இன்று சிரியா, ஈராக்கில் ஒரு பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS அமைப்பில், மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களும் சேர்ந்திருக்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில், சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு குடியேறிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வறுமையில் வாழும் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் பெருகி வரும் குற்றங்களை குறைப்பது என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகத்தினரை பாகுபாடு காட்டி ஒதுக்கும், அரசு அடக்குமுறை பிரயோகிக்கப் படுகின்றது. போலிஸ் அடக்குமுறை காரணமாக, ஒரு பக்கம் குற்றச் செயல்கள் குறைந்த போதிலும், மறு பக்கம் கடும்போக்கு மதவாதம் அதிகரிக்கின்றது. ஜிகாத் போராளிகளின் சமூக- பொருளாதாரக் காரணிகளை இந்தக் கட்டுரை அலசுகின்றது.
நெதர்லாந்தில் டெல்ப்ட் (Delft) நகரத்தில் இருந்து மட்டும், சுமார் 14 இளைஞர்கள், குறிப்பாக மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் வீர மரணம் அடைந்து விட்டனர். எதற்காக டெல்ப்ட் நகரில் இருந்து இத்தனை பேர் ஜிகாத் போராளிகள் ஆனார்கள்? அதனை ஆராய்ந்து உண்மை அறிவதற்காக சென்ற டச்சு ஊடகவியலாளரின் ஆய்வுக் கட்டுரை:
*******
"நாங்கள் அங்கே ஓர் ஆசீர்வதிக்கப் பட்ட நாட்டில் இருந்தோம்"
(Andreas Kouwenhoven)
சொர்க்க வாசல் (Paradijspoort) என்ற பெயர் கொண்ட கடைவீதி டெல்ப்ட் நகரத்தில் பிரசித்தமானது. பல பெரிய வணிக நிறுவனங்கள் அங்கே கடை போட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்னர், அந்தத் தெருவில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டு திரிந்த காவாலிகளுக்கும் "சொர்க்க வாசல் பையன்கள்" என்ற பட்டப் பெயர் சூட்டப் பட்டிருந்தது. அவர்களில் பலர், பதினாறு வயது மதிக்கத் தக்க, மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கில்லிஸ்பியூர்ட் (Gillisbuurt) பகுதியில் வசிப்பவர்கள். கில்லிஸ்பியூர்ட், டெல்ப்ட் நகரில் மிகவும் பின்தங்கிய பகுதி.
அந்த விடலைப் பையன்கள், கடைத்தெருவில் பிரயோசனமான எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. அவர்கள் எந்த நேரமும் அங்கே தான் நின்று கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதுடன், தெருவில் போகும் இளம் பெண்களை சீண்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்கூட்டர்களில் முறுக்கி சத்தம் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். சொர்க்கவாசல் பையன்களில் நான்கு பேர் இப்போது உயிரோடு இல்லை. சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டு விட்டனர். AIVD (நெதர்லாந்து புலனாய்வுத் துறை) அந்தத் தகவலை அறியத் தந்துள்ளது.
கில்லிஸ்பியூர்ட் பகுதி, "டெல்ப்ட் நகரின் காசா பிரதேசம்" என்று அழைக்கப் படுகின்றது. அங்கு வசிப்பவர்களில், ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லை. பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்துபவர்கள் அங்கே அதிகம். அந்த இடத்தில் தான் அதிகளவு குற்றங்கள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூட, பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். ஐம்பது பேரளவிலான இளைஞர் குழுக்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. தெருப் பொறுக்கிகளில் பலர் முதலில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலர் திடீரென மனம் திருந்தி, சிரியாவுக்கு போராடச் சென்றார்கள். கில்லிஸ்பியூர்ட் எந்த இடத்தில் தவறிழைத்தது?
சில வருடங்களுக்கு முன்னர், கலாச்சாரம் பேணும் இளைஞர் மன்றங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எல்லா இளைஞர்களும் அங்கே சமூகம் அளித்தார்கள். மொரோக்கர்கள் மட்டுமல்ல, சுரினாமியர்கள், துருக்கியர்கள், சோமாலியர்கள், இவர்களுடன் டச்சு இளைஞர்களும் அங்கே ஒன்று கூடுவார்கள். பெரும்பாலும் 12 வயது தொடக்கம் 30 வயது வரையிலான இளைஞர்கள். எல்லோரும் ஒன்றாக கால்பந்து விளையாடுவார்கள். ஒன்றாக உணவருந்துவார்கள், வீடியோ கேம் விளையாடுவார்கள்.
அந்த இளைஞர்கள் எல்லோரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது கஷ்டமானது. ஆனால், பொருளாதார பிரச்சினையை காரணமாகக் காட்டி, அரசாங்கம் சமூக சேவைகளுக்கான கொடுப்பனவுகளை குறைத்து விட்டது. அதனால், பல சமூக சேவையாளர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. விளைவு? ஒரு பகுதி இளைஞர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டனர்.
"மகிழ்ச்சியான தருணங்கள்" என்று, அந்தக் கால நினைவுகளை இரைமீட்கும் 25 வயது மொரோக்கோ இளைஞர் ஒருவர், தனது நண்பர்கள் மக்களுக்கு தொந்தரவு செய்ததை ஒத்துக் கொள்கிறார். பருவ வயது இளைஞர்கள், 16 அல்லது 17 வயதை அடையும் காலத்தில், நிஜ உலகை தரிசிக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து தான் எல்லாத் தவறுகளும் ஆரம்பமாகின.
அந்த வயதில் எல்லோரும் பாடசாலைக் கல்வியை முடித்து விட்டிருப்பார்கள். எங்காவது சென்று தொழில் பயிற்சி பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள். அப்போது தான், "நாங்கள் வேறு விதமானவர்கள்" என்ற உண்மை அவர்களுக்கு உறைக்கும். களியாட்ட விடுதிகளில் அனுமதி மறுக்கப்படும். பகுதி நேர வேலை கூட கிடைக்காது. "பெண்கள் முக்காடு போடக் கூடாது" என்று அறிவுரை கூறுபவர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவை எல்லாம் எங்களது ஆத்திரத்தை தூண்டி விடும்.
"அந்த இளைஞர்கள், சமூகத்தில் இருந்து அந்நியப் படுத்தப் பட்டு வாழ்கின்றனர்." சிரியா போராளிக் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கும் நகரசபை உறுப்பினர் அப்துல் மனாயுய் கூறுகின்றார். அவரைப் பொருத்தவரையில், பல இளைஞர்கள் தாங்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் படுவதாக உணர்கின்றனர். அவர்களின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓர் ஆதாரத்தைக் காட்டுகின்றார். பெரும்பான்மையாக (வேலை வாய்ப்பற்ற) வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் பூர்வீக டச்சுக் காரர்கள்.
சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு ஆரம்பத்தில் மதத்தின் மேல் பற்று எதுவும் இருக்கவில்லை. கொஞ்சம் வயதான சுக்ரி மட்டும் விதிவிலக்கு. அஸ்ஸுன்னா மசூதியில் நடக்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று வந்தான். கில்லிஸ்பியூர்ட் பகுதியில் சமுதாயத்தை நிராகரிக்கும் போக்கு வளர்ந்து வருகின்றது. "இந்த நாடு நாசமாகப் போக... இது எனது வீடல்ல..." என்று ராப் பாடல் இசைக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர், இளைஞர்கள் கூடிக் கும்மாளம் அடித்த இடம் பறிபோனது. 2008 ம் ஆண்டு, அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக, நகரசபை அந்த இடத்தை கூறு போட்டது. அதனால், இளைஞர்களின் அட்டகாசம் அந்தப் பிரதேசம் எங்கும் பரவியது. புதுவருடக் கொண்டாடத்தின் போது, அங்கிருந்த வயோதிபர் மடத்தின் ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டன. ஒரு குழு பொலிஸ்காரர்களுடன் மோதியது. அவர்களை நோக்கியும் கற்கள் பறந்தன. இறுதியில், மிலிட்டரி பொலிஸ் வந்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஒரு வருடத்திற்குப் பிறகு, பத்துக்கும் குறையாத இளைஞர்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதாக நகரசபைக்கு தகவல்கள் கிடைத்தன. போதைவஸ்து வியாபாரம் சூடு பிடித்திருந்தது. அதே நேரம், பொலிஸ் அடக்குமுறைகளும் அதிகரித்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும், அளவுக்கு மிஞ்சிய தண்டப்பணம் அறவிட்டு தண்டித்தார்கள். அடிக்கடி அடையாள அட்டை கேட்டு சோதனை செய்தார்கள்.
