Tuesday, February 17, 2015

அரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- பண்பாட்டுக் கூறுகள்

பழைய மரக்கேஷ் நகரம் 

புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தங்களுக்கும் அரேபியருக்கும் இடையில் ஜென்மப் பகை இருப்பது போன்று காட்டிக் கொள்வார்கள். தாங்கள் அரேபியரை விட மேலானவர்கள் (அனால், வெள்ளையரை விட கீழானவர்கள்) என்று கருதிக் கொள்வோரும் உண்டு. இது உயர்வுச் சிக்கலும், தாழ்வுச் சிக்கலும் கலந்த மனோவியல் பிரச்சினை. 

பெரும்பான்மைத் தமிழர்கள் இந்துக்கள், பெரும்பான்மை அரேபியர்கள் முஸ்லிம்கள் என்ற மத வேறுபாட்டுக்கு அப்பால், இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையில் பல கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுகின்றன. சிலநேரம் 80% சதவீத ஒற்றுமை இருக்கிறதோ என்று ஐயுறும் அளவிற்கு, அவர்களது நடத்தைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் அமைந்துள்ளன.

நான் வழமையாக முடி வெட்டிக் கொள்வதற்காக, வீட்டுக்கு அருகில் இருக்கும் மொரோக்கோ - அரேபியர் ஒருவரின் சலூனுக்கு செல்வதுண்டு. அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கே அரட்டை அடிப்பதற்காக கூடுவார்கள். (நம்ம ஊர் சலூன் ஞாபகம் வருகிறதா?) அப்படிக் கூடும் அரபி இளைஞர்கள் பலதையும் பத்தையும் பற்றி அலசுவார்கள். அவர்கள் அரைவாசி அரபி, அரைவாசி டச்சு மொழி கலந்து பேசுவதால், எனக்கும் சிலது விளங்கும். சொற்கள் மட்டுமல்ல, வசனங்கள் கூட இரண்டு மொழிகளிலும் கலந்து  கதைப்பார்கள். 

எனது ஐந்து வயது மகன் செல்லும் ஆரம்ப பாடசாலையில், நிறைய மொரோக்கோ - அரபிக் குழந்தைகள் படிக்கின்றன. அவர்களை கூட்டி வரும் தாய், தந்தையர் தமது பிள்ளைகளுடன், டச்சு மொழியில் மட்டுமே உரையாடுவார்கள். தமிழர்களைப் போன்று தான் அரபுக் காரர்களும். தங்களது பிள்ளை டச்சு போன்ற ஐரோப்பிய மொழி கதைப்பதைக் கேட்டு ஆனந்தம் அடைவார்கள். 

காரணம் கேட்டால், சிறு வயதில் இருந்தே பிள்ளை டச்சு மொழியை கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் நன்றாகப் படிக்கும் என்று சொல்வார்கள். எல்லாப் பெற்றோருக்கும் தம் பிள்ளை நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால், அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது.

ஒரு தடவை, சுற்றுலாப் பயணியாக மொரோக்கோ நாட்டிற்கு சென்றிருந்தேன். மொரோக்கோ ஒரு காலத்தில் பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. அகடிர் நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் அமர்ந்திருந்த நேரம், தனியாக இருந்த அழகான யுவதியுடன், ஒரு இளைஞன் பேச்சுக் கொடுத்தான். 

இருவரும் மொரோக்கோவை தாயகமாக கொண்ட, அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களது அறிமுக உரையாடல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் அமைந்திருந்தது. நமது தமிழர்களில் பலர், ஆங்கிலத்தில் கதைப்பதை பெருமையாகக் கருதுவது போன்று, மொரோக்கோ அரேபியர்கள் பிரெஞ்சு கதைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.

நான் எந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக சென்றாலும், சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும் சாதாரண பேருந்து சேவையில் பயணம் செய்வது வழக்கம். அகடிர் நகரில் இருந்து மரக்கேஷ் நகருக்கு செல்லும் கடுகதி பேருந்து வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த வண்டி, இடையில் பிரேக் டவுன் ஆகி ஓடாமல் நின்று விட்டது. 

அதனால், வேறொரு வண்டி வரும் வரையில் பயணிகள் எல்லோரும் இறங்கி தெருவில் நின்று கொண்டிருந்தோம். பேருந்து வண்டியில் பயணம் செய்த மொரோக்கோக் காரர்கள், அநேகமானோர் மத்திய தர வர்க்கத்தினர். முன் பின் அறிமுகமில்லாத அவர்களும் தமக்குள் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடினார்கள்!

போர்த்துகேயரின் காவல் கோட்டை,
அகடிர் 
மொரோக்கோவில் அகடிர் நகரத்தை, தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல வருடங்களாக, போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பாண்டிச்சேரி மாதிரி அதுவும் ஒரு கடற்கரைப் பட்டிணம். அகடிர் நகர மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில், ஒரு இளம் மொரோக்கோ தம்பதிகள் அறிமுகமானார்கள். 

சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய அவர்கள் என்னுடன் மணிக் கணக்கில் உரையாடினார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எளிமையாக நடந்து கொண்டாலும், அவர்களின் மனதில் ஒரு வகை உயர் சாதிப் பெருமிதம் இருப்பது தெரிந்தது. அதாவது, இறைதூதர் முகமது நபியின் வம்சாவளியினர் என்று தம்மைக் கூறிக் கொண்டனர். அது குறித்த தகவல்களை, பரம்பரை பரம்பரையாக கடத்திக் கொண்டு வருவதாகக் கூறினார்கள்.

மொரோக்கோ சமூக அமைப்பிற்கும், இந்திய, இலங்கை சமூக அமைப்பிற்கும் இடையில் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகமாக இருந்ததை, அந்த இளம் தம்பதிகளுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அரசியல், பொருளாதாரம், சமூகம், என்று பல மட்டங்களிலும் நிறைய ஒற்றுமைகள் காணப் பட்டன.

மொரோக்கோவில் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகளின் பிரதானமான தொழில், பொது மக்களின் பணத்தை சுரண்டுவது தான். ஆளும் கட்சி பதவியில் இருக்கும் ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடித்து சேர்த்த பின்னர், அடுத்த தேர்தலில் வென்று வரும் எதிர்க் கட்சி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடிப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொள்ளையடிப்பதற்கு வசதியாக ஐந்து வருட காலம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால், மொரோக்கோ நாட்டில் ஒருவர் மட்டும் தனது ஆயுள் காலம் முழுவதும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார். மக்கள் அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது. அவர் தான் மொரோக்கோவின் மன்னர்!

"உலகில் பெரிய பள்ளிவாசல்",
காசப்பிளாங்கா 
மொரோக்கோவின் மன்னர் காலம் முழுவதும் நாட்டை சுரண்டுவது போதாது என்று, காசாபிளாங்கா நகரில் "உலகில் பெரிய பள்ளிவாசல்" ஒன்றைக் கட்டி, அதிலும் பெரும் பணம் ஊழல் செய்துள்ளார். 

நமது ஊரில் கோயில் நிதி சேகரிப்பது என்ற பெயரில், ஒரு பட்டாளமே திரண்டு வந்து காசு சேர்த்துக் கொண்டு செல்வதைப் போன்று தான் மொரோக்கோவிலும் நடந்துள்ளது. இந்தக் காலத்தில் வர்த்தக நோக்கத்திற்காக கோயில் கட்ட நிதி திரட்டுகிறார்கள் என்று சாதாரண தமிழ் மக்கள் பேசிக் கொள்வதைப் போன்று தான், மொரோக்கோவில் சாதாரண அரபு மக்களும் பேசிக் கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்?

அரசியலில் மட்டும் தான் ஊழல் என்பதில்லை. வர்த்தக நிறுவனங்களிலும் ஊழல் தான் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். ஏனென்றால், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, நிறுவனத்தின் முதலாளி அல்லது மனேஜரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் உறவினர்கள், நண்பர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். 

அப்படி யாரையும் தெரியாது என்றால், நிறையப் பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், திறமை இல்லா விட்டாலும் மனேஜருடன் நெருக்கமாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாவாடை எந்தளவுக்கு உயருகின்றதோ, அந்தளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப் படுமாம்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் எந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்களோ, மொரோக்கோவில் முஸ்லிம் பெண்களும் அந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ளதைப் போன்று, இன்னமும் அழியாத நிலப்பிரபுத்துவ கால பழக்க வழக்கங்கள், மொரோக்கோவிலும் உள்ளன. வெளியில் உள்ளவர்கள் அதைப் பார்த்து விட்டு, "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழமைவாத மொரோக்கோ காரர்களும் அப்படி சொல்லிக் கொள்வதுண்டு.

நான் மொரோக்கோவில் எல்லா இடங்களுக்கும் செல்லா விட்டாலும், குறைந்தது மூன்று, நான்கு நகரங்களைப் பார்த்து விட்டேன். எங்கேயும் முக்காடு போட்ட இளம் பெண்களைக் காணவில்லை. மிக மிக அரிதாகத் தான் இளம் யுவதிகள் முக்காடு அணிகிறார்கள். அதற்கு மாறாக, வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் வயதான குடும்பப் பெண்மணிகள் முக்காடு அணிகிறார்கள்.

சரித்திர காலத்தில் இருந்து, பொதுவாக மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் அரேபியர்கள் முக்காடு அணிவதில்லை. அது அவர்களது பண்பாட்டில் இல்லை. ஆனால், இன்று அது பழமைவாத கலாச்சார அடையாளமாக பின்பற்றப் படுகின்றது.

அதாவது, இந்தியாவில் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பப் பெண்மணிகள் சேலை அணிந்து செல்வது போன்று தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அநேகமாக இளம் வயதில் ஐரோப்பிய பாணி உடை அணியும் நங்கையர்கள், திருமணமாகி குழந்தை பெற்றதும் அடக்கமான உடை (முக்காடு) அணியத் தொடங்கி விடுவார்கள்.

அதே நேரத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளம் மொரோக்கோ பெண்கள் பெருமளவில் முக்காடு அணிகிறார்கள். அந்தப் பழக்கமும் அண்மையில், கடந்த இருபதாண்டுகளுக்குள் தோன்றியது தான். அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறார்களாம். இதிலும் தமிழர்களுடன் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். 

புலம்பெயர்ந்த நாட்டில், "பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம், கோயில் திருவிழா செய்கிறோம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகிறோம், தமிழ்ப் பெண்கள் புடவை உடுத்துகிறார்கள்..." என்றெல்லாம் கூறி தமிழ் இனப் பெருமை பேசிக் கொள்வதில்லையா? அதையே தான் அரேபியர்களும் செய்கிறார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.

இந்து இந்தியாவில் உள்ளதைப் போன்று தான், முஸ்லிம் மொரோக்கோவிலும் பெண்களின் "கற்புக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் எத்தனை பெண்களுடனும் உறவு வைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண் திருமணம் முடிக்கும் வரையில் கன்னியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பாலியல் சுதந்திரம் அனுபவிக்கும் ஆண் சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்க மறுப்பார்கள். "படிக்கப் போகிறேன் என்று சொல்லி கண்டவனுடன் காதலித்துக் கொண்டு திரிகிறாயா? வீட்டுக்குள்ளே  இருடி...!" என்று சொல்லி தம்பியே அக்காவை அடக்கி வைக்கும் சம்பவங்கள் வழமையாக நடக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம், முன்பிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், பெண்களும் வீட்டுக்கு வெளியே சென்று, படித்து, பட்டம் பெற்று, வேலை செய்யும் லிபரல் சமுதாயத்தில், அது சில நேரம் கேலிக்குரியதாகி விடுகின்றது. மொரோக்கோ பெண்களுக்கும் காதலிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அவர்களின் காதலில் தலையிடுவது அரசாங்கம் அல்ல, மாறாக குடும்ப உறுப்பினர்கள்.

திருமணத்திற்கு முன்னர் காதலிக்கும், சிலநேரம் காதலனுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் நிறையப் பேர் மொரோக்கோவில் உள்ளனர். அவர்களது காதல் திருமணத்தில் முடியாவிட்டால் அதோ கதி தான். இந்திய சமுதாயத்தில் அப்படியான பென்னுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ, அது அவ்வளவையும் மொரோக்கோ பெண்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணக்கார வீடுகளில், அந்தப் பிரச்சினையை அப்படியே அமுக்கி விடுவார்கள். ஆனால், நடுத்தர வர்க்க, ஏழைக் குடும்பங்களில் கெளரவம் பார்ப்பார்கள். அதனாலேயே குடும்பங்களில் அடிதடிகள் நடக்கும்.

தமிழ் சமூகத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று தெரிந்தவர்களுக்கு, நான் இங்கே விரிவாக சொல்லிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கிறது. தமிழர்கள், அரேபியர்களுக்கு இடையிலான இது போன்ற ஒற்றுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்
அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்
பண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்

1 comment:

வலிப்போக்கன் said...

ஏமாற்றுவதுிலிருந்து கொள்ளையடிப்பது பீத்திக் கொள்வது வரை ஏகப்பட்டஒற்றுமைகள் விதிவிலக்கு இல்லாமல் இருக்கின்றன.