Monday, December 09, 2013

காஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத தமிழர்களும்


ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்த கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் கை விடப் பட்டு, தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுக்கும், தரகு முதலாளியக் கொள்கை மட்டுமே கோலோச்சுகின்றது. ஒரு சிலர் இதற்கு "தலைமுறை இடைவெளி காரணம்"  என்று சாட்டுப் போக்குச் சொல்லலாம். உண்மையில், பனிப்போர் முடிந்த பின்னர், உலகம் தலைகீழாக மாறி விட்டது. அதற்கு முன்னர், போலி சோஷலிச அரசு நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சமூக - ஜனநாயக கட்சிகளாக மாறி விட்டன. உலகளவில் ஏற்பட்ட இயங்கியல் மாற்றம் ஈழப் போராட்டத்தையும் பாதிக்காமல் விட்டிருக்காது.

இன்றைக்கும் சோவியத் யூனியன் இருந்திருந்தால், மண்டேலா தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழித்திருப்பார். தனது 95 வது வயதில், ரொபின் தீவில் ஒரு கைதியாக இறந்திருப்பார். மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும், மண்டேலாவின் மரணத்தை "ஒரு பயங்கரவாதியின் மறைவாக" கொண்டாடி இருப்பார்கள்.

பனிப் போர் முடிந்த பின்னர் தான், மண்டேலா சிறையில் இருந்து விடுதலையானார். அதற்குப் பின், அவர் தன்னை ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று ஒதுக்கிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் கை கோர்த்தார்.  மண்டேலா கைகோர்த்த மேலைத்தேய நாடுகள், தென்னாபிரிக்காவிலும், நமீபியாவிலும், அங்கோலாவிலும் கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்த நிறவெறி அரசை ஆதரித்து வந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

நெல்சன் மண்டேலா  மகிந்த ராஜபக்சவுடனும் கை கோர்த்திருப்பார். ஆனால், தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மண்டேலா ஆட்சி நடத்திய காலத்தில், மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கவில்லை. அந்தக் காலங்களில், சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் ஜனாதிபதியாக இருந்தார். சந்திரிகாவும் ஈழப் போரில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றவர் தான். மண்டேலா அவருடன் கை கோர்ப்பதற்கு தயங்கவில்லை. "மண்டேலா தன்னை மகளாக கருதுவதாக..." சந்திரிக்கா சொல்லிப் பெருமைப் பட்டார்.

இவ்விடத்தில் எழும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை ஒன்று தான். அமெரிக்க ஏகாதிபத்திய தந்தையின் அரவணைப்பில், அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் பிள்ளைகள் தான். நவ காலனிய அமைப்பை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள் கை கோர்த்துக் கொள்கிறார்கள். மக்களாகிய நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நவ காலனிய தரகு முதலாளிகளை எதிர்க்க வேண்டும்.

இறுதியில் மண்டேலாவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசப் போக்கை பின்பற்றி வந்தார். (இல்லாவிட்டால், அவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.) ஆயினும், அவர் தனது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற கியூபா, பிற கம்யூனிச நாடுகளின் உதவிகளை புகழ்ந்து பாராட்டினார். மண்டேலாவை விடுதலை செய்து, ஜனாதிபதியாக்கிய "நன்றிக் கடனுக்காக", கியூபாவுடனான உறவை துண்டிக்க வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்தியது. மண்டேலா அந்த பயமுறுத்தல்களுக்கு அடி பணிய மறுத்தார். இன்னும் இன்னும் பிடல் காஸ்ட்ரோவையும், கியூபாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மண்டேலா, தென்னாபிரிக்க அரசியலில் பல தவறுகளை விட்டிருக்கலாம். (அவரது மாஜி மனைவி வின்னி கூட கடுமையான விமர்சனங்களை வைத்தார்.) இருந்த போதிலும், சர்வதேச மட்டத்தில் மண்டேலா நேர்மையான அரசியல் தலைவராக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, லிபரல் ஜனநாயகவாதி. ஆனால், கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை, சமநீதிக்கான போராட்டத்தை ஆதரித்து பேசினார். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் உலக கம்யூனிச நாடுகளின் ஆதரவு மட்டும் இருந்திரா விட்டால், "ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ்" (ANC) என்றைக்கோ அழித்தொழிக்கப் பட்டிருக்கும். 

மண்டேலா அதனை பல தடவைகள் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார். "கொடுங்கோல் நிறவெறி அரசினால் நாங்கள் ஒடுக்கப் பட்ட நேரம், கம்யூனிச நாடுகள் தான் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டின. மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள், அடக்குமுறையாளர்களுடன் கூடிக் குலாவின. இன்று அவர்கள் எமது கம்யூனிச நண்பர்களுடனான தொடர்பை முறிக்கச் சொல்கிறார்கள். நாங்கள் அந்தளவு நன்றி மறந்தவர்கள் அல்ல." என்று மண்டேலா விளக்கம் அளித்தார். (பார்க்க:தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்) அப்படிப் பட்ட நேர்மையான மனிதரான மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மீண்டும் கம்யூனிச வெறுப்பை மக்கள் மனதில் விதைக்க எண்ணுகின்றனர். அதைக் காணும் பொழுது, ஆயாசமே எஞ்சுகின்றது. தமிழர்கள் அந்த அளவுக்கு நன்றி மறந்த இனமாக இருப்பது கவலைக்குரியது.

மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி தெரியாத, புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகள் இப்படியான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்: 
//மண்டேலா, மற்றும் பிற போராளிகளுடன், பிடல் காஸ்ரோவை ஒப்பிடமுடியாது. பிடல் அமெரிக்காவின் எதிரியாக மட்டுமே இருக்கிறார். இன விடுதலைக்காக போராடும் மக்களை விட ராஜபக்சேக்களுடனேயே கை கோர்த்துக் கொள்கிறார்...// ஓ ... அப்படியா?

மண்டேலா தன்னை சிறையில் போடுவதற்கு காரணமாக இருந்த, தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசின் ஜனாதிபதி கிளார்க்குடன் கை குலுக்கி, நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர். 2008 வரையில் அமெரிக்கா மண்டேலாவின் பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. மண்டேலா, தன்னை  பயங்கரவாதி என்று இழிவு படுத்திய,  மேற்கத்திய நாட்டுத்  தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டவர். ஆனாலும், அவர் ஒரு காலத்தில் கியூபா செய்த உதவிகளை மறக்கவில்லை. நமது தமிழ் தேசியவாதிகள் மறந்து விட்டார்கள்.

மேற்கத்திய நாடுகள் எல்லாம், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு கொடுத்து உதவிக் கொண்டிருந்த காலத்தில், பிடல் காஸ்ட்ரோ மண்டேலாவின் ANC க்கு உதவினார். தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட நமீபியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவினார். கியூபப் படைகள், அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி இராணுவத்தை எதிர்த்து போரிட்டன. ஆயிரக் கணக்கான கியூப வீரர்கள், நிறவெறிக்கு எதிரான போரில் வீரச் சாவடைந்தனர். சிறையில் இருந்து விடுதலையடைந்த மண்டேலா, கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய உதவியை பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.

இது ஒரு பொது அறிவு. 1983 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், இந்தியாவிடம் இருந்து பயிற்சியும், நிதியும் கிடைத்தன. 83 ஜூலைக் கலவரத்திற்கு பிறகு தான், மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 1987 ல், அதாவது இந்திய இராணுவத்துடன் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் தான், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து நிதியும், ஆயுதங்களும் வரத் தொடங்கின. 1983 க்கு முன்னர் யார் ஆயுதங்களும், பயிற்சியும் வழங்க முன்வந்திருப்பார்கள்? 

அந்தக் காலத்தில் தான், புலிகள் இயக்கம் சர்வதேச மார்க்சிய இயக்கங்களுடனும், கம்யூனிச நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 1978 ம் ஆண்டு, ஹவானாவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டில் புலிகள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். அதில் இரண்டு பேர் சோவியத் யூனியனில் கல்வி கற்றவர்கள். அப்போது லண்டனில் இருந்த LTTE அமைப்பாளர் கிருஷ்ணர், கம்யூனிச நாடுகளிடம் உதவி கோரும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, கியூபாவிற்கு அனுப்பி வைத்தார். ஹவானா மகாநாட்டில் அவை விநியோகிக்கப் பட்டன.

கியூபா சென்ற புலிகள் பிடல் காஸ்ட்ரோவுடன் கூட பேசி இருக்க முடியும். எழுபதுகளில் சில நேரம், புலிகளுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் தருவதற்கு கியூபா முன்வந்திருக்கலாம். (ஏன் அப்படி நடக்கவில்லை என்பதை பின்னால் பார்ப்போம்.) அருளரின் லங்கா இராணி நாவலில் இது மறைமுகமாக குறிப்பிடப் பட்டுள்ளது. 1977 ம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் அகதிகள், லங்கா ராணி கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். லங்கா ராணி கப்பலில் சென்று கொண்டிருந்த தமிழ் அகதிகள், ஆயுதப் போராட்டத்தின் அவசியம் பற்றி விவாதிக்கின்றனர். அதில் ஒருவர் கியூபாவிடம் இருந்து உதவி பெற முடியும் என்று கூறுகின்றார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி, அந்த நாவல் விபரிக்கவில்லை.

லங்கா ராணி நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிஜமான மனிதர்கள். அவர்களின் உரையாடல்களும் உண்மையில் நடந்தவை. கியூபாவிடம் உதவி பெற்று ஆயுதப் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்தவர்கள், பின்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது பங்களிப்பை வழங்கி இருந்தனர். இன்றைக்கு அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம், அல்லது போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்.

அன்று கியூபாவோ, பிடல் காஸ்ட்ரோவோ, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பை வழங்கியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம், "சிங்கள அரசுடனான நட்புறவல்ல". கியூபா மட்டுமல்ல, லிபியா, சிரியா, தெற்கு யேமன் போன்ற நாடுகள் கூட, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கி வந்தன. அதே நேரம்,இலங்கை அரசுடனும் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தன. ஏனென்றால், அந்தக் காலத்தில் வளர்ந்து வந்த "அணிசேரா நாடுகள்" என்ற சர்வதேச அமைப்பை சீர்குலைக்க விரும்பவில்லை.

கியூபா ஈழப் போராட்டத்திற்கு நேரடியாக உதவாததற்கு, இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. பனிப் போர் காலகட்டத்தில், கியூபா லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மட்டுமே தனது செயற்பாடுகளை கொண்டிருந்தது. சோவியத் யூனியனும் அதையே விரும்பியது. (கேஜிபி யின் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட "The Mitrokhin Archive" நூலில் இது விரிவாக எழுதப் பட்டுள்ளது.) அதற்குப் பதிலாக, தெற்காசிய நாட்டு விடுதலை இயக்கங்களுடனான தொடர்பை, பாலஸ்தீன இயக்கங்கள் பேணி வந்தன.

அதாவது, உலகம் அன்றிருந்த நிலையில், ஒரு ஈழ விடுதலை இயக்கம், கியூபாவிடமோ, அல்லது சோவியத் யூனியனிடமோ உதவி கோரி இருந்தாலும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) தான் அதற்கு பொறுப்பேற்று இருக்கும். இறுதியில் அதுவே நடந்தது. அன்று லண்டனில் இயங்கிய மார்க்சிய-லெனினிச ஈரோஸ் இயக்கத்திற்கும், புலிகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. ஈரோஸும், PLO வும், இலங்கையில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு, லெபனானில் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தன.

லெபனானில் PLO விடம் இராணுவப் பயிற்சிக்கு சென்ற முதல் பிரிவு புலி உறுப்பினர்களில், அதன் தலைவர் உமா மகேஸ்வரனும் ஒருவர். பின்னாளில் உமா மகேஸ்வரன், பிரபாகரனுக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டதும், அதனால் இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டதும் தனிக் கதை. புலிகளிலும், அதிலிருந்து பிரிந்த புளொட்டிலும், ஆரம்பத்தில் லெபனான் பயிற்சி எடுத்தவர்களே பிற உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். 1983 ஜூலைக் கலவரத்திற்கு பின்பு தான், இந்தியா அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிக்க முன்வந்தது.

அந்தக் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக தன்னை காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்றது. புலிகளின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தவர்களும் மார்க்சிஸ்டுகள் தான். சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் (உதாரணத்திற்கு: கவிஞர் புதுவை இரத்தினதுரை), ட்ராஸ்கிச கட்சிகளில் இருந்தும் (உதாரணத்திற்கு: அன்டன் பாலசிங்கம்), பல மார்க்சிஸ்டுகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தனர். இந்திய பத்திரிகை ஒன்று, அன்றைய யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை பேட்டி எடுத்தது. அப்போது, "தமிழீழம் கிடைத்தால் எப்படியான அரசியல் - பொருளாதார கொள்கை நடைமுறைப் படுத்தப் படும்?" என்று கேட்ட கேள்விக்கு, கிட்டு கூறிய பதில் "புரட்சிகர கம்யூனிசம்"! (ஆதாரம்: விக்கிலீக்ஸ்)

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், "கம்யூனிசப் புலிகளை" கண்டு அஞ்சியதில் வியப்பில்லை. ஜேவிபி யும், புலிகளும் சேர்ந்து, இலங்கையை கம்யூனிச நாடாக்கி விடுவார்கள் என்று பயந்தார். அவ்வாறே மேலைத்தேய நாடுகளில் பிரச்சாரம் செய்தார். "மார்க்சியப் புலிகளை" அழிப்பதற்கு பிரிட்டனிடம் உதவி கோரினார். கம்யூனிச புலிகளை வளர விடக் கூடாது என்று சூளுரைத்துக் கொண்டு களமிறங்கிய பிரிட்டனின் SAS கூலிப்படையினர், இலங்கையில் விசேட அதிரடிப் படை (STF)என்ற புதிய இராணுவத்தை உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த பல தமிழினப் படுகொலைகளுக்கு STF அத்துமீறல்களே காரணமாக இருந்தன.

அநேகமாக, பனிப்போரின் இறுதிக் காலத்தில், புலிகளின் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இயக்கத்தினுள் இருந்த இடதுசாரிகள் ஓரங் கட்டப் பட்டனர். வலதுசாரிகளின் கை ஓங்கியது. வலதுசாரிகள் புலிகளை அமெரிக்க சார்பு இயக்கமாக வழிநடத்திக் கொண்டு சென்றார்கள். மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு நிறுவனங்கள், போராட்டத்திற்கு நிதியும், ஆயுதங்களும் அனுப்பும் அளவிற்கு பலம் பெற்று விளங்கின. அவை நேரடியாகவே மேற்கத்திய அரசாங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன. 

புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் நிதி, சர்வதேச மூலதனத்தின் ஓரங்கமாக ஐக்கியமாகியது. முரண்நகையாக அதுவே, புலிகளின் அழிவுக்கும் உதவியது. இறுதிப் போர் நடந்த காலத்தில், மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், தமது ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தினார்கள். அமெரிக்காவில் "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" என்ற Lobby group உருவானது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்ட, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் டாலர் நிதி வழங்கினார்கள். இன்றைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு, சிஐஏ  யின் கண்காணிப்பின் கீழ், அமெரிக்காவில் தான் இயங்குகின்றது. 

இதிலே ஒரு வேடிக்கையான முரண்பாட்டை கவனிக்க வேண்டும். வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், ஒரு பக்கத்தில் தங்களை புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டனர். மறு பக்கத்தில், புலிகளை அழிக்கத் துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆதரவளித்தனர். அது எவ்வாறு சாத்தியம் என்பது, அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்கா புலிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது என்ற விடயம், இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே வெளிப்படையாக தெரிந்தது. 

அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்கு முயன்ற சில தமிழர்களை, FBI மடக்கிப் பிடித்தது. இன்று வரையில், அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்து சமுத்திரத்தில், சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அவற்றை ஸ்ரீலங்கா கடற்படை தேடி அழிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. இது எல்லாவற்றையும் விட, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிளேக், புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்:"புலிகள் மீண்டும் போருக்கு செல்லத் துணிந்தால், இலங்கை அரசின் பக்கம் நின்று, புலிகளை அழிப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குப்போம்..." என்று கூறினார்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம், கியூபா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சுட்டிக் காட்டி இருந்தது. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மேற்படி உண்மையை மறைத்துக் கொண்டே,"பிடல் காஸ்ட்ரோ ராஜபக்சேக்களுடன் கை கோர்த்துக் கொண்டதாக" திரிபு படுத்தி பிரச்சாரம் செய்தனர். இன்றைக்கும் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படியான பிரச்சாரத்தை முன்னெடுக்கா விட்டால், தமிழ் மக்கள் மத்தியில் தங்களது இரட்டை வேஷம் கலைந்து விடும் என்று அஞ்சுகின்றனர். புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்த விடயம் அமபலப் பட்டு விடும் என்று அஞ்சுகின்றனர்.

ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கம் எதிர் நிலை வல்லரசுகளையும் சமமாக கருதி இருக்க வேண்டும். முதலாளித்துவம், சோஷலிசம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான இராஜதந்திர அணுகுமுறை இல்லாமல் போனது ஒரு பெரிய குறைபாடு. புலிகளின் அல்லது தமிழர்களின் பலவீனத்தை, ராஜபக்சேக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு, இப்போது புலம்புவதில் அர்த்தமில்லை.

*****************

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்
2.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு
3."மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!

No comments: