Sunday, January 28, 2024

புதுக்குடியிருப்பில் வெள்ளாள பேரினவாதிகள் நில ஆக்கிரமிப்பு!



பிரபாகரன் குடியிருந்த புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளாள பேரினவாதிகள் நில ஆக்கிரமிப்பு! 
தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள் பாராமுகம்!
****************
தலித் மக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! 
தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!
****************

வன்னியில், புதுக் குடியிருப்பு பகுதியில், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் மந்துவில் என்ற கிராமம் வெள்ளாள பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்பு காரணமாக "சிவ நகர்" என்று பெயர் மாற்றப் படும் அபாயம் காணப் படுகிறது. நிலத்தை அபகரித்து 
சிவன் கோயில் கட்டி, அதை விஸ்தரித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்துக்கள் வாழாத ஓர் இடத்தில் (மந்துவில் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்), திடீரென சிவன் கோயில் கட்ட வேண்டிய தேவை என்ன? இது இந்து ஆலயத்தின் பெயரால் நடக்கும் நில ஆக்கிரமிப்பு அல்லாமல் வேறென்ன? அதாவது, அங்கிருந்த மணற் கேணி என்ற மிகப்பெரிய குளத்தினை மணல் இட்டு நிரப்பி, அதை ஒரு குட்டையாக மாற்றி வருகின்றனர். இதனால் நீர்ப் பாசனத்திற்காக குளத்தை நம்பியிருந்த சுமார் 90 ஏக்கர் விவசாய நிலம் வறட்சி வந்தால் தரிசாக மாறும் அபாயம் காணப்படுகிறது. அதை நம்பி வாழ்ந்த ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயம் செய்து தன்னிறைவு அடைய விடாமல் தடுத்து, அவ‌ர்களை தமது கூலி அடிமைகளாக வைத்திருப்பது தான் வெள்ளாள பேரினவாதிகளின் நோக்கமாக உள்ளது. இலங்கையில் சுதந்திரம் அடைந்த காலம் வரையில், வடக்கில் வெள்ளாளர் வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களாக பள்ளர் இருந்தனர். அதை மீண்டும் கொண்டு வரும் நோக்கம் வெள்ளாள பேரினவாதிகள் மனதில் இருக்கலாம். 
இது சாதி ஒடுக்குமுறையின் பெயரால் நடக்கும் ஒரு வர்க்கப் பிரச்சனை. காலங்காலமாக நடந்து வருகிறது.

சிங்களப் பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்புக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் புத்த விகாரை கட்டினால் இவர்கள் சிவன் கோயில் கட்டுகிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி இரண்டுமே நில அபகரிப்பு தான். 

வெள்ளாள பேரினவாதிகள் நில அபகரிப்பு செய்யும் மந்துவில் கிராமத்தில் இருந்து, சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருந்தூர் மலையில், சிங்களப் பேரினவாதிகள் விகாரை கட்டிய நேரம், தீவிர தமிழ்த்தேசியக் கட்சியான TNPF பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. "எமது தாயக நிலம் பறிபோகிறது" என்று கோஷம் இட்டனர். அந்த செய்திகளை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால் அதே அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மந்துவில் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை! 

ஏனிந்த பாரபட்சம்? ஏனென்றால் இங்கே ஆதிக்க சாதி அபிமானம் மேலோங்கி உள்ளது. சிங்களவர் செய்யும் அதே ஆக்கிரமிப்பு தான் வெள்ளாளர் செய்கின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்த ஊடகமும் அதைக் கண்டு கொள்ள மாட்டாது. 

வட இலங்கையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் சாதியால் உயர்த்தப்பட்ட வெள்ளாளர்கள் தான். அதனால் அவர்களது மனதிலும் சாதிவெறி இருக்கும். தேர்தலில் ஓட்டு பிச்சை கேட்டு தலித் மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டுவார்கள். ஓட்டு போட்ட பின்னர் மறந்து விடுவார்கள். மந்துவில் கிராம மக்கள் நில ஆக்கிரமிப்பு குறித்து அரசியல் தலைவர்களிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணம் என்ன? இத்தனைக்கும் தமிழரசு கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அந்த தொகுதியில் இருந்து தான் தெரிவானார். 

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மந்துவில் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கவனிக்கவும்: தமிழ்த் தேசியவாதிகள் குற்றம் சாட்டும் அதே சிங்கள அரசின் அதிகாரிகளாக இருப்பவர்கள் தமிழர்கள்! ஆனால் சாதியால் வெள்ளாளர்கள். அதனால் அவர்களும் தமது சாதியின் பக்கமே நிற்பார்கள். இலங்கையில் சிங்களப் பேரினவாதமும், தமிழ்- வெள்ளாள பேரினவாதமும் அடிப்படையில் ஒன்று தான். 

Source: 

No comments: