE IN SEATTLE MOVIE

இந்த பின்னணியில் சந்தித்துக் கொள்ளும் நான்கு பேரை மையமாக வைத்து, "Battle in Seattle" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் தத்தமது சொந்த பிரச்சினைகளின் பேரில் அந்த போராட்டத்தில் பிரசன்னமாகியிருந்தவர்கள். அரசியலைப்பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆனால் உலகை மாற்ற வேண்டுமென்ற அவா கொண்டவர்கள். சியாட்டில் சமர் அவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியலையும் எவ்வாறு மாற்றியது என்பதை விளக்கும் இந்த திரைப்படம், தற்போது தான் வெளியாகியுள்ளது. சமுதாயத்தில் அக்கறையுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம் இது.

Anti WTO demonstration Seattle '99

________________________________________________

2 comments:

Anonymous said...

வணக்கம் தோழர் கலை.

என்னுடைய வலைப்பூவில் இணைப்பு கொடுப்பதற்காக உக்கள் இந்த கட்டுரையை வெட்டி ஒட்டுகிறேன், மறுக்கமாட்டீர்கள் எனும் எதிர்பார்ப்பில். தவறெனில் அழித்துவிடுகிறேன்.

தோழமையுடன்,
செங்கொடி

Kalaiyarasan said...

எனது கட்டுரைகளை மறுபிரசுரம் செய்வது தவறல்ல, தோழரே. மறக்காமல் எனது Blog க்கு இணைப்பு கொடுத்து விடுவது சிறந்தது. பல இணைய நண்பர்கள் அவ்வாறு செய்கின்றனர்.