Tuesday, August 19, 2014

புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!


தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஈழப் போராட்டத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, அங்கு நடக்கும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார். புலிப்பார்வை, கத்தி போன்ற வணிகப் படங்களுக்கு சீமான் வழங்கிய ஆதரவு, அதற்கு எதிரான மாணவர் போராட்டம் என்பன, தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள், ஏற்கனவே ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்துள்ளன. ஈழப் போராட்ட வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால், இன்றைய தமிழக நெருக்கடியில் இருந்தும் மீள முடியாது. தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோரின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக கணிக்கத் தெரிந்த RAW, அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஈழப் போரின் முடிவில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழ் தேசிய எழுச்சி, ஈழத்தில் 1983 கலவரத்திற்குப் பின்னரான காலகட்டத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. ஒரேயொரு வேறுபாடு, ஈழத்தில் ஆயுதங்கள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப் பட்டன. தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை.

எழுபதுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் மிகச் சிறிய குழுக்களாக இயங்கிய இடதுசாரிகளினால் வழிநடத்தப் பட்டது. பிற்காலத்தில் தீவிர தமிழ் தேசியவாத இயக்கங்களாக கருதப் பட்ட விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியனவையும், அவற்றின் அரசியல் பிரிவுகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களினால் தலைமை தாங்கப் பட்டு வந்தன. 2009 க்கு முந்திய தமிழ் நாட்டிலும் அது தான் நிலைமை.

ராஜீவ் கொலைக்குப் பின்னர், தடா, பொடா சட்டங்களின் அடக்குமுறை காரணமாக, முந்திய ஈழ ஆதரவாளர்கள் அடக்கப் பட்டனர். பெரும்பான்மை தமிழர்களின் வாய்கள் அடைக்கப் பட்டன. அந்த தருணத்தில், மகஇக போன்ற கம்யூனிச அமைப்புகள் தான், ஈழ விடுதலைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தன. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களின் கட்சியும், தனது ஆதரவாளர்கள் சிலரை வன்னிக்கு அனுப்பும் அளவிற்கு ஆதரவளித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட இளைஞர்கள், வன்னி சென்று இராணுவப் பயிற்சி எடுத்து, போர்க் களத்திலும் நேரடியாக பங்காற்றி உள்ளனர். இந்தத் தகவல் இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. நக்சலைட் அமைப்புகள், தலித்திய அமைப்புகள் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது, ஒரு பெரிய திருப்புமுனை. இந்திய அரசுக்கு அவற்றை அடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றியது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகளை அடக்குவது, சில நேரம் எதிர்மறையான விளைவுகளை தரலாம். ஆந்திராக் காடுகளில், மாவோயிஸ்டுகளுக்கு முன்னாள் ஈழப் போராளிகள் சிலர் பயிற்சி அளித்தனர் என்ற தகவல் இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தப் பின்னணியில் தான், 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டனர். அதன் எதிர்வினையாக, தமிழ்நாட்டில் ஓர் மக்கள் எழுச்சி உண்டாகலாம் என்று RAW அஞ்சியது. அதனால், தீவிர தமிழ் தேசியம் பேசும், கம்யூனிசத்தை வெறுக்கும் வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகளை வளர்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டது. அதன் விளைவாக, நாம் தமிழர் கட்சியும், மே 17 இயக்கமும், குறுகிய காலத்திற்குள் அசுர வளர்ச்சி கண்டன.

இரண்டு தசாப்த காலமாக, ஈழ விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கம்யூனிச அமைப்புகள், இன்றைக்கும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படியான அமைப்புகள் இருப்பதே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. ஆனால், 2009 ஆம் ஆண்டு திடீரென முளைத்த தீவிர தமிழ் தேசியவாத அமைப்புகள், ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பெற்று வளர்ந்தது எப்படி? இடதுசாரி அமைப்புகள் நடத்திய எந்தவொரு ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் கண்டுகொள்ளாத தமிழக வெகுஜன ஊடகங்கள், நாம் தமிழர், மே 17 க்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?

ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே பெருமளவு ஆதரவை திரட்டிக் கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளும், டெலோவும் முன்னணியில் நின்றன. டெலோவுக்கு இந்திய மத்திய அரசு நேரடியாக நிதியுதவி வழங்கியது. புலிகளுக்கு அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நிதி வழங்கினார். எம்ஜிஆர் சுதந்திரமாக இயங்கவில்லை. அவரும் இந்திய அரசின் அனுசரணையின் பேரில் ஒரு முகவராக செயற்பட்டார்.

புலிகளையும், டெலோ வையும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த இயக்கங்களில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தது. மார்க்சிய- லெனினிசத்தை தமது சித்தாந்தமாக அறிவித்துக் கொண்ட பிற ஈழ விடுதலை இயக்கங்களை ஓரங் கட்ட வேண்டுமென்றால், இப்படியான தீவிர வலதுசாரி - தேசியவாத சக்திகளை வளர்த்து விட வேண்டும். இந்தியாவின் நோக்கம் எந்தளவு தூரம் நிதர்சனமாகி உள்ளது என்பதை, வரலாறு கூறுகின்றது.

