Thursday, December 07, 2017

ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் சாத்தியமா?

(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - மூன்று)

ட்ராஸ்கி, ஸ்டாலினுக்கு இடையிலான கொள்கை முரண்பாடு, ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டி எழுப்புவது பற்றியது என்று பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். அதை விரிவாக ஆய்வு செய்தால் தான், பிற்காலத்தில் ட்ராஸ்கி சொல்லித் திரிந்த பொய்கள் வெளிச்சத்திற்கு வரும். அன்று ட்ராஸ்கி கூறிய பொய்களை, இன்றும் பல ட்ராஸ்கிசவாதிகள் கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார்கள்.

பலர் தவறாக நினைப்பதற்கு மாறாக, ரஷ்யப் புரட்சி தான் உலகின் முதலாவது பாட்டாளிவர்க்கப் புரட்சி அல்ல. இதற்கு முன்னரும் பல புரட்சிகள் நடந்து தோல்வியடைந்துள்ளன. ஒரு புரட்சியை நடத்துவதை விட அதை தக்க வைத்துக் கொள்வது தான் பெரிய விடயம். அந்த வகையில், தொழிலாளர், விவசாயிகளின் செம்படை ஒன்றை உருவாக்கி, பலமுனைத் தாக்குதல் தொடுத்த எதிரிகளுடன் போரிட்டு வெல்ல வேண்டி இருந்தது.

உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் சோஷலிச மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்குப் பல தடைகள் இருந்தன. ஆகவே, லெனினால் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) அறிமுகப் படுத்தப் பட்டது. அது சந்தைப் பொருளாதாரத்தை உள்ளடக்கி இருந்தது. அரசு மேற்பார்வையின் கீழான முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் புதிய முதலாளிகள், புதிய பணக்காரர்கள் தோன்றி இருந்தனர். மக்கள் அவர்களை "NEP காரர்" என்று அழைத்தனர். ஊடகங்களில் NEP காரருக்கு எதிரான கட்டுரைகளும், கார்ட்டூன்களும் வெளியாகின. அதில் அவர்கள் செல்வத்தில் மிதப்பதை வர்ணனை செய்திருந்தார்கள்.

லெனின் காலமாகி, ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பின்னரும், சோவியத் நாட்டில் சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அப்போது உள்நாட்டுப் போர் முடிந்து அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, இனிமேலும் சந்தைப் பொருளாதாரத்தை தொடர்வதா, அல்லது சோஷலிச கட்டுமானப் பணிகளை தொடங்குவதா என்ற கேள்வி எழுந்தது. உலகம் அன்றிருந்த நிலையில் சோஷலிசம் இறுதி வெற்றி பெறும் என்று யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அதற்குக் காரணம், உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் சோஷலிசம் கட்டப் படவில்லை. அது எப்படி இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது.

1925 ம் ஆண்டு, ஸ்டாலின் "ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டப் பட வேண்டும்" என்று தனது திட்டத்தை தெளிவாக முன்வைத்தார். ட்ராஸ்கி, கமனேவ், சினோவியேவ் போன்றவர்கள் அந்த யோசனையை எதிர்த்தனர். உடனடியாக சோஷலிசத்தை கட்டுவது சாத்தியமில்லை என்றும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் நம்பினார்கள். அதற்கு மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களையும் எடுத்துக் காட்டினார்கள். ஆனால், அவர்களது வாதமானது வெறும் "புத்தக அறிவு" என்பதற்கப்பால் எதுவுமில்லை. அதாவது, "புனித நூலில் எழுதியுள்ள படி தான் நடக்க வேண்டும்" என்பது மாதிரியான மனப்பான்மை கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும், ட்ராஸ்கியின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். இந்த விவாதம் வருடக் கணக்காக நடந்தது! அதுவும் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள்!! கட்சிக் கூட்டங்களில் மட்டுமல்லாது, காணுமிடமெங்கும், இரவு பகலாக, மூலை முடுக்கெல்லாம் பலர் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். சுருக்கமாக சொன்னால், ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவது தொடர்பான விவாதங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகபூர்வமாக நடந்து கொண்டிருந்தன.

இரண்டு தரப்பினரதும் வாதங்கள் துண்டுப் பிரசுரங்களாக அல்லது நூல்களாக அச்சிடப் பட்டு, கட்சியின் மேல்மட்ட, அடிமட்ட உறுப்பினர்கள் எல்லோருக்கும் விநியோகிக்கப் பட்டன. பத்திரிகைகளிலும் வாதங்கள் தொடர்ந்தன. அன்றைய காலத்தில் பேஸ்புக் போன்ற இணைய வழி சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. அந்த இடத்தை பத்திரிகைகளே நிரப்பின. 

நான்கு வருடங்களாக, நாடு முழுவதும் நடந்த அந்த முக்கியமான விவாதங்களின் முடிவில் தான் ட்ராஸ்கி தோல்வியைத் தழுவினார். இறுதியில், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத, திமிர் பிடித்த ட்ராஸ்கி, நாடுகடத்தப் பட்ட பின்னர் "புரட்சி காட்டிக் கொடுக்கப் பட்டது" என்று புலம்பித் திரிந்தார். அந்த நாடுகடத்தல் விவகாரம் கூட சோவியத் சட்ட விதிகளுக்கு அமையவே நடந்ததே அன்றி, ஸ்டாலினின் சுய விருப்பின் பேரில் எடுக்கப் பட்ட முடிவல்ல.

நிச்சயமாக, சோவியத் அரசு பிற உலக நாடுகளில் போராடும் பாட்டாளிவர்க்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய கடமையை மறந்து விட முடியாது. அதே நேரம், ஒரே நாட்டிற்குள் சோஷலிசத்தை கட்டுவதும் முக்கியம் தான். வேறு வழி கிடையாது. ட்ராஸ்கி முன்மொழிந்த யோசனைகளின் படி ஒரு "சோஷலிச சோவியத் யூனியன்" நடைமுறைக்கு வந்திருந்தால், அது இன்றுள்ள சீனா மாதிரி இருந்திருக்கும். 

அதாவது, விசேட வரிகள் விதிப்பதன் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மூலதனத்தை குவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. (அதையே தான் இன்று மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அரசுக்களுக்கு சில இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.)

"சோஷலிச மூலதன திரட்டல் என்றால் என்ன?" ட்ராஸ்கி சார்ந்திருந்த குழுவை சேர்ந்த பிரயோபிராஜென்ஸ்கி அது குறித்து விரிவாக பல கட்டுரைகள் எழுதினார். "நோவயா எகொனோமிக்கா" (புதிய பொருளாதாரம்) இதழில் பிரசுரமான கட்டுரைகளின் சாராம்சத்தை இங்கே தருகிறேன்.
//முதலாளித்துவ மூலதனக் குவிப்புடன் அவர் இதனை ஒப்பிடுகிறார். அதாவது, மேற்குலகில் உள்ள முதலாளித்துவ மூலதனமானது காலனிகளை சுரண்டியதன் மூலம் குவிக்கப் பட்டது. அத்துடன் கைத்தொழில் புரட்சியால் உருவான நிறுவனங்களின் உபரி மதிப்பும், அரசு வரிகளும், அரசு கடன்களும் சேர்ந்து மூலதனத்தை திரட்டியுள்ளன. ஆனால், சோவியத் யூனியன் எந்தக் காலனியையும் சுரண்ட முடியாது. அது சாத்தியமில்லை. ஆகவே, எஞ்சி இருக்கும் நடைமுறைகளை பிரயோகிக்கலாம். குட்டி பூர்ஷுவா வர்க்கம் இல்லாத விவசாயப் பொருளாதாரத்தை கட்ட முடியும் என நினைப்பது நடைமுறைச்சாத்தியமில்லாத கனவு.// ட்ராஸ்கி மேற்படி ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரித்தானியாவில் இருந்த ஆரம்பகால முதலாளித்துவம், குறைந்தது நூறாண்டுகளுக்குப் பிறகு தான் தொழிற்புரட்சியை நடத்தும் அளவிற்கு வளர்ந்திருந்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் அடுத்து வந்த பத்து வருடங்களுக்குள் தொழிற்புரட்சியை நடத்த திட்டமிட்டார். அதுவும் முதலாளித்துவம் இல்லாமல், சோஷலிச மூலதனத்தை திரட்ட வேண்டி இருந்தது. சோவியத் யூனியன் அன்றிருந்த நிலைமையில், அதாவது பொருளாதார வளர்ச்சியில் மேற்குலகை விட பல வருடங்கள் பின்தங்கி இருந்த ஒரு நாட்டில் இது சாத்தியப் படுமா? நிச்சயமாக, அன்று பலரது கேள்வியும் அதுவாகத் தான் இருந்திருக்கும்.

சோஷலிச மூலதனத்தை திரட்டுவதற்காக, நாடு முழுவதும் கூட்டு விவசாயப் பண்ணைகள் அமைப்பதற்கு திட்டமிடப் பட்டது. இதில் விவசாயிகளை சுய விருப்பின் பேரில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. இருப்பினும், சில இடங்களில் கட்டாயப் படுத்தி சேர்த்த சம்பவங்களும் நடந்துள்ளன. அது பெரும் போராட்டமாக நடந்தது. நாட்டுப்புறங்களில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை எதிர்த்து நின்ற பணக்கார விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். அதே நேரம், கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்களை எதிர்த்தும் போராட வேண்டி இருந்தது.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடக் கூடாது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளில் "ஸ்டாலினிச அடக்குமுறை" தேவைப் பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தேவையான மூலதனத்தை ஈவிரக்கமின்றி காலனிகளை சுரண்டுவதன் மூலம் திரட்டிக் கொண்டனர். அதாவது, ஸ்டாலின் காலத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கைதுகள், படுகொலைகள் ஐரோப்பிய காலனிகளில் நடந்துள்ளன.

ஆகையினால், குலாக் என்ற பணக்கார விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையையும், அங்கு நடந்த தொழிற்புரட்சியுடன் சேர்த்துப் பார்க்கப் பட வேண்டும். அது நடந்திருக்கா விட்டால், தொழிற்துறை வளர்ச்சி கண்டிருக்க முடியாது. உண்மையில் கட்சிக்குள் யாருமே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் கருத்து முரண்பாடு இருந்தது. ட்ராஸ்கி, புகாரின் ஆகிய எதிர்தரப்பினர் குலாக் மீது கடும் வரி விதிக்கலாம் என்று பிரேரித்தனர். குறைந்தது ஒரு வருட காலம் அது பற்றி விவாதிக்கப் பட்டது. இறுதியில் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் அந்த யோசனையை நிராகரித்தனர்.

"ஸ்டாலினின் கொடுங்கோன்மை" பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதும், "கம்யூனிசம் என்றால் இப்படித் தான் கொலைகள் நடக்கும்" என்று பயமுறுத்துவதும் சிறுபிள்ளைத்தனமான செயல். அது அன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் அவசியம். அதுவே எல்லா நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் நடக்கும் என்று நினைப்பது சுத்த அபத்தம். "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" கொண்டு வந்த தொழிற்புரட்சியின் விளைவாக கிடைத்த பயன்பாடுகளைத் தான் இன்றைய ரஷ்யர்கள் அறுவடை செய்கின்றனர். தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஒவ்வொரு நாட்டிலும் ஒரு காலத்தில் "ஸ்டாலினிச காலகட்டம்" இருந்திருக்கும்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

No comments: