Wednesday, December 06, 2017

ட்ராஸ்கியின் கரங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தது!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - இரண்டு)

"ட்ராஸ்கி எந்தக் கொலை பாதகச் செயலையும் செய்திராத, எப்போதும் எழுதிக் கொண்டிருந்த அப்பாவி" என்பது போன்றதொரு மாயையை ட்ராஸ்கிசவாதிகளும், மேற்குலகமும் சேர்ந்து உண்டாக்கி வைத்துள்ளன. அதில் எந்த உண்மையும் இல்லை. இன்னொரு விதமாக சொன்னால், ட்ராஸ்கியின் கையில் அதிகாரம் இருந்த காலத்தில் அவர் "இன்னொரு ஸ்டாலினாக" இருந்தார். அக்டோபர் புரட்சியின் பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசியல் கைது ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நடந்தது.

ரஷ்யாவில் விளாடிமிர் பூர்த்சாவ் (Vladimir Burtsav) என்ற பிரபலமான இடதுசாரி எழுத்தாளர் இருந்தார். சார் மன்னன் காலத்தில் ஊடுருவலாளர்கள், உளவாளிகள், போன்றவர்களை அம்பலப் படுத்தி எழுதி வந்தார். இதனால் ஒரு தடவை நாடுகடத்தப் பட்டு திரும்பி வந்திருந்தார். சிறிது காலம் போல்ஷெவிக் கட்சியை ஆதரிப்பதாக போக்குக் காட்டி விட்டு, பின்னர் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர்களை ஜெர்மன் கைக்கூலிகள் என்று தூற்றி வந்தார். அத்துடன், யூதர்களுக்கு எதிரான "சியோன் ஞானிகளின் அறிக்கை" நூல் வெளியிடவும் காரணமாக இருந்தவர்.

அக்டோபர் புரட்சிக்கு முன்னர், போல்ஷெவிக் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று நினைத்து அதில் சேர்ந்து கொண்ட மாற்று இயக்கத்தவர் பலர் இருந்தனர். பூர்த்சாவ் அப்படியான கட்சி மாறிகளை தோலுரித்துக் கொண்டிருந்தார். ட்ராஸ்கியும் அப்படியானவர் தானே? அதனால் தானோ என்னவோ புரட்சி நடந்த அன்றிரவே பூர்த்சாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். ஒரு வருட சிறைவாசத்தின் பின்னர், எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி போட்ட கருணை மனுவிக்கிணங்க விடுதலை செய்யப் பட்டு நாடுகடத்தப் பட்டார்.

1917 ம் ஆண்டு புரட்சி நடந்திருந்தாலும், அதற்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போர் தான் முக்கியமானது. அந்த யுத்தத்தில் நடந்த பேரழிவுகள், மனிதப் படுகொலைகள் ஏராளம். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் "வெண் படைப் பயங்கரத்திற்கு எதிரான செம்படைப் பயங்கரம்" பற்றியும் விவரித்து எழுதி இருக்கிறார்கள்.

இதை நாம் "புரட்சிகர வன்முறை" என்று அழைப்பதே பொருத்தமானது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் பிரான்ஸில் இரத்த ஆறு ஓடியது. அப்போது நடந்த படுகொலைகள், சொத்தழிவுகள், தேவாலய இடிப்புகள் எண்ணிலடங்காதவை. அதே மாதிரியான நிலைமை தான் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் ஏற்பட்டிருந்தது.

அப்போது போல்ஷெவிக்குகள் அதை "போர்க்கால கம்யூனிசம்" என்று அழைத்தனர். அதாவது, புரட்சியின் குறிக்கோளான சோஷலிச சமுதாய மாற்றத்தை உடனடியாக கொண்டு வர முடியாத நிலைமை. ஏனெனில், நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்ட நேரத்தில் போரை நடத்துவதே முதன்மையானது. இருப்பினும், செம்படை கைப்பற்றும் பகுதிகளில் தற்காலிக ஏற்பாடாக சில மாற்றங்களை நடைமுறைப் படுத்தலாம். அதற்கு வன்முறை பாவிக்கலாம்.

ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, தான் கைப்பற்றிய இடங்களில் "போர்க்கால கம்யூனிச அதிகாரத்தை" நிலைநாட்டியது. அதன் அர்த்தம், நிலவுடமையாளர்கள், பணக்கார விவசாயிகள், உள்ளூர் முதலாளிகள் போன்றவர்கள், எந்த வித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் பட்டனர். கூட்டுப் பண்ணைத் திட்டம் அமுல் படுத்தப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன.

செம்படைக்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். அதாவது பிற்காலத்தில் ட்ராஸ்கி எதையெல்லாம் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" என்று சொல்லித் திரிந்தாரோ, அவை எல்லாம் அன்றே ட்ராஸ்கியால் நடைமுறைப் படுத்தப் பட்டன! அதாவது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

அன்று ரஷ்யாவில் யார் யாரை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்று தெரியாத குழப்ப நிலை. செம்படைக்கும், வெண்படைக்கும் இடையில் போர் நடந்தது என்பது மிகவும் இலகுபடுத்தப் பட்ட பதில். சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படை மட்டுமல்லாது, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி என்ற போல்ஷெவிக்குகளுக்கு எதிரான இன்னொரு இடதுசாரி கட்சியும் தனியே ஆயுதக்குழு அமைத்து செம்படையை போரிட்டது. குறிப்பாக சைபீரியா பகுதிகளில் இருந்த விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. இறுதிப் போரில் அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்.

புரட்சியின் ஆரம்ப காலத்தில், சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் கட்சியுடன் சேர்ந்து அரசமைத்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப் பட்டநேரம், போல்ஷெவிக் கட்சியினர் மட்டுமல்லாது, சிறிய அளவில் சோஷலிச புரட்சியாளர் கட்சியினரும், பெருமளவில் அனார்க்கிஸ்டுகளும் (நிர்ப்பந்தத்தின் பேரில்) சேர்க்கப் பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் லெனினின் போல்ஷெவிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒன்று கலந்தவர்கள். (இதுபற்றி உத்தியோகபூர்வ வரலாற்று நூல்களில் எழுதப் படவில்லை. இருப்பினும் அவ்வாறு தான் நடந்தது என்பது மக்களில் பலருக்கும் தெரிந்திருந்தது.)

அதே நேரம் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி தனியாக இயங்கி வந்தது. முதலாம் போரை நிறுத்துவதற்காக, லெனின் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் போட்டதை காரணமாகக் காட்டி சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் அரசைக் கவிழ்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போது தான் அவர்களது ஆயுதக் குழுவும், வெண் படையுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டது.

இதே நேரம், தலைநகரில் லெனினைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப் படுத்தியவர் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர். லெனின் கொலை முயற்சியின் எதிரொலியாக, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் வேட்டையாடப் பட்டனர். அதன் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் ஒன்றில் சிறையில் அடைக்கப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

சோஷலிச புரட்சியாளர்கள் கட்சிக்கு எதிரான அழித்தொழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம், ட்ராஸ்கி அதிகாரத்தில் இருந்தார். அன்று அவர் இதையெல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஸ்டாலினின் சர்வாதிகாரம் பற்றிப் பேசுவது உள்நோக்கம் கொண்டது. இது ட்ராஸ்கியின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது. "லெனின் மீதான கொலை முயற்சிக்கு பின்னர் யாரும் கைது செய்யப் படவில்லை" என்று, இன்றைய ட்ராஸ்கிஸ்டுகள் பரப்பும் கதைகளில் உண்மை இல்லை. அது வழமையாக ட்ராஸ்கியின் குற்றங்களை மறைப்பதற்காக சொல்லப்படும் பொய்களில் ஒன்று.

"வெண் படைக்கு சற்றும் குறையாத வகையில் செம்படையினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்" என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. எதிரிக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை சுட்டுக் கொன்றமை, கட்டாய ஆட்சேர்ப்புகள், தானியங்களை பறிமுதல் செய்தல், என்று பல போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பிலும் நடந்துள்ளன.

சில இடங்களில் போர் வன்முறைகளால் வெறுப்படைந்த விவசாயிகள் கலகம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. நகரங்களுக்கு உணவு கொண்டு செல்லும் வழிகளை விவசாயிகள் தடுத்தனர். போரினால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக பல இடங்களில் பட்டினிச் சாவுகளும் நடந்துள்ளன. இவை எல்லாம் ட்ராஸ்கி செம்படைக்கு தலைமை தாங்கிய காலத்தில் நடந்தவை! ஆனால், மேற்கத்திய அல்லது ட்ராஸ்கிச பரப்புரையாளர்கள் அதை எல்லாம் தந்திரமாக ஸ்டாலினின் கணக்கில் போட்டு விட்டனர். எல்லாப் பழியும் ஸ்டாலினுக்கே!

ட்ராஸ்கி செய்த படுகொலைகளின் உச்சகட்டம் குரோன்ஸ்டாட் தீவில் இடம்பெற்றது. குரோன்ஸ்டாட் (Kronstadt: ஒரு ஜெர்மன் பெயர்) என்பது பின்லாந்துக்கு கீழே, சென் பீட்டர்ஸ்பெர்க் அருகில் அமைந்துள்ள ஒரு தீவு. அங்கு ஒரு கடற்படைத் தளம் இருந்தது. (இப்போதும் இருக்கிறது) குரோன்ஸ்டாட் கடற்படையினர், அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்காற்றினார்கள். அதைப் பற்றி ட்ராஸ்கியும் "புரட்சியின் மகிழ்ச்சியும், பெருமையும்" என்று புகழ்ந்து பேசி இருந்தார். அப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய குரோன்ஸ்டாட் கடற்படையினர், அதே ட்ராஸ்கியால் படுகொலை செய்யப் படுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

உண்மையில், உள்நாட்டுப் போர்க் காலத்தில் நடந்த அளவுகடந்த வன்முறைகள், அதனால் ஏற்பட்ட பஞ்சத்திற்கு ட்ராஸ்கியும் பொறுப்பேற்க வேண்டும். அன்று நடந்த போரின் விளைவாக, நாடு முழுவதும் உணவுத் தட்டுப்பாடும், பஞ்சமும் நிலவியது. அதனால், குரோன்ஸ்டாட் தீவுக்கு உணவு விநியோகம் நடக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த கடற்படையினரும் மக்களும் போல்ஷெவிக் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அங்கு அனார்க்கிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது சோவியத் அமைப்பு போல்ஷெவிக் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனித்து இயங்கியது.

பிற்காலத்தில் "ஸ்டாலின் மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்கினார்" என்று புலம்பித் திரிந்த ட்ராஸ்கி 1921 ம் ஆண்டு செய்தது என்ன? போல்ஷெவிக் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து கலகம் செய்த குரோன்ஸ்டாட் சோவியத் மீது குண்டு போட உத்தரவிட்டார். ஏற்கனவே பஞ்சத்தால் பாதிக்கப் பட்டிருந்த குரோன்ஸ்டாட் கடற்படையினர் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ட்ராஸ்கி தலைமையிலான செம்படை வீரர்கள் குரோன்ஸ்டாட் சோவியத்தை கலைத்ததுடன், கிளர்ச்சியில் சம்பந்தப் பட்டவர்களைப் பிடித்து சுட்டுக் கொன்றனர். எஞ்சியவர்களை சிறைப் பிடித்தனர். குறிப்பிட அளவினர் பின்லாந்திற்கு தப்பியோடி விட்டனர். அன்று நடந்த படுகொலைகளில் குறைந்தது பத்தாயிரம் பேர் பலியாகி இருப்பார்கள். ஆம், அவை ட்ராஸ்கி செய்த படுகொலைகள்!

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

No comments: