Tuesday, September 08, 2009

ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)

முதலாவது பகுதியை வாசிப்பதற்கு ...


"மேற்கு ஐரோப்பாவில் புரட்சியை ஏற்படுத்துவது, என்ற லெனின்-ட்ராஸ்கியின் திட்டம்" பற்றி ட்ராஸ்கிஸ்ட்கள் தமது சர்வதேச புரட்சிக்கு உதாரணமாக எடுத்துக்காட்டுவர். இந்த திட்டம் சரித்திரத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட லெனினின் தவறாக விமர்சிக்கப்படுகிறது. ஜெர்மனியை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதி, ஜெர்மன் தொழிலாளருடன் இணைந்து, புரட்சியை உண்டாக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட சோவியத் இராணுவம், போலந்தில் நடைபெற்ற போரில் தோல்வியைத் தழுவியது. போலந்து தொழிலாளர், விவசாயிகள் மத்தியில் வர்க்க உணர்வை விட, தேசிய உணர்வே மேலோங்கி இருந்ததும், அதனை லெனின் சரியாக எடை போடத் தவறியமையுமே தோல்விக்கு காரணம். அந்நேரம் இந்த தவறை ஸ்டாலின் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர் இரண்டாம் உலகப்போரின் பின்பு போலந்தைக் கைப்பற்றிய செஞ்சேனை, அங்கே கம்யூனிச ஆட்சியை நிறுவிய காலத்தில் கூட, ஸ்டாலினுக்கு போலந்தைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. "போலந்துக்காரர்கள் கத்தோலிக்க தேசியவாதிகள், அவர்கள் எம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள். அதே நேரம் பூகோள அரசியலைப் பொறுத்தவரை போலந்து ஒரு முக்கியமான நாடு." என்று கூறினார் ஸ்டாலின். பின்னர் என்பதுகளில் வழமைக்கு மாறாக (இத்தாலியர் ஒருவருக்கு பதிலாக) தெரிவுசெய்யப்பட்ட போலந்து பாப்பரசர் ஜோன் போல், சி.ஐ.ஏ.யுடன் கூட்டுச் சேர்ந்து கம்யூனிசத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது, ஸ்டாலினின் தீர்க்கதரிசனம் நிதர்சனமானது.

இன்றும் கூட பல சரித்திரவியலாளரும், மற்றும் கம்யூனிச எதிரிகளும் ஸ்டாலின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டுறவுப் பண்ணையமைப்பு, பொருளாதார திட்டங்கள் ஆகியனவற்றை ஸ்டாலினிச சர்வாதிகாரத்திற்குஉதாரணமாகக் குறிப்பிடுவர். இவை சோஷலிசக் கட்டுமானங்கள் என்பதை பலர்புரிந்து கொள்வதில்லை. கிராமங்களில் இருந்த நிலவுடமையாளர்களையும், விவசாய கூலித் தொழிலாளரையும் ஒன்றாக வேலை செய்ய வைப்பதென்பதுஇலகுவாக நடக்கக் கூடிய காரியமல்ல.

பிற விவசாயிகளுடன் பங்குபோட விரும்பாத பணக்கார விவசாயிகள், தமது கால்நடைகளை தாமே கொன்று அழித்தனர். தமது பண்ணைகளுக்கு போட்டியாக வந்த, கூட்டுறவுப் பண்ணைகளின் தானியக்களஞ்சியங்களை தீயிட்டனர். இவ்வாறு கிளர்ச்சி செய்த நிலவுடமையாளரையும், பணக்கார விவசாயிகளையும் மட்டுமே தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் படி ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்போது அங்கே நிலவிய பஞ்சத்திற்கு பணக்கார விவசாயிகளின் கிளர்ச்சியும் ஒரு காரணம். இன்றும் கூட, எத்தனையோ நாடுகளில் அரசாங்கம் கொண்டுவரும் சாதாரண நிலச் சீர்த்திருத்தங்களுக்கே நிலவுடமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்கூடாக காணலாம்.

நிலைமை இவ்வாறிருக்க, ரஷ்யாவில் அன்று "குலாக்குகள்" என அழைக்கப்பட்ட பணக்கார விவசாயிகளை அப்படியே விட்டு விட வேண்டுமென்று, ட்ராஸ்கி, புகாரின் போன்றோர் கம்யூனிசக் கட்சிக்குள் வாதிட்டனர். இந்த பணக்கார விவசாயிகளில் பலர், லெனின் காலத்தில் கொண்டுவரப்பட்ட "புதிய பொருளாதார திட்ட" காலத்தில் வளர்ந்தவர்கள் என்பது உண்மை தான். ஆனால் அப்போது போர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட ஒரு நாட்டில் நிலவிய குழப்பமான சூழ்நிலையில், ஒரு தற்காலிக திட்டமாகவே இந்த "புதிய பொருளாதார திட்டம்" கொண்டு வரப் பட்டது. சரியான தருணத்தில், சோஷலிச பொருளாதாரத்தை லெனின் கொண்டுவர நினைத்த போதிலும், புரட்சிக்கு பின்னர் லெனின் சிறிது காலமே உயிர் வாழ்ந்திருந்ததால் அது நிறைவேற்றப்படவில்லை. அந்த வாய்ப்புஸ்டாலினுக்கு கிடைத்தது.

"குலாக்குகள்" அல்லது "கிராமப்புற விவசாயிகள்" என்று பெயரெடுத்திருந்த பணக்கார விவசாயிகள் ஊழல் பேர்வழிகளாக இருந்ததுடன், ஒரே நாளில் தமதுவருமானத்தை இழக்க விரும்பவில்லை. இப்படியான ஒரு நிலைமையில் தான்ஸ்டாலின், ட்ராஸ்கி, புகாரினுக்கிடையில் பொருளாதார திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்கள் மாதக் கணக்காக அல்ல, வருடக் கணக்காக நடந்தன. இதைப்பற்றி ஸ்டாலினின் சுயசரிதையில் எழுதியஒரு மேற்குலக சார்பு எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.: "ரஷ்யசக்கரவர்த்தி சார் முதலாவது பீட்டர் காலத்தில் தொழிற்புரட்சியை கொண்டு வந்த போது தனது "ட்ராஸ்கிகளுடனும், புகாரின்களுடனும்" விவாதம் செய்து கொண்டிருக்கவில்லை. அவர்களின் தலைகளை சீவி எறிந்து விட்டு தனதுவேலையை கவனித்தான்."

முப்பதுகளில், தொழில்மயமாக்கல் திட்டங்களின் பயனாக, சோவியத் யூனியனின் பொருளாதாரம், அமெரிக்காவை விட மேலோங்கி இருந்ததும், சோவியத் நாணயமான ரூபிள், அமெரிக்க டாலரை விட மதிப்பு கூடி இருந்தமையும், மேற்குலக பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்ளும் உண்மைகள். இத்தகைய பொருளாதார அற்புதம் அன்று மேற்குலகை விட மிகவும் பின்தங்கி இருந்த ரஷ்யாவில் நடக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. தொண்ணூறு சதவீதம் படிப்பறிவற்ற மக்களுக்கு கல்வியறிவளித்தமை, நாடுமுழுவதற்கும் மின்சாரம் வழங்கியமை என்பன குறிப்பிடத்தக்க சாதனைகள்.

மனிதர்கள் வாழாத பனிப் பாலைவனமான சைபீரியாவில், புதிய நகரங்கள் தோன்றின. அங்கே, கனிம வளங்களை பயன்படுத்தும், தொழிற்சாலைகளில் வேலை செய்தோரின் வருமானம் மிக அதிகமாக இருந்தது. (இன்றைய மதிப்பில் ஆயிரம் டாலர்கள் வரை சம்பாதித்த தொழிலாளர்களும் உண்டு). தொழில் வாய்ப்பை நாடி, பிற சோவியத் பகுதிகளில் இருந்து சைபீரியா வந்தவர்கள் அதிகம். சிலவருடங்கள் கடுமையாக உழைத்து விட்டு பெருந்தொகை பணத்துடனும், தங்கக் கட்டிகளுடனும் ஊர் திரும்பியோர் ஏராளம். இன்று சோவியத் யூனியன்மறைந்து, முதலாளித்துவம் வந்த பின்பு எல்லாமே பழங்கதையாகிப் போயின. இவற்றை சொன்னால் இப்போது யாரும் நம்பவும் மாட்டார்கள்.

"கம்யூனிசத்தால் சாமானிய மக்களுக்கு நன்மை விளையும், ஆனால் தமக்கு தீமை விளையும்" என்ற உண்மை, எல்லா முதலாளிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் கம்யூனிசம் வருவதை தடுக்க, அவர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஒரு மாபெரும் உலகப்போரின் விளைவாகத் தான் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர் என்பதை அறிந்து வைத்திருந்தனர். அதனால் இரண்டாவது உலகப்போரின் பின்னரும் ஐரோப்பாவில் புரட்சிகள் தோன்றாமல் தடுப்பதுஅவசியம் எனக்கருதி, மக்களை பஞ்சத்தில் இருந்து மீட்பதற்காக அமெரிக்காவினால் உதவி வழங்கப்பட்டது. "மார்ஷல் உதவி" என்ற பெயரில் கோடிகோடியாக பணம், உணவுப் பொருட்கள், மேற்கு ஐரோப்பாவில் குவிந்தன. அன்றில் இருந்து தான் இன்று நாம் காணும் "மேற்குலக வசதியான வாழ்வு" ஆரம்பமாகியது. சாதாரண குடிமகனின் வாழ்க்கைவசதி உயர்ந்தது. இதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு படிப்படியாக குறைக்கப்பட்டது.

அப்படி இருந்தும் இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்ற போது, அந்நாட்டு அரசுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தீவிர கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தது. இதேநேரம் ஸ்டாலினிடம் முரண்பட்டு பிரிந்த, டிட்டோவின் யூகோஸ்லேவியாவுக்கும் தாரளமாக மாஷல் உதவி அனுப்பி வைக்கப்பட்டது. மறுபக்கத்தில், போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட சோவியத் யூனியன் தன்னைமீளக் கட்டி எழுப்பியதுடன், பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் உதவி செய்து குறைந்த காலத்தில் அபிவிருத்தி அடைந்த உண்மையை பல பொருளாதார அறிஞர்கள் வேண்டுமென்றே மறைத்து வருகின்றனர்.

எதிரிகள் முகாமில் யாராவது மிதவாதிகள் தென்பட்டால், அவர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயத்துடன் பேசுவது அரசியல் சாணக்கியம். அதனால் தான் மேற்குலக நாடுகள் தம்மோடு உறவு வைத்துக் கொண்ட யூகொஸ்லேவியாவையும், பொருளாதார சீர்திருத்தவாதி குருஷோவையும் புகழ்ந்து பேசினர். முதலாளித்துவ நாடுகளை எதிரியாக வரையறுத்த ஸ்டாலினை விட, "நட்புறவிலான சமாதான சக வாழ்வு" பற்றி கூறிய குருஷேவ் சிறந்தவராக பட்டதில் வியப்பில்லை.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, ஜெர்மனியை ஆண்ட ஹிட்லருடன் "மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை" செய்து கொண்டதை, ஏதோ ஹிட்லரும், ஸ்டாலினும் ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்ததாக ஐரோப்பிய சரித்திரப் பாட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்கு முன்பே செக்கொஸ்லேவியாவை ஆக்கிரமிப்பது சம்பந்தமாக, ஹிட்லர் பிரித்தானியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை கண்டு கொள்வதில்லை. பிரிட்டிஷ் இரகசிய அரசு ஆவணங்களில் காணப்பட்ட அதிர்ச்சியான தகவல் ஒன்று: "(அன்றைய) பிரதமர்சேர்ச்சில், தோற்கடிக்கப்பட்ட நாசிப் படைகளை சேர்த்துக் கொண்டு, சோவியத்யூனியன் மீது படையெடுக்க திட்டமிட்டிருந்தார்." மேலும் முன்னாள் நாசிச விஞ்ஞானிகள் போரின் பின்பு அமெரிக்க, அவுஸ்திரேலிய அரசுகளால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தமை இரகசியமல்ல.

இதுவரை காலமும் ஸ்டாலினையும், மாவோவையும் மட்டுமே சர்வாதிகாரிகள் எனச் சொல்லி வந்த மேற்குலக ஊடகங்கள், தற்போது லெனினையும் சர்வாதிகாரி என்று கூறத் தொடங்கி விட்டன. பிரான்ஸில் வெளியிடப் பட்ட "கம்யூனிசத்தின் கருப்பு நூல்" என்ற நூலில், லெனின் ஹிட்லரை விட மோசமான சர்வாதிகாரி என்று எழுதப்பட்டுள்ளது. முதலாளித்துவ இலக்கியவாதிகள் இதுவரை காலமும் ஸ்டாலினையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு எழுதி வந்தார்கள். தற்போது லெனினும் இந்த ஒப்பிடலுக்கு தப்பவில்லை. "உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், லட்சக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்டனர். ஸ்டாலினிச அடக்குமுறை லெனின் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது." இவ்வாறு பல தகவல்களை கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம் அடுக்கிச் செல்கின்றது. தாம் குற்றமற்றவர்கள் என்பதைக் குறிக்க, "நாம் ஸ்டாலினிஸ்ட்கள் அல்ல, ஆனால் லெனினிஸ்ட்கள்" என்பவர்கள் இந்தஅவதூறுகள் குறித்து என்ன சொல்கின்றனர்?

முதலாளித்துவ- ஜனநாயக புத்திஜீவிகள் ஸ்டாலினைப் பற்றி கூறும் குற்றச்சாட்டுகளில் தனிநபர் வழிபாடு, கட்சியினுள் நீடித்த தலைமைப் பாத்திரம் என்பன குறிப்பிடத்தக்கன. இதை சற்று விரிவாகப் பார்ப்போம். தென்னாபிரிக்க பிரதேசத்தில் ஒரு பெரும் பகுதியை தனது படைவலிமையால் ஆக்கிரமித்த ஆங்கிலேய காலனியாதிக்கவாதி "ரோட்ஸ்" தனது பெயரில் "ரொடீசியா" என்றநாட்டை உருவாக்கி நிறவெறி ஆட்சி நடத்தினார். மத்திய அமெரிக்காவில் ஒரு பகுதியை ஆக்கிரமித்த ஸ்பானிய காலனியாதிக்க தளபதி "குவாத்தமாலா" தனது பெயரிலேயே ஒரு நாட்டை உருவாக்கினார். அமெரிக்கப் புரட்சி காலத்தில், ஆங்கிலேயரால் பயங்கரவாதி என அழைக்கப்பட்ட கிளர்ச்சிப் படைத் தளபதி "வாஷிங்டன்" பெயரை அமெரிக்க தலைநகரம் இன்று வரை கொண்டுள்ளது. இந்தப் பெயர்களை மாற்றும் படி யாரும் பிரேரிக்கவில்லை. அந்தப் பெயர்கள் தொடர்வது யாரையும் சங்கடப்படுத்தவில்லை. ஆனால் "லெனின் கிராட்", "ஸ்டாலின் கிராட்" ஆகிய பெயர்கள் பலரது கண்களை உறுத்திக்கொண்டிருந்தன.

ஒரு தலைவரின் உருவப் படத்தை, சிலையை, நாடு முழுவதும் நிறுவுவதன் நோக்கம், அவர் சார்ந்த சித்தாந்தத்தை அல்லது அரசியல் கொள்கையை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காகும். ஐரோப்பாவில் இதனை சிறப்பாக நிறுவனரீதியாக நடைமுறைப்படுத்தியவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். சிலுவையில் தொங்கும் இயேசுவை சிற்பமாகவோ, அல்லது ஓவியமாகவோ காட்டித் தான் ஐரோப்பாவை "நூறு சதவீத கிறிஸ்தவ கண்டமாக" மாற்றினார்கள். இந்த தனிநபர் வழிபாட்டை கடவுளின், மதத்தின் பெயரில் செய்தார்கள். இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் இன்றும்கூட அரச குடும்ப வழிபாடு நிலவுகின்றது. நுகர்பொருள் கலாச்சாரம் பரப்பும் பிரபல நடிகர், பாடகர், விளையாட்டு வீரர் மீதான தனிநபர் வழிபாடு இளம்சந்ததியை வசியப்படுத்தி வைத்துள்ளது.

ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஒரே தலைவரின் நீடித்த ஆட்சி என்பன எப்போதும் ஒரு சிலரின் பொருளாதார ஆதாயம் சம்பந்தப்பட்டதல்ல. உலக வரலாற்றில் வெற்றி பெற்ற புரட்சிகளுக்கு பின்னால் சர்வாதிகாரம் இருந்துள்ளது. இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி செய்த குரொம்வெல், சாகும் வரை சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தியவர். பிரெஞ்சுப் புரட்சியின் அரசியல் தத்துவங்கள் ரொபெஸ்பியர், நெப்போலியன் இன்றி நிலைத்திருக்க முடியாது. இவர்கள் எதிர்த்தவர்களை கொன்று சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள். பாப்பரசரின் நீடித்த தலைமையும், வத்திகானின் சர்வாதிகாரமும் இன்றி கிறிஸ்தவ மதம் உலகெங்கும் பரவி இருக்காது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஐரோப்பாவில், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா புரட்சி, 200 ஆண்டுகளாவது தொடர்கின்றது. இருப்பினும் 20 ம நூற்றாண்டின் தொடக்கம் வரை எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், இன்று எமக்கு தெரிந்த ஜனநாயகம் காணப்படவில்லை. முதலாளிகளும், பூர்ஷுவாக்களும் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டி, அதற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று நிச்சயப்படுத்திய பின்னரே, அனைவருக்கும் சுதந்திரம், ஜனநாயகம்" வழங்க முன்வந்தனர்.  பல கட்சி ஜனநாயகம் மட்டுமே சிறந்தது என்பதை நிரூபிக்கும்,  "பொதுவான ஜனநாயக சித்தாந்தம்" எதுவும் உலகில் இல்லை. பல்கட்சி ஜனநாயக கருத்தியல் கூட, இங்கிலாந்தில் உருவான கோட்பாடு தான். இரண்டு ஆளும் வர்க்க குழுக்களுக்கு இடையிலான போட்டி தான், பின்னர் பல்கட்சி அரசியலுக்கு வழிகோலியது. ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஏதென்சில் பல்கட்சி அரசியல் இருக்கவில்லை.

இன்றும் கூட, உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு, அமெரிக்காவின் மேலாதிக்கம் அவசியம் என வாதிடும் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புஷ் தெரிவான போது தான், அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கார்ல் மார்க்சின் கூற்றுப்படி, "சர்வாதிகாரம் எங்கும் எதிலும் உள்ளது. ஆனால் அந்த சர்வாதிகாரம் எந்த வர்க்கத்தின் நலன் சார்ந்தது என்பதே முக்கியம்." முதலாளித்துவ சர்வாதிகாரத்தை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சிறந்ததாக தெரிவு செய்தார். "பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் கைகளில் அதிகாரம் வருவதே உண்மையான ஜனநாயகம்" (அரசும் புரட்சியும் நூலில்) என்று விளக்கினார் லெனின்.


(முற்றும்)
_____________________________________________________________________________________

இந்தக் கட்டுரையின் முதலாவது பகுதி:
ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?

5 comments:

புரட்சிக்கவி said...

//அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புஷ் தெரிவான போது தான், அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. // தோழர் இது பற்றிய விவரங்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். உமது இந்த பதிவு சிறந்த வரலாற்று ஆவணம்.

மருதன் said...

நல்ல கட்டுரை. மாவோ குறித்த அவதூறுகள் பற்றியும் எழுதுங்கள். ஸ்டாலினின் 'purges' குறித்து அங்கலாய்க்கும் அதே கூட்டம் மாவோவின் மாபெரும் பாய்ச்சல் திட்டம் பற்றியும் கலாசாரப் புரட்சி பற்றியும் குறைகூறி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்சியவாதிகள் என்று அழைத்துக்கொள்பவர்களும்கூட ஸ்டாலினையும் மாவோவையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். எத்தனை சான்றுகள் காட்டினாலும், எத்தனை விளக்கினாலும், விக்கிபீடியாவில் இருந்து ஒரே ஒரு லிங்க் கொடுத்து, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். இதற்கு பயந்தே, பலர் ஐயோ, நான் மார்க்ஸியவாதி மட்டும்தான், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறார்கள்.

Kalaiyarasan said...

புரட்சிக்கவி, புஷ் தெரிவான முதலாவது தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட அல் கோர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், புஷ் தெரிவு செய்யப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து ஜனநாயகக் கட்சி உச்சநீதிமன்ற உதவியை நாடியது. அப்போது தான் அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை என்பது அரசநிர்ணயச்சட்டத்தில் எழுதப்பட்டுள்ள விஷயம் அம்பலமானது.

மருதன்,
ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகள் தற்போதும் பரப்பப்படுகின்றன. அதன் நிமித்தம் இந்தக் கட்டுரை உருவானது. அதே நேரம், மாவோ குறித்து விளக்கம் கொடுக்கப்பட வேண்டிய தேவை கீழைத்தேய நாடுகளில் உள்ளது. சந்தர்ப்பம், நேரம் கைகூடி வரும் வேளை மாவோ மீதான அவதூறுகள் பற்றியும் ஆய்வு செய்கிறேன். நன்றி.

Anonymous said...

ஸ்டாலின் ரஷ;யாவும், மாவோவின் சீனாவும், கஸ்ரோவின் கியூபாவும் ஈழத்தமிழர் அழிப்பிற்கு பக்கபலங்கள். முதலாளித்துவ எதிர்ப்பு பேசியே எம்மவரை கொன்றழிக்க துணை போயினர். எங்களைப் பொறுத்தவரை ஸ்டாலினும் ஒன்றுதான் ஒபாமாவும் ஒன்றுதான். சுயநல அரசில் ஊறிய மட்டைகள்!

எங்களின் வேதனை இவர்களுக்குப் புரியாது.

Anonymous said...

//பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் கைகளில் அதிகாரம் வருவதே உண்மையான ஜனநாயகம்//

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரிகள் அனுப்பிய குண்டுகளின் மனம் இன்னும் முள்ளிவாய்காலில் மணக்கிறது. ஈழத்து குழந்தைகளும், பெண்களும், வயோதிபரும் அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கமாக தெரிந்ததா? இன்னும் சிறையில் வாடும் அப்பாவிகள் அவர்களுக்கு அமெரிக்கர்களாகத் தெரிகிறார்களா?