Showing posts with label வர்க்கப் போர். Show all posts
Showing posts with label வர்க்கப் போர். Show all posts

Saturday, April 21, 2018

நிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்

நிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்டுள்ள இந்தக் கலவரத்தில், இது வரையில் ஐந்து பேர் கொல்லப் பட்டுள்ளனர். மேற்கத்திய ஊடகங்கள் இதை ஓய்வூதிய குறைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்று செய்தி தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையான பிரச்சினை அதுவல்ல. அது இரண்டு பகைமை கொண்ட வர்க்கங்களின் மோதல் என்ற விடயம், மேற்கத்திய ஊடகங்களால்  திட்டமிட்டு மறைக்கப் படுகின்றது.

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் நடந்த ஜனநாயகப் பொதுத் தேர்தலில், பெரும்பான்மை மக்களின் வாக்குளை வென்று அரசமைத்த FSLN (சன்டினிஸ்டா) கட்சி, மக்கள் நலன் கருதி சில பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டில் தீவிர இடதுசாரிக் கட்சி பெரும்பான்மை வாக்காளர்களால் ஆதரிக்கப் படுவது அரிதானது. அந்தக் கட்சி மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நடைமுறைப் படுத்தத் துணிவது அதை விட அரிதானது. வெனிசுவேலா, பொலீவியா வரிசையில், நிக்கராகுவாவில் அந்த அதிசயம் நடந்துள்ளது.

ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டம் மூலம் அதிகாரத்திற்கு வந்த FSLN என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் சன்டினிஸ்டாக்கள் என்று அழைக்கப் பட்டனர். டானியல் ஒட்டேகா தலைமையிலான FSLN, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக, நிக்கராகுவாவில் பத்தாண்டுகள் சோஷலிச ஆட்சி நடத்தி வந்தது. அப்போது சோவியத் யூனியன், கியூபா ஆகிய பிற சோஷலிச நாடுகளின் உதவியும் கிடைத்திருந்தது.

தொண்ணூறுகளுக்கு பிறகு நடந்த சுதந்திரமான பொதுத் தேர்தலில், மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு அமெரிக்க ஆதரவு இருந்த போதிலும், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியவில்லை. ஒரு பக்கம் பணக்காரர்கள் பெருகுவதற்கும், மறுபக்கம் ஏழைகள் அதிகரிப்பதற்குமே ஜனநாயக தேர்தல் அமைப்பு உதவுகின்றது என்பதை மக்கள் உணர அதிக காலம் எடுக்கவில்லை.

நிகராகுவா ஏற்கனவே ஒரு வறிய நாடாக இருந்த போதிலும், சோஷலிச நாடாக இருந்த காலத்தில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு இருந்தது. அது மீண்டும் முதலாளித்துவ நாடான பின்னர், பொதுத் துறைக்கான அரச செலவினம் வெகுவாக குறைக்கப் பட்டது. வரிப் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட வேண்டிய அரசு நிறுவனமான INSS என்ற "சமூகப் பாதுகாப்பு நிலையம்" (Institute of Social Security (INSS)), மக்களுக்கு செய்த சேவைகளை விட, அரசியல்வாதிகள் ஊழல் செய்ய உதவியதே அதிகம்.

இன்றைய முதலாளித்துவ கால அவலங்களுடன் ஒப்பிட்டால், கம்யூனிச கடந்த காலம் ஒரு பொற்காலம் என்று மக்கள் உணர்ந்து கொண்டனர். அதனால், சில வருடங்களுக்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் கம்யூனிச கட்சியான FSLN க்கு பெருமளவு வாக்குகள் போட்டு தெரிவு செய்தனர். முந்திய காலத்தில் "கம்யூனிச சர்வாதிகாரி" என்று சொல்லப்பட்ட டானியல் ஒட்டேகா, தற்போது பெரும்பான்மை வாக்குகள் பெற்று மக்கள் ஜனாதிபதியாக தெரிவானார்.

மீண்டும் சன்டினிஸ்டா ஆட்சி வந்தாலும், அவர்கள் சோஷலிச கடந்தகாலத்திற்கு திரும்பிச் செல்வார்கள் என்று அர்த்தம் அல்ல. FSLN தற்போது ஒரு சமூக ஜனநாயகக் கட்சி. அதாவது, தேர்தலில் போட்டியிட்டு கிடைக்கும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, தம்மால் முடிந்தளவு சமூக மாற்றங்களை கொண்டு வருவது தான் நோக்கம். முதலாளிகள் தமது வர்த்தகத்தை தொடரலாம். அரசு மக்களுக்கான கடமையை செய்யும்.

வட ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருப்பதைப் போன்ற சமூக பொருளாதாரத் திட்டத்தை தான், இன்று வெனிசுவேலாவும், நிகராகுவாவும் பின்பற்ற விரும்புகின்றன. ஆனால், ஒரு பிரச்சினை. மேற்கு ஐரோப்பாவில் சாத்தியமான திட்டம், இலங்கை, இந்தியா போன்ற மூன்றமுலக நாடுகளில் நடைமுறைச் சாத்தியமில்லை. அது ஏன் என்பதற்கு தற்போது நிகராகுவாவில் நடக்கும் அரச எதிர்ப்புக் கலவரம் ஒரு சிறந்த உதாரணம்.

உண்மையில், மேற்கு ஐரோப்பிய அரசுகள் மாதிரித் தான், நிகராகுவாவில் சன்டினிஸ்டா அரசும் நடந்து கொண்டது. அதாவது, பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் முதலாளிகளையும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, ஒரே மேசையில் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு முன்மொழிந்த திட்டம் இது தான். உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகளும், தொழிலாளர்களும் தமது வருமானத்தில் குறிப்பிட்டளவு தொகையை சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு (INSS) செலுத்த வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வந்தது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்து வருவது தான். ஆனால், முதலாளிகளின் பங்களிப்பை ஐந்து சதவீதத்தால் (தற்போது 22.5%) அதிகரித்தது தான் அவர்களது சீற்றத்திற்கு காரணம். இதன் விளைவு தான் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு மூலகாரணம். இதே நேரம், தொழிலாளரின் பங்களிப்பும் சிறிதளவு (6.25% இலிருந்து 7%)கூடியுள்ளது.

வரி அதிகரிப்பின் மூலம், சமூகப் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் தலையிடுவதை தடுப்பதும் அரசின் குறிக்கோளாக இருந்தது. ஏனெனில், அரசு சேவைகளை தனியாரிடமும் கொடுத்ததால் தான், முந்திய அரசாங்கங்கள் ஊழல் செய்ய வசதியாக இருந்துள்ளது. மேலும், சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கான கொடுப்பனவு அதிகரித்தால், எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்க முடியும் என்பதும் அரசின் திட்டம். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பாவில் நடப்பதைப் போன்று, மக்களின் வரிப் பணத்தை மக்களுக்கு பிரயோசனமான வழிகளில் செலவிட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இதெல்லாம் நல்ல திட்டம் தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால், முதலாளிகள் அப்படி நினைப்பதில்லை. அரசு மக்களின் வரிப் பணத்தில் ஊழல் செய்வது அவர்களுக்கு சாதகமான விடயம். அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடக் கூடாது. அப்போது தான் பொதுத் துறைகளின் சீர்கேடுகளை காரணமாகக் காட்டி, தனியார் நிறுவனங்கள் நுழைய முடியும். அரசு தனது கடமையை சரிவரச் செய்தால், அது முதலாளிகளின் நலன்களை பாதிக்காதா?

ஓய்வூதியம் குறைக்கப் பட்டது தான் கலவரத்திற்கு காரணம் என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிக்கராகுவாவில் ஓய்வூதியம் பெறும் வயது இப்போதும் அறுபது தான். அது கூட்டப் படவில்லை. (மேற்கு ஐரோப்பாவில் ஏற்கனவே அது 67 வயதாக தீர்மானிக்கப் பட்டு விட்டது.) ஓய்வூதியம் பெறுவோரும் குறிப்பிட்டளவு வரிப்பணம் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ஒதுக்க வேண்டும். மேற்கு ஐரோப்பாவிலும் ஓய்வூதியம் பெறுவோரின் பணத்தில் இருந்து சமூகப் பாதுக்காப்பான வரிப்பணம் அறவிடுகிறார்கள். இதனால் முதியோரின் ஓய்வூதியத் தொகை குறைகின்றது. அப்படிப் பார்த்தால், மேற்கு ஐரோப்பாவிலும் ஓய்வூதிய குறைப்பை காரணமாகக் காட்டி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்க வேண்டும்.

இன்று கலவரத்தில் ஈடுபடுவோர் இளைஞர்கள், மாணவர்கள். அவர்கள் ஓய்வூதியக் குறைப்பை முன்னிட்டு போராடுவதாக சொல்வது நகைப்புக்குரியது. கலவரம் முதலில் தலைநகரத்தில், மனாகுவா பல்கலைக்கழகத்தில் தான் ஆரம்பமானது. "கம்யூனிஸ்டுகள் ஒன்றுகூடும் இடமாக" கருதப்படும் கலாச்சார நிலையக் கட்டிடம் மாணவ கிளர்ச்சியாளர்களால் தீக்கிரையாக்கப் பட்டது. வீதித் தடையரண்கள் அமைத்து, பொலிசுக்கு எதிராக கற்களை வீசினார்கள். பொலிஸ் பதிலுக்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரங்களை அடக்க முயன்றது. இதுவரையில் ஐந்து அல்லது பத்துப் பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இதனால், அடுத்து வரும் நாட்களுக்கும் கலவரங்கள் தொடரும்.

வெனிசுவேலாவில் நடந்த வரலாறு நிக்கராகுவாவில் திரும்பியது. அதாவது, முதலாளிய ஆதரவாளர்களான மத்திய தர வர்க்கத்தினர் தான் அரசுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டனர். சன்டினிஸ்டா ஆதரவு மாணவர்கள், கலவரக் காரர்களுடன் மோதினார்கள். எல்லா இடங்களிலும் கலவரத்தில் ஈடுபடுவோர் முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவாளர்கள் தான். போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் பல இடங்களில் பதுக்கி வைக்கப் பட்டிருந்தன. இதனால், ஒரு குறிப்பிட்ட அரசியல் சக்தி, முன்கூட்டியே கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருவது தெளிவாகும்.

முன்னொரு காலத்தில், நிகராகுவா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், ஒரு முதலாளித்துவ ஆதரவுப் பத்திரிகை சுதந்திரமாக வெளிவந்து கொண்டிருந்தது. அது எப்போதும் கம்யூனிச எதிர்ப்பு மனநிலையில் இருந்து சன்டினிஸ்டா அரசின் குறைகளை பற்றி எழுதிக் கொண்டிருந்தது. இருப்பினும், ஒரு பத்திரிகையால் கம்யூனிச அரசை அசைக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அப்போது மக்கள் அதிகாரம் இருந்தது. முதலாளிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை. முதலாளிகளால் மக்களை மூளைச்சலவை செய்ய முடியவில்லை.

இன்றைய நிலைமை வேறு. நிகராகுவா பொருளாதாரத்தில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் ஊடகங்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். கலவரங்களை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஐந்து தொலைக்காட்சி நிலையங்களின் ஒளிபரப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக, மேற்குலகு இதை சுட்டிக் காட்டி "கருத்துச் சுதந்திர மறுப்பு", "மனித உரிமை மீறல்" என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும். அவர்கள் முதலாளிகளின் கருத்துக்களை மக்களின் கருத்துக்களாகவும், முதலாளிகளின் உரிமைகளை மக்களின் உரிமைகளாகவும் திரிக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு இந்த வித்தியாசம் புரிவதில்லை.

Wednesday, January 17, 2018

முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் சோஷலிசக் கரு தோன்றும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்
 (பாகம் - மூன்று) 

முதலாளித்துவ அரசை தூக்கி எறிவதற்கு ஓர் ஆயுதப் புரட்சி அவசியமா? பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கிய ஆயுதமேந்திய மக்கள் எழுச்சி எந்தக் காலகட்டத்தில் தோன்றும்? அதன் அரசியல் சமூகப் பின்னணி என்ன? நட்பு சக்திகள் எவை? பகைச் சக்திகள் எவை? ஏகபோக முதலாளித்துவ அரசின் குணங்குறிகள்...

இந்தக் கட்டத்தில், உழைக்கும் வர்க்கமும் அதன் நட்பு சக்திகளும் முன்னரங்கிற்கு வந்து போராடுகின்றன. அந்தப் போராட்டத்தை எந்தளவு வன்முறை பிரயோகித்தும் அடக்கி விட முடியாது. உழைக்கும் வர்க்கம் தனது தற்காப்புக்காக ஆயுதமேந்தி இருக்கும். மிகப் பெரிய அளவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் காரணமாக மோதல்கள் இடம்பெறும். முதலாளித்துவ அரசுக்கெதிரான அதிகாரத்திற்கான ஆயுத மோதல்கள் ஓர் உள்நாட்டுப் போராக காணப்படும். கம்யூனிசக் கருத்துக்கள் பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களினால் உள்வாங்கப் பட்டு, இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

முதலாளிய வர்க்கம் தப்ப வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும். ஏகபோக முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வந்த கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டிருக்கும். அரசு இயந்திரம் இயங்க இயலாமல் போய் விடும். அறிவுஜீவிகளான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தினால் வென்றெடுக்கப் பட்டிருப்பார்கள், அல்லது நடுநிலை வகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருப்பார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நேரடி செயற்பாட்டுக்கான கோஷங்களின் மூலம் ஆயுதப் போராட்டக் களத்தில் குதிக்கும். அது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாக கருதப்படும். இந்த போராட்ட வடிவத்தில் உத்திகளும், தந்திரோபாயங்களும் மாறுபடும். கட்சியும், உழைக்கும் வர்க்கம், இந்தக் கட்டத்தில் ஏற்படும் அனுபவ பாடங்களில் இருந்து புதிய படிப்பினைகளை பெற வேண்டி இருக்கும்.

வர்க்கப் போராட்டமானது, எவருடைய விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் தூண்டப் படுகின்றது. உழைக்கும் வர்க்கம் தீர்மானகரமான முடிவெடுக்க வைக்கும் காலகட்டம் எவ்வாறு உருவாகின்றது என்பதை இப்போது பார்ப்போம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் சுதந்திரமான போட்டியை ஆராய்ந்து எழுதியுள்ளனர். இருப்பினும், முதலாளித்துவமானது சுதந்திர வர்த்தகப் போட்டி என்ற காலகட்டத்துடன் நின்று விடவில்லை. அதற்கும் அப்பால் வளர்ச்சி அடைந்தது. அது ஏகபோக முதலாளித்துவம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. அது பின்னர் ஏகபோக முதலாளித்துவ அரசாக பரிணமித்தது.

"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" நூலில் லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 
//போட்டியானது ஏகபோகமாக மாற்றப் பட்டது. அதன் விளைவாக உற்பத்தி பெருமளவில் சமூகமயமாக்கப் பட்டது. விசேடமாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும், அதன் வளர்ச்சியும் சமூகமயமாக்குவதற்கு உதவின. இது ஏதோ ஒரு வகையில் சுதந்திரமாக போட்டியிடும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாறுபடுகின்றது. அவர்கள் ஒருவரை மற்றவர் அறியாமல் பரவி இருந்ததுடன், வெளித்தெரியாத சந்தை ஒன்றுக்காக உற்பத்தி செய்தனர்..... ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்த முதலாளித்துவமானது உற்பத்தியை சமூகமயமக்கும் கட்டத்திற்கு நேரடியாக வழிநடத்திச் செல்கின்றது. அதன் அர்த்தம், எல்லா முதலாளிகளையும், அவர்களது விருப்பத்திற்கு மாறாக, புதியதொரு சமூக ஒழுங்கமைப்பை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. அது முழுமையான சுதந்திர (வர்த்தகப்) போட்டியில் இருந்து முழுமையான சமூகமயமாக்கும் கட்டத்திற்கு மாற்றமடைகின்றது.// - லெனின்

லெனினின் கூற்றை நாம் இலங்கை, இந்திய நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த நாடுகள் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்த காலத்திற்குப் பிறகு, சுதந்திரமாக போட்டியிடும் முதலாளித்துவ நடைமுறையை கொண்டிருந்தது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த மாதிரியான காலகட்டம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டில் மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான பொருட்கள் உற்பத்தியாகி சந்தைக்கு வந்தன.

அது மட்டுமல்லாது, மேற்குலகில் சந்தைக்கு வந்த புதிய தொழில்நுட்பமானது, இலங்கை, இந்தியாவில் பாவனைக்கு வருவதற்கு பல வருடங்கள் எடுத்தன. ஆனால், இப்போது நிலைமை அப்படி அல்ல. கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, அனைத்து புதிய தொழில்நுட்பக் கருவிகளும் உடனுக்குடன் வாங்கக் கூடியதாக உள்ளது.

அதன் அர்த்தம், ஏகபோக முதலாளித்துவம் மேலாதிக்கம் செலுத்துவதால் உற்பத்தி உலகமயமாகியுள்ளது. முதலாளிகள் விரும்பியோ, விரும்பாமலோ, உற்பத்தி சமூகமயமாகி விட்டது. அதாவது, உற்பத்தி சமூகமயமாகும் போதே சோஷலிசத்தின் கரு உருவாகி விட்டது.

முதலாளித்துவத்தின் இந்த வளர்ச்சிக் கட்டம் இன்றியமையாதது. இது சமூகத்திற்கான உற்பத்திக்கும், தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கிறது. இத்தகைய புதிய சமுதாய மாற்றம் ஏற்படும் நேரத்தில், முதலாளித்துவத்தின் உள்ளே சோஷலிசம் என்ற புதிய சமுதாய அமைப்பு தோன்றுகின்றது.

இந்த வளர்ச்சிக் கட்டத்தில், சோஷலிசம் முற்றிலும் புதியதொரு பாத்திரத்தை ஏற்கிறது. அரசு என்பதன் மூன்று வகை வளர்ச்சிக் கட்டங்கள்: 
  1. சுதந்திர வர்த்தகப் போட்டி கொண்ட முதலாளித்துவ காலகட்டத்தில், அரசு முதலாளிய வர்க்கம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தியது. 
  2. முதலாளிய வர்க்கத்தில் ஒரு பிரிவினர் ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். அத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலத்தில், வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் அரசை தமக்கு அடிபணிய வைத்தன. 
  3. ஏகபோக அரசு அமையும் காலத்தில், அரசு முற்றுமுழுதாக ஏகபோக மேலாண்மை பெற்ற நிறுவனங்களின் கருவி ஆகின்றது.

இன்னும் விரிவாக, "ஏகபோக முதலாளித்துவ அரசு" என்றால் என்ன?

ஏகபோக முதலாளிய அதிகாரம், அரச கட்டமைப்புடன் ஒன்று சேரும். அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும், ஏகபோக பொருளாதார - அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும். அந்த வகையில், இன்று பல மேற்கத்திய நாடுகளில் ஏகபோக முதலாளித்துவ அதிகாரக் கட்டமைப்பே உள்ளது. அது சிறு வணிகர்களையும், சிறு முதலாளிகளையும் அடக்கியொடுக்கி அழித்து விட்டது.

உதாரணத்திற்கு, எந்த மேற்கத்திய நாட்டிலும் பெட்டிக் கடைகள், தனியார் மரக்கறிக் கடைகள் போன்றவற்றை காண்பதரிது. ஏகபோக முதலாளிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகள் அந்த இடத்தை பிடித்து விட்டன. பெட்டிக் கடைகள் கூட நாடளாவிய பெரிய நிறுவனம் ஒன்றின் கிளைகளாக மாறி விட்டன. இந்த மாற்றம் தற்போது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஏகபோக முதலாளித்துவ அரசு என்ற கட்டத்தை அடைவது, முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் இறுதிக் கட்டம் ஆகும். இதை லெனின் ஏற்கனவே கண்டறிந்ததுடன், அதை வர்க்கப் போராட்டத்திற்கான தீர்மானமாகவும் எடுத்துரைத்தார்.

//முதலாளித்துவமானது ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது ஏகபோக முதலாளித்துவம். (உலகப்)போரின் விளைவாக ஏகபோக முதலாளித்துவ அரசு உருவானது. நாங்கள் தற்போது சோஷலிசத்திற்கான படிக்கட்டை கொண்ட உலகப் பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில் நிற்கிறோம்.// - லெனின்

ஆகையினால், இன்றுள்ள ஏகபோக முதலாளித்துவ அரசு கட்டமைப்பை, சோஷலிசத்திற்கு செல்வதற்கான படிக்கட்டாக நாம் கருத வேண்டும். அதன் குணங்குறிகளை நாம் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

  • தொழிநுட்ப வளர்ச்சியானது இன்று பலமடங்கு விரிவடைந்துள்ளது. கணணி மயமாக்களில் இருந்து மிகச் சிறிய இலத்திரனியல் கருவிகள் பாவிக்கும் அளவிற்கு வந்து விட்டது. அதாவது, மிகத் தீவிரமாக உற்பத்திகள் சமூகமயமாக்கப் பட்டுள்ளன. உதாரணத்திற்கு, இன்று ஸ்மார்ட் போன் பாவனை உலகம் முழுவதும் கிராமங்களில் கூட நுழைந்து விட்டது. புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகும் அடுத்த நாளே, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கின்றன. இது எந்தளவு தூரம் உற்பத்தி சமூக மயமாகியுள்ளது என்ற உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இதன் அடுத்த படியாக, உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்கும் கட்டத்தை (சோஷலிசம்) நோக்கி நகர வேண்டும்.

  • புதிய தொழில்நுட்ப வசதிகள் ஆவன, மிகப் பெரிய, உறுதியாக வளரக் கூடிய நிறுவனங்களில் தங்கியுள்ளன. அது கார்பரேட் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதெல்லாம் திட்டமிட்ட பொருளாதார செயற்பாட்டை கொண்டுள்ளன. முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த திட்டமிட்ட பொருளாதாரத்தை பார்த்து கேலி பேசியவர்கள், இன்று கார்பரேட் நிறுவனங்களின் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஆதரிக்கும் முரண்நகையை காணலாம். இரண்டு இடங்களிலும் திட்டமிடல் பொருளாதாரம் என்பது ஒரே விடயமாக இருந்த போதிலும், கார்பரேட் நிறுவனங்களால் செயற்படுத்தப் படும் பொழுது அது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே, நாம் இனி வருங்காலத்தில் சுரண்டலற்ற திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை வருகின்றது. ஏகபோக முதலாளித்துவ அரசு, தானாக பதவி விலகி அதிகாரத்தை கைவிட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது. பாட்டாளிவர்க்கம் கேட்டவுடன் ஏகபோக முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்து விடும் என்று யாராவது நம்பினால், அவர் கனவு காண்பவராக இருப்பார். இந்தக் கட்டத்தில் வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோளானது, அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.


(பிற்குறிப்பு: ஒரு மார்க்ஸிய வகுப்பிற்காக தயார் படுத்திய குறிப்புகளைக் கொண்டு எழுதிய  கட்டுரை. Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. மேலதிக விளக்கம் தேவைப் படுவோர் அந்த நூலை வாசிக்கலாம்.)



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Tuesday, December 12, 2017

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

(பாகம் - இரண்டு)


ஒரு வர்க்கப் புரட்சிக்கு தயாராக இல்லாத, இன்றைய காலத்தில், எமது தந்திரோபாயங்கள் எப்படி இருக்க வேண்டும்? 

இன்றைய காலகட்டத்தின் தோற்றப்பாடுகள்:

- இந்தக் காலகட்டமானது முதலாளிய வர்க்கத்தின் கூடுதல் பலமாகவும், உழைக்கும் வர்க்கத்தின் பலவீனமாகவும் உணரப்படும்.

- மூலதனம் தனது முகவர்களான சீர்திருத்தவாதிகள், திருத்தல்வாதிகளை பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணாம்சத்தை முறியடிக்கப் பார்க்கும். வர்க்க உணர்வை அரித்து துருப்பிடிக்க வைக்கும்.

- இந்தக் காலகட்டத்தில், உழைக்கும் வர்க்கமானது முதலாளிய அரசை நொறுக்கி விட்டு சோஷலிசத்தை கொண்டு வருவதற்கான கடமையில் இருந்து பல வருட காலம் பின்தள்ளப் பட்டிருக்கும்.

- ஏகபோக மூலதனத்தின் ஆட்சி அசைக்க முடியாத அளவு பலமாக இருக்கும். அரச இயந்திரம் பழுதில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்காத படியால், அவை முதலாளிய வர்க்கத்திற்கு நெருக்கடி உண்டாக்க மாட்டா.

அத்தகைய "அமைதியான" காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

- வர்க்கப் போராட்டத்திற்கான பள்ளிக்கூடம் அமைக்கலாம். உழைக்கும் வர்க்கத்தை அரசியல்மயப் படுத்தும் கல்வி புகட்டலாம். பொறுமையான, படிப்படியான தொழிற்சங்கப் போராட்டங்களை கட்டமைக்கலாம்.

- தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தற்காலிக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன் நின்று விடக் கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோள்கள் பற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் இருந்து தோன்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டும்.

- வர்க்க உணர்வு தானாக உருவாவதில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில் உறங்கிக் கிடக்கும் வர்க்க உணர்வை தட்டி எழுப்ப வேண்டும். அதை சோஷலிசத்திற்கான குறிக்கோளுடன் இணைக்க வேண்டும்.

- உழைக்கும் வர்க்கத்தினுள் படிப்படியாக வர்க்க குணாம்சத்தை புகுத்த வேண்டும். முதலாளிய அரசு அதிகாரத்துடனான ஒவ்வொரு மோதலையும், உரிமைகளை நசுக்கும் ஒவ்வொரு அடக்குமுறையையும் பயன்படுத்தி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்.

- குட்டி முதலாளிய வர்க்கத்தின் மீதும் செல்வாக்குப் பிரயோகிக்க வேண்டும். அவர்களுடன் ஒரு புரட்சிகர கூட்டு வைக்க முடியாவிட்டாலும், முதலாளிய அரசின் ஆட்சி குறித்த அவர்களது அவநம்பிக்கையை, அதிருப்தியை பயன்படுத்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும்.

- மூலதன ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான குட்டி முதலாளிய வர்க்கத்தின் போராட்டத்தை நிபந்தனையுடன் ஆதரிப்பதன் மூலம், அவர்களை உழைக்கும் வர்க்க போராட்ட வழிக்கு கொண்டு வர முடியும்.

*******

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

- இந்தக் கட்டத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலை மாறி விடும். உழைக்கும் வர்க்கம் தற்காப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு, முன்னரங்கிற்கு வந்து தாக்குதல் நடத்தும் கட்டத்திற்கு வந்திருக்கும். தொழிலாளர்களின் போராட்டமானது மிகப் பிரமாண்டமான பேரணிகளாகவும், வேலை நிறுத்தங்களாகவும் நடைபெறும்.

- தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகள் மறையும். உழைக்கும் வர்க்கமானது அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை நெருங்கி இருக்கும். அதனால், இந்த காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கம் தந்திரோபாய தாக்குதல்களை தொடங்கி இருக்கும்.

- இந்தக் கட்டத்தில் முதலாளிய வர்க்கத்தின் பலவீனம் தெரிய வரும். பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று நெருக்கடியை அடையும் பொழுது, ஏகபோக முதலாளித்துவம் எந்தவொரு சமரசத்திற்கும் வர முடியாது. அது சமூக நல சீர்திருத்தங்களின் முடிவின் தொடக்கமாக இருக்கும். இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வது கடினமாக இருக்கும்.

- அரசு இயந்திரம் துருப் பிடிக்கத் தொடங்கும். இடையில் நிற்கும் குட்டி முதலாளிய வர்க்கமும் கிளர்ச்சி செய்யத் தொடங்கும். முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் பலமிழக்கும். பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மக்கள் விரோத குணாம்சத்தை உழைக்கும் வர்க்கம் கண்டு கொள்ளும்.

- முதலாளிய வர்க்கம் நேரடி அடக்குமுறையில் ஈடுபடும். அரசு அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் நாள்தோறும் நடக்கும். இந்தக் கட்டத்தில் இருந்து தான் வர்க்கப் போராட்டம் தொடர்கின்றது.

- இந்தக் கட்டத்தில் அரசியல் போராட்டம் முதன்மையானது. அரசியல் கோரிக்கைகள் சமூக மாற்றத்திற்கான சுலோகங்களாக மாறும். அது மக்களை எழுச்சி கொள்ள வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றத் தூண்டும். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது, புரட்சிகர பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையின் கீழ் ஒரு விடுதலைப் போராட்டமாக பரிணமிப்பதற்கான கிளர்ச்சியையும் பிரச்சாரங்களையும் கொண்டிருக்கும்.

- இந்தப் போராட்டங்கள் ஊடாக, தொழிற்சாலைகளில் வேர் பரப்பியுள்ள (கம்யூனிஸ்ட்) கட்சியானது, ஒரு வெகுஜனக் கட்சியாக வளர்ச்சி அடையும். அதன் உத்திகளுக்கான இயங்குதளம் விரிவடையும். இது உழைக்கும் வர்க்கத்தை பலதரப் பட்ட போராட்டங்களை நடத்துவதற்கு ஊக்குவிக்கும். அதன் வியூகத்திற்கான வாய்ப்புகளும் வளர்ச்சி அடையும். நடுத்தர வர்க்கமான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் மத்தியிலும் கட்சிக்கு ஆதரவு கூடும். அந்த வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக இழுத்தெடுக்க முடியும்.

- வர்க்கப் போராட்டத்தை ஒரு புரட்சியை நோக்கி நகர்த்திச் செல்வதே, இந்தக் கால கட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

- இந்தக் காலகட்டம், பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் ஒன்று சேர்க்கும், விரிவான, ஆழமான போராட்டமாக பரிணமிக்கிறது. குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை பாட்டாளிவர்க்க சார்பானவர்களாக வென்றெடுத்து, அவர்கள் எல்லோரையும் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆக்கி, இதுவரை அறியப் படாத போராட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது.

- மாற்றத்திற்கான சுலோகங்களைக் கொண்டு அரசியல்மயப் படுத்த வேண்டும். அரச இயந்திரத்தை துருப்பிடிக்க வைப்பதுடன் நன்று விடாது, அரச அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களை எமது தந்திரோபாய முடிவுகளுக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும்.

- கம்யூனிஸ்ட் கட்சியை வெகுஜன செயற்பாட்டுகளை ஒழுங்கு படுத்தும் மக்கள் கட்சியாக மாற்ற வேண்டும். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு புரட்சி ஒன்றே மாற்று வழி என்பதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

(Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle - பாட்டாளி வர்க்க கல்வி நூலில் இருந்து சில பகுதிகள்) 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, February 21, 2017

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும் 
(Strategy and Tactics in the Class Struggle)

பாடம் ஒன்று : வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

இன்று வரையிலான வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறே ஆகும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி உள்ளனர். வர்க்கப் போராட்டம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைய முடியாத இரண்டு பகைச் சக்திகளுக்கு இடையிலான போர் ஆகும்.

அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனம் என்ற பிரசுரத்தில் மார்க்ஸ் எழுதிய முன்னுரையில் இருந்து, வர்க்கப் போராட்டம் பற்றிய சுருக்கமான முக்கிய குறிப்புகள்:

- சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து வர்க்கப் போராட்டம் உருவாகின்றது.

- ஆரம்பத்தில் மனிதர்களின் சுய விருப்புகளுக்கு அப்பாற்பட்டு வர்க்கப் போராட்டம் பரிணமிக்கிறது. இருப்பினும் தற்போதுள்ள சமூக அமைப்பின் இந்த தீவிர மாற்றமானது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உணர்வு பூர்வமான புரட்சிகர நடைமுறையை கோரி நிற்கிறது.

- இரு துருவங்களான சக்திகளுக்கு இடையிலான பகை முரண்பாடுகளை உண்டாக்கும் தோற்றுவாயை ஒழித்துக் கட்டுவதற்கு வர்க்கப் போராட்டம் முயல்கின்றது. காலத்திற்கு ஒவ்வாத உற்பத்தி உறவுச் சங்கிலியில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்வதை குறிக்கோளாக கொண்டது.

- பழைய சமுதாயத்திற்கு உள்ளேயே புதிய பொருளாதார சமூக அடிப்படை தயார் படுத்தப் படுகின்றது.

இன்றைய காலத்தில், ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் இரண்டு பிரதானமான வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. ஒன்று, ஏகபோக முதலாளிகளால் தலைமை தாங்கப் படும் முதலாளித்துவ வர்க்கம். இரண்டு, உழைக்கும் வர்க்கம். இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையில் வர்க்கப் போராட்டம் நடக்கிறது.

"முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கொல்வதற்கான ஆயுதங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவற்றை இயக்குவதற்காக நவீன உழைக்கும் வர்க்கம் அல்லது பாட்டாளிகளையும் உருவாக்கியது." - மார்க்ஸ்/எங்கெல்ஸ் (தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்)

ஆகையினால், வர்க்கப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சங்களாக பின்வரும் தோற்றப்பாடுகளை கருதலாம். முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இது வாழ்வா, சாவா போராட்டம். உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் அடிமைத்தளை அல்லது விடுதலைக்கான போராட்டம்.

மேற்படி காரணத்தால், முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறையை கையில் எடுக்கிறது. உழைக்கும் வர்க்கம் ஒரு கொடூரமான எதிரியை தூக்கி எறியப் பார்க்கிறது.

இந்த இரண்டு பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையிலான போர் தான் வர்க்கப் போராட்டம் ஆகும். அமைதியான காலத்தில் அது மறைமுகமாக நடக்கிறது. ஆனால், ஆயுதமேந்திய எழுச்சியின் பொழுது, அது தீவிரமடைந்து உச்சத்தை தொடுகின்றது.

மனித விருப்புக்கு மாறாக, அன்றாட வாழ்வில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையில் வர்க்கப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து அரசியல் வியூகமும், உத்திகளும் பிறக்கின்றன. இருப்பினும் அது ஒரு புறவயமான தோற்றப்பாடு ஆகும். மறுபக்கத்தில், தற்சார்புடைய உணர்வு பூர்வமான போர்களும் நடக்க வாய்ப்புண்டு.

இது குறித்து ஸ்டாலின் கொடுத்த விளக்கம் : "வர்க்கப் போராட்டத்திற்கான புறவயமான காரணிகளை விட, உழைப்பாளர்களின் உணர்வுபூர்வமான தன்னெழுச்சி எமக்கு முக்கியமானது. அதற்குக் காரணம், இந்த இயக்கமே வியூகத்தையும், உத்திகளையும் வகுக்கின்றது. புறவயமான சக்திகள் தாக்கம் செலுத்தும் சூழலில் எந்த வியூகமும் இருப்பதில்லை. ஆனால், அகவயமான இயக்கத்தில் வியூகமானது பரந்துவிரிந்துள்ளது. அங்கு வியூகமானது இயக்கத்தின் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது பின்தள்ளவோ உதவுகின்றது. அந்த இயக்கத்தின் திறன்மிக்க செயற்பாடுகள் அல்லது குறைபாடுகள் அதைத் தீர்மானிக்கிறது." -ஸ்டாலின், (ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் வியூகமும், உத்திகளும் பற்றிய ஆய்வுகள்)

இராணுவ அறிவியலில் இருந்து தான் வியூகமும், உத்திகளும் தோன்றின. பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டமும் ஒரு போர் தான். அந்த வகையில், அதுவும் போர்க்கலைக்கு நெருக்கமானது. அரசியல் உத்திகளும், போர் உத்திகளும் பற்றி பேசிய லெனின், தனது கட்சி ஊழியர்கள் கிளவுஸ் விட்ஸ் எழுதிய நூல்களை படிக்குமாறு கோரினார்.

கிளவுத்ஸ்விட்ஸ் பிரஷிய (ஜெர்மன்) படையில் ஜெனரலாகவும், இராணுவக் கல்லூரி அதிபராகவும் இருந்தார். அவர் 1832 ம் ஆண்டு எழுதிய போரியல் பற்றிய நூலில் எழுதிய வாசகங்கள் உலகப் புகழ் பெற்றன. அதை பல தடவைகள் லெனின் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். 

அதாவது, "யுத்தம் என்பதும் ஒரு வகையில் அரசியல் கொள்கையின் தொடர்ச்சி. அந்த வகையில், போர் கூட ஒரு அரசியல் செயற்பாடு தான்." என்பது அவரது கூற்று. போரும் அரசியலும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன. ஆகையினால், வர்க்கப் போராட்டத்திற்காக போர்க்கலையின் விதிகளை பற்றி அறிந்து கொள்வதும் "சமாதான" காலத்தில் முன்னெடுக்கப் படும் அரசியல் தான்.

கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய போர்க்கலை இந்தக் காலகட்டத்திற்கு ஏற்றது அல்ல என்று ஸ்டாலின் அதைப் புறக்கணித்து வந்தார். இந்தக் காலத்தில் இராணுவ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்ட நவீன காலத்தில், இயந்திரங்கள் போர்க்கலையை தீர்மானிக்கிறது என்பது ஸ்டாலினின் வாதமாக இருந்தது. 

லெனினிடம் அத்தகைய கருத்துக்கள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய இராணுவ போதனைகளில் உள்ள அரசியல் முக்கியமானது என்று கருதினார். இராணுவ தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி பற்றி மட்டுமே ஸ்டாலின் சிலாகித்து பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை. ஏனெனில், இன்றைய போர்க்கருவிகள் முன்பிருந்ததை விட பல மடங்கு திறன் வாய்ந்ததாகவும், போரின் வியூகங்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தனவாகவும் உள்ளன.

"தாக்குதல்களில் ஈடுபடுத்தப் படும் இராணுவ சக்திகளின் கோட்பாடு உத்திகள் எனப்படும். அந்தத் தாக்குதல்களை போர் எனும் இறுதி இலக்கை நோக்கி பாவிக்கும் கோட்பாடு வியூகம் எனப்படும்." - கிளவுத்ஸ்விட்ஸ்

அந்த வகையில் வியூகம் முதன்மையானது. அது போர் முழுவதினதும் குறிக்கோள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. அத்துடன், ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னால் உள்ள அடிப்படை நோக்கம் என்னவென்பதையும் சொல்கின்றது. உத்திகள் இரண்டாம் பட்சமானவை. ஒவ்வொரு தாக்குதலும், சமர்களும் எவ்வாறு நடத்தப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

வியூகம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட நிபந்தனை. சக்திக்கு மீறிய அழுத்தங்கள் வந்தால் அன்றி, அது போரின் திசையை மாற்றுவதில்லை. ஆனால், சண்டை நடந்து கொண்டிருக்கும் சூழலில் புதிய புதிய உத்திகள்  எழலாம். அவை நிபந்தனைக்கு உரியவை அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியவை. வியூகம் வகுப்பதற்கு ஒரு நீண்டகால திட்டமும், அது பற்றிய தொலைநோக்கும் அவசியம். ஒவ்வொரு சமரிலும் பயன்படுத்தப் படும் உத்திகள் முக்கியத்துவம் குறைந்த குறுகிய கால திட்டங்கள் ஆகும்.

இராணுவ அறிவியலில் பின்பற்றப்படும் அதே வகையான வியூகமும், தந்திரோபாயமும், மார்க்சிய லெனினிச கோட்பாட்டிலும் பிரயோகிக்கலாம். அதற்காக உழைக்கும் வர்க்கம் தனது இலக்கை தீர்மானித்துக் கொள்வதுடன், அது சார்ந்த வியூகத்தையும், உத்திகளையும் பின்பற்ற வேண்டும்.

"பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்றிருப்போரின் அறிவியலை, மார்க்சிய லெனினிச வியூகமும், உத்திகளும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன." - ஸ்டாலின்

இந்த சமூகத்தின் புறவயமான காரணிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, உழைக்கும் வர்க்கத்தின் இறுதி இலக்கு எதுவென்பதை மார்க்சிய லெனினிசம் தீர்மானிக்கிறது. மார்க்சிய லெனினிச வியூகங்களும், உத்திகளும் சமூக அசைவியக்கத்தில் பலவிடங்களிலும் பிரயோகிக்கப் படலாம். அது பிரச்சார வேலைத் திட்டங்களை வளர்க்கிறது. போராட்ட சக்திகளையும், உறங்குநிலையில் உள்ள ஆதரவு சக்திகளையும் இனங் காண்கின்றது. போர்க் களம், ஆதரவுத் தளங்களை தீர்மானிக்கிறது. சிறிய சிறிய சண்டைகள், பெரியதொரு போருக்கு இட்டுச் செல்கின்றன. 

வர்க்கப் போரில், முன்னணி அரங்கில் நின்று போரிடும் பிரதானமான இராணுவம் உழைக்கும் வர்க்கம் ஆகும். நாட்டுப்புற விவசாயிகள் ஆதரவு சக்திகள். உழைக்கும் மக்களின் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போரை வழிநடத்தும் தளபதிகள் ஆகும்.


உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர குறிக்கோள் எதுவென கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம் ஒன்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்: 
"நவீன சமுதாயத்தில் இருக்கும் வர்க்கங்களை கண்டுபிடித்ததாக நான் பிரகடனப் படுத்தவில்லை. எனக்கு முன்னரே, பல வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளித்துவ வரலாற்று அறிஞர்கள் சரித்திர காலத்தில் வர்க்கங்களுக்கு இடையில் நடந்த போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். பொருளாதார கட்டமைப்புகளை பற்றி எழுதிய முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் அது பற்றி சொன்னார்கள். எனது பங்களிப்புகள்: 
1.உற்பத்தி வளர்ச்சியில் வர்க்கங்களின் உந்துசக்தியை எடுத்துக் காட்டியது.
2.வர்க்கப் போராட்டமானது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் அவசியத்தை உண்டாக்கும் என்றது. 
3.அது வர்க்க வேற்றுமைகளை ஒழித்து, வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் இடைநிலைப் பாத்திரம் வகிக்கும் என்றது." 
- Karl marx letter to Joseph Weydemeyer on March 5, 1852



(பிற்குறிப்பு: Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle நூலில் இருந்து எடுக்கப் பட்ட பகுதிகள். இந்நூலானது ஜெர்மன் மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான தத்துவார்த்த வழிகாட்டியாக உள்ளது.)

Saturday, June 25, 2011

பின்லாந்தின் சோஷலிசப் புரட்சி - ஒரு மீளாய்வு

சோஷலிச பின்லாந்தின் கொடி

நமது கால இளைஞர்கள், "நோக்கியா" செல்பேசியின் தாயகமான பின்லாந்து குறித்து, அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து, இன்று அரசியல் குழப்பங்களற்ற அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கின்றது. இந்த வருடம், உலகில் சிறந்த வாழ்க்கை வசதிகளைக் கொண்ட முதலாவது நாடாக தெரிவு செய்யப் பட்டதில் அந் நாட்டினருக்கு பெருமை தான். சுமார் என்பது வருடங்களுக்கு முன்னர், பின்லாந்து மிகவும் வறிய நாடாக இருந்தது. ரஷ்யாவை பின்பற்றி சோஷலிசப் புரட்சி வெடித்ததும், அதன் விளைவாக நடந்த உள்நாட்டுப் போரில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்ட வரலாறுகள் இன்று பெரிதும் மறைக்கப் பட்டு விட்டன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நடந்த இது போன்ற புரட்சிகள் பல வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன. கிடைத்தற்கரிய ஆவணங்கள் பல, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள "சர்வதேச சமூக வரலாற்று ஆய்வு மையத்தில்" (International Institute of Social History) பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அந்த நிலையத்தின் நூலகத்தில் சில நாட்களை செலவிட்டதன் பயனாக, பல தகவல்களை அறிய முடிந்தது. இந்தக் கட்டுரையில் பின்லாந்து பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பின்லாந்து ஐரோப்பாக் கண்டத்தில் தனிச் சிறப்பு மிக்க நாடு. பின்லாந்து நாட்டு மக்கள் பேசும் Suomen kieli மொழியடிப்படையில் அமைந்த உத்தியோகபூர்வ பெயர்: சுஒமி(Suomi). எமக்கு நன்கு பரிச்சயமான ஜெர்மானிய, அல்லது லத்தீன், அல்லது ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேராத தனித்துவமான மொழி அது. எஸ்தோனியா, லாட்வியா நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கு நெருக்கமானது.

சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளின் வட பகுதியில் வாழும் "சாமி" (Sami) இன மக்கள், மற்றும் வட-மேற்கு ரஷ்யாவில் வாழும் கரேலிய (karelia) இன மக்கள் பேசும் மொழிகளுடன் தொடர்புடையது. பின்லாந்து என்பது, சுவீடிஷ்காரர்கள் வைத்த பெயராக இருக்கலாம். நீண்ட காலமாக பின்லாந்து அகண்ட சுவீடிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. பிற்காலத்தில், சுவீடனுடன் போரிட்டுக் கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தினால் உள்வாங்கப் பட்டது. 1918 ல் சுதந்திர நாடாகும் வரையில், ரஷ்யாவின் பகுதியாகவிருந்தது.

சார் மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே, பின்லாந்து ஓரளவு சுயாட்சி அதிகாரத்தை பெற்றிருந்தது. சார் காலத்தில், பின்லாந்து தேசியவாதிகள் ரஷ்ய மொழித் திணிப்பை எதிர்த்து கலகம் செய்தனர். ரஷ்யாவில் லெனின் தலைமையில் இடம்பெற்ற போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. முன்னர் சார் மன்னனால் ஆளப்பட்ட ரஷ்யப் பகுதிகள், புதிய சோவியத் அரசுக்குள் உள்வாங்கப் பட்டன.

ஆயினும், போல்ஷெவிக்குகள் எதற்காக பின்லாந்தை சுதந்திர நாடாக்கினார்கள் என்ற கேள்வி எழலாம். அன்றைய புவிசார் அரசியல் காரணிகள் முக்கியமாக இருந்துள்ளன. முதலில், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்த லெனின் குழுவினர், ஜெர்மனியின் உதவியுடன் பின்லாந்து வரை ரயிலில் வந்தனர். பின்லாந்து எல்லையில் இருந்து சுமார் 200 கி.மி. தூரத்தில் சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரம் இருப்பது குறிப்பிடத் தக்கது. லெனின் குழுவினர் பத்திரமாக ரஷ்யா போய்ச் சேருவதற்கு உதவிய பின்லாந்துக்கு நன்றிக்கடனாக, அதற்கு சுதந்திரம் வழங்கி இருக்கலாம். மேலும், ஜெர்மனியின் வற்புறுத்தலும் பின்லாந்து சுதந்திரத்தை விரைவு படுத்தியது எனலாம்.

"தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" குறித்து லெனின் எழுதிய கோட்பாடுகளும், பின்லாந்து தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்து விட்டது. இன்று "தமிழ்த் தேசியவாதிகள்" அதைக் காட்டித் தான், இடதுசாரி சக்திகளை தமக்குப் பின்னால் வருமாறு அழைக்கின்றனர். "தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன் கம்யூனிஸ்ட் அல்ல," என்று புது வியாக்கியானங்களை கொடுக்கின்றனர். "பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணயம்" என்ற கோட்பாடு, அந்த தேசங்களின் பாட்டாளி வர்க்கம் சமதர்ம புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கில், லெனினால் எழுதப்பட்டது.

வலதுசாரி தேசியவாத சக்திகளே அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதும், அதிகாரத்திற்கு வந்ததும் பாட்டாளிவர்க்க புரட்சியாளர்களை ஒடுக்குவார்கள் என்பதும், லெனின் கண்கூடாக கண்ட உண்மைகளாக உள்ளன. இதனால், பிற்காலத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, சோவியத் ஒன்றியத்திற்குள் தீர்வு எட்டப்படுவதை வலியுறுத்தியது. அது வேறு விடயம். இப்போது பின்லாந்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்று விரிவாக ஆராய்வோம்.

பின்லாந்தில் "சுதந்திரப் போராட்டம்" நடந்ததாகவும், அந்தக் காலத்தில் வடக்கே உள்ள வாசா (Vaasa) நகரம் தற்காலிக தலைநகரமாக திகழ்ந்ததாகவும், முதலாளித்துவ சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அநேகமாக, பின்லாந்து பாட நூல்களிலும், வெளிநாட்டவர்களுக்கான அறிமுக கையேடுகளிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. ரஷ்ய மேலாதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற்றதைப் போல காட்டுவதற்காக, பின்லாந்தில் நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் "ஆயுதக் களைவு பிரச்சினை" எடுத்துக் காட்டப் படுகின்றது. உண்மையில் சுதந்திரப் பிரகடனத்தை அடுத்துக் கிளம்பிய சோஷலிசப் புரட்சியை சிறுமைப் படுத்தவே அவ்வாறு பரப்புரை செய்யப் பட்டது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்தில், ரஷ்யப் படைகள் நிலை கொண்டிருந்ததில் வியப்பில்லை. அதே நேரம், ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், ரஷ்ய இராணுவத்தினுள் பிளவு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியின் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததும், புரட்சிக்கு ஆதரவான செம்படைகளும், மன்னருக்கு விசுவாசமான வெண் படைகளும் மோதிக் கொண்டன. இதே போன்றதொரு பிரிவு, பின்லாந்திலும் தோன்றியது. பழைமைவாத, நிலப்பிரபுத்துவ ஆதரவு வெண்படை அதிகாரத்தை கைப்பற்றத் துடித்தது. பின்லாந்தின் பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சமூக- ஜனநாயகக் கட்சி அதற்கு சவாலாக விளங்கியது. அவர்களைப் பொறுத்த வரையில், சோஷலிசப் புரட்சிக்கு ஏற்ற தருணம் அது.

"பின்லாந்தில் ஒரு போதும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு இருக்கவில்லை. ஆகவே ரஷ்யா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போன்று புரட்சிக்கு ஏதுவான சூழ்நிலை இருக்கவில்லை." பூர்ஷுவா சரித்திரவியலாளர்களின் இன்னொரு திரிபுபடுத்தல் இது. அந்தக் கூற்றில் அரைவாசி மட்டுமே உண்மை. பின்லாந்தின் பெரும்பகுதி நாட்டுப்புறங்களில் சிறு விவசாயிகள், தமது ஜீவனோபாயத்தை தாமே தேடிக் கொள்ளும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அவர்கள் எந்தவொரு நிலப்பிரபுவுக்கும் திறை செலுத்தவில்லை. இன்னும் வடக்கே போனால், பழங்குடியினரின் "லாப் லான்ட்"(Lapland) பிரதேசம் வரும். (அங்கே தான் கிறிஸ்மஸ் தாத்தா வாழ்வதாக ஐதீகம்!)

லாப் லான்ட் பழங்குடியினர் இன்றைக்கும் மான் பண்ணைப் பொருளாதாரத்தை நம்பி வாழ்கின்றனர். சுய பொருளாதாரத்தை நம்பி வாழும் மக்கள் மத்தியில் பின்லாந்து தேசியவாதிகள் ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், அன்று மட்டுமல்ல இன்றைக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட தென் பின்லாந்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. பின்லாந்தின் தெற்குப் பகுதியில் தான் அதிகளவு நகரமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. நகரங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெருந்திரள் பாட்டாளி மக்கள் தென் பின்லாந்தில் வசிக்கின்றனர். மத்திய காலத்தில், சுவீடிஷ் நிலப்பிரபுக்களும் தெற்குப் பகுதிகளில் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதனால், பெருமளவு விவசாயக் கூலிகளும் அங்கே காணப்பட்டனர். அத்தகைய சமூகத்தில், சமதர்மக் கொள்கைகள் பரவியதில் வியப்பில்லை.

பின்லாந்தின் சுதந்திரத்திற்கு முன்னரே, பாராளுமன்றம் அமைக்கப் பட்டு விட்டது. தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற சமூக- ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. உலகிலேயே முதல் தடவையாக, ஒரு சோஷலிசக் கட்சி அதிகளவு ஓட்டுகளைப் பெற்றது பின்லாந்தில் தான். நிலைமை அவ்வாறு இருக்கையில், "ரஷ்ய போல்ஷெவிக்குகளின் சூழ்ச்சியினால் பின்லாந்தின் செம் புரட்சி இடம்பெற்றதாக," என்று வரலாற்றைப் புரட்டுகின்றனர். உண்மையில், பின்லாந்துப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தலைமையேற்ற சமூக- ஜனநாயகக் கட்சி லெனினைப் பின்பற்றவில்லை. அந்தக் கட்சியினர் மார்க்சிய நெறிகளை நம்பினார்கள். அதே நேரம், லெனினிசம் தவறான வழி முறைகளைக் கொண்டது எனக் கருதினார்கள். லெனின் முன் மொழிந்த "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்லாந்து சோஷலிஸ்டுகளின் வருடாந்த மகாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின், புரட்சிக்கு தயார் படுத்துமாறும், அதற்கு ரஷ்ய போல்ஷெவிக்குகளின் ஆதரவு கிடைக்கும் என்றும், உறுதிமொழி வழங்கினார். ஆயினும், பெரும்பான்மை பின்லாந்து சோஷலிஸ்டுகள், தேசியவாத அரசியலையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் விரும்பினார்கள். "பின்லாந்துக்காரர்கள் புரட்சிக்கு தகுதியற்ற மிதவாதிகள்" என்று லெனின் சாடினார். உண்மையில், சோஷலிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றும் நேரத்தில், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கவே போல்ஷெவிக்குகள் விரும்பினார்கள்.

"பின்லாந்தின் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் (ரஷ்ய) பேரினவாதிகள்...." (V.I.Lenin, Speech on the National Question) ரஷ்ய தரப்பு சலசலப்புகளை மீறித் தான் லெனின் பின்லாந்துக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தார். சுவீடனிடமிருந்து நோர்வே பிரிந்து சென்றதை உதாரணமாகக் காட்டினார். பின்னிஷ் தேசியவாதிகள் பூரண சுதந்திரம் பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். அந்த விடயத்தில் பின்னிஷ் சோஷலிஸ்டுகளும் உடன்பட்டனர். ஆனால், சுதந்திரத்தின் பின்னர் தேசியவாதிகள் தம்மை அழித்தொழிக்கத் துணிவார்கள் என்பதை சோஷலிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு தொழிலாளர்கள் மடிந்தனர். அந்த சம்பவம் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

சோஷலிஸ்டுகள், "தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை" உருவாக்கத் தொடங்கினார்கள். மறு பக்கத்தில் தேசியவாதிகளும் ஆயுதக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். பின்னிஷ் தேசியவாதிகளுக்கு ஜெர்மனியின் ஆதரவு கிட்டியது. ஜேர்மனிய, சுவீடிஷ் வீரர்கள், பின்னிஷ் தேசியவாத வெண் படையில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் தளபதியான மன்னேர்ஹைம் சார் மன்னனின் இராணுவத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியர்களால் பயிற்றுவிக்கப் பட்டவர். இன்றுள்ள பின்லாந்தின் "ஜனநாயக அரசு" கூட, அவர் ஒரு ஒப்பற்ற படைத் தளபதி என்று, மன்னேர்ஹைம் புகழ் பாடுகின்றது. ஆனால், மன்னேர்ஹைம் தலைமை தாங்கிய வெண் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து மௌனம் சாதிக்கின்றது.

சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில்
இருந்த பின்லாந்தின் பகுதிகள்
1918 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த போர், பின்லாந்து மக்கள் மத்தியில் பாரிய பிளவை ஏற்படுத்தியது. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கொள்கை அடிப்படையில் பிரிந்து நின்றனர். ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொன்று குவித்தனர். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அப்படித் தான் தெரியும். ஆனால் அது ஒரு வர்க்கப் போர். வெவ்வேறு இனங்களை சேர்ந்தோர், தாம் சார்ந்த வர்க்கத்திற்கு ஆதரவளித்தனர். உதாரணத்திற்கு, பின்னிஷ் சோஷலிச செம்படையுடன் சேர்ந்து ரஷ்ய தொண்டர்கள் போரிட்டனர். அதே போல, பின்னிஷ் தேசியவாத வெண் படையில் ஜெர்மன், சுவீடிஷ் இனத்தவர்கள் சேர்ந்திருந்தனர்.

சனத்தொகை அடர்த்தியுள்ள, பெரு நகரங்களைக் கொண்ட பின்லாந்தின் தெற்குப் பகுதி சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. "பின்லாந்து சோஷலிசக் குடியரசின்" தலைநகராக ஹெல்சிங்கி இருந்தது. சனத்தொகை குறைந்த பின்லாந்தின் வட- மத்திய பகுதி தேசியவாதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பின்லாந்து மன்னராட்சியின்" தலைநகராக வாசா இருந்தது.

ஆரம்பத்தில் சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ரஷ்யாவில் இருந்து ஆயுத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. இன்னமும் வாபஸ் பெறப்படாத ரஷ்ய படைகளும் உதவின. ஆயினும், ஏற்கனவே ஜெர்மனியுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து ரஷ்ய ஆதரவு விலத்திக் கொள்ளப் பட்டது. பின்லாந்தில் செல்வாக்கு செலுத்த, இது தக்க தருணம் என்று ஜெர்மனி கருதியது. வெண் படையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ஜெர்மன் படைகள் அனுப்பி வைக்கப் பட்டன.

பின்லாந்து சோஷலிச நாடானால், சுவீடிஷ் சோஷலிச இயக்கத்தையும் புரட்சிக்கு தூண்டி விடும் என்று பயந்த சுவீடனும், தொண்டர் படை அனுப்பியது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்ற தேசியவாதப் படைகள், அனைத்து முனைகளிலும் முன்னேறிச் சென்றன. குறிப்பாக பின்லாந்தின் தெற்குக் கரையோரம், ஜெர்மன் படைகள் நேரடியாக வந்திறங்கியமை, சோஷலிச செம்படைக்கு பேரிடியாக அமைந்து விட்டது. அதுவே பின்லாந்தின் சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். சுமார் மூன்று மாத காலம் நிலைத்து நின்ற "பின்லாந்து சோஷலிசக் குடியரசு" முடிவுக்கு வந்தது.

மூன்று மாத போரில், இரண்டு தரப்பிலும் குறைந்தது முப்பதாயிரம் பேர் கொல்லப் பட்டனர். செம்படையினர் பக்கமே அதிகளவு உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. பெருமளவு செம்படை வீரர்கள், இராணுவ பயிற்சி பெற்ற தொழில் முறை வீரர்கள் அல்ல. அவர்கள் ஆயுதமேந்திய சாதாரண மக்களாவர். செம்படையின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். சோஷலிச புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களும், செம்படையின் முக்கிய உறுப்பினர்களும், சோவியத் யூனியனுக்கு தப்பியோடி விட்டார்கள். கீழ்நிலைப் போராளிகளும், ஆதரவாளர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நூற்றுக் கணக்கான சரணடைந்த செம்படையினர், நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓராயிரத்திற்கும் குறையாத ரஷ்ய தொண்டர்களும் நீதிக்கு மாறாக படுகொலை செய்யப்பட்டனர்.

போர் நடந்த காலத்தில், செம்படையினரும் "நீதிக்கு புறம்பான கொலைகளில்" ஈடுபட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. நிலவுடமையாளர்கள்,முதலாளிகள்,அரசு அதிகாரிகள், சில மதகுருக்கள் போன்றோரே செம்படையினரால் "மரண தண்டனை" விதிக்கப்பட்டனர். ஆனால், தேசியவாதப் படையினரோ, சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் எல்லோருக்கும் "மரண தண்டனை" விதித்தார்கள். அவர்கள் மீது "தேசத் துரோக" குற்றச்சாட்டு சுமத்தியே தண்டனை நிறைவேற்றப் பட்டது. சோஷலிசத்திற்கு ஆதரவானோர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம், இன்று வரை கணக்கெடுக்கப் படவில்லை. குறைந்தது பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம்.
சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
சோஷலிசப் புரட்சிக்கு ஆதரவளித்த மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். பல வருடங்களாக அவர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். முகாம்களுக்கு உள்ளேயும் கொலைகள் நடந்தன. இதை விட, உணவுப் பற்றாக்குறை காரணமாக பட்டினி கிடந்தது மடிந்தோர் ஆயிரம். சுகாதார வசதி இல்லாததால் தொற்று நோய்களும் பரவின. மொத்தம் பத்தாயிரம் பேராவது தடுப்பு முகாம்களில் இறந்திருப்பார்கள்.

ஹெல்சிங்கி நகருக்கு அண்மையில் உள்ள Suomenlinna தீவு, ஒரு காலத்தில் கொலைகள் மலிந்த தடுப்பு முகாமாக செயற்பட்டது. பின்லாந்து அரசு, தனது கடந்த கால போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, இன்று அந்த தீவை சுற்றுலாத்தலமாக்கியுள்ளது. பின்லாந்தின் தோற்றுப் போன சோஷலிசப் புரட்சியும், உள்நாட்டுப் போரும், மக்கள் மத்தியில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தி விட்டது. அண்மைக் காலம் வரையில், இடதுசாரி பின்னிஷ் மக்களும், வலதுசாரி பின்னிஷ் மக்களும், குரோதத்துடன் வாழ்ந்து வந்தனர். ஒருவர் மற்றவரைக் கண்டால் வெறுக்குமளவிற்கு, அவர்கள் மனதில் வன்மம் குடி கொண்டிருந்தது.

பின்லாந்து சோஷலிசப் புரட்சியின் தோல்வியானது, இடதுசாரிகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியது. மிதவாத சமூக - ஜனநாயகவாதிகள் புதிய அரசுடன் ஒத்துழைத்தனர். அதற்கு மாறாக புரட்சியை தொடர விரும்பியவர்கள், "பின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி"யை ஸ்தாபித்தனர். அவர்கள் எல்லோரும் சோவியத் யூனியனில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால், சோவியத் சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனம் பின்வருமாறு: "புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் ஜனநாயகவாதிகள். சோவியத் யூனியனுடன் கூட்டமைப்பை விரும்பாதவர்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை." 

ஆமாம், பின்லாந்து புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள், "நிரந்தரப் புரட்சியை" முன்னெடுத்த சமூக- ஜனநாயகவாதிகள். இன்று மேற்கத்திய ஜனநாயகத்தில் காணப்படும் "கருத்துச் சுதந்திரம், பல கட்சி ஜனநாயகம்" போன்றவற்றை நடைமுறைப் படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டால் போதும். மக்கள் ஆட்சி மலரும் என்று நம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அதனை, "தூய ஜனநாயகவாதம்" என்று விமர்சித்தது.

__________________________________________________

படங்களுக்கான விளக்கம்:

1.மேலே: சோஷலிச பின்லாந்தின் கொடி
2.மத்தி: சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தின் பகுதிகள். செந்நிற மையினால் காட்டப்பட்டுள்ளது.
3.கீழே: சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
___________________________________________________


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1.Dokument från Finska Inbördeskriget (Hannu Soikkanen)
(ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டது. பல கிடைத்தற்கரிய ஆவணங்களை தொகுத்துள்ளது.)
2.A brief History of Modern Finland (Martti Häikiö)
3.The Winter War (Engle & Paananen)
4.Speech on the National Question (V.I.Lenin)
5.மற்றும் International Institute of Social History நூலகத்தில் கிடைத்த ஆவணங்கள்.