Sunday, February 21, 2010

ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

["அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" தொடரின் இறுதிப் பகுதி.]
29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும், பிரிட்டிஷ் இரசாயனக் கப்பல் ஒன்றும், சோமாலியக் கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ரஷ்ய RAI Novosti செய்திச் சேவையும், பிரிட்டிஷ் பத்திரிகையான The Times சும் அறிவித்திருந்தன.
2009 ம் ஆண்டு, சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடற்பரப்பில் 174 கடற்கொள்ளை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 42 தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்களை இலக்கு வைத்து நடந்துள்ளன. 35 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டன. சர்வதேச நாடுகளின் கடற்படைகளின் ரோந்துக்கு நடுவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையை தடுப்பதற்காக, ஏடன் வளைகுடாவில் சீனா நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க விரும்பியது. சீன கடற்படைத் தளபதி யின் சூ இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். (பார்க்க:China To Establish A Naval Base Around Somalia) நிச்சயமாக, இந்த யோசனையை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், சீன, இந்திய கடற்படைக் கப்பல்கள், கடற்கொள்ளைக்காரர்களை கடலில் வைத்து விரட்டி அடித்துள்ளன. இந்த சம்பவங்கள் யாவும், அந் நாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இடம்பெற்றுள்ளன.

1995 ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர், கடற்படையினரின் கப்பல்களை வெடிமருந்து நிரப்பிய படகால் மோதி நாசப்படுத்தினர். இலங்கையின் வட-கிழக்கு கரையோரம், குறிப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் சில யுத்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு, யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற USS Cole யுத்தக் கப்பலை, அல்கைதாவின் தற்கொலைப் படகு தாக்கி சேதப்படுத்தியது. 2002 ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில், புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வனின் கூற்று ஒன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது. ("எமது தற்கொலைத் தாக்குதல் செய்முறைகளை அல்கைதா பின்பற்றியது..." ஏடன் USS Cole தாக்குதலை சுட்டிக் காட்டி தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்.) (Thamilchelvan, The “Smiling” Face of LTTE) ஈழத்தில் இடி முழங்கினால், யேமனில் மழை பெய்தது!

உலகில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேறு வேறு நாடுகளில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவங்களை சர்வதேச அரசியல் முடிச்சுப் போட்டது. ஏடனிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவிலும், சீனாவிலும் எதிரொலித்தது. இரு நாடுகளினதும் கொள்கை வகுப்பாளர்கள், "சர்வதேச கடற் போக்குவரத்து எதிர்நோக்கும் அபாயம்" குறித்து அறிக்கைகளை தயாரித்தார்கள். மிக முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விட, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவும், இந்தியாவும் நுகரும் எண்ணெயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. வளைகுடா நாடுகளில் இருந்து தென் சீனக் கடல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தவிர்க்கவியலாது இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும். இலங்கை, அம்பாந்தோட்டையில் சீனா கட்டி வரும் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சீனக் கடற்படை அங்கே தளமமைக்கவும் சாத்தியமுண்டு. (China's Sri Lanka port raises concern)

சீனா, "முத்து மாலை" திட்டத்தின் கீழ், பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு தளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து விட்டது. ஆனால் இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அரபி நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை. ஈரான், சூடான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நட்பு நாடுகள். இருப்பினும் அரபிக்கடல் நாடுகள் யாவும் அமெரிக்க சார்பானவையாக இருப்பது சிக்கலை உருவாக்கி விட்டுள்ளது. வளைகுடா நாடுகள் விற்கும் எண்ணெய் குறுகலான ஹொர்முஸ் (Hormuz) ஜலசந்தியைக் கடந்து வர வேண்டும். ஒமானுக்கு சொந்தமான ஹொர்முஸ் முனை அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது. மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் இருந்து வாங்கும் எண்ணெயும், சீனாவின் அரபுத் தோழன் சூடான் வழங்கும் எண்ணெயும், செங்கடல் வழியாக கொண்டு வரப்பட முடியும். ஆனால் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் யாவும் பாப் எல் மன்டப் (Bab el Mandab) என்ற குறுகலான ஜலசந்தியை தாண்டி வர வேண்டும். யேமனுக்கும், ஜிபூத்திக்கும் நடுவில் உள்ள, 18 மைல் நீளமான கடல் பாதை 'பாப் எல் மன்டப்'. இதன் அருகில் தான் சோமாலியா அமைந்துள்ளது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையரால் தாக்கப்படும் ஆபத்து அதிகம். குட்டி நாடான ஜிபூத்தியின் குடிமக்களும் சோமாலியர் தான். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான ஜிபூத்தியில், நிரந்தரமான பிரெஞ்சு இராணுவ தளம் உண்டு. அங்குள்ள பிரெஞ்சுப் படையினரின் வேலை, பாப் அல் மன்டப் பாதையால் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணிப்பது.

யேமனில் அல்கைதாவின் பிரசன்னத்தை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அந்த நாட்டில் நிரந்தர இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. நிதி நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அமெரிக்க இராணுவம் இன்றும் உலகில் பலம் வாய்ந்ததாகவே விளங்குகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மன்டப் ஜலசந்தியை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் பல பொருளாதார நன்மைகள் உள்ளன. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்டவும் இது உதவும். யேமனில் அமெரிக்க தலையீட்டினால், எதிர்காலத்தில் உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

"முத்து மாலை" திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தளங்களை அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கம் தடைப்படும். உலகில் அதிக எரிபொருள் நுகரும் நாடான சீனா, அமெரிக்க தயவில் தங்கியிருக்க வேண்டும். சூடானும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவை புறக்கணித்து விட்டு சீனாவுக்கு எண்ணெய் விற்க முடியாது. பாப் எல் மன்டப் ஜலசந்தியை மூடி விட்டால், எந்தவொரு கப்பலும் அரபிக்கடலை அடைய முடியாது. மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

உலகின் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் குவைத், அபுதாபி, ஈராக் எல்லாம் பாரசீக வளைகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள், ஹொர்முஸ் முனையை கடந்து, பாப் எல் மன்டப் ஊடாக சுயஸ் கால்வாயை அடைய வேண்டும். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தை சுயஸ் கால்வாய் ஊடாக தொடர வேண்டும். ஒரு வேளை, "யேமன் அல்கைதா பிரச்சினை" காரணமாக பாப் எல் மன்டப் பாதை மூடப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின், அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் 6000 மைல் பயணம் செய்து, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே செல்ல வேண்டும்.

யேமனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணமல்ல. முன்னொரு காலத்தில் கம்யூனிச நாடாக இருந்த தென் யேமனின் ஏடன் நகரில் சோவியத் படைத் தளம் ஒன்று இருந்தது. இன்றைய ரஷ்யாவின் "புட்டின்/மெட்வெடேவ் நிர்வாகம்" பழைய வெளிநாட்டு தளங்களை புதுப்பிக்க விரும்புகின்றது. சிரியாவில் மீண்டும் ரஷ்ய இராணுவ தளம் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏடனில் தளம் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா யேமன் அரசை கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கிடையே அமெரிக்கா முந்திக் கொள்ள நினைத்திருக்கலாம்.

மேலும் யேமனில் தற்போது பாவனையில் உள்ளதை விட, இன்னும் அதிகளவு எண்ணைப் படுகைகள் அகழப்படாமல் உள்ளன. Total போன்ற பன்னாட்டு எண்ணெய்க் கம்பனிகள் மசினா, ஷப்வா ஆகிய இடங்களில் எண்ணை காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. எண்ணைக் கம்பனிகளுக்கு பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் யேமனில் நிலை கொள்ளலாம். வருங்காலத்தில் யேமன் மண்ணின் மைந்தர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடலாம். ஆனால் அதையெல்லாம் "அல்கைதா பயங்கரவாதம்" என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட, சர்வதேச ஊடகங்கள் காத்திருக்கின்றன.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

மேலதிக தகவல்களுக்கு:

Yemen and The Militarization of Strategic Waterways

1 comment:

Pragash said...

இராணுவ வல்லரசு நாடுகள் தமது உலகளாவிய ஆக்கிரமிப்பு நோக்கங்களை நீண்டகால நோக்கில் திட்டமிடுகின்றன. ஏழை நாடுகளோ உடனடி நலன்களையே முன்னிறுத்துகின்றன. இதில் நசுங்கி போவது அப்பாவி மக்கள் தான்.