Showing posts with label தடுப்பு முகாம். Show all posts
Showing posts with label தடுப்பு முகாம். Show all posts

Wednesday, November 16, 2011

இத்தாலி தடுப்பு முகாம்களில், இத்தனை கொடுமைகள்

இத்தாலியில் தஞ்சம் கோரும் அகதிகள், பல இடங்களில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஊடகங்களை சேர்ந்தவர்கள் இந்த தடுப்பு முகாம்களை பார்வையிடுவதை, அரசு சட்டம் போட்டு தடுத்துள்ளது. இருப்பினும், தற்செயலாக Repubblica.it ஊடகவியலாளர் ஒருவர், நகரசபையிடம் அனுமதி பெற்று சென்றுள்ளார். தென் இத்தாலியில் Basilicata பிராந்தியத்தில் உள்ள Palazzo எனும் கிராமத்தில் இந்த முகாம் அமைந்துள்ளது. "இத்தாலியின் குவாந்தனமோ சிறை முகாம்" என்று அது அழைக்கப் படுகின்றது. அங்கே அந்த ஊடகவியலாளர் கண்ட காட்சிகள், அதிர்ச்சியில் உறைய வைத்தன. "நாகரீகமடைந்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில்", காவல் துறை இந்தளவு மிருகத் தனமாக நடந்து கொள்ளும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. சுமார் தொண்ணூறு துனிசியா அகதிகள், கோழிகளை போன்று கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தப் பட்டனர். கைதிகள் போன்று சிறை வைக்கப் பட்டிருப்பவர்கள், இத்தாலியில் அகதித் தஞ்சம் கோரியதை தவிர வேறெந்த குற்றமும் செய்யவில்லை. தடுப்பு முகாம் கொடுமைகளை காட்டும் இந்த வீடியோ, இத்தாலியின் தேசிய தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இத்தாலியில் இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதை எண்ணி மக்கள் வருத்தப் பட்டனர். பாராளுமன்றத்திலும், இந்தப் பிரச்சினை விவாதிக்கப் பட்டது.

"இத்தாலியின் குவாந்தனமோ" சிறைக் கொடுமைகளை காட்டும் வீடியோ:

இதற்கிடையே, செப்டம்பர் 20 ம் தேதி, பெருமளவு அகதிகளை தடுத்து வைத்துள்ள Lampadusa தீவு போர்க்களமாக காட்சியளித்தது. பொலிஸ், மாபியா, உள்ளூர் மக்களுடன் சேர்ந்து, இரகசியமாக அகதிகளை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இதனால், கலவரமடைந்த துனீசியா அகதிகள் முகாமுக்குள் கலகம் செய்தனர். படுக்கைக்கு விரிக்கும் போர்வைகளில் அரசியல் சுலோகங்களை எழுதி மதில் சுவரில் மாட்டினார்கள். "Freedom Libertà", "Sorry Lampedusa" போன்ற வாசகங்கள் அவற்றில் காணப்பட்டன. ஆனால், இந்தக் குரல்கள் அந்தத் தீவில் யார் காதிலும் ஒலிக்கவில்லை. கலகம் குறித்து கேள்விப்பட்டு வந்த பத்திரிகை நிருபர்களை, பொலிஸ் தடுத்து நிறுத்தியது. தீவில் வசிக்கும் இத்தாலியர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் அகதிகளை சுற்றி வளைத்து கல் வீசித் தாக்கினார்கள். தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய அகதிகள், மூன்று மீட்டர் உயரமான முள்வேலியில் தாவிக் குதிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.



இத்தாலியில் மனித உரிமை மீறல்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.இத்தாலி தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்
2.கறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒதுக்கல்
3.இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது

Saturday, July 03, 2010

பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபரின் "தடுப்பு முகாம் நிறுவனம்"


தடுப்பு முகாம்களை லாபம் கொழிக்கும் வர்த்தக ஸ்தாபனமாக நிர்வகிக்கலாமா? இதோ! தடுப்பு முகாம் நடத்தி கோடீஸ்வரரான பிரிட்டனின் சிறிந்த தொழிலதிபர். Businessman of the year?
ராஜேந்திரன் - பிரிட்டனின் வெற்றிகரமான இந்திய வம்சாவழி தொழிலதிபர். ஒரு நாளைக்கு 4000 பவுன்கள் சம்பாதிக்கும் பெருமைக்குரியவர். அவரது வருடாந்த வருமானம் 1.5 மில்லியன் பவுன்கள். Serco என்ற அவுட்சோர்சிங் கம்பெனி அதிபர். அவரது கம்பெனி என்ன செய்கின்றது? ஐக்கிய இராச்சியத்தில் Yarl's Wood , Colnbrook என்ற இரு இடங்களில் தடுப்பு முகாம்களை நிர்வகிக்கின்றது. அந்த தடுப்பு முகாம்களில் அடைபட்டுக் கிடப்பவர்கள், பிரிட்டனில் தஞ்சம் கோரி வந்த அப்பாவி அகதிகள். "பாருக்குள்ளே நல்ல நாடான" பிரிட்டனில் அடைக்கலம் கோரிய குற்றத்திற்காக பெண்களையும், குழந்தைகளையும் அடைத்து வைத்து வருத்தி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றார். சொல்ல மறந்து விட்டேன்... ராஜேந்திரன் ஒரு பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபையை சேர்ந்த விசுவாசமான தேவ ஊழியர். அகதிகளை வருத்தி சேர்த்த லாபப் பணத்தில் ஒரு பகுதியை, ஒரு நல்ல கிறிஸ்தவனாக தனது சபைக்கு கொடுக்கிறார். (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்)

தொழிலதிபர் ராஜேந்திரனுக்கும், அவர் நடத்தும் சிறைமுகாமில் இருப்பவர்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். ராஜேந்திரன் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்தியர். அவரது தந்தை ஒரு பிரபலமான வாகன விற்பனையாளர். தென் ஆப்பிரிக்காவில் ஒரு கணக்காளராக பணியாற்றிய ராஜேந்திரன், நெல்சன் மண்டேலா விடுதலையாவதற்கு இரு வருடங்களுக்கு முன்னர் பிரிட்டன் வந்து விட்டார். இன்று அவரது நிறுவனம் ஐரோப்பா, ஆசியா என்று கிளை பரப்பிய போதிலும், தனது தாயகமான ஆப்பிரிக்காவில் எந்த முதலீடும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவில் முதலாவது ஜனநாயக தேர்தலில் நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர், அவர் தனது தாய்நாட்டை எட்டியும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் அவரது குடும்பத்தினரின் கடந்த கால அரசியல் ஈடுபாடு. அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்த பெந்தெகொஸ்தே சபைகள் வெள்ளை நிறவெறி (Apartheid) அரசுக்கு ஆதரவளித்து வந்தன. ஆச்சாரமான பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களான ராஜேந்திரன் குடும்பத்தினரும் அத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள். பொதுவாக அரசியலில் ஆர்வம் இல்லாதது போல காட்டிக் கொள்ளும் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்கள் , இது போன்ற சந்தர்ப்பங்களில் தம்மை வெளிப்படுத்துகின்றார்கள்.

ராஜேந்திரன் உள்ளூர் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபைக்கு தாராளமாக நன்கொடை வழங்குகிறார். பிற மக்களின் துன்பத்தில் லாபம் சம்பாதித்த ஒருவர் எப்படி கிறிஸ்தவ நன்னெறிகளை கடைப்பிடிக்கிறார்? ராஜேந்திரன் தனது செர்கோ நிறுவனத்தை வீடு மாதிரி கருதுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வருடம் ஒன்றரை மில்லியன் லாபம் சம்பாதிக்கும் ஒருவரால், ஏன் தடுப்பு முகாமில் (மன்னிக்கவும், வீடு) உள்ள வசதிக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை? அவரது தடுப்பு முகாம்களில் அழுகிய உணவு கொடுப்பது, நிறவெறி வசவுகள், காவலர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண நிகழ்வுகள். எத்தனையோ தடவை, கொடுமை தாங்க முடியாத அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மனிதர்களின் துன்பத்தில் லாபம் சம்பாதிக்கும் ராஜேந்திரன் கொடுக்கும் வருமானத்தில் பத்து வீதத்தை, மனச்சாட்சியற்ற பெந்தெகொஸ்தே சபை வாங்கிக் கொள்கின்றது. இத்தகைய நற்பண்புகள் தான், ராஜேந்திரனை "இந்த வருடத்திய சிறந்த தொழிலதிபர்" ஆக்குகின்றன. (ஆமென்)


பிரிட்டிஷ் தடுப்புமுகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த அகதி ஒருவருடனான நேர்காணல்

Friday, September 25, 2009

கிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி

(22 Sep. 09) Greece, Mytilene தீவு சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளும், சட்டவிரோதகுடியேறிகளும் தம்மை விடுதலை செய்யக் கோரி கலகம் செய்தனர். தொலைதூரதீவொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தம்மை விடுவிக்கும் படியும், கிரேக்க தலைநகர் எதேன்சிற்கு செல்லும் விசேஷ அனுமதிப்பத்திரம்வழங்குமாறும் போராடி வருகின்றனர். சிறைமுகாமில் வைக்கப்பட்டிருப்போரில் சில பராயமடையாத சிறுவர்களும் அடங்குவர். அகதிகளின் எழுச்சியின் பின்னர் இவர்களை மட்டும் விடுவிப்பதாக அதிகாரிகள் உத்தரவாதமளித்தனர். "No Borders" என்ற கிரேக்க மனிதஉரிமை ஆர்வலர்களின் அமைப்பு கடந்த மாதம் இந்த அகதிகளை விடுவிக்குமாறுதடுப்பு முகாம் அருகில் போராட்டம் நடத்தியது. சிறைமுகாம் கலவரம் பற்றிகேள்விப்பட்ட கிரேக்க ஆர்வலர்கள், முகாமுக்கு வெளியே அகதிகளுக்குஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கிரேக்க ஆர்வலர்களின் போராட்டத்தால் கவரப்பட்ட உள்ளூர் ஊடகங்களும் சம்பவத்தை பதிவு செய்தன. வெளியுலக தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்ட சிறை முகாமில் 650 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதில் 150 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயத்திற்கு முரணான விதத்தில் அகதிகளை தடுத்து வைக்கும் செயலை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கண்டித்துவந்துள்ளன.
Video: Uprising at the detention centre of Pagani, Mytilene