Friday, July 04, 2014

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு


யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். 

யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக்கவில்லை. அதே நேரம், அவர்களுடன் கொள்கை உடன்பாடு கண்ட தமிழகத்து தமிழ் இன உணர்வாளர்கள், மலையாளிகளை பகைவர்களாக கருதுகிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படிக் களைவது என்ற பிரச்சினையை, நாங்கள் தமிழ் தேசியவாதிகளிடமே விட்டு விடுவோம்.

யாழ்ப்பாணத் தமிழரின் கேரளா உரிமை கோரல், முழுக்க முழுக்க கற்பனையானது என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும், தங்களை மலையாள வம்சாவளியினர் என்று அடையாள படுத்திக் கொள்ளும் குடும்பங்கள் இன்றைக்கும் வாழ்கின்றன. கொழும்பு, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மலையாள வம்சாவளியினர் சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

காலனிய காலத்தில், மலையாளிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையில், அரசு ஆவணங்களில் மலையாளிகள் என்று ஒரு இனம் தனியாக குறிப்பிடப் பட்டு வந்தது. பிற்காலத்தில் பல மலையாளிகள் தங்களை, சிங்களவர் என்றோ அல்லது, தமிழர் என்றோ, வாழும் இடத்தைப் பொறுத்து அடையாளப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தமது "தாய் மொழியையும்" பேச மறந்து விட்டார்கள்.

யாழ் குடாநாட்டில் வாழ்ந்த மலையாளிகள், டச்சு காலனிய காலத்தில் குடியேறியதாக சில வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். யாழ்ப்பாண, கேரளாவுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரமாக புகையிலை விவசாயம் உள்ளது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி வலிகாமம் என்று அழைக்கப் படுகின்றது. இருபாலை, கோப்பாய், அச்சுவேலி, மானிப்பாய், போன்ற வலிகாமப் பகுதி கிராமங்களில், இன்றைக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் புகையிலைத் தோட்டங்கள் தான் காணப்படும்.

வலிகாமம், யாழ் குடாநாடு முழுவதிலும் மக்கட்தொகை பெருக்கம் அதிகமாக உள்ள பிரதேசம் ஆகும். புகையிலை விவசாயம் காரணமாக பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. இலங்கை முழுவதும் வாழும் தமிழ் சமூகங்களில், செல்வந்தர்களின் விகிதாசாரம் வலிகாமம் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலும் புகையிலைச் செய்கையினால் கிடைத்த வருமானம் தான், பலரின் செல்வச் செழிப்புக்கு காரணம்.

ஐம்பதுகளில், இலங்கை முழுவதும் கூட்டுறவு உற்பத்தி முறை ஊக்குவிக்கப் பட்டது. அப்போது, யாழ் புகையிலை செய்கையாளர்கள் தமக்குள் கூடி சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். அதன் பெயர் "யாழ்ப்பாணம் - மலையாள புகையிலை விற்பனைச் சங்கம்" (ஆதாரம்: கூட்டுறவு இயக்கத்தின் 1959 ம் ஆண்டு நிர்வாக அறிக்கை. P. E. வீரமன்) அந்த சங்கத்தினர் பல தசாப்தங்களாக, கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். 

அனேகமாக, அறுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசு, ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் தான், யாழ்ப்பாண - கேரளா தொடர்பு அறுந்து விட்டிருக்க வேண்டும். ஆயினும், அந்தத் தடைகள் புகையிலை விவசாய உற்பத்தியை பாதிக்கவில்லை. யாழ் விவசாயிகள், தென்னிலங்கைக்கு புகையிலை ஏற்றுமதி செய்து பெருமளவு இலாபம் சம்பாதித்தார்கள்.

1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த தாராளவாத பொருளாதாரம், யாழ் குடாநாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளான புகையிலையின் உற்பத்தி வீழ்ச்சி அடைய வழிவகுத்தது. அதே காலகட்டத்தில் ஈழப்போரும் ஆரம்பித்ததால், தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. புகையிலை விவசாயிகளின் பிள்ளைகள், பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரவும், அந்த அரசியல் - பொருளாதார மாற்றங்கள் வழிவகுத்தன.

புகையிலை இலங்கை மண்ணுக்கு உரிய பயிர் அல்ல. அது ஐரோப்பிய காலனியாதிக்க காலத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. தேயிலை, கோப்பி, ரப்பர் போன்று ஐரோப்பியரால் கொண்டு வரப் பட்ட பிற பயிர்கள், பெருந்தோட்டங்களாக செய்யப் பட்ட அளவிற்கு புகையிலைச் செய்கை இருக்கவில்லை. இருப்பினும், யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில், ஏற்றுமதியை கருத்தில் கொண்டே புகையிலை பெருமளவில் பயிரிடப் பட்டு வந்தது. 

டச்சுக் காரர்கள் ஆட்சி செய்த காலத்தில், தென்னிந்திய வெள்ளாள சாதியை சேர்ந்த பெருமளவு விவசாயிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது குறித்து விரிவான ஆய்வு அவசியம். இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய காலத்தில், வரலாற்று ஆய்வுகள் திரிக்கப் படுவதற்கும், மறைக்கப் படுவதற்கும் இடமுண்டு. 

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

2 comments:

Unknown said...

நன்றி திரு .கலை செல்வன் அவர்களே...

யாழ்ப்பான தமிழர்கள் என்று கூறி கொள்வோர் மலையாளிகளாக தங்களை நினைத்து கொள்வதை உறுதி படுத்தும் விதமாக அமைந்தது தங்களின் அறிவார்ந்த கட்டுரை. இங்கு சென்னையிலும் வாழும் ஈழ தமிழர்கள் பலர் அவ்வாறாக தங்களை அடையாள படுத்தி கொள்வதை பல முறை நான் பார்த்திருக்கிறேன். இது தெரியாமல் இங்கிருக்கும் தமிழர்கள் சம்மந்தமே இல்லாமல் இவர்களின் போராட்டத்திற்காக தீ குளித்த மடத்தனத்தை என்னென்று சொல்ல... இது புரியாமல் இங்கிருக்கும் அப்பாவி தமிழர்கள் தேவை இல்லாமல் "மலையாள இன துவேஷத்திற்கு" ஆளாகி கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் கடைசி கட்ட போரில் இலங்கை தமிழர்களை கருவறுக்க உதவி செய்த சிவ சங்கர மேனன், நாராயணன் போன்றோரை வைத்து வழிபட சொல்லுங்கள்.

Kalaiyarasan said...

thayumanavan pillai,

நீங்கள் கூறும் அர்த்தத்தில் நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. உங்களது கருத்து ஒரு திரிபுபடுத்தல். யாழ்ப்பாண தமிழர்கள் எல்லோரும் மலையாளிகள் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. ஆனால், மலையாளிகளும் கலந்து இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஈழத் தமிழர்களும் ஒரு கலப்பினம் தான். இயக்கர், நாகர் போன்ற பூர்வீக மக்களுடன், இந்தியாவில் இருந்து குடியேறிய பல்வேறு இனங்கள் ஒன்று கலந்து உருவான இனங்கள் தான் சிங்களவர்களும், தமிழர்களும். சிங்களமும், தமிழும் இரண்டு மொழிகளை குறிக்கும் சொற்கள். அவை இரண்டு வேறு இனங்கள் அல்ல.