அந்த நடவடிக்கைகள் எல்லாம், இளைஞர்களின் கோபாவேசத்தை கூட்டியது. "பொலிஸ் எங்கள் எதிரி" ஓர் இளைஞன் சொன்னான். "அவர்கள் எங்களை ---- மொரோக்கர்கள் என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் இனவெறியர்கள் தான். எங்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடும் பொழுது அவர்களுக்கு போதை ஏறுகின்றது." பொது இடத்தில் சத்தம் போட்டது, கூட்டம் கூடியது, அடையாள அட்டை வைத்திருக்காதது, இப்படியான அற்பக் காரணங்களுக்காக எல்லாம், தண்டப் பணம் செலுத்த வேண்டி இருப்பதாக, இன்னொரு இளைஞன் கூறினான்.
சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்கள் சிலரும், அற்பத்தனமான அத்துமீறல்களுக்காக பொலிசிற்கு தண்டம் கட்டியிருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தினால் அவமதிக்கப் பட்டவர்கள், சிரியாவில் போராடுவதன் மூலம் தமது இழந்த கௌரவத்தை மீட்டுக் கொள்கிறார்கள். சிரியா யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக, உள்ளூர் பள்ளிவாசலில் இறுதிச் சடங்குகள் நடந்த பொழுது, ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.
"இந்த நாட்டில் செத்தால் எங்களை கிரிமினல்கள் என்று தூற்றுவார்கள், ஆனால் சிரியாவில் செத்தால் எங்களை போராளிகள் என்று மதிப்பார்கள்..." என்று சில இளைஞர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். பல இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதை நிறுத்தி விட்டு, தாடி வளர்க்கத் தொடங்கினார்கள். பலர் சுக்ரியை தமது ஆதர்ச நாயகனாக பின்பற்றத் தொடங்கினார்கள். தந்தையின் திடீர் மரணத்தினால் பாதிக்கப் பட்டிருந்த சுக்ரி, மத மார்க்கத் தேடுதலில் மனதை திசை திருப்பி இருந்தான்.
சுக்ரியின் பாதையை பின்பற்றிய சில இளைஞர்கள், ஒழுங்காக மசூதிக்கு சென்று வந்தனர். ஆனால், கடும்போக்கு மதவாதக் கருத்துக்களை நிராகரித்த பள்ளிவாசல் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி விட்டது. அதற்குப் பின்னர், டெல்ப் நகரில் உள்ள துருக்கி பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அங்கேயும் அதே பிரச்சினை. ஆனால், இம்முறை பள்ளிவாசல் நிர்வாகம் அந்த இளைஞர்கள் பற்றிய தகவலை பொலிசுக்கு அறிவித்தது. பொலிஸ் அந்த விபரங்களை நகரசபைக்கு அறிவித்தது. இது நடந்தது 2012 ம் ஆண்டு.
அந்த தகவல்களின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? "ஒன்றுமேயில்லை!" நகர சபை அதிகாரி ஒருவர் பதிலளிக்கும் பொழுது: "நாங்கள் அப்போது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. அந்த இளைஞர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதே எமது பிரதான நோக்கமாக இருந்துள்ளது. மதத் தீவிரவாதிகளாவதை நாங்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை." அன்று தாங்கள் தப்பெண்ணம் கொண்டிருந்ததை அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார்.
(நன்றி : NRC WEEKEND, zaterdag 5 juli & zondag 6 juli 2014)
2 comments:
மிக சிறப்பான கட்டுரை. இந்த சமயத்தில் இது போன்ற கட்டுரைகள் தான் இந்த சமூகத்திற்குத் தேவை. நன்றி கலையரசன்.
இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் அர்த்தமற்ற வன்முறைக்கு மேற்குலகை குற்றம் சொல்லும் வழக்கமான இன்னொரு பதிவு. கலையரசன் இன்னும் பல கட்டுரைகள் இதுபோல எழுத வாழ்த்துக்கள்.
Post a Comment