Sunday, June 15, 2014

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்


சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட சிஐஏ உருவாக்கிய இயக்கம் தான் என்பதும், ஒசாமா பின்லேடன் ஒரு சிஐஏ உளவாளி என்பதும், ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மைகள். அமெரிக்கர்கள், ஆரம்ப காலங்களில் ISIS இயக்கத்தினை AQI (ஈராக்கிய அல்கைதா) என்று குறிப்பிட்டு வந்தனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு நடந்த சில மாதங்களின் பின்னர், பதவியிறக்கப் பட்ட சதாம் விசுவாசிகளும், பாத் தேசியவாதிகளும் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அந்தப் போராட்டத்தை முறியடிப்பதற்காக, AQI களத்தில் இறக்கி விடப் பட்டது. 

கடும்போக்கு சுன்னி இஸ்லாமிய மதவாதிகளாக காட்டிக் கொண்ட ISIS, ஷியா இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை கொன்று குவித்தது. சமாரா நகரில் ஷியா நம்பிக்கையாளர்களின் புனிதஸ்தலமான தங்க மசூதியை குண்டு வைத்து தகர்த்தது. இதன் மூலம், ஈராக்கில் சுன்னி- ஷியா மதக் கலவரங்களை தூண்டி விட்டது. இவை எல்லாம் சிஐஏ யின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஒத்துப் போகின்றது.

ஈராக்கிய அல்கைதாவில் இருந்து பிரிந்ததாக கூறிக் கொள்ளும் ISIS, சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததும், சிரியாவுக்கு நகர்ந்து சென்றது. ஈராக் எல்லையோரம் இருக்கும், எண்ணைக் வளம் உள்ள ஒரேயொரு சிரியப் பகுதியை கைப்பற்றிக் கொண்டது. "ISIS அங்கிருந்து கிடைக்கும் எண்ணையை கடத்திச் சென்று விற்று இயக்கத்திற்கு நிதி சேகரித்ததாக," சிஐஏ அறிக்கை கூறுகின்றது.

உண்மையில், சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன், பணத்தை தாராளமாக வாரியிறைத்த சவூதி அரேபியா, கட்டார் மற்றும் மேற்குலக நாடுகளின் நிதியில் பெருமளவு பங்கு, ISIS வசம் சென்றுள்ளது. அவர்கள் அந்தப் பணத்தை மிகத் திறமையாக ஊடக பிரச்சாரங்களில் செலவிட்டு, உலகம் முழுவதும் இருந்து இளம் ஜிகாதியர்களை கவர்ந்திழுத்தனர்.

இன்று, ISIS அமைப்பின் முக்கால்வாசி உறுப்பினர்கள் வெளிநாட்டு தொண்டர்கள் என்றால் அது மிகையாகாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த அதே வரலாறு, இன்று மீண்டும் சிரியா/ஈராக்கில் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, மேற்கத்திய ஊடகங்கள் செய்யும் பரப்புரைகளை நம்பும் மக்கள் இருக்கும் வரையில், ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கொண்டே இருக்கும்.

தற்போது விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் ISIS படையினர், பாக்தாத் நகரை அண்மித்து விட்டார்கள். ஈராக்கின் மொத்த சனத்தொகையில் பாதியைக் கொண்டிருக்கும் பாக்தாத் நகரம் வீழ்ச்சி அடைந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால், ஈராக் அரசு அமெரிக்க இராணுவ உதவி கேட்டிருந்தும், ஒபாமா நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த மௌனம் ஒரு தந்திரோபாயாமாக இருக்கலாம். ஏனெனில் அமெரிக்க இராணுவ உதவியின்றி, மாலிக்கின் ஈராக் அரசு நின்று பிடிக்க முடியாது. அந்த தருணத்தில், ஈரான் இராணுவ உதவி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இன்றைய ஈராக்கிய பிரச்சினை, மீண்டும் சுன்னி - ஷியா பிரச்சினையாக மாறி விட்டது. ISIL இயக்கம் முழுக்க முழுக்க சுன்னி முஸ்லிம்களை மட்டும் கொண்ட மதவாத இயக்கம். அது வெளிப்படையாகவே ஷியாக்களுக்கு எதிரான துவேஷத்தை காட்டி வருகின்றது. 

இன்று வரையில் ISIL கைப்பற்றிய ஈராக்கிய பிரதேசங்களில் சுன்னி முஸ்லிம் பிரிவினர் மட்டுமே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அந்த மக்கள், ISIS இயக்கத்தினரை, விடுதலை வீரர்களாக வரவேற்றுள்ளனர். உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, ISIS அந்தளவு விரைவாக முன்னேறி இருக்க முடியாது. ISIS கைப்பற்றியுள்ள பகுதிகளில், தாலிபான் பாணி ஆட்சி நடப்பது வேறு விடயம்.

ISIS கைப்பற்றிய மொசுல் போன்ற நகரங்களில் இருந்த ஈராக்கிய படையினர், பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அதனால், ஏற்கனவே ஈராக்கிய படையினர், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டிருந்தனர். ISIS முன்னேறிக் கொண்டிருந்த நேரம், ஈராக்கிய அரச படையினர் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தனர். பொது மக்களின் இலக்குகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், பெரும்பான்மையான பொது மக்கள் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.

அண்மைக் காலத்தில் விரைவாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் கள நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் ஈராக் மூன்று துண்டுகளாக பிரிக்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத் தலைமை மட்டத்தில் அத்தகைய திட்டம் ஒன்று ஆராயப் பட்டது. வடக்கு ஈராக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் தனி நாடாகி விடும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்றைய குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் நகரத்தை, குர்து பிராந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள ஈராக்கின் மாலிக் அரசுக்கு, ஈரானிய இராணுவ உதவி கிடைக்குமாக இருந்தால், ஷியா அரேபியர் வாழும் தெற்குப் பகுதி தனியாக பிரிந்து விடும். ஆகவே, ISIS கட்டுப்பாட்டில் உள்ள சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஈராக், சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடாக மாறி விடும். தற்போதைய நிலைமையும், ஏறக்குறைய அப்படித் தான் உள்ளது. இன்னும் யாரும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை தனி நாடாக பிரகடனப் படுத்தவில்லை என்பது மட்டும் தான் வித்தியாசம்.

தற்போது ஈராக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இதனால்,அமெரிக்கா, சவூதி அரேபியா, கட்டார் ஆகிய வளைகுடா நாடுகளின் காட்டில் நல்ல மழை பெய்கிறது. பெற்றோலின் விலை அதிகரிப்பினால் கிடைக்கும் இலாபம், அவர்களது கஜானாவை நிரப்பும் என்பதால், அந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 

ஈராக்கில் ISIS இயக்கத்தின் முன்னேற்றம், எதிர்பாராத விதமாக திடீரென நடந்தது போன்று, அமெரிக்கா பாசாங்கு செய்கின்றது. சிரியாவில் போரிட்டுக் கொண்டிருந்த பெரும்பாலான ISIS போராளிகள், ஈராக் எல்லையோரம் நகர்த்தப் பட்டு வருவதாக, லெபனான் பத்திரிகைகளில் தகவல் வந்திருந்தது. ஒரு ஊடகத்தில் வெளிப்படையாக வந்த தகவலை, சிஐஏ கவனிக்காமல் விட்டது என்று சொல்ல முடியாது. அமெரிக்கர்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்தாலும் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள்.

அது சரி, யார் அந்த அல்கைதா? சிரியா, ஈராக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னேறி, உலகில் யாராலும் வெல்ல முடியாத இயக்கம் என்று மார் தட்டிக் கொள்கிறது. மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடிய பின்னர், உலகிலேயே பணக்கார இயக்கமாகி உள்ளது. அங்கிருந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களை அபகரித்த பின்னர், உலகிலேயே மிகவும் பலமான இராணுவக் கட்டமைப்பு கொண்ட இயக்கம். இன்றைய உலகில் மிகவும் பலமான இயக்கமான அல்கைதா, இன்று வரையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாத காரணம் என்ன? யாருக்காவது விடை தெரியுமா?


4 comments:

Thoughts of Bala said...

Good Explanation

நண்பன் said...

மண்ணை குடைந்து எடுக்கப்பட்ட எண்ணை பத்து மாதம் சுமந்து பெற்று எடுக்கப்பட்ட இளம் பிள்ளைகளின் கையில் கொடுக்கப்பட்ட ஆயுதம் ஆதமின் மக்கள் என்று கூ றி கொள்ளும் வேதம் படித்த தந்தைகளின் மக்கள் மதத்துக்காக மடிவது மதம் பிடித்து அழிவதும் ,,,,,,தாங்கள் சொல்வது போல தான் இருக்குமோ ?

Packirisamy N said...

அமெரிக்கா சவுதிக்கு நண்பன், சவுதி அல் கைதாவுக்கு நண்பன்; அல் கைதா அமெரிக்காவுக்கு எதிரி; பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற கதை. மொத்ததுல மண், பெண், பொன், இதுக்கு நடக்கும் போட்டி. கடைசி கேள்விக்கு முழு விளக்கமும் நீங்களே கொடுத்துடுங்களேன்.

irukkam said...

இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் மனிதநேயமுள்ள எவரும் ஜீரணிக்க மாட்டார். உண்மையில் இவர்கள் செய்வதற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் அரசியல் சார்ந்தது. இதனை கலையரசனின் கட்டுரை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதற்காக உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது சுயநலன்களுக்காகச் செய்யும் இத்தகைய நாசகாரச் சதி வேலைகளை, முஸ்லிம் என்ற பெயரிலுள்ள அறிவற்ற இம்முட்டாள்கள் தெரிந்து கொண்டே, அற்ப பணத்திற்காக முன்னெடுக்கின்றனர். உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் மிகவும் வெட்கக் கேடான நிலையிது. சவூதியிலும் கட்டாரிலும் குவைத்திலும் உண்மையான ஜனநாயக ஆட்சி உருவாகுவதொன்றே மத்திய கிழக்கில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழி. ஆனால், அமெரிக்கா இதற்கு ஒரு போதும் இடங்கொடாது.
இஸ்ரேல் மீது அல்கைதா ஏன் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை என்ற கேள்வி எல்லோருக்கும் பதில் தெரிந்த கேள்வியொன்றுதான். ஏனெனில், அல்கைதாவின் நடவடிக்கைகளும் தாக்குதல்களும் சிஐஏ வினால்தான் திட்டமிடப்படுகின்றன. சிஐஏ ஒரு போதும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மாட்டாது.