Sunday, December 06, 2009

ஒல்லாந்தரின் தேசங்கடந்த கஞ்சா வணிகம்

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கிரிமினல்கள் கஞ்சா உற்பத்தி செய்வதிலும், அதை சந்தைப்படுத்துவதிலும் ஐரோப்பாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளனர். தலைசிறந்த தேசங்கடந்த வர்த்தக கழகம் போல, ஐரோப்பிய நாடுகள் எங்கும் "கஞ்சா பெருந்தோட்டங்களை" நிர்வகித்து வருகின்றனர். நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி (Nederlanders runnen hennepteelt in Europa, NOVA, 4 Dec. 2009) ஒன்றில், போதைவஸ்து தடுப்பு அதிகாரியை செவ்வி கண்ட போதே இந்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன.

ஹொலன்ட் என்றவுடன் அநேகமானவர்களுக்கு வெண்ணெய்க்கட்டி கட்டி போன்ற பால் உற்பத்திப் பொருட்களும், டியூலிப் மலர்களும் ஞாபகம் வரும். பரம்பரை பரம்பரையாக சர்வதேச வர்த்தகத்தில் கெட்டிக்காரர்களான ஒல்லாந்தர்கள், போதைவஸ்து விற்பனையையும் விட்டு வைக்கவில்லை. நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? போதைவஸ்து விற்றாலும் அது ஒரு வணிகம் தானே? உலகத்தின் பிற வளர்ச்சியடைந்த நகரங்களைப் போல, நெதர்லாந்து நகர தெருக்களிலும் போதைவஸ்து விற்பனை நடப்பதைப் பார்க்கலாம். அனேகமாக கருப்பினத்தை சேர்ந்த இடைத்தரகர்கள், தெருவில் நின்று போதைவஸ்து விற்கின்றனர். இதனால் ஒரு கறுப்பினத்தவர் நியாயமான வழியில் வசதியாக வாழ்ந்தாலும், "இதெல்லாம் போதைவஸ்து விற்று சேர்த்த பணத்தால் வாங்கியவை..." என்று வெள்ளையினத்தவர்கள் நிறத்துவேஷத்துடன் கூறக் கேட்டிருக்கிறேன். கருப்பர்கள் மட்டுமல்ல, தெற்கு-ஆசிய நாட்டவரையும் அவ்வாறு பொறாமைக் கண்களுடன் பார்ப்பது வழக்கம்.

இது ஒரு புறமிருக்க, தெருவில் போதைவஸ்து கடை விரித்து சில்லறை வியாபாரம் செய்யும் கறுப்பர்களுக்கு, திரை மறைவில் வெள்ளையர்கள் மொத்தமாக சரக்கை தருவித்துக் கொடுக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் கரீபியன் தீவுகளில் கடமையாற்றி விட்டு நாடு திரும்பிய இராணுவவீரர்களின் பொதிகளில் போதைவஸ்து கண்டுபிடிக்கப்பட்டது. கரீபியன் கடலில் உள்ள அந்திலியன் தீவுகளில் நெதர்லாந்து இராணுவ தளம் உள்ளது. அங்கிருந்து விடுறையில் பிரத்தியேக விமானத்தில் நாடு திரும்பிய வீரர்கள் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டது அப்போது தெரிய வந்தது.

நெதர்லாந்தை சேர்ந்த மாபியாக் குழுக்கள், படையினரை மட்டும் கடத்தலில் ஈடுபடுத்துவதில்லை. நாடுகளுக்கிடையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் பார வாகன ஓட்டுநர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான போக்குவரத்து பாதையின் சந்திப்பு புள்ளியான மொரோக்காவில் நெதர்லாந்து லாரி சாரதிகள் பலர் சிறையில் வாடுகின்றனர். பெரும்பாலானவர்கள் போதைவஸ்து கடத்தி அகப்பட்டவர்கள். நெதர்லாந்தில் இருக்கும் இவர்களது உறவினர்கள், சில நேரம் தொலைக்காட்சியில் தோன்றி கைதிகளை விடுவிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுவார்கள். பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்ச்சியில், வெளிநாட்டு சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்கள் போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டு (வேண்டுமென்றே) மறைக்கப்படும். மொரோக்கோவில் மட்டுமல்ல, தாய்லாந்து சிறைகளிலும் நிறைய (வெள்ளையின) நெதர்லாந்துக்காரர்கள் அடைபட்டுக் கிடக்கும் விபரம், இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், நெதர்லாந்தின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களும் தாரளமாக கிடைக்கின்றன. XTC (Ecstasy என்ற சொல்லின் சுருக்கமாம்) என்ற இரசாயன பொருட்களை கொண்டு செய்யப்படும் செயற்கை போதைபொருள் உற்பத்தியில் நெதர்லாந்து முன்னணியில் திகழ்கின்றது. இதை உற்பத்தி செய்யும் அறிவுடைமை, ஹொலன்ட் மாபியாக்கள் வசமே உள்ளது. பரிசோதனைச் சாலைகளில் செய்யப்படும் இந்த போதைப்பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது.

நெதர்லாந்து அரசு கஞ்சா பாவனையை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதன் அர்த்தம், கஞ்சா புகைப்பது குற்றமல்ல. ஆனால் அதனை உற்பத்தி செய்வது கிரிமினல் குற்றம். சட்டவிரோதமாக உற்பத்தி செய்பவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா சலுகை விலையில் கடைகளுக்கு விற்கப்பட்டது. கஞ்சா விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிக வரி விதிப்பதால், அரசாங்கத்திற்கு கிடைக்கும் மேலதிக லாபம் வேறு. நெதர்லாந்து நாட்டில் ஏறக்குறைய குடிசைக் கைத்தொழிலாக மாறி விட்ட கஞ்சா உற்பத்தியை தடுப்பதற்கு காவல்துறைக்கு பல வருடங்கள் எடுத்தன. வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக, நான்கு சுவர்களுக்குள் கஞ்சா பயிர்செய்கை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. அயலவரின் முறைப்பாடு, அளவுக்கு மிஞ்சிய மின்சார பாவனை போன்றன சட்டவிரோத கஞ்சா பயிர்செயகையை காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தன. தற்போது போலிஸ் கஞ்சா மணத்தை நுகரக்கூடிய விசேஷ ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை பயன்படுத்துகின்றது.

நெதர்லாந்தில் பொலிஸ் கெடுபிடி அதிகரித்துள்ளதால், கஞ்சா உற்பத்தியாளர்கள் பிற ஐரோப்பிய நாடுகளை நாடத் தொடங்கியுள்ளனர். அந்த நாடுகளில் கஞ்சா உற்பத்தியை தடுப்பதில் காவல்துறையின் அனுபவம் போதாமையை, தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக போலந்து, செக் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், இது லாபம் தரும் பெருந்தோட்ட பயிர்செயகையாகவே நடத்தப்படுகின்றது. இந்த நாடுகளில் "கஞ்சா பெருந்தோட்டங்ககளில்" முதலிடுபவர்கள் யாவரும் நெதர்லாந்துக்காரர்கள். பயிர்செய்கையில் ஈடுபடும் தொழிலாளிகள், முகாமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளூர்க்காரர்கள். இதனால் எப்போதாவது பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் பொது மாட்டிக் கொள்பவர்கள் உள்ளூர்க்காரர்கள். கஞ்சா பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் சட்டவிரோத குடியேறிகள், மோசமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

பெருந்தோட்டங்களில் உற்பத்தியாகும் கஞ்சா, நெதர்லாந்திற்கும், பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. கஞ்சா உறபத்தியில் ஈடுபட்டிருக்கும் நெதர்லாந்து முதலாளிகள் (அல்லது கிரிமினல்கள்), ஒவ்வொரு வருடமும் ஏற்றுமதி மூலம் இரண்டு கோடி யூரோக்கள் லாபமாகப் பெறுகின்றனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலதிக விபரங்களுக்கு:
ஐரோப்பாவில் ஒல்லாந்தரின் கஞ்சா பெருந்தோட்டங்கள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி (நெதர்லாந்து மொழியில்)

4 comments:

Unknown said...

குறிப்பாக இவர்களது இந்த கஞ்சா வியாபாரம் மத்திய ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, பெனின், சாட் போன்ற நாடுகள் வரை விஸ்தரித்துள்ளது. