Sunday, April 05, 2009

1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர்

"செங் ஹெ"(Zheng He 1371–1433), சீன தேசத்து கடற்படை அட்மிரல். உலகம் சுற்றும் கடற்பயணங்களை மேற்கொண்ட ஐரோப்பிய மாலுமிகளான மகலன், கொலம்பஸ் போன்றோர் வரிசையில் சேர்த்து பார்க்கத்தக்கவர். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்னரே செங் ஹெயின் மாலுமிகள் அங்கே போயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அந்தக் காலத்திலேயே கட்டப்பட்ட மாபெரும் படைக்கலக் கப்பல், அதனோடு பதின்மக்கணக்கான சிறு கப்பல்கள், ஆயிரக்கணக்கான பணியாளர்கள், ஆயுதந்தரித்த வீரர்கள் சகிதம், சீனாவின் மேற்குக்கடலை(இந்து சமுத்திரத்தை அன்று சீனர்கள் அப்படித் தான் அழைத்தனர்.) எட்டு தடவைகள் வலம் வந்துள்ளார். Zheng He யின் கடற்பயணம் வெறுமனே நாடுகளை கண்டுபிடிப்பதுடன் மட்டும் நில்லாது, அங்கே அரிய பொருட்களை பரிமாறிக் கொள்வதிலும், அல்லது வர்த்தகத்திலும் ஈடுபட்டதுடன், தனது குடிமக்களை(Zheng He யும் அவரது இனத்தவர்களும் ஹுய் முஸ்லிம்கள்) மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சென்று குடியேறவும் வைத்தார்.

இவரது பயணங்களில் இலங்கை வந்த கதை சுவாரசியமானது. காலியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்று சிவனொளிபாதமலை தெய்வத்திற்கு Zheng He யின் வழிபாடு பற்றிய விபரங்கள் தமிழிலும், சிங்களத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளன. அப்போது இலங்கையை ஆண்ட அழகேஸ்வரன் என்ற அரசன் இவர்களது நோக்கங்களுக்கு இடையூறாக இருந்ததாகவும், அதனால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட Zheng He குழுவினர் இந்தியாவின் கொச்சிக்கு செல்லும் படி நிர்ப்பந்தம் உருவானதாகவும் வரலாறு கூறுகின்றது. இரண்டாவது பயணத்தின் போது இலங்கை அரசனை பழிவாங்க விரும்பிய Zheng He யின் வீரர்கள், சண்டையிட்டு அழகேஸ்வரனை கைது செய்ததாகவும், இலங்கை அரசனை சீனா கொண்டு சென்று சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்க வைத்து விட்டு விடுவித்ததாகவும் சரித்திரக் குறிப்புகளில் காணக்கூடியதாக உள்ளது.

இந்த புகழ் பெற்ற சீன மாலுமி, தனது கடற்பயணங்களை ஆசிய நாடுகளுடன் நிறுத்திக்கொள்ளாது, மத்திய கிழக்கில் ஈரான் வரையிலும், ஆப்ரிக்காவில் கென்யா வரையிலும் சென்று வந்துள்ளார். இருப்பினும் இவரது கடற்பயணங்கள், அதனால் கிடைத்த பயன்கள் யாவும், சீனாவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் மறக்கப்பட்டன. அங்கே மிங் சக்கரவர்த்தியின் ஆட்சி ஆரம்பமாகிய போது, பல மடத்தனமான காரியங்கள் நடந்தேறின. Zheng He போன்ற மாலுமிகளின் கடற்பயணங்கள் தடுக்கப்பட்டன. அவர் சேகரித்து வைத்திருந்த ஆராய்ச்சிக் குறிப்புகள் யாவும் அழிக்கப்பட்டன.( தப்பிப்பிழைத்த சில குறிப்புகளில் இருந்து மட்டுமே மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரிய வந்தன.) சீனர்கள் பிரமாண்டமான கப்பல்கள் கட்டும் கலையை மறந்து போனார்கள். மொத்தத்தில் சீனா வெளியுலக தொடர்பை துண்டித்துக் கொண்டு தனைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டது.

இந்த தனிமைப்படுத்தல் சில நூற்றாண்டுகள் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில், உலகின் வேறொரு பக்கத்தில், சீனர்களின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி, ஐரோப்பியர்கள் உலக ஆதிக்கத்திற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டனர். அரிய கண்டுபிடிப்புகளை செய்த( கொம்பாஸ், வேறு சில கப்பலில் பொருத்தப்பட்ட நவீன கருவிகள் யாவும் சீனர்களின் கண்டுபிடிப்புகள்) சீனாவோ அதேநேரம் வளர்ச்சியில் பின்தங்கி, இறுதியில் 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் அடிமைப்படுத்தபட்டது. சீன தேசத்து கண்டுபிடிப்பாளர்கள் ஐரோப்பிய "கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி" போலல்லாது, வாணிபம் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். சீனர்களும் நாடு பிடித்து அங்கே வர்த்தக காலனிகளை அமைத்திருந்திருந்தால், இன்று உலகம் வேறுவிதமாக காட்சியளித்திருக்கும். மலேசியா, இந்தோனேசியாவில் சென்று குடியேறியவர்கள் கூட, ஆட்சியதிகாரத்திற்காக ஆசைப்படாது, அந்த நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். ஐரோப்பியரோ அதற்கு மாறாக, சீனர்களின் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கொண்டு உலக நாடுகளை பிடித்து அடிமைப்படுத்தினர். காலனிகளை அமைத்து ஐரோப்பிய ஆதிக்கத்தை நிலை நாட்டினர்.

இவற்றை இங்கே நினைவுபடுத்துவதன் காரணம், சீனா 21 ம் நூற்றாண்டு உலக வல்லரசாக மாறிக்கொண்டு வருகின்றது. அங்கே ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, பெயரில் மட்டுமே கம்யூனிசம் வைத்திருக்கிறது. அதன் நடைமுறைகள் யாவும் சீன தேசியவாதத்தை முன்னெடுப்பதாக உள்ளன. இருப்பினும் அங்கு கம்யூனிச புரட்சி ஏற்பட்டிருக்கா விட்டால், இவ்வளவு வளர்ச்சியை எட்டியிருக்க வாய்ப்பில்லை. மேற்கத்திய ஊடங்கள், சீனா மக்களை தன்பக்கம் வைத்திருக்க தேசியவாதத்தை பயன்படுத்துவதாக ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றன. அதிலே ஓரளவு மட்டுமே உண்மை. சீனர்களின் நூற்றாண்டுகால தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை, அந்நியரால் அடிமைப்படுத்தப்பட்டமை, தமது கண்டுபிடிப்புகளை தமக்கெதிராக பயன்படுத்திய ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் மீதான வெறுப்பு, இவை எல்லாம் அவர்களுக்கு சுயபச்சாதாபத்தை ஏற்படுத்தியுள்ளன. மேற்குலகம் அவர்களின் நெருக்கடிகளை தவறாகப் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு தருணமும் தேசியவாத தீ பற்றுகின்றது. உதாரணத்திற்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்த நேரம் மேற்குலகம் சீனாவை சிறுமைப்படுத்தும் முகமாக திபெத் பிரச்சனை, மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சாரங்களை செய்தன. இந்த தொலைநோக்கற்ற வியூகங்கள், சீனர்களை மேலும் மேலும் அவர்களது அரசின் பின்னால் அணிதிரள வைத்தது. இன்று வெளிநாட்டவர்கள் சீனாவினுள் சுதந்திரமாக நடமாட முடிகிறது என்றால், அதற்கு காரணம் சீன அரசாங்கத்திற்கு கிடைக்கும் பெரும்பான்மை மக்கள் ஆதரவு. இந்த பெரும்பான்மை பலம், பலகட்சி தேர்தல் மூலம் தான் நிரூபிக்கப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.
(தொடரும்)


(இந்தக் கட்டுரை "உயிர்நிழல்" ஜூலை-டிசம்பர் 2009 இதழில் பிரசுரமாகியது)

பகுதி 2: திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்




மேலதிக தகவல்களுக்கு:
Zheng He's Voyages of Discovery
Zheng He in Sri Lanka
Zheng He
From Wikipedia


4 comments:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றிபா

Kalaiyarasan said...

பின்னூட்டத்திற்கு நன்றி ஞானசேகரன்

வடுவூர் குமார் said...

இன்னும் இந்த மாதிரி கண்டுபிடிப்புகள் எவ்வளவு கண்ணுக்கு தெரியாமல் போய் இருக்கோ!

Kalaiyarasan said...

பின்னூட்டத்திற்கு நன்றி வடுவூர் குமார். ஆமாம், இது போன்ற பல தகலவல்களை நாம் இது வரை காலமும் அறியாமல் இருந்திருக்கிறோம்.