மறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.
பாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது
அல்லது பாலஸ்தீன தேசியவாதம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.
சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.
பாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.
இதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.
பாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது? அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது! அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.
இறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
இதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:
பகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்
பகுதி 1: போர்க்களமான புனித பூமி
[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]
4 comments:
வழமை போல் அருமை
தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் உங்கள் வலைப் பக்கமே உலவிய நாட்களும் உண்டு. சிறிய வயதிலிருந்தே வரலாற்று ரீதியான தகவல்களை படிப்பதில் ஆர்வம் அதிகம். மில்லேனியம் நெருங்குகையில் விகடன் வெளியிட்ட வாவ் 2000 , மதனின் வந்தார்கள் சென்றார்கள், பா.ராகவனின் எழுத்துக்கள் வரிசையில் இப்போது விருப்புடன் படிப்பது உங்கள் எழுத்துக்களைத்தான். நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி, தர்ஷன்.
அருமையான பதிவு....... மறுப்பதற்கில்லை.. அதே நேரம் உங்களிடம் ஓர் கேள்வி?
இச்ரேலின் சர்வாதிகாரம் பற்றியும் அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவு பற்றியும் பதிவிடும்.... நீங்கள் ஏன்?
மியான்மரில் ராணுவம் நடத்தும் சர்வாதிகாரம் பற்றியோ அதற்கு சீனா வழங்கிவரும் ஆதரவு பற்றியோ பதிவிடவில்லை
எவ்வாறு ஐ.நா. மன்றத்தல் இச்ரேல் மீது ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்படும் கண்டன தீர்மானங்களையும் அமேரிக்கா தனது நோட்டோ அதிகாரம் மூலம் தடுக்கிறதோ அதே போல்தான
சீனாவும் மியான்மர் மீது கொண்டுவரப்படும் கண்டன தீர்மானங்களை தனது நோஃடோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கிறது ஏன்?அமெரிக்கா என்றால் கடுமை சீனா என்றால் மென்மையா ?
முன்பொரு நாட்களில் செங்கொடி பறந்த நாடு என்பதால்
இது நீங்கள் சீனா மீது காட்டும் கரிசனமா?
ajimoosa, மியான்மர் பிரச்சனை குறித்தும் எழுதியிருக்கிறேன்.
[மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்]
Post a Comment