Saturday, September 13, 2008

பொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்



ஜனநாயக விரோத சதிப்புரட்சி மூலம், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை போல் தெரிகின்றது. 11 செப்டம்பர் 1973 சிலியில் அய்யெண்டேயின் ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவ சதிப்புரட்சி மூலம் தூக்கி எறிந்தது. இன்று சரியாக35 வருடங்களுக்கு பின்னர், சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டி,
பொலிவியா அமெரிக்க தூதுவரை வெளியேற்றியுள்ளது. அந்த தூதுவர் பொலிவியாவில் சில மாகாணங்களில் அரசாங்கத்திற்கெதிராக வெடித்துள்ள கலவரங்களை தூண்டி விட்டார், கிளர்ச்சியாளருக்கு உதவி செய்தார் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் அதற்குமப்பால் அட்சி கவிழ்ப்பு சதி பற்றிய அச்சம் காரணமாகவும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

பொலிவியாவின் வரலாற்றில் முதன்முறையாக பெரும்பான்மை பூர்வகுடிகளான செவ்விந்திய இனத்தை சேர்ந்த ஏவோ மொராலெஸ் ஜனாதிபதியாக தெரிவான பின்னர், அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் "சாந்த குரூஸ்". அது கிழக்கு பொலிவியாவின் செல்வச்செழிப்பு மிக்க மாநிலமொன்றின் பெயர். மேற்கு பொலிவியாவில் பெரும்பான்மை செவ்விந்தியர்கள் நித்திய வறுமைக்குள் வாழ்கையில், சிறுபான்மை ஸ்பானிய வம்சாவளி மக்கள் மட்டுமே செல்வந்தர்களாகவும், அதேநேரம் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் இதுவரை இருந்து வந்துள்ளனர். குறிப்பாக தொழில்துறை வளர்ச்சியடைந்த, எரிவாயு போன்ற இயற்கை வளங்களை கொண்ட சாந்த குரூஸ் மாநிலத்தில் அவர்கள் செறிவாக வாழ்கின்றனர்.
பொலிவியாவின் 55 வீதமானவர்கள் கெசுவா அல்லது அய்மரா என்ற செவ்விந்திய பூர்வகுடிகள். 30 % ஐரோப்பிய கலப்பினத்தவர்கள். 15 % தூய வெள்ளையர்கள்.

முதன்முறையாக ஒரு பொலிவியா ஜனாதிபதி, தனது நாட்டில் வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆர்ஜன்தீன புரட்சிவாதி சே குவேரவிற்கு நினைவு சின்னம் எழுப்பியதுடன் நில்லாது, அவரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் பெருமைக்குரிய ஏவோ மொராலெஸ், முதலாளித்துவ சக்திகளை உடனடியாக பகைத்து கொள்ளாமல், சோஷலிச பொருளாதார மாற்றங்களை, மிக மெதுவாக கொண்டு வர விரும்பினார். நாட்டின் முதன்மையான ஏற்றுமதி பொருளான எரிவாயு வளங்களை நாட்டுடமையாக்கியது கூட தாமதமாகத்தான். மொராலெஸ் ஒரு சோஷலிச-ஜனநாயகவாதி என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவரது அரசியல் வெனிசுவேலாவின் சாவேஸ் அளவிற்கு கூட தீவிரமானவை அல்ல. இருப்பினும் குறைந்தளவு மாற்றங்களைக் கூட முதலாளிகளும், வசதிபடைத்த மத்திய தர வர்க்கமும், ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே அங்கே நடக்கும் குழப்பங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து, வறிய செவ்விந்தியர்களும் பிரயோசனப்படும் வகையில் செல்வத்தை பிரித்துக் கொடுக்கும் ஏவோ மொரலேசின் முயற்சி, தற்போது பணக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. முதலில் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் எதிர்த்து வந்தது. பிரச்சினையின் உச்சகட்டமாக செல்வந்த "சாந்த குரூஸ் மாநிலம்" பிரிவினை கோரியது. மாநில கவர்னரும், பெரும் தொழில் அதிபர் ஒருவரும் கிளர்ச்சியை வழிநடத்தினர்.

இனவாதமும், பணவாதமும் கலந்த பாசிச அரசியல் சக்திகளின் அவதாரமான "சாந்த குரூஸ் இளைஞர் ஒன்றியம்" என்ற வலதுசாரி தீவிரவாதக்குழு வன்முறைகளில் இறங்கியது. அதன் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர் என்ற பெயரில் அரச அலுவலகங்களை சூறையாடினர். அதோடு வெறியடங்காமல் மொராலெஸ் ஆதரவு ஊர்வலத்தில் பங்குபற்ற சென்ற செவ்விந்திய பொதுமக்கள் சிலரை படுகொலை செய்தனர். இந்த வன்முறைக்கும்பல் அண்டை நாடுகளான அர்ஜன்தீனாவுக்கும், பிரேசிலுக்கும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் குழாய் ஒன்றை குண்டுவைத்து தகர்த்தது. இதனால் 8 மில்லியன் ஏற்றுமதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் இதனை "பயங்கரவாத செயல்" என்று கண்டித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட செய்திகள் மேற்கத்திய ஊடகங்களில் வடிகட்டப்பட்டே வெளியிடப்பட்டன. சாந்த குரூஸ் பிரிவினை கோரிக்கை, அம்மாநில மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கை போன்று காட்டப்பட்டது. அமெரிக்க அரசின் நிலைப்படும் அதுதானே. ஆகையினால் பொலிவியாவின் அமெரிக்க தூதுவர் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடுகிறார் என்ற சந்தேகம் வலுத்தது. பெரும்பாலும் நிலைமை மோசமடைவதை தடுக்கும் பொருட்டு தூதுவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம். இதற்கிடையே வெனிசுவேலாவில் ஜனாதிபதி சாவேசை கொலை செய்து விட்டு சதிப்புரட்சி நடத்த சில இராணுவ ஜெனரல்களுடன் திட்டமிட்டதாக கூறியே அந்நாட்டு தூதுவரும் வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக, ஒட்டுகேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒன்று வெனிசுவேலா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கர்கள் பங்கு பற்றிய சதி திட்டம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பராகுவை அறிவித்துள்ளது.
பொலிவியா வன்முறைகளை ஆர்ஜன்தீனாவும், பிரேசிலும் கண்டித்துள்ளன. அதேநேரம் அமெரிக்காவோ ஜனநாயகத்திற்கு தானே முதல் எதிரி என்று நிரூபித்து வருகின்றது. சாவேஸ் எச்சரித்துள்ளது போல, ஏவோ மொரலேசின் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அது ஆயுதமேந்திய போராட்டத்திற்கு வழிதிறந்துவிட்டது போலாகும்.

__________________________________________________

No comments: