Tuesday, April 21, 2009

தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு


-“தமிழீழத்தைவிட பரப்பளவில் சிறிய நாடுகள்கூட சுதந்திர தேசங்களாக,
ஐ. நா. சபை அங்கத்தவர்களாக உள்ளன”
-“அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 தேசங்கள் உள்ளன”
-“உலகில் பல்வேறு மொழிபேசும் மக்களும
தமக்கெனத் தேசங்களைக் கொண்டுள்ளனர்!”
“பல்வேறு நாடுகளில் வாழும் தமிழருக்கு மட்டும் ஒரு நாடு இல்லை!!”


பலருக்கும் பரிச்சயமான மேற்குறிப்பிட்ட வாசகங்கள் இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலை உருவாக்கிய ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் கோட்பாட்டு விளக்கங்கள். இந்த விளக்கங்களைக் கேட்ட பின்புதான் உலகில் பிற தேசிய இனங்களின்பால் தமிழர் பலரின் கவனம் திரும்புகிறது. இருப்பினும் அவர்களின் பார்வையானது கூட்டணி சட்டத்தரணிகள் வகுத்துக் கொடுத்த சித்தாந்த அடிப்படையைக் கொண்டது. ஆகவே மேற்குறிப்பிட்ட
கூற்றுகள் யாவும் உண்மையா என்பதை ஆராய வேண்டிய தேவையும் எழுகின்றது.

முதலில் தமிழீழத்தை விடச் சிறிய நாடுகளின் சுதந்திரம் எப்படிச் சாத்தியமாகியது என்பதை அறிந்து கொள்ள அவற்றின் வரலாற்றைப் படிப்பது அவசியம். உலகிலேயே மிகச் சிறிய சுதந்திரநாடு வத்திக்கான் நகரம். அதற்கு ஐ. நா. சபையில் பார்வையாளர் அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் விபரம் அறிந்த யாரும் அதை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டார்கள். போப் (அரசர்), கார்டினல்(மந்திரி)களுடன் சென்ற் பீட்டர்ஸ் தேவாலயத்தில்(பாராளுமன்றத்தில்) இருந்துகொண்டு கத்தோலிக்க மதத்தை (அரசியல்) நிர்வகிப்பதை தேசம் என்பதா? வத்திக்கான் நகரத்தின் சுயநிர்ணய அந்தஸ்து ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி. ஒரு காலத்தில் இத்தாலியின் பெரும்பகுதி போப்பரசரால் ஆளப்பட்ட கத்தோலிக்க மதவாத தேசமாக இருந்தது. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் நீடித்த மதத்தின் ஆட்சி 19ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. 1921இல் அன்றைய சர்வாதிகாரி முசோலினியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போது நாம் காணும் வத்திக்கான் என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதி உருவானது.

19ம் நூற்றாண்டு கால ஐரோப்பா பல மாற்றங்களைக் கண்டது. பல்வேறு ஐரோப்பிய மன்னர்களைப் போரில் தோற்கடித்து நெப்போலியன் புதிய பாணி (பாசிசம்?) சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான். நெப்போலியன் வெறும் அதிகார ஆசையில் நாடு பிடிக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சி முன்மொழிந்த லிபரல் சித்தாந்தம் நெப்போலியன் கைப்பற்றிய நாடுகளில் பரப்பப்பட்டது. அந்தப் புரட்சியின் விளைவுகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.
வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்றாலும், அதன் நிமித்தம் சாம்ராஜ்யம் சிறு துண்டுகளாக உடைந்தபோதும், ஆங்காங்கே தோன்றிய புதிய ஆளும் வர்க்கம் (மத்தியதர வர்க்கம்) மீண்டும் மன்னர்களை சிம்மாசனத்தில் அமர்த்தச் சம்மதிக்கவில்லை.
வியன்னாவில் ஒன்றுகூடி ஐரோப்பிய கண்டத்தின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தார்கள். வியன்னா மகாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய எல்லைகள் வரையப்பட்டன.
அப்படித் தோன்றியவைதான் இன்று நாம் காணும் தேசங்கள். புதிய தேசங்களின் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள், மன்னருக்கு விசுவாசமுள்ள முடியாட்சியையோ அல்லது கடவுளுக்கு அடி பணியும் மதவாட்சியையோ பின்பற்ற விரும்பவில்லை. அதற்குப் புதிய
சிந்தனையான பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் ‘தேசியம்’என்ற புதிய சொல் அகராதியில் இடம்பிடித்தது.

ஒரு நாட்டின் தலைவராக மன்னர் இல்லாவிட்டால் அது குடியரசாகிவிடும். அந்தக் குடியரசு ‘தேசிய அரசு’ என அழைக்கப்பட்டது. முடி தரித்த தனிமனிதனுக்கு குடிமை வேலை செய்த மக்கள் ‘தேசம்’ என்ற (பிறந்த) மண்ணிற்கு கடமைப்பட்ட பிரஜைகளா
னார்கள். அவர்களை ஒன்றிணைக்க ஒரு பொது மொழியின் அவசியம் உணரப்பட்டது. இவ்வாறு தோன்றியவைதான்: “ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கான தனித்தனி தேசிய அரசுகள்”. ஐரோப்பாவில் ஒரு காலத்தில் (கத்தோலிக்க) கிறிஸ்தவ மதம் திணிக்கப்பட்டது போல பெரும்பான்மைஇனத்தின் மொழி சிறுபான்மை இனங்களின்மீது திணிக்கப்பட்டது. ஐரோப்பாவின் புதிய தேசிய அரசுகள்எல்லாமே மொழி வேறுபாட்டினால் பிரியவில்லை. வியன்னா ஒப்பந்தத்தின்படிநெதர்லாந்துடன் சேர்ந்திருந்த பெல்ஜியத்திற்கு கத்தோலிக்க மதம் பெரிதாகப்பட்டது. புரட்டஸ்தாந்துக்காரருடன் சேர்ந்திருக்க விரும்பாமல் தனிநாடாக சண்டையிட்டுப் பிரிந்தது. இதற்கிடையே லக்ஸம்பேர்க்கை ஆண்ட குறுநில மன்னனுக்கு மக்களின் ஒத்துழைப்புடன், ஆனால் காலத்திற்கேற்ற மாறுதல்களுடன் முடியாட்சியை நீடிக்கும் எண்ணம் ஏற்பட்டது. தற்போது உலகளாவிய அதிகாரம் பெற்றுவிட்ட தேசிய அரசுகளுக்கு எங்கோ ஒரு மூலையில் குறுநில மன்னர்களின் ஆட்சி தொடர்வது கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கவில்லை.

இவ்வாறே,வேறு சில குறுநிலமன்னர்களும் தனிக்காட்டு ராஜாக்களாக அதிகாரம் செலுத்த
அனுமதி வழங்கப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கும் ஒஸ்திரியாவுக்கும் இடையில் உள்ள லீக்டன்ஸ்ரைன், தெற்கு பிரான்சில் உள்ள மொனோக்கோ, ஸ்பெயினுக்கும் பிரான்சிற்கும் இடையில் இருக்கும் அண்டோரா என்பவை இவ்வாறுதான் தனிநாடுகளாயின. இத்தாலியில் இருக்கும் சென் மரினோ ஏற்கனவே குடியரசாக இருந்ததைக் கண்டு மெச்சிய நெப்போலியன் கொடுத்த உறுதிமொழியினால் அது இன்னமும் தனது சுதந்திரத்தைப் பேணி வருகின்றது. ஐம்பது சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கூட கொண்டிராத இந்தக் குட்டி நாடுகள் யாவும் தமது பொருளாதார, பாதுகாப்பு தேவைகளுக்காக அயல் நாடுகளில் தங்கியுள்ளன. இன்றைய நவீன
உலகில் அயல்நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்காவிட்டால் ஒரு சில நாட்கள் கூட நிலைத்து நிற்க முடியாது என்பதே யதார்த்தம். இதனால் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவற்றை அயலிலுள்ள பெரிய நாடுகளே கவனித்து வருகின்றன. ஒப்பீட்டளவில் அதிக பரப்பளவையும் மக்களையும் கொண்ட லக்ஸம்பேர்க் மட்டும் இதில் விதிவிலக்காக பூரண சுதந்திரத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான நுகர்வுப் பொருட்கள் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், வர்த்தக ஒப்பந்தங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. உலகின் அனைத்துக் குட்டி நாடுகளினதும் நிலைமை இதுதான்.

பசுபிக் சமுத்திரத்திலும் கரீபியன் கடலிலும் உள்ள சிறு தீவுகள் பல சுதந்திர நாடுகளின்
பட்டியலில் இணைகின்றன. முன்பு ஒரு காலத்தில் ஐரோப்பிய காலனிகளாக அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தீவுகள் சுதந்திரம் வழங்கப்பட்டாலும் முன்னாள் காலனிய
எஜமானர்களுக்குப் பணிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளன. உதாரணமாக பசுபிக் சமுத்திரத் தீவு நாடுகளான மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், பலவு போன்றன இரண்டாம் உலகயுத்த காலத்தில், யப்பானாலும் அமெரிக்காவாலும் கைப்பற்றப்பட்டன. யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுடன் பாதுகாப்பு, பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முற்றுமுழுதாக அமெரிக்க நிதியுதவியில் தங்கியிருக்கும் இந்த நாடுகள் சில நேரம் கொடுக்கும் விலை பெரியது. குறைந்தது 50 அணுவாயுத பரிசோதனைகளை அமெரிக்கா மார்ஷல் தீவுகளில் நிகழ்த்தியுள்ளது. அதேபோல் பிரான்சின் கடல்கடந்த பிரதேசமாகக் கருதப்படும் பொலினேசிய தீவில்தான் பிரான்ஸ் தனது அணுவாயுதப் பரிசோதனை நடத்தியது.

நவ்று தீவு அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ஆட்சி நடத்தும் இன்னொரு குட்டி தேசம். தற்போது அந்த நன்றிக்கடனாக அவுஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளுக்கான சிறைச்சாலையைப் பராமரிக்கும் புதிய வேலை கிடைத்துள்ளது. சில நேரங்களில் குட்டித்
தீவுகளின் ‘சுதந்திரம்’ அந்நிய தலையீட்டினால் ‘காப்பாற்ற’ப்படுகின்றது. பிஜி தீவில் சுதேசி இன இராணுவ வீரர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவுஸ்திரேலியா படைகளை அனுப்பி ‘ஜனநாயகத்தை மீட்டது’ பலருக்கு ஞாபகமிருக்கலாம். கரீபியன் தீவு நாடுகளும், தமது காலனியத் தொடர்புகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முடியாத நிலையிலுள்ளனர். கிரிக்கட் பிரியர்களுக்குப் பரிச்சயமான மேற்கிந்திய தீவுகள் - இந்த சுதந்திர நாடுகளுக்கு
வழங்கப்பட்ட பொதுப் பெயர். டொமினிக்கா, சென் கிட்ஸ்-நெவிஸ், சென் லூசியா, அன்டிகுவா-பார்புடா, கிரெனாடா போன்ற தீவு நாடுகள் தமக்குள் கரிபியன்
பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கி, கரிபியன் டொலர் என்ற பொது நாணயத்தைப் பயன்படுத்துகின்றன. முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளான இவை எலிசபெத் மகாராணியை தமது தலைவியாக ஏற்றுக்கொண்டே சுதந்திரம் பெற்றன. இவையும் தமது
பொருளாதார, பாதுகாப்புத் தேவைகளுக்காக முன்னாள் காலனியவாதிகளில் தங்கியிருக்க
வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.

இதுகாலவரையில் கிரெனாடா மட்டுமே சுயாதீனமான அரசியல் செய்யத் துணிந்த நாடு. இறுதியில் அதற்குக் கொடுத்த விலை,அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்பு. 1974இல்
நவகாலனிய பொம்மை அரசுக்கு எதிராக, மொரிஸ் பிஷப் தலைமையில் ஆயுதமேந்திய புரட்சி வெற்றி பெற்றது. ஒரு மார்க்ஸிஸ்டான மொரிஸ் பிஷப் நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு செல்வதற்காக கியூபாவின் உதவியை நாடினார். கியூபாவும் தனது ஆசிரியர்கள், வைத்தியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் போன்றவர்களை அனுப்பி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில் குறிப்பிடத்தக்கதாக புதிய விமான நிலையக் கட்டுமானப் பணி அமைந்திருந்தது. அந்த விமான நிலையத்தில் சோவியத் போர் விமானங்கள் வந்திறங்கவிருப்பதாக சி. ஐ.ஏ. கொடுத்த தவறான தகவலை நம்பி அன்றைய ஜனாதிபதி றீகன் அமெரிக்கப் படைகளை அனுப்பினார். பிறகென்ன கிரெனாடா தீவை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமிக்க கம்யூனிசம் முடிவுற்றது, சுபம்.

முன்னாள் காலனிய எஜமானர்கள், தாம் சுதந்திரம் கொடுத்த நாடுகள், ‘பொதுநலவாய அமைப்பு’ என்ற பெயரிலாவது தம்முடன் நல்லுறவு பேணவேண்டும் என்று விரும்புகின்றன. அதற்காகப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா
போன்ற 19ம் நூற்றாண்டு காலனிய சக்திகளே இன்று வரை தமது பிடியை விடாமல் வைத்திருக்கின்றன. இதற்கு மாறாக முன்னாள் போர்த்துக்கீசிய, ஸ்பானிய காலனிகள் நவீன உலகின் ஆதிக்க சக்திகளுக்குப் பணிந்துபோக வேண்டிய நிலையில் உள்ளன. இதற்கு
கிழக்குத் திமோர் ஒரு சிறந்த உதாரணம். இந்தோனேசியாவின் அருகில் இருக்கும் முன்னாள் போர்த்துக்கீசிய காலனியான கிழக்குத் திமோர் தனது சுதந்திரத்தை ஒரு வருடம்கூடக் காப்பாற்ற முடியாமல் இந்தோனேசியாவிடம் தன்னை இழந்தது. பல தசாப்தங்களிற்குப் பின்னர், அங்கேயுள்ள எண்ணை வளங்களைக் குறி வைத்து அவுஸ்திரேலியா தலைமை
யிலான பன்னாட்டுப் படைகள் விடுதலை பெற்றுக் கொடுத்தன. புதிய சுதந்திரநாடாக ஐ. நா. சபை அங்கத்துவம்பெற்ற கிழக்குத் திமோர் அதனது காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே சர்வதேச அங்கீகாரம் பெற்றது. ஏனெனில் கிழக்குத் திமோரில் வாழும் பல்வேறு மொழி பேசும் அதே இனங்கள் மேற்குத் திமோரிலும் இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஒரு
பகுதியான மேற்குத் திமோர் குறித்து யாரும் இதுவரை கவலைப்படவில்லை.

இதுபோன்றே காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகக் கருதப்படும் இன்னொரு நாடு ஏற்கனவே பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டபோதும் நீண்ட ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னும் ஐ.நா. சபை சுதந்திரம் பெற்றுத் தருவதாக வாக்களித்த போதும்.... இன்ன பிறவெல்லாம் இருந்தும் இன்றுவரை மொரோக்காவால் ஆளப்படும் மேற்கு சஹாரா மாநிலம்
யாருடைய கவனத்தையும் பெறவில்லை. மொரோக்கோ பிரெஞ்சுக் காலனியாக இருந்தபோதிலும் அதன் தென் பகுதி மாநிலமான மேற்கு சஹாரா ஸ்பானியக் காலனி
யாக இருந்தது. சுதந்திரமடைந்த மொரோக்கோ, மேற்கு சஹாரா காலனிய காலத்திற்கு முன்னர் தனது ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த வரலாற்றைக் காரணம் காட்டிச் சொந்தம் கொண்டாடியது. அது போன்றே மொரிட்டானியாவும் தன் பங்கைக் கோரியது.
1975ம் ஆண்டு ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் பின்னர் ஸ்பெயின் மேற்கு சஹாராவை விட்டு வெளியேறிய கையோடு, மூன்றில் இரண்டு பங்கு பகுதியை மொரோக்கோ ஆக்கிரமித்து அதனைத் தனது மாகாணமாக்கியது. மிகுதிப் பகுதி மொரிட்டானியாவால் ஆக்கிரமிக்கப் பட்டது. இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகி விட்டதால் தீர்த்து வைப்பதற்காக ஐ.நா. சபை தலையிட்டபோதிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே ‘பொலிசாரியோ’ என்ற இயக்கம் மேற்கு சஹாரா விடுதலைக்கான ஆயுதப்
போராட்டத்தை ஆரம்பித்தது. அல்ஜீரியா தனது நாட்டில் முகாம்களை அமைத்துக் கொள்ள இடம் கொடுத்தது. மொரோக்கோ பதிலடியாக இராணுவ காட்டாட்சியை ஏவிவிட்டது. மேற்கு சஹாரா மக்கள் இராணுவ காவலரண்களைக் கொண்ட வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன்மூலம் அல்ஜீரிய எல்லையில் இருந்து ஊடுருவித் தாக்கும் ‘பொலிசாரியோ’ கெரில்லாக்களின் இராணுவ நடவடிக்கைகள் கணிசமானளவு குறைக்கப்பட்டன. இன, மொழி, கலாச்சார ரீதியாக மேற்கு சஹாரா மக்களுக்கும் அயலவரான மொரோக்கோ, மொரிட்டானிய மக்களுக்கும் இடையில் அதிக
வேறுபாடு கிடையாது. ஒரேயொரு முக்கிய வேறுபாடு‘காலனிய மனோபாவம்’. ஸ்பானிய காலனிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் மேற்கு சஹாரா மக்கள் அதன் மூலம்
தம்மை அயலவரிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர்.

எரித்திரியர்களும் அதுபோன்று காலனியத் தொடர்ச்சியாக தனிநாடு கோரியவர்கள்தான். ஆபி
ரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியரால் காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. ஆனால் அதன் கடற்கரையோரப் பகுதியான எரித்திரியா நீண்டகாலம் இத்தாலியின் காலனியாக இருந்தது. இத்தாலி விட்டுச் சென்ற பின்னர்
எத்தியோப்பியாவினால் இணைக்கப்பட்டது. அங்கு வாழும் திக்ரிஞா, திக்ரே, அஃபார் மொழிகள் பேசும் மக்கள் எத்தியோப்பாவிலும் வாழ்கின்றனர். எத்தியோப்பிய சக்கரவர்த்தி ஹைலெ செலாசிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் 30 ஆண்டு
கள் நீடித்தது. பிற்காலத்தில் மெங்கிஸ்டு தலைமையில் ஏற்பட்ட கம்யூனிச அரசாங்கம், பிரிவினைவாதிகளுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் போரிட்டும் வெல்ல முடியவில்லை. எரித்திரிய விடுதலை இயக்கமான ஈ. பி. எல். எவ். எண்பதுகளின் இறுதிப்பகுதியில்
எதிரிப்படைகளை அழித்து எரித்திரியாவை விடுதலை செய்தது. அஸ்மாரா விமானப்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 போர் விமானங்களை அழித்தமை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எத்தியோப்பியாவில் இருந்த
பிற விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து போராடியமை, மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் என்பன கைகூடி வரப்பெற்றதால் 1991இல் எரித்திரியாவின் பூரண விடுதலை சாத்தியமாகியது.

புதிய எத்தியோப்பிய அரசாங்கம் ஐ. நா. தலைமையிலான வாக்கெடுப்புக்குச் சம்மதிக்க எரித்திரிய சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஒரு தேசத்தில் பல்வேறு சக்திகள் போராடிக்கொண்டிருக்கும் குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி, தனது பிரதேசத்தை மட்டும் பிரித்து சுதந்திர தேசமாக அறிவித்துக் கொண்ட உதாரணங்கள் வரலாற்றில் பலவுண்டு. நீண்ட காலம் அரசாங்கம் அமைக்க முடியாமல் அராஜகம் கோலோச்சிய சோமா
லியாவில் இருந்து உதயமாகியது ‘சோமாலிலாண்ட்’என்கிற புதிய நாடு. அதுகூட பழைய காலனிய எல்லைகளைக் கொண்டு அமைக்கப்பட்டமை தற்செயலானதாக இருக்கலாம். முன்பு சோமாலியா மூன்று ஐரோப்பிய காலனியவாதிகளால் பங்கிடப்பட்டிருந்தது. இன்று
சுதந்திர தனித்தேசமான ஜிபூத்தி பிரான்சினாலும்,இந்துசமுத்திரப் பிரதேசமான சோமாலியா இத்தாலியினாலும், செங்கடல் பகுதி சோமாலிலாண்ட் பிரித்தானியாவினாலும் ஆளப்பட்டன.

1991இல் சோமாலிய சர்வாதிகாரி சியாட் பரேயின் வீழ்ச்சிக் காலகட்டத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்த சோமாலிலாண்ட், பிரிவினைக்கான போரில் பத்தாயிரம் மக்களையாவது பலி கொடுத்தது. இன்றுவரை சோமாலிலாண்டில் நிலையான ஆட்சி அமைந்ததற்கு அப்பிரதேச மக்களது ஒற்றுமை முக்கிய காரணம், சோமாலியாவின் பிற பகுதிகளில் பல்வேறு சாதீய இயக்கங்களின் ஆயுதபாணிகள் அதிகாரப் போட்டியில் சண்டை
யிட்டதுபோல சோமாலிலாண்டில் நடக்கவில்லை. 16 வருடங்களைக் கடந்தபோதும் சோமாலிலாண்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் பிற பிரிவுவாத அமைப்புக்களை ஊக்கப்படுத்தலாம் என ஆபிரிக்க ஒன்றியம்
கருதுவதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பின் நிற்கின்றன. அண்மையில் புஷ் நிர்வாகம் குறைந்தளவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சோமாலிலாண்டை அங்கீகரிக்கும் சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. அதற்குக் காரணம் வேறு. அல்கைதா சோமா
லிலாண்டைத் தனது புகலிடமாக மாற்றிவிடலாம் என்ற அச்சமும் அதனை முன்கூட்டியே தடுக்க நினைக்கும் சமயோசிதமும்தான் முக்கிய காரணம்.

சர்வதேச நாடுகளின், நிறுவனங்களின் அங்கீகாரம் இருந்தாலும் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்வது 50 வருடங்களுக்கு மேலாகியும் பாலஸ்தீனர்களால் முடியாத காரியமாக உள்ளது. பாலஸ்தீனம் என்ற தேசத்தை இதுவரை 108 நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதேநேரம் இஸ்ரேலை 34 நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 1948இலேயே அந்தப் பிரதேசத்தில்
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை முன் மொழிந்ததன்மூலம் ஐ. நா. சபைகூட பாலஸ்தீனியர்களுக்கு உதவக் கடமைப்பட்டுள்ளது. இருப்பினும் யதார்த்த நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை இங்கே கூறத் தேவையில்லை. மத்திய கிழக்கில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஓட்டோமான் துருக்கியர்கள் பலவீனப்பட்ட காலத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொண்டன. இந்த ஐரோப்பிய
பரோபகாரிகள் முதலில் அரேபியருக்கு உதவி செய்ய வந்ததாகக் கூறினர். துருக்கியருக்கெதிராகப் போராட ஆயுதங்கள் வழங்கினர்.போரில் துருக்கி தோற்கடிக்
கப்பட்ட பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த அரேபியரை ஓரம் கட்டிவிட்டு பிரித்தானியாவும் பிரான்சும் மத்திய கிழக்கு முழுவதையும் தமது காலனியாக்கிக் கொண்டன. தாம் விரும்பியபடி தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரித்துக் கொண்டன.
காலனியாதிக்கம் முடிந்த காலத்தில் இந்த அலகுகள் தனித்தனி நாடுகளாக சுதந்திரம் பெற்றன.

இவ்வாறு தான் அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 நாடுகள் கிடைத்தன. இவை அந்த மக்கள் விரும்பிக் கேட்டதல்ல. காலனிய எஜமானர்கள் அந்நாடுகளைத் தமது சொந்தக் காணிநிலம் போன்று நடத்தினர். அல்ஜீரியாவைத் தனது மாகாணம் என்று உரிமை கோரிய
பிரான்ஸ், சிரியாவில் இருந்து லெபனானைப் பிரித்தது. தன்னுடன் ஒத்துழைத்த அரபுத் தலைவர்களை மன்னர்களாக்குவதற்காக ஜோர்தான், ஈராக் என்ற புதிய தேசங்களை உருவாக்கியது பிரித்தானியா. அதிலும் எண்ணை வளம் மிக்க குவைத் ஈராக்கில்
இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதேபோன்றே வளைகுடா எண்ணையை மட்டும் கருத்தில் கொண்டு பாஹ்ரைன், கட்டார், எமிரேட்கள் போன்ற அளவிற்சிறிய நாடுகள் உருவாக்கப்பட்டன.

பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனி என்று அழைக்கப்படும் சைப்பிரஸ் இன்று இனப்பிரச்சினையால் இரண்டு துண்டுகளாகியுள்ளது. 1983இல் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு , துருக்கியைத் தவிர
வேறெந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய தரைக் கடலில் இருக்கும் சைப்பிரஸ் தீவில் 78வீதம் கிரேக்கர்களும் 18வீதம் துருக்கியரும் வாழ்ந்து வந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற கிறீசுடன் சைப்பிரஸ் கிரேக்கர்கள் இணைய
விரும்பினர். அதற்கு ஆங்கிலேயர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் கிரேக்கத் தேசியவாதிகள் பிரிட்டிஷ் காலனியாட்சிக்கெதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரித்தாளும் சூட்சியில் வல்லவர்களான ஆங்கிலேயர்கள் துருக்கியரை பொலிஸ் படையில் சேர்த்தனர். இதனால் கிரேக்க கிளர்ச்சியாளர்களால் துருக்கிய பொலிஸார் கொல்லப்படும்
போதெல்லாம் இனக்கலவரம் மூண்டது. சைப்பிரஸ் சுதந்திரம் பெற்ற பின்பும் ஏதோ ஒரு காரணத்தைச் சாக்காக வைத்து கலவரம் வெடிப்பது. அடிக்கடி நடந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னரான கிரேக்கப் பெரும்பான்மை அரசாங்கம் துருக்கிய சிறுபான்மைக்கு
வாக்களித்தபடி அதிகாரப் பரவலாக்கல் செய்யாததைக் காரணம் காட்டி மிதவாதத் தலைவர்கள் பதவி விலக, ஆயுதபாணி தீவிரவாதிகள் துருக்கியிடம் போர்ப் பயிற்சியையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டதானது நிலைமை மோசமடைவதைக் காட்டியது. இராணுவ மோதல்கள் தீவிரமடையவும் புதிதாகப் பொறுப்பேற்ற அரசாங்கம் கிறீசுடன் சேரும்
நோக்கத்தை மீண்டும் பகிரங்கப்படுத்தவும் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு துருக்கி இராணுவம் படையெடுத்தது. இன்றுவரை வடக்கு சைப்பிரஸில் துருக்கி இராணுவம் நிலைகொண்டுள்ளது. தற்போது சைப்பிரஸ் ஐரோப்பிய யூனியனில் இணைந்து
கொண்டதால் இரு இனங்களும் ஒன்றுபடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

(தொடரும்)

இரண்டாவது பகுதி: "அநாதை தேசங்கள்"

இந்தக் கட்டுரை "உயிர் நிழல்"(Oct.-Dec. 2007) இதழில் பிரசுரமாகியது.

22 comments:

என்.இனியவன் said...

உங்களது கட்டுரைகள் பயனுள்ளதாக இருக்கிறது.
அரசியல் நிகழ்வு பற்றி தெரிய வேண்டுமா,
கலையகம் தான் அதற்கு சிறந்த இடம்.

உங்களது அனைத்து பதிவுகளும் வாசிப்பேன்.
ஆனால் comment எழுதுவதில்லை.
உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு எனக்கு
வரலாறு தெரியாது என்பதால்.

வாழ்த்துக்கள்.

Kalaiyarasan said...

நன்றி, இனியவன். எல்லோரும் பின்னூட்டமிடமிடுவதில்லை என்றாலும் பலர் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். ஆகவே தொடர்ந்து படித்து வாருங்கள். எதாவது சொல்ல விரும்பினால் தனி மடலிலும் தெரிவிக்கலாம்.

rooto said...

கலையரசன் குட்டி நாடுகள் மட்டுமல்ல, அமேரிக்கா கூட மற்றையநாடுகளில் தங்கிதான் வாழவேண்டும். அவற்றை தவிர்ப்பதற்காகவே ஈராக் மீதான போராட்டம்(எண்ணை வளத்தை போதிய அளவு சுரண்டுவதற்கு), ஆப்கானிஸ்தான் மீதான போர்(பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் தனது கட்டமைப்பை மீறிப்போய்விடகூடாது என்பதற்காக)
சிந்தித்துபாருங்கள் அமேரிக்காவை அனைத்து நாடுகளும் புறக்கணித்து தங்கள் நாட்டுகுடிமக்களை மீண்டும் தமது நாடுகளுக்கு அழைத்தால் என்னாகும் எண்டு(ஆனால் அவை நடைமுறைக்கு சாத்தியப்படுவது தூரமே)

கே.ஆர்.பி.செந்தில் said...

அன்பு கலை அவர்களுக்கு, வணக்கம்,. உங்கள் கட்டுரை வெகு அருமை மிக சரியான ஆய்வு, உங்களது அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்,

கே.ஆர்.பி.செந்தில் said...
This comment has been removed by a blog administrator.
கே.ஆர்.பி.செந்தில் said...
This comment has been removed by a blog administrator.
Kalaiyarasan said...

//கலையரசன் குட்டி நாடுகள் மட்டுமல்ல, அமேரிக்கா கூட மற்றையநாடுகளில் தங்கிதான் வாழவேண்டும்.//

உங்கள் கருத்திற்கு நன்றி rooto.
நீங்கள் கூற வரும் விஷயத்தில் உண்மை இருக்கிறது. ஆனால் அது நான் இந்தக் கட்டுரையில் எடுத்துக் கொண்ட மையக்கருவில் இருந்து முற்றிலும் மாறுபடுகின்றது.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் பிற நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. இது ஒரு சமூகத்தில் எமக்கு எல்லோரும் தேவை என்பது போல.

நீங்கள் சுட்டிக் காட்டும் அமெரிக்க உதாரணத்திற்கே வருகிறேன். அமெரிக்கா உலகிலேயே அதிகளவு எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. ஆனால் அது ஈராக் எண்ணை மீது கண் வைத்ததற்கு காரணம், ஈராக்கில் தங்கி இருக்க வேண்டிய நிலைமை அல்ல. உலக சந்தையில் எண்ணை விற்பனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், ஈராக் எண்ணையை குறைந்த விலையில் கொள்ளையடிக்கவும் ஆகும். அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய கிழக்கு எண்ணெயும், உலகெல்லாம் இருந்து வரும் தொழிலாளரின் உழைப்பும் அவசியம் தான். ஆனால் இதையெல்லாம் அமெரிக்கா சுரண்டிக் கொழுக்கிறது. இதனை ஒரு உதாரணம் கொண்டு விளக்கலாம். ஒரு தொழிற்சாலையை நடத்தும் முதலாளி, அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பில் தங்கி இருக்கிறான். ஆனால் உங்கள் கருத்துப்படி, லாபத்தை தொழிலாளிகள் உரிமை கோர முடியாது. அது முதலாளிக்கே சொந்தமாகிறது.

ஒரு தேசம் சுதந்திரமாக எதையும் தீர்மானிக்கும் இறைமை உள்ளது. அரசியல், பொருளாதார ரீதியாக இன்னொரு நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் இறைமை பறி போகின்றது. இது அடிமை நிலையில் இருந்து சிறிதளவு மாறுபடுகின்றது. அவ்வளவு தான். செல்வத்தை குவித்து வைத்துள்ள பணக்கார நாடுகளையும், அவர்கள் கொடுக்கும் கடனை நம்பி வாழும் வறிய நாடுகளையும் நீங்கள் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடியாது. உங்கள் ஊரில் இருக்கும் எந்தவொரு பணக்காரனாவது தான் ஏழைகளில் தங்கி இருப்பதாக சொல்லிக்கொள்கிறானா? அப்படி நடக்கிறதென்றால் நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்றுக் கொள்ளலாம்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

குண்டுகளுக்கு பயந்து வாழ்வை பதுங்கு குழிகளில் வாழ்வதை தவிர வேறு வழியே இல்லையா, நண்பரே?

Kalaiyarasan said...

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே,
நீங்கள் யுத்த சூழ்நிலையை பற்றி சொல்ல வருகிறீர்களா?

Kalaiyarasan said...

வணக்கம் கே.ஆர்.பி.செந்தில்,
இரண்டாவது பகுதி ஏற்கனவே தயாராகி விட்டது. விரைவில் பதிவிடுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிறைய விடயங்களை புதிதாகவும் அறிந்தேன்.
பயனுள்ள பதிவு

Sathis Kumar said...

விரிவானதொரு ஆய்வுக்கட்டுரை. அடுத்த பதிவைப் படிப்பதற்கு ஆவலாய் உள்ளேன்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//நீங்கள் யுத்த சூழ்நிலையை பற்றி சொல்ல வருகிறீர்களா?//

ஆமாம். ”சிங்களம் மற்றும் இந்தியாவின் நட்பு இல்லாமல் ஈழம் அமைந்தாலும் பெரிய பயனொன்றும் இல்லை” - என்ற தொனியில் இக் கட்டுரை அமைந்துள்ளதாக கருதுகிறேன்.

( நெடு நாள் வாசகன் :) இன்று தான் பின்னூட்டமிடுகிறேன்)

Kalaiyarasan said...

யோகன் பாரிஸ், சதிசு குமார் உங்கள் வரவுக்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி.

Kalaiyarasan said...

//ஆமாம். ”சிங்களம் மற்றும் இந்தியாவின் நட்பு இல்லாமல் ஈழம் அமைந்தாலும் பெரிய பயனொன்றும் இல்லை” - என்ற தொனியில் இக் கட்டுரை அமைந்துள்ளதாக கருதுகிறேன்.//

பிரதீப், இந்தக் கட்டுரையை படிக்கும் போதே தெரிந்திருக்கும் பல உலகநாடுகளைப் பற்றி அலசப்பட்டுள்ளன. இவற்றில் எடுத்துக்காட்டப்பட்ட அனைத்து குட்டி தேசங்களும் ஐரோப்பிய வல்லரசுகளின் திட்டப்படி பிரிக்கப்பட்டவை. அதற்கு மேல் இன்னும் சில நாடுகளை புதிதாக உருவாக்க வேண்டும் என்றால் அவற்றின் நலன்களை சார்ந்ததாக இருக்கும். உதாரணம்: கொசோவோ. வரலாற்றில் முன்னர் ஒரு போதும் இருக்காத புதிய தேசம். அமெரிக்க, ஐரோப்பிய நலன்கள் அங்கே உள்ளன. அதாவது விலைமதிப்பற்ற கனிம வளங்கள். அங்கே இருக்கும் நேட்டோ படைகளின் பாதுகாப்பில் தான் கொசோவோவின் சுதந்திரம் காப்பற்றப்படுகின்றது. அன்னியப் படைகள் என்றைக்கு விட்டுச் செல்கின்றனவோ, அடுத்த அரை மணி நேரத்தில் செபியப் படைகள் ஆக்கிரமிக்கும். அதற்குக் காரணம் கொசோவோவின் சுதந்திரத்தை செர்பியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. இது மிக முக்கியமானது. அதே போல ஈழம் என்ற தேசிய சுயநிர்ணயத்தை இந்தியாவை விட, சிறி லங்கா அரசு அங்கீகரிப்பது முக்கியமானது. அவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அடுத்த நூறு வருடங்களுக்கும் அந்தப் பிரதேசம் தமது என்று உரிமை கோருவார்கள்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

மிகச் சரியென்று படுகின்றது. தொடர்ந்து எழுதவும்!

Kalaiyarasan said...

நன்றி, பிரதீப், உங்களைப் போன்ற இளைஞர்கள் பலர் உலகைச் சரியாக புரிந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

உண்மைத்தமிழன் said...

அருமை.. அருமை. அருமை..

பொது அறிவுக் களஞ்சியம் நீங்கள்தான்..

வணங்குகிறேன் கலை..

Kalaiyarasan said...

நன்றி, உண்மைத் தமிழன்.

asfar said...

உங்களது கட்டுரைகள் பயனுள்ளதாக இருக்கிறது.
அரசியல் நிகழ்வு பற்றி தெரிய வேண்டுமா,
கலையகம் தான் அதற்கு சிறந்த இடம்.

உங்களது அனைத்து பதிவுகளும் வாசிப்பேன்.
ஆனால் comment எழுதுவதில்லை.
உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு எனக்கு
வரலாறு தெரியாது என்பதால்.

வாழ்த்துக்கள்.

hi brother Kalai, now i am in Sri Lanka. I hope your family members are safe here, last week we make a visit vanni camp, couldn't expalin very sad to see...
www.asfarm.20m.com/1203.htm

God bless...

ஆர். அபிலாஷ் said...

கலை
உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த வரலாற்றுக் கட்டுரை மிக நன்றாக உள்ளது. ஒரு பதிவராக நீங்கள் காட்டும் தீவிரமும், அறிவார்ந்த அக்கறையும் மிக முக்கியமானவை. hats off!

Kalaiyarasan said...

பாராட்டுக்கு நன்றி, அபிலாஷ்.