Wednesday, July 16, 2014

தமிழினப் படுகொலைக்கு கவலை தெரிவித்து ஓர் இஸ்ரேலியன் கூட அழவில்லை

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், நான் நெதர்லாந்து வந்த புதிதில், ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்தியில் உள்ள தங்கு விடுதி (Hotel) ஒன்றில் சில மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஓர் இஸ்ரேலிய யூதர். பணியாட்களில் பல தமிழர்களும் இருந்தனர். இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தான், பெரும்பாலும் அந்த ஹோட்டலில் தங்குவார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளும் சாதாரணமான அப்பாவி மக்கள் தான். தங்களுடைய நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மாதிரி, உலகில் வேறெந்த நாட்டிலாவது நடக்கிறதா என்று கேட்குமளவிற்கு அப்பாவிகள். அவர்களுக்கு பாலஸ்தீனர்களின் பிரச்சினை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. பலர் பாலஸ்தீனர்களை தமது வாழ்நாளில் கண்டிருக்கவில்லை. இஸ்ரேலிய அரசு வழங்கும் ஒரு பக்கச் சார்பான தகவல்களை உண்மை என்று நம்புகிறவர்கள். தங்களது பக்க இழப்புகளை பற்றி மட்டுமே மிகைப் படுத்தி பேசத் தெரிந்தவர்கள்.

இஸ்ரேலியர்கள் எங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். எங்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் ஹிந்தி (மட்டும்) பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இஸ்ரேலில் சில நேரம் ஹிந்தி திரைப் படங்கள் திரையிடுவார்களாம்.) ஆனால், உலகில் தமிழ் என்ற மொழி இருப்பதே அவர்களுக்கு தெரியாது. ஸ்ரீலங்கா என்றால், அது எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. உலகில் அப்படி ஒரு நாடு இருப்பதையே அப்போது தான் கேள்விப் பட்டிருப்பார்கள். உலக வரை படத்தில் இலங்கையை தொட்டுக் காட்டினால்; "ஒ அதுவா! இவ்வளவு காலமும் அது இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...." என்று சொல்வார்கள்.

அந்தளவு விடய ஞானம் கொண்ட அப்பாவி இஸ்ரேலிய யூதர்களிடம்: 
"முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 
- "எங்களுக்காக குரல் கொடுத்தீர்களா?" 
- "தமிழினப் படுகொலையை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தீர்களா?" 
-  "ஐ.நா. வில் கதைத்தீர்களா?" 
இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால், எம்மைப் போன்ற முட்டாள்கள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் பல தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர், குறிப்பாக வலதுசாரி குறுந் தேசியவாதிகள், அவ்வாறு தான் மடத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள் என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

"ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட நேரத்தில், பாலஸ்தீனர்கள் எதுவும் செய்யவில்லை" என்று கூச்சலிடுபவர்கள், எத்தனை வருட காலம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு எத்தனை பாலஸ்தீனர்களை தெரியும்? பாலஸ்தீனர்கள் அப்படிச் செய்யவில்லை, இப்படிச் செய்யவில்லை என்று எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு கதைக்கிறார்கள்?

பாலஸ்தீனர்களை குறை கூறும் பெரும்பாலானோரின் மனதில் மறைந்திருப்பது, இந்து அல்லது கிறிஸ்தவ மதவெறியும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்மமும் தான். பாலஸ்தீனம், மட்டுமல்ல காஷ்மீரில் கொல்லப் படும் மக்களும் அவர்கள் கண்களுக்கு முஸ்லிம்களாக மட்டும் தான் தெரிகின்றனர். "முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தான் நாங்கள் இப்படி மாறினோம்" என்று சொல்வது ஒரு மிகப் பெரிய பொய். அது வெறும் நொண்டிச் சாட்டு மட்டுமே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும், அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னரும், பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப் படும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தகவல்களுக்கு, தொலைக்காட்சி செய்திகளில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்று ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பலர், அப்போதும் பாலஸ்தீனர்களுக்காக கவலைப் படவில்லை.

ஒவ்வொரு தடவையும் இஸ்ரேலில் நடக்கும் யுத்தம் காரணமாக பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டால், அதன் எதிரொலியாக ஐரோப்பிய நகரங்களில் இடதுசாரி அமைப்புகள் ஒழுங்கு படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வருமாறு, எத்தனையோ தடவைகள், எனக்குத் தெரிந்த (ஈழத்) தமிழ் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். இடதுசாரி சார்புள்ள ஒன்றிரண்டு தமிழர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லி வர மறுப்பார்கள். சிலர் தங்களுக்கு பிற நாட்டு பிரச்சினைகளில் ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூறுவார்கள்.

தமிழர்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்ல முடியாது. அனேகமாக, வேற்றின மக்களும் அப்படித் தான். பாலஸ்தீனம் அல்லது ஈராக் போர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு அரபு- முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேட்டோ படைகள் செர்பியா மீது குண்டு போட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. செர்பியா மீதான குண்டுவீச்சுக்கு எதிராக பெருமளவில் வந்த செர்பியர்கள், பாலஸ்தீன ஆர்ப்பாட்டத்திற்கு வர மாட்டார்கள்.

அதே மாதிரித் தான், குர்திஷ் பிரச்சினைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் குர்திஷ் மக்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். இலங்கையில் நடந்த போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். இவ்வாறு தான், எல்லா தேசிய இனங்களும், தத்தமது தேசிய கிணறுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பல நாடுகளை சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மட்டுமே, எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். ஈராக், ஈழம், குர்திஸ்தான், பாலஸ்தீனம் என்று எங்கெல்லாம் ஒடுக்கப் படும் மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் இடதுசாரி ஆர்வலர்களை நீங்கள் காணலாம். ஐரோப்பிய இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க இடதுசாரிகளும் பாரபட்சமின்றி எல்லா ஊர்வலங்களிலும் கலந்து கொள்வார்கள். 

தமிழர்களான நாங்கள், உலகில் எந்த இனம் படுகொலை செய்யப் பட்டாலும் அதற்காக கவலைப் பட மாட்டோம். ஆனால், உலகம் முழுவதும் எங்களுக்காக அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையான அரசியல் தார்மீகம் என்பது தெரியவில்லை. தமிழர்கள் இது வரை காலமும் அமெரிக்காவை நம்பி ஏமாந்தார்கள். இனிமேலாவது சர்வதேச மட்டத்தில் தமது நட்புச் சக்திகள் யார் என்பதைக் கண்டுணர வேண்டும்.

No comments: