Thursday, June 12, 2014

ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?


வரலாறு திரும்புகிறது? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிய கடும்போக்காளர்களான தாலிபான்களின் ஆட்சி உருவானது போன்று, ஈராக்கிலும் நடந்துள்ளது. மேற்கு ஈராக்கிய பகுதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கமான ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. கடந்த ஆறு மாத காலமாக, அந்தப் பகுதிகளில் ஒரு "தாலிபான் ஆட்சி" நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரமாடி, பலூஜா போன்ற பல நகரங்கள், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கின்றன. சிரியா எல்லையோரம் உள்ள அன்பர் மாகாணம் முழுமையாக அவர்களது ஆட்சியில் கீழ் உள்ளது. இன்று வடக்கே உள்ள மொசுல் நகரத்தை கைப்பற்றி விட்டனர்.

Islamitische Staat in Irak and Shām, (ஷாம் என்பது சிரியா, லெபனானை குறிக்கும் அரபு பெயர்) என்ற ஜிகாதி இயக்கம், அமெரிக்கப் படைகள் ஈராக்கை "விடுதலை செய்து ஜனநாயகத்தை கொண்டு வந்த பின்னர்" உருவானது. இரண்டு, மூன்று நாடுகளை சேர்த்து தாயகமாக உரிமை கூறுவதால், வெளிநாட்டு ஜிகாதியர்களும் நிறையப் பேர் அந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

ISIS உருவான ஆரம்ப காலத்தில் ஈராக்கில் போரிட்டு வந்தாலும், சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிய பின்னர் தான் வெளியுலகில் பிரபலமானது. (சவூதி, கட்டார், மேற்கத்திய நாடுகளின் உதவியை சாதுரியமாக பயன்படுத்தி வளர்ந்து வந்தது.) தற்போதும் சிரியாவில் ராக்கா பகுதி, ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கு தாலிபான் ஆட்சி போன்று, கடுமையான இஸ்லாமிய மத சட்டங்கள் பின்பற்றப் படுகின்றன.

சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுதலை செய்து, ஈராக்கில் ஜனநாயகத்தை மலரச் செய்யவே படையெடுத்ததாக அமெரிக்கா அறிவித்தது. இப்போது அந்த நாட்டில் மெல்ல மெல்ல "ஒரு தாலிபான் ஆட்சி" ஏற்பட்டு வருகின்றது. அமெரிக்கா கொண்டு வர விரும்பிய ஜனநாயகம் இது தான் போலிருக்கிறது.

ஈராக்கில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஜிகாதி இயக்கமான ISIS, வட ஈராக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசுல் நகரை கைப்பற்றிய பின்னர், அது உலகிலேயே பணக்கார இயக்கமாக மாறி விட்டது. ISIS போராளிகள், மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடி, 429 மில்லியன் டாலர் பெறுமதியான ஈராக்கிய டினார்களை அபகரித்துள்ளனர். அதை விட, ஈராக்கிய இராணுவம் விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்கள், விமானங்கள், கவச வாகனங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகியுள்ளன. உலகில் எந்தவொரு ஆயுதபாணி இயக்கமும், இந்தளவு பண பலம், ஆயுத பலம் கொண்டதாக இருக்கவில்லை.

மொசுல் நகரமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் எண்ணை வளம் நிறைந்தது. அதனால், ஈராக்கை எண்ணைக்காக ஆக்கிரமித்த அமெரிக்கர்கள், பல கோடி டாலர் செலவில், ஈராக்கிய இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, தம்மிடம் இருந்த சிறந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களையும் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். ஆனால், அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அமெரிக்கர்கள் ஈராக் மீள் கட்டுமானத்திற்காக செலவிட்ட மில்லியன் கணக்கான டாலர்கள் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின. ISIS போராளிகள் மொசுல் நகரை கைப்பற்றியதும், அமெரிக்கப் பயிற்சி பெற்ற ஈராக்கிய படையினர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்குப் பின்னர், சுன்னி முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டம் நடந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்தும், ஷியா முஸ்லிம் பிரிவினர் ஆதிக்கம் செலுத்திய புதிய ஈராக் அரசையும் எதிர்த்து போராடினார்கள். அமெரிக்கப் படையினர், அன்றைய விடுதலை இயக்கங்களை ஒழித்துக் கட்டி விட்ட மகிழ்ச்சியில் ஈராக்கை விட்டு வெளியேறி இருந்தனர்.

ஈராக்கில் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டாலும், சுன்னி முஸ்லிம் மக்கள் புதிய ஈராக் அரசுக்கு விசுவாசமாக மாறவில்லை. தற்போது கடும்போக்கு இஸ்லாமியவாத ISIS இந்தளவு விரைவாக முன்னேறியதற்கு, அந்தப் பகுதி மக்களின் ஆதரவு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், கடந்த சில மாதங்களாக, ஈராக்கிய இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்கி இருக்கும் அளவிற்கு, ஈராக் அரசுக்கு எதிரான மக்களின் வெறுப்பு அதிகரித்து காணப் பட்டது. விடுதலை இயக்கங்களை அழிக்க முடிந்தது. ஆனால், மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியவில்லை. அண்மைக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய அடி இதுவாகும்.

இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?


ஈராக் தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: