Sunday, May 31, 2009

பாரிஸில் கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினைவுக்கூட்டம் - தொகுப்பு


தோழர் கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினைவுக்கூட்டம் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்றது. இலண்டனில் இருந்து அரசியல் இலக்கிய விமர்சகர் மு. நித்தியானந்தன் அவர்களும், அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களும், தற்சமயம் பிரான்ஸை மீண்டும் புகலிடமாகக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் காமினி வியாங்கொட அவர்களும் விசேட பேச்சாளர்களாக பங்குகொண்டிருந்தனர்.

நண்பகல் 12.00 மணியளவில் இக்கூட்டத்தினை லக்ஷ்மி ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் யுத்தசூழலில் இன்று தங்கள் உயிர்களைக் காவுகொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மெளனஅஞ்சலி செலுத்தி இக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கூட்டத்தினை ஆரம்பித்துப் பேசுகையில், நண்பர், தோழர் கலைச்செல்வன் பேசிய, வாழ்ந்த, இன்னும் தொடர்ந்து செயற்பட நினைத்திருக்கக்கூடிய சமூக அக்கறை சார்ந்த விடயங்களைப் பற்றிப் பேசும் ஒரு நிகழ்வாக இது அமையும் என்று நம்புவதாக குறிப்பிட்டு, சித்தார்த்தனின் ‘கடவுளர்களின் நகரம்’ என்னும் இக்கணத்துக்குப் பொருத்தமான கவிதையினைப் படித்தார்.

கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்

எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்

எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும்
பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்
கடவுளர்கள்
மகா காலங்களினது அற்பத்தனங்களிலிருந்து
வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு

மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள்
கொலைகளின் சாகசங்களை பேசும் கடவுள்கள்
சித்திரைவதைக் கூடங்களில்
குதவழி முட்கம்பி சொருகும் கடவுள்கள்
தெருக்களில்
உடைகளைந்து வெடிகுண்டு தேடும் கடவுள்கள்

அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
மறந்துபோய் வீட்டில் விட்டு வந்தவனின் மனமும்
தெருக்களில் கதருகின்றன

கடவுளரின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகின்றோம்
பகல்களை ஓட்டுகிறோம்

கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்

ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்படடு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது

இத்துடன் தனது ஆரம்ப உரையை முடித்துக்கொண்டார்.

நிகழ்வின் முதலாவது அமர்வாக மு. நித்தியானந்தன் அவர்கள் ‘துன்பம் சூழும் நேரம்: இலங்கை - இந்திய, உறவுகளும் ஈழத்தமிழரும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வை எம். பெளஸர் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். பெளஸர் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இப்போது இங்கிலாந்தில் புகலிடம் தேடியுள்ளார். தற்சமயம் ‘எதுவரை’ சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராக இருக்கின்றார். இதனை ஒழுங்கு செய்த உயிர்நிழல் சஞ்சிகை, புகலி இணையத்தளம் ஆகியவற்றுக்கு நன்றி கூறி பெளஸர் தனது பேச்சைத் தொடங்கினார். மேலும் பெளஸர் பேசும்போது தோழர் கலைச்செல்வனுடன் தனக்கு நேரடித் தொடர்புகள் இருந்ததில்லை என்றும் அவருடைய செயற்பாடுகளின் மூலமே தனக்கு அவரை அறியக் கிடைத்தாகவும், மேலும் புகலிடத்தில் மாற்றுக் கருத்து செயற்பாடுகளில் பாரிஸ் ஒரு முக்கிய தளமாக இயங்கி வந்திருக்கின்றது, அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும் ஆளுமையுள்ளவராகவும் கலைச்செல்வன் திகழ்ந்திருக்கின்றார் என்றும் கலைச்செல்வன் இல்லாத வெறுமையும் இழப்பும் நமது செயற்பாடுகளைத் தேக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளதைப் பரவலாக உணர முடிகின்றது. அத்தேக்கத்தை மாற்றுவதற்கான புதிய சிந்தனை முறைகளுக்கும் புதிய செயற்பாடுகளுக்கும் புதிய வழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவருடைய இழப்பை இருப்பாக மாற்றுகின்ற ஒரு பணியைச் செய்வோம் என்று கேட்டுக் கொண்டார். மு. நித்தியானந்தன் அவர்களை சபைக்கு அறிமுகம் செய்த பெளஸர் இவர் இன்றைய ஆளுமைகளின் முக்கியமானவர்களில் ஒருவரென்றும் அவர் அண்மைக் காலங்களில் எழுதுவது குறைந்துள்ளமை ஒரு குறைபாடு என்பதையும் குறிப்பிட்டார்.

மு. நித்தியானந்தன் அவர்கள் இலங்கை-இந்திய உறவு என்பது இந்திய வம்சாவளியினரை இலங்கைக்கு அழைந்து வந்த போதில் முக்கியத்துவம் பெறுகின்றதென்று குறிப்பிட்டார். ஒவ்வொரு தடவையும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர் தொடர்பான நிலைப்பாடுகள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்றும் முதலில் அவர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் இலங்கைக் குடிமக்களைப் போல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசு கருதியது. ஆனால் இலங்கை அரசு அவர்களை வந்தேறு குடிகளாகத்தான் நடத்தியது. இதற்கான போராட்டம் கிட்டத்தட்ட 20 வருட காலங்கள் நீடித்தது. அவர்களுக்கான விசேட கடவுச்சீட்டு முறையைக் கொண்டு வந்தார்கள்.

தமிழர்களுக்கான தடுப்பு முகாம்களை நாங்கள் இப்போதுதான் காண்கிறோம் என்றும் தான் சிறுபிள்ளையாக இருந்தபோதே இந்தியத் தமிழர்களுக்கான தடுப்பு முகாம் ஸ்லேவ் ஐலண்டில் திறந்து வைக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தங்கும் உரிமைக்கான ஆறுமாத கால உத்தரவு முடிந்த பின்பு மேலதிகமாகத் தங்கியவர்கள் எந்தக் கேள்வியும் இன்றி இந்தத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள என்றும் குறிப்பிட்டார்.

இப்போதுள்ள இலங்கை நிலவரத்தை எடுத்தால், இலங்கைக்கு நீண்டகாலமாக, வெளியுறவுக் கொள்கை என்று திட்டவட்டமாக எதுவும் இருக்கவில்லை என்றும் பிரித்தானியர்கள் விட்டுவிட்டுப் போன பிறகு அவர்கள் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைப் பேணினார்களோ அவர்களுடனேயே தன் தொடர்புகளைப் பேணி வந்தது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், இப்போது மகிந்த ராஜபக்க்ஷதான் உள்நாட்டு அரசியற் கொள்கையிலும் வெளிநாட்டு ராஜதந்திர உறவுகளிலும் மிகவும் வித்தியாசமான நடைமுறைகளைக் கைக்கொண்டு வருகிறார் என்றும், ஏகாதிபத்திய வல்லரசுகள் எனப்படுகின்ற மேற்கு நாடுகள், அமெரிக்கா போன்றவற்றைப் புறந் தள்ளி, லிபியா, ஈரான், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் தனது உறவுகளைப் பேணுவதும் சீனக்குடியரசு வெளிப்படையாகவே இராணுவ உதவிகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இவற்றைப் படிப்படியாகப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் பலமற்றவர்களாக உணரப்பட்ட தருணம் இதுதான் என்றும் லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிபீடங்களில் இருந்த காலங்கள் ஒவ்வொன்றிலும் நிறையவே மாற்றங்கள் நடந்து வந்துள்ளன என்றும் ஆனால் மொழிக்கொள்கை தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு மிகவும் பாரதுரமானதாக இருந்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழர்கள் முற்போக்குச் சிங்கள மக்களுடன் இணைந்து சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் போராட வேண்டும் என்று நினைத்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை எப்போதும் சிறுபான்மையினராகக் கருதியதில்லை என்றும் இந்த விடுதலை அமைப்புகளின் செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமான துவேசத்தை வளர்க்கும் செயலாகத்தான் இருந்திருக்கின்றன என்றும் எதையும் தங்களால் கையாள முடியும் என்ற இறுமாப்பில் இருந்த விடுதலைப்புலிகள்தான் மகிந்தவை ஆட்சிபீடத்திற்குக் கொண்டு வந்தார்கள் என்றும் இறுதியில் அவர்களால் அது முடியாமற்போனது எனவும் கூறினார்.

அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் நாங்களும் எங்கள் பங்கினைச் செலுத்துவதன்மூலம் எங்கள் உரிமைகளை அனுபவிக்கப் போராடுவதுதான் ஒரே வழி என்றும் எத்தனையோ இழப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்த நாம் இனியும் மனம் சோராது எங்கள் உரிமைகளைப் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று இந்தத் துன்பம் சூழும்நேரத்தில் கேட்டுக் கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.

மு. நித்தியானந்தன் அவர்களின் உரையை அடுத்து இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படடிருந்த தோழர் நாகார்ஜூனன் அவர்கள் வரமுடியாத காரணத்தினால் அவருடைய உரை லக்ஷ்மியினால் வாசிக்கப்பட்டது. (இக்கட்டுரை புகலியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) நாகார்ஜூனன் இலண்டனில் வசிக்கின்றார். அவர் தற்போது சர்வதேச மன்னிப்புச் சபையில் பணிபுரிகிறார். இவர் சிலகாலம் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்திருக்கின்றார். இவர் நவீனத்துவம் பின்-நவீனத்துவம் தொடர்பான கதையாடல்களில் பரவலாக பங்கு கொண்டிருந்திருக்கின்றார்.

மதிய போசனத்தைத் தொடர்ந்து ச. தில்லைநடேசன் யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த இனி சஞ்சிகை ஆசிரியர் கரவைதாசன் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். இவர் சமூக அரசியற் செயற்பாட்டாளர். கன்பொல்லை சாதியப்போராட்டங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி வைத்து அவ்வப்போது அவை குறித்த சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் எழுதி வருபவர். இவர் தனதுரையில் கலைச்செல்வனுக்கும் தனக்குமான உறவு 96களில் ஆரம்பித்ததென்றும் தனது செயற்பாடுகளுக்கு கலைச்செல்வன் உந்துசக்தியாக இருந்திருக்கின்றாரென்றும் குறிப்பிட்டார். தில்லைநடேசனை அறிமுகம் செய்து பேசுகையில் இவர் கலைச்செல்வனுடன் ஆரம்ப காலங்களில் இணைந்து வேலை செய்வர்களில் ஒருவர் என்றும் நாட்டுக்கூத்துக்கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கின்றார் எனவும் இவர் புலம்பெயர் கலை இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவரென்றும் குறிப்பிட்டார்.
தில்லைநடேசன் தனதுரையில், சைவமும் தமிழும் என்னும் கருத்துருவாக்கம் இடைநடுவில் கட்டப்பட்ட விடயம் என்றும் இதற்கு ஆறுமுகநாவலரின் பங்களிப்பு முக்கியமானதென்றும் குறிப்பிட்டார். விளிம்புநிலை மக்களை கலாச்சாரரீதியாக கீழ்மட்டத்தில் வைப்பதற்கான இந்த சைவம் தந்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம்தான் இதைப் பேணிப் பாதுகாத்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம் என்பது சாதியக்கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டார்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலகட்டங்களில் சாதியமைப்புகள் எப்படி இருந்தன என்றும் அவை பின்னர் எப்படியாகின என்றும் வரலாற்றுத் தகவல்களுடன் பல விடயங்களைத் தொட்டுச் சென்றார். யாழ்ப்பாணச் சமூகத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம், கோயில் நுழைவுப் போராட்டங்கள் என்பன மூலம் அசைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இன்னொருபுறம் சிறுதெய்வக் கோயில்களும் படிப்படியாக ஆகமவிதிக்குட்பட்ட கோயில்களாக மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. கலந்துரையாடலின் முடிவில் ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களை விட்டு சொல்லப்படாத வரலாறுகளின் மூலங்களைத் தேடிச் செல்லவேண்டும் என்ற கருத்தை சுசீந்திரன் முன்வைத்தபோது தானும் அதைத்தான் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தில்லை நடேசன் கருத்துத் தெரிவித்தார்.

தில்லைநடேசன் அவர்களின் பேச்சை அடுத்து காமினி வியாங்கொட ஊடகமும் ஜனநாயகமும் என்ற தலைப்பின்கீழ் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மு. நித்தியானந்தன் அவர்கள் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
காமினி வியாங்கொட பொருளியல் ஆசிரியராக ஏறத்தாளப் 10 வருடங்கள் பணிபுரிந்தபின் அரசியற் காரணங்களினால் புகலிடம் தேடி எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டில் வந்து தங்கியிருந்தவர். இவர் தொடர்ந்தது எழுத்தியக்கத்தில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கின்ற அதேவேளை 22 நாவல்களை சிங்கள மொழிக்கு மாற்றம் செய்திருக்கின்றார். இவற்றுள் சிமோன் திபோவுவாவின் டுந ளுயபெ னுநள யுரவசநள நாவலும் அடங்கும். இவருடைய மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை லத்தின் அமெரிக்க நாவல்களாகும். தற்பொழுது ஒரு நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றார்.

இவர் பிரான்ஸில் இருந்து 2007ம் ஆண்டு திரும்பவும் இலங்கைக்குச் சென்றார். அங்கிருந்த காலப்பகுதிகளில் ஒரு தனியார் வானொலி நிலையத்தின் நிர்வாகியாக இருந்திருக்கின்றார். அத்துடன் லங்கா டிசென்ற் என்கின்ற இணையத்தளத்தின் நிர்வாகியாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப் பின் அங்கு நீதியுடன் செற்படுவதற்கான தளம் வரும்வரையில் தொடர்ந்து இயங்குவதில்லை என முடிவெடுத்து அதற்கான காலத்திற்காகக் காத்திருக்கின்றார். தற்போது மீண்டும் பிரான்ஸில் வந்து தங்கியுள்ளார்.

காமினி வியாங்கொட அவர்கள் தான் தமிழ் மக்களின் முன்பு பேசும்பொழுது ஒருவித அசெளகரியத்தை உணர்வதாகவும் தமிழ்மொழியில் பேசமுடியாமல் இருப்பது குறித்தும் இந்தச் சங்கடம் இன்னும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவனாக இருக்கிறேன் என்பதும், எனவே இரண்டு மொழிகளும் அல்லாத ஒரு பொதுமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், "ஊடகம் என்பது எவ்வாறு இருக்கின்றது. உலகின் எந்தப் பகுதியிலும் ஜனநாயகமாக இயங்குவதற்கு அடிப்படையானது ஊடகமாகும். ஊடகம்பற்றிய மிகப் பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு. அதாவது, «நாங்கள் செய்திகளைத் தருகிறோம். நீங்கள் தீர்மானியுங்கள்.» இதுவே ஐரோப்பிய ஊடகத்தினதும் ஜனநாயகத்தினதும் அடிப்படை விடயமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளுக்காகவே லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அது தொடர்பான அச்சங்களும் அங்கு அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களிற்கு எதுவும் எப்போதும் நேரக்கூடும் என்ற அச்சம் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் இன்றைய இலங்கை. இது ஒருவேளை மாறக்கூடும். மாறவேண்டும்" என்று குறிப்பிட்டுப் பேசிய அவர் இலங்கையில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்டுமானத்திற்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை பற்றியும் பேசினார்.

இவருடைய உரையைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதங்களில் அவர் அரசு இழைக்கும் அநீதிகளை மட்டும் பொருட்படுத்துபவராக இருக்கிறார் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புபவர்கள் இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் மேலும் லசந்தவின் படுகொலை அரசு செய்யவில்லை என்று நம்புவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கெதிராக இவர்கள் எந்தவிதமான போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் காமினியின்மீது குற்றம் சாட்டினார்கள். அவர் தான் ஒரு பத்திரிகையாளனாகத் தன்னளவில் தான் சரியாகத்தான் செயற்பட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்.
காமினி வியாங்கொடவினுடனான விவாதங்களின்போது ஏற்பட்ட ஒரு எதிர்மனநிலை அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் என்று அந்தோனிப்பிள்ளை அவர்களும் சுசீந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.

காமினி வியங்கொடவின் பேச்சைத் தொடர்ந்த இடைவேளையின் பின், 'கோணல்களும் நேர்கோடுகளும் : இலங்கை இனப் பிரச்சினை' என்னும் தலைப்பில் கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் இனிமேல் எங்கள் முன்னெடுப்புகள் எப்படி அமையலாம் என்பதைக் கேள்விகளாக முன்வைத்தார் வி. சிவலிங்கம் அவர்கள். இந்நிகழ்வுக்கு கலையரசன் தலைமை தாங்கினார். கலையரசன் நெதர்லாந்தில் இருந்து வந்து கலந்து கொண்டார். இவர் சர்வதேச அரசியல் பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். இவர் கலையகம் என்ற வலைப்பக்கம் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இடைவிடாத, சோராத எழுத்தியக்கத்தில் இருப்பவர்.

இவர் சிவலிங்கம் அவர்களை அறிமுகப்படுத்துகையில், அவர் மனிதஉரிமை குறித்த பிரக்ஞையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர் என்றும் அவர் சிறந்த அரசியல் ஆய்வாளரென்று குறிப்பிட்டுக் காட்டி, அவருடைய அரசியல் ஆய்வுகளுக்காக பாராட்டுகளைப் பெறும் அதேவேளை சர்ச்சைகளுக்கும் ஆளாகிவருபவர். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் உண்மையென்று நம்புவதை எந்தத் தயக்கமும் இன்றித் துணிந்து சொல்லும் ஆளுமை மிக்கவர். என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளறாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் அறியப்படட கு.உதயகுமார் அவர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

வி. சிவலிங்கம் அவர்கள் பேசுகையில் ஏற்கனவே நடைபெற்ற அமர்வுகளின் தொடர்ச்சியாகவே தன்னுரை அமைகிறது எனவும் இத் தலைப்புகள் கலைச்செல்வன் பேசி இருந்திருக்கக்கூடிய, விவாதித்திருக்கக்கூடிய தலைப்புகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவை மிகவும் பொருத்தப்பாடான தலைப்புகளாகவே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இன்று மிகவும் நெருக்கடியான சூழலில் நாங்கள் இருந்துகொண்டிருப்பதாகவும் உண்மையைப் பேசுவதனால் உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கூட்டங்களிற்குப் போகமுடியாது, ஊர்வலங்களில் பங்குகொள்ளமுடியாது போன்ற இக்கட்டான சூழலில் நாங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆரம்பித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "ஏற்கனவே பல வருடங்களாக நாங்கள் பேசிக்கொண்டு வந்தவைகள் இன்று யதார்த்தமாகிக் கொண்டு வருகின்ற ஒரு நிலையில் வந்து நிற்கிறோம். அதனை நம்புவதற்கு மறுத்தவர்கள் அந்த யதார்த்தத்தை அனுமதிக்க மறுக்கும்போது ஏற்கனவே இப்படியான கருத்துக்களைக் கொண்டிருந்த நபர்களின்மீதே அவர்களின் பார்வை திரும்பும் சாத்தியங்கள்தான் அதிகம் உண்டு. மதப் பிரசங்கங்கள்போல யாருடைய மனதையும் நோகடிக்காமல் இந்த விடயங்களைப் பேசமுடியாது. அத்துடன் எதை நம்பி நாங்கள் செயற்பட்டோமோ அதனைச் செயலாக்க வேண்டிய காலகட்டமும் நெருங்கி இருக்கின்றது. இது அரசியல் வியாக்கியானம் செய்யும் காலகட்டமல்ல. எங்களிற்கு முன்னே நிறையச் சவால்கள் இருக்கின்றன. இந்தச் சவால்களுக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றோம்? என்பதைப் பார்க்கவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில் பெளத்த மேலாதிக்கவாதம் முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் ஒட்ட முடியாமல் இருப்பதற்கான தூய்மைவாதம் பற்றியும் இன்றைய புதிய முதலாளிகள் திறந்த பொருளாதாரத்தினால் உருவாக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு 30 வருடங்களிற்கு முதல் இருந்த பொருளாதாரக் கொள்கையும் இன்றைய பொருளாதாரக் கொள்கையும் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டிப் பேசினார்.

கொழும்பை மையமாக வைத்திருந்த அதிகார வர்க்கம் இப்போது நாட்டுப்புறச் சிங்கள முதலாளிகளை நோக்கிச் சென்றுள்ளது எவ்வாறு என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக, ஷோபாசக்தியின் ‘இப்போது உண்மையை எழுத வேண்டும். அதாவது துயரை எழுத வேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது» என்னும் வரிகளுடன் தனதுரையை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து 'இன்றைய யுத்த சூழலும் நாம் எதிர்நோக்கும் சவால்களும்' என்ற தலைப்பில் திறந்த விவாதம் நடைபெற்றது. இவ் விவாத அரங்கில் தேசியவாதக் கருத்தியல்களின் ஆபத்து, ஐக்கிய இலங்கையின்கீழ் சிறுபான்மையினர் சமத்துவத்துடன் வாழ்தல், மற்றும் சிறுபான்மையினரின் கூட்டு வேலைத்திட்டம், பெரும்பான்மையினத்தின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பன குறித்து காத்திரமான விவாதம் நடைபெற்றது.

விவாதங்களில், தேவதாசன், கரவைதாசன், ஆறுமுகம், வி.ரி. இளங்கோவன், மனோ, யோகரட்ணம், சுகன், பெளஸர், கலையரசன், பாலகிருஷ்ணன், புஸ்பராணி, ஜெயா பத்மநாதன், மோகன், உதயகுமார், சுசீந்திரன், அந்தோனிப்பிள்ளை, கண்ணன், ராஜன் ஆகியோர் பங்கு கொண்டனர். எழுபது பேர்வரை கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு மண்டபத்தையும் உணவு ஏற்பாடுகளையும் மலரும் ராஜனும் ஏற்பாடு செய்திருந்தனர். ஏனைய ஒழுங்குகளுக்கு கிருபன், அனந்தன், நாதன், மீனாள், தமரா, அருணா, அருண், அகில், அருந்தினா, சசி, வனஜா, குணரட்ணராஜா ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள்.


(நன்றி:புகலி)

No comments: