Wednesday, March 21, 2018

ஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை


வருடாந்தம் தவறாமல் நடைபெறும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன கூட்டத்தொடரில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஈழத் தமிழர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.
  1. தமிழர் தரப்பும், சிங்களவர் தரப்பும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி. 
  2. புலிகளின் படையணிகளில் இருந்த சிறார் போராளிகள் பற்றி கஜேந்திரகுமாரின் வாக்குமூலம்.
மேற்குறிப்பிட்ட இரண்டும், ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகள். சிலர் வழமை போல தமது அரசியல் ஆதாயங்களுக்காக பெரிது படுத்துகின்றனரே தவிர, அதைப் பற்றிப் பேசுவதால் எந்த நன்மையையும், தீமையும் கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாவின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்பது மட்டுமே இதனால் ஏற்படும் பலன்.

ஜெனீவாவின் உள்ளே இரு தரப்பிற்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவுக்கு பின்வரும் தலைப்புக் கொடுத்திருந்தனர்."ஜெனீவாவில் தமிழர்களை மிரட்டும் சிங்கள இராணுவத்தினர்!" நடந்தது இது தான். ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு தரப்பு பிரதிநிதிகள், புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தனர். சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். தமிழர்களின் பிரதிநிதிகள் அவற்றை பொய் என்று எதிர்த்து வாதிட்டனர். அனேகமாக, இதே வீடியோவை சிங்கள இணைய ஆர்வலர்களும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அதற்கு "ஜெனீவாவில் சிங்களவர்களை மிரட்டும் புலிகள்!" என்று தலைப்பிட்டிருப்பார்கள்.

கடந்த இருபது, முப்பது வருடங்களாக இது தான் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் தரப்பினர் சிறிலங்கா இராணுவம் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். அதே மாதிரி, சிங்கள தரப்பினர் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். இரு தரப்பினரும் தமது பக்க நியாயங்களை மட்டும் பேசி விட்டு செல்வார்கள். ஐ.நா. பிரதிநிதிகள் அவற்றை எல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்வார்கள்.

இத்தகைய பின்னணியை வைத்துப் பார்த்தால், புலிகளின் படையணிகளில் சிறார் போராளிகள் சேர்த்துக் கொண்டமை பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொடுத்த வாக்குமூலம் ஒன்றும் புதினம் அல்ல. ஹியூமன் ரைட்ஸ் வோச் போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் பேசியுள்ளன. அதனால், தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கனவே இது பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது புலிகள் இருந்த காலத்திலேயே நடந்தது. கஜேந்திரகுமார் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே, இதை பரபரப்பு செய்தியாக்குகிறார்கள்.

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஒன்றுகூடலை, விவாகரத்து செய்யவிருக்கும் கணவனும், மனைவியும் கவுன்சிலிங் போவதுடன் ஒப்பிடலாம். நடுவராக இருப்பவர் இரண்டு பக்க குற்றச்சாட்டுகளையும் கேட்டுக் கொள்வார். ஆனால், யாருக்கும் சாதகமாக பதில் கூற மாட்டார். இரண்டு பக்கமும் பிழைகள் இருப்பதாக சொல்லி முடிப்பார். கவுன்சிலிங் செய்பவர் தனக்கு சார்பாக மட்டுமே தீர்ப்புக் கூற வேண்டும் என்று இரண்டு பேரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை. இது தான் ஜெனீவா கூட்டத்திலும் நடக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், சர்வதேச அரசியல் அரங்கில் உண்டாக்கும் தாக்கங்களை புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஜெனீவா பற்றிய மாயையில் வாழ்கின்றனர். நாங்கள் ஒரு இலங்கையை மட்டும் பார்க்கிறோம். ஜெனீவா உலக நாடுகள் அனைத்தையும் பார்க்கிறது.

அதாவது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப் போல, இலங்கையில் நடக்கும் அதே பிரச்சினைகள் இன்னும் பல உலக நாடுகளில் நடக்கின்றன. ஜெனீவா மகாநாடு இதுபோன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளில் தலையிட்டு யாருடைய பக்கத்திற்கு சார்பாகவும் தீர்ப்புக் கூறப் போவதில்லை. அதற்கான அதிகாரமும் கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக, ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆராய்வது தான் ஜெனீவா மகாநாட்டின் நோக்கம். மூன்றாமுலக நாடுகள் என அழைக்கப் படும் இந்த நாடுகள் யாவும், முன்னொரு காலத்தில் காலனிய அடிமை நாடுகளாக இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. காலனிய காலத்தில் "வெள்ளை மனிதனின் கடமை" என்ற பெயரில் இயங்கிய ஐரோப்பியரின் மேலாண்மையை, இன்று "மனித உரிமை" என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகிறார்கள்.

இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், காலனியாதிக்க பிரபுக்களைப் பொறுத்தவரையில் இரண்டு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஜெனீவாவில் தமக்கு சாதகமான பதில் வர வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம், சிங்களவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், இரண்டு பக்கமும் தமது பக்க நியாயங்களை அடுக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

உணர்ச்சிவசமான அரசியலுக்குள் இழுபடாமல், மூன்றாவது மனிதராக பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பொஸ்னிய யுத்தம் நடந்த காலத்தில், செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்த் தரப்பை கடுமையாக சாடி, தமது பக்க நியாயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீண்டும் பொஸ்னியா என்ற ஒரே நாட்டுக்குள் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இதற்கு இன்னும் பல நாடுகளை உதாரணம் காட்டலாம்.

இனப் பிரச்சினை நடக்கும் நாடொன்றில் இது சர்வ சாதாரணம். ஒவ்வொரு இனமும் தனது பக்கம் நியாயம் இருப்பதாக வாதாடிக் கொண்டிருக்கும். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் எதிரி இனம் என்று குற்றம் சாட்டும். பெரும்பான்மையான மக்கள் இந்த உணர்ச்சிகர அரசியலுக்குள் இழுபட்டு செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டில், பேரழிவுகள் தரும் யுத்தம் நடந்த பின்னர், இரண்டு பக்கமும் கசப்புணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏகாதிபத்திய தலையீடு ஏற்படும். நாட்டாண்மை மாதிரி தலையிட்டு, இரண்டு பக்கமும் சமாதானமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இலங்கையிலும் அதைத் தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை.

குரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரி, மனித உரிமைகள் விவகாரம் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அடிகோலும் காரணி என்பதை பலர் உணர்வதில்லை. மூன்றாமுலக நாடுகளில், மேற்குலகின் சொற் கேட்டு நடக்காத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், இயற்கை வளங்களை அபகரிப்பதற்கும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் உதவுகின்றது.

சுருக்கமாக சொன்னால், ஜெனீவாவில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதால், தமிழர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ஆனால், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான அந்நிய இராணுவ தலையீடு இடம்பெற்றால், அதனால் தமிழர் உட்பட இலங்கையின் அனைத்து மக்களும் பாதிக்கப் படுவார்கள்.

No comments: