Monday, June 30, 2014

இணக்க அரசியலின் தோல்வியும் தலித்திய அரசியலின் ஏழ்மையும்

  • இலங்கையில் இணக்க அரசியல் 


இலங்கையில் அண்மையில் நடந்த முஸ்லிம் விரோத கலவரங்களுக்குப் பின்னர், "முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி" குறித்து பல தமிழர்கள் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, "இதற்குத் தான் தமிழன் ஆயுதம் ஏந்தினான் தெரியுமா?" என்று கேட்கிறார்கள்.

இணக்க அரசியல் நடத்துவது, முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய தனித் தன்மையாக கருத முடியாது. ஐம்பதுகளில் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இணக்க அரசியல் செய்தவர்கள் தான். மலையகத் தமிழர் சமூகத்திற்கு தலைமை தாங்கும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸ், அன்று முதல் இன்று வரை, அரசுடன் சேர்ந்து இணக்க அரசியல் செய்து வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர், ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியல் செய்வதே நல்லது என்று நம்புகின்றனர். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார், கனடாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போன்ற சில பிரபலங்கள் கூட, ஏகாதிபத்தியத்துடன் இணக்க அரசியல் செய்வதற்கு தயங்காதவர்கள்.

இன்றைய இலங்கை அரசியலில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமை, உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மை இனங்களுக்கும் பொதுவானது. இணக்க அரசியல் செய்வதும், எதிர்ப்பு அரசியல் செய்வதும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியின் தீவிரத்தைப் பொறுத்தது.

"நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்." என்று மாவோ சொன்னார். புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட, மாவோவின் மேற்கோளை சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தமிழர்கள் பல தசாப்த காலமாக அஹிம்சா வழியில் போராடிக் களைத்த பின்னர் தான் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." என்று இன்றைக்கும் தமிழ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் பலர், அதன் படிப்பினைகள் என்னவென்று நினைவுபடுத்திப் பார்ப்பதில்லை. முஸ்லிம்களும் ஆயுதப்போராட்டம் நடத்தினால், அவர்களுக்கும் ஒரு முள்ளிவாய்க்கால் காத்திருக்கிறது என்பதை, சிங்களப் பேரினவாத அரசு 2009 ஆண்டு நிரூபித்துக் காட்டி இருந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் விடுக்கப் பட்ட எச்சரிக்கை. அது மட்டுமல்ல, தெற்காசியாவில் தமது இன விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் அனைத்து மக்களுக்குமான எச்சரிக்கை. இதனை, பாகிஸ்தான், இந்திய அரசுகள் வெளிப்படையாகவே தெரிவித்து வந்துள்ளன. பல்வேறுபட்ட அரசாங்கங்கள் தமக்குள் ஒன்று சேர்வதை, ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இடையிலான ஒன்று பட்ட போராட்டம் மட்டுமே, அவர்களின் விடுதலையை பெற்றுத் தரும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

******
ஐம்பதுகளில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டம், பிற்காலத்தில் ஈழப் போருக்கு வழிவகுத்தது. தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், சிங்களம் படிக்க மாட்டோம் என்று அடம்பிடித்து ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, அவர்களது முதலாளிய பாசம் காரணமாக, இலங்கையின் பொருளாதரத்தில் பெருமளவு தனியார் தொழிற்துறை வர வேண்டுமென்று விரும்பினார்கள். (அந்தக் காலங்களில் அரசு நிறுவனங்களே அதிகமாக இருந்தன.)

முப்பதாண்டு ஈழப் போர் முடிந்த பின்னர், இலங்கை முழுவதும் எங்கு பார்த்தாலும் தனியார் நிறுவனங்கள் பல்கிப் பெருகிக் காணப் படுகின்றன. அந்த நிறுவனங்களில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பொழுது, கல்வித் தகைமையாக ஆங்கிலத்துடன், சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் நிர்வகிக்கப் படும் தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், "சிங்களம் கட்டாயம்" என்ற கோரிக்கை வைக்கப் படுகின்றது. அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் சிங்களவர்களாக இருப்பதால், எமது பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு சிங்கள மொழி அறிவு அவசியம்..." என்று வணிக மொழியில் பேசுகின்றார்கள்.

தனியார் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக, இன்று இளந்தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் தாமாகவே சிங்களம் படிக்கிறார்கள். அன்று, அரசு கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக போராடிய தமிழ் தேசியவாதிகள், இன்று மௌனமாக இருக்கிறார்கள். இன்று சிங்கள மொழி மேலாதிக்கத்தை எதிர்த்தால், ஏகாதிபத்தியத்தை பகைத்துக் கொள்ள வேண்டி இருக்கும், என்று தெரிந்து வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அந்தப் பத்தில் தேசியவாதமும் அடங்குகின்றது.


  • இலங்கையில் தலித்திய அரசியல்


மார்க்சிய புரிதலற்ற தமிழ் தேசியம் மட்டுமல்ல, தலித்தியமும் இறுதியில் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கவே உதவும். அவர்களது அரசியல் வறுமை எந்தளவு பாரதூரமான தவறுகளை இழைத்துள்ளது என்பதை, அண்மைக் கால இலங்கை அரசியல் நிலவரம் நிரூபித்து வருகின்றது.

வட இலங்கையில், தலித்திய அரசியல் செய்யக் கிளம்பிய, தலித்திய முன்னணியினரிடம் வர்க்கப் பார்வை கிடையாது. அது மட்டுமல்லாது, சிங்கள தலித் மக்களுடனான தோழமை உணர்வும் கிடையாது. சிங்களவர்கள் மத்தியில் சாதிப் பிரச்சினை இருப்பதைக் கூட அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. இதுவும் ஒரு வகை தமிழ்க் குறுந் தேசியம் தான்.

ஒரு பக்கம், தமிழ் வெள்ளாள ஆதிக்க சாதியினர் இந்துத்துவாவாதிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், தமிழ் வெள்ளாள ஆதிக்க சாதியின் மேலாண்மையை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் தலித்தியவாதிகள், சிங்கள வெள்ளாள தலைமையை நட்பு சக்தியாக கருதுவது ஒரு முரண்நகை. அது அவர்களது கொள்கைக்கே முரணானது. அதனால் தான், பொது பல சேனா போன்ற பாசிச சக்திகளினால், தமிழ் ஆதிக்க சாதியவாதிகளையும், தமிழ் தலித்தியவாதிகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்க்க முடிந்தது.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னால், வர்க்க முரண்பாடு ஒளிந்திருக்கும். அதை ஆராய மறுப்பவன், ஆளும் வர்க்கத்திற்கே சேவகம் செய்கிறான்.

******

யாழ்ப்பாணத்தில் இன்றைக்கும் சில கிராமங்கள், தாழ்த்தப் பட்ட சாதியினர் வாழும் "தலித் கிராமங்களாக" அடையாளம் காணப் படுகின்றன. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் எல்லோருடைய கவனமும் வன்னிப் பிரதேசத்தின் மேல் குவிந்திருந்தது. யாழ் குடாநாட்டில் நடந்த பல சம்பவங்கள் வெளியுலகை அடையவில்லை.

இறுதிப்போர் முடியும் வரையிலும், சிங்கள இராணுவமும், அதன் சட்டத்திற்குப் புறம்பான கொலைப் படைகளும், தினந்தோறும் தலித் கிராமங்களை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தின. சந்தேகத்திற்கு இடமான இளைஞர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றன. இதனால் என்றோ ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.

சிறிலங்கா அரச படைகள் எதற்காக தலித் கிராமங்களை குறி வைத்துத் தாக்க வேண்டும்? மரபு ரீதியாக போர்க்குணாம்சம் மிக்க தலித் இளைஞர்கள் தான், புலிகளின் போராளிகளாக அதிகளவில் உள்வாங்கப் பட்டிருந்தனர். பொதுவாக அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி யாழ்ப்பாணத்தில் ஏற்படுமானால், அது தலித் கிராமங்களில் இருந்தே உருவாகும் என்று அரசு சரியாகவே கணித்து வைத்திருந்தது.

யாழ் குடாநாட்டில், ஆதிக்க சாதியினரை பெரும்பான்மையாகக் கொண்ட கிராமங்களும் ஏராளமாக இருந்தன. அந்தக் கிராமங்களில், அரச படைகளின் அடக்குமுறை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. ஏனெனில், ஓரளவு வசதி படைத்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கூட, போராடப் போவதை விட, வெளிநாடுகளுக்கு செல்வதிலேயே அதிக நாட்டம் கொண்டவர்கள் என்பது அரசுக்கும் நன்கு தெரியும்.

6 comments:

Unknown said...

"(முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் விடுக்கப் பட்ட எச்சரிக்கை)"
This is absolutely wrong. Muslims were also a part of this operation.They helped the SL forces to expedite the job. Even they oppose the UN resolution against the SL Government.
Sorry, I don't have Tamil font.
Suresh

Kalaiyarasan said...

மன்னிக்கவும், அரச உளவாளிகள் சிலர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். சில முஸ்லிம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் அரசுக்கு ஆதரவாக இருந்துள்ளமை உண்மை தான். ஆனால், அவை அனைத்து முஸ்லிம் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. கிழக்கில் கருணா குழு, வடக்கில் ஈபிடிபி ஆகிய தமிழ்க் கட்சிகள் அரசை ஆதரித்து வந்தன. அதற்காக தமிழர்கள் எல்லோரும் அரச ஆதரவாளர்கள் என்று திரிப்பது சிறுபிள்ளைத்தனமானது. முதலில் அரசியல் கட்சிகளையும், மக்களையும் பிரித்துப் பார்க்கும் மனப் பக்குவம் வர வேண்டும்.

Unknown said...

"(அரச உளவாளிகள் சிலர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்)" This is really funny. It remembers me the Sanga Kalam stories. I enjoyed it very much.
Kalai,
Real world is much more different than the dream world. If you noticed what happened in the East for last 20 years then you will know the reality. If you say that Karuna's agenda is same as muslims, then I have no words to say.
"(முதலில் அரசியல் கட்சிகளையும், மக்களையும் பிரித்துப் பார்க்கும் மனப் பக்குவம் வர வேண்டும்.)"
Do you say political parties are aliens? Don't they come from their own people?

Kalaiyarasan said...

//This is really funny.// இனங்களுக்கு இடையில் இனக் குரோதங்களை வளர்த்து, மக்களை பிரித்து வைப்பது இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல். அது கற்பனை அல்ல. அது தான் கடந்த 50 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சாதாரண மக்கள் இனவாதிகள் அல்லர். ஆனால், சில அரச உளவாளிகள் பரப்பி வரும் இனவாதப் பிரச்சாரங்களை நம்பும் அப்பாவிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

//Real world is much more different than the dream world.//
அரசின் சூழ்ச்சிகளும் பலரின் கண்களுக்கு தெரிவதில்லை. மக்கள் உண்மையை உணர விடாமல் தடுப்பதற்காக அவர்களுக்கு இனவாதப் போதை ஏற்றுவது அரசின் நோக்கம். இனவாதப் போதை தலைக்கேறிய மக்கள் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால், அரசின் இருப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை.

//If you noticed what happened in the East for last 20 years then you will know the reality.//
ஒவ்வொரு இனமும் தனக்கு நடந்த பாதிப்புகளை பெரிது படுத்துவதும், தன்னால் பிற இனம் பாதிக்கப் பட்டதை சிறுமைப் படுத்துவதும் வாடிக்கையானது. பெரும்பாலானோர் பேசும் அரசியல், பெரும்பாலும் ஒரு பக்கச் சார்பான, இனவாத அரசியல். பெரும்பாலான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஒரு பக்க நியாயம் மட்டுமே பேசுகின்றனர். யாரும் மற்றப் பக்கத்தை பார்ப்பதற்கு தயாராக இல்லை. இந்த நிலைமை தொடரும் வரையில் சிறிலங்கா அரசை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. மக்களை பிரித்து வைப்பது தானே அரசின் நோக்கமும்?

//Do you say political parties are aliens? Don't they come from their own people?//
சாதாரண மக்களிடம் சென்று பேசிப் பாருங்கள். அரசியல் கட்சிகளில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. யாரைக் கேட்டாலும் தன்னலம் கருதும் அரசியல் தலைவர்களின் குறைகளை முதலில் பேசுவார்கள். வேறு வழியின்றி அவர்களை ஆதரிக்கிறோம் என்று சொல்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் சராசரி தமிழனும், முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கும் சராசரி முஸ்லிமும், தங்களது அரசியல் தலைமையை பெரிதும் நம்புவதில்லை. அரசியல்வாதிகள் எல்லோரும் திருடர்கள், அயோக்கியர்கள் என்பது சாதாரண மக்களின் கருத்து. அதிலே தமிழ், முஸ்லிம் பேதம் கிடையாது.

Kalaiyarasan said...

எண்பதுகளில், ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. கணிசமான அளவு முஸ்லிம் இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் போராளிகளாக இருந்திருக்கின்றனர்.

தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தோல்வியடைய வைக்கும் நோக்கில் சிறிலங்கா அரசு சதி செய்து, தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்து விட்டது. ஆரம்பத்தில் முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து தமிழ்க் கிராமங்களை தாக்க வைத்தது. அதற்குப் பதிலடியாக புலிகளையும், பிற தமிழ் ஆயுதபாணி இயக்கங்களையும், முஸ்லிம் கிராமங்களை தாக்க வைத்தது. இதன் மூலம் அரசின் சூழ்ச்சி பலித்தது. தமிழ்க் கிராமங்களில் முஸ்லிம் ஊர்காவல் படைகள் செய்த படுகொலைகளை இன்றைக்கும் பல தமிழர்கள் நினைவுகூருகின்றனர். அதே மாதிரி, முஸ்லிம் கிராமங்களில் புலிகளும் பிற தமிழ்க் குழுக்களும் செய்த படுகொலைகளை இன்றைக்கும் பல முஸ்லிம் மக்கள் நினைவுகூருகின்றனர்.

கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்ட வேண்டும் என்பது அரசின் பேரவா. ஏனென்றால், கிழக்கு குழம்பினால், தமிழீழக் கனவு என்றைக்கும் சாத்தியப் படாது.

தமிழர்களுக்கு எதிரான ஈழப் போர் நடந்த முப்பது வருட காலத்தில், சிங்களப் பேரினவாத அரசு முஸ்லிம்களுடன் நட்பு பாராட்டி வந்தது. அதற்கு காரணம், ஒரே நேரத்தில் இரண்டு போர் முனைகளை திறப்பது முட்டாள்தனமானது என்பது அரசுக்கு நன்கு தெரியும்.

அரசும் மிகச் சரியாக, ஈழப் போர் முடிந்த பின்னர் தான், முஸ்லிம்களுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளது. முன்பு முஸ்லிம்களை நட்பாக வைத்திருப்பதற்கு கையாண்ட அதே தந்திரங்களை தமிழர்கள் சிலரை வைத்து செய்து கொண்டிருக்கிறது.

"முஸ்லிம்கள் சிறிலங்கா அரசுக்கு உதவினார்கள்... ஐ.நா. தீர்மானத்தை எதிர்த்தார்கள்..." இது போன்ற பிரச்சாரங்களை பொதுபல சேனா உறுப்பினர்களும், அரச புலனாய்வுத்துறையினரும் தமிழர்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான பிரச்சாரங்களை செய்பவர்களின் நோக்கம் தெளிவானது. இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் எந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. எப்பாடு பட்டாவது அவர்களை பிரித்து வைக்க வேண்டும். அப்போது தானே சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்தை சுலபமாக நிலைநிறுத்த முடியும்?

Tamil24x7 said...

உங்களது பதிவுகளை தமிழ்24x7.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Tamil24x7.Com

இப்படிக்கு
Tamil24x7.Com