Friday, December 06, 2013

ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே, ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் தமிழினவாதிகள், யதார்த்தத்தை மறந்து சிந்திப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது புதிதாக முளைத்துள்ள போலி இடதுசாரிகள் சிலர், இடதுசாரியம் பேசிக் கொண்டு, புதிய மொந்தையில் பழைய கள்ளை இறக்கித் தருகிறார்கள். கள்ளில் கம்யூனிச வாசனையுடன் தமிழ் தேசியத்தை கலந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற தேசியமும், சோஷலிசமும் கலந்த இயக்கங்கள் முளைப்பது, வரலாற்றில் இதுவே முதல் தடவை அல்ல. இன்று ரஷ்யாவில் உள்ள, "தேசிய போல்ஷெவிக் கட்சி" யுடன் அவர்களை ஒப்பிடலாம். அந்தக் கட்சியின் கொடியிலும் அரிவாளும், சுத்தியலும் சின்னம் இருக்கும். ஆனால், கொள்கை அளவில் மிகத் தீவிரமான ரஷ்ய தேசியவாதிகள். அவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களை ஏய்ப்பதற்காக, கம்யூனிஸ்டுகள் போன்று பாவனை செய்கிறார்கள்.

சமரன் குழு என்ற பெயரில், ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்வதாக சொல்லிக் கொண்டு, தாமாகவே கற்பனை செய்து புனைந்த கட்டுக்கதைகளை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார்கள். "புதிய ஜனநாயகம்" இதழில், அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தும் கட்டுரைகள் வந்துள்ளன. முகநூலில் "தமிழ் இனியன்" என்ற பெயரில் இயங்கும் ஒருவர், என்னுடன் ஈழம் பற்றிய விவாதத்திற்கு வந்தார். அதில் அவர் தவறாக புனைந்து கூறிய கருத்துக்களை, நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. 

குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், டெலோ, புலிகள் ஆகிய இயக்கங்களுக்கு இடையில் நிலவிய ஒத்த கருத்துள்ள கொள்கைகள் பற்றிய விவாதம் எழுந்த பொழுது அதை மறுத்துரைத்தார். டெலோ, புலிகள் இவற்றிற்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளாக "இந்திய கைப் பாவைகள்" என்ற அளவுகோலை பயன்படுத்தினார். அதாவது, புலிகளைத் தவிர்ந்த பிற இயக்கங்கள், இந்தியக் கைப் பாவைகளாக இருந்தன என்பது தான், அவரைப் பொறுத்த வரையில் முக்கியமான "கொள்கை வேறுபாடு." அது சரியானதா என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஆகிய இயக்கங்களுக்கு இடையில் காணப்பட்ட, கொள்கை ரீதியான சில ஒற்றுமைகள்


  • இரண்டுமே வலதுசாரி தேசியவாதத்தை கொண்டிருந்தன. உதட்டளவில் கொஞ்சம் இடதுசாரியம் பேசின. இரண்டுமே இராணுவ கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அரசியல் வகுப்புகள் நடத்தப் பட்டாலும், அரசியல் பிரிவு வளர்வதற்கு ஊக்குவிக்கப் படவில்லை. அரசியல் பிரிவு கூட, இராணுவ வெற்றிகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு தான் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. 

  • டெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியமை, அந்தக் காலத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய இராணுவத் தாக்குதல் ஆகும். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில், நாற்பதுக்கும் குறையாத பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. டெலோ அதனை வீடியோ படமாக்கி, அதனை ஊர் ஊராக கொண்டு சென்று காட்டியது. அதன் மூலம், நிறைய புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடிந்தது. இராணுவ வெற்றியால் கவரப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரும் டெலோவுக்கு ஆதரவளித்தனர். 

  • பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். புலிகள் இராணுவ முகாம்களை தாக்கிய போதெல்லாம், வீடியோ படப்பிடிப்பாளர்களும் கூடச் சென்றார்கள். அவர்கள் படமாக்கிய வீடியோக்கள், வெளிநாடுகள் வரையில் பரவின. வீடியோ பிரச்சாரம் மூலம், புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டதுடன், மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கொண்டனர்.

  • இடதுசாரி தன்மை கொண்ட ஈழ விடுதலை இயக்கங்களில், எல்லோரும் அரசியல் பேசுமளவிற்கு பயிற்சியளிக்கப் பட்டது. ஆனால், வலதுசாரி இராணுவவாத இயக்கங்களான டெலோவும், புலிகளும் "அரசியல் ஆலோசகர்" என்ற தனியான பதவியை உருவாக்கினார்கள். டெலோவுக்கு சத்தியேந்திரா அரசியல் ஆலோசகராக இருந்தார். புலிகளுக்கு முன்னர் நித்தியானந்தனும், பின்னர் அன்டன் பாலசிங்கமும் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள்.

டெலோ, புலிகள் இரண்டு இயக்கங்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமைகளை சுட்டிக் காட்டியதும், தமிழ் இனியன் பின்வரும் விளக்கம் ஒன்றை தந்திருந்தார். கீழே, தமிழ் இனியனின் கூற்றை அப்படியே தருகிறேன்:

//இரண்டு இயக்கங்களுமே, ஏன் எல்லா இயக்கங்களுமே, தமிழீழ விடுதலையை முன்வைத்தே தோன்றின. அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. ஆனால், பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப் பாவையாக மாறினார்கள். அப்படி ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. எனவே, புலிகளும், டெலோவும் ஒத்த கருத்தில் இருந்தனர் எனச் சொல்வது அபத்தமானது.//

"எல்லா இயக்கங்களும் "தமிழீழ" விடுதலையை முன்வைத்தே தோன்றின." என்று தொடங்குவதே அவரது அரசியல் பாமரத்தனத்தை காட்டி விடுகின்றது. டெலோ, புலிகள், புளொட் ஆகிய மூன்று இயக்கங்கள் மட்டுமே "தமிழீழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயர்களிலேயே தமிழீழம் இருக்கும். ("தமிழீழ" விடுதலை இயக்கம், "தமிழீழ"விடுதலைப் புலிகள், "தமிழீழ"மக்கள் விடுதலைக் கழகம் )  ஈரோஸ், ஈபிஆர்எல்எப் ஆகியன "ஈழம்" கோரின. அந்த இயக்கங்களின் பெயரிலேயே ஈழம் இருக்கிறது. ("ஈழப்" புரட்சி அமைப்பு, "ஈழ" மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி )

தமிழீழம், ஈழம் இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இருக்கிறது. அது தான் கொள்கை வேறுபாடு.  முதன்முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தான், தமிழீழம் என்ற சொல்லை பயன்பாட்டில் கொண்டு வந்தது. புத்தளம் முதல் அம்பாறை வரையிலான தமிழீழ வரைபடத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். அந்தக் கோட்பாட்டை, டெலோவும், புலிகளும் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொண்டன. புளொட் பிற்காலத்தில் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் ஆகும். ஆகவே அவர்களும், அதே தமிழீழத்தை ஏற்றுக் கொண்டமை புரிந்து கொள்ளத் தக்கது.

எழுபதுகளில், புலிகள் தோன்றிய சம காலத்திலேயே, ஈரோஸ் தோன்றி இருந்தது. ஈரோஸ் இயக்கத்தினர், தமிழீழம் என்ற சொல்லை நிராகரித்து, அதற்குப் பதிலாக ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அதற்கு ஒரு விசித்திரமான விளக்கம் கொடுத்தார்கள். "பாலஸ்தீனர்கள் அரபு-பாலஸ்தீனம் கோரவில்லை. அவர்களது தாயகம் பாலஸ்தீனம். அதே போல, நாம் தமிழர்களாக இருந்தாலும், எமது தாயகம் ஈழம்" என்றார்கள்.

அதாவது, தமிழீழம் என்ற பெயரில் இனவாத தொனி காணப் படுவதாகவும், ஈழம் என்பதற்குள் முஸ்லிம்களும் அடங்குவார்கள் என்பது அவர்களது கொள்கை. ஈரோஸ், ஈழ தேசத்தின் பிரஜைகளுக்கு  "ஈழவர்கள்" என்று பெயர் சூட்டி இருந்தது. பிற்காலத்தில், ஈரோஸில் இருந்து பிரிந்து சென்ற ஈபிஆர்எல்ப் இயக்கம், "ஈழம்" என்ற பெயரை தானும் சுவீகரித்துக் கொண்டது. (ஈழவருக்கு பதிலாக "ஈழ மக்கள்" என்ற பதத்தை பயன்படுத்தியது.)

தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புலிகள், புளொட் முன்மொழிந்த தமிழீழ வரைபடத்திற்கும், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் முன்மொழிந்த ஈழ வரைபடத்திற்கும் இடையில் வித்தியாசம் இருந்தது. தமிழீழ வரைபடத்தில் புத்தளம் மாவட்டம் சேர்க்கப் பட்டிருந்தது. ஈழ வரைபடத்தில் அது நீக்கப் பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, மலையகத் தமிழர்கள் வாழும் மலைநாட்டுப் பிரதேசம் இணைக்கப் பட்டிருந்தது. ஈரோஸும், ஈபிஆர்எல்ப் உம், மலையகத் தமிழ் மக்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். புலிகளும், டெலோவும் அவர்களை அலட்சியப் படுத்தினார்கள். ஈழப்போரின் பிற்காலத்தில், வன்னியில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் புலிகளில் இணைந்து போரிட்டது வேறு கதை. ஆனால், புளொட் அவர்களை ஏற்கனவே அரசியல் மயப் படுத்தி இருந்தது.

இந்த இடத்தில், இன்னொரு கொள்கை வேறுபாட்டையும் நாம் மறந்து விடலாகாது. உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களிலும், வலதுசாரி, இடதுசாரி வித்தியாசம் இருக்கும். ஈழ விடுதலைப் போராட்டத்திலும் அது நடந்தது. டெலோ, புலிகள் ஆகியன வலதுசாரி இயக்கங்களாக தோற்றம் பெற்றன. அவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலதுசாரி தேசியவாதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டன. ஆனால், இரண்டு இயக்கங்களிலும் தலைமைப் பொறுப்பில் சில இடதுசாரி உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு, சில இடதுசாரி கோஷங்களை முன்வைத்தார்கள். உதாரணத்திற்கு: சோஷலிசத் தமிழீழம். ஏற்கனவே, வட்டுக்கோட்டை மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கையிலும் சோஷலிசத் தமிழீழம் என்றே குறிப்பிடப் பட்டது. இவ்வாறான சில இடதுசாரி கோஷங்களை தவிர, நடைமுறையில் வலதுசாரி அரசியல் தத்துவமே பின்பற்றப் பட்டது.

//அந்த காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும் இருந்தன. // (தமிழ் இனியன்)

அப்படியான பொதுமைப் படுத்தலே தவறானது. ஈழப் போராட்ட வரலாற்றில் எதையுமே கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. டெலோ, புலிகள் ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு, "வல்வெட்டித்துறை தொடர்பு" ஒரு காரணமாக அமைந்திருந்தது. டெலோ தலைவர்கள் தங்கத்துரை, குட்டிமணி; மற்றும் புலிகளின் தலைவர்கள் பிரபாகரன், மாத்தையா ஆகியோர், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

பல தசாப்தங்களாக, வல்வெட்டித்துறை படகோட்டிகள், அடிக்கடி படகுகளில் தமிழ்நாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகளாக இருந்தாலும், அந்த தொடர்புகள் தலைமறைவு இயக்கங்களுக்கும் பிரயோசனமாக இருந்தன. அவர்கள் இந்தியாவில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து விற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். டெலோவும், புலிகளும், "வல்வெட்டித் துறை தொடர்புகளை", தமிழீழ அரசியலுக்கு பயன்படுத்தி வந்ததால் தான், ஒரு கட்டத்தில் பிரபாகரன் கூட டெலோ இயக்கத்தில் சேர்ந்து செயற்பட முடிந்தது.

தமிழ் இனியன் குறிப்பிடும் "பரஸ்பர ஒத்துழைப்பும், நம்பிக்கையும்", புலிகள் - புளொட் உறவில் இருக்கவில்லை. புலிகள் அமைப்பில் இருந்து உமா மகேஸ்வரன், சுந்தரம் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றதும், இரண்டு குழுக்களும் ஒன்றையொன்று எதிரிகளாக கருதிக் கொண்டன. "பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது போல, உமாமகேஸ்வரன் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்தார்." சென்னை, பாண்டி பஜாரில், பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த செய்தி. பிளவின் ஆரம்ப காலங்களில், இரண்டு குழுவினரும், மாறி மாறி எதிர் தரப்பு உறுப்பினர்களை கொலை செய்தார்கள்.

//பின்னாளில் அவர்கள் பலரும் இந்தியாவின் கைப்பாவையாக மாறினார்கள். // (தமிழ் இனியன்)

ஆரம்பத்தில், இந்திய அரசு அவர்களை புறக்கணித்து வந்தது. ஈழ விடுதலை இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டில் புகலிடம் கோரி இருந்தாலும், அங்கும் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் ஏற்பட்ட தொடர்பு ஓரளவு காப்பாற்றியது. அதுவும் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே சாத்தியமானது.

1983 ம் ஆண்டுக்குப் பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. ஜூலை இனக்கலவரம், அதனால் இந்திய-இலங்கை அரசுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை, போராளிக் குழுக்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய மத்திய அரசு, அனைத்து இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சியளிக்க முன்வந்தது. புலிகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியா ஆயுதமும், பயிற்சியும் கொடுத்த காரணத்தினால், ஐந்து பெரிய இயக்கங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

டெலோவுக்கு கருணாநிதியும், புலிகளுக்கு எம்ஜிஆரும் நிதியுதவி வழங்கினார்கள். ஆனால், இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தெரிந்தே அதனை செய்தார்கள். டெலோ இந்திய மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்தது உண்மை தான். ஆனால், அந்தக் காலத்தில் அதை யாரும் இழிவாகக் கருதவில்லை. மாறாக, அது "பெருமைக்குரிய விடயமாக" கருதப் பட்டது. டெலோவும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் "இந்திய தொடர்பை"  சொல்லிக் காட்டி, அரசியல் பிரச்சாரம் செய்து வந்தது. ஏனென்றால், இந்தியா படையனுப்பி ஈழம் வாங்கித் தரும் என்ற மாயை, அன்றைய தமிழ் மக்கள் மனதில் இருந்தது. பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்தியாவை "தாய் நாடு" போன்று கருதி வந்தனர்.

இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஏதோ ஒரு வழியில் கட்டுப் படுத்தி வந்தது. தமிழ்நாட்டில் அவர்களை சுதந்திரமாக இயங்க விட்டதாக காட்டிக் கொண்டாலும், RAW வுக்கு தகவல் கொடுக்கும் பலரை இயக்க மேல் மட்டங்களில் வைத்திருந்தது. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் RAW ஊடுருவி இருந்தது. புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்.

டெலோ இந்திய மத்திய அரசின் செல்லப் பிள்ளையாக இருந்திருந்தால், எதற்காக புலிகளுடன் மோதல் வெடித்த காலத்தில் அதனை கைவிட்டது? டெலோவை அழித்த புலிகள், பெருந்தொகையான இந்திய ஆயுதங்களை கைப்பற்றியதுடன், "டெலோ இந்தியக் கைப் பாவையாக செயற்பட்டதாக" மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். ஆனால், அப்போதும் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படவில்லை. (பிற்காலத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பொழுது தான், அந்த விரிசல் தோன்றியது.) யாழ்ப்பாணத்தில் டெலோவை தடை செய்த புலிகளை, இந்தியா தனது நாட்டில் தடை செய்யவில்லை. ஆகவே, இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம். பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை, இந்தியா முன்கூட்டியே அனுமானித்திருக்கலாம்.

1987-1990 வரையில், இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டீஎல்எப் ஆகியன இந்தியாவின் கைப் பாவைகளாக மட்டுமல்ல, அதற்கும் மேலே கூலிப்படைகளாக பயன்படுத்தப் பட்டன. ஆனால், இந்திய இராணுவம் வெளியேறும் நேரம், அவர்களை புலிகளின் கரங்களில் ஒப்படைத்து விட்டு ஓடி விட்டது. மேற்படி இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட, ஆயிரக் கணக்கான "தமிழ் தேசிய இராணுவ" இளைஞர்களும் புலிகளால் படுகொலை செய்யப் பட்டார்கள். இந்தியா நினைத்திருந்தால், தனது "கைப் பாவைகளை" காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக புலிகளின் கை ஓங்குவதற்கு அனுமதித்தது.

//(இந்தியாவின் கைப்பாவை ) ஆகாமல் தன் நோக்கத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது புலிகளே. எனவேதான் அவர்களால் மக்கள் ஆதரவை பெற முடிந்தது. இது உலகம் முழுதும் அறிந்த உண்மை. // (தமிழ் இனியன்)

1987 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், புலிகள் இயக்கம் இந்தியாவுடன் முரண்பட்டது. மிகப் பெரிய இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்வதற்கும் துணிந்தது. அதற்கு முன்னர் இந்தியா புலிகளையும் தனது கைக்குள் வைத்திருந்தது. முதன் முதலாக இந்தியாவிடம் இருந்து விலகியது புலிகள் அல்ல. எழுபதுகளில் இருந்து, ஈரோஸ் PLO வுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பிட்டளவு இளைஞர்களை லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்பியது. அதே மாதிரி, புளொட் PFLP  இடம்  பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டது.

1984 ம் ஆண்டு, புளொட் இந்தியாவை விமர்சிக்கும் "வங்கம் தந்த பாடம்" என்ற சிறு நூலை, தமிழ் மக்கள் மத்தியில் விநியோகித்தது. (பங்களாதேஷ் பிரிவினையில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் அந்த நூலில் விபரிக்கப் பட்டிருந்தன.)   புளொட் இயக்கம், இந்திய அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளில் வாங்கிய ஆயுத தளபாடங்களை, ஒரு கப்பலில் கடத்திக் கொண்டு வர முயற்சித்தது. அந்த விடயம், இந்தியாவுக்கு தெரிய வந்த பின்னர், இந்தியக் கடற்படையினர் புளொட்டின் ஆயுதக் கப்பலை கைப்பற்றினார்கள். ஒரு புளொட் குழுவினர், மாலைத்தீவு வர்த்தகர் ஒருவரின் கூலிப்படையாக சென்று சதிப்புரட்சி மூலம் மாலைத்தீவை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சதிப்புரட்சியை முறியடித்த இந்திய இராணுவம், புளொட் கூலிப் படையினருக்கு கடுமையான தண்டனை வழங்கியது.

இந்தியாவுக்கும் பிற இயக்கங்களுக்கும் இடையிலான உறவு, அப்படி ஒன்றும் சிறப்பாக இருக்கவில்லை. சென்னையில் இருந்த டெலோவின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, இந்தியாவை விட்டு நாடுகடத்தப் பட்டார். யாழ்ப்பாணத்தில், அமெரிக்க அலன் தம்பதிகள் கடத்தலில் ஈடுபட்ட ஈபிஆர்எல்எப் மீது, இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுத்தார்.  (சி.ஐ.ஏ. என்று குற்றஞ்சாட்டி கடத்தப்பட்ட அலன் தம்பதிகள், இந்திரா காந்தியின் பயமுறுத்தலின் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.) இந்தியா இன்னொரு முக்கியமான தடைக் கல்லை போட்டது. இடதுசாரி ஈழ விடுதலை இயக்கம் எதுவும், தமிழ்நாட்டில் இருந்த நக்சல்பாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை, இந்தியா விரும்பவில்லை. அந்த இயக்கங்கள் தன்னிச்சையாக எடுத்த, அவ்வாறான முயற்சிகள் யாவும் தடுக்கப் பட்டன. 

தமிழ் இனியன் ஒரேயடியாக 1987 காலகட்டத்திற்கு தாவுகிறார். ஆனால், அப்போது கூட நிலைமை அவர் நினைப்பது போல இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் போய் இறங்கியதும், ஈழத் தமிழ் மக்கள் அவர்களை இரு கரம் நீட்டி, மகிழ்வுடன் வரவேற்றார்கள். அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் இந்தியப் படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்ததும், மக்கள் அதையும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். இந்தியப் படைகளை, யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் வரவேற்றதற்கு காரணம், அவர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு. நீண்ட காலமாக, இந்தியா படையனுப்பி தங்களை காப்பாற்றும் என்று, தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளின் வருகைக்குப் பின்னர், இரண்டு மாதமாக நிலவிய சமாதானம் குலைந்தது. இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. யுத்த காலத்தில் இந்திய இராணுவம் தனது கோர முகத்தை காட்டியது. இந்தியப் படைகள் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பன, புலிகளுக்கு தமிழ்ப் பொது மக்களின் அனுதாபத்தை பெற்றுத் தந்தது. ஒரு காலத்தில் வரவேற்கப்பட்ட இந்திய இராணுவம், அதே தமிழ் மக்களால் வெறுக்கப் பட்டது.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெறுத்தாலும், இந்தியாவை நிராகரிக்கவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் இருந்து அரசியல் தீர்வு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பு போன்ற இன்றைய தமிழ்த் தலைமைகள், தமக்கு இந்திய ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். 

அதிகம் பேசுவானேன், புலிகளின் அழிவுக்கு முன்னர், தமிழகத்தில் நெடுமாறன் , வைகோ போன்ற புலி ஆதரவு அரசியல்வாதிகள், புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள். "தமிழீழம் அமைந்தால், அது ஒருக்காலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படாது." என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள்.  இப்போதும், "இலங்கையில் சீனா கால் பதிக்கிறது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்."என்று இந்தியாவுக்காக கவலைப் படுகிறார்கள்.

தமிழ் இனியன் சொல்வது போல, "புலிகள் இந்திய கைப் பாவை ஆகாமல் இருந்ததால் தான், மக்கள் ஆதரவை பெற முடிந்தது" என்பது உண்மையானால், இன்று தமிழக தமிழினவாதிகள் அனைவரும், ஈழத் தமிழ் மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டிருக்கும். 

No comments: