Wednesday, July 02, 2014

அரபு - கிறிஸ்தவ இனச் சுத்திகரிப்பு : மேற்குலக "கிறிஸ்தவ" நாடுகள் பாராமுகம்


ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில், அரபி மொழி பேசும் கிறிஸ்தவர்கள், இனப்படுகொலை அல்லது இனச் சுத்திகரிப்பு செய்யப் படுகின்றனர். ஆனால், அமெரிக்கா உட்பட எந்தவொரு மேலைத்தேய கிறிஸ்தவ நாடும், அது குறித்து அக்கறையற்று இருக்கின்றன. அரபு நாடுகளில் இருந்து, "கிறிஸ்தவர்களை ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான சர்வதேச சதி வலை" பின்னப் பட்டுள்ளதாக, குறிப்பாக ஈராக் கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர்.

ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், ஒவ்வொரு பிரஜையும் சர்வாதிகாரிக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பது மட்டுமே முக்கியமாக கருதப் பட்டது. அதனால் கிறிஸ்தவ சிறுபான்மையினர் எந்த தொந்தரவும் இன்றி வாழ அனுமதிக்கப் பட்டனர். 2003 ம் ஆண்டு, அமெரிக்கப் படையெடுப்புடன் நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்கா ஒரு "கிறிஸ்தவ நாடு" என்பதால், ஈராக் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கும் என்று யாராவது அப்பாவித்தனமாக நம்பினால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.

ஈராக் அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த காலத்தில், ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அந்த சமூகம் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில், திட்டமிட்ட வகையில் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டார்கள். உலகில் கிறிஸ்தவ மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலைத்து நின்ற, ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயங்கள், குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. கிறிஸ்தவ பாதிரியார்கள் கொலை செய்யப் பட்டனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்கும் பொழுது, அமெரிக்க "கிறிஸ்தவப்" படைகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை. கையைக் கட்டிக் கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் ஒன்றரை மில்லியன் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று வெறும் மூன்று இலட்சம் கிறிஸ்தவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். ஈராக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் புராதன கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த அசிரிய கிறிஸ்தவர்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக, தொடர்ச்சியான வாழிடத்தை கொண்டவர்கள். இன்றைய ஈராக், சிரியாவில் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அசிரிய இனத்தவர்களின் வழித்தோன்றல்கள் என்று, ஈராக்கிய கிறிஸ்தவர்கள் தம்மை அழைத்துக் கொள்கின்றனர்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னரே, ஈராக் ஒரு கிறிஸ்தவ நாடாக இருந்தது. இறைதூதர் முகமது காலத்தில் நடந்த அரேபியப் படையெடுப்புகளின் பின்னரும், கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வரியை செலுத்தி விட்டு, அமைதியாக தங்கள் வேலையை பார்க்க முடிந்தது. அனேகமாக, அன்று ஈராக்கில் வாழ்ந்த பெரும்பான்மை கிரேக்க கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.  ஆனால், அசிரிய கிறிஸ்தவர்கள் தமது தனித் தன்மையை தொடர்ச்சியாக பேணி வருவதாக, இன்றைக்கும் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். 

சதாம் ஹுசைன், அவருக்கு முந்திய இராணுவ சர்வாதிகாரிகள் ஆண்ட காலகட்டத்தில், பாத் கட்சியின் அரபு தேசியவாத சித்தாந்தம் கோலோச்சியது. ஆகையினால், முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களும் ஒரே அரேபிய தேசிய இனத்தை சேர்ந்தவர்களாக கருதப் பட்டனர். பல கிறிஸ்தவர்கள், சதாம் அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் அளவிற்கு சுதந்திரம் கிடைத்திருந்தது.

அமெரிக்கர்கள் ஈராக்கில் "ஜனநாயகத்தை கொண்டு வந்து நிலைநாட்டிய பின்னர் தான்", முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இன, மத முரண்பாடுகள் கூர்மை அடைந்தன. இன்றைய ஈராக்கில் பெயரளவில் மட்டுமே ஒரு ஜனநாயக அரசு இருக்கிறது. ஆனால், ஜனநாயகம் வந்த பின்னர் தான், முஸ்லிம்-கிறிஸ்தவ பகை முரண்பாடுகள் தீவிரமடைந்தன. முஸ்லிம்களுக்கு இடையிலும் சுன்னி - ஷியா பகை முரண்பாடு சமூகத்தை பிளவு படுத்தியுள்ளது. 

மதத்தின் பெயரில், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப் பட்டனர். அதை விட, ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்திய இடங்களில், பிரதேசவாதம் தலை தூக்கியுள்ளது. நிலப்பிரபுக்கள் தமக்கு விசுவாசமான கூலிப் படைகளை வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்தனர். இவை எல்லாம் அமெரிக்கா கொண்டு வந்த ஜனநாயகத்தின் தீய விளைவுகள். அமெரிக்க ஜனநாயகம், சாதாரண ஈராக் மக்களுக்கு எந்த விதமான நன்மையையும் கொண்டு வரவில்லை. 

ஈராக் போர் தொடங்கிய நாள் முதல், அங்கு வாழும் குர்து இனத்தவரை பாதுகாப்பதற்கு முன்வந்த அமெரிக்கா, எதற்காக கிறிஸ்தவ சமூகத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தது? ஒவ்வொரு ஈராக்கிய கிறிஸ்தவரும் அன்றாடம் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இது ஒரு சர்வதேச சதியாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மத்திய கிழக்கு அரபு நாடுகள் முன்னொரு காலத்தில் கிறிஸ்தவ நாடுகளாக இருந்த உண்மை வெளியுலகில் பலருக்குத் தெரியாது. இன்றைக்கும் அரபு நாடுகளில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவது குறித்தும் அறியாமல் இருக்கின்றனர். மேலைத்தேய "கிறிஸ்தவ" நாடுகளில் வாழும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கே அந்த அறிவு கிடையாது என்றால், உலகின் பிற பாகங்களில் வாழும் மக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ஈராக்கில், சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போர்களில் கிறிஸ்தவர்கள் குறி வைத்து தாக்கப் படுவதும், படுகொலை செய்யப் படுவதும் அதிகரித்து வருகின்றது. இதனால், உயிரச்சம் காரணமாக எஞ்சிய கிறிஸ்தவர்களும் அகதியாக வெளியேறி வருகின்றனர். உண்மையில் அதுவொரு திட்டமிட்ட இனப் படுகொலை அல்லது இனச் சுத்திகரிப்பு. இது குறித்து மேற்குலகம் பாராமுகமாக இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்க வேண்டும்.

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டால், அங்கு ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள் என்ற சுவடுகள் அழிக்கப் பட்டு விடும். பின்னர் அவை, சவூதி அரேபியா போன்று நூறு சதவீத முஸ்லிம் நாடுகளாக மாறி விடும். அதைத் தான், மேற்கத்திய நாடுகளும் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால், அப்போது தான் கிறிஸ்தவ மதத்தின் பூர்வீகம் ஐரோப்பா என்று உரிமை கோரலாம். இன்றைக்கும் பலர் அப்படித் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: