Showing posts with label படுகொலைகள். Show all posts
Showing posts with label படுகொலைகள். Show all posts

Wednesday, April 04, 2018

கட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன?

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இது பற்றி ஏற்கனவே ஒரு பக்கச்சார்பான ஹாலிவூட் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

வழமையாக, ஸ்டாலினின் படுகொலைக் கணக்கில் வரவு வைக்கப் படும் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களிலும் சிலர், குறிப்பாக, நவ- நாஸிகள், தமது மேற்கத்திய எஜமானர்களின் பணிப்புரைக்கு ஏற்றவாறு திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே, கட்டினில் (Katyn: சரியான போலிஷ் மொழி உச்சரிப்பு "கட்டின்", கேய்டின் அல்ல.) நடந்தது என்ன என்பதை, தமிழ் பேசும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. அதற்காக, வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.

1939 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி அயல்நாடான போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர், செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மனியின் வசமாகி இருந்தது. அப்போது மேற்கைரோப்பிய வல்லரசு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும் செக்கோஸ்லாவாக்கியா மீதான படையெடுப்பை கண்டுகொள்ளவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எடுவார்ட் டலாடியே ஆகியோர் ஏற்கனவே ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டிருந்த படியால் ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் பசிக்கு மௌனமான அங்கீகாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால், போலந்து மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. போலந்து அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. அதன் அர்த்தம் போலந்து தாக்கப் பட்டால் பிரான்ஸ் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாஸி இராணுவம் போலந்து மீது படையெடுத்த நேரம், பிரான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஆகவே, பிரான்ஸ், பிரித்தானியாவின் துரோகத்தை மூடி மறைக்கும் நோக்கில், இன்று மீண்டும் கட்டின் படுகொலை விவகாரம் பரப்புரை செய்யப் படுவதாக எண்ண இடமுண்டு.

இதிலே இன்னொரு துரோகமும் இடம்பெற்றிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் பகுதியாகவிருந்த டான்சிக் (தற்போது: Gdansk,கிடான்ஸ்க்)போலந்தின் பெயரில் ஐ.நா. சபையால் நிர்வகிக்கப் பட்டது. (அப்போது அதற்கு வேறு பெயர். இலகுவான புரிதலுக்காக "ஐ.நா." என்ற சொற்பதம் பயன்படுத்தி உள்ளேன்.) பால்டிக் கடல் துறைமுக நகரமான டான்சிக்/கிடான்ஸ்க் தனியான பிரதேசமாக சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஹிட்லரின் படைகள் தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை கைப்பற்றும் வரையில் ஐ.நா. பேசாமல் இருந்தது.

முதலாம் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப் படுவதையும், மேற்கத்திய வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதையும், சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அத்துடன் பிரித்தானியாவும், பிரான்ஸும் நாஸி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர், எஞ்சியுள்ள ஒரேயொரு எதிரி சோவியத் யூனியன் மட்டும் தான். போலந்து மீது படையெடுத்த ஜெர்மன் படைகள், அடுத்ததாக சோவியத் யூனியனுக்கும் வராதென்பதற்கு என்ன நிச்சயம்?

அன்றைய சூழ்நிலையில், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்வது தவிர்க்க முடியாதது. அத்துடன் ஜெர்மனியின் எதிர்கால படையெடுப்பை தடுப்பதற்காக, போலந்தை ஒரு பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. உலக வரலாற்றில் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 19 ம் நூற்றாண்டில், சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவும், பிரித்தானியாவும் ஆப்கானிஸ்தானை எல்லையாக பயன்படுத்திக் கொள்ள இணக்கம் கண்டன.

அந்த வகையில், முந்திய ஜார் மன்னனின் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த, முதலாம் உலகப்போர் முடிவில் பறிகொடுத்த போலந்துப் பிரதேசத்தின் மீது படையெடுத்த சோவியத் யூனியன் அதை இணைத்துக் கொண்டது. அன்றிருந்த போலந்தின் ஆட்சியாளர்கள் தீவிர தேசியவாதிகள். கத்தோலிக்க மதவாதிகள். அந்நாட்டு தேசிய இராணுவமும் போலிஷ் இனவெறியூட்டப் பட்டிருந்தது. ஆகையினால், சோவியத் படைகள் கைப்பற்றிய போலந்துப் பிரதேசத்தில் இருந்த போலிஷ் இராணுவத்தினர் ஒருவர் விடாமல் கைது செய்யப் பட்டனர். ஆயிரக் கணக்கான போலிஷ் இராணுவ அதிகாரிகள், போர்வீரர்கள் பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப் பட்டனர்.

அந்தப் பிரதேசம் மிகக் குறுகிய காலமே சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு வருடத்திற்குள் நாஸி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தது. திடீரென நடந்த அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோவியத் செம்படை பின்வாங்கிக் கொண்டிருக்க, அந்த இடங்களை ஜெர்மன் நாஸிப் படை கைப்பற்றியது. பிளிட்ஸ் கிரீக் (Blitz krieg) எனப்படும் மின்னலடிப் போரில் ஜெர்மன் படைகள் போலந்தையும் தாண்டி சோவியத் யூனியனுக்குள் பிரவேசித்திருந்தன.

நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சோவியத் செம்படையினர், தாம் ஏற்கனவே பிடித்து அடைத்து வைத்திருந்த போலிஷ் இராணுவ வீரர்களை விடுதலை செய்தனர். அவர்களை தம்முடன் சேர்ந்து போராட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக போலிஷ் துணைப் படை ஒன்றும் அமைக்கப் பட்டது.

இதற்கிடையில், லண்டனில் இருந்த "நாடு கடந்த போலிஷ் அரசு" மாறிவரும் போர்ச் சூழல் கருதி சோவியத் யூனியனை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. அப்படியானதொரு நிலைமையில், சோவியத் செம்படையினர் தம்மிடமிருந்த இருபதாயிரம் போலிஷ் இராணுவவீரர்களை கட்டின் காட்டுக்குள் கொண்டு சென்று ஆறுதலாக சுட்டுக் கொன்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அதுவும் இதற்காக இரண்டு நாட்கள் ரயிலில் கொண்டு சென்று, ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் சுட்டுக் கொன்று புதைத்தனர் என்கிறார்கள்.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. 13-4-1943 அன்று, நாஸி ஜெர்மனி சர்வதேச ஊடகங்களை அழைத்து பின்வரும் தகவலை தெரிவித்தது. தமது படையினர் கைப்பற்றிய கட்டின் காட்டுப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு புதைக்கப் பட்டவர்கள் போலிஷ் வீரர்கள் என்றும் அறிவித்தனர். அதற்கு ஆதாரமாக போலிஷ் இராணுவ சீருடைகளையும் காட்டினார்கள். அன்று, "ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப் பட்ட போர்க்குற்றம்" என்று நாஸி ஜெர்மனி வழங்கிய தகவலைத் தான் இன்று வரையில் பலர் காவித் திரிகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில், நாஸிகள் தெரிவித்த "கட்டின் மனிதப் புதைகுழிகள்" என்ற அறிவிப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. அதாவது, சர்வதேச ஊடகங்கள் இதை பரபரப்பு செய்தியாக்கியதன் மூலம், நாஸிகள் எதிர்பார்த்த பிரச்சார வெற்றி கிடைத்தது. அதிலும், தீய வழியில் புகழ்பெற்ற நாஸி ஜெர்மனியின் அமைச்சர் கெபெல்ஸ் (சிலர் அதை கோயபல்ஸ் என்று தமிழில் உச்சரிக்கிறார்கள்.) பொய் சொல்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர்.

நாஸிகளின் அழைப்பை ஏற்று கட்டின் மனிதப் புதைகுழிகளுக்கு சென்று ஆராய்ந்த மேற்கத்திய தடயவியல் அறிஞர்கள், அந்தக் குற்றத்தை இழைத்தவர்கள் ரஷ்யர்களா அல்லது ஜெர்மனியர்களா என்பதை தம்மால் உறுதிப் படுத்த முடியாதுள்ளது என்றனர். மேலும், அது சமீபத்தில் தோண்டப்பட்ட புதைகுழிகளாக காணப் பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் அர்த்தம், நாஸிப் படைகளே போலிஷ் இராணுவ வீரர்களை கொன்று புதைத்து விட்டு சோவியத் யூனியன் மீது பழி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. அதற்கான காரணங்களும் வெள்ளிடை மலையாக தெரிகின்றன.

ஹிட்லரின் இனவாதக் கோட்பாட்டின் படி, போலிஷ் இனத்தவர்கள் "உன்ட்டர் மென்ஷன்"(Untermenschen- தாழ்ந்த மக்கள்) என இழிவாகக் கருதப் பட்டனர். போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் இனவெறிப் படையினர் கண்ணில் கண்ட போலிஷ் காரர்களை வகை தொகையின்றி கொன்று குவித்தனர். அதற்காக அவர்கள் வருந்தவில்லை. மேலும் போலந்தை ஜெர்மனியர்களின் காலனி ஆக்குவதும் ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. அதை "லேபென்ஸ் ரவும்"(Lebensraum- வாழிடம்) என்று நாஸிகள் நியாயப் படுத்தினார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த  செவ்விந்திய மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த இடங்களில், குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி, போலந்தில் வாழும் போலிஷ் மக்களை படுகொலை செய்து ஒழித்துக் கட்டி விட்டு, அந்தப் பிரதேசங்களை ஜெர்மனியுடன் இணைப்பதே ஹிட்லரின் குறிக்கோளாக இருந்தது. கட்டின் படுகொலைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலி மனிதாபிமானவாதிகள், நாஸிகளால் கொல்லப் பட்ட கோடிக்கணக்கான போலிஷ் மக்களை கண்டுகொள்ளாத மர்மம் என்ன? அதைச் சொல்வதால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

பனிப்போர் காலம் முழுவதும் கட்டின் படுகொலைகளுக்கு காரணம் நாஸி ஜெர்மன் படைகள் என்றே வெளியுலகில் நம்பப் பட்டது. பலர் அதை யார் செய்தது என்று நிரூபிக்க முடியாது என்ற நிலையெடுத்தனர். தொண்ணூறுகளுக்கு பிறகு தான் கட்டின் படுகொலை விவகாரம் மறுபடியும் சூடு பிடித்தது. போலந்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய போலிஷ் தேசியவாத சக்திகள், ரஷ்யாவை பகை நாடாக காட்டத் தொடங்கின. இந்திய-பாகிஸ்தான் பகைமை மாதிரி, போலந்து - ரஷ்யாவுக்கிடையிலான பகைமைக்கும் நீண்ட வரலாறுண்டு. அந்த வகையில், போலிஷ் மக்கள் மனதில் இன வெறுப்பை உண்டாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் கட்டின் படுகொலை நினைவுகூரப்படுகின்றது.

Tuesday, April 07, 2015

ஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்கவில்லை?


கென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

அதே நேரத்தில், ஜெர்மன் விங்க்ஸ் விமான விபத்தில் கொல்லப் பட்ட பயணிகள் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டிருந்தன.

பாரிஸில் சார்லி ஹெப்டோ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்காக, "Je suis Charlie" என்று பொங்கி எழுந்தவர்கள், கென்யா படுகொலைகள் பற்றி கவலைப் படவில்லை. எந்தவொரு உலக நாட்டின் தலைவரும் அனுதாபம் தெரிவிப்பதற்காக கென்யாவுக்கு செல்லவில்லை.

இத்தனைக்கும், அல் ஷஹாப் என்ற இஸ்லாமிய மதவெறிக் கும்பல், வேண்டுமென்றே கிறிஸ்தவ மாணவர்களை தெரிவு செய்து படுகொலை செய்திருந்தது. அதைக் கண்டித்து மேற்கத்திய கிறிஸ்தவர்கள் யாரும் பொங்கி எழவில்லை. சர்வதேச முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சீறிப் பாயவில்லை.

இந்த சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள். அதனால், அவர்களின் உயிர்கள் பெறுமதியற்றவை. இது "ஒற்றுமையற்ற" கருப்பர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை என்ற காரணத்தால், "சர்வதேச சமூகம்" (அதாவது வெள்ளையின மேலாண்மை நாடுகள்) பாராமுகமாக இருந்துள்ளன.

"ஏன் எந்தவொரு உலக நாடும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று அப்பாவி போலித் தமிழ்தேசியவாதிகள் கேட்கின்றனர். அதற்கும் இது தான் பதில். இலங்கையில் நடந்த ஈழப் போரில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள்.

சிங்கள - தமிழ் இனப் போரானது, ஒரே கருப்பின மக்களுக்கு இடையில், ஒற்றுமையில்லாத காரணத்தினால் நடக்கும் போராகவே மேற்குலகில் கணிக்கப் படுகின்றது. அதனால், வெள்ளையின மேலாண்மை நாடுகள் அது குறித்து கவலைப் படவில்லை. போலித் தமிழ்த் தேசியவாதிகள், இனிமேலாவது உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, June 05, 2011

தியன் அன் மென் படுகொலை : அம்பலமாகும் பொய்கள்!


இருபதாண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஏமாற்றிய, மேற்கத்திய பொய்ப்பிரச்சாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. 

1989 ல், "சீனாவின் தலைநகரான பெஜிங்கில் நடந்த மாணவர் போராட்டத்தை அடக்கிய போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக" அறிவிக்கப் பட்டது. பெய்ஜிங்கின் மையப் பகுதியான தியன் அன் மென் சதுக்கத்தில் இரத்தக் களரி ஏற்பட்டுள்ளதாகவும், சீன இராணுவம் மூவாயிரத்திற்கும் குறையாத மாணவர்களை கொன்று குவித்ததாகவும் வெளிவந்த செய்திகள் பொய்யானவை. அன்று, தியன் அன் மென்னில் படுகொலை எதுவும் நடக்கவில்லை. 

உண்மையை அம்பலப் படுத்தியுள்ள, விக்கிலீக்ஸ் கேபிளின் சாராம்சம் பின்வருமாறு:

கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள், பெய்ஜிங் நகரின் மையப் பகுதியை வாரக்கணக்காக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். பேரூந்து வண்டிகளைக் கூட வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தி வைத்து தடை போட்டிருந்தனர். வீதித் தடைகள் காவலரண்கள் போல, ஆள் மாறி ஆள் பாதுகாத்தனர். காவலரண்களுக்கு இடையில் "மோட்டர் சைக்கிள் நபர்கள்" தகவல் பரிமாற்றத்திற்காக ஈடுபடுத்தப் பட்டனர். தியன் அன் மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்த சுமார் மூவாயிரம் மாணவர்கள், காவல்துறையினரோ, இராணுவமோ நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி உட்சுற்றுக்கு விடுத்த அறிக்கையின் பிரகாரம், வாரக் கணக்காக தொடர்ந்த மாணவர்கள் போராட்டம் அரசின் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியதாக தெரிகின்றது. போராட்டக்காரரை கலைப்பதற்காக கலகத்தடுப்பு பொலிஸ் அனுப்பப் பட்டது. கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பொல்லுகள் சகிதம் சென்ற படைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. பாதுகாப்புப் படைகள் வன்முறை கொண்டு அடக்குவதற்கு முன்பே, ஆர்ப்பாட்டக் காரர்கள் தாமாகவே கலைந்து சென்று விட்டனர். இதனை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய நோபல் பரிசு பெற்ற Liu Xiaobo உறுதிப் படுத்தியுள்ளார்.

இந்த தகவல்களை நேரே கண்ட சாட்சியான சிலி நாட்டுத் தூதுவர் தெரிவித்துள்ளார். "சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் சுடவில்லை. அங்கே துப்பாக்கிப் பிரயோகம் எதுவும் நடக்கவில்லை." என்று கூறிய சிலி தூதுவரின் சாட்சியத்தை அமெரிக்க தூதரகம் புறக்கணித்துள்ளது. தியன் அன் மென் சதுக்கத்தில், செஞ்சிலுவைச் சங்க கூடாரத்தில் நின்ற வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரும் அதே போன்ற சாட்சியத்தை கூறினார். "திடீரென தோன்றிய இராணுவத்தைக் கண்டு தான் பயந்ததாகவும், ஆனால் அங்கே துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை," என்றும் கூறினார்.

1989 ம் ஆண்டு, சீனாவில் இருந்து செய்தி அறிவித்துக் கொண்டிருந்த பி.பி.சி. ஊடகவியலாளர் ஜேம்ஸ் மைல்ஸ், அன்று தான் தவறான தகவல்களை வழங்கியதை ஒத்துக் கொண்டார். "தியன் அன் மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை. உள்ளே நுழைந்த இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப் பின்னர் ஆர்ப்பாடக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்." இருபது வருடங்களுக்குப் பிறகு உண்மையை ஒத்துக் கொண்ட செய்தியாளர் மேலும் தெரிவித்ததாவது. "அங்கு நடந்ததை தியன் அன் மென் படுகொலை என்று கூறுவதை விட, பெய்ஜிங் படுகொலை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்." அதாவது, இராணுவம் சுட்டதில் சில கலகக்காரர்கள் மரணமடைந்தனர்.

அந்தச் சம்பவம் தியன் அன் மென் சதுக்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள Muxidi எனுமிடத்தில் நடந்தது. ஜூன் 3, இரவு 10 .30 மணியளவில் தெருவில் சென்ற இராணுவ வாகனத் தொடரணியை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்து தாக்கினார்கள். படையினர் முதலில் ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாவித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். அவர்களது முயற்சி பலிக்காமல் போகவே, நிஜத் தோட்டாக்களை பாவிக்க நேர்ந்தது. படையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு சிலர் பலியானதும், மிகுதிப் பேர் வெகுண்டு ஓடினார்கள். ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பியிருந்த வீதித் தடைகளும் அவர்களுக்கு எமனாக அமைந்ததன.

மேற்குறிப்பிட்ட தகவல்களை அன்றே சீன அரசு தெரிவித்திருந்தது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் பொய் கூறுவதாகத் தான் அன்று பலர் நம்பினார்கள். மாறாக "நாணயமான மேற்கத்தய கனவான்கள்" கூறுவதை உண்மை என்று நம்பி ஏமாந்தார்கள். ஏகாதிபத்திய அடிவருடிகளாக சேவகம் செய்யும் தமிழர்கள் சிலர், இன்றும் கூட ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.


மேலதிக தகவல்களுக்கு:
Wikileaks: no bloodshed inside Tiananmen Square, cables claim

-----------------------------------------------
This clip shows the facts and images that's long been swept under the rug by Western media---PLA troops were attacked by violent mobs at Tiananmen Square and surrounding areas in Beijing on June 4th, 1989. You see the burnt out military trucks, armored personal carriers, and even bystanders fiddling with machine guns. This clip comes straight from HK TV reporting which captures the results of a night of mob violence. It's time for the truth be told.

Monday, April 18, 2011

தென்னிலங்கையில் கொலையுதிர் காலம்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 16)


"நாடே சுடுகாடாகியது!" 1988, 1989 ஆண்டுகளில் தென்னிலங்கையில் வாழும் பாக்கியம் பெற்றவர்கள், அதனை நேரில் அனுபவித்திருப்பார்கள். பெருந்தெருக்களில் வாகனங்களில் பயணம் செய்வோர், எங்காவது ஒரு இடத்தில், பிணத்தை எரித்து எஞ்சிய சாம்பலை காணாமல் போக முடியாது. நாட்டில் சுடலைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது போலும். அதனால் தெருக்கள் எல்லாம் தற்காலிக சுடலைகளாகிக் கொண்டிருந்தன.

ஜேவிபி இயக்க உறுப்பினர்கள், அல்லது ஆதரவாளர்கள் ஆகியோர், பாதுகாப்புப் படையினரால் வேள்வித்தீயில் பலி கொடுக்கப்பட்டனர். வேள்விக்கடாவின் கழுத்தில் 'டயர்' போட்டு எரிப்பது, அரச கொலைப் படைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. ஜேவிபியினர் அழிந்த பின்னரும், அந்தக் கதைகள் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர்; "கழுத்தில் டயர் மாலை போடுவோம், ஜாக்கிரதை." என்று பயமுறுத்தினார்.

கொழும்புக்கு அருகில் ஓடும் களனி ஆற்றில், மக்கள் இறங்கிக் குளிக்க அஞ்சினார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. ஜேவிபி சந்தேகநபர்களாக பிடிக்கப்படும் பெண்களை சித்திரவதை செய்து, அவர்களின் உயிரற்ற நிர்வாண உடல்களை நகர மத்தியில் போடுவார்கள். அன்றைய நாட்களில், இவற்றைக் காண நேரும் பொது மக்கள் பீதியுற்றனர்.

சில வருடங்களுக்குப் பின்னர், அந்த அட்டூழியங்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப் பட்டன. யுஎன்பி அரசை தேர்தலில் தோற்கடிப்பதற்காக, சந்திரிகாவின் ஐக்கிய முன்னணி கட்சியினர் அந்தக் காட்சிகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டினார்கள். (மலினமான தேர்தல் பிரச்சார உத்தியை பெண்கள் அமைப்புகள் கண்டித்திருந்தன.) அது போன்றே சூரியகந்த எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியும், ஐக்கிய முன்னணி வெற்றியை உறுதி செய்திருந்தது.

சூரிய கந்த புதைகுழியில் கொன்று புதைக்கப் பட்டவர்கள், விடலைப் பருவத்து பாடசாலை மாணவர்கள். ஜேவிபி ஆதரவுத் தளமாக திகழ்ந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் என்பதால் அந்த கொடூரமான தண்டனை. பல வருடங்களாக அவர்கள் "காணாமல் போனோர்" பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர். தென்னிலங்கையில் அந்த இரண்டு வருடங்களில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேராவது காணாமல் போயுள்ளனர். அவர்களும் எங்காவது இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம். இலங்கையின் வட பகுதியிலும் இளைஞர்கள் காணாமல் போவதும், மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் படுவதும் நடந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தனித்தனியாக இயங்கி வந்த காணாமல் போனோர் அமைப்புகள், தற்போது ஐக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாக செயற்படுகின்றன. "காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச கமிட்டி" யின் ஆதரவும் கிட்டியுள்ளது.

அன்றைய காலம், காணாமல் போகச் செய்வதிலும், கொலை செய்வதிலும் தேர்ச்சி பெற்ற கொலைப் படை ஒன்று இயங்கியது. அது தன்னை "பச்சைப் புலிகள்" என்று அழைத்துக் கொண்டது. அன்றைய ஆளும் கட்சியான யுன்பியின் வர்ணம் பச்சை என்பது குறிப்பிடத் தக்கது. அரச பாதுகாப்புப் படைகளை சேர்ந்தவர்களே, "பச்சைப் புலிகள்" என்ற பெயரில் அவதாரம் எடுத்திருந்தனர். அது ஒரு சட்டத்திற்கு புறம்பான, ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சரையும் தவிர வேறு யாருக்கும் பதில் கூற கடமைப் பட்டிராத அமைப்பு. சீருடை அணியாமல் சிவில் உடையுடன், இலக்கத் தகடு இல்லாத வாகனங்களில் திரிவார்கள். அவர்கள் யாரைக் கடத்திச் சென்றாலும், அல்லது கொலை செய்தாலும், பழி முழுவதும் "இனந்தெரியாதோர்" தலையில் விழுந்தது. அரச பாதுகாப்புப் படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்டன.

ஜேவிபி ஒன்றும் புனிதமான இயக்கமல்ல. போலீஸ்காரர்களை இலக்கு வைத்து தாக்கி அழித்ததை விட, கொல்லப்பட்ட "துரோகிகளே" அதிகம். ஜேவிபி அகராதி படி, யாரும் துரோகி ஆகலாம். ஆளும் கட்சியான யுஎன்பி உறுப்பினர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்த ஆதரவாளர்கள், போலிசுக்கு காட்டிக் கொடுப்பவர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டனர். ஜேவிபி ஆதரவாளர்கள், துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நியாயம் என்று வாதாடினார்கள்.

இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக கருதப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் ஜேவிபியுடன் முரண்பட்ட குழுவொன்று, அரசுடன் கூட்டுச் சேர்ந்தது. ஜேவிபி உறுப்பினர்களையும், மறைவிடங்களையும், போலிசுக்கு காட்டிக் கொடுத்தார்கள். "ஜேவிபி தான் எமது முதலாவது எதிரி. அரசு இரண்டாவது எதிரி. ஜேவிபி பாசிசத்தை அழிப்பது அவசரக் கடமை." என்று தமது செயலுக்கு நியாயம் கற்பித்தனர். ஜேவிபியில் இருந்த பிரிந்த எல்லோரும் அரசுடன் கூட்டுச் சேரவில்லை. சில ஆளுமையுள்ள நபர்கள் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டனர். இலங்கை அரசையும், ஜேவிபியையும் விமர்சித்து எழுதி வந்தனர்.

ஜேவிபி பிரகடனம் செய்த "துரோகிகள் பட்டியல்" நீண்டு கொண்டே சென்றது, அதன் அஸ்தமனத்திற்கு காரணமாயிற்று. அரசை விட ஜேவிபி தான், நாடளாவிய கொலைக் கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப் பட்டது. இறுதியில் ஜேவிபி உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களையும் தவிர மற்றவர்களின் ஆதரவை இழக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக இராணுவத்தை பகைத்துக் கொண்டமை, மனிதப் பேரழிவுக்கான பாதையை திறந்து விட்டது. சிறிலங்கா அரசு, பாதுகாப்புப் படைகள் முழுவதையும் ஜேவிபியுடன் போரிட பயன்படுத்தியது. இதனால், முன்னர் இராணுவத்தில் சேர்ந்திருந்த ஜேவிபி உறுப்பினர்களும் எதிரிகளானார்கள்.

"சேவையில் உள்ள ஜேவிபி உறுப்பினர்கள், உடனடியாக இராணுவத்தை விட்டு விலகி எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்," என்று ஜேவிபி அறிவித்ததாக அன்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. "இராணுவத்தை விட்டு விலகாதவர்கள், எதிரிகளாக கருதப் படுவார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் படுவார்கள்." இவ்வாறு ஜேவிபி அறிவித்திருந்தது. அப்படியான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், "தேசப்பக்த விடுதலை முன்னணி" பெயரில் ஒட்டப் பட்டிருந்தன.

உண்மையிலேயே பல இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் பட்டனர். அதற்கு பழி வாங்கும் முகமாக, ஜேவிபி யை சேர்ந்தோரின் குடும்பத்தவர்கள் கொல்லப் பட்டனர். அரச படைகளால் படுகொலைக்கு ஆளாவோர் ஜேவிபி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. துரதிர்ஷ்டவசமாக ஜேவிபி காரர்களை நண்பர்களாக கொண்டிருந்தவர்களும் கொல்லப்பட்டனர். சிலநேரம் தனது நண்பன் ஒரு ஜேவிபி உறுப்பினர் என்று அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அப்படியான சம்பவங்கள் நடந்ததாக நிரூபிக்கவும் முடியாது.

எனக்குத் தெரிந்த கதை ஒன்று இரத்தத்தை உறைய வைத்தது. தமது பிள்ளை காணாமல் போனதால் கவலையுடன் தேடிக் களைத்த குடும்பத்தினரிடம், ஒரு குழு ஆயுதபாணி இளைஞர்கள் தொடர்பு கொண்டனர். காணாமல்போன நபர் தம்மிடம் பத்திரமாக இருப்பதாகவும், கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர். அதனை கொண்டாடுவதற்காக இறைச்சி கொண்டு வந்து சமைக்க கொடுத்தனர். எல்லோரும் அமர்ந்து விருந்து சாப்பிட்ட முடிந்த பின்னர், அந்த அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். "நீங்கள் இப்போது சாப்பிட்டது உங்கள் மகனது இறைச்சி!" அந்தக் கதை வதந்தியாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

ஜேவிபி, "இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யப் போவதாக" அறிவித்தது, அரசின் சூழ்ச்சி என்று சிலர் கூறுகிறார்கள். எது உண்மை, எது பொய் என்பது தெரியாமலே போகலாம். ஜேவிபியின் தலைவர்கள், உறுப்பினர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். மேலும் ஜேவிபியுடன் தொடர்புடைய குடும்பங்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் என்று பல நிராயுதபாணிகளும் கொல்லப்பட்டனர். இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எழுபதாயிரமாக இருக்கலாம். ஜேவிபி பிற்போக்குவாத தலைமையின் தவறுகள் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதை மறுக்க முடியாது. அதே நேரம், இடது-தேசியவாத எழுச்சி கூட தனது நலன்களுக்கு விரோதமானது என்று சர்வதேச சமூகம் கருதியது. உழைக்கும் மக்களின் மனக்குறைகளை கணக்கில் எடுக்காததால், மக்கள் மீண்டும் மீண்டும் பிற்போக்கு சக்திகளையே நாடிச் செல்கின்றனர்.

யுஎன்பி ஆட்சியில் நடந்த படுகொலைகளுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்ததால் யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. யுஎன்பி அரசின் கொலைக் குழுக்கள் செய்த படுகொலைகளை பிரச்சாரம் செய்து, ஆட்சியைப் பிடித்த ஐக்கிய முன்னணி அரசு, எந்த விசாரணையும் செய்யவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற பாதைக்கு திரும்பிய மிதவாத ஜேவிபி கூட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேர்தலில் கட்சிகள் மாறினாலும், அரசு இயந்திரம் ஒன்று தான். அரசுக்கு எதிராக கிளம்பும் சக்திகள், சிறுபான்மை இனமாக இருந்தாலும், சொந்த இனமாக இருந்தாலும், ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டு வந்துள்ளது. இதிலிருந்து பாடம் படிக்காதவர்கள், வரலாற்றை மறுபடியும் உற்பத்தி செய்கின்றனர்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்