Sunday, September 07, 2008

ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"


"பணக்காரன்", "பூர்ஷுவா", மேட்டுக்குடி", "புத்திஜீவி", "சுயநலவாதி" போன்ற சொற்கள், ஒருவரை தூஷிப்பதற்குப் பயன்படுத்தும்,  மோசமான வார்த்தைகள்! மேல்தட்டு அல்லது உயர் மத்தியதர (பூர்சுவா) வர்க்க பாரம்பரியத்தில் இருந்து வந்த  மாணவர்கள், கணவன்மார், மனைவிமார் தமது குடும்பப் பின்னணியை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. 

ஒரு காலத்தில், சமூகத்தில்  உயர்ந்த அந்தஸ்தில் இருந்து கொண்டு, அனைத்து பொருள் சுகங்களையும் அனுபவித்து வந்த பணக்காரர்களும், வசதி படைத்தோரும், தற்போது சமூகத்தில் "தீண்டத்தகாதவர்கள்"  போன்று நடத்தப்பட்டனர். அவர்களது உயர்கல்வி வாய்ப்புகள்,பதவி, வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒவ்வொரு குடிமகனும் தனது சொந்த பந்தங்களை விட புரட்சி முக்கியமானது என்று கருத வேண்டும். எதிர்ப்புரட்சிகர சக்திகள் யாராகவிருந்தாலும், அது நெருங்கிய உறவினராக இருந்தாலும், காட்டிக் கொடுக்க வேண்டும்.

இவையெல்லாம் ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில் (குறிப்பாக 1953 வரையிலான காலகட்டம்) நடந்த அன்றாட நிகழ்வுகள். அப்போது வாழ்ந்த சோவியத் "குடிமக்கள்" எந்தளவு  அச்சத்துடன் வாழ்ந்தனர்? "ஸ்டாலினிச பயங்கரவாதம்" என கூறப்படுவது எவ்வாறு செயல்பட்டது? எந்தப் பிரிவை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்? அவர்களின் பின்னணி என்ன? போன்ற விடயங்களை Orlando Figes என்ற பிரிட்டிஷ் சரித்திர பேராசிரியர் ஒருவர், ஆயிரக்கணக்கான சாட்சியங்களை விசாரித்து, பழைய சோவியத் அரச ஆவணங்களை பார்வையிட்டு, கைதிகளின் கடிதங்களை வாசித்து... இவ்வாறு நீண்ட ஆராய்ச்சியின் பின்னர், "The Whisperers: Private Life in Stalin's Russia" என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல், இதுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும், இன்னும் ஏனோ ரஷ்ய மொழியில் வெளியிடப் படவில்லை.

"சித்தாந்தங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற பொதுமைப் பண்பே இந்த புத்தகத்தின் கதாபாத்திரங்களை ஒன்றிணைக்கிறது." என்று கூறும் நூலாசிரியர், எதோ ஒரு வகையில் பக்கம் சாராத சரித்திரவியலாளராக காட்டிக் கொள்ள முனைகிறார். இருப்பினும், சில தடவைகள் மேற்கத்திய உத்தியோகபூர்வ கற்பித்தல்களை வழுவி நடப்பதும் தெரிகின்றது. உதாரணத்திற்கு, ஸ்டாலினை ஹிட்லருடன் ஒப்பிடும் பக்கத்தில், "என்ன இருந்தாலும்... கைதிகள் திட்டமிட்டு நச்சு வாயு செலுத்தி கொன்று குவிக்கப் படவில்லை", என்று குறிப்பிடுகின்றார். மேலும் பெரும்பாலான கைது செய்யப்பட்டவர்கள், "மக்கள் விரோதி" என்ற தகுதிக்கு உட்படாதவர்கள், இன்னும் சொல்லபோனால் எதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைத்தவர்கள், என்றும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகின்றன. அதே நேரம் நூலின் பிற பக்கங்களில், அப்படி ஏன் நடக்க வேண்டும் என்ற விளக்கம் கிடைக்கின்றது.

1. ஸ்டாலின் ஆட்சியில், யாருக்குமே பிரத்தியேக சலுகைகள் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருப்பினும், அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிப்பவராக இருப்பினும், நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தனி மனிதர்களை விட புரட்சி உயர்ந்தது.
2. உளவுப் படையில் பணி புரிந்தவர்கள் எல்லோரும், பயிற்சி பெற்ற, தொழில் தகமையுடையவர்கள் அல்ல. (பல "விசாரணை அதிகாரிகள்", அதற்கு முன்னர் சாதாரண  விவசாயியாக, தொழிலாளியாக வேலை செய்தவர்கள்.)  சிலர், சந்தேகநபரை விசாரிக்கும் பக்குவம் கூட இல்லாத அளவுக்கு நடந்து கொண்டனர்.
3. ஒவ்வொரு ஊரில் இருந்தும், குறிப்பிட்ட அளவு "மக்கள் விரோதிகளை" அடையாளம் கண்டு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு பிராந்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது. சில நேரம், மத்திய அரசு கேட்ட  அளவு சேரா விட்டால், கூடவே சில அப்பாவிகளும் பிடித்து அனுப்பப்பட்டனர். சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாகவும் பிடித்துக் கொடுத்தனர்.

பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள், கட்டாயமாக நிரப்ப வேண்டிய விண்ணப்படிவத்தில், "உங்கள் குடும்பத்தில் எவராவது கைது செய்யப் பட்டுள்ளனரா?" என்ற கேள்வி இருக்கும். அத்ற்கு "ஆம்" என்று பதிலளிக்கும் மாணவன், வகுப்பில் பிற மாணவர்களால் ஒதுக்கப் படுவான், அல்லது அவனது முன்னேற்றம் பாதிக்கப் படும்.  இதனால், பல மாணவர்கள், தமது குடும்ப பின்னணி குறித்து பொய் சொல்ல ஆரம்பித்தனர். நாடு முழுவதும் இருந்த அனைத்து பாடசாலைகளும், "வர்க்க எதிரி", அல்லது "மக்கள் விரோதி" என்போர் யார் யார் என்று, தமது மாணவர்களுக்கு போதித்து வந்தன. இதனால், சில சமயம் சிறுவர்களே, தமது ஊர்களில் புரட்சிக்கு எதிரான சக்திகளை அடையாளம் காட்டினர்.

"பவ்ளிக் மொரோசொவ்" என்ற சிறுவனின் கதை மிகப் பிரபலமானது. அந்த சிறுவன், 1932 ம்  ஆண்டு, தனது தந்தை ஒரு "கூலாக்" (பணக்கார கமக்காரன்) என்று பொலிசாருக்கு தகவல் கொடுத்தான். போலிசால் கைது செய்யப்பட்டு, சைபீரியாவின் சிற முகாமிற்கு அனுப்பபட்ட அந்தப் பையனின் தந்தை, எதிர்ப்புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டது நிதர்சனமான போதும், நூலாசிரியர் "அந்த தந்தை ஒரு புரட்சிக்கு ஆதரவாக உழைத்த சாதாரண விவசாயி" என்று கூறுவது, சரித்திரத்தை திரிப்பதாகும். இருப்பினும் இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அந்த சிறுவனை புரட்சியின் நாயகனாக சித்தரித்து, திரைப்படங்கள், கதைகள், கவிதைகள் உருவாக்கப்பட்டது உண்மைதான். பாடசாலைகளில் அந்த சிறுவனை முன்மாதிரியாக பின்பற்றுமாறு பிற மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.

திருமணமான தம்பதியருக்கிடையிலும், வர்க்க எதிரி குறித்த சந்தேகம் நிலவியது. மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர், முன்னர் அனுபவித்து வந்த  சலுகைகளை இழந்து, சாதாரண பிரஜைகளாக மாறியிருந்தனர். முன்னாள் பணக்கார, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள் யாராவது, திருமணம் முடிக்கும் நேரம், தமது வாழ்க்கைத் துணையிடம், தமது  குடும்ப பின்னணி பற்றி வாய் திறப்பதில்லை.  ஒரு வேளை, அது பின்னர் தெரிய வந்து, குடும்பத்திற்குள் மிகப் பெரிய  பிரச்சினையாக மாறினால், தம்பதிகள் விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றனர்.

தம்பதிகள் அரசியல் காரணங்களுக்காக மணமுறிவு பெறுவதை, நூலாசிரியர்  "தனி மனித துயரமாக" கருதினாலும்; ஒரு நாட்டில் புரட்சி நடந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இது கோடிட்டுக் காட்டுகின்றது.  நமது நாடுகளில், நகரங்களில் வாழும் வேறு பட்ட  சாதிகளை சேர்ந்தவர்கள், காதலித்து திருமணம் செய்தாலும், தமது குடும்பப் பின்னணியை மறைப்பதும், பின்னர் இந்த விடயம் தெரிய வரும் போது விவாகரத்து பெறுவதும், வழமையாக நடந்து வருகின்றன. நமது நாடுகளில் ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தால், இந்த நிலை தலைகீழாக மாறலாம். தமிழ் சமூகத்தில் உள்ள சாதி வெறியர்கள், கம்யூனிசத்தையும், ஸ்டாலினையும்  வெறுப்பது, ஒரு காரணத்தோடு தான்.  ஒரு புரட்சி நடந்தால், தங்கள் நிலைமை என்னவாகும் என்பதை, நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

சோவியத் சமூகம் மாபெரும் மாற்றங்களை கண்டது. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள், கல்வியறிவைப் பெறுவதன் மூலம், தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. அதேநேரம் பூர்சுவா பிரிவை சேர்ந்த, சார் மன்னர் கால அதிகாரிகளின், நிலவுடமையாளர்களின், அல்லது பிற மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. (அடிப்படை கல்வி பெறுவதற்கு எந்த தடையுமில்லை. ஒரு காலத்தில் வசதியான மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டனர். இன்றைக்கும் உலகில் பலர் ஸ்டாலினை வெறுப்பதும், ஸ்டாலினிச பயங்கரவாதம் பற்றி பேசுவோரும் அஞ்சுவது மேற்குறிப்பிட்ட நிலை தமக்கும் வரக்கூடாது என்பதற்காக தான்.)

நாடு முழுவதும் வியாபித்திருந்த, உளவாளிகளின் வலைப்பின்னல், புரட்சிக்கு எதிரானவர்களையும், மக்கள் எதிரிகளையும், வர்க்க எதிரிகளையும் அடையாளம் காணும் நோக்கில் உருவாக்கப் பட்டிருந்தது. இந்த உளவாளிகள் யாராகவும் இருக்கலாம். சக ஊழியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எவரையும் நம்ப முடியாத நிலை இருந்ததால், மக்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாக முணுமுணுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இருப்பினும், வர்க்க எதிரிகளாக்கப் பட்ட முன்னாள் நிலவுடமையாளர், பணக்கார விவசாயி, போன்றோரை அடையாளம் காண்பது ஒன்றும் கடினமான காரியமல்ல, என்ற விடயத்தை நூலாசிரியர் தெளிவுபடுத்தவில்லை. குறிப்பாக நகரங்களில், வேறு கொள்கைகளை கொண்டோர், அரசை விமர்சிப்பவர்கள் என்போரை கண்டுபிடிப்பது இலகுவான காரியமல்ல. இதனால் பல விசுவாசமான கம்யூனிஸ்ட்களும் கைதிகளாகி தண்டனைக்குள்ளானார்கள். போலிஸ் பிடித்து செல்லும் நேரத்தில் கூட சில தந்தையர், "நீ வருங்காலத்தில் ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக வர வேண்டும்" என்று கூறி, தமது பிள்ளைகளிடம் இருந்து பிரியாவிடை பெற்றுச் செல்வதை,  இந்த நூல் பதிவு செய்துள்ளது.

அரசியல் கைதிகள் சைபீரியாவின் பனிப் பாலைவன சிறை முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நூல் விவரிப்பது போல ஒன்றுமேயில்லாத பாலைவனத்தில் வாழ நேர்ந்தது, இதனால் லட்சக்கணக்கானோர் பனியில் உருகி இறந்தனர், என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று. சார் மன்னர் காலத்திலேயே, சிறை முகாம்கள் மரத்தால் ஆன வீடுகளாக கட்டப்பட்டிருந்தன.ஸ்டாலின் காலத்தில், சைபீரியாவில் தங்கம் உட்பட பல கனிமப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை சுரங்கம் கிண்டி எடுக்கும் வேலையில் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்படிப்பட்ட சுரங்கங்களுக்கு அருகில் நவீன கட்டிடங்களை கொண்ட புதிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

இவையெல்லாம் "ஒன்றுமில்லாத" பனிப் பாலைவனத்தில், வெறும் கைகளால் சாத்தியமாகியிருக்கும் என்று நூலாசிரியர் கூறுவது அம்புலிமாமா கதை. சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள், என்னதான் பயங்கரமான வர்க்க எதிரியாக இருந்தாலும், அவர்கள் வேலை செய்த போது வேதனம் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் சுரங்க தொழிலில் அதிக ஊதியம் கிடைப்பது கேள்விப்பட்டு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சாதாரண தொழிலாளர் கூட, சைபீரியா சென்று குடியேறினர். இத்தகைய தகவல்களை இந்த நூல் புறக்கணிக்கின்றது. ஏனெனில் அதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை சொல்வது மட்டும் தான்.