Thursday, April 30, 2009

9/11 மூன்றாவது கோபுர தகர்ப்பு மர்மம்

உங்களுக்குத் தெரியுமா? 9/11, நியூ யார்க், உலக வர்த்தக கழகத்தின் மூன்றாவது கோபுரம் ஒன்று இடிந்து விழுந்தது? ஆனால் மற்ற இரு கோபுரங்களையும் விமானங்கள் வந்து மோதியது போல, மூன்றாவது கோபுரத்தை எந்த விமானமும் மோதாமலே இடிந்து விழுந்தது. நியூ யார்க் நகரில் இருந்து பி.பி.சி. தொலைக்காட்சிக்காக நேரடி அறிவிப்புகளை செய்து கொண்டிருந்த செய்தியாளர், கட்டடம் இடிந்து விழுவதை 23 நிமிடங்களுக்கு முன்னரே "ஞானக் கண்ணால்" பார்த்திருந்தார். தவறை உணர்ந்த பி.பி.சி. அவசர அவசரமாக இணைப்பை துண்டித்தது. இவை அனைத்தையும் காணொளியாக இங்கே பார்க்கலாம்.
An astounding video uncovered from the archives today shows the BBC reporting on the collapse of WTC Building 7 over twenty minutes before it fell at 5:20pm on the afternoon of 9/11. The incredible footage shows BBC reporter Jane Standley talking about the collapse of the Salomon Brothers Building while it remains standing in the live shot behind her head. How did the BBC know that it was going to collapse? And why did they report the collapse when it is clearly standing in the background?

Wednesday, April 29, 2009

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4

முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற கற்பிதமே, அந்தந்த பிரதேச மக்களின் பிம்பமாக இருப்பது யதார்த்தம். வெள்ளையரின் கடவுள் வெள்ளையாக இருந்தார். அதே போல கறுப்பர்களின் கடவுளும் கறுப்பாக இருந்ததை, இப்போதும் காணப்படும் ஆப்பிரிக்க மத சிற்பங்கள் நிரூபிக்கின்றன. ஆகவே “கடவுளைக் கண்ட வரலாறு” ஒரு ஐரோப்பிய மையவாத கட்டுக்கதை.

முதன்முதல் கறுப்பின ஆப்பிரிக்க மக்களை கண்ட ஐரோப்பியர்கள், அவர்களை மனிதக் குரங்குகளாக கருதினார்கள். அதே நேரம் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையின ஐரோப்பியரை பன்றி வகையை சேர்ந்த விசித்திர மிருகமாக கருதினர். ஐரோப்பியர்கள், பன்றியின் தோல் நிறத்தை ஒத்த, செந்நிற மேனியைக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்கள் உடலில் இருந்து வந்த நாற்றமும் அப்படி நினைக்க வைத்தது. “வெள்ளையர்கள் புதைகுழிகளில் இருந்து எழுந்து வந்த ஆவிகள்” என்ற அறியாமை, வெள்ளைக்காரரை கண்டவுடன் கறுப்பின மக்களை பீதியடைந்து ஓட வைத்தது.

நைஜீரியாவில் கால் பதித்த ஐரோப்பியர்கள், வர்த்தக நிலையங்களை ஸ்தாபித்து, அடிமைகளை வேட்டையாடத் தொடங்கிய காலம், இன்னொரு வதந்தி பரவியது. ஒரு பக்கம் அடிமைகளைப் பிடித்து ஏற்றுமதி செய்து கொண்டே, மறு பக்கம் துணி விற்று வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் விற்ற துணியின் நிறம் சிவப்பாக இருந்தது. வெள்ளையர்கள் அடிமைகளை கொன்று இரத்தம் எடுத்து துணிகளுக்கு சாயமிடுவதாக கறுப்பர்கள் நம்பினார்கள். பெருந்தொகை அடிமைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த விபரங்களை 1857 ல் நைஜீரியாவிற்கு கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜோன் டெயிலர் என்ற பாதிரியார் எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் 19 ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்க கண்டத்தை காலனிப்படுத்த தொடங்கியதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதன் அர்த்தம், அது வரை ஐரோப்பியர்கள் எவரும் அந்தக் கண்டத்தில் கால் பதித்திருக்கவில்லை என்பதல்ல. ஐரோப்பிய வர்த்தகர்கள், மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையோரமாக சிறு நிலத்தை கையகப்படுத்தி, அங்கே கோட்டை கட்டி தமது தேசங்கடந்த வர்த்தக கழகத்தை நடத்தி வந்தனர். இதனால் இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்கள் கடற்கரையோரமாக அமைந்துள்ளதைக் காணலாம். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், உள்ளூர் கறுப்பர்கள் சிலரை தமது முகவர்களாக அமர்த்திக் கொண்டனர். அவர்களது வேலை, நாட்டின் உட்பகுதிக் கிராமங்களை சுற்றிவளைத்து, திடகாத்திரமான உழைக்கும் வயதில் உள்ள (ஆகவே சிறுவர்களும், வயோதிபர்களும் தேவையில்லை) ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக பிடித்து வந்து விற்பது. நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்கா அனுப்பப்பட்டு விட்டதால், ஒரு காலத்தில் அந்நாட்டின் மத்திய பகுதியில் இளமையான உழைப்பாளிகளைக் காண்பது அரிதாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகள் அபிவிருத்தியில் பின்தங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம்.

நைஜீரியாவில் ஐரோப்பியர்கள் மட்டும் வந்து அடிமைகளை வாங்கிச் செல்லவில்லை. அரேபியருக்கு தேவைப்பட்ட அடிமைகளை அன்று வடக்கு நைஜீரியாவில் இருந்த “கானெம்” இராச்சியம் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஒரு முஸ்லீமை அடிமையாக வைத்திருக்க முடியாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது). துனிசியாவில் இருந்த சந்தையில் நைஜீரிய அடிமைகள் விற்கப்பட்டனர். அல்ஜீரியாவை பிரான்ஸ் கைப்பற்றிய பின்னர், கானெம் தேசத்திற்கு பெருமளவு வருமானம் ஈட்டித்தந்த அடிமை வர்த்தகம் நெருக்கடிக்கு உள்ளானது. அடிமை வியாபாரம் மட்டுமல்ல, சாயப்பட்டறை, தோல் பதனிடும் தொழிலகங்கள் போன்ற தொழிற்துறை வளர்ச்சியினால், அன்று வடக்கு நைஜீரியாவில் பல நகரங்கள் தோன்றி இருந்தன. இந்த நகரங்களை ஒரு (கறுப்பின) சுல்த்தான் தலைமையிலான அதிகார மையம் நிர்வகித்து வந்தது. “கானெம்” முழுக்க முழுக்க ஒரு கறுப்பின அரசாட்சியாக இருந்தது. 13 ம் நூற்றாண்டில் இன்றைய லிபியாவின் பகுதிகளை உள்ளடக்கிய, மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரேபியருடன் ஏற்பட்ட வர்த்தக தொடர்புகளால், புலானி மற்றும் ஹவுசா இன மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின்பு, அந்த இராச்சியத்தை உருவாக்கி இருந்தனர். அன்றும் இன்றும் அந்தப் பிராந்தியத்தில் ஹவுசா மொழியே பொது மொழியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் இஸ்லாமிய மதராசாக்கள் சுதந்திரமாக இயங்கி வந்தன. இதனால் பெரும்பாலான நைஜீரிய முஸ்லீம்கள் ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்கவில்லை. இது பின்னர் கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளில், ஆங்கிலத்தில் கல்வி கற்ற தெற்கத்திய இனங்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது.

ஐரோப்பியர் வருவதற்கு முன்னர், ஆப்பிரிக்கர்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவமோ, அல்லது துப்பாக்கிகளோ இருக்கவில்லை என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்துள்ளனர். 1823 ல் டிக்சன் டென்ஹம் என்ற பிரயாணி, கானேம் இராச்சியத்திற்கு சென்று வந்த முதலாவது ஐரோப்பியராவார். தன்னை வரவேற்க வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆயுதந்தரித்த, சீருடையணிந்த, குதிரைவீரர்களை கண்டு திகைப்படைந்ததாக குறிப்பெழுதி வைத்துள்ளார். ஐந்நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கானோ நகரத்திற்கு செல்பவர்கள், இப்போதும் குதிரைப்படையினரின் அணிவகுப்பை பார்வையிடலாம். கானெம் இராச்சிய இராணுவவீரர்கள் தாங்கியிருந்த துப்பாக்கிகள் அரேபியரின் தொடர்பால் கிடைக்கப்பெற்றவை. ஐரோப்பியர்கள் துப்பாக்கிகள், பீரங்கிகள் பற்றி அறிந்தே இருக்காத காலத்தில், அரேபியர்கள் அவற்றை போரில் திறமையாக பயன்படுத்தி உள்ளனர். 1500 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தில் இருந்த, மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான கொன்ஸ்டாண்டிநொபெல் (இஸ்தான்புல்) வீழ்ச்சிக்கு (அன்றைய) நவீன கண்டுபிடிப்பான சுடுகருவிகள் காரணமாக இருந்தன.

பிரிட்டிஷாரின் நைஜீரியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், இராணுவத்தில் முஸ்லீம் அதிகாரிகள் அதிகமாக காணப்பட்டமைக்கு, கானெம் இராச்சிய பாரம்பரியமே காரணம். பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சிக்காலம் தொடங்கிய போது, வடக்கே இருந்த இஸ்லாமிய தேசத்தை, தெற்கில் பல்வேறு இனங்களின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசங்களுடன் இணைத்து, நைஜீரியா என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் நைஜீரியாவினுள் 250 மொழிகளைப் பேசும் இனங்கள் அடங்கின. இன்று மொத்த சனத்தொகையில் 50 வீதமாக உள்ள நைஜீரிய முஸ்லீம்கள் மத்தியிலும் இன இனவேறுபாடு இருந்த போதிலும், இஸ்லாம் என்ற மதம் அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. அதற்கு மாறாக தெற்கில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் அடிக்கடி வன்முறை வெடிக்கின்றது. ஒவ்வொரு இனமும் தனது இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதும் போக்கு உள்ளது. (மத முரண்பாடுகளைப் பற்றி பின்னர் பார்க்கலாம்) சுதந்திரத்திற்கு பின்னர் நைஜீரியாவின் அரசியல் அதிகாரம் இன/மத முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறும் காலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தமது இன வாக்குகளை பெறுவதிலேயே அதிக அக்கறை காட்டுவார்கள். அதனால் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக இனங்களுக்கிடையில் வன்முறைகள் தூண்டிவிடப்படும். அந்த உணர்ச்சி அலையை வைத்து அவர்கள் வாக்குகளை அறுவடை செய்வர். பணத்தை வாரியிறைத்து வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு வேட்டையாடுவதும், எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்களை அடியாட்படையை ஏவி மிரட்டுவதும், குறிப்பிட்ட அரசியல்வாதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும். வாக்குச் சாவடியில் நின்று கொண்டு வாக்களிக்க வரும் மக்கள் எந்த வேட்பாளருக்கு போட வேண்டுமென்று அடாவடித்தனம் பண்ணுவது அங்கே சாதாரண நிகழ்வு. பணபலம், ஆட்பலம் இல்லாத வேட்பாளர் தேர்தலில் நிற்க முடியாது. பாராளுமன்றத்திற்கோ, அல்லது மாநில சட்டசபைகளுக்கோ தெரிவாகும் இந்த வேட்பாளர்கள் பதவிக்கு வந்தால் செய்யும் ஒரேயொரு வேலை, பொது மக்கள் சொத்தை கொள்ளையடிப்பது மட்டுமே. இதனால் நாட்டில் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று அறிவித்து விட்டு, அடிக்கடி இராணுவ அதிகாரிகள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை பறிப்பார்கள். அப்போது கூட ஊழல் ஒழியாது என்பது மட்டுமல்ல, பகைமை கொண்ட இனத்தை சேர்ந்த வேறொரு அதிகாரி, அந்த இராணுவ சர்வாதிகாரியை ஒழித்து விட்டு ஆட்சியை கைப்பற்றுவார்.

தெற்கே யொரூபா இனமும், இக்போ இனமும் பெரும்பான்மையாக உள்ளன. நைஜீரியா சுதந்திரம் பெற்று சிலவருடங்களில், இக்போ இனத்தின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தமது பகுதியை “பயாபிரா” என்ற தனி நாடாக அறிவித்தனர். உடனடியாகவே நைஜீரிய இராணுவம் பயாபிரா சுதந்திர பிரகடனத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பிரிட்டனும், சோவியத் யூனியனும் நைஜீரிய இராணுவத்திற்கு பக்கபலமாக நின்ற போதிலும், பயாபிரா போராளிகள் ஓரிரு வருடங்கள் தாக்குப் பிடித்தனர். முற்றுகைக்குள்ளான பயாபிரா மக்களை பணிய வைக்கும் நோக்கில் நைஜீரியா அரசு, திடீரென தேசிய நாணயத்தின் நோட்டுகளை மாற்றியது. இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தடை இருந்த காரணத்தால், மக்கள் உணவின்றி பட்டினி கிடந்தது சாகும் அவலம் நேர்ந்தது. சுமார் அரை மில்லியன் மக்களாவது பட்டினியால் செத்தனர். அப்போது தான் முதன்முதலாக அமெரிக்க விளம்பர நிறுவனமொன்று, எலும்பும் தோலுமாக ஒட்டிய வயிறோடு இருக்கும் ஆப்பிரிக்க மக்களின் காட்சிகளை படம் பிடித்து உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது.

2000 ம் ஆண்டு, வட நைஜீரிய முஸ்லீம் மாநிலமொன்று ஷரியா சட்டம் கொண்டு வந்த போது, நைஜீரியா மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. ஷரியா சட்டத்திற்கு மேற்கத்திய நாடுகள் காட்டிய எதிர்ப்பை நைஜீரிய முஸ்லீம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் தான் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வந்தது. இஸ்லாமிய மத நிறுவனங்களின் தூண்டுதல் இருந்த போதிலும், பெரும்பாலும் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவே இஸ்லாமிய மத சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நைஜீரியாவில் தெற்கே குற்றச் செயல்கள் மலிந்த லாகோஸ் நகரிற்கு எதிர்மாறாக, வடக்கே ஓரளவு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகின்றது. மேலும் சுதந்திரத்திற்குப் பின்னர் மேற்கத்திய கலாச்சார சீர்கேடுகள் விரைவாகப் பரவி வந்தன. மக்களின் மேற்கத்தியமயமாகலைத் தடுத்து, காலனிய காலத்திற்கு முந்திய இஸ்லாமிய கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதுவுமே, ஷரியா சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள். மேற்கத்திய எதிர்ப்பிற்கு, நைஜீரிய முஸ்லீம்கள், ஒசாமா பின் லாடன் படம் பொறித்த டி-ஷேர்ட்களை அணிந்து எதிர்வினையாற்றினர். இப்போதும் அங்கே ஒசாமா ஒரு மாபெரும் வீரனாக கொண்டாடப்படுகின்றார்.

நைஜீரிய சனத்தொகையில் கிறிஸ்தவர்கள் 50 வீதம் (புராதன ஆப்பிரிக்க மதங்களைப் பின்பற்றும் சிறு தொகை தவிர) இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளாகவே கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்குமிடயிலான உறவு சீர்கெட்டு வருகின்றது. சில நேரம் அற்ப விடயம் கூட கலவரங்களை தூண்டி விடுகின்றது. கலவரத்தில் இருதரப்பிலுமே நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. மேற்குலக நாட்டு ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே கலவரத்திற்கு காரணம் என்று, ஒரு தலைப்பட்சமாக செய்தி அறிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, உலக அழகிப் போட்டியை காரணமாக வைத்து முஸ்லீம்கள் கலவரத்தை தொடங்கியது உண்மை. ஆனால் கலவரத் தீயை பற்ற வைப்பதில் கிறிஸ்தவர்களும் சளைத்தவர்கள் அல்லர். இரண்டு மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் உள்ளனர். சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத நிறுவனங்களை நிதி கொடுத்து பராமரிக்கின்றன. அதே நேரம் அமெரிக்க கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், நைஜீரிய புரட்டஸ்தாந்து அல்லது பெந்தேகொஸ்தே சபைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தில், அதாவது 19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டதால், விடுவிக்கப்பட்ட அடிமைகள் சிலர் கிறிஸ்தவ பாதிரிகளாக பயிற்றுவிக்கப்பட்டனர். தென் நைஜீரியாவில் ஆப்பிரிக்க மதங்களை பின்பற்றிய மக்களை, கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரம் சில கறுப்பின பாதிரிகள், பிரிட்டிஷ் பொருட்களை நைஜீரியாவில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டனர். கத்தோலிக்க, அங்க்லிக்கன் மதப்பிரிவுகள் இவ்வாறு முதலாளித்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டு தான் நைஜீரியாவில் காலூன்றின. இதனால் இன்றைக்கும் மத நம்பிக்கையுடன், கூடவே வியாபார மனோபாவமும் பெரும்பாலான நைஜீரியர்களின் இரத்தத்தோடு ஊறியிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் திறமையான தொழிலதிபர்கள் பலர் நைஜீரியர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க, அங்க்லிக்கன் திருச்சபைகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில நைஜீரிய மக்களை சங்கடத்திற்குள்ளாக்குகின்றது. உதாரணத்திற்கு, பலதார மணம் அந் நாட்டில் காலங்காலமாக இருந்து வரும் வழக்கங்களில் ஒன்று. அரசாங்கம் ஒரு முறை இதை தடுக்க சட்டம் கொண்டு வந்த போது, எதிர்பாராவிதமாக பெண்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அனேகமாக சமூகத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பணக்கார ஆண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாவதனால் குடும்ப பாரத்தை குறைக்க முடிகின்றது, என்பது அவர்களது வாதம். வறுமை காரணமாக மேற்கத்திய நாடுகளை நோக்கி பயணம் செய்யும் பெண்கள், மாபியாக் குழுக்களால் விபச்சார அடிமைகளாக்கப்படுகின்றனர். ஒருபுறம் செல்வத்தை குவித்து வைத்துள்ள சிறுபான்மை பணக்கார வர்க்கம், மறுபுறம் அன்றாட உணவுக்கே வழியில்லாத பெரும்பான்மை ஏழை மக்கள். இந்த சமூக ஏற்றத்தாழ்வு பல பிரச்சினைகளின் தோற்றுவாயாக உள்ளது. இருப்பினும் அங்கே “வர்க்கப் பிரிவினை” என்ற சொற்பதம் யாராலும் பாவிக்கப்படுவதில்லை. அதற்கு மதம் ஒரு காரணம்.

“இவ்வுலக வாழ்வில் கஷ்டப்படுபவர்கள், இறந்த பின் சொர்க்கத்தில் செல்வந்தர்களாகலாம்” என்று போதிக்கும் கத்தோலிக்க மதத்தை விட்டு பலர் விலகி வருகின்றனர். அதிருப்தியாளர்களை பல்வேறு பெந்தெகொஸ்தெ சபைகள் சேர்த்து வருகின்றன. அமெரிக்க மூலதனத்தில் இயங்கும் அந்த சபைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாவது மக்களை கவர்கின்றன. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்ளும் சபைகள், உறுப்பினர்களை சேர்த்துக் கொண்ட பின்னர் வருமானத்தில் பத்து வீதம், அங்கத்துவ பணமாக செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றன. நைஜீரியாவில் பெந்தெகொஸ்தெ சபைகளின் பாதிரிகள் ஆடம்பர பங்களாவில் வசிப்பதும், சொகுசு காரில் பயணம் செய்வதும், பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பதும் சர்வசாதாரணம்.

நைஜீரியா ஆப்பிரிக்காவின் எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. பெற்றோலியத்தை இலகுவில் பிரித்தெடுக்கக் கூடிய அளவு, நைஜீரிய எண்ணை தரமானது. நெதர்லாந்து அரச குடும்பத்தின் முதலீட்டில் இயங்கும் ஷெல் நிறுவனம், பெருமளவு நைஜீரிய எண்ணையை அகழ்ந்து சர்வதேச சந்தையில் விற்று வருகின்றது. ஒரு பகுதி லாபம் ஆளும் வர்க்கத்தின் பாக்கெட்டுக்குள் போவதால், பொது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மொத்த உற்பத்தியில் பத்து சதவிகிதம் உள் நாட்டு பாவனைக்கு ஒதுக்கப்பட்டாலும், அங்கே பற்றாக்குறை நிலவுகின்றது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நேருவதும், அடிக்கடி விலை உயர்வதும், நைஜீரியா உண்மையிலேயே எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடா? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும். நம்பினால் நம்புங்கள். உள்ளூர் பாவனைக்கு தேவையான பெரும் பகுதி பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மோசமான முகாமைத்துவத்தை கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், அயல்நாடுகளுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்றல், போன்ற காரணங்களால் இந்த தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

ஊழல் பெருச்சாளிகளால் ஆளப்படும் நாட்டில் சட்டம், ஒழுங்கை எதிர்பார்ப்பது முயல்கொம்பை தேடுவதற்கு ஒப்பானது. பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்தனர். எண்ணை குழாய்களை துளையிட்டு, எண்ணை திருட தொடங்கினர். அல்லது குழாய்களை சேதமாக்கி விட்டு, கம்பெனி ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை பிடித்து சிறை வைத்தனர். சில நேரம் இது போன்ற அழிவு வேளைகளில் சிக்கி பொது மக்கள் மரணமடைவதும் உண்டு. ஆயினும் அவர்களுக்கு பகாசுர எண்ணைக் கம்பெனிகளை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணை வளம் அவர்களது வாழ்க்கையை வளம் படுத்த செலவிடப்பட வேண்டும், என்ற நியாயமான கோரிக்கையே அவர்களது போராட்டம். சில தன்னிச்சையான ஆயுதக் குழுக்கள், எண்ணை கம்பெனி ஊழியர்களைக் கடத்தி, தமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைத்தனர். கென் சரவீவ என்ற காந்தீய வழயில் போராடிய ஒருவர், நைஜீரிய பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மன்னிப்புச் சபை நைஜீரிய பிரச்சினையை உலகறிய வைத்தது. இந்தக் கொலையில் ஷெல் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை, ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்ட போது, “அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர்களை தனக்குப் பிடிக்காது.” என்று கூறினார். ஆமாம், நைஜீரிய சர்வாதிகாரிகளுடன் கூடிக் குலாவுவது, லஞ்சம் கொடுப்பது, எதிர்ப்பவர்களை ஆள் வைத்து கொலை செய்வது, வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடிப்பது… இவ்வாறான கிரிமினல் வேலைகளை ஷெல் செய்து வருவது, நைஜீரியாவில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒரு பக்கம் எல்லா பாவ காரியங்களையும் செய்து கொண்டு, மறு பக்கம் தன்னை கொடை வள்ளலாக காட்டி புண்ணியம் தேடுகின்றது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், மற்றும் பல சமூக நல தொண்டு சேவைகளுக்கு ஷெல் “நன்கொடை” வழங்கி வருகின்றது. அதே நேரம் தனது இருப்பிற்கு ஆபத்து நேரா வண்ணம், முன்பு தன்னை எதிர்த்து போராடியவர்களை சேர்த்து, தனியார் பாதுகாப்புப்படை ஒன்றை உருவாக்கி உள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்த வரை, நைஜீரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் ஒரு பொருட்டல்ல. நைஜீரியா ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுமாகும். அது மட்டுமல்ல பயபிரா போருக்குப் பின்னர், போரியல் அனுபவத்தை பெற்ற இராணுவமானது, நாட்டின் இன்றியமையாத நிறுவனமாக வளர்ந்துள்ளது. இராணுவத்தின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அங்கே ஜனநாயகம் நிலைக்க முடியும். நைஜீரியா, எல்லாம் வல்ல அமெரிக்காண்டவரின் அங்கீகாரம் பெற்ற நாடு. அதனால் ஐக்கிய நாடுகள் சபை தலையீட்டில் எந்தவொரு ஆப்பிரிக்க நாட்டிற்காவது சமாதானப்படை அனுப்ப நேர்ந்தால், அதிலே நைஜீரியா முக்கிய பங்காற்றும். ஆனால் சமாதானம் என்ற பெயரில் நைஜீரியா பிராந்திய வல்லரசு மனப்பான்மையுடன் செயற்படுகின்றது. யுத்த பிரபுக்களுக்கு சார்பாக நடந்து கொள்கின்றது. வேலியே பயிரை மேய்வது போல, மனித உரிமை மீறல்களைப் புரிகின்றது. சியாரா லியோனில் வைர வியாபாரத்தில் கூட ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில், நைஜீரிய ஆட்சியாளர்கள் இன்னமும் வல்லரசு கனவு காண்கின்றனர். பல்வேறு இனங்களும், மதங்களும் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் அது ஒரு பகற்கனவாக மட்டுமே இருக்கும்.

– தொடரும் –

Sunday, April 26, 2009

மனிதக் காட்சிச் சாலை


வெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் "மனிதக் காட்சி சாலைகள்" (Human Zoo) ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளெங்கும் பிரபலமாக இருந்துள்ளன. காலனியாதிக்க நாடுகள், தமது காலனிகளில் காணப்பட்ட, "விசித்திரமான" மனிதர்களை பிடித்து வந்து, தமது மக்களுக்கு காட்சிப் படுத்தினர். இந்தியர்கள், தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், செவிந்தியர்கள், அபோரிஜின்கள் இவ்வாறு பல வேறுபட்ட இனங்களில், உதாரணத்திற்கு சிலரை தெரிந்தெடுத்து, ஐரோப்பிய நகரங்களுக்கு கூட்டிக்  கொண்டு வந்தனர்.

இந்த "விசித்திரமான  விலங்குகளை" அருங்காட்சியகத்தில் மட்டும் கொண்டு வந்து வைக்கவில்லை. நகரில் உள்ள, வழமையான மிருகக்காட்சிச் சாலையில் ஒரு பகுதி, இதற்கென ஒதுக்கப்பட்டது. சில நேரம் நகரங்களில் நடக்கும் கானிவல் களியாட்ட நிகழ்வுகளின் போதும், கண்காட்சிகளில் வைக்கப்பட்டனர். குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல, மனிதர்களை  வைத்து சிலர் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.

" காட்டுமிராண்டி பச்சை மாமிசம் உண்ணும் காட்சியை பார்க்க வாரீர்!" என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பார்வையாளரை கவர்ந்திழுத்தார்கள். பெரும்பாலான காட்சிகளில், இந்த காலனிய மக்கள், தமது பாரம்பரிய குடிசைக்குள், பாரம்பரிய உடையில் இருப்பார்கள். பாரம்பரிய நடனமும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். சில நேரம் சண்டைக் காட்சி நாடகமும் அரங்கேறும். இவர்களைப் பார்த்து இரசிக்கும் வெள்ளையினத்தவர்கள், காலனி நாடுகளின் மக்கள், விலங்குகளை காட்டிலும் கொஞ்சம் அதிகமாக வளர்ச்சி  அடைந்துள்ளதாக கருதிக் கொள்வார்கள்.

1875 லிருந்து 1940 ம ஆண்டு வரை, அதாவது காலனியாதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில், "மனிதக் காட்சிச் சாலைகள்" பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்பட்டன. ஜெர்மனியில் இது "Völkerschau" என்றும், இங்கிலாந்தில் "Human Zoo" என்றும் அழைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த வெள்ளையின மக்கள், தம்மை விட வேறுபட்ட மனிதர்களைப் பார்த்திராததால், அவர்களுக்கு இது புதுமையாக இருந்தது. வித்தியாசமான தோற்றம், மேனி நிறம், பழக்க வழக்கங்கள் என்பன அவர்களை கவர்திழுத்தன. மேலும் பயங்கர திகில் காட்சிகளைப் பார்ப்பது போன்ற ஆர்வமும் அவர்கள் மத்தியில் காணப்பட்டது. திகில் காட்சிகளுக்கு மெருகூட்டுவதற்காக, சில நேரம் மண்டை ஓடுகள் காட்சிப் படுத்தப்பட்டன. புராதன காலத்து காட்டுமிராண்டிகள், மனித தலை கொய்வதே வேலையாக இருப்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு.

வெள்ளையின வியாபாரிகளுக்கு காலனிகளில் உயிருள்ள மனிதர்கள் மட்டும் தேவைப்படவில்லை. வெப்ப மண்டல நாடுகளில் வாழும் பல்வேறு இனத்தவர்களின் மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் கூட தேவைப்பட்டன. ஐரோப்பிய நகரங்களின் அருங்காட்சியகங்களில் வைப்பதற்கும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கும் அவை பயன்படுத்தப்பட்டன.

காலனிகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளும், எலும்புக் கூடுகளும் இதற்கென எடுத்து வரப்பட்டன. மண்டையோடு வாங்கி விற்கும் முகவர்கள், காலனிய இந்தியாவின் தெருக்களிலும் அலைந்து திரிந்து மண்டையோடுகளை சேகரித்ததாக, நெதர்லாந்தின் லைடன் நகர அருங்காட்சியக நிர்வாகி தெரிவித்தார். (அந்தக் காலங்களில் ஏராளமான இந்தியர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்ததாலும்,போர்களினாலும், மண்டையோடுகள் தாராளமாக கிடைத்து வந்தன.)

காலனிய மக்களை நிறவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்து ரசிக்கும் கலாச்சாரம் இன்றைக்கும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றது. ஐரோப்பிய நகரங்களில் "காலனிய மக்களின் கண்காட்சிகள்" யாவும், அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட காலத்தில் தான் இடம்பெற்றன. ஐரோப்பியர்கள் தமது காலனிய அடிமை மக்களை நாகரீகமடையாத காட்டுமிராண்டிகளாக மட்டும் கருதவில்லை. பிரான்ஸின் காலனிகளான அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற அரபு நாடுகளை சேர்ந்த இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள், ஐரோப்பிய நகரங்களில் சூடாக விற்பனையாகின.

இன்றைக்கு சில தொலைக்காட்சித் தொடர்கள், "கலாச்சார பரிமாற்றம்" என்ற பெயரில், நிறவெறிக் கூத்துகளை அரங்கேற்றுகின்றன. இந்தத் தொடரில், தெரிந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய குடும்பங்கள், ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களின் வீடுகளில் சில காலம் வசிப்பார்கள். பதிலுக்கு விருந்துபசரித்த ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பா வந்து சில காலம் வசிப்பார்கள். இது தான் தொடரின் சாராம்சம். ஆப்பிரிக்க பழங்குடியின குடியிருப்புகள் பாரதிராஜா படத்தில் வரும் கிராமங்களைப் போல வசதிக் குறைபாடுகளுடன் காணப்படும். படப்பிடிப்பின் போது, பழங்குடியின குடும்பத்தவர்கள், செல்லிடத் தொலைபேசி, கைக்கடிகாரம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. தப்பித் தவறியும், ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசக்கூடாது. 

ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களும், பணத்திற்காக படப் பிடிப்பாளர்கள் கூறிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டனர். அதை விடக் கொடுமை, ஆப்பிரிக்க குடும்பங்கள் ஐரோப்பிய நகர வாழ்க்கைக்கு பழக்கப்படாதவர்களாக பல வேடிக்கையான காரியங்களை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டது தான். தொலைக்காட்சி பார்வையாளர்கள், பட்டணத்தில் பட்டிக்காட்டானின் அவதிகளைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள். மனிதக் காட்சி சாலைகள், வெறும் கோட்பாடாக இருந்த  நிறவெறிப் பாடத்தை, மக்களுக்கு நடைமுறையில் கற்பித்து வந்தன. அதன் தாக்கம், பல தலைமுறைகளுக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.



மேலதிக தகவல்களுக்கு:
Human zoo

Thursday, April 23, 2009

அநாதை தேசங்கள்

தமிழீழம் சாத்தியமா? ஓர் ஆய்வு [பகுதி-2]
ஐரோப்பிய கண்டத்தைத் தலைகீழாக மாற்றிய லிபரல் புரட்சி தேசியவாத அரசியலின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தபோது அது முதலாளித்துவப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டது இயல்பானதே. ஒரு நாட்டில் மன்னன் இட்டதே சட்டம் என்ற நிலை மாறி அரசு என்ற நிலையான ஸ்தாபனத்தை உருவாக்குவதே பூர்ஷுவாக்களின் (மத்தியதர
வர்க்கத்தின்) நோக்கமாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவான சட்டம், அரசமைப்பதற்கான யாப்பு போன்றவற்றின் அவசியம் அப்போது உணரப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நெப்போலியன் சட்டம் (Code Napolean)பிற்காலத்தில் பரந்த அரசியலமைப்புச் சட்டமாகியது. (இதைத்தான் ஒல்லாந்தர் இலங்கையில் அறிமுகப்படுத்த அது அங்கே டச்சுசு; சட்டம் என்றழைக்கப்படுகின்றது) இங்கிலாந்தில் உரிமைகள் சாசனம் (Bill of Rights) மத்தியதர வர்க்கத்தால் பொதுச்சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொழிற்சாலைகள் விநியோகத்திற்காக ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நிலையான நுகர்வோர் வட்டம் போன்றவற்றை வேண்டி நின்றன. ஒரு தேசிய அரசு
மட்டுமே இத்தேவைகளைச் சாத்தியமாக்க முடியும்.

தேசியவாதம் குறித்த பிரச்சினை மார்க்சியவாதிகளையும் விட்டுவைக்கவில்லை. “பாட்டாளி
களுக்குத் தேசம் கிடையாது” என்று கூறிய கார்ல் மார்க்ஸ் கூட இங்கிலாந்தின் முதலாவது காலனியான அயர்லாந்து பிரிந்ததை வரவேற்றார். “ஒடுக்கப்படும் தேசமொன்றின் பிரிந்து போகும் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்குகின்ற தேசத்தைச் சேர்ந்த சோஷலிஸ்ட் புறக்கணித்தால் அவன் சோஷலிஸ்ட் அல்ல” என்றார் லெனின். 1917இல் போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றதும் பின்லாந்துக்கு ரஷ்யாவிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இருப்பினும் கத்தோலிக்க தேசியவாத போலந்தை விட்டுவிடும்படி ஸ்டாலின் கூறியதை லெனின் ஏற்கவில்லை. போலந்து மக்களின் ஆதரவு கிடைக்காத செம்படை அவமானத்துடன்
திரும்பியது. பால்டிக் கடலோரக் குடியரசுகள் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. இந்தப் பாரம்பரியம் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் சோவியத் யூனியனின் உடைவிற்குக் காரணமாக இருந்தது.

ஜார் காலத்து ரஷ்யாவில் துருக்கி இனமக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மதத் தலைவர்களின் பிடியில் இருந்ததால் அங்கே தேசியவாதக் கருத்துகள் எட்டியும் பார்க்கவில்லை. அஸர்பைஜானில் போல்ஷ்விக்குகள் வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த போது அதனை அம்மக்கள் ‘ஜிகாத்’ என்று புரிந்து கொண்டார்கள். இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் நிலையில் அன்றிருந்த மத்திய ஆசியா, மதவாதிகளை ‘கொள்ளைக்காரர்கள்’ எனப் பட்டம் சூட்டி விரட்டியடித்த பின்புதான் அபிவிருத்தியடைந்தது. சோவியத் யூனியனில் பல்வேறு தேசிய அரசுகளாகப் பிரிக்கும் கடமையை ஏற்றிருந்த ஸ்டாலின் வரைந்த எல்லைகளின்படிதான் ‘ஸ்தான்’ என்று முடியும் மத்திய ஆசியக் குடியரசுகள் உருவாகின. அந்தப் புதிய தேசங்கள் அங்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் பெயரில் உருவான போதும், குறிப்பிட்ட நாட்டினுள் பிறமொழி பேசும் அயலவரும் அடங்கினர். இது வேண்டுமென்றே முன்யோசனையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு குறிப்பிட்ட இனம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட திட்டம், இன்றைய இனப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவுள்ளது. இருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ பிற இனங்களுடன் நட்புறவை பேணும் நிர்ப்பந்தம் அங்கே காணப்படுகின்றது.

சோவியத் யூனியனின் 15 குடியரசுகளும் வரலாற்று தொடர்ச்சியாகவோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையாக உள்ள இனத்தின் பெயரிலோ அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குடியரசுக்குள்ளேயே பல சிறுபான்மை இனங்கள் வாழ்ந்து வந்தனர். ரஷ்ய சோசலிசக் குடியரசில் மட்டும் நூற்றுக்குக் குறையாத மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். கணிசமானளவு தொகையுள்ள வளர்ச்சியடைந்த மொழிச் சிறுபான்மையினருக்கென தன்
னாட்சிப் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. சோவியத் அரசமைப்புச் சட்டத்தின்படி 15 குடியரசுகளுக்கும் பிரிந்து போகும் உரிமை இருந்ததைப் பயன்படுத்தி, 1991இல் சோவியத் யூனியன் 15 துண்டுகளாக உடைந்தது. ஆனால் தன்னாட்சிப் பிரதேசங்களால்
அவ்வாறு செய்ய முடியவில்லை. விளைவு பேரழிவைத் தந்த முடிவுறாத யுத்தங்கள். இவற்றில் குறிப்பிடத் தக்கது, ரஷ்யாவிலிருந்து பிரிய விரும்பிய செச்னியாவின் யுத்தம். இரண்டு செச்னிய போர்களுக்குப் பின், சில முன்னாள் கிளர்ச்சித் தலைவர்கள், ரஷ்ய
அரசுடன் சமரசம் செய்துகொண்டு சில கூடுதல் சலுகைகளுடன் மாநில ஆட்சியைப் பொறுப்பேற்றனர். மொஸ்கோவிற்கு அடிபணிய மறுத்த ஆயுதபாணிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டனர்.

புதிதாகச் சுதந்திரம்பெற்ற முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியாவிலும் மோல்டோ
வியாவிலும் கதை வேறுவிதமாக இருந்தது. ஜோர்ஜியாவின் ரஷ்ய எல்லைப்புறமாக அப்காஸியர், ஒசாத்தியர் என்ற இரு வேற்று மொழி பேசும் இன மக்கள் வாழ்கின்றனர். சோவியத் காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேச அலகு புதிய ஜோர்ஜிய அரசாங்கத்தால் ரத்துச் செய்யப்பட்டது. மேலும் ஆட்சியில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதிகள் தமது குடியரசில் இருக்கும் மொழிச் சிறுபான்மையினர் ஜோர்ஜிய மொழியை உத்தியோகபூர்வமான மொழியாக ஏற்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினர். இதன் எதிரொலியாக அப்காஸியர், ஒசேத்தியர் மத்தியிலும் தேசியவாத அமைப்புகள் தோன்றின. 1992இல் இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாகியது. கடுந்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத ஜோர்ஜியப் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓட, அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய இரு சுதந்திர தேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த ஜோர்ஜிய இன மக்கள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா நாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தை இதுவரை யாரும் அங்கீகரிக்கவில்லை. பின்புலத்தில் இருந்து கொண்டு இவைகளை ஆதரிக்கும் ரஷ்யா மட்டுமே அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்கிடமில்லாமல் இவ்விரு குட்டிநாடுகளும் தமது பாதுகாப்புக்கும், பொருளாதாரரீதியாக ரஷ்யாவில் தங்கியுள்ளன.

ரொமானியாவிற்கும் உக்ரேனுக்கும் நடுவில் அமைந்துள்ளது, முன்னாள் குடியரசுகளில் ஒன்றான மோல்டோவியா. 1991இல் சோவியத் உடைவின் பின் சுதந்திரம் பெற்ற மோல்டோவியாவில் பெரும்பான்மையினமாக ரொமேனிய மொழி பேசுவோரும், உக்ரெயின்
எல்லையோரம் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றனர். ரஷ்ய மொழிச் சிறுபான்மையினர் வாழும் பகுதியை டினியேஸ்டர் நதி நெடுக்கு வெட்டுமுகமாக பிரிப்பதால், அந்தப் பிரதேசம் திரான்ஸ் டினியேஸ்டர் அல்லது திரான்ஸ்திஸ்திரியா என
அழைக்கப்படுகின்றது. சோவியத் காலத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் அந்தப் பிரதேசத்தில்தான் அமைக்கப்பட்டன. மோல்டோவியாவின் சுதந்திரப்பிரகடனத்திற்குப் பிறகு ரொமேனிய பெரும்பான்மை அரசுக்கெதிராக ரஷ்ய சிறுபான்மை ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அவர்களுக்கு ரஷ்ய ராணுவத்தின் உதவி கிடைத்தது. மிக விரைவிலேயே மோல்டோவியப் படைகளை தோற்கடித்து, ரஷ்ய ஆயுதக் குழுக்கள் திரான்ஸ்திரியா பகுதி முழுவதையும் விடுவித்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தற்போது தமக்கெனப் பாராளுமன்றம், பொலிஸ், இராணுவம், வங்கி, நாணயம் என்று ஒரு தேசத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களுடன் கடந்த 15 வருடங்க ளாக சுதந்திர நாடாக இருக்கும் திரான்ஸ்திரியாவை இது வரை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. முன்னாள் சோவியத் சின்னங்கள், கொடிகள் மற்றும் லெனின் சிலைகள் என்பனவற்றை இப்போதும் அங்கே பார்க்கலாம். இருப்பினும் அந்த நாட்டை ஆள்வது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. தேசிய முதலாளித்துவ பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு கட்சி (அல்லது தனிநபர்)
சர்வாதிகாரமே அங்கே நிலவுகிறது.

சர்வதேச நாடுகளோ அல்லது நிறுவனங்களோ இத்தகைய புதிய சுதந்திர தேசங்களை அங்கீகரிக்கமறந்து அநாதைகளாக விட்டுவிடும் வேளையில், மறு பக்கத் தில் வேறு சில தேசங்களை அங்கீகரிப்பதில் பின் நிற்கவில்லை. பல தடவைகளில் இந்த இரட்டை வேடம் அம்பலப்படும்போது எழும் சர்ச்சைகளால் இவர்களது நம்பகத்தன்மை, நேர்மை, நன்னடத்தை என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக சுதந்திரம் கோரிப் போராடும் பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்) மக்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் எடுக்காத ஐரோப்பிய ஒன்றியம் யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்த நாடுகளை ஒவ்வொன்றாக அங்கீகரித்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூகோஸ்லேவியா என்ற நாட்டை உருவாக்கிய மேற்கைரோப்பிய நாடுகள், பின்னர் அதைத் துண்டு துண்டாக உடைத்ததற்கு அவர்களது தன்னலம் மட்டுமே காரணம். கம்யூனிச அரசாங்கங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கிழக்கைரோப்பிய நாடுகள் துரித வேகத்தில் மேற்கைரோப்பாவினால் காலனித்துவப்படுத்தப்பட்டது. பெரிய வர்த்தகக் கழகங்கள் புதிய சந்தைகளையும் செலவு குறைந்த மனித வளத்தையும் கண்டுபிடித்தன. முன்பு ஹிட்லர் ஆயுதபலம் கொண்டு அடைய விரும்பியதைத் தற்போது ஐரோப்பிய யூனியன் சமாதான வழியிலேயே பெற்றுக் கொண்டது.

இதன் பின்னணியிலேயே கொசோவாவின் சுதந்திரத்தையும் நோக்க வேண்டும். 17.02.2008 அன்று கொசோவா சுதந்திரமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தை செர்பியா, ரஷ்யா, கிரீஸ், ஸ்பெயின் உட்பட பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. விமானக் குண்டு வீச்சுகளின் உதவியுடன் சேர்பியாவின் கொசொவோ மாகாணத்தைக் கைப்பற்றிய நேட்டோ படையணிகள் அதனைப் பூரண ஐரோப்பிய காலனியாக மாற்றிக் காட்டின. அதேநேரம் அல்பேனிய தேசியவாதிகள் பிற இனங்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்ததை கண்டும் காணாததுபோல் இருந்தன. இதனால் சுதந்திர கொசோவோ, எல்லாவற்றிற்கும் மேற்கைரோப்பிய காலனியவாதிகளில் தங்கியிருக்க வேண்டும்.இது எதிர்காலத்தில் இஸ்ரேல் போன்று ஒரு பிராந்திய ரவுடியை உருவாக்க வழி சமைக்கலாம். இது ஒரு புறமிருக்க கொசோவோ விற்குச் சுதந்திரம் வழங்கியதால் அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா போன்றவற்றின் சுதந்திரத்தைத் தான் அங்கீகரிக்க வேண்டி இருந்தது, என்று ரஷ்யா நியாயம் சொல்லி வந்தது. இது பேரரசுகளின் பூகோள அரசியல் சதுரங்கம்.

வரலாறு நெடுகிலும் தம்மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லரசு பலவீனப்படும் வேளையிலேயே குட்டித் தேசங்கள் விடுதலையடைந்து வந்தன அல்லது இன்னொரு வல்லரசின் பக்கபலத்துடன் தமது சுதந்திரத்தை காப்பாற்றி வந்துள்ளன. இருப்பினும் 20ம் நூற்றாண்டு பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியைக் கண்டது. இதற்குக் காரணம் உலகெங்கும் பரவிய சித்தாந்தப் புரட்சி. ஐரோப்பாவில் தோன்றிய புரட்சித் தீ கண்டங்கள் கடந்து பரவியது. முரண்நகையாக ஐரோப்பியக் காலனியவாதிகளும் அதற்கு உதவியுள்ளனர். அவர்கள்
காலனித்துவப்படுத்திய நாடுகளில் ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அவர்களுக்கு ஐரோப்பியக் கல்வியைப் புகட்டப்போக, அந்தக் கல்வியினூடாக தேசியவாதத்தை அறிந்துகொண்ட உள்ளூர் தலைவர்கள் அதைக் கொண்டே காலனியவாதிகளை விரட்டியடித்தமை வரலாறு. தற்போது அப்படி விடுதலையடைந்த தேசங்களில் வாழும் பிற சிறுபான்மையினங்கள் அதே தேசியவாத சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்துத் தமது உரிமைகளைக் கோருகின்றனர். சக மனிதர்கள் சம உரிமை கோருவது போல இனங்களும் சம அந்தஸ்து கோருவது வியப்பில்லை. அதே நேரம் “ஒன்றுபட்டால் நன்மை எமக்கு; பிரிந்தால் இலாபம் எதிரிக்கு.” என்ற பொன்மொழியை மறுப்பதற்கில்லை. இதயசுத்தியுடன் தேசிய இனப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் அப்பிரச்சினை எழுவதைத் தடுக்கும் ஒரே வழி. சமாதானத்தை பிறருக்கும் வழங்குவதன்மூலம் தான் தானும் சமாதானமாக வாழ முடியும்.

(முற்றும்)

முதலாவது பகுதியை வாசிக்க:தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு

Tuesday, April 21, 2009

தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு


-“தமிழீழத்தைவிட பரப்பளவில் சிறிய நாடுகள்கூட சுதந்திர தேசங்களாக,
ஐ. நா. சபை அங்கத்தவர்களாக உள்ளன”
-“அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 தேசங்கள் உள்ளன”
-“உலகில் பல்வேறு மொழிபேசும் மக்களும
தமக்கெனத் தேசங்களைக் கொண்டுள்ளனர்!”
“பல்வேறு நாடுகளில் வாழும் தமிழருக்கு மட்டும் ஒரு நாடு இல்லை!!”


பலருக்கும் பரிச்சயமான மேற்குறிப்பிட்ட வாசகங்கள் இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலை உருவாக்கிய ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் கோட்பாட்டு விளக்கங்கள். இந்த விளக்கங்களைக் கேட்ட பின்புதான் உலகில் பிற தேசிய இனங்களின்பால் தமிழர் பலரின் கவனம் திரும்புகிறது. இருப்பினும் அவர்களின் பார்வையானது கூட்டணி சட்டத்தரணிகள் வகுத்துக் கொடுத்த சித்தாந்த அடிப்படையைக் கொண்டது. ஆகவே மேற்குறிப்பிட்ட
கூற்றுகள் யாவும் உண்மையா என்பதை ஆராய வேண்டிய தேவையும் எழுகின்றது.

முதலில் தமிழீழத்தை விடச் சிறிய நாடுகளின் சுதந்திரம் எப்படிச் சாத்தியமாகியது என்பதை அறிந்து கொள்ள அவற்றின் வரலாற்றைப் படிப்பது அவசியம். உலகிலேயே மிகச் சிறிய சுதந்திரநாடு வத்திக்கான் நகரம். அதற்கு ஐ. நா. சபையில் பார்வையாளர் அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் விபரம் அறிந்த யாரும் அதை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டார்கள். போப் (அரசர்), கார்டினல்(மந்திரி)களுடன் சென்ற் பீட்டர்ஸ் தேவாலயத்தில்(பாராளுமன்றத்தில்) இருந்துகொண்டு கத்தோலிக்க மதத்தை (அரசியல்) நிர்வகிப்பதை தேசம் என்பதா? வத்திக்கான் நகரத்தின் சுயநிர்ணய அந்தஸ்து ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி. ஒரு காலத்தில் இத்தாலியின் பெரும்பகுதி போப்பரசரால் ஆளப்பட்ட கத்தோலிக்க மதவாத தேசமாக இருந்தது. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் நீடித்த மதத்தின் ஆட்சி 19ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. 1921இல் அன்றைய சர்வாதிகாரி முசோலினியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போது நாம் காணும் வத்திக்கான் என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதி உருவானது.

19ம் நூற்றாண்டு கால ஐரோப்பா பல மாற்றங்களைக் கண்டது. பல்வேறு ஐரோப்பிய மன்னர்களைப் போரில் தோற்கடித்து நெப்போலியன் புதிய பாணி (பாசிசம்?) சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான். நெப்போலியன் வெறும் அதிகார ஆசையில் நாடு பிடிக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சி முன்மொழிந்த லிபரல் சித்தாந்தம் நெப்போலியன் கைப்பற்றிய நாடுகளில் பரப்பப்பட்டது. அந்தப் புரட்சியின் விளைவுகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.
வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்றாலும், அதன் நிமித்தம் சாம்ராஜ்யம் சிறு துண்டுகளாக உடைந்தபோதும், ஆங்காங்கே தோன்றிய புதிய ஆளும் வர்க்கம் (மத்தியதர வர்க்கம்) மீண்டும் மன்னர்களை சிம்மாசனத்தில் அமர்த்தச் சம்மதிக்கவில்லை.
வியன்னாவில் ஒன்றுகூடி ஐரோப்பிய கண்டத்தின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தார்கள். வியன்னா மகாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய எல்லைகள் வரையப்பட்டன.
அப்படித் தோன்றியவைதான் இன்று நாம் காணும் தேசங்கள். புதிய தேசங்களின் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள், மன்னருக்கு விசுவாசமுள்ள முடியாட்சியையோ அல்லது கடவுளுக்கு அடி பணியும் மதவாட்சியையோ பின்பற்ற விரும்பவில்லை. அதற்குப் புதிய
சிந்தனையான பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் ‘தேசியம்’என்ற புதிய சொல் அகராதியில் இடம்பிடித்தது.

ஒரு நாட்டின் தலைவராக மன்னர் இல்லாவிட்டால் அது குடியரசாகிவிடும். அந்தக் குடியரசு ‘தேசிய அரசு’ என அழைக்கப்பட்டது. முடி தரித்த தனிமனிதனுக்கு குடிமை வேலை செய்த மக்கள் ‘தேசம்’ என்ற (பிறந்த) மண்ணிற்கு கடமைப்பட்ட பிரஜைகளா
னார்கள். அவர்களை ஒன்றிணைக்க ஒரு பொது மொழியின் அவசியம் உணரப்பட்டது. இவ்வாறு தோன்றியவைதான்: “ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கான தனித்தனி தேசிய அரசுகள்”. ஐரோப்பாவில் ஒரு காலத்தில் (கத்தோலிக்க) கிறிஸ்தவ மதம் திணிக்கப்பட்டது போல பெரும்பான்மைஇனத்தின் மொழி சிறுபான்மை இனங்களின்மீது திணிக்கப்பட்டது. ஐரோப்பாவின் புதிய தேசிய அரசுகள்எல்லாமே மொழி வேறுபாட்டினால் பிரியவில்லை. வியன்னா ஒப்பந்தத்தின்படிநெதர்லாந்துடன் சேர்ந்திருந்த பெல்ஜியத்திற்கு கத்தோலிக்க மதம் பெரிதாகப்பட்டது. புரட்டஸ்தாந்துக்காரருடன் சேர்ந்திருக்க விரும்பாமல் தனிநாடாக சண்டையிட்டுப் பிரிந்தது. இதற்கிடையே லக்ஸம்பேர்க்கை ஆண்ட குறுநில மன்னனுக்கு மக்களின் ஒத்துழைப்புடன், ஆனால் காலத்திற்கேற்ற மாறுதல்களுடன் முடியாட்சியை நீடிக்கும் எண்ணம் ஏற்பட்டது. தற்போது உலகளாவிய அதிகாரம் பெற்றுவிட்ட தேசிய அரசுகளுக்கு எங்கோ ஒரு மூலையில் குறுநில மன்னர்களின் ஆட்சி தொடர்வது கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கவில்லை.

இவ்வாறே,வேறு சில குறுநிலமன்னர்களும் தனிக்காட்டு ராஜாக்களாக அதிகாரம் செலுத்த
அனுமதி வழங்கப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கும் ஒஸ்திரியாவுக்கும் இடையில் உள்ள லீக்டன்ஸ்ரைன், தெற்கு பிரான்சில் உள்ள மொனோக்கோ, ஸ்பெயினுக்கும் பிரான்சிற்கும் இடையில் இருக்கும் அண்டோரா என்பவை இவ்வாறுதான் தனிநாடுகளாயின. இத்தாலியில் இருக்கும் சென் மரினோ ஏற்கனவே குடியரசாக இருந்ததைக் கண்டு மெச்சிய நெப்போலியன் கொடுத்த உறுதிமொழியினால் அது இன்னமும் தனது சுதந்திரத்தைப் பேணி வருகின்றது. ஐம்பது சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கூட கொண்டிராத இந்தக் குட்டி நாடுகள் யாவும் தமது பொருளாதார, பாதுகாப்பு தேவைகளுக்காக அயல் நாடுகளில் தங்கியுள்ளன. இன்றைய நவீன
உலகில் அயல்நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்காவிட்டால் ஒரு சில நாட்கள் கூட நிலைத்து நிற்க முடியாது என்பதே யதார்த்தம். இதனால் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவற்றை அயலிலுள்ள பெரிய நாடுகளே கவனித்து வருகின்றன. ஒப்பீட்டளவில் அதிக பரப்பளவையும் மக்களையும் கொண்ட லக்ஸம்பேர்க் மட்டும் இதில் விதிவிலக்காக பூரண சுதந்திரத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான நுகர்வுப் பொருட்கள் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், வர்த்தக ஒப்பந்தங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. உலகின் அனைத்துக் குட்டி நாடுகளினதும் நிலைமை இதுதான்.

பசுபிக் சமுத்திரத்திலும் கரீபியன் கடலிலும் உள்ள சிறு தீவுகள் பல சுதந்திர நாடுகளின்
பட்டியலில் இணைகின்றன. முன்பு ஒரு காலத்தில் ஐரோப்பிய காலனிகளாக அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தீவுகள் சுதந்திரம் வழங்கப்பட்டாலும் முன்னாள் காலனிய
எஜமானர்களுக்குப் பணிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளன. உதாரணமாக பசுபிக் சமுத்திரத் தீவு நாடுகளான மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், பலவு போன்றன இரண்டாம் உலகயுத்த காலத்தில், யப்பானாலும் அமெரிக்காவாலும் கைப்பற்றப்பட்டன. யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுடன் பாதுகாப்பு, பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முற்றுமுழுதாக அமெரிக்க நிதியுதவியில் தங்கியிருக்கும் இந்த நாடுகள் சில நேரம் கொடுக்கும் விலை பெரியது. குறைந்தது 50 அணுவாயுத பரிசோதனைகளை அமெரிக்கா மார்ஷல் தீவுகளில் நிகழ்த்தியுள்ளது. அதேபோல் பிரான்சின் கடல்கடந்த பிரதேசமாகக் கருதப்படும் பொலினேசிய தீவில்தான் பிரான்ஸ் தனது அணுவாயுதப் பரிசோதனை நடத்தியது.

நவ்று தீவு அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ஆட்சி நடத்தும் இன்னொரு குட்டி தேசம். தற்போது அந்த நன்றிக்கடனாக அவுஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளுக்கான சிறைச்சாலையைப் பராமரிக்கும் புதிய வேலை கிடைத்துள்ளது. சில நேரங்களில் குட்டித்
தீவுகளின் ‘சுதந்திரம்’ அந்நிய தலையீட்டினால் ‘காப்பாற்ற’ப்படுகின்றது. பிஜி தீவில் சுதேசி இன இராணுவ வீரர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவுஸ்திரேலியா படைகளை அனுப்பி ‘ஜனநாயகத்தை மீட்டது’ பலருக்கு ஞாபகமிருக்கலாம். கரீபியன் தீவு நாடுகளும், தமது காலனியத் தொடர்புகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முடியாத நிலையிலுள்ளனர். கிரிக்கட் பிரியர்களுக்குப் பரிச்சயமான மேற்கிந்திய தீவுகள் - இந்த சுதந்திர நாடுகளுக்கு
வழங்கப்பட்ட பொதுப் பெயர். டொமினிக்கா, சென் கிட்ஸ்-நெவிஸ், சென் லூசியா, அன்டிகுவா-பார்புடா, கிரெனாடா போன்ற தீவு நாடுகள் தமக்குள் கரிபியன்
பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கி, கரிபியன் டொலர் என்ற பொது நாணயத்தைப் பயன்படுத்துகின்றன. முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளான இவை எலிசபெத் மகாராணியை தமது தலைவியாக ஏற்றுக்கொண்டே சுதந்திரம் பெற்றன. இவையும் தமது
பொருளாதார, பாதுகாப்புத் தேவைகளுக்காக முன்னாள் காலனியவாதிகளில் தங்கியிருக்க
வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.

இதுகாலவரையில் கிரெனாடா மட்டுமே சுயாதீனமான அரசியல் செய்யத் துணிந்த நாடு. இறுதியில் அதற்குக் கொடுத்த விலை,அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்பு. 1974இல்
நவகாலனிய பொம்மை அரசுக்கு எதிராக, மொரிஸ் பிஷப் தலைமையில் ஆயுதமேந்திய புரட்சி வெற்றி பெற்றது. ஒரு மார்க்ஸிஸ்டான மொரிஸ் பிஷப் நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு செல்வதற்காக கியூபாவின் உதவியை நாடினார். கியூபாவும் தனது ஆசிரியர்கள், வைத்தியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் போன்றவர்களை அனுப்பி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில் குறிப்பிடத்தக்கதாக புதிய விமான நிலையக் கட்டுமானப் பணி அமைந்திருந்தது. அந்த விமான நிலையத்தில் சோவியத் போர் விமானங்கள் வந்திறங்கவிருப்பதாக சி. ஐ.ஏ. கொடுத்த தவறான தகவலை நம்பி அன்றைய ஜனாதிபதி றீகன் அமெரிக்கப் படைகளை அனுப்பினார். பிறகென்ன கிரெனாடா தீவை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமிக்க கம்யூனிசம் முடிவுற்றது, சுபம்.

முன்னாள் காலனிய எஜமானர்கள், தாம் சுதந்திரம் கொடுத்த நாடுகள், ‘பொதுநலவாய அமைப்பு’ என்ற பெயரிலாவது தம்முடன் நல்லுறவு பேணவேண்டும் என்று விரும்புகின்றன. அதற்காகப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா
போன்ற 19ம் நூற்றாண்டு காலனிய சக்திகளே இன்று வரை தமது பிடியை விடாமல் வைத்திருக்கின்றன. இதற்கு மாறாக முன்னாள் போர்த்துக்கீசிய, ஸ்பானிய காலனிகள் நவீன உலகின் ஆதிக்க சக்திகளுக்குப் பணிந்துபோக வேண்டிய நிலையில் உள்ளன. இதற்கு
கிழக்குத் திமோர் ஒரு சிறந்த உதாரணம். இந்தோனேசியாவின் அருகில் இருக்கும் முன்னாள் போர்த்துக்கீசிய காலனியான கிழக்குத் திமோர் தனது சுதந்திரத்தை ஒரு வருடம்கூடக் காப்பாற்ற முடியாமல் இந்தோனேசியாவிடம் தன்னை இழந்தது. பல தசாப்தங்களிற்குப் பின்னர், அங்கேயுள்ள எண்ணை வளங்களைக் குறி வைத்து அவுஸ்திரேலியா தலைமை
யிலான பன்னாட்டுப் படைகள் விடுதலை பெற்றுக் கொடுத்தன. புதிய சுதந்திரநாடாக ஐ. நா. சபை அங்கத்துவம்பெற்ற கிழக்குத் திமோர் அதனது காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே சர்வதேச அங்கீகாரம் பெற்றது. ஏனெனில் கிழக்குத் திமோரில் வாழும் பல்வேறு மொழி பேசும் அதே இனங்கள் மேற்குத் திமோரிலும் இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஒரு
பகுதியான மேற்குத் திமோர் குறித்து யாரும் இதுவரை கவலைப்படவில்லை.

இதுபோன்றே காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகக் கருதப்படும் இன்னொரு நாடு ஏற்கனவே பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டபோதும் நீண்ட ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னும் ஐ.நா. சபை சுதந்திரம் பெற்றுத் தருவதாக வாக்களித்த போதும்.... இன்ன பிறவெல்லாம் இருந்தும் இன்றுவரை மொரோக்காவால் ஆளப்படும் மேற்கு சஹாரா மாநிலம்
யாருடைய கவனத்தையும் பெறவில்லை. மொரோக்கோ பிரெஞ்சுக் காலனியாக இருந்தபோதிலும் அதன் தென் பகுதி மாநிலமான மேற்கு சஹாரா ஸ்பானியக் காலனி
யாக இருந்தது. சுதந்திரமடைந்த மொரோக்கோ, மேற்கு சஹாரா காலனிய காலத்திற்கு முன்னர் தனது ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த வரலாற்றைக் காரணம் காட்டிச் சொந்தம் கொண்டாடியது. அது போன்றே மொரிட்டானியாவும் தன் பங்கைக் கோரியது.
1975ம் ஆண்டு ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் பின்னர் ஸ்பெயின் மேற்கு சஹாராவை விட்டு வெளியேறிய கையோடு, மூன்றில் இரண்டு பங்கு பகுதியை மொரோக்கோ ஆக்கிரமித்து அதனைத் தனது மாகாணமாக்கியது. மிகுதிப் பகுதி மொரிட்டானியாவால் ஆக்கிரமிக்கப் பட்டது. இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகி விட்டதால் தீர்த்து வைப்பதற்காக ஐ.நா. சபை தலையிட்டபோதிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே ‘பொலிசாரியோ’ என்ற இயக்கம் மேற்கு சஹாரா விடுதலைக்கான ஆயுதப்
போராட்டத்தை ஆரம்பித்தது. அல்ஜீரியா தனது நாட்டில் முகாம்களை அமைத்துக் கொள்ள இடம் கொடுத்தது. மொரோக்கோ பதிலடியாக இராணுவ காட்டாட்சியை ஏவிவிட்டது. மேற்கு சஹாரா மக்கள் இராணுவ காவலரண்களைக் கொண்ட வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன்மூலம் அல்ஜீரிய எல்லையில் இருந்து ஊடுருவித் தாக்கும் ‘பொலிசாரியோ’ கெரில்லாக்களின் இராணுவ நடவடிக்கைகள் கணிசமானளவு குறைக்கப்பட்டன. இன, மொழி, கலாச்சார ரீதியாக மேற்கு சஹாரா மக்களுக்கும் அயலவரான மொரோக்கோ, மொரிட்டானிய மக்களுக்கும் இடையில் அதிக
வேறுபாடு கிடையாது. ஒரேயொரு முக்கிய வேறுபாடு‘காலனிய மனோபாவம்’. ஸ்பானிய காலனிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் மேற்கு சஹாரா மக்கள் அதன் மூலம்
தம்மை அயலவரிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர்.

எரித்திரியர்களும் அதுபோன்று காலனியத் தொடர்ச்சியாக தனிநாடு கோரியவர்கள்தான். ஆபி
ரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியரால் காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. ஆனால் அதன் கடற்கரையோரப் பகுதியான எரித்திரியா நீண்டகாலம் இத்தாலியின் காலனியாக இருந்தது. இத்தாலி விட்டுச் சென்ற பின்னர்
எத்தியோப்பியாவினால் இணைக்கப்பட்டது. அங்கு வாழும் திக்ரிஞா, திக்ரே, அஃபார் மொழிகள் பேசும் மக்கள் எத்தியோப்பாவிலும் வாழ்கின்றனர். எத்தியோப்பிய சக்கரவர்த்தி ஹைலெ செலாசிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் 30 ஆண்டு
கள் நீடித்தது. பிற்காலத்தில் மெங்கிஸ்டு தலைமையில் ஏற்பட்ட கம்யூனிச அரசாங்கம், பிரிவினைவாதிகளுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் போரிட்டும் வெல்ல முடியவில்லை. எரித்திரிய விடுதலை இயக்கமான ஈ. பி. எல். எவ். எண்பதுகளின் இறுதிப்பகுதியில்
எதிரிப்படைகளை அழித்து எரித்திரியாவை விடுதலை செய்தது. அஸ்மாரா விமானப்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 போர் விமானங்களை அழித்தமை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எத்தியோப்பியாவில் இருந்த
பிற விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து போராடியமை, மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் என்பன கைகூடி வரப்பெற்றதால் 1991இல் எரித்திரியாவின் பூரண விடுதலை சாத்தியமாகியது.

புதிய எத்தியோப்பிய அரசாங்கம் ஐ. நா. தலைமையிலான வாக்கெடுப்புக்குச் சம்மதிக்க எரித்திரிய சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஒரு தேசத்தில் பல்வேறு சக்திகள் போராடிக்கொண்டிருக்கும் குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி, தனது பிரதேசத்தை மட்டும் பிரித்து சுதந்திர தேசமாக அறிவித்துக் கொண்ட உதாரணங்கள் வரலாற்றில் பலவுண்டு. நீண்ட காலம் அரசாங்கம் அமைக்க முடியாமல் அராஜகம் கோலோச்சிய சோமா
லியாவில் இருந்து உதயமாகியது ‘சோமாலிலாண்ட்’என்கிற புதிய நாடு. அதுகூட பழைய காலனிய எல்லைகளைக் கொண்டு அமைக்கப்பட்டமை தற்செயலானதாக இருக்கலாம். முன்பு சோமாலியா மூன்று ஐரோப்பிய காலனியவாதிகளால் பங்கிடப்பட்டிருந்தது. இன்று
சுதந்திர தனித்தேசமான ஜிபூத்தி பிரான்சினாலும்,இந்துசமுத்திரப் பிரதேசமான சோமாலியா இத்தாலியினாலும், செங்கடல் பகுதி சோமாலிலாண்ட் பிரித்தானியாவினாலும் ஆளப்பட்டன.

1991இல் சோமாலிய சர்வாதிகாரி சியாட் பரேயின் வீழ்ச்சிக் காலகட்டத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்த சோமாலிலாண்ட், பிரிவினைக்கான போரில் பத்தாயிரம் மக்களையாவது பலி கொடுத்தது. இன்றுவரை சோமாலிலாண்டில் நிலையான ஆட்சி அமைந்ததற்கு அப்பிரதேச மக்களது ஒற்றுமை முக்கிய காரணம், சோமாலியாவின் பிற பகுதிகளில் பல்வேறு சாதீய இயக்கங்களின் ஆயுதபாணிகள் அதிகாரப் போட்டியில் சண்டை
யிட்டதுபோல சோமாலிலாண்டில் நடக்கவில்லை. 16 வருடங்களைக் கடந்தபோதும் சோமாலிலாண்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் பிற பிரிவுவாத அமைப்புக்களை ஊக்கப்படுத்தலாம் என ஆபிரிக்க ஒன்றியம்
கருதுவதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பின் நிற்கின்றன. அண்மையில் புஷ் நிர்வாகம் குறைந்தளவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சோமாலிலாண்டை அங்கீகரிக்கும் சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. அதற்குக் காரணம் வேறு. அல்கைதா சோமா
லிலாண்டைத் தனது புகலிடமாக மாற்றிவிடலாம் என்ற அச்சமும் அதனை முன்கூட்டியே தடுக்க நினைக்கும் சமயோசிதமும்தான் முக்கிய காரணம்.

சர்வதேச நாடுகளின், நிறுவனங்களின் அங்கீகாரம் இருந்தாலும் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்வது 50 வருடங்களுக்கு மேலாகியும் பாலஸ்தீனர்களால் முடியாத காரியமாக உள்ளது. பாலஸ்தீனம் என்ற தேசத்தை இதுவரை 108 நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதேநேரம் இஸ்ரேலை 34 நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 1948இலேயே அந்தப் பிரதேசத்தில்
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை முன் மொழிந்ததன்மூலம் ஐ. நா. சபைகூட பாலஸ்தீனியர்களுக்கு உதவக் கடமைப்பட்டுள்ளது. இருப்பினும் யதார்த்த நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை இங்கே கூறத் தேவையில்லை. மத்திய கிழக்கில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஓட்டோமான் துருக்கியர்கள் பலவீனப்பட்ட காலத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொண்டன. இந்த ஐரோப்பிய
பரோபகாரிகள் முதலில் அரேபியருக்கு உதவி செய்ய வந்ததாகக் கூறினர். துருக்கியருக்கெதிராகப் போராட ஆயுதங்கள் வழங்கினர்.போரில் துருக்கி தோற்கடிக்
கப்பட்ட பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த அரேபியரை ஓரம் கட்டிவிட்டு பிரித்தானியாவும் பிரான்சும் மத்திய கிழக்கு முழுவதையும் தமது காலனியாக்கிக் கொண்டன. தாம் விரும்பியபடி தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரித்துக் கொண்டன.
காலனியாதிக்கம் முடிந்த காலத்தில் இந்த அலகுகள் தனித்தனி நாடுகளாக சுதந்திரம் பெற்றன.

இவ்வாறு தான் அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 நாடுகள் கிடைத்தன. இவை அந்த மக்கள் விரும்பிக் கேட்டதல்ல. காலனிய எஜமானர்கள் அந்நாடுகளைத் தமது சொந்தக் காணிநிலம் போன்று நடத்தினர். அல்ஜீரியாவைத் தனது மாகாணம் என்று உரிமை கோரிய
பிரான்ஸ், சிரியாவில் இருந்து லெபனானைப் பிரித்தது. தன்னுடன் ஒத்துழைத்த அரபுத் தலைவர்களை மன்னர்களாக்குவதற்காக ஜோர்தான், ஈராக் என்ற புதிய தேசங்களை உருவாக்கியது பிரித்தானியா. அதிலும் எண்ணை வளம் மிக்க குவைத் ஈராக்கில்
இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதேபோன்றே வளைகுடா எண்ணையை மட்டும் கருத்தில் கொண்டு பாஹ்ரைன், கட்டார், எமிரேட்கள் போன்ற அளவிற்சிறிய நாடுகள் உருவாக்கப்பட்டன.

பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனி என்று அழைக்கப்படும் சைப்பிரஸ் இன்று இனப்பிரச்சினையால் இரண்டு துண்டுகளாகியுள்ளது. 1983இல் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு , துருக்கியைத் தவிர
வேறெந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய தரைக் கடலில் இருக்கும் சைப்பிரஸ் தீவில் 78வீதம் கிரேக்கர்களும் 18வீதம் துருக்கியரும் வாழ்ந்து வந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற கிறீசுடன் சைப்பிரஸ் கிரேக்கர்கள் இணைய
விரும்பினர். அதற்கு ஆங்கிலேயர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் கிரேக்கத் தேசியவாதிகள் பிரிட்டிஷ் காலனியாட்சிக்கெதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரித்தாளும் சூட்சியில் வல்லவர்களான ஆங்கிலேயர்கள் துருக்கியரை பொலிஸ் படையில் சேர்த்தனர். இதனால் கிரேக்க கிளர்ச்சியாளர்களால் துருக்கிய பொலிஸார் கொல்லப்படும்
போதெல்லாம் இனக்கலவரம் மூண்டது. சைப்பிரஸ் சுதந்திரம் பெற்ற பின்பும் ஏதோ ஒரு காரணத்தைச் சாக்காக வைத்து கலவரம் வெடிப்பது. அடிக்கடி நடந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னரான கிரேக்கப் பெரும்பான்மை அரசாங்கம் துருக்கிய சிறுபான்மைக்கு
வாக்களித்தபடி அதிகாரப் பரவலாக்கல் செய்யாததைக் காரணம் காட்டி மிதவாதத் தலைவர்கள் பதவி விலக, ஆயுதபாணி தீவிரவாதிகள் துருக்கியிடம் போர்ப் பயிற்சியையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டதானது நிலைமை மோசமடைவதைக் காட்டியது. இராணுவ மோதல்கள் தீவிரமடையவும் புதிதாகப் பொறுப்பேற்ற அரசாங்கம் கிறீசுடன் சேரும்
நோக்கத்தை மீண்டும் பகிரங்கப்படுத்தவும் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு துருக்கி இராணுவம் படையெடுத்தது. இன்றுவரை வடக்கு சைப்பிரஸில் துருக்கி இராணுவம் நிலைகொண்டுள்ளது. தற்போது சைப்பிரஸ் ஐரோப்பிய யூனியனில் இணைந்து
கொண்டதால் இரு இனங்களும் ஒன்றுபடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

(தொடரும்)

இரண்டாவது பகுதி: "அநாதை தேசங்கள்"

இந்தக் கட்டுரை "உயிர் நிழல்"(Oct.-Dec. 2007) இதழில் பிரசுரமாகியது.

"இறுதித் தீர்மானம்" - குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்

கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட "Final solution", மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து நகர்ந்திட முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகளின் முகத்தையும், வேர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த ஆவணப்படம். 2002 குஜராத் வன்முறைகளையும், அதன் பின்னணியில் உருவேற்றிய 'வெறுப்பின் அரசியலால்' விளைந்த வெற்றியையும் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தில் ஆராய்கிறது. ஆனந்த் பட்வர்த்தனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகேஷ் சர்மா இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். பா.ஜ.க மத்தியில் ஆட்சி புரிந்து வந்த சமயத்தில் வெளிவந்த இந்தப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுக்கவில்லை. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டது.


Final Solution - Massacres in India

Monday, April 20, 2009

ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 3
ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்களில் சில, ஆப்பிரிக்காவில் இருந்தன!

நான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தில், ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களைப் போல உருவத்தோற்றமுடைய சிற்பங்கள் சில இருந்ததை கண்டேன். எனக்கு அதை விட ஆச்சரியமளித்த விடயம், ஐரோப்பிய சரித்திர பாடநூல்கள் எதுவும் கிரேக்கம் ஆப்பிரிக்காவுடன் கொண்டிருந்த தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருக்காதது. அது சரி, அனைத்து ஐரோப்பியர்களும் தமது "நாகரீகத்தின் தொட்டில்" என்று பெருமைப்படும் கிரேக்கத்தில், ஆப்பிரிக்க நாகரீகத்தின் செல்வாக்கு இருந்தது என்ற உண்மை, இலகுவில் ஜீரணிக்கக் கூடியதா?

அன்றைய உலகம் வேறுவிதமாக இருந்தது. பண்டைய நாகரிக கால மக்களுக்கு கருப்பு/வெள்ளை நிற வேறுபாடு கண்ணுக்கு புலப்படவில்லை. யாருமே தோல் நிறத்தை ஒரு விடயமாக கருதவில்லை. இதனால், அன்றைக்கு இருந்தது "வெள்ளையின நாகரீகமா", அல்லது "கறுப்பின நாகரீகமா" என்று வேறுபடுத்திப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல. எகிப்தில் இருந்த பரோவா மன்னர்கள் இராச்சியம், செந்நிற மேனியரைக் கொண்டிருந்தது, என இன்றைக்கும் சில சரித்திர/அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே காலட்டத்தில், தெற்கே குஷ் இராசதானியை (இன்று சூடான்) சேர்ந்த கருநிறமேனியரான நுபியர்கள், அவ்வப்போது எகிப்திய ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த உண்மைகள் தற்போது வெளிவருகின்றன. அன்றைக்கிருந்த எகிப்தை இந்தியாவிற்கு ஒப்பிடலாம். ஒரே குடும்பம், பல நிற மேனியரைக் கொண்ட உறுப்பினரைக் கொண்டிருப்பது சகஜமானது. இன்றும் கூட பண்டைய எகித்திய ஓவியங்களில், கருநிற மேனியரின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை காணலாம்.

நுபியர்களின் குஷ் இராச்சியம், எகிப்தின் தங்கச் சுரங்கம் எனக் கூறினால் மிகையாகாது. நுபிய சுரங்கங்கள் வருடமொன்றிற்கு நாற்பதாயிரம் கிலோகிராம்(இன்றைய மதிப்பில்) தங்கத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கறுப்பின நுபியர்கள், எகிப்திய மத, மொழி, கலாச்சார அடையாளங்களை பின்பற்றினர். சூடான் முதல் சிரிய எல்லை வரை நுபியர்கள் ஆட்சி செய்த காலம் ஒன்றுண்டு. எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடவுட்கோட்பாடான அமோன் (கிறிஸ்தவர்கள் இதனை "அமென்" என்று இன்றும் நினைவுகூருகின்றனர்) என்ற சூரிய தேவன் வழிபாட்டையும் அறிந்து வைத்திருந்தனர். நான் எகிப்தில், லுக்ஸொர் நகரில் உள்ள கார்னாக் ஆலயத்திற்கு சென்றிருந்த போது, எகிப்தியரின் வழிபாட்டு முறை இந்துக் கோயில்களை ஓரளவு ஒத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்துக் கோயில்களில் இருப்பதைப் போல மூலஸ்தானம், தூண்கள் மட்டுமல்ல, சாமி சிலைகளை குளிப்பாட்டும் தீர்த்தக்கேணி எல்லாம் அப்படியே இருந்தன. அந்தக் காலத்தில் மன்னர் அல்லது பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் போக அனுமதி இருந்தது. உழைக்கும் மக்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான், சாமி கும்பிட முடியும். உண்மையில் பண்டைய காலத்தில் நிலவிய வர்க்கப்பிரிவினை தான், பின்னர் இந்திய சமுதாயத்திலும் சாதிப்பிரிவினையாக தொடர்ந்திருக்க வேண்டும். இந்திய, ஆப்பிரிக்க சமூகங்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமை இதைப்போல நிறைய உள்ளன.

பிற்காலத்தில் அந்நியரின் படையெடுப்புகள் காரணமாக, எகித்திய, நுபிய நாகரீகங்கள் அழிந்து போனாலும், அதற்குப் பிறகு தோன்றிய "சூடானிய நாகரீகம்", கிழக்கே செங்கடல் முதல் மேற்கே அட்லாண்டிக் சமுத்திரம் வரை பரவி இருந்தது. இந்த நாகரீகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், அப்போது நிலப்பிரபுத்துவ முறை நிலவவில்லை. மாறாக இன்று எமக்கெல்லாம் பரிச்சயமான அரச கரும ஊழியர்களைக் கொண்ட அதிகார வர்க்கம் இருந்தது. கடவுளுக்கு அடுத்த சர்வவல்லமை பெற்ற மன்னன், இந்த அரச ஊழியர்களை நியமிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அல்லது பதவி உயர்வு கொடுக்கவோ முடியும். அதனால் குறிப்பிட்ட எந்த குடும்பமும் அதிகாரத்தை பரம்பரையாக பின்பற்ற முடியாது. நல்லது, மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல "பல கட்சி ஜனநாயகம்" (இது ஐரோப்பாவிலேயே 19 ம் நூற்றாண்டில் தான் வந்தது) அப்போது ஆப்பிரிக்காவில் இருக்கவில்லைத் தான். ஆனால் ஒரு கிராமத்தின் தலைவனைக் கூட மக்கள் தெரிவு செய்யும் நேரடி ஜனநாயகம் நிலவியது. இதைத்தான் கடாபி, அவ்வப்போது மேற்குலகிற்கு எடுத்துக் காட்டுவது வழக்கம். "ஆப்பிரிக்கர்களான நாங்கள் ஜனநாயக பாரம்பரியத்தில் வந்தவர்கள். எமக்கு புதிதாக பாடம் நடத்த தேவையில்லை."

கி.பி. ஏழாம் அல்லது பத்தாம் நூற்றாண்டளவில், எகிப்து வழியாக கிறிஸ்தவ மதம் எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. எத்தியோப்பியாவில் "அக்சும்" என்ற கிறிஸ்தவ சாம்ராஜ்யம் தோன்றியிருந்தது. செங்கடலை தாண்டி யேமனை ஆக்கிரமிக்குமளவு இராணுவ பலம் பெற்று விளங்கியது. (யேமன் நாட்டில் கூட ஆப்பிரிக்க செல்வாக்கு இருந்துள்ளது. பைபிளில் வரும் புத்திசாதுர்யம் மிக்க யேமன் அரசி ஷீபா, யேமனை சேர்ந்த கறுப்பின அழகி.) அக்சும் நாட்டில் சாப்பாட்டுத்தட்டுகள் கூட தங்கத்தில் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருந்தமை, அதன் செல்வச் செழிப்பிற்கு சாட்சி. எத்தியோப்பியாவில் யூத மதமும் பரவி இருந்தது. அதனால் சடங்குகள் சில கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. உதாரணமாக, யூதர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்துகொள்ளும் வழக்கம், அந் நாட்டில் இப்போதும் நடைமுறையில் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அரேபிய-முஸ்லீம் படையெடுப்புகளால், ஆப்பிரிக்காவின் வட பகுதி முழுவதும் இஸ்லாம் பரவிய காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளையும் எத்தியோப்பியா வெற்றிகரமாக எதிர்த்து நின்று, தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டது. ஆமாம், பீரங்கிகளோடு படையெடுத்த ஐரோப்பியர்களை, புராதன கால ஆயுதங்களோடு எதிர்த்து போரிட்டு, ஆப்பிரிக்காவில் காலனிப் படுத்தப்படாத ஒரேயொரு நாடு என்ற பெருமையைப் பெற்றது எத்தியோப்பியா.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகத்தின் தொட்டில் கிரேக்கம் என்று கூறுவது போல, ஆப்பிரிக்கர்களுக்கு அவர்களது நாகரீகத்தின் தொட்டில், எத்தியோப்பியா. அதனால் தான் எத்தியோப்பியாவின் பண்டைய மூவர்ணக்கொடியை, "அகில ஆப்பிரிக்க ஒன்றியக்" கொடியாக, பல நாடுகளால் சுவீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் ஐரோப்பியக் கண்டத்தில், தனது ஆரம்பக்காலத்தில் இத்தாலியிலும், கிரேக்கத்திலும் கூட பரவுவதற்கு பெரும் சிரமம் எடுத்துக்கொண்டிருந்த காலங்களில்; எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக ஏற்கனவே மாறிவிட்டிருந்தது. அது மட்டுமல்ல, பிற ஐரோப்பிய பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நடைபெற்ற போர்களில், எத்தியோப்பியாவை சேர்ந்த கருப்பு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

அதே காலகட்டத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய மதம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. மொரோக்கொவை சேர்ந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி ஸ்பெயின், பிரான்ஸ் மீது படையெடுத்த போது, அந்தப் படையிலும் கறுப்பின வீரர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அந்தக் காலத்தில் உலகம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரு வேறு மதங்களைச் சேர்ந்த முகாம்களாக பிரிந்து நின்றது. ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தான் முக்கியமாக பார்க்கப் பட்டதே தவிர, தோலின் நிறம் கருப்பா, சிவப்பா என்று யாரும் அக்கறைப்படவில்லை. அன்று "ஐரோப்பாவில் நிலவிய அடிமை முறை சமுதாயம் ஒழிந்து, நிலப்புரபுத்துவ சமுதாயம் உருவான வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை கிறிஸ்தவ மதம் ஏற்றிருந்ததை" கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுள்ளார். அந்த இடத்தில் இஸ்லாமையும் குறிப்பிடலாம். அன்று தனித்தனி இனக்குழுக்களாக (ரோமர்/கிரேக்கர் பார்வையில் காட்டுமிராண்டி சமூகமாக) இருந்த ஐரோப்பியரை (ஒரு உலக மதத்தின் கீழ்) நாகரீகப்படுத்தும் முக்கியமான வரலாற்றுப்பணியை ஆப்பிரிக்கர்கள் ஏற்றிருந்தனர்! அதாவது வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு மாறாக, ஆப்பிரிக்கர்கள் தான் இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தார்கள்!!

ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர், ஆப்பிரிக்கர்கள் இராச்சியங்கள் இல்லாத இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்ததாக மாபெரும் வரலாற்றுப் புரட்டு பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. உலகின் எந்தவொரு பகுதியும் ஒரே காலத்தில் வளர்ச்சியடைவதில்லை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எங்கேயும் இருந்து வரும். ஐரோப்பியர்கள் காலனிப்படுத்த தொடங்கிய, மேற்கு ஆப்பிரிக்காவின் கினிய கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், புராதன இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்த உண்மையை மறுக்க முடியாது. ஆனால் அதேநேரம் தெற்கே இருந்த கொங்கோ சாம்ராஜ்யம் பற்றி, 16 ம் நூற்றாண்டில் ஒரு போத்துக்கேய மாலுமி குறிப்பெழுதி வைத்துள்ளார். "மக்கள் பட்டாலான ஆடைகளை உடுத்தியிருந்ததாகவும், இருபாலாரும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும்" அந்த குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. வடக்கே இருந்த கானா சாம்ராஜ்யம் மிகப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்ததாக அரேபிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர். அந்தக்காலத்திலேயே கானா தங்கம் விளையும் நாடாக, அரேபியரால் அறியப்பட்டது. கானா சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில், மாலியில் புதியதொரு சாம்ராஜ்யம் தோன்றியது. அதன் தலைநகரமான திம்புக்டு பிரதான வர்த்தக மையமாக புகழ் பெற்று விளங்கியது. 1324 ம் ஆண்டளவில், மாலி நாட்டு அரசன் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டு, எகிப்து வந்து சேர்ந்திருந்த போது, மூன்று வருடங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்திருந்ததாக எகிப்திய சரித்திர ஆசரியர் இபுன் கல்டூன் எழுதிவைத்துள்ளார். மாலி அரசனுடன் கூட வந்த 300 அடிமைகள், ஆளுக்கு ஒரு கிலோ அளவிலேனும் தங்கம் கொண்டு வந்ததைப் பார்த்து, அந் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பானது, என்று அரேபியர்கள் வியந்துள்ளனர்.

பண்டைய ஆப்பிரிக்கா செல்வத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாலி நாட்டில், திம்புக்டு நகரில் இப்போதும் நிலைத்து நிற்கும், சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட, பல்கலைக்கழகமும், நூலகமும் அதற்கு சாட்சி. பிற்காலத்தில் மொரோக்கோவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்கிரமித்த மூர்கள், நூலகத்தை எரியூட்டி, அங்கேயிருந்த நூல்களை கொள்ளையடித்து சென்றனர். இப்போதும் அங்கே கொள்ளையடிக்கப்பட்ட நூல்கள் சில மொரோக்கோவில் உள்ளன. ஆப்பிரிக்கர்களின் கல்விச்செல்வங்கள், எகிப்தில், அலெக்சாண்டிரியா நகர நூலகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன், உலகில் இருந்த மாபெரும் நூலகம் அது. அங்கிருந்த நூல்கள் பாபிருஸ் (இதிலிருந்து "பேப்பர்" வந்தது) தாவரத்தில் இருந்து தயாரித்த தாள்களில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்கத்திலிருந்து சோக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் கூட அந்த நூலகத்தை பயன்படுத்தி இருக்க சாத்தியமுண்டு. அத்தகைய பிரசித்தி வாய்ந்த நூலகத்தை, கிளியோபாட்ரா(பூர்வீகம்:கிரேக்கம்) காலத்தில் ஆட்சி செய்த ரோமர்கள் "தற்செயலாக" எரித்து விட்டனர். அங்கிருந்த கிடைத்தற்கரிய நூல்கள் யாவும் எரிந்து சாம்பராகின.

மனித குலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, குறிப்பிட்ட ஒரு இனம் உரிமை கோருவது அயோக்கியத்தனமானது. ஆப்பிரிக்காவில் எகிப்தில் இருந்து கிரேக்கர்கள் கற்றுக்கொண்ட கணித, விஞ்ஞான கோட்பாடுகள் பல அன்றைய ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்டகாலத்திற்கு பிறகு, அரேபியரால் மேம்படுத்தப்பட்ட அதே கோட்பாடுகளை, ஐரோப்பியர்கள் தாமதமாக அறிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் ஐரோப்பியர்கள் தாமே கண்டுபிடித்தது போல, பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அது உண்மையென்று நம்பும் ஆப்பிரிக்கர்களும் இருப்பது வேதனைக்குரியது. அங்கே மட்டுமல்ல, ஆசியாவிலும் இது தான் நடந்தது. உலகம் முழுவதும் திருடியதை, தனது சொத்தென்று உரிமை பாராட்டுவது, அதையே விற்பனைச் சரக்காக்குவது, இவற்றில் எல்லாம் ஐரோப்பியர்கள் வல்லவர்கள். அதில் மட்டுமல்ல, இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளை கண்டுபிடித்து, அதை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள் தான். இரத்தம் சிந்தும், இன்றைய இன/மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

-- (தொடரும்) --

Sunday, April 19, 2009

அமெரிக்காவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது [வீடியோ]

"மீள முடியாத கடனுக்குள் மூழ்கியிருக்கும் அமெரிக்காவால் வெளி நாடுகளில் இருக்கும் இராணுவ தளங்களை தொடர்ந்தும் பராமரிக்க இயலுமா?"
சோவியத் யூனியனைப் போல ஐக்கிய அமெரிக்க குடியரசின் வீழ்ச்சிக் காலம் நெருங்கி விட்டதாக கூறுகிறார், எழுத்தாளரும் பதிவருமான Dmitry Orlov
அவருடனான நேர்காணலை Russia Today தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

America must work on starting a new economy and not restarting the old one or it will resemble the former Soviet Union, says author and blogger Dmitry Orlov.

'The collapse of America is unavoidable'

இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது

கடந்த வருடம், உலகில் இதற்கு முன்னர் நடைபெறாத அதிசயம் ஒன்று நடந்தது. இத்தாலி தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பிற்கு நஷ்டஈடாக, லிபியாவிற்கு 5 பில்லியன் டாலர் வழங்கியது. லிபிய மாணவர்களுக்கு இத்தாலியில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் கூடவே அறிவித்தது. அகமகிழ்ந்த லிபிய தலைவர் கடாபியும் ஓகஸ்ட் 30 ம் திகதியை, இத்தாலி-லிபிய நட்புறவு நாளாக அறிவித்தார். இத்தாலி லிபியாவை முதலாம் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆக்கிரமித்து பல அழிவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, முன்னாள் ஐரோப்பிய காலனியாதிக்க நாடான இத்தாலி, மனம்திருந்தி விட்டதாக தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. இத்தாலி அதே காலகட்டத்தில், எத்தியோப்பியாவையும், சோமாலியாவின் பகுதியையும் அடிமைப் படுத்தி வைத்திருந்தது. ஆனால் இந்த நாடுகளுக்கு ஒரு சதமேனும் நட்ட ஈடு வழங்கவில்லை. கடாபியின் இராஜதந்திரம், லிபியாவின் எண்ணை வளம் இவையெல்லாம் இத்தாலியை நட்டஈடு வழங்க நிர்ப்பந்தித்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையெல்லாம் விட, இத்தாலிக்கு இன்று தலையிடியாக இருக்கும் பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்காகத் தான், நட்டஈடு நாடகமாடியது.

இத்தாலி ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடு, ஐரோப்பாக் கண்டத்தின் தெற்குப்பகுதியில், மத்திய தரைக்கடலில் அதன் அமைவிடம் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து இலகுவாக வரக்கூடியதாக உள்ளது. இதனால் சில நூறு கடல்மைல் தூரத்தில் உள்ள, ஆப்பிரிக்க கண்ட நாடான லிபியாவில் இருந்து, பெருமளவு அகதிகள் வள்ளங்கள் மூலம் இத்தாலிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் வந்து குவிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், கணிசமான அளவு பாகிஸ்தானிய, இலங்கை அகதிகளும் வருகின்றனர்.
தொன்னூறுகளில் லிபியா மீதான சர்வதேச பொருளாதாரத் தடை காரணமாக, கடாபி ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார். இதனால் ஆப்பிரிக்க பகுதி எல்லைகள் தளர்த்தப்பட்டதால், ஒரு தொகை ஆப்பிரிக்கர்கள் தனிநபர் வருமானம் அதிகமாகவுள்ள லிபியாக்கு வேலை தேடி வந்தனர். பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பா செல்வதற்கு இடைத்தங்கல் நாடாக பயன்படுத்தினர். இதனால் 5 மில்லியன் லிபிய பிரசைகளைக் கொண்ட நாடு, மிகச் சிறிய காலத்தினுள் 2 மில்லியன் (ஆப்பிரிக்க) குடிவரவாளர்களை சேர்த்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

இனவிகிதாசார சமன்பாடு குழம்பியதன் காரணமாக, லிபிய சமூகத்திற்குள் ஏற்பட்ட முறுகல் நிலை, ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான இனவெறி கலவரத்தில் கொண்டு போய் விட்டது. ஆப்பிரிக்க தொழிலாளரின் முகாம்கள் லிபிய காடையரினால் தீக்கிரையாக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் சாட், நைஜீரிய நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான குடிவரவாளர்கள் கொல்லப்பட்டனர். லிபிய பொலிஸ் வேடிக்கை பார்த்தது, கலவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், லிபிய அரசு அதிகாரிகள், 14000 ஆப்பிரிக்கர்களை நாடு கடத்த ஆரம்பித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது, அனைவரையும் டிரக் வண்டிகளில் ஏற்றி, எல்லையைக் கடந்து பாலைவனத்தில் கொண்டு போய் கொட்டி விட்டு வந்தனர். அரசின் மனிதாபிமானமற்ற நாடுகடத்தலின் போது, இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

லிபிய அரச ஆசீர்வாதம் பெற்ற இனக்கலவரமும், இனச்சுத்திகரிப்பு நாடுகடத்தலும், ஏதோ லிபிய அரசின் உள்வீட்டு பிரச்சினை என்று நினைக்க வேண்டாம். அப்படி இருப்பின், அன்று மேற்குலக எதிரியான கடாபியின் அரசை குற்றவாளியாக காட்டுவதற்கு இது தான் தருணம் என்று மேலைத்தேய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கும். இந்தக்கட்டுரையை வாசிக்கும் பலர் இப்போது தான் முதன்முதலாக கேள்விப்படுமளவிற்கு, சர்வதேச ஊடகங்கள் அந்த செய்தியை வெளி உலகம் அறியவிடாது இருட்டடிப்பு செய்திருந்தன. அதற்கு காரணம், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் பங்கு.

2003 ம் ஆண்டிற்கும், 2006 ம் ஆண்டிற்கும் இடையில், சுமார் இரண்டு லட்சம் ஆப்பிரிக்கர்கள் விமான மூலம் நாடுகடத்தப்பட்டனர். இதற்கு நிறைய செலவாகியது. இந்த செலவை இத்தாலி பொறுப்பெடுத்துக் கொண்டது. மொத்தம் 47 Air Lybia விமானங்கள், இத்தாலியினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுள் எரித்திரியாவை சேர்ந்த, இராணுவத்தில் இருந்து தப்பியோடிய அகதிகள் பலரின் நிலை கவலைக்கிடமானது. எரித்திரிய அரசு அவர்களை பொறுப்பெடுத்து, இராணுவத்தை விட்டோடியதன் தண்டனையாக சுட்டுக்கொலை செய்து விட்டதாக, சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்தது. மனிதாபிமானம் பேசும் இத்தாலிக்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் இந்த விடயங்கள் தெரியாமலில்லை.
நாடுகடத்தலை எதிர்நோக்கி அறுபதாயிரம் குடிவரவாளர்கள், லிபிய பாலைவனத்தில் கட்டப்பட்டுள்ள, 20 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கே அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக சிறை வைக்கப்பட்டுள்ளனர். எந்தக் குற்றமும் செய்யாத "கைதிகள்" பாதுகாவலரின் வன்முறைக்கு இலக்காவதும், பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவதும் வழமையான நிகழ்வுகள். சிறை முகாம்களில் உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது. இத்தாலிக்கு அகதிகளாக சென்று பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலர் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை முகாம்களை பராமரிக்க நிதி உதவி வழங்குவது யார்? இத்தாலியைத் தவிர வேறு யார்?

இத்தாலியில் வலதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், வெளிநாட்டவருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முன்னாள் பாஸிச சர்வாதிகாரி முசோலினியின், கொள்கைகளை பகிரங்கமாகவே பின்பற்றும் "லீகா நோர்ட்" வட பகுதி இத்தாலியில், அதிக வாக்குகளைப் பெற்று, தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. இவர்களது ஆட்சியில் மிலான் நகர பெரிய மசூதி பூட்டப்பட்டு, தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தற்போது பொது இடங்களில் தொழுகை நடத்துவதை சட்டம் போட்டு தடுக்க முயன்று வருகின்றனர். இது மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, முஸ்லீம்களை மட்டுமே தாக்குவதாக தெரிந்தாலும், கத்தோலிக்க கிறிஸ்தவத்தை சேராத இந்து, புத்த வழிபாட்டாளருக்கும் எதிர்காலத்தில் இது தான் விதி. உலகில் வேறெங்கும் இல்லாதவாறு, இனவாத சட்டம் நாம் உண்ணும் சாப்பாட்டிலும் புகுந்துள்ளது. இத்தாலியில் இருக்கும் உணவுவிடுதிகள் இனிமேல் இத்தாலிய சாப்பாட்டு வகை தான் பரிமாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோம் நகர நடுத்தர வயது பெண்மணி ஒருவர், ருமேனிய நாட்டை சேர்ந்த ஜிப்சி இன கிரிமினல்களால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தேசத்தை உலுக்கியது. இது போன்ற சம்பவத்தை எதிர்பார்த்து காத்திருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள், இத்தாலிய மக்களை ஜிப்சிகளுக்கு எதிராக கிளர்ந்தெள வைத்தன. தொடர்ந்து இத்தாலிய பொலிஸ், ஆயிரக்கணக்கான ருமேனிய ஜிப்சிகளை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தியது. ஜிப்சி அல்லது ரோமா என அழைக்கப்படும் இந்த நாடோடி இன மக்கள், ருமேனியாவில் மிகவும் ஏழ்மையான நிலையில் வசிப்பவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா சேர்ந்ததன் பின்னர் கிடைத்த சலுகையை பயன்படுத்தி, பெருமளவில் இத்தாலியில் குடியேறினர். ஐரோப்பிய ஒன்றிய சட்டப்படி, ஒரு ஐரோப்பிய உறுப்பு நாட்டு பிரசை, தான் விரும்பிய எந்த நாட்டிலும் போய் இருக்கக்கூடியதாக, அங்கத்துவ நாடுகளுக்கிடையில் சுதந்திர போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த சட்டத்தை இத்தாலி காலில் போட்டு மிதித்ததைப் பற்றி, இதுவரை எந்த நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த சட்டம் எல்லாம் ஏட்டில் மட்டும் தான். நடைமுறையில் பணக்காரர்களுக்கு தான் அது செல்லுபடியாகும். ஏழைகளையும், அகதிகளையும் யார் கவனிக்கப் போகிறார்கள்? இருந்தாலும் ஐரோப்பிய ஜனநாயகத்தை யாரும் குறை சொல்லக்கூடாதப்பா.

இத்தாலியின் அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நிலைப்பாட்டை புரிந்து கொள்வது எளிது. என்பதுகளுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளிற்கு வந்த, இன்னும் வந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகள் தொகை அதிகரித்து வந்துள்ளது. அதிகளவான அகதிகள் வரும் நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது. ஒரு காலத்தில் அதிகளவில் வந்து குவிந்து கொண்டிருந்த ஈராக், பொஸ்னிய, ஆப்கானிய அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக; ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட நாடுகளின் பிரச்சினைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர ஆற்றிய பங்கைப் பற்றி நிறைய எழுதலாம்.

இன்று பல ஐரோப்பிய நாடுகளின் படைகள், பிரச்சினைக்குரிய நாடுகளில் நிலை கொண்டிருக்கும் வேளை, அகதிகளின் வருகை குறைந்துள்ளது. அது போலவே இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டுவதற்கு, நோர்வே தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் முயன்றன. அந்த முயற்சியில் தோல்வியடைந்தாலும், இலங்கையின் பிரச்சினையை ஏதாவதொரு வகையில் தீர்வுக்கு (அது உங்களுக்கு ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை) கொண்டுவந்து, அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அவை மாறவில்லை. ஐரோப்பியர்கள் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் மனிதாபிமான காரணங்களுக்காக தலையிடவில்லை. மாறாக ஐரோப்பிய நலன்கள் மட்டுமே எப்போதும் முதன்மைப்படுத்தப்பட்டன.

(இந்தக் கட்டுரை "எதுவரை?", ஏப்ரல்-மே இதழில் பிரசுரமாகியது.)
"எதுவரை?" சஞ்சிகையை பெற்றுக்கொள்வதற்கு கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்:
M.Fauzer
02, Langley Walk,
Crawly,
RH11 7LR,
U.K.

Email: eathuvarai@gmail.com

Saturday, April 18, 2009

எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது


“எனக்குத் தெரிந்த ஒரு ஈராக்கிய வாலிபர் பொலிஸ் படையில் புதிதாகச் சேர்ந்தபொழுது ஏதோ ஒரு அமெரிக்கத் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று பயிற்சியளித்தது. பெரும்பாலான பயிற்சி நேரங்களை அந்த வாலிபர் ஜீப் வண்டி ஓட்டுவதிலும் ஆயுதங்களைக் கையாள்வதிலும் செலவிட்டார். பயிற்சி முடிந்த பின்பு ஒரு நாள் வேலைக்கு நியமித்துள்ளதாக அழைப்பு வந்தது. அவரிடம் ஒரு ஜீப்வண்டியைக் கொடுத்து பாக்தாத்தின் சன நெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுமாறும் அங்கிருந்து அவருக்குத் தரப்பட்ட கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற வாலிபர் ஜீப்பில் இருந்தபடியே கைத்தொலைபேசியை இயக்கிய பொழுது சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் இறங்கி சிறிது தூரம் சென்று சிக்னல் கிடைத்துத் தொடர்பு கொண்டபோது... ஜீப் வெடித்துச் சிதறியது”
-சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் தகவல்
(Independent 26.04.06)

“பாக்தாத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் 14 வாலிபர்களின் இறந்த உடல்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. அந்த 14 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் ‘ஒமார்’ என்ற பிரத்தியேகமாக சுன்னி முஸ்லிம்களுக்கேயுரிய
பெயரைக் கொண்டவர்கள். அச்சமடைந்த உறவினர்கள் பிணங்களைப் பொறுப்பெடுக்க வரவில்லை. அவை தெரு நாய்களுக்கு உணவாகின.”
- (Guardian 04.08.06)

“யூலை, ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் மட்டும் 7000 சுன்னி
அல்லது ஷியா முஸ்லிம்கள் இறந்துள்ளனர். இரு தரப்பிலும் 3 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். நாளொன்றிற்கு 3000 பேராவது அகதிகளாகப் பிற நாடுகளுக்கு ஓடியுள்ளனர்”
- ஐ. நா. சபையின் விசேட அறிக்கை

இவ்வளவு நடந்தும் புஷ் நிர்வாகம் ஈராக்கில் உள்நாட்டுப் போர் அல்லது வகுப்புவாதக் கலவரம்
நடப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஷியா முஸ்லிம்களைப் பெரும்தொகையாகக் கொல்லும் குண்டு வெடிப்புகள் எல்லாம் சில வெறிபிடித்த பயங்கரவாதிகளின் செயல் (சுன்னி முஸ்லிம் மக்களை) படுகொலை செய்யும் அரசு சார்ந்த
கொலைகாரக் கும்பல் யாவும் இனம் தெரியாதவர்கள்.

இவ்வாறுதான் சர்வதேச செய்தி ஊடகங்கள் எமக்குத் தெரிவித்து வந்தன. உலக மக்களும் அப்படியே நம்ப வைக்கப்பட்டனர். அதேநேரம், ஈராக் பொது மக்கள், ‘அமெரிக்க ஆட்சியைவிட சதாமின் ஆட்சி மேல்’என்று கூறுமளவிற்கு அங்கே நிலைமை மோசமடைந்
துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து சுன்னி-ஷியா என்ற இரு முஸ்லிம் பிரிவுகள் மார்க்க அடிப்படையில் பிரிந்திருந்தபோதும் இரு சமூக மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதில்லை. சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுசைனின் ஆட்சி
யில் ஷியா முஸ்லிம்கள் அடக்கப்பட்டதாக மேற்கத்தைய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான செய்திகளைக் கூறி வந்தன. உண்மையில் சதாம் தனக்கு எதிரான அரசியல் சக்திகளாக இனம் கண்ட ஷியா மதத் தலைவர்களையே கைது செய்து சிறையிலடைத்தார்.

சாதர் குழு அல்லது மஹதி குழு போன்ற ஆயுதமேந்திய ஈரான் ஆயத்துல்லாக்கள் வழியில் நடக்கும் மத அடிப்படைவாத இயக்கங்கள். முழு ஷியாக்களினதும் ஆதரவைப்
பெற்றிருக்கவில்லை. இவர்களின் சதாம் அரசுக்கெதிரான சில தாக்குதல்கள் பலமுறை தோல்வியடைந்த போதிலும் சந்தேகத்தின் பேரில் பல ஷியா மக்கள் கைது செய்யப்பட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஷியாக்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதான ஆதங்கம் அந்த மக்களுக்கு இருந்தபோதும், அதற்காக ஒரு போதும் அவர்கள் ஆதிக்கப்பிரிவான சுன்னி முஸ்லிம்களை வெறுக்கவில்லை. ஈரான் - ஈராக் யுத்தத்தின்போதுகூட ஷியா மக்கள் சதாம் அரசுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள். ஈரானியர்களும் ஷியாக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் தமது தாய்நாட்டைக்
காட்டிக் கொடுக்கவில்லை.

1990ம் ஆண்டு இடம்பெற்ற குவைத் மீதான ஆக்கிரமிப்பும் அதைத் தொடர்ந்த வளைகுடாப் போரும் ஈராக்கின் எதிர்காலத்தைத் தீர்மானித்தது. போரால் தோற்ற ஈராக்மீது ஐ. நா. சபை நாடுகள் (அமெரிக்க அழுத்தத்தால்) பொருளாதாரத் தடை விதித்தன. வடக்கு ஈராக்கில் குர்திய பிரதேசத்தின்மீதும், தெற்கு ஈராக்கில் ஷியா பிரதேசத்தின்மீதும் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டதால் சதாமின் அரசு மத்திய ஈராக்கினுள் முடக்கி வைக்கப்பட்டது. சில ஆண்டுகளின்பின் பொருளாதாரத் தடை காரணமாக ஈராக் மக்கள் பட்டினி கிடந்து சாவதாக சர்வதேசக் கண்டனங்கள் எழுந்ததால் ஐ. நா. சபை ‘எண்ணைக்குப் பதிலாக உணவு’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்படி ஈராக் அரசு சர்வதேசச் சந்தையில் தான் விற்கும் எண்ணையின் பெறுமதிக்குச் சமமான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதைக்கூட ஈராக் அரசு தான் விரும்பியபடி செய்ய முடியாது. எந்தெந்த உணவுப் பொருட்களை, எங்கே வாங்க வேண்டும் அதை ஈராக்கிற்கு எப்படிக் கொண்டு போவது, யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போன்றவற்றை ஐ.நா சபையே தீர்மானித்தது. அதிலும் பல ஐ. நா. அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் (தலைவர் கோபி அனானின் மகன் உட்பட) முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியவை வேறு கதை.

இந்த எண்ணை - உணவுப்பொருள் பண்டமாற்று நியாயமாக நடத்தப்படவும் இல்லை; அதன் பலனெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரவும் இல்லை. குறிப்பாக,ஈராக்கின் மொத்த சனத்தொகையில் 13வீதமேயுள்ள குர்திய மக்களுக்கு மொத்த வர்த்தகத்தின் 43வீத வருமானம் போய்ச் சேர்ந்தது. குர்தியப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரு ஆயுதமேந்திய இயக்கங்கள் சட்டவிரோதமாக எண்ணை கடத்தி விற்றுக் கிடைத்த வருமானம் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஐ. நா. தயவில் சுயதாதீனமாக இயங்கக்கூடிய நிலையில் (இன்றுவரை எவராலும் அங்கீகரிக்கப்படாத) ‘குர்திஸ்தான்’ என்ற தனிநாடே உருவாகிவிட்டது. எண்ணை கடத்தலால் அங்கே பெற்ற வருமானம் யப்பானில் இருந்து இறக்குமதி செய்த எலக்ட்ரோனிக் பொருட்கள் சொகுசு வாகனங்கள் என்று செலவு செய்யப்பட்டு பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஈராக்கின் பிறபகுதிகளில் வாழ்ந்த அரபு மக்கள் சாப்பாடு தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

தெற்கு ஈராக் ஷியா மக்கள் வான்வெளிக் கண்காணிப்புக்குள் அடங்கியதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டபோதும் அவர்களும் பட்டினிச்சாவில் இருந்து தப்பவில்லை. புஷ் நிர்வாகம் ஈராக் மீதான படையெடுப்பை ஆரம்பித்தபோது சி. ஐ. ஏ. யும் அமெரிக்க இராணுவமும் குர்திய ஆயுதக் குழுக்களின் உதவியோடு முன்னேறின. அரபு மக்களையும் குர்திய மக்களையும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நிரந்தரமாகப் பிரித்துவிட்டன. அரபுக்கள் குர்தியரை ஏகாதிபத்தியத்தின் அடியாட்களாகப் பார்த்தனர். குர்திய ஆயுதக் குழுக்களுக்கு இஸ்ரேல் இராணுவப் பயிற்சி அளித்ததாக வந்த தகவல்கள் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுள்ள ஈராக்கின் புதிய இராணுவத்திலும் பொலிஸிலும் கணிசமான அளவு குர்தியர்கள் பணி புரிகின்றனர்.

அமெரிக்க இராணுவம் ஈராக் முழுவதையும் பிடித்த பின்பு செய்த முதல் வேலை சதாம் ஆட்சியின் கீழ் பணி புரிந்த அனைத்து இராணுவ வீரர்களையும் வீட்டிற்கு அனுப்பியதுதான். அந்தப் பழைய இராணுவத்தில் பெருமளவு சதாம் விசுவாசிகளும் பாத் ஆதரவாளர்களும் சுன்னி முஸ்லிம்களும் அங்கம் வகித்தமை உண்மைதான். இருப்பினும் இராணுவத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத வீரர்கள் தொழிலிழந்தவர்களாய்த் தமது குடும்பத்தைக் காப்பாற்றும் வழி தெரியாது திண்டாடினர். இந்த அவலங்களை எள்ளளவும் கவனத்திற்கெடுக்காத அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் சதாம் புதிதாக உருவாக்கிய ஈராக்
இராணுவத்தில் ஷியா முஸ்லிம்களைப் பெருமளவில் சேர்த்தனர். நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்து வேலையற்றோர் எண்ணிக்கை 80வீதமாக இருந்த காலத்தில் இராணுவ-பொலிஸ் வேலைகளுக்காக ஷியா இளைஞர்கள் முண்டியடித்ததில் வியப்பில்லை.

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ‘பாத்’ கட்சியினரும் வேலையிழந்த இராணுவ வீரர்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சிக் குழுக்களை அமைத்தனர். இந்தக் குழுக்கள் தேசியவாத அடிப்படையைக் கொண்டிருந்த போதிலும் அவற்றின் உறுப்பினர்கள் சுன்னி முஸ்லிம்
பிரிவில் இருந்தே வந்தனர். புதிதாக உருவாக்கப்படும் இராணுவமும் பொலிசும், நாளை தம்மை அடக்க ஏவிவிடப்படும் அரச இயந்திரங்களாக மாறும் என்ற நியாயமான அச்சம் காரணமாக பாதுகாப்புப் படைகளில் வேலை தேடிச் சென்ற பல நூற்றுக்கணக்கான
இளைஞர்களை கிளர்ச்சிக்காரர்கள் குண்டு வைத்துக் கொன்றனர். துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு கொல்லப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஷியா முஸ்லிம்கள் என்பதால், வகுப்புவாதப் பிரிவினை அப்பொழுதே வேர் விடத் தொடங்கியது. பல தசாப்தங்களாக இரண்டாம்
தரப் பிரஜைகளாக அரசு அதிகாரமற்றிருந்த ஷியாக்களைப் பொறுத்தவரை தற்போது கிடைத்துள்ளது ஒரு பொன்னான வாய்ப்பு. புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் இராணுவம் பொலிஸ் ஆகிய அதிகார அமைப்புகளில் தமது பிரதிநிதித்துவத்தை ஸ்திரப்
படுத்துவதன்மூலம் ஷியா முஸ்லிம்கள் ஈராக்கின் ஆளும் பரம்பரையாக விரும்பின. பொம்மைகளைக் கொலு வைப்பதைப்போல ஈராக்கியரைத் தன்னிஷ்டப்படி ஆட்டிப் படைத்த அமெரிக்காவும் ஷியா முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது.

இதனால் ஷியா மத அடிப்படைவாத சக்திகள் புத்துயிர் பெற்றன. “ஈராக்கில் இஸ்லாமிய புரட்சிக்கான தலைமைக்குழு என்ற கட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் பொறுப்பில் உள்துறை அமைச்சு உள்ளதும் பாதுகாப்புப் படைகள் அந்த அமைச்சின் கீழ் வருவதும் இங்கே சுட்டிக் காட்டப்படவேண்டும். மேற் குறிப்பிட்ட மதஅடிப்படைவாதக் கட்சியின் தொண்டர்கள் பொலிஸ்காரர்களாகவும் இராணுவவீரர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். ‘மஹதி இராணுவம்’என்ற இன்னொரு ஷியா ஆயுதக்குழு ஈராக் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அமைத்து தனிக்காட்டு ராஜாக்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. அந்தப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் மஹதி இராணுவத்தின் ஆயுதங்களைக் களையவும் அமெரிக்க இராணுவம் பல தடவை முயற்சி செய்தபோதும் தோல்வியுற்று, இறுதியில் சமரசமாகப் போனது. மஹதி இராணுவ வீரர்கள் பலரை தேசிய இராணுவத்திலும் பொலிஸ் படையிலும் இணைத்ததன் மூலம் அந்தச் சமரசம் எட்டப்பட்டது.

மேலே குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள் யாவும், ஒரு பக்கத்தில் அமெரிக்கா ஈராக்கில் புதிய ஆளும் வர்க்கத்தை நிலைநாட்ட உதவியபோதும், மறுபக்கத்தில் சுன்னி- ஷியா முஸ்லிம் பிரிவுகளுக்கிடையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கி அவர்களை எதிரிகளாக்கிவிட்டது. இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக்கும் கைங்கரியத்தை ஆற்ற
எங்கிருந்தோ வந்தார்கள் சர்காவி தலைமையிலான அல்கைதா குழுவினர். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை தமது சண்டைப் பயிற்சிக்குப் புதிய களம் கிடைத்ததாகக் கருதிய அல்கைதாவினர் சுன்னி முஸ்லிம்களைத் தம் பக்கம் கவர்ந்தனர். அல்கைதா
சவுதி அரேபியாவின் வஹபி என்ற இஸ்லாமியக் கடும் போக்காளரின் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருப்பதால் ஷியா முஸ்லிம்கள் ஆதரவளிக்கவில்லை. வஹபிஸ்ட்டுக்களைப் பொறுத்தவரை, சியாக்கள் முஸ்லிம்கள் அல்லர். ஆகவே, ‘ஷியா என்ற போலி முஸ்லிம்கள்’ மீது வெறுப்புக் கொண்ட ஈராக்கிய அல்கைதா (அல்லது மக்கள் பார்வையில் வஹபிஸ்டுக்கள்) ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலங்களைத் தாக்குவதன்மூலம் தமது மதவாத அதிகாரத்தை சுன்னி முஸ்லிம்கள் மத்தியில்
நிலைநிறுத்த விரும்பியது. ஷியா ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அப்பாவி ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்தது. அவர்களது தொலைநோக்கற்ற குறுகிய மதவாதம் தற்காலிகமாகச் சில சுன்னி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இப்படியான செயல்கள் தமக்குத் தீமையே அன்றி
நன்மையைத் தரா எனப் புரிந்து கொண்ட ஈராக்கிய சுன்னி முஸ்லிம் மக்கள் அல்கைதாவை ஒதுக்க ஆரம்பித்தனர். ஆனால் அப்போது காலம் கடந்துவிட்டது.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் இஸ்லாமியவாதிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நாடளாவிய அமைப்பாக ஒழுங்குபடுத்தக்கூடிய பலமான தலைவர் இல்லாமல் இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் ஸர்காவியின் வரவுக்குப் பின் உற்சாகமடைந்தன. இருப்பினும் ஸர்காவியின் குறுகிய மதவாத அரசியல் அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் பிழையான சித்தாந்தம் என்பதைப் புரிந்து கொண்ட போராளிகளும் ஆதரவாளர்களும் மெல்ல விலகிக் கொண்டனர். ஒரு சில இடங்களில் நிலப்பிரபுக்களால் ஆதரிக்கப்பட்ட, ஈராக் அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்ட பிரதேசவாதக் குழுக்கள் அல்கைதாவை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தனர்.
அல்கைதா ஆதரவாளர்கள் தற்போது ஈராக் எல்லையோரம் இருந்த அன்பர் மாகாணத்தை மட்டும் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர். அமெரிக்க இராணுவம் இருந்த மாகாணத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இன்றுள்ள ஈராக் அரசியல் நிலவரத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். வடக்கே குர்திஸ்தான் பிரதேசத்தில் முன்பு ஒரு காலத்தில் ஒன்றோடொன்று எதிர்த்து சகோதர சண்டையிட்டுக் கொண்டிருந்த பர்சானி மற்றும் தலபானி தலைமையிலான இரு குர்திய இயக்கங்கள் தற்போது தமக்குள் உடன்பாடு கண்டு சமாதானமாகி உள்ளன. குர்திஸ்தான் (பிராந்திய)
பாராளுமன்றத்தில் இரு கட்சிகளும் அங்கம் வகித்தன. இருப்பினும் அவ்விரு கட்சிகளினதும் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தெற்கே ஷியா முஸ்லிம் அரேபியர்கள் வாழும் பிரதேசத்தில் SCIRI,
மஹதி இராணுவம் ஆகிய இயக்கங்களும் தமக்கென சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆயுதமேந்திய உறுப்பினர்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆங்காங்கே காவலரண்கள் அமைத்து பொதுமக்களைச் சோதனையிடுகின்றனர். சில நேரம் ஒரே வீதியில்
பொலிஸ் சோதனைச் சாவடியும், சில கிலோமீற்றர்கள் தள்ளி ஆயுதக்குழுக்களின் சோதனைச் சாவடியும் காணப்படுவதால் மக்கள் யாருக்குத் தப்புவது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். முழுக்க முழுக்க ஷியா முஸ்லிம்களையே உறுப்பினர்களாகக் கொண்ட
அதேநேரம், அப்பாவி ஷியா பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆயுதமேந்திய இயக்கங்கள் கடுமையான இஸ்லாமிய மதச் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இத்தகைய மத அடிப்படைவாத அரசியல் சக்திகளின் ஆதரவு தமக்கு அவசியம் என்ப
தால் அமெரிக்க - பிரிட்டிஷ் படைகள் இவற்றைக் கண்டு கொள்ளாமல் மறு பக்கம் பார்த்துக்கொண்டு போகின்றன.

தலைநகர் பாக்தாத்தைக் கொண்டிருக்கும் மத்திய ஈராக்கைச் சேர்ந்த சுன்னி முஸ்லிம் அராபியர்கள் வாழும் எழுச்சி மிக்க பூமி. அங்கே யாரும் தமது கட்டுப் பாட்டில் இருப்பதாக அறிவிக்க முடியாது. ஃபலூஜா போன்ற வீரகாவியம் படைத்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, களத்தில் நிற்கும் பாத் தலைமையிலான தேசியவாதக் குழுக்களுக்கும் பிற இஸ்லாமியவாதக் குழுக்களுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருந்தபோதிலும் சகோதரச் சண்டை இதுவரை இல்லை. அமெரிக்கா இதுவரை வெளியே சொல்லாவிட்டாலும் பாக்தாத் நகரம் மட்டும் தான் ஈராக் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமைச்சு அலுவலகங்கள், பிற அதிகாரமையங்கள் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ராஜதந்திரிகளின் வாசஸ்தலங்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கட்டளைத் தலைமையகம், ஊடகவியலாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள், இவற்றுடன் மேற்படி நிறுவனங்களில் தொழில்
புரியும் பணியாளர்களின் குடும்பங்கள் எல்லாமே உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்குகின்றன. இந்த உயர்பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் கோட்டை மதில்களால் சூழப்பட்ட தனியான பிரதேசம். அதாவது பாக்தாத் நகரத்தினுள் இன்னொரு நகரம்.
நிச்சயமாக இந்த உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வசிப்பவர்களுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியாது. சர்வதேச ஊடகவியலாளர் உட்பட, இந்த வலயத்தில் மட்டுமே கிடைக்கும் ஆடம்பரங்களான 24 மணிநேர மின்சாரம், எரிபொருள், உணவுப் பொருட்கள்
மற்றும் இறக்குமதிப் பொருட்கள் என்பன வெளியில் வாழும் சாதாரண ஈராக்கிய மக்களுக்கு அரிதாகவே கிடைக்கின்றன.

இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலையால் மக்கள் தீவிரவாத இயக்கங்களை நோக்கி இலகுவில் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடி என்பன புதிய தீவிரவாதிகளை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதுவரை கூறப்பட்ட தகவல்களின்படி ஈராக்கில் அராஜகம் கோலோச்சுவது தெளிவாகும். அங்கே ஜனநாயக முறைப்படி தெரிவான அரசாங்கம் பேரளவில் தான் ஆட்சியில் உள்ளது. இந்த இலட்சணத்தில்தான் ஈராக் பிரச்சினைக்குத் தீர்வென்ன என்று கேட்டு அமெரிக்க ஜனாதிபதி ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். இதுபோன்ற எத்தனையோ ஆய்வுக்குழுக்கள் கடந்த காலத்தில் செய்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது மமதையால் தன்னிஷ்டப்படி நடந்து கொண்ட உலகின் அதிசக்தி வாய்ந்த நாட்டின் ஜனாதிபதி புஷ்ஷிற்கு காலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது. “சதாமைத் தூக்கிலிட்டோம்; ஜனநாயகத்தை மீட்டோம்” என்பது போன்ற வாய்ச் சவடால்கள் யாருக்கும் உதவவில்லை. சாதாரண ஈராக்கிய மக்களோ “எமக்கு பாதுகாப்பே முதல் முக்கியம். உயிர்போன பின்பு ஜனநாயகம் என்ன தேவைக்கு? ” என்று கேட்கிறார்கள்.

தற்போது படிப்படியாக தனது இராணுவத்தை விலத்திக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்தபோதும் ஈராக்கின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. அமெரிக்க இராணுவம் நாட்டை விட்டுப்போன உடனேயே ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் பாக்தாத்தில் இருக்கும் அதிகாரமற்ற பொம்மை அரசைக் கவிழ்த்துவிட்டு தமக்குள் சண்டையிட்டு ஆட்சியதிகாரத்திற்காக போட்டி போடுவார்கள். நிச்சயமாக பலமானதே வெல்லப்போகிறது. அதைவிட ஈராக் மூன்று துண்டாக உடையும் அபாயமும் உள்ளது. அப்படி உருவாகும் புதிய தேசங்கள் பிராந்திய வல்லரசுகளின் தயவிலேயே தங்கி இருக்க வேண்டி இருக்கும். குர்திஸ்தான் என்ற புதிய நாடு உருவாவதைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாது. துருக்கியிலும் தனிநாடு கோரும் குர்தியருக்கு இது உந்து சக்தியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, ஈராக்கின் சிறிய சிறுபான்மையினரான துருக்கி மொழி பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் அடிக்கடி தலையிடவேண்டி இருக்கும்

தெற்கு ஈராக்கில் ஏற்படப் போகும் ஷியா இஸ்லாமியக் குடியரசுக்கு ஈரான் பக்கபலமாக இருக்கும். ஷியா முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை அரபுலகில் விரிவு படுத்த தனக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தும். அதற்குப் பதிலடியாக சவுதிஅரேபியாவும் ஜோர்டானும் மத்திய ஈராக்கில் சுன்னி முஸ்லிம் அதிகாரத்தை நிலைநாட்டப் பாடுபடும். சவுதி அரேபியாவில் கணிசமான அளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்வதும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் எழுச்சிக்குத் தயாராவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்முறையாக வளைகுடாக் கடலின் சிறிய தீவான பாஹ்ரெயினில் ஷியாக்களின் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளமை ஆட்சியாளரை மகிழ்ச்சிப்படுத்தவில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அன்று தாம் செய்த பிரச்சாரத்தைத் தாமே நம்பியதன் பலனைத் தற்போது அனுபவிக்கின்றனர். சதாமின் சர்வாதிகாரத்தில் இருந்து தம்மை விடுதலை
செய்ததன் நன்றியாக ஈராக்கிய மக்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்து விட்டது. அதனால் பின்னரும் தீவிரவாதக் குழுக்களுடன் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா குர்திய ஆயுதபாணிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அரேபியர்களை (சுன்னி - ஷியா முஸ்லிம்கள்) எதிர்த்துப் போரிட்டது. இரண்டாவதாக, ஷியா ஆயுதபாணிக் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு சுன்னி முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டது. கடைசியாக, சுன்னி முஸ்லிம் ஆதிக்கத்தில் இருக்கும் சில முன்னாள் பாத் கட்சித் தலைவர்களுடன் சில உடன்பாடுகளுக்கு வர உள்ளது. அரசியல் அதிகாரத்தை நிலை நாட்ட யாருடனும் கூட்டுச் சேரலாம். யாரோடும் எதிர்த்துப் போரிட
லாம்.

ஈராக்கில் எதிர்காலத்தில் எந்த அரசியல் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச பொருளாதார சமூகத்தில் சேராமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அப்போது அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுதல் தவிர்க்க முடியாதது. பொருளாதார வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின் சதாமின் காலம் ஒரு பொற்காலம். தேசிய மயமாக்கப்பட்ட எண்ணை உற்பத்தியால் கிடைத்த வருமானம் அபிவிருத்திக்குச் செலவிடப் பயன்பட்டதால் தனிநபர் வருமானமும் அதிகரித்திருந்தது. அப்போது ஈராக் டினாரின் பெறுமதி அமெரிக்க டொலருக்குச் சமமாக இருந்தது. ஈராக்கின் சபிக்கப்பட்ட நாளைய தலைமுறை இவற்றையெல்லாம் பழங்கதைகளாக மறந்து போகலாம்.


[பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை 2006 ம் ஆண்டு வெளிவந்த "உயிர்நிழல்" (ஒக்டோபர்-டிசம்பர் 2006) பிரசுரமாகியது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும், ஈராக்கின் நிலை அதிகளவு மாறவில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.]