Friday, September 11, 2009

9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

"ஜனநாயகம் என்பது எதுவரை ? நமது எதிரிகள் ஆட்சிக்கு வரும்வரை. " - இக்கூற்று தென்னமெரிக்க நாடான சிலியில் மிக்க கொடூரமாக நிரூபிக்கப்பட்டது. மற்றைய தென்னமெரிக்க நாடுகளுக்கு முன்னமே பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வந்த நாடு சிலி. அங்கே எப்போதுமே பாராளுமன்ற ஆட்சிக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. ஆனால், 1973 ல், இந்த சமாதானப் பூங்கா யுத்தக்காடாகியது. எதிர்கட்சியான (சோஷலிஸ) சமூக ஜனநாயகக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுதான் இதற்கான காரணம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. பல தனியார் நிறுவனங்கள் தேசியமயப்படுத்தப்பட்டன. நில உச்சவரம்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. இதனைத் தொழிலதிபர்களும், பெரு நிலவுடைமையாளரும் அவர்களின் பாதுகாவலனான அமெரிக்க அரசும் பார்த்துக் கொண்டு சும்மாவிருப்பார்களா? வந்தது விபரீதம் இராணுவ வடிவில்.

அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ சில இராணுவ ஜெனரல்களை லஞ்சம் கொடுத்துக் கைக்குள் போட்டுக்கொண்டது. ஜெனரல் பினோஷே தலைமையில் இராணுவத்தின் ஒரு பிரிவு திடீரென பாராளுமன்றத்தையும், ஜனாதிபதி மாளிகையையும் தாக்கியது. 11 செப்டம்பர் 1973 ல் விமானக் குண்டுவீச்சில் ஜனாதிபதி அய்யெண்டே தியாக மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து தன்னைப் புதிய ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்த பினோஷேயின் காட்டாட்சி ஆரம்பமாகியது. இராணுவமே ஆடசியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்கத் தொழிலதிபர்கள், நிலவுடைமையாளர்கள் உட்பட கத்தோலிக்கத் திருச்சபை கூட இராணுவ ஆட்சிக்கு நல்லாசிகள் வழங்கினர்.

இராணுவ ஆட்சியன் கீழ், அனைத்துப் பொருளாதார சீர்திருத்ஙகளும் ரத்துச் செய்யப்பட்டு முன்பு இருந்த நிலைக்கு வந்தது. சோஸலிச-கம்யூனிச கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இவ்வாறு பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொகை 20,000 க்கு மேலாகும். படைகளின் கைகளில் அகப்படாமல் தப்பியோடியவர்கள் உலகின் பல நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு சிலியில் இராணுவச் சர்வாதிகாரம் நிலைத்து நின்றது.

பத்து வருடங்களுக்கு முன்பு வயதான, நோய்வாய்ப்பட்ட ஜெனரல் பினோஷே வைத்தியம் பார்க்க இங்கிலாந்து வந்த போது பழைய ரணங்கள் கிளறப்பட்டன. சிலி இராணுவத்தினரால் சில ஸ்பானியப் பிரஜைகள் கொல்லப்பட்டதால் ஸ்பெயின் பினோஷேயை விசாரிக்க விரும்பியது. பினோஷேயை ஒப்படைக்கும்படி ஸ்பானிய நீதிபதி விடுத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து செவிசாய்க்க மறுத்தது. இது போதாதென்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் தட்சர் இருபதாயிரம் பேரைக்கொன்ற சர்வாதிகாரியை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார். இறுதியில், பினோஷே பாதுகாப்பாக சிலிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்படி நடந்து கொண்ட அதே இங்கிலாந்து அரசுதான் நீதிகாக்க மீலோசவிச்சையும், சதாம் ஹுசைனையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கப் பாடுபட்டது.

இப்போது சிலியில் பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப்பட்டுவிட்டது. கடந்த தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றிபெற்றது. ஆனாலும் நாட்டின் பொருளாதாரம் பினோஷே வகுத்த பாதையில்தான் போய்க்கொண்டிருக்கின்றது. காணாமல் போனவர்களைப்பற்றிய விசாரணை எதுவுமில்லை அல்லது பயன் தரவில்லை. படுகொலைகளில் சம்பந்தப்பட்ட எந்தக்குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை. தலைமைக்குற்றவாளி பினோஷே சட்டங்களுக்கு அப்பாற்பட்ட மனிதனாக ஓய்வெடுக்கிறான். இவற்றையெல்லாம் காணாமற் போனோரின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பார்த்துக்கொண்டு வாய்மூடி மொனியாக இருக்கத் தயாரில்லை. 11 செப்டம்பர் 2002 ல் கொதித்தெழுந்தனர். 1973 ன் ஜனநாயகப் படுகொலையை நினைவு கூர்ந்தனர். வழமைக்கு மாறாக, தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் பொலிசாருடனான மோதலில் போய்முடிந்தது. அமெரிக்க வர்த்தக ஸ்தாபனங்கள் தாக்கப்பட்டன. இருப்பினும், சிறு கைதுகளுடன் கலவரம் அடக்கப்பட்டது. சர்வதேசச் செய்தி நிறுவனமெதுவும் நடந்ததை உலகிற்குச் சொல்லாமல் செய்தியை இருட்டடிப்புச் செய்தன. அவர்களின் கவனமெல்லாம் அமெரிக்காவில் நடந்த "செப்டம்பர் 11" ஓராண்டு நினைவுகூரலைப் பற்றிய விவரணம் செய்வதிலேயே இருந்தது. அமெரிக்காவின் செப்டம்பர் 11 ஐப்பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும், ஆனால், சிலியின் செப்டம்பர் 11 பற்றி யாருக்கும் தெரியத்தேவையில்லை.

தென்னமெரிக்கக் கணடத்தில், மேலும் பல நாடுகளுக்கும் "ஜனநாயகத்தின் எல்லைகள்" பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது. பிறேசிலிலும், பொலிவியாவிலும் அண்மையில் நடந்த தேரதல்களில் சோஸலிசக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டதுமே, அதனை எப்படியேனும் தடுத்து நிறுத்தும்படியும் அல்லாவிட்டால் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறும், வெளிநாட்டு கடன்கள் நிறுத்தப்படும் என்றெல்லாம் மிரட்டப்பட்டது. வெனிசுலாவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஏழை மக்களின் நாயகன் சாவேசை பதவியில் இருந்து அகற்ற நடந்த சதிப்புரட்சி தோல்வியில் முடிந்தது. இதிலும் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளூர் வர்த்கப் பெரும்புள்ளிகளும் சி.ஐ.ஏ ம்தான்.

இவையெல்லாவற்றையும் விட உண்மையான மூன்றாம் உலகப்போர் கொலம்பியாவில் தீவிரமடைந்துள்ளது. கொலம்பியாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சியெதுவும் கிடையாது. ஒழுங்காக தேர்தல் நடக்கும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நாட்டுப்புறங்களில் பலமாகவிருக்கும் ஃபார்க் என்றழைக்கப்படும் கம்யூனிசக் கிளர்ச்சியாலரை அடக்குவதற்காக ஏவிவிடப்பட்ட அரச இராணுவமும், தனியார் இராணுவமும் (துணைப்படைகள்) செய்யும் கொலைகள் உலக சாதனை படைத்துள்ளன. ஒரு வருடத்திற்கு சராசரி 30000 பேர் இறக்கின்றனர். மிக மோசமான மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அப்படியிருந்தும் "போதைவஸ்து எதிர்ப்பு நடவடிக்கை" என்ற போர்வையில் அமெரிக்க இராணுவ உதவி வழங்கப்படுகின்றது. தேவையேற்படின், வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியும் பெறப்படுகின்றது.

30 வருடங்களாக நடந்துவரும் போர் தற்போது தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஃபார்க் கொரில்லாக்களும் தமது யுத்த தந்திரங்களை மாற்றி வருகின்றனர். கொலம்பியாவின் எல்லையில் உள்ள அயல் நாடுகளில் ஃபார்க் கொரில்லாக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அந்நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஒரு யுத்தம் நீண்ட காலம் தொரடர்கிறதென்றால் அதன் அர்த்தம் அரச படைகள் தோற்கிறார்கள், கொரில்லாககள் வெல்கிறார்கள்" என்ற மாவோவின் கூற்றை நிரூபிப்பதாகவுள்ளது கொலம்பியாவின் 30 வருட உள்நாட்டுயுத்தம். "நிலைமை இப்படியே போனால் இன்னும் ஃபார்க் கொரில்லாக்கள் கொலம்பியா முழுவதையும் பிடித்து விடுவார்கள்" என அறிவித்தது அமெரிக்க செனட்சபை. இவ்வாறு நடைபெறாது தடுக்கும் வகையில், கொலம்பிய இராணுவத்தை நவீனமயப்படுத்த அமெரிக்கா கோடிகோடியாக நிதியுதவி வழங்குகின்றது.

கொரில்லாப் போராட்டத்திற்கெதிரான யுத்த தந்திரமென்பது வேறொன்றுமல்ல. அதே கொரில்லாப் போர் உத்திகளை அரசபடைகள் பயன்படுத்துவதுதான். 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெருவில் அரசை நிலைகுலைய வைத்த "ஒளிரும் பாதை" இயக்கக் கொரில்லாக்களை மக்கள் எனும் கடலிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்ட மீன்களாக்கி அழித்தமை இதற்கு ஒரு உதாரணம். முக்கிய தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுவிட்டாலும், "ஒளிரும் பாதை" இயக்கத்தினர் இப்போது காடுகளுக்குள் மீள அணிசேருவதாக சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இயக்கத்தின் பெயர்கூட அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

"கொரில்லாப் போராட்ட காலம் மலையேறிவிட்டது, இனிப் பாராளுமன்றத்தில் போராடுவோம் வாருங்கள்" என்று அறைகூவல் விடுத்தார் உருகுவே நாட்டு ஜனாதிபதி. ஆனால், ஆர்ஜன்ரீனாவில் நடந்த பொருளாதாரச் சரிவு, அதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் என்பன பாராளுமன்றப் போராட்டத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டன. இந்தக் குழப்பம் இப்போது தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவி வருகின்றது.

4 comments:

மு. மயூரன் said...

தகவல்களுக்கு நன்றி கலையரசன்.

அலந்தேயின் இறுதிப்பேச்சும் அதன் ஒலிவடிவமும் எனது பதிவில் முன்னர் இட்டிருக்கிறேன். பார்க்க:

9-11 பயங்கரவாதத்தையிட்டு ஒன்றும் பேசாமலிருப்பவர்களுக்கு

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி கலையரசன்..

சிங்கக்குட்டி said...

நல்ல தகவலுக்கு நன்றி கலை :-)

MOHAMED AMEER said...

பகிர்விற்கு நன்றி கலையரசன்..