Wednesday, April 06, 2011

ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 10)

இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று கடுமையாக நடந்து கொள்ளாது என்று தான் பெரும்பான்மை ஈழத் தமிழர்கள் நம்பினார்கள். இந்தியா தமிழரின் தாய்நாடு என்று நம்பும் ஒரு பிரிவினர் இன்றும் உள்ளனர். ஆனால் போர் தொடங்கியவுடன் அத்தகைய கற்பனைகள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயின. சிறிலங்கா இராணுவம் கைது செய்யும் சந்தேக நபர்களை எவ்வாறு சித்திரவதை செய்ததோ, அதற்கு சிறிதும் குறையாமல் இந்திய இராணுவம் நடந்து கொண்டது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று தெரிந்தாலும், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் சிங்கள படையினர் வதைத்தனர். நிரந்தர சிறைச்சாலைக்கு மாற்றி விடும் வரையில் சித்திரவதை செய்வார்கள். இந்திய இராணுவத்திற்கு புலி உறுப்பினர்கள் மீது மட்டுமே வெறுப்பிருந்தது. மற்றவர்கள் மீதான சந்தேகம் தீர்ந்து விட்டால் விடுதலை செய்தார்கள்.

ஒரு முறை முல்லைத்தீவு நகரில் ஈரோஸ் உறுப்பினர்களை, புலிச் சந்தேகநபர்களாக கருதி கைது செய்தார்கள். உறவினர்கள் என்ன சொல்லியும் விடாததால், ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் நேரடியாக சென்று பேச வேண்டியிருந்தது. எதிர்பாராதாவிதமாக அங்கு நடந்த "பேச்சுவார்த்தையில்" நானும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாலகுமாரை இரண்டாம் முறை சந்திக்கும் சந்தர்ப்பம் அது. ஏற்கனவே யாழ்ப்பாணம் கொக்குவிலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கு செய்த கலந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். இரு வருடங்களின் பின்னர், முல்லைத்தீவில் என்னை அடையாளம் கண்ட பாலகுமாரின் நினைவாற்றல் வியக்க வைத்தது. முல்லைத்தீவு இராணுவ முகாமில், பாலகுமாரின் தலையீட்டின் பின்னர் கைது செய்யப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியப் படையினர் நிலை கொடிருந்த காலம் முழுவதும் ஈரோஸ் அமைப்பு போர்நிறுத்த விதிகளை மீறாததால் அவர்களை யாரும் சீண்டவில்லை. மோதலில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருடனும் நல்லுறவைப் பேணி வந்ததால் மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக எல்லோருக்கும் அத்தகைய மேலிடத்து செல்வாக்கு கிடைப்பதில்லை. இந்தியப் படையினர் என்னை இரண்டு தடவைகள் என்னைக் கைது செய்து கொண்டு சென்ற பொழுது யாரும் மீட்க வரவில்லை. முதலாவது தடவை வழமையான வீதிச் சோதனையில் தடுத்து நிறுத்தப் பட்டேன். வழக்கம் போல மன்மூட்டைகளுக்கு பின்னால் பாதுகாப்பு அரணுக்குள் மறைந்திருந்த "தலையாட்டி" காட்டிக் கொடுத்ததால் பிடிபட்டேன். முன்னாள் புலி உறுப்பினரான அந்த நபர், என்னை தன்னுடைய முகாமில் இருந்ததாக பொய் கூறியிருந்தார். ஒவ்வொரு சோதனை நடவடிக்கையின் போதும், யாராவது ஒருவரைக் காட்டிக் கொடுக்க வேண்டுமென தலையாட்டிகளுக்கு நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் சில நேரம் வேண்டுமென்றே கண்ணில் படும் அப்பாவிகளை எல்லாம் பிடித்துக் கொடுத்தார்கள். அவ்வாறு குறைந்தது ஒருவரையாவது காட்டிக் கொடுக்கா விட்டால், அடிவிழும் என்று பின்னர் கேள்விப் பட்டேன்.

அன்று நடந்த சோதனையில், "ஒரு புலியை" பிடித்து விட்ட சந்தோஷத்தில் படையினர் என்னை முகாமுக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த மேலதிகாரி விசாரணைகளை நடத்தினார். புலிகள் அமைப்பில் எனது பொறுப்பென்ன? எந்த முகாமில் இருந்தேன்? என்றெல்லாம் விசாரித்தார்கள். புலிகள் அமைப்பிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதை நம்ப மறுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், தலையாட்டி காட்டிக் கொடுத்தால் அது புலி தான். விசாரணை செய்த அதிகாரி புலிகள் அமைப்பினர் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். அதனால், புலிகளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்க முடியாது. அனைத்து மக்களுக்கும் பகிரங்கமாக தெரிந்த விஷயங்களை தெரியாது என்று சொன்னால், வேண்டுமென்றே மறைப்பதாக சந்தேகப் பட்டார்கள். தம்மிடம் இருந்த புலி உறுப்பினர்களின் புகைப்படங்களை கொண்டு வந்து காட்டினார்கள்.

இந்தியப் படையுடன் யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் கொல்லப்பட்ட சில தலைவர்களும், வேறு சில இனந் தெரியாத உறுப்பினர்களும் அந்தப் புகைப் படங்களில் இருந்தனர். அவற்றைக் காட்டி, யார் யாரை எனக்குத் தெரியும் என்று கேட்டார்கள். "சில மரணமடைந்த தலைவர்களை தெரியும்," என்றேன். "எப்படித் தெரியும்?" என்று கேட்டார்கள். "அவர்களின் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன, போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்," என்று பதில் கூறினேன். எனது பதில் அப்பாவித்தனமாக தெரிந்திருக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போராளிகளில் யாரைத் தெரியும் என்று கேட்டார்கள். உண்மையிலேயே அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. விசாரணை செய்த அதிகாரி என்னை நம்பினாரா, நம்பவில்லையா என்று தெரியவில்லை. என்னைக் கொண்டு சென்று அடைத்து வைக்குமாறு சொல்லி விட்டு சென்று விட்டார்.

நல்லூர் நகரத்திற்கு அண்மையில் இருந்த பிரபல பாடசாலையில் ஒரு பகுதியை இந்திய இராணுவத்தினர் முகாமாக பயன்படுத்தினார்கள். மேலே வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. கீழே படிகளுக்கு பின்னால் இருக்கும் அறை ஒன்றில் எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். என்னோடு ஐந்து, ஆறு கைதிகள் அந்த குட்டிச் சிறைக்குள் அடைக்கப் பட்டிருந்தனர். உணவோ, குடிநீரோ எதுவும் தரப்படவில்லை. கைதிகளைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து கொடுப்பதை பகிர்ந்துண்ண வேண்டியிருந்தது. இருந்திருந்து அந்தப் பக்கம் வரும் சிப்பாய்கள் பீடி மட்டும் தருவார்கள். பாடசாலை மாணவர்களும் பார்க்கக் கூடிய இடத்தில் தான் சிறை வைக்கப் பட்டிருந்தோம். அவர்கள் எங்களை ஏதோ மிருகக்காட்சிசாலையில் வைக்கப் பட்ட மிருகங்களைப் போல பார்த்து விட்டு நகர்ந்தார்கள். அன்றிரவு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இராணுவத்தினர் வீதி ரோந்து சென்ற சமயம், மூக்கு முட்டக் குடித்து விட்டு விழுந்து கிடந்த ஒருவரைக் கொண்டு வந்து எங்கள் சிறையில் போட்டார்கள். இரவு ஊரடங்கு சட்டம் என்பதால், அங்கே படுத்து விட்டு விடிய எழுந்து போகலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே என்னைக் காட்டிக் கொடுத்த தலையாட்டியை இராணுவத்தினர் நம்பவில்லை என்று கேள்விப்பட்டேன். எனது நல்ல காலம், அந்தப் பாடசாலையின் அதிபர் எனது உறவினர் என்பதால், அடுத்த நாளே விடுதலை செய்தார்கள்.

அதிர்ஷ்டக் காற்று எப்போதும் எம்பக்கம் வீசுவதில்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை எமக்கு பாதகமாக அமைந்தால், ஆண்டவனே வந்து சாட்சி சொன்னாலும் காப்பாற்ற முடியாது. எனது வீட்டுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்று, திடீரென படையினரால் சுற்றி வளைக்கப் பட்டது. குறிப்பாக ஓரிடத்தில் வந்து சந்திக்கும் மூன்று பாதைகளில் மறைந்திருந்தார்கள். அந்தப் பாதையில், அந்த நேரத்தில் சென்ற இளம் வயதினர் அனைவரையும் தடுத்து நிறுத்தினார்கள். எனது கஷ்ட காலம், நான் தான் முதலில் அகப்பட்டேன். என்னை விசாரித்து, சோதனை போட்டும் எந்த தடயமும் கிடைக்கா விட்டாலும் தடுத்து வைத்திருந்தார்கள். அயல் கிராமங்களில் நிதி சேகரிக்கும் புலி உறுப்பினர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவது வழக்கம் என்று யாரோ தகவல் கொடுத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்குப் பின்னர், இரண்டு சைக்கிள்களில் மூன்று புலி உறுப்பினர்கள் அந்த வழியால் வந்தார்கள். முன்னாள் வந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியாகவிருந்தது. பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த மாணவன். அவன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பது அப்போது தான் தெரியும். பின்னால் வந்த இரண்டு பெரும் அயல் கிராமத்தை சேர்ந்த விடலைப் பையன்கள். அவர்களை சோதனையிட்ட படையினர் மடியில் இருந்து கிரனேட்டை கண்டெடுத்தார்கள். உடனே "எல்.டி.டி.ஈ.... எல்.டி.டி.ஈ...." என்று கத்தினார்கள்.

ஒரு நிமிடத்திற்குள் அங்கே என்னென்னவோ எல்லாம் நடந்தன. சற்று தூரம் முன்னோக்கி சென்றிருந்த, எனது பள்ளித் தோழன் சயனைட் குப்பியை கடித்து விட்டான். அவனது உயிரற்ற உடல் சரிந்து விழுவதை கண் முன்னால் கண்டேன். அவன் தான் இயக்கத்தின் மூத்த உறுப்பினன். அதனால் முக்கியமான ஆவணங்கள் எல்லாம் வைத்திருந்தான். ஆரம்பத்தில் படையினருக்கு அவன் மேல் சந்தேகம் எழவில்லை. சயனைட் உட்கொண்ட பிறகு தான் அவனும் புலி என்பது படையினருக்கு உறுதியானது. இப்போது படையினரின் ஆத்திரம் என் பக்கம் திரும்பியது. ஒருவன் தனது துப்பாக்கியை சுழற்றி தலையில் பலமாகத் தாக்கினான். நான் மூர்ச்சையாகி விழுந்தேன். பலர் சுற்றி வர நின்று உதைத்தார்கள். கைகளை முதுகுக்குப் பின்னால் வளைத்துக் கட்டினார்கள். ஒரு டிரக் வண்டியில் தூக்கிப் போட்டார்கள். கிரேனேட்டுடன் அகப்பட்ட புலி உறுப்பினர்களையும் அதே டிரக் வண்டியில் கொண்டு வந்து போட்டார்கள். "இவனும் உங்கள் இயக்க உறுப்பினனா?" என்று என்னைக் காட்டிக் கேட்டார்கள். அவர்கள் இதற்கு முன்னர் என்னைப் பார்த்ததே இல்லை என்று தலையாட்டினார்கள். சிறிது நேரத்தில் சயனைட் உட்கொண்டு இறந்த பள்ளித் தோழனின் உயிரற்ற உடலை எனக்கு மேலே தூக்கிப் போட்டார்கள். எம்மை ஏற்றிக் கொண்டு அந்த டிரக் வண்டி இராணுவ முகாமை நோக்கிப் புறப்பட்டது.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

4 comments:

Mohamed Faaique said...

புல்லறிக்கிறது... அந்த நாட்களின் ஒவ்வொரு நிமிடமும் வாழ்விக்கு உத்தரவாதம் இல்லமல் இருந்திருக்குமே!!!!

போளூர் தயாநிதி said...

உறவுகளே வணக்கம் .தேர்தல் கடிதம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது .
நம் வீடுகளில் இவ்வளவு நாள் தடைபட்டு கிடந்த மின்சாரம் தடையின்றி கிடைக்கும்.
விண்ணை முட்டி உயர்ந்திருந்த விலைகள் குறைந்திருக்கும் .
நீயில்லாமல் நானில்லை .நீதான் என்னுயிர் என கூட்டத்தில் முழக்க மிடப்படலாம்.
உங்களின் பாதங்களை தொட்டு கேட்கிறேன் என பசப்பலாம்.
ஆட்சியை பிடித்து கொண்டதும் மீண்டும் நம் மீனவன் கொள்ள படுவான்.
ஈழ உறவுகள் கதை தொடர்கதையாக நீளும்.
மின்சாரம் தடைபடும். விலையேற்றம் தொடரும்.
அவசிய தேவைகள் உணவு பொருட்கள் விலை உயரும் .

உறவுகளே கூட்டத்தோடு கூட்டமாக அல்ல . தனித்து தன் நலன் கொண்டு அல்ல .நம் நாட்டின் நலன்
என்ற கண்ணோட்டத்தில் பணியாற்ற வேண்டிய நேரம் இது .
இங்கு நமக்கு தோவை உணர்ச்சி வசப்படும் இளைஞர்கூட்டம் அல்ல. உணர்ச்சியை அறிவாக மாற்றி நம் நாட்டை மீட்கும் பணி செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் .
கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என்பர் பாவேந்தர்.
அப்படி நாம் கடமை செய்ய வேண்டிய தருணமிது .
உண்மையும் நேர்மையும் கொண்டவர்களை எங்கும் மதிப்பதில்லை உன்னை அலட்சிய படுத்த படலாம் . கவலைபடாதே. இங்கு உண்மையான வர்களை அவர்களின் உழைப்பை உள் வாங்கி கொள்ளாத குமுகம் இது. அதுபற்றி அச்சம் கொள்ளாதே அது தமிழகத்தில் நிறைந்தே இருக்கிறது .
தமிழகத்தில் தற்குரித்தனமும் தன்னலபோக்கும் மிகுந்தே காணப்படுகிறது .அதனால்தானே தமிழகத்தில் புதிய புதிய அரசியல் காட்சிகள் . கட்சிகளும் ஏன் ஓருஅணியில் திரள முடியவில்லை . இந்த தற்குறித் தனம்தனே .
ஈழத்தில் அவர்களின் பகைவர்கள் யார் என்பதை கண்டு கொண்டார்கள் இன்று அவர்கள் விடுதலையின் விளிம்பில் .தமிழனின் எதிரி யார் என்பதை அறிந்து கொண்டீரா என கேட்பார் யாருமில்லை எனவே மயக்கத்திலே கிடக்கிறோம் .
நம் தமிழர்கள் என்று கூறிக்கொண்ட வர்களுடன் " கை " கோர்த்து வருகிறது நம் ப "கை"
தேர்த்தல் நாளுக்கு முன் எத்தகைய கோயபல்சு வேலையும் எதிரணி செய்யும் வேழிப்போடிருக்க வேண்டிய நேரமிது.

1933 ல் ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஹிட்லரின் கொலைகார நாஜிக் கட்சிக்கு
கம்யுனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தனர் . இட்லரின் நண்பனான கோயபல்சு ஒரு சூழ்சியை செய்தான் அதுதான் நாடாளுமன்றத்தில் தீ வைப்பது என்பது அப்படியே தீ வைத்து கம்யூ னிஸ்டுகள் மீது பழியை போட்டன் . அவன் நினைத்த மாதிரி வெற்றி பெற்றது நாஜிக் கட்சி . அத்தகைய கட்சிகளும் இங்கும் அரங்கேறலாம் . நாம் விழிபோடிருக்க வேண்டும் .

உறவுகளே உங்களின் பாதங்களை தொட்டு வேண்டுகிறேன் அருள் கூர்ந்து இந்த செய்தியை மக்களிடத்தில் பரப்புரை செய்க . .

sivakumar said...

இது போன்ற சூழலையெல்லாம் கற்பனை செய்யவே அச்சமாக இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் மாணவரா ? இயக்கத்தில் எதுவும் சேர்ந்திருக்க வில்லையா ?
(நான் இது போன்று இடைஇடையே பலமுறை கேள்விகள் கேட்பதால் உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா ?)

Kalaiyarasan said...

நன்றி தமிழ்வினை. உங்களுடைய கேள்விகளால் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வத்தை பாராட்டுகிறேன். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பாடசாலையில் உயர்தர வகுப்பு பரீட்சை எடுக்கும் மாணவன்.
அந்த காலகட்டத்தில் இயக்கம் எதிலும் சம்பந்தப்படாமல் ஒதுங்கியிருந்தேன். ஈழப் போராட்டத்தின் திருப்புமுனையானாக அமைந்த காலகட்டம் அது. சமூகத்தில் பிளவுகளை நிரந்தரமாக்கிய அன்றைய நிலைமை, பலரை அரசியல் வாழ்வில் இருந்து அந்நியப் படுத்தியது.