Friday, June 05, 2009

நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியானது, ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய சிங்கள கட்சிகளிடமிருந்து பல அரசியல் கொள்கைகளை கற்றுக் கொண்டுள்ளது. தமிழீழ கோரிக்கை எழுந்த பிரிவினைக்கான காரணிகளை இனங்கண்டு அழித்து, இலங்கையில் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதும், அந்தக் கட்சிகள் முன்வைத்த அரசியல் திட்டமாகும். பல்வேறு தேசிய இனங்களின் நலன் பேணும், அல்லது பிராந்தியக் கட்சிகள் பிரிவினைவாத சக்திகளாக கருதி தடை செய்யப்படும். ("தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷ) அனைத்து இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட உள்ளன. இந்த பாசிச நடைமுறையின் பரிணாம வளர்ச்சியாக,ஒரே கட்சியின் (Sri Lanka Freedom Party) சர்வாதிகார ஆட்சியின் கீழ் வருவதற்கான அறிகுறிகள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன.

சிங்கள இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய, மற்றும் ஜே.வி.பி. போன்றன இதுவரை காலமும், ஆயுதபாணி புலிகளையும், தமிழ்தேசிய கட்சிகளையும், (தமிழ்) "இனவெறி அமைப்புகள்" என்றே சித்தரித்து வந்துள்ளன. சிங்களப் பொதுமக்கள் கொல்லப்படும் வன்முறைச் சம்பவங்களை அதற்கு உதாரணமாக காட்டப்படுவது வழமை. இலங்கை பிரச்சினையைப் பொறுத்த வரை, தமிழ் ஊடகங்கள் என்றாலும், சிங்கள ஊடகங்கள் என்றாலும் பிரச்சாரத் தொனியில் அமைந்த, மிகைப் படுத்தப் பட்ட செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை தமிழர்கள் தமிழ் ஊடகங்கள் சொல்வதை தமது சொந்தக் கருத்தாக்கியுள்ளதைப் போல, சிங்களவர்களும் சிங்கள ஊடகங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். சுருக்கமாக சொன்னால், தனது இனம் பாதிக்கப்படும் போது மட்டும் அவலக்குரல் எழுப்புவதும், மற்ற இனம் பாதிக்கப்பட்டால் அடக்கி வாசிப்பதும் வழமையாகி விட்டது. உலகில் எந்த நாட்டிலும், இனப்பிரச்சினை தீர்க்க முடியாத சிக்கலாக இழுபடுவதற்கு, இனப்பெருமிதம் சார்ந்த பிரச்சாரம் முக்கிய தடையாக உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புலிகள் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதை சாட்டாக வைத்து தடை செய்யப்போவதாக கோத்தபாய காரணம் கூறியுள்ளார். அன்று த.தே.கூ. பெருமளவு கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதாக தேர்தல் சமயத்தில் முறைப்பாடுகள் வந்த போதும் அதனை விசாரிக்காத, அல்லது அந்தக் குற்றச்சாட்டுக்காக தேர்தலை இரத்து செய்யாத இலங்கை அரசு, தக்க தருணம் வரும் வரை காத்திருந்தது போல தெரிகின்றது. இது போன்றதே, த.தே.கூ. உறுப்பினர்களின் புலிகளுடன் தொடர்பு சம்பந்தமான குற்றச்சாட்டும். புலிகளுடனான தொடர்பை குற்றமாக காட்டி, அரசுக்கெதிரான எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட இருப்பதையே இது கோடி காட்டுகின்றது.

சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததை மறுப்பதற்கில்லை. இலங்கைத் தேர்தல்களில் கள்ள வாக்குப் போடுவதென்பது சர்வசாதாரணமாக அனைத்துக் கட்சிகளும் தெரிந்தே செய்யும் குற்றமாகும். இருப்பினும், பெருமளவு வட-கிழக்கு மாகாண தமிழ் மக்கள் த.தே.கூ. கட்சிக்கு தமது வாக்குகளை வழங்கியதையும் மறுப்பதற்கில்லை. த.தே.கூ. வெற்றி பெற்றால், புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சமாதானம் மலரும், என்பது அப்பாவி தமிழ் மக்களின் நப்பாசையாக இருந்தது. வட-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சமாதானத்திற்கான அபிலாஷைகளை, புலிகள் பின்னர் புறக்கணித்து போருக்கு தயாரானது வேறு கதை.

சமாதான ஒப்பந்தத்தை பயன்படுத்தி, வட-கிழக்கு மாகாணத்தில் அரசியல் வேலை செய்த புலிகள், த.தே.கூ.ப்பிற்கு மக்கள் வாக்குப் போட வேண்டுமென்று பிரச்சாரம் செய்திருந்தனர். புலிகள் தம்மை எப்போதும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அமைப்பாக காட்டி வந்துள்ளனர். "சாத்வீக போராட்டங்களால் எந்தப் பலனும் இல்லை, ஆயுதப் போராட்டமே சிறந்தது" என்ற கோட்பாட்டின் படி நடந்து கொண்டனர். இலங்கை அரசு நடத்தும் தேர்தல்களில் பங்குபற்றுவது, அரசை வலுப்படுத்த உதவும் என்று சரியாகவே கணிப்பிட்டிருந்தனர். 1981 ம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட சுட்டுக் கொன்று, தேர்தலை குழப்ப முயற்சித்தனர்.

பிற்காலத்தில், புலிகளால் துரோகக் குழுக்கள் என அழைக்கப்படுவோர் தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வரத்தொடங்கினர். அரசும் இவர்களை தமிழர் பிரதிநிதிகளாக வெளி உலகிற்கு காட்டி வந்தது. தமது அரசியல் சார்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்பதை, புலிகள் சற்று காலந் தாழ்த்தியே புரிந்து கொண்டனர். இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த 1988 காலத்தில் நடந்த பொதுத் தேர்தலில்,தம்முடன் நட்புறவைப் பேணிய ஈரோஸ் உறுப்பினர்களின் தெரிவுக்கு புலிகள் மறைமுக ஆதரவு வழங்கினர்.

ஈரோஸ் அமைப்பினர் ஒரு காலத்தில் ஆயுதமேந்திய ஈழப்புரட்சி பற்றி பேசியவர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போது, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தவர்கள். த.தே.கூ. வைப் போலன்றி,சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்தனர். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகுபவர்கள், "ஈழம் கோரும் பிரிவினைவாதத்திற்கு எதிராக" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி அரசாங்க அதிகாரிகள் கூட பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு தான் பதவி நாற்காலியில் அமர வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அன்று (ஈழத்திற்கு எதிரான) சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்து, பாராளுமன்ற பதவிகளை தியாகம் செய்தனர். கொள்கைக்காக பதவியை பறிகொடுத்த ஈரோஸ் உறுப்பினர் ஒருவர், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். சுவிஸ் அரசு குறுகிய காலத்திலேயே அவருக்கு அகதி அந்தஸ்து கொடுத்து கௌரவித்தது.

தற்போதுள்ள த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழீழப் பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு, பாராளுமன்றப் பதவியில் அமர்ந்திருந்ததை காரணமாக காட்டியே, அரச அடக்குமுறை சட்டம் அவர்கள் மேல் பாய வாய்ப்புள்ளது. இதே நேரம், வெளி நாடுகளுக்கு பயணம் செய்து தமிழீழ ஆதரவு பிரச்சாரம் செய்ததற்காக, ஏற்கனவே சில உறுப்பினர்கள் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுத்துறை பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவர்களது பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தது. அரச புலனாய்வுத்துறை இதற்கென பெரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. புலிகள் சார்பான ஊடகங்கள் பகிரங்கமாகவே இத்தகைய பேச்சுகளை ஒலி/ஒளி பரப்புகின்றன.

சமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது. சர்வதேசமும் இதே காரணத்திற்காக கள்ள வாக்குகள் குறித்த முறைப்பாடுகளை புறக்கணித்தது. அரசும், புலிகளும் அதிகாரத்தை பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என அவை எதிர்பார்த்தன. த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழத்தை அல்லது புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசி வந்த போதும், இலங்கை அரசு அப்போது அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹெல உறுமைய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் பிரிவினைவாத த.தே.கூ. உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தன. அப்போதெல்லாம் த.தே.கூ.பின் பிரசன்னம் தனக்கு அவசியம் என்றே அரசு எண்ணியது. இதற்கு சர்வதேச அழுத்தம் காரணம், எனக் கூறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

ஆயுதமேந்தியுள்ள காரணத்திற்காக, அல்லது பயங்கரவாத செயல்களைப் புரிந்த காரணத்திற்காக, புலிகள் இயக்கத்தோடு அரசு பேச மறுத்தாலும், த.தே.கூ.வுடன் பேச மாட்டேன் என தட்டிக் கழிக்க முடியாது. பல நாடுகளின் பிரச்சினைகள் அரசியல் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக தான் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வட அயர்லாந்து பிரச்சினை தீர்க்கப்பட்ட விதம். தலைமறைவு ஆயுதக்குழுவான ஐ.ஆர்.ஏ., "சின் பெயின்" என்ற கட்சியை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க விட்டபோது, பிரிட்டிஷ் அரசால் தடை செய்ய முடியவில்லை.(இலங்கை அரசைப் போலவே, பிரிட்டிஷ் அரசும் பயங்கரவாத அமைப்புடன் பேசுவதில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தது.) இறுதியில் சின் பெயினுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த பின்னர் தான், ஐ.ஆர்.ஏ. ஆயுதப் போராட்டத்தை கைவிட முன்வந்தது.

2002 ம் ஆண்டு முதல், இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலங்களில், இலங்கை சென்ற பிரிட்டிஷ், அயர்லாந்து இராஜதந்திரிகள் "வட-அயர்லாந்து தீர்வை" மேற்கோள் காட்டி பேசி வந்துள்ளனர். இப்போதும் சில இடதுசாரிகள் நேபாள தீர்வை உதாரணமாகக் காட்டும் போது, தமிழ் தேசியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. எவராவது வட-அயர்லாந்து தீர்வை எடுத்துக் காட்டும் போது மட்டும், அவர்கள் அதேயளவு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பதில்லை. இதற்கெல்லாம் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு தான் காரணம்.

2002 ம் ஆண்டு, பிராபாகரனும், அன்றைய பிரதமர் ரணிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவத்தை வெளியிட்ட சண்டே டைம்ஸ் பத்திரிக்கை "D-day" என்று தலைப்பிட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க-ஆங்கிலேய படைகள் பிரெஞ்சுக் கடற்கரையில் தரையிறங்கிய நிகழ்வே D-day என அழைக்கப்படுகின்றது. அதற்குப் பின்னர் இறுதித் தீர்வு எட்டப்படும் காலம் தொடங்கி விட்டது எனக் குறிப்பிட, D-day என்ற சொற்பதம் பாவிக்கப்படுகின்றது. இலங்கையின் மேற்குல சார்பு பத்திரிகையான சண்டே டைம்ஸ், இலங்கையின் இருபதாண்டு போரை எப்படியேனும் நிறுத்துவதென்று சர்வதேச நாடுகள் களமிறங்கி விட்டன என்பதை மறைமுகமாக தெரிவித்தது.

சமாதான காலத்தில், புலிகள் அமைப்பு த.தே.கூ.வின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. புலிகளைத் தவிர வேறு எந்த தமிழ் அமைப்பிற்கும் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு அழைப்பு விடப்படவில்லை. இது புலிகள் பெரிதும் விரும்பிய ஏக பிரதித்துவ கோட்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி. இருப்பினும், "பயணம் செய்ய ஹெலி காப்டர் தரவில்லை" என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நோர்வேயின் அனுசரணையாளர் எரிக் ஸொல்ஹைம் தனது விசனத்தை இவ்வாறு தெரிவித்தார்:"இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது சர்வதேச சமூகம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால், உலகின் பிற பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை கவனிக்கப் போய் விடுவார்கள். தமிழரின் பிரச்சினை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு விடும்." இது ஒன்றும் எரிக் சொல்ஹைமின் தீர்க்கதரிசனம் அல்ல. உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்கும் என பாண்டித்தியம் பெற்ற மேலைநாட்டு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப் படி தான் மேற்கத்திய அரசுகள் செயல்படுகின்றன. ஒரு பிரச்சினையை முகாமைத்துவம் செய்வது சம்பந்தமாக, எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள்.

த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களின் தேவைகள் குறித்து எப்போதாவது பேசியதாக எனக்கு நினைவில்லை. 2004 ம் ஆண்டு, சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்த இயற்கை அனர்த்தத்தின் போதும், அண்மையில் மனிதப் பேரவலத்தை தோற்றுவித்த இனவழிப்பு யுத்ததின் போதும், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தமது தொகுதி மக்களை சென்று பார்க்கவில்லை. அதற்கு மாறாக ஒரு குழுவினர் மேலைத்தேய நாடுகளிலும், இன்னொரு குழுவினர் இந்தியாவிலுமாக "லாபி"(Lobby) வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.

சுமார் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், வைகுந்தவாசன் என்ற புலம்பெயர்ந்த ஈழத்து புத்திஜீவி ஒருவர், ஐ.நா.மன்றக் கூட்டத்தில் திடீரென நுழைந்து தமிழீழத்தின் பிரதிநிதியாக உரையாற்றினார். அப்போது இந்த "சர்வதேச ஸ்டண்ட்" புலிகளிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. "நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழம்" என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தனர். தாயகத்தில் போராடும் மக்களிடம் அந்நியப்பட்ட எந்தவொரு தமிழீழப் பிரகடனமும் செல்லாக்காசாகி விடும் என்று மிகச் சரியாகவே கணித்திருந்தனர். ஈழப் போரின் இறுதி முடிவும் தற்போது அதே போன்ற நிலையை தோற்றுவித்துள்ளமை ஒரு கசப்பான முரண்நகை.

ஈழத்தில் மக்கள் அடுத்த வேளை சாப்பாடு எப்படிக் கிடைக்கும் என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். அந்த மக்கள் உணவு,வீடு,வேலை என்று தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமக்கான அரசியல் தலைமையைப் பொறுத்த வரை, "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கென்ன", என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை. இலங்கை அரசோ, "ஈழம்" என்ற சொல்லையே அடுத்த தலைமுறை நினைத்துப் பார்க்க முடியாதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.


______________________________________________________________________

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

~புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
~சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்

_______________________________________________________________________

Wednesday, June 03, 2009

கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 8

ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். 

இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப் போருக்குப் பிறகு தான், "எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசிகளின் தலைவனால் ஆளப்படும் கிராமமல்ல." என்ற உண்மையை புரிந்து கொண்டார்கள். 

எத்தியோப்பிய சக்கரவர்த்தி "மெனலிக்", ஐரோப்பிய அரசர்களுக்கு நிகரானவராக மதிக்கப்பட்டார். போருக்குப் பின்னர், இத்தாலி எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் செங்கடல் ஓரமாக இருக்கும் எரித்திரியாப் பகுதிகளை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டது. இருப்பினும் கடல் எல்லை பறிபோனது, எத்தியோப்பியாவிற்கு இழப்பு தான். இத்தாலிய காலனிய நிர்வாகத்தின் கீழ் இருந்த எரித்திரியா பிற்காலத்தில் நீண்ட தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது. இது குறித்து பின்னர் பார்ப்போம்.

இத்தாலிய தேசியவாதிகளால் எத்தியோப்பிய தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. பழிக்குப்பழி வாங்க வேண்டும் என கறுவிக் கொண்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர், இத்தாலியில் தேசியவாதிகள், இனவாதிகளின் ஆதரவுடன் பாஸிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சி ஏற்பட்டது. முசோலினி பழிவாங்கும் படை நடவடிக்கையை எடுத்தார். 


இம்முறை இத்தாலியப் படைகள் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தன. அந்த வெற்றி எவ்வாறு சாத்தியமாகியது? உலக வரலாற்றில் முதன் முதலாக போரில் விஷ வாயு பிரயோகிக்கப்பட்டது. லட்சக்கணக்கான எத்தியோப்பிய மக்களை விஷ வாயு மூலம் கொன்று குவித்து, அந்தப் பிணங்களின் மீது தான் இத்தாலி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. மேற்குலக நாடுகள் தமது சரித்திர நூல்களில் மறைக்க விரும்பும் அத்தியாயம் அது. இத்தாலியின் ஆக்கிரமிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. 

விரைவில் இரண்டாம் உலகப் போர் மூண்டு, இத்தாலி ஜெர்மனி பக்கம் சேர்ந்ததால் போரில் தோற்க வேண்டியேற்பட்டது. அப்போது வட ஆப்பிரிக்காவில் களமிறங்கிய பிரிட்டிஷ் படைகள், எரித்திரியாவையும், எத்தியோப்பியாவையும் விடுவித்தன. அப்போது ஒரு சுவையான சம்பவம் இடம்பெற்றது. பிரிட்டிஷ் படைகளை வரவேற்க வீதிகளில் எரித்திரிய மக்கள் குழுமியிருந்தனர். வீதியில் வெற்றிப்பவனி வந்த பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவரிடம், தம்மை விடுதலை செய்ததற்காக ஒரு எரித்திரியப் பெண்மணி நன்றி தெரிவித்தார். அப்போது அந்த ஜெனரல் இவ்வாறு பதிலளித்தார் : "கறுப்பியே! நான் உன்னை விடுதலை செய்வதற்காக இங்கே வரவில்லை!!"

உலகப்போருக்குப் பின்னர் முன்னாள் இத்தாலிய காலனியான எரித்திரியா, மீண்டும் எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐ.நா. சபை எரித்திரியா தனியான நாடாக இருக்க உரிமை உண்டு என கூறியது. அது நடைமுறைச் சாத்தியமாகாததற்கு, பின்னணியில் பிரிட்டிஷ் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம். 50 ஆண்டு கால காலனிய கலாச்சாரம், ஒன்பது மொழிகள் பேசும் எரித்திரிய மக்கள் மத்தியில் பொதுவான தேசியத்தை உருவாக்கியது. அந்த உணர்வாலேயே பிற எத்தியோப்பியர்களிடமிருந்து தாம் சிறந்தவர்களாக கருதிக் கொண்டனர். 


உலகில் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒரு குறிப்பிட்ட இனத்தை, மொழியை, மதத்தை அடிப்படையாக கொண்டு நடப்பது பலருக்கு தெரியும். ஆனால் முன்னாள் காலனிய பிரதேசம் ஒன்றுக்கு சுயநிர்ணய உரிமை, என்று சொல்கிறது ஐ.நா.மன்றம். அது எப்படி? இங்கே தான் "தேசியம் என்றால் என்ன?" என்று மேலைத்தேய நாடுகள் கொடுக்கும் விளக்கங்கள் நமது புரிதலில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அன்றைய காலனிய நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசம் மட்டுமே தேசியமாக அங்கீகரிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய, எரித்திரிய அகதிகள் ஒரே மொழி (அம்ஹாரி) பேசுவதை அவதானித்திருக்கிறேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் இரண்டு பக்கமும் இருந்தனர். இதனால் எரித்திரிய தேசிய விடுதலைப் போராட்டம் எந்த வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. இறுதியில் எனது நண்பரான, முன்னை நாள் எரித்திரிய விடுதலைப் போராளி ஒருவரிடமிருந்து பல தகவல்கள் கிடைத்தன. 


தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்தில் இஸ்லாமிய Eritrean Liberation Front (ELF) இனால் முன்னெடுக்கப்பட்டது. மொத்த சனத்தொகையில் கணிசமான அளவு (50%) முஸ்லிம்கள் உள்ளனர். இதனால் லிபியா, சூடான் போன்ற நாடுகளும் ஆதரித்தன. ELF இலிருந்து பிரிந்த, Eritrean People's Liberation Front (EPLF) ஆரம்பத்தில் மார்க்ஸிஸம் பேசினாலும், அது ஒரு தேசியவாத இயக்கமாகவே இருந்தது. அம்ஹாரி, திக்ரின்யா, அரபு, அபார் ஆகிய மொழிகளை பேசும் பல்வேறு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதே மொழிகளைப் பேசும் மக்கள் எத்தியோப்பியாவிலும் வாழ்கிறார்கள். இருப்பினும் திக்ரின்யா மொழி பேசுபவர்கள் சற்று அதிகம் என்பதால், இன்றைய சுதந்திர எரித்திரியாவில் அதுவே ஆட்சி மொழி.

EPLF இயக்கம் அனேகமாக எந்தவொரு நாட்டிடம் இருந்தும் நிதியுதவி பெற்றதாக குறிப்புகள் இல்லை. எத்தியோப்பியாவுடன் பகைமை பாராட்டிய சோமாலியாவும், சூடானும் உதவி செய்த போதிலும், பெருமளவு நிதி புலம்பெயர்ந்த எரித்திரிய மக்களிடம் இருந்தே கிடைத்து வந்தது. கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கெரில்லாக்கள், அமெரிக்க உதவி பெற்ற எத்தியோப்பிய மன்னரின் இராணுவத்தை தீரத்துடன் எதிர்த்து போராடி வந்தனர். 


1974 ம் ஆண்டு, மன்னராட்சி சதிப்புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டு, மார்க்ஸிச இராணுவ அதிகாரிகள் ஆட்சியமைத்தனர். அந்த நேரம் பார்த்து, சோமாலியா எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எத்தியோப்பியாவின் கிழக்குப்பகுதி மாகாணத்தில் சோமாலி மொழி பேசும் மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. படையெடுப்பாளருக்கு அகண்ட சோமாலியா அமைக்கும் நோக்கம் இருந்திருக்கலாம். 

புதிய அரசு எவ்வளவு கேட்டும், அமெரிக்க உதவி வழங்க மறுத்தால், சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. அதுவரை சோமாலியா பக்கம் நின்ற சோவியத் யூனியன், பூகோள அரசியல் நலன் கருதி எத்தியோப்பியாவிற்கு உதவ முன்வந்தது. உடனடியாக கியூபா வீரர்கள் தருவிக்கப்பட்டு, சோவியத் ஆயுதங்களை கொண்டு போரிட்டு, சோமாலிய படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.

1974 ம் ஆண்டிலிருந்து, 1991 ம் ஆண்டு வரை எத்தியோப்பியாவை ஆண்ட மென்கிஸ்டு சோவியத் உதவி தாராளமாக கிடைத்து வந்ததால், சோஷலிச சீர்திருத்தங்களை முன்னெடுத்து வந்தாலும், அடக்குமுறையும், கொலைகளும் குறையவில்லை. சோவியத் யூனியனும், கியூபாவும் இது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்து வந்தாலும், மென்கிஸ்டு எல்லாவற்றையும் சோஷலிசத்தின் பெயரில் ஏமாற்றி வந்தார். எத்தியோப்பியாவின் பிற தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அம்ஹாரி தேசிய மொழியாகியது. 


எத்தியோப்பியாவின் கடைசி சக்கரவர்த்தி ஹைலெ செலாசி காலத்திலேயே, "அம்ஹாரி மொழி மேலாதிக்கம்" ஆரம்பமாகி விட்டது. அரசாங்க உத்தியோகம் பெற விரும்புவோர் அம்ஹாரி மொழி பேச வேண்டும் என்ற சட்டம் வந்தது. ஹைலெ செலாசியும், மென்கிஸ்டுவும் சிறுபான்மை இனங்களின் எதிர்ப்பியக்கத்தை கொடூரமாக அடக்கினார்கள். பட்டினிச் சாவுகள் ஒரு அடக்குமுறை ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்கா என்றதும் உணவின்றி வாடும் குழந்தைகளும், பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களும் ஞாபகத்திற்கு வருமளவிற்கு, எத்தியோப்பியாவின் பஞ்சக் காட்சிகளை தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பின. இதனால் எத்தியோப்பியா மக்கள் முழுவதும் ஒரு காலத்தில் உணவின்றி பட்டினியால் செத்து மடிந்ததாக உலகம் நினைத்துக்கொண்டது. அந்த எண்ணம் தவறானது. 


மொத்த சனத்தொகைக்கும் உணவிட முடியாத அளவிற்கு வளமற்ற நாடல்ல அது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, குளங்களை வெட்டி, அணைகளை கட்டி, விவசாய பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக எத்தியோப்பியா விளங்கியது. 

1973 ம் ஆண்டு, திக்ரின்யா மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். நிலைமையை பார்வையிட சென்ற ஊடகவியலாளர்கள், மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், எரித்திரியா மீதான போருக்கும் பெருந்தொகை பணம் செலவாவதை கண்டனர்.

திக்ரின்யா மக்கள் எரித்திரியாவை சேர்ந்த பிரதேசத்திலும் வாழ்வது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அந்த சிறுபான்மை மக்களின் போராட்டத்தை முறியடிக்கவே, அரசு உணவுத்தடையை ஏற்படுத்தி, பஞ்சத்தை பட்டினிச் சாவுகளாக மாற்றி விட்டிருந்தது.

மன்னர் ஹைலெ செலாசியின் வீழ்ச்சிக்கு பஞ்சமும் ஒரு காரணம். சதிப்புரட்சியில் மன்னரை கொன்று, மாளிகையின் உள்ளேயே புதைத்த மென்கிஸ்டுவின் குடியாட்சியிலும் அரசின் கொள்கை மாறவில்லை. 1984-1985 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம் கூட அரசின் புறக்கணிப்பு காரணமாக உருவானது தான். கிழக்கே சோமாலியா, வடக்கே எரித்திரியா, தெற்கே ஒரோமோ என்று அரசு மும்முனைகளில் போரில் ஈடுபட்டிருந்தது. அதற்காக பெருமளவு பணம் ஆயுதங்களை வாங்க செலவிடப்பட்டது. அதே நேரம் நாட்டின் சில பகுதிகளில் வரட்சி நிலவியது. 


வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் யாவும் சிறுபான்மை இனங்களின் வாழ்விடங்கள் எனது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்களின் இடப்பெயர்வு நிலைமையை மோசமாக்கியது. தன்னை எதிர்த்து போரிட்ட சிறுபான்மை இன மக்கள் மடிவதைப் பற்றி அரசும் அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தால், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு மக்களை காப்பற்ற வேண்டி ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தான் தொலைக்காட்சி கமெராக்கள் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன.

சிறுபான்மையின மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக, அரசு அவர்களை பட்டினிச் சாவிற்கு தள்ளிய கதையை எனக்கு கூறியவர் ஒரோமோ இனத்தவர் ஒருவர். அவரை நான், காங்கோ நாட்டு நண்பரின் வீட்டு விருந்தின் போது சந்தித்தேன். நான் வழக்கமாக, அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று கேட்டதற்கு, "ஒரோமியா" என்று பதிலளித்தார். உலக வரைபடத்தில் அப்படி ஒரு நாடு இருப்பதாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. "ஈழத்தமிழர்கள் ஈழம் என்ற தேசியத்தை அடையாளப்படுத்துவது போல, எத்தியோப்பியாவின் ஒரோமோ இனத்தை சேர்ந்த அவர் அப்படி தனது தேசியத்தை அடையாளப்படுத்துகிறார்." என்று பின்னர் விளக்கம் கூறினார் எனது காங்கோ நண்பர். 


எத்தியோப்பியாவில் Oromo Liberation Front (OLF) என்ற இயக்கம், "ஒரோமியா" என்ற தனி நாடு கோரிப் போராடி வருகின்றது. எத்தியோப்பியாவின் மொத்த சனத்தொகையில் ஒரோமியர்கள் 40%, அதாவது பெரும்பான்மை இனம். ஆனாலும் அவர்கள் சொத்துகளற்ற, அடக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்துள்ளனர். அம்ஹாரி, திக்ரின்யா மொழி பேசும் நிலச்சுவான்தார்கள் ஒரோமியரின் நிலங்களை பறித்து சொந்தம் கொண்டாடியதுடன், மண்ணின் மைந்தர்களை பண்ணையடிமைகளாக வேலை வாங்கினார்கள். 

எத்தியோப்பியாவில் 1974 ம் ஆண்டு ஏற்பட்ட சோஷலிச அரசாங்கம் கொண்டுவந்த நிலச்சீர்திருத்தத்தின் பின்னரே நிலைமை மாற்றமடைந்தது. நிலப்பிரபுக்கள் கைது செய்யப்பட்டு காணாமல்போயினர். அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலப்பிரபுக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பின்னர் தான் ஒரோமோ மக்கள் தலைநிமிர்ந்தனர். 

இருப்பினும் அடக்கப்பட்ட ஒரோமோக்களின் எழுச்சியானது, குறுந்தேசியவாதப் போராட்டமாகவே உள்ளது. ஏனெனில் முன்பு மேலாண்மை செய்த அம்ஹாரி, திக்ரின்யா மக்கள் தற்போது ஒரோமோ பகுதிகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு இனரீதியான வெறுப்பு மேலோங்கி காணப்படுகின்றது.

எத்தியோப்பியாவின் வடக்கே இருக்கும் "அக்சும்" என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு தான் பண்டைய எத்தியோப்பிய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. இராச்சியத்தை விரிவுபடுத்திய மெனலிக் மன்னன் தான், தெற்கே ஒரோமோக்களின் "Finfinne" என்ற இடத்தில் "அடிஸ் அபேபா" என்ற இன்றுள்ள தலைநகரத்தை உருவாக்கினான். சக்கரவர்த்தியின் தெற்கு நோக்கிய நில விஸ்தரிப்புக் காலத்தில், ஒரோமோ பிரதேசங்களை கைப்பற்றிய போர்வீரர்கள் தம்மால் முடிந்த அளவு கொள்ளையடித்து சென்றனர். தங்கம், யானைத்தந்தம், மற்றும் அகப்பட்ட மக்களை அடிமைகளாகவும் பிடித்துச் சென்றனர். 


அப்போது தான் "கோப்பி"(Coffie) என்ற புதிய பானம் உலகிற்கு அறிமுகமானது. கோப்பி எத்தியோப்பியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. கோப்பி ஏற்றுமதி இன்றும் எதியோப்பியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்றது. கோப்பி மட்டுமல்ல, சிறுவர்கள் மெல்லும் "சூயிங் கம்" தயாரிக்க தேவையான மூலப்பொருள் எத்தியோப்பியாவில் வளரும் ஒரு வகை மரத்தில் தான் கிடைக்கிறது. இவ்வளவு பொருளாதார பலன்களையும் அம்ஹாரி நிலப்பிரபுக்களே அனுபவித்தனர். அதற்கு பிரதிபலனாக ஒரோமோ மக்களை அடிமைகளாக நடத்தினர். 

ஆளும்வர்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அன்றும், இன்றும் பழமைவாத கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான ஒரோமோ மக்கள் இன்று இஸ்லாமிய மதத்தை தழுவி தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அம்பேத்கார் தலைமையில் பௌத்த மதத்தை தழுவியது போன்றதே அதுவும். இன்றைய எத்தியோப்பிய அரசு, ஒரோமோ இளைஞர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளாக மாறி வருவதாக குற்றஞ் சாட்டி வருகின்றது.

எத்தியோப்பியாவில் (கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றும்) பழமைவாத கிறிஸ்தவம் அரசமதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்சும் நகரம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நகரம். அங்கே வேறு எந்த மத வழிபாட்டுத் ஸ்தலங்களும் நிறுவ அனுமதி கிடையாது. அக்சும் நகரில் Unesco வால் பாதுகாக்கப்படும், பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட மாபெரும் தேவாலயம் ஒன்றுள்ளது. "லல்லிபெல்லா தேவாலயம்" ஒரு உலக அதிசயம். மேலேயிருந்து பார்க்கும் போது சிலுவை போல தோன்றும் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 


அக்சும் நகரில் உள்ள சியோன் தேவாலயத்தில் ஓரிடத்தில் ஆண்டாண்டு காலமாக கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் ஒன்றுள்ளது. ஆண்டவர் மோசெசிற்கு அருளிய பத்துக் கட்டளைகள் பொறித்த ஆவணம் அங்கே பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதனை இதுவரை எவரும் பார்த்ததில்லை. அக்சும் இராச்சியத்தை ஸ்தாபித்த முதலாவது மெனலிக் காலத்தில், இடிந்து போன யூதர்களின் ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்த ஆவணம் எடுத்துவரப்பட்டதாக கதை ஒன்றுண்டு.

அம்ஹாரி மொழியானது அரபு, ஹீபுரூ மொழிகளைப் போல செமிட்டிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய குடாநாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள், ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்து இன்றுள்ள அம்ஹாரி, திக்ரின்யா இனங்கள் தோன்றியிருக்கலாம். இந்த மொழிகள் தமக்கென தனியான எழுத்து வரிவடிவங்களை கொண்டிருப்பதால், பிற ஆப்பிரிக்க மொழிகளில் இருந்து வேறுபடுகின்றன. 


எத்தியோப்பியாவின் சரித்திரம் "மக்கெடா" என்ற இராணியின் காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. அறிவுக் கூர்மையுடைய பேரழகி மக்கெடா பற்றி யேமன் நாட்டு சரித்திரக் குறிப்புகள் "ஷீபா நாட்டு இராணி" என குறிப்பிடுகின்றன. தற்போதும் யேமனியர்களையும், எத்தியோப்பியர்களையும் உற்று நோக்கினால், அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தோன்றுவார்கள். இதனால் செங்கடலின் இருமருங்கிலும் ஆதி காலத்தில் ஒரேயின மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. தற்போதும் தொடரும் சில கலாச்சாரக் கூறுகளை மேலதிக ஆதாரமாக கொள்ளலாம். உதாரணத்திற்கு வெற்றிலை மெல்லும் பழக்கம். ஆனால் அது எமது நாட்டு வெற்றிலையை விட அதிக போதை தரும்.

பண்டைய இஸ்ரேலிய மன்னன் சாலமன் (972-932) அரண்மனைக்கு, ஷீபா நாட்டு அரசி மக்கெடா விஜயம் செய்த போது, அவளது அறிவிலும், அழகிலும் மயங்கிய சாலமன் அவளை சிறிது காலம் தன்னுடனே தங்கும் படி வேண்டினான். மதிநுட்பம் வாய்ந்த அரசனாக மகிமை பெற்றிருந்த சாலமன், கருநிற பேரழகியின் அணைப்பில் மயங்கிக் கிடந்ததாகவும், இதனால் இராஜ காரியங்களை கவனிக்காமல் விட்டதாகவும் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகின்றது. 


பைபிள், ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கறுப்பின பெண்ணை உலகப் பேரழகியாக வர்ணிப்பது, இங்கே குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் மட்டுமே அழகு என்பது பிற்காலத்தில் ஐரோப்பிய இனவாதிகள் பரப்பிய கருத்தியல். சாலமனுடனான உறவில் கர்ப்பமுற்ற ஷீபா அரசி தாய் நாடு திரும்பியதாகவும், அங்கே ஒரு மகனை பெற்றெடுத்ததாகவும் பைபிள் மேலும் குறிப்பிடுகின்றது. எத்தியோப்பியாவில் 14 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, "Kebra Negest" என்ற மன்னர்களின் கதைகளைக் கூறும் நூலிலும் இது குறிப்பிடப்படுகின்றது. சாலமனுக்கும், மக்கெடாவுக்கும் பிறந்த மகன் தான் எத்தியோப்பியாவில் இராசதானியை நிறுவிய (முதலாவது) மெனலிக் அரசன் என்று கூறுகின்றது.

எத்தியோப்பிய கிறிஸ்தவம், எகிப்தின் "கொப்திக்" மதப்பிரிவை சேர்ந்தது. இந்தப் பிரிவின் வழிபாட்டு முறை கிரேக்க முறையில் இருந்து சற்றே வேறுபடுகின்றது. இவையெல்லாம் ஆதிகால கிறிஸ்தவ வழிபாட்டை கொண்டதால், "பழமைவாத கிறிஸ்தவம்" என்றும் அழைக்கப்படுகின்றன. எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்குகளை பின்பற்றுகின்றனர். யூதர்களில் இருந்து பிரிந்தவர்களே, கிறிஸ்தவம் என்ற புது மதத்தை தோற்றுவித்தார்கள் என்பது இதிலிருந்து நிரூபணமாகின்றது. 


ஐரோப்பா கிறிஸ்தவமயமாவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆப்பிரிக்காவில், அதாவது எத்தியோப்பியாவில், கிறிஸ்தவ மதம் பரவியிருந்ததை முன்னர் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். வத்திக்கானில் லத்தீன் மொழி பைபிள் எழுதப்படுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே, எத்தியோப்பியாவில் எழுதப்பட்ட பைபிள் சுவடிகள் இப்போதும் பாதுகாக்கப்படுகின்றன.

1868 ம் ஆண்டு, எத்தியோப்பியாவில் மாபெரும் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சக்கரவர்த்தியினால் சேவைக்கு அமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் படைவீரர்கள், சக்கரவர்த்தி மரணமடைந்த குழப்ப சூழ்நிலையை பயன்படுத்தி, விலை மதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். 


அரச ஆபரணங்கள், மத சின்னங்கள், இவற்றுடன் சுவடிகளையும் அள்ளிச் சென்றனர். கையால் எழுதப்பட்டிருந்த பைபிள் பிரதிகள், மற்றும் Kebra Negest வரலாற்று சுவடிகள் ஆகியன பின்னர் லண்டன் தெருக்களில் ஏலம் விடப்பட்டன. பிரிட்டிஷ் மியூசியம் 350 சுவடிகளை வாங்கியது. விக்டோரியா இராணி எட்டு சுவடிகளை தனது பிரத்தியேக நூலகத்திற்கென பெற்றுக் கொண்டார். அரச ஆபரணங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்று தெரியாத அளவிற்கு மறைந்து போயின. 

இன்றைய எத்தியோப்பிய அரசு பல தடவை முயற்சித்தும், குறிப்பிட்ட அளவு திருட்டு பொருட்கள் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளன. என்ன இருந்தாலும், இத்தாலியர்களின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது. அக்சும் நகர மத்தியில், 30 மீட்டர் உயரமும், நூறு தொன் எடையும் உள்ள கல் தூண் (Obelisk) ஒன்று நின்றது. 1937 ல் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்த முசோலினியின் படையினர், அந்த கல் தூணை துண்டுகளாக்கி இத்தாலி கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். 2004 ம் ஆண்டு தான் இத்தாலி அதனை திருப்பிக் கொடுக்க முன்வந்தது.

எத்தியோப்பியா ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறியப்பட்டாலும், அங்கேயும் எரித்திரியாவிலும் மொத்த சனத்தொகையில் அரைவாசிப்பேர் முஸ்லிம்கள். செங்கடலைத் தாண்டினால் இஸ்லாமியரின் புனிதஸ்தலமான மெக்கா மிக அருகாமையில் தான் உள்ளது. இருப்பினும் இவ்விரண்டு நாடுகளிலும் கிறிஸ்தவரும், முஸ்லிம்களும் எந்தப் பிரச்சினையுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


அதிசயப்படத் தக்கதாக உலகின் பிற நாடுகளில் மத, இன, மொழி அடையாளங்கள் மக்களிடையே பிரிவினையை தூண்டுவது போல எத்தியோப்பியாவில் நடக்கவில்லை. அதற்கு மாறாக பலவிதமான பொருளாதாரக் காரணிகள் இன அடிப்படையிலான போர்களை ஊக்குவிக்கின்றன. உலகில் சுதந்திரம் கோரி போராடும் எத்தனையோ தேசிய இனங்களுக்கு, தனி நாடு அமைப்பது இலகுவில் நடைமுறைச் சாத்தியமாவதில்லை. இருப்பினும் 30 வருட ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, எந்த வல்லரசின் துணையுமின்றி, எரித்திரியா எவ்வாறு சுதந்திரமடைந்தது என்று பார்ப்போம்.

எரித்திரியாவிற்கு எதிரான போரில் ஈடுபட்ட எத்தியோப்பிய இராணுவத்திற்கு, மன்னராட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியும், மார்க்ஸிச ஆட்சிக்காலத்தில் சோவியத் உதவியும் கிடைத்து வந்தது. அதே நேரம் எரித்திரிய விடுதலைக்காக போராடிய EPLF இயக்கத்திற்கு புலம்பெயர்ந்த எரித்திரியர்களின் நிதி உதவி மட்டுமே கிடைத்து வந்தது. 


1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரச எதிர்ப்பு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்ற விரைந்தன. ஏற்கனவே களத்தில் ஓரளவு வெற்றி பெற்று பல இடங்களை விடுவித்திருந்த EPLF எரித்திரிய தலைநகர் அஸ்மாராவை கைப்பற்றியது. EPLF உடன் Tigray People's Liberation Front (TPLF) ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியிருந்தது. 

எத்தியோப்பியாவில் மொத்த சனத்தொகையில் 15 வீதமான திக்ரின்யா மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய TPLF ஆட்சியை கைப்பற்றியது. எரித்திரியாவிலும் திக்ரின்யா மக்கள் கணிசமான அளவில் வாழ்வதால், இவ்விரு இயக்கங்களுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக அம்ஹாரி மக்களின் அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்து, திக்ரின்யா மக்கள் (இரு நாடுகளிலும்) அதிகாரத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போதும் பெருமளவு அம்ஹாரி மக்கள், ஒரு திக்ரின்யா அரசின் கீழ் வாழ்வதை விரும்பவில்லை என்பதுடன், எரித்திரிய பிரிவினையையும் ஜீரணிக்க கஷ்டப்படுகின்றனர்.

எரித்திரியாவிலும், எத்தியோப்பியாவிலும் ஒரே மொழி பேசுபவர்கள் ஆட்சியில் இருந்தால், அவர்களுக்கிடையே பிரச்சினை வராது என்று அர்த்தமல்ல. செங்கடலோர பிரதேசம் முழுவதையும் கொண்டுள்ள எரித்திரிய நாட்டின் துறைமுகங்களை, எத்தியோப்பியா தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டதால் தான், ஐ.நா. வாக்கெடுப்பின் மூலம் எரித்திரியா சுதந்திர நாடாவதற்கு புதிய எத்தியோப்பிய அரசு சம்மதித்தது. 


1997 ம் ஆண்டு, எரித்திரியா தனக்கென புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியதால், டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எரித்திரியர்கள் தமது நாணயத்தின் பெறுமதியை செயற்கையாக கூட்டி வைத்திருந்தனர். இது எத்தியோப்பியாவிற்கு பாதகமாக அமைந்தது. வேறு பல பொருளாதாரக் காரணங்களாலும் (எண்ணெய், எரிவாயு அகழ்வாராய்ச்சி) இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதுவரை தீர்க்கப்படாதிருந்த எல்லைக்கோடு பற்றி சர்ச்சை ஏற்பட்டது. 

முதலில் எரித்திரியப் படைகள் எல்லைப்புற பிரதேசங்களை ஆக்கிரமித்தன. எத்தியோப்பியா வெளிநாடுகளில் ஆயுதங்களை வாங்கிப் போட்டு திருப்பித் தாக்கியது. ஒன்றுமில்லாத வெறும் கட்டாந்தரைக்காக இரண்டு இராணுவங்களும் வருடக்கணக்காக மோதிக் கொண்டதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் உதவி பெறும் "ஆப்பிரிக்க செல்லப்பிள்ளைகள்" என்பதால், அமெரிக்க மத்தியஸ்தத்துடன் போர் முடிவுக்கு வந்தது. தற்போது ஐ.நா.சமாதானப்படை எல்லைக் கோடு நிர்ணயிக்கும், அல்லது பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இரு நாடுகளிலும், 1991 ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் போராளிக் குழுக்களின் தலைவர்கள், பல கவர்ச்சிகரமான எதிர்காலத் திட்டங்களை மக்கள் முன்வைத்தார்கள். ஆப்பிரிக்காவில் அதிக சனத்தொகையை கொண்ட மூன்றாவது பெரிய நாடான எத்தியோப்பியா, பிராந்திய வல்லரசாக வருவேன் என்று கனவு கண்டது. உலகிலே சிறிய நாடுகளில் ஒன்றான எரித்திரியா, தாராளவாத பொருளாதாரத் திட்டங்களால் சிங்கபூர் போல வருவேன் என்று கனவு கண்டது. ஆனால் பாரிய பொருள், உயிரிழப்புகளை ஏற்படுத்திய எல்லைப்போர் இந்தக் கனவுகளையெல்லாம் நூறு ஆண்டுகள் பின்தள்ளி விட்டது.


(தொடரும்)

Sunday, May 31, 2009

பாரிஸில் கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினைவுக்கூட்டம் - தொகுப்பு


தோழர் கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினைவுக்கூட்டம் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்றது. இலண்டனில் இருந்து அரசியல் இலக்கிய விமர்சகர் மு. நித்தியானந்தன் அவர்களும், அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களும், தற்சமயம் பிரான்ஸை மீண்டும் புகலிடமாகக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் காமினி வியாங்கொட அவர்களும் விசேட பேச்சாளர்களாக பங்குகொண்டிருந்தனர்.

நண்பகல் 12.00 மணியளவில் இக்கூட்டத்தினை லக்ஷ்மி ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் யுத்தசூழலில் இன்று தங்கள் உயிர்களைக் காவுகொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மெளனஅஞ்சலி செலுத்தி இக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கூட்டத்தினை ஆரம்பித்துப் பேசுகையில், நண்பர், தோழர் கலைச்செல்வன் பேசிய, வாழ்ந்த, இன்னும் தொடர்ந்து செயற்பட நினைத்திருக்கக்கூடிய சமூக அக்கறை சார்ந்த விடயங்களைப் பற்றிப் பேசும் ஒரு நிகழ்வாக இது அமையும் என்று நம்புவதாக குறிப்பிட்டு, சித்தார்த்தனின் ‘கடவுளர்களின் நகரம்’ என்னும் இக்கணத்துக்குப் பொருத்தமான கவிதையினைப் படித்தார்.

கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்

எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்

எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும்
பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்
கடவுளர்கள்
மகா காலங்களினது அற்பத்தனங்களிலிருந்து
வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு

மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள்
கொலைகளின் சாகசங்களை பேசும் கடவுள்கள்
சித்திரைவதைக் கூடங்களில்
குதவழி முட்கம்பி சொருகும் கடவுள்கள்
தெருக்களில்
உடைகளைந்து வெடிகுண்டு தேடும் கடவுள்கள்

அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
மறந்துபோய் வீட்டில் விட்டு வந்தவனின் மனமும்
தெருக்களில் கதருகின்றன

கடவுளரின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகின்றோம்
பகல்களை ஓட்டுகிறோம்

கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்

ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்படடு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது

இத்துடன் தனது ஆரம்ப உரையை முடித்துக்கொண்டார்.

நிகழ்வின் முதலாவது அமர்வாக மு. நித்தியானந்தன் அவர்கள் ‘துன்பம் சூழும் நேரம்: இலங்கை - இந்திய, உறவுகளும் ஈழத்தமிழரும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வை எம். பெளஸர் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். பெளஸர் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இப்போது இங்கிலாந்தில் புகலிடம் தேடியுள்ளார். தற்சமயம் ‘எதுவரை’ சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராக இருக்கின்றார். இதனை ஒழுங்கு செய்த உயிர்நிழல் சஞ்சிகை, புகலி இணையத்தளம் ஆகியவற்றுக்கு நன்றி கூறி பெளஸர் தனது பேச்சைத் தொடங்கினார். மேலும் பெளஸர் பேசும்போது தோழர் கலைச்செல்வனுடன் தனக்கு நேரடித் தொடர்புகள் இருந்ததில்லை என்றும் அவருடைய செயற்பாடுகளின் மூலமே தனக்கு அவரை அறியக் கிடைத்தாகவும், மேலும் புகலிடத்தில் மாற்றுக் கருத்து செயற்பாடுகளில் பாரிஸ் ஒரு முக்கிய தளமாக இயங்கி வந்திருக்கின்றது, அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும் ஆளுமையுள்ளவராகவும் கலைச்செல்வன் திகழ்ந்திருக்கின்றார் என்றும் கலைச்செல்வன் இல்லாத வெறுமையும் இழப்பும் நமது செயற்பாடுகளைத் தேக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளதைப் பரவலாக உணர முடிகின்றது. அத்தேக்கத்தை மாற்றுவதற்கான புதிய சிந்தனை முறைகளுக்கும் புதிய செயற்பாடுகளுக்கும் புதிய வழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவருடைய இழப்பை இருப்பாக மாற்றுகின்ற ஒரு பணியைச் செய்வோம் என்று கேட்டுக் கொண்டார். மு. நித்தியானந்தன் அவர்களை சபைக்கு அறிமுகம் செய்த பெளஸர் இவர் இன்றைய ஆளுமைகளின் முக்கியமானவர்களில் ஒருவரென்றும் அவர் அண்மைக் காலங்களில் எழுதுவது குறைந்துள்ளமை ஒரு குறைபாடு என்பதையும் குறிப்பிட்டார்.

மு. நித்தியானந்தன் அவர்கள் இலங்கை-இந்திய உறவு என்பது இந்திய வம்சாவளியினரை இலங்கைக்கு அழைந்து வந்த போதில் முக்கியத்துவம் பெறுகின்றதென்று குறிப்பிட்டார். ஒவ்வொரு தடவையும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர் தொடர்பான நிலைப்பாடுகள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்றும் முதலில் அவர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் இலங்கைக் குடிமக்களைப் போல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசு கருதியது. ஆனால் இலங்கை அரசு அவர்களை வந்தேறு குடிகளாகத்தான் நடத்தியது. இதற்கான போராட்டம் கிட்டத்தட்ட 20 வருட காலங்கள் நீடித்தது. அவர்களுக்கான விசேட கடவுச்சீட்டு முறையைக் கொண்டு வந்தார்கள்.

தமிழர்களுக்கான தடுப்பு முகாம்களை நாங்கள் இப்போதுதான் காண்கிறோம் என்றும் தான் சிறுபிள்ளையாக இருந்தபோதே இந்தியத் தமிழர்களுக்கான தடுப்பு முகாம் ஸ்லேவ் ஐலண்டில் திறந்து வைக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தங்கும் உரிமைக்கான ஆறுமாத கால உத்தரவு முடிந்த பின்பு மேலதிகமாகத் தங்கியவர்கள் எந்தக் கேள்வியும் இன்றி இந்தத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள என்றும் குறிப்பிட்டார்.

இப்போதுள்ள இலங்கை நிலவரத்தை எடுத்தால், இலங்கைக்கு நீண்டகாலமாக, வெளியுறவுக் கொள்கை என்று திட்டவட்டமாக எதுவும் இருக்கவில்லை என்றும் பிரித்தானியர்கள் விட்டுவிட்டுப் போன பிறகு அவர்கள் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைப் பேணினார்களோ அவர்களுடனேயே தன் தொடர்புகளைப் பேணி வந்தது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், இப்போது மகிந்த ராஜபக்க்ஷதான் உள்நாட்டு அரசியற் கொள்கையிலும் வெளிநாட்டு ராஜதந்திர உறவுகளிலும் மிகவும் வித்தியாசமான நடைமுறைகளைக் கைக்கொண்டு வருகிறார் என்றும், ஏகாதிபத்திய வல்லரசுகள் எனப்படுகின்ற மேற்கு நாடுகள், அமெரிக்கா போன்றவற்றைப் புறந் தள்ளி, லிபியா, ஈரான், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் தனது உறவுகளைப் பேணுவதும் சீனக்குடியரசு வெளிப்படையாகவே இராணுவ உதவிகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இவற்றைப் படிப்படியாகப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் பலமற்றவர்களாக உணரப்பட்ட தருணம் இதுதான் என்றும் லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிபீடங்களில் இருந்த காலங்கள் ஒவ்வொன்றிலும் நிறையவே மாற்றங்கள் நடந்து வந்துள்ளன என்றும் ஆனால் மொழிக்கொள்கை தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு மிகவும் பாரதுரமானதாக இருந்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழர்கள் முற்போக்குச் சிங்கள மக்களுடன் இணைந்து சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் போராட வேண்டும் என்று நினைத்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை எப்போதும் சிறுபான்மையினராகக் கருதியதில்லை என்றும் இந்த விடுதலை அமைப்புகளின் செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமான துவேசத்தை வளர்க்கும் செயலாகத்தான் இருந்திருக்கின்றன என்றும் எதையும் தங்களால் கையாள முடியும் என்ற இறுமாப்பில் இருந்த விடுதலைப்புலிகள்தான் மகிந்தவை ஆட்சிபீடத்திற்குக் கொண்டு வந்தார்கள் என்றும் இறுதியில் அவர்களால் அது முடியாமற்போனது எனவும் கூறினார்.

அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் நாங்களும் எங்கள் பங்கினைச் செலுத்துவதன்மூலம் எங்கள் உரிமைகளை அனுபவிக்கப் போராடுவதுதான் ஒரே வழி என்றும் எத்தனையோ இழப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்த நாம் இனியும் மனம் சோராது எங்கள் உரிமைகளைப் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று இந்தத் துன்பம் சூழும்நேரத்தில் கேட்டுக் கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.

மு. நித்தியானந்தன் அவர்களின் உரையை அடுத்து இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படடிருந்த தோழர் நாகார்ஜூனன் அவர்கள் வரமுடியாத காரணத்தினால் அவருடைய உரை லக்ஷ்மியினால் வாசிக்கப்பட்டது. (இக்கட்டுரை புகலியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) நாகார்ஜூனன் இலண்டனில் வசிக்கின்றார். அவர் தற்போது சர்வதேச மன்னிப்புச் சபையில் பணிபுரிகிறார். இவர் சிலகாலம் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்திருக்கின்றார். இவர் நவீனத்துவம் பின்-நவீனத்துவம் தொடர்பான கதையாடல்களில் பரவலாக பங்கு கொண்டிருந்திருக்கின்றார்.

மதிய போசனத்தைத் தொடர்ந்து ச. தில்லைநடேசன் யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த இனி சஞ்சிகை ஆசிரியர் கரவைதாசன் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். இவர் சமூக அரசியற் செயற்பாட்டாளர். கன்பொல்லை சாதியப்போராட்டங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி வைத்து அவ்வப்போது அவை குறித்த சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் எழுதி வருபவர். இவர் தனதுரையில் கலைச்செல்வனுக்கும் தனக்குமான உறவு 96களில் ஆரம்பித்ததென்றும் தனது செயற்பாடுகளுக்கு கலைச்செல்வன் உந்துசக்தியாக இருந்திருக்கின்றாரென்றும் குறிப்பிட்டார். தில்லைநடேசனை அறிமுகம் செய்து பேசுகையில் இவர் கலைச்செல்வனுடன் ஆரம்ப காலங்களில் இணைந்து வேலை செய்வர்களில் ஒருவர் என்றும் நாட்டுக்கூத்துக்கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கின்றார் எனவும் இவர் புலம்பெயர் கலை இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவரென்றும் குறிப்பிட்டார்.
தில்லைநடேசன் தனதுரையில், சைவமும் தமிழும் என்னும் கருத்துருவாக்கம் இடைநடுவில் கட்டப்பட்ட விடயம் என்றும் இதற்கு ஆறுமுகநாவலரின் பங்களிப்பு முக்கியமானதென்றும் குறிப்பிட்டார். விளிம்புநிலை மக்களை கலாச்சாரரீதியாக கீழ்மட்டத்தில் வைப்பதற்கான இந்த சைவம் தந்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம்தான் இதைப் பேணிப் பாதுகாத்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம் என்பது சாதியக்கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டார்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலகட்டங்களில் சாதியமைப்புகள் எப்படி இருந்தன என்றும் அவை பின்னர் எப்படியாகின என்றும் வரலாற்றுத் தகவல்களுடன் பல விடயங்களைத் தொட்டுச் சென்றார். யாழ்ப்பாணச் சமூகத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம், கோயில் நுழைவுப் போராட்டங்கள் என்பன மூலம் அசைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இன்னொருபுறம் சிறுதெய்வக் கோயில்களும் படிப்படியாக ஆகமவிதிக்குட்பட்ட கோயில்களாக மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. கலந்துரையாடலின் முடிவில் ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களை விட்டு சொல்லப்படாத வரலாறுகளின் மூலங்களைத் தேடிச் செல்லவேண்டும் என்ற கருத்தை சுசீந்திரன் முன்வைத்தபோது தானும் அதைத்தான் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தில்லை நடேசன் கருத்துத் தெரிவித்தார்.

தில்லைநடேசன் அவர்களின் பேச்சை அடுத்து காமினி வியாங்கொட ஊடகமும் ஜனநாயகமும் என்ற தலைப்பின்கீழ் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மு. நித்தியானந்தன் அவர்கள் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
காமினி வியாங்கொட பொருளியல் ஆசிரியராக ஏறத்தாளப் 10 வருடங்கள் பணிபுரிந்தபின் அரசியற் காரணங்களினால் புகலிடம் தேடி எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டில் வந்து தங்கியிருந்தவர். இவர் தொடர்ந்தது எழுத்தியக்கத்தில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கின்ற அதேவேளை 22 நாவல்களை சிங்கள மொழிக்கு மாற்றம் செய்திருக்கின்றார். இவற்றுள் சிமோன் திபோவுவாவின் டுந ளுயபெ னுநள யுரவசநள நாவலும் அடங்கும். இவருடைய மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை லத்தின் அமெரிக்க நாவல்களாகும். தற்பொழுது ஒரு நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றார்.

இவர் பிரான்ஸில் இருந்து 2007ம் ஆண்டு திரும்பவும் இலங்கைக்குச் சென்றார். அங்கிருந்த காலப்பகுதிகளில் ஒரு தனியார் வானொலி நிலையத்தின் நிர்வாகியாக இருந்திருக்கின்றார். அத்துடன் லங்கா டிசென்ற் என்கின்ற இணையத்தளத்தின் நிர்வாகியாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப் பின் அங்கு நீதியுடன் செற்படுவதற்கான தளம் வரும்வரையில் தொடர்ந்து இயங்குவதில்லை என முடிவெடுத்து அதற்கான காலத்திற்காகக் காத்திருக்கின்றார். தற்போது மீண்டும் பிரான்ஸில் வந்து தங்கியுள்ளார்.

காமினி வியாங்கொட அவர்கள் தான் தமிழ் மக்களின் முன்பு பேசும்பொழுது ஒருவித அசெளகரியத்தை உணர்வதாகவும் தமிழ்மொழியில் பேசமுடியாமல் இருப்பது குறித்தும் இந்தச் சங்கடம் இன்னும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவனாக இருக்கிறேன் என்பதும், எனவே இரண்டு மொழிகளும் அல்லாத ஒரு பொதுமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், "ஊடகம் என்பது எவ்வாறு இருக்கின்றது. உலகின் எந்தப் பகுதியிலும் ஜனநாயகமாக இயங்குவதற்கு அடிப்படையானது ஊடகமாகும். ஊடகம்பற்றிய மிகப் பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு. அதாவது, «நாங்கள் செய்திகளைத் தருகிறோம். நீங்கள் தீர்மானியுங்கள்.» இதுவே ஐரோப்பிய ஊடகத்தினதும் ஜனநாயகத்தினதும் அடிப்படை விடயமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளுக்காகவே லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அது தொடர்பான அச்சங்களும் அங்கு அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களிற்கு எதுவும் எப்போதும் நேரக்கூடும் என்ற அச்சம் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் இன்றைய இலங்கை. இது ஒருவேளை மாறக்கூடும். மாறவேண்டும்" என்று குறிப்பிட்டுப் பேசிய அவர் இலங்கையில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்டுமானத்திற்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை பற்றியும் பேசினார்.

இவருடைய உரையைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதங்களில் அவர் அரசு இழைக்கும் அநீதிகளை மட்டும் பொருட்படுத்துபவராக இருக்கிறார் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புபவர்கள் இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் மேலும் லசந்தவின் படுகொலை அரசு செய்யவில்லை என்று நம்புவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கெதிராக இவர்கள் எந்தவிதமான போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் காமினியின்மீது குற்றம் சாட்டினார்கள். அவர் தான் ஒரு பத்திரிகையாளனாகத் தன்னளவில் தான் சரியாகத்தான் செயற்பட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்.
காமினி வியாங்கொடவினுடனான விவாதங்களின்போது ஏற்பட்ட ஒரு எதிர்மனநிலை அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் என்று அந்தோனிப்பிள்ளை அவர்களும் சுசீந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.

காமினி வியங்கொடவின் பேச்சைத் தொடர்ந்த இடைவேளையின் பின், 'கோணல்களும் நேர்கோடுகளும் : இலங்கை இனப் பிரச்சினை' என்னும் தலைப்பில் கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் இனிமேல் எங்கள் முன்னெடுப்புகள் எப்படி அமையலாம் என்பதைக் கேள்விகளாக முன்வைத்தார் வி. சிவலிங்கம் அவர்கள். இந்நிகழ்வுக்கு கலையரசன் தலைமை தாங்கினார். கலையரசன் நெதர்லாந்தில் இருந்து வந்து கலந்து கொண்டார். இவர் சர்வதேச அரசியல் பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். இவர் கலையகம் என்ற வலைப்பக்கம் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இடைவிடாத, சோராத எழுத்தியக்கத்தில் இருப்பவர்.

இவர் சிவலிங்கம் அவர்களை அறிமுகப்படுத்துகையில், அவர் மனிதஉரிமை குறித்த பிரக்ஞையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர் என்றும் அவர் சிறந்த அரசியல் ஆய்வாளரென்று குறிப்பிட்டுக் காட்டி, அவருடைய அரசியல் ஆய்வுகளுக்காக பாராட்டுகளைப் பெறும் அதேவேளை சர்ச்சைகளுக்கும் ஆளாகிவருபவர். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் உண்மையென்று நம்புவதை எந்தத் தயக்கமும் இன்றித் துணிந்து சொல்லும் ஆளுமை மிக்கவர். என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளறாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் அறியப்படட கு.உதயகுமார் அவர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

வி. சிவலிங்கம் அவர்கள் பேசுகையில் ஏற்கனவே நடைபெற்ற அமர்வுகளின் தொடர்ச்சியாகவே தன்னுரை அமைகிறது எனவும் இத் தலைப்புகள் கலைச்செல்வன் பேசி இருந்திருக்கக்கூடிய, விவாதித்திருக்கக்கூடிய தலைப்புகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவை மிகவும் பொருத்தப்பாடான தலைப்புகளாகவே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இன்று மிகவும் நெருக்கடியான சூழலில் நாங்கள் இருந்துகொண்டிருப்பதாகவும் உண்மையைப் பேசுவதனால் உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கூட்டங்களிற்குப் போகமுடியாது, ஊர்வலங்களில் பங்குகொள்ளமுடியாது போன்ற இக்கட்டான சூழலில் நாங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆரம்பித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "ஏற்கனவே பல வருடங்களாக நாங்கள் பேசிக்கொண்டு வந்தவைகள் இன்று யதார்த்தமாகிக் கொண்டு வருகின்ற ஒரு நிலையில் வந்து நிற்கிறோம். அதனை நம்புவதற்கு மறுத்தவர்கள் அந்த யதார்த்தத்தை அனுமதிக்க மறுக்கும்போது ஏற்கனவே இப்படியான கருத்துக்களைக் கொண்டிருந்த நபர்களின்மீதே அவர்களின் பார்வை திரும்பும் சாத்தியங்கள்தான் அதிகம் உண்டு. மதப் பிரசங்கங்கள்போல யாருடைய மனதையும் நோகடிக்காமல் இந்த விடயங்களைப் பேசமுடியாது. அத்துடன் எதை நம்பி நாங்கள் செயற்பட்டோமோ அதனைச் செயலாக்க வேண்டிய காலகட்டமும் நெருங்கி இருக்கின்றது. இது அரசியல் வியாக்கியானம் செய்யும் காலகட்டமல்ல. எங்களிற்கு முன்னே நிறையச் சவால்கள் இருக்கின்றன. இந்தச் சவால்களுக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றோம்? என்பதைப் பார்க்கவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில் பெளத்த மேலாதிக்கவாதம் முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் ஒட்ட முடியாமல் இருப்பதற்கான தூய்மைவாதம் பற்றியும் இன்றைய புதிய முதலாளிகள் திறந்த பொருளாதாரத்தினால் உருவாக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு 30 வருடங்களிற்கு முதல் இருந்த பொருளாதாரக் கொள்கையும் இன்றைய பொருளாதாரக் கொள்கையும் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டிப் பேசினார்.

கொழும்பை மையமாக வைத்திருந்த அதிகார வர்க்கம் இப்போது நாட்டுப்புறச் சிங்கள முதலாளிகளை நோக்கிச் சென்றுள்ளது எவ்வாறு என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக, ஷோபாசக்தியின் ‘இப்போது உண்மையை எழுத வேண்டும். அதாவது துயரை எழுத வேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது» என்னும் வரிகளுடன் தனதுரையை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து 'இன்றைய யுத்த சூழலும் நாம் எதிர்நோக்கும் சவால்களும்' என்ற தலைப்பில் திறந்த விவாதம் நடைபெற்றது. இவ் விவாத அரங்கில் தேசியவாதக் கருத்தியல்களின் ஆபத்து, ஐக்கிய இலங்கையின்கீழ் சிறுபான்மையினர் சமத்துவத்துடன் வாழ்தல், மற்றும் சிறுபான்மையினரின் கூட்டு வேலைத்திட்டம், பெரும்பான்மையினத்தின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பன குறித்து காத்திரமான விவாதம் நடைபெற்றது.

விவாதங்களில், தேவதாசன், கரவைதாசன், ஆறுமுகம், வி.ரி. இளங்கோவன், மனோ, யோகரட்ணம், சுகன், பெளஸர், கலையரசன், பாலகிருஷ்ணன், புஸ்பராணி, ஜெயா பத்மநாதன், மோகன், உதயகுமார், சுசீந்திரன், அந்தோனிப்பிள்ளை, கண்ணன், ராஜன் ஆகியோர் பங்கு கொண்டனர். எழுபது பேர்வரை கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு மண்டபத்தையும் உணவு ஏற்பாடுகளையும் மலரும் ராஜனும் ஏற்பாடு செய்திருந்தனர். ஏனைய ஒழுங்குகளுக்கு கிருபன், அனந்தன், நாதன், மீனாள், தமரா, அருணா, அருண், அகில், அருந்தினா, சசி, வனஜா, குணரட்ணராஜா ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள்.


(நன்றி:புகலி)

Tuesday, May 26, 2009

அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 7
மொரிஷியஸ் தீவு பற்றி தமிழர்கள் அறிந்திருக்கும் அளவிற்கு, அதைவிட பன்மடங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த "கொமொரோ" (Comoros) தீவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு ஆப்பிரிக்க கடலில், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மாபெரும் மடகஸ்கார் தீவை பிரிக்கும், மொசாம்பிக் நீரிணையின் மத்தியில் அமைந்துள்ள நான்கு சிறு தீவுகள் சேர்ந்து, கொமொரோஸ் குடியரசு உருவானது. உலக வரைபடத்தில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய குட்டி தேசம். பிரான்சின் நவ-காலனியக் கொள்கையின் கேலிச்சித்திரம். வெள்ளையின கூலிப்படைகளின் (இன்று: "தனியார் இராணுவம்") விளையாட்டு மைதானம். கற்பனைக்கெட்டாத திகில் கதைகள் பலவற்றைக் கொண்டது அந்த தேசத்தின் வரலாறு.

கொமோரோ தீவுகளை "இருண்ட ஆப்பிரிக்காவை" சேர்ந்த பகுதியாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீண்ட காலமாகவே இந்து சமுத்திர வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபிய வியாபாரிகள், கொமோரோ தீவுகளில் தங்கிச் செல்வது வழக்கம். அவர்கள் ஏற்கனவே அங்கே வசித்து வந்த, உள்ளூர் கறுப்பின, மலேய(அல்லது இந்தோனேசிய) மக்களுடன் கலந்திருக்க வாய்ப்புண்டு. அரேபியர்கள் இஸ்லாமிய மதத்தையும் தம்மோடு கொண்டு வர மறக்கவில்லை. இருப்பினும், 19 ம் நூற்றாண்டளவில் தென் ஈரான் நகரான ஷிராசில் இருந்து பெருமளவு அரேபியர்கள் நிரந்தரமாக குடியேறிய பின்னரே நவீன வரலாறு (மன்னராட்சிக் காலம்) ஆரம்பமாகியது. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக் கொண்டு இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்சின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்த நிர்ப்பந்தம், காலனிய காலகட்டத்தை கட்டியம் கூறியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று, ஐ.நா. மன்றம் கூறி வந்த போதிலும் பிரான்ஸ் அதற்கு செவி மடுக்கவில்லை. 1975 ம் ஆண்டு, அரை மனதுடன் கொமோரசிற்கு சுதந்திரம் வழங்கியது. அப்போது கூட, மயோத் (Mayotte) தீவு மக்கள் சர்வசன வாக்கெடுப்பில் பிரான்சுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள், என்று காரணம் காட்டி, அந்த தீவை தனியாகப் பிரித்து தனது "கடல் கடந்த பிரதேசம்" ஆக்கியது. (இவ்வாண்டு மீண்டும் ஒரு தேர்தல் மூலம் பிரான்சின் மாகாணமாகியது.) சுதந்திர கொமோரோ குடியரசு மயோத் தீவுக்கு உரிமை கோரிய போதிலும், கேந்திர முக்கியத்துவம் காரணமாக பிரான்ஸ் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றது. மொசாம்பிக் நீரிணை ஊடான வர்த்தக கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதும், (அல்லாவிட்டால் மடகஸ்காரை சுற்றிப் போக வேண்டும்), கட்டுப்படுத்துவதும் மயோத்தில் உள்ள பிரெஞ்சு தளங்களின் முக்கிய நோக்கம். அதைவிட, அந்தப் பிராந்தியத்தில் ஈரான் இலகுவாக (தொப்புள்கொடி உறவை காரணமாகக் காட்டி) ஊடுருவ முடியும் என்பதால், அதனை தடுக்கும் நோக்கமும் உள்ளது. கொமோரோ, சான்சிபார் (தான்சானியா) ஆகிய தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு ஈரானிய வம்சாவழியினர் இன்றும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மயோத் தீவு மக்கள், அரசியல் நிர்ணய சட்டப்படி பிரெஞ்சுப் பிரசைகள் என்பதால், அங்கே தனிநபர் வருமானம் அதிகம். இதனால் அயலில் இருக்கும் ஏழை நாடான கொமோரோவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், மயோத் சென்று குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகின்றனர். பிரெஞ்சு மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு பிரெஞ்சு பிரசாவுரிமை கிடைக்கும் என்பதற்காக, ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ளும் பல கர்ப்பிணிப் பெண்கள் அகால மரணமடைகின்றனர். இதற்கிடையே 1997 ம் ஆண்டு, உலக வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை கொமோரோ குடியரசின் பகுதியாக இருந்த, "அஞ்சுவான் தீவு" தனி நாடாக பிரகடனம் செய்தது. அத்தோடு நில்லாமல், "மீண்டும் பிரெஞ்சுக் காலனியாக" மாற விருப்பம் தெரிவித்தது! உலகமயமாக்கப் பட்ட காலத்தில், பிரான்ஸ் இந்தக் கூத்தை எல்லாம் மெச்சும் நிலையில் இருக்கவில்லை. பிரான்சால் கைவிடப்பட்ட அஞ்சுவான் மீது, 2008 ம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் படையெடுத்து, மீண்டும் கொமொரோசுடன் சேர்த்து விட்டன. இந்த நிகழ்வு, ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் பிடி தளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

கொமொரோஸ் குடியரசின் வரலாற்றில், 1975 ம் ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டு வரையிலான காலகட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில், நவ-காலனிய மேலாண்மைக்காக பிரான்சால் பல முறை பந்தாடப்பட்டது. ஆனால் பிரான்ஸ் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை, அதற்குப் பதிலாக "சதிப்புரட்சி மன்னன்" பொப் டெநர்ட்(Bob Denard) தலைமையிலான கூலிப்படையை பயன்படுத்தியது. இயற்கையிலேயே கம்யூனிச எதிர்ப்புவாதியும், பணத்திற்காக எதையும் செய்யத்தயங்காத Bob Denard இன் ஒரேயொரு தொழில் ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பது! கொங்கோ, பெனின், இவ்வாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்ற 20 க்கும் அதிகமான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில், Bob Denard இன் கூலிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் பணத்திற்காகவே சண்டையிட்ட போதிலும், பிரெஞ்சு அரசின் விசுவாசமான அடியாளாக செயற்பட்டதையும் யாரும் மறுக்க முடியாது.

DGSE (Direction Générale de la Sécurité Extérieure) என்ற பிரெஞ்சு வெளிநாட்டு புலனாய்வுத் துறை (பிரெஞ்சு சி.ஐ.ஏ.), Bob Denard உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இரண்டு முறை கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவனே இதனை தெரிவித்துள்ளான். தான் பிரெஞ்சு அரசின் உத்தரவின் பேரில் சதிப்புரட்சிகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். இந்த இரகசிய உறவை மெய்ப்பிப்பது போல, எதிர்த் தரப்பிற்கு வழக்கை வாபஸ் வாங்குமாறு மேலிடத்து நிர்ப்பந்தங்கள் வந்தன. Bob பின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. 1989 ல் கொமொரோஸ் ஜனாதிபதி அஹ்மத் அப்தல்லாவை கொலை செய்த குற்றச்சாட்டு காரணமாகவே அவன் நீதிமரத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். இது பெரும்பாலும் உண்மையாக இருக்க சாத்தியமுண்டு. பொப் டெநர்ட் பத்து வருடங்களாக கொமோரோ தீவுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். அவன் தலைமையிலான "சிறப்புப் பாதுகாப்புப் படை", தேசத்தை மட்டுமல்ல, ஜனாதிபதியையும் ஆட்டிப்படைத்தது. தனது தேசத்தை பணயம் வைத்திருந்த கூலிப்படையின் அதிகாரத்தை களைய முயன்ற போது தான், கொமொரோஸ் ஜனாதிபதி கொலை செய்யப்பட்டார்.

சில நேரம் வரலாற்றில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், புனை கதைகளையும் மிஞ்சி விடும். 1975 ம் ஆண்டு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கொமொராஸ். நாட்டின் முதலாவது ஜனாதிபதியான அப்தல்லாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, பொப் டேனர்ட்டின் கூலிப்படையினர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து படகுகளில் வந்திறங்கினர். தமக்குப் பிடித்த அலி சொய்லியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அந்த சதிப்புரட்சிக்கு பிரான்சின் மறைமுக ஆதரவு இருந்ததாக நம்பப்படுகின்றது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் அலி சொய்லி தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்க முற்பட்ட போது, மீண்டுமொரு சதிப்புரட்சி நிகழ்ந்தது. இம்முறையும் "அகில ஆப்பிரிக்க வெள்ளைக்கார தாதா" பொப் டெனார்ட், தனது அடியாட்படையுடன் வந்தான். அலி சொய்லியை கொன்று விட்டு, முன்னர் தன்னால் பதவியகற்றப்பட்ட அஹ்மத் அப்தல்லாவையே மீண்டும் ஜனாதிபதியாக்கினான். இம்முறை அப்தல்லாவின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதிபலித்தது. ஆனால் அதெல்லாம் பிரான்சிற்கு பிரச்சினையாக படவில்லை.

பிரெஞ்சு அரசால் செல்லமாக "திரு. ஆப்பிரிக்கா" என்று அழைக்கப்பட்ட பொப் டேனர்ட்டின் பொற்காலம் அப்போது ஆரம்பமாகியது. கொமொரோசில் இஸ்லாமிய மத்தைதை தழுவி, ஆறு மனைவிகளுடன், எட்டுப் பிள்ளைகளுடன், சொகுசு பங்களாவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தான். தீவின் பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கு ஏகபோக தொழிலதிபரானான். என்ன தான் இருந்தாலும், பழைய குலத் தொழிலை கைவிட முடியுமா? கொமோரசை தளமாக பயன்படுத்தி, பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கு "கூலிப்படை விநியோகம்" நடந்தது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுடன் தரகு வியாபாரம் வேறு. அப்போது தென் ஆப்பிரிக்காவை சிறுபான்மை வெள்ளையின நிறவெறிக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அதனால் ஐ.நா.மன்றத்தினால் சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரான்சும், பிற மேற்குலக நாடுகளும் நிறவெறி தென் ஆப்பிரிக்காவுடனான வர்த்தக தொடர்புகளை முறித்துக் கொள்ளவில்லை. ஐ.நா.மன்றத்தை ஏமாற்றி, "நம்ம ஆள்" பொப் டெநர்ட் ஆட்சி செய்த கொமொரோஸ் ஊடாக வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலம் அது. அதனால் தான் கொமோரோ தீவுகளில் கூலிப்படையினரின் அடாவத்தனங்களை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை. பிரான்சின் பொருளாதார நலன்களும் கவனிக்கப்படவேண்டியவை. ஆயினும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், சர்வதேச அரசியல் நிலைமை வேகமாக மாறியது. அந்தக் காலகட்டத்தில், 1989 ம் ஆண்டு எழுந்த முரண்பாடுகளால் பொப் டெநர்ட் கொமொரோஸ் ஜனாதிபதி அப்தல்லாவை கொலை செய்த தகவல் கிடைத்ததும், இன்னொரு சதிப்புரட்சிக்கான எச்சரிக்கைமணி பிரான்ஸில் எதிரொலித்தது. தீவில் திடீரென குதித்த பிரெஞ்சு பரசூட் துருப்பினர், பொப் டெநர்ட்டை கைது செய்து தாயகம் கொண்டு சென்றனர். அப்போது நடந்த வழக்கைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? எந்த நாட்டிலாவது ஆட்சியை கவிழ்க்காவிட்டால் அவனுக்கு பொழுது போகாது. 1995 ம் ஆண்டு, புதிதாக 33 கூலிப்படையினரை சேர்த்துக் கொண்டு, பொப் டெனார்ட் ஐந்தாவது தடவையாக கொமொரோஸ் மீது படையெடுத்தான். இம்முறை பிரான்சிற்கு போதும் போதும் என்றாகி விட்டது. நூற்றுக்கணக்கான பிரெஞ்சு இராணுவத்தினர் கொமொரோசில் இறக்கப்பட்டு, கூலிப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். சண்டையிடாமல் சரணடைந்த பொப் டெநர்ட், அதற்குப் பிறகு சாகும் வரை ஆப்பிரிக்கா பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

இத்தோடு ஆப்பிரிக்காவை அச்சுறுத்தி வந்த ஆட்சிக்கவிழ்ப்பு பூதம் ஒழிந்தது என்று சுபம் போட முடியவில்லை. 2004 ம் ஆண்டு வந்த செய்தி ஒன்று, இப்போதும் ஐரோப்பியர்கள் சிலர் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆப்பிரிக்க நாடுகளை கைப்பற்ற தயாராக இருப்பதைக் காட்டியது. சில ஐரோப்பிய நிறுவனங்களின் வர்த்தக நலன்களே இதற்கு காரணம். ஒரு நாள், பிரிட்டிஷ் பத்திரிகைகளில் 3 வது அல்லது 4 வது பக்கத்தில், தீப்பெட்டி அளவில் அந்த செய்தி பிரசுரமாகி இருந்தது. "இகுவடோரியல் கினியா"(Equatorial Guinea) என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டு அரசை சதிப்புரட்சி மூலம் அகற்ற திட்டம் தீட்டியதாக, சிம்பாப்வேயில் சைமன் மன் என்ற பிரிட்டிஷ் கூலிப்படை கப்டனின் கைது பற்றிய செய்தி அது. சைமனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக, (சைமனின் நீதிமன்ற வாக்குமூலப்படி) மாஜி பிரிட்டிஷ் பிரதமர் மாக்கிரட் தச்சரின் "அருந்தவப்" புதல்வன் மார்க் தச்சரும் தென் ஆப்பிரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார். உண்மையில் தென் ஆப்பிரிக்க உளவுத்துறை அவர்களை நீண்ட காலமாக கண்காணித்து வந்தது. இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பது போல, "இந்த (வெள்ளைப்) பூனையும் பால் குடிக்குமா?" என்று செய்தியை வெளியிட்டன பிரிட்டிஷ் "நடுநிலை" பத்திரிகைகள். "தனது மகன் ஜெயிலுக்கு போனால், தான் தற்கொலை செய்து கொள்வேன்" என்ற மார்க்கிரட் தச்சரின் வற்புறுத்தலின் பேரில், அவரது மகன் விடுதலை செய்யப்பாட்டார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான சமூக விடுதலைப் போராளிகளை ஜெயிலுக்கு அனுப்பி, இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்த மாக்கிரட் தச்சரின் "தாயுள்ளம்", சொந்த மகன் ஜெயிலுக்கு போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இகுவடோரியல் கினியா சமீபத்தில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டின் அரசு ஒரு காலத்தில் சோஷலிச நாடாக திகழ்ந்ததுடன், கியூபாவுடனும் நல்லுறவைப் பேணி வந்தது. எண்ணைப் பொருளாதார ஆதிக்கம் தனது கையை விட்டு போகாத படி, கம்பெனிகள் கேட்கும் அதிக பங்கு லாபத்திற்கு விட்டுக் கொடுக்க மறுத்து வந்தது. இதனால் கினியா எண்ணை மீது கண் வைத்த, மார்க் தச்சரின் பன்னாட்டு வர்த்தக நிறுவனம் குறுக்கு வழியை நாடியது. ஒரு கூலிப்படையை அனுப்பி இ.கினியா ஆட்சியை கவிழ்த்து விட்டு, தானே எண்ணைக் கிணறுகளை முழுவதுமாக அபகரிக்கும் நோக்கம் ஈடேறவில்லை. மார்க் போன்ற வர்த்தகர்கள் இது போன்ற தீய வழிகளில் தானே கோடீஸ்வரன் ஆனார்கள்? நம்மூரில் அடியாட்படை அனுப்பி சொத்துகளை அபகரிக்கும் வர்த்தகப் பெருந்தகைகளுக்கும், மார்க் தச்சரின் பன்னாட்டு நிறுவனத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வர்த்தக நிறுவனங்களுக்காக ஒரு நாட்டையே பிடித்துக் கொடுக்கும் சர்வதேச கூலிப்படைகள், "Executive Outcomes" என்ற கவர்ச்சிகரமான பெயர்களுடன் இப்போதும் தென் ஆப்பிரிக்காவில் இயங்கி வருகின்றன. அவர்களது குறிக்கோள் பணம் மட்டும் தான். பெருமைக்காக "கம்யூனிச எதிர்ப்பு போராளிகள்" என்று தமக்கு தாமே புகழாரம் சூட்டிக் கொள்கின்றனர்.

2004 ம் ஆண்டு, சைமன் மன் 64 கூலிப்படையினருடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வாடகை விமானத்தை அமர்த்திக் கொண்டு, சிம்பாப்வே போய் இறங்கிய போதே கைது செய்யப்பட்டனர். சிம்பாப்வேயில் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு இ.கினியா போவது அவர்களது நோக்கம். ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே ஊழல்மய அரசியல்வாதிகள், பணத்திற்காக எதுவும் செய்வார்கள் என்று கணக்குப் போட்ட "மன்"னின் நினைப்பில் மண் விழுந்தது. விமானநிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வாங்கவிருந்த குற்றச்சாட்டில் 7 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 2007 ம் ஆண்டு இ.கினியா கேட்டுக்கொண்டதன்படி அந்நாட்டிற்கு நாடு கடத்த உத்தேசிக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேர், சைமன் என்ற கிரிமினலை விடுதலை செய்யுமாறு சிம்பாப்வேயை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷ் சிறைகளில் வாடும் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுத்த டோனி பிளேர், கொலை பாதகச் செயலை செய்யும் கூலிப்படை கிரிமினலை விடுவிக்க கோரிய காரணம் என்ன? இனப்பாசம் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பதில் இருக்க முடியும்?

ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சியை கவிழ்க்கும் காரியத்தை, பெருந்தொகை பணத்திற்கு ஒப்பந்தம் பேசி செய்து முடிக்கும் கூலிப்படைகள், ஒ...மன்னிக்கவும், "தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்" தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்போதும் சட்டபூர்வமாக இயங்கி வருகின்றன. இவைகளை யார் வேண்டுமானாலும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு, தமக்குப் பிடித்த ஆப்பிரிக்க, ஆசிய நாட்டு அதிகாரத்தை சதிப்புரட்சி மூலம் கைப்பற்றலாம். அவர்கள் கேட்கும் விலையை கொடுத்தால் சரி. ஏதாவதொரு (ஆப்பிரிக்க) நாட்டில் கூலிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடும் போது, சில நேரம் வியாபாரத்தில் பங்கும் கிடைக்கின்றது. ஒருமுறை RUF கெரில்லாக்களை அடக்குவதற்காக, சியாரா லியோன் அரசு கூலிப்படையினரை அமர்த்தியது. அப்போது கூலிப்படையினர் தலைநகரை பாதுகாப்பதை விட வைரச் சுரங்கங்களை பாதுகாப்பதை பெரிதும் விரும்பினர். சுரங்கங்களில் உள்ளூர் மக்களை கட்டாய வேலை வாங்கியதிலும், கொள்ளையடித்த வைரங்களை கடத்தி சென்று விற்று லாபமீட்டியதிலும், கூலிப்படையினருக்கும் பங்குண்டு.

அநேகமாக எல்லா கூலிப்படைகளும் வெள்ளையினத்தவர் நிர்வாகத்தின் கீழ் தான் இயங்குகின்றன. மேலதிகாரிகள் எப்போதும் வெளையர்கள் தான். அவர்களின் கீழ் கூலிக்கு அமர்த்தப்படும் போர்வீரர்கள் அனேகமாக கறுப்பர்களாக இருப்பர். இதனால் கூலிப்படை புகுந்த நாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போதெல்லாம், அதனை "கறுப்பர்கள் மீது கறுப்பர்களின் வன்முறை" என்று சில மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஒரு காலத்தில் நிறவெறி தென் ஆப்பிரிக்கா, நமீபியாவை ஆக்கிரமித்திருந்த போது நடந்த இனப்படுகொலைகள் குறிப்பிடத்தக்க உதாரணம். நமீபிய மக்களை கொலை செய்ததிலும், அவர்களின் சொத்துகளை அழித்த போர்க் குற்றங்களில், அன்று தென் ஆப்பிரிக்க கூலிப்படையில் பணியாற்றிய கறுப்பர்களும் ஈடுபட்டதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மேற்கத்திய ஊடகங்கள் குள்ளபுத்தியுடன், "கறுப்பர்களின் அத்துமீறல்களை" மட்டும் பெரிது படுத்தி "செய்தி போல" தெரிவிக்கின்றன. இதை செய்தி என்று சொல்ல முடியாது. "தவறான தகவல் வழங்கும் ஊடகப் பிரச்சாரம்" என்றே கூற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இந்த தவறான தகவல்கள் செலுத்தும் தாக்கம், மக்களின் சிந்தனையை கறை படுத்துகின்றது. மேலைத்தேய வெள்ளையின மக்கள்: "ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த விவேகமற்ற கறுப்பர்கள், அவர்களுக்குள்ளே அடிபட்டுச் சாகிறார்கள். கறுப்பர்களுக்கிடையே ஒற்றுமையில்லை. எமக்கென்ன வந்தது?" என நினைக்கின்றனர். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலும் பகைமை கொண்ட இரு இனங்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும் போதும் ஐரோப்பிய மக்கள் அப்படித்தான் கருதுகின்றனர்.

(தொடரும்)


முன்னைய பதிவுகள்:
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

Friday, May 22, 2009

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். 


தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். 


இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 


9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். 


எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். 


புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. 


இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். 


மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. 


புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.