1984 ஆம் ஆண்டு, ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில், LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்கள் தமக்குள் ஒன்று பட்டு, ஒரே அமைப்பாக இயங்க விரும்பின. தமிழர்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரே அமைப்பாக போராடுவது, இந்திய, இலங்கை அரசுக்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவு. எப்பாடு பட்டாவது அந்த ஒற்றுமையை குலைக்கவே முயற்சிப்பார்கள். ஈசாப்பின் நீதிக் கதைகளில் வருவதைப் போல, "ஒற்றுமையாக மேய்ந்த நான்கு மாடுகள், ஓநாயின் புத்திமதியை கேட்டு, பிரிந்து சென்று மேய்ந்த கதை" ஈழத்தில் நடந்தது. அதன் விளைவு என்னவென்று இன்று பலர் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக செயற்படுவதாக நடந்து கொண்டன. தமக்கிடையே எந்தவொரு கொள்கை முரண்பாடும் இல்லையென காட்டிக் கொண்டன. அன்று அவர்களின் பொது எதிரி மத்தியில் சோனியா அரசு, மாநிலத்தில் கருணாநிதி அரசாக இருந்தது. இதுவும் ஆரம்ப கால ஈழப் போராட்ட இயக்கங்களை நினைவுபடுத்துகின்றது. 

1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்றும், தமக்கிடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்றும் காட்டிக் கொண்டன. அவற்றின் பொது எதிரி, மத்தியில் ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யு.ஏன்.பி. கட்சி, வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளான அமிர்தலிங்கத்தின் த.வி.கூ. கட்சியாக இருந்தது. கருணாநிதியும் தி.மு.க.வும், தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது. அதே மாதிரி, அன்று ஈழத்தில் த.வி.கூ.வும், அமிர்தலிங்கமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது.

ஈழத்தில் புலிகளும், டெலோவும் தமக்கு இடையிலான முரண்பாட்டை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொண்டனர். அதனால், ஓர் இயக்கம் போராட்டத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அதனால், நாம் தமிழர், மே 17 க்கு இடையில் ஒரு "சகோதர யுத்தம்" நடப்பதற்கு, சில திரைப்படங்கள் குறித்த சர்ச்சை போதுமானதாக உள்ளது. மேலும், இலங்கை இறைமை கொண்ட இன்னொரு நாடு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அங்கே இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியாது. முதலில் ஈழ விடுதலையை ஆதரிப்பது போல நடிக்க வேண்டும். சிறிலங்கா அரசை அடிபணிய வைப்பதற்காக, போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படி எத்தனை கஷ்டங்கள்?

ஆனால், தமிழ்நாட்டில் அந்தளவு சிரமப் படத் தேவையில்லை. RAW நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். சிறிய சந்தேகம் தோன்றினாலே, சுட்டுக் கொன்று விடும் அளவிற்கு எச்சரிக்கையாக இருந்த, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயே RAW ஊடுருவ முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஊடுருவுவது ஒரு கடினமான விடயமா? 

அது சரி, உளவாளிகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? ஏனென்றால், அவர்களும் மிகத் தீவிரமான தமிழ் தேசியம் பேசுவார்கள். புலிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறுவார்கள். தமிழீழத்தை, புலிகளை விமர்சிக்கும் எல்லோரையும் பாய்ந்து குதறுவார்கள். இவர்களை கண்டுபிடிப்பது என்பது, நெல்லில் கல் பொறுக்குவது போன்றது.

புலிப்பார்வை திரைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நேரம் தான் இன்னொரு செய்தியும் வந்தது. அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்டுகள் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு, இந்திய மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது. தமிழ் நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் திரும்ப விடாமல் தடுக்க வேண்டுமானால், இன்னும் இன்னும் தமிழ் தேசிய உணர்வை தூண்டி விட வேண்டும். புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப் படங்கள், RAW தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன.

தமிழ் நாட்டில் "ரா"மையாவின் ஆட்டம் ஆரம்பம்.

*****

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்
ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

4 comments:

அன்பரசு said...

இந்த திரைப்பட விடயங்களில் ரா எதுவும் செய்ய தேவை இல்லை. மேடைதோறும் உணர்ச்சி பொங்க ஈழம் பற்றி பேசியவர்கள் இந்திய நாட்டில் அகதிகளாய் வந்தவர்கள் பற்றி வாய் திறந்தது கூட இங்கு நடக்கவில்லை. சீமான் போன்றவர்கள் நல்லவர்கள் என்று நம்புவதற்கு தமிழர்கள் யாரும் தயாரில்லை. எல்லா அரசியல் வியாபாரியும் தனக்கென ஒரு சேனல் வைத்துக்கொண்டு இதுதான் செய்தி என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

Unknown said...

//ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார்.//

எந்த காலத்திலும் தமிழர்கள் சீமானை தேசியத் தலைவர் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கவில்லை. கொஞ்ச காலத்திற்கு அவர் தமிழக மக்களின் பொழுதுபோக்கிற்கும், பத்திரிக்கைகளின் செய்தி பசிக்கும் உதவினார் என்பதே உண்மை. சீமான் போன்றவர்களால்தான் ஈழப்போராட்டத்தை தமிழக மக்கள் சந்தேகத்துடன் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

nerkuppai thumbi said...

//எல்லா அரசியல் வியாபாரியும் தனக்கென ஒரு சேனல் வைத்துக்கொண்டு இதுதான் செய்தி என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.//

இந்த வலைத்தளம் உட்பட

Unknown said...

////ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், //
இது ரொம்ப ரொம்ப டூ மச். சீமான் போன்ற கழிசடைகளை நம்பி சில இளைஞர்கள் சென்றது உண்மைதான். ஆனால், இப்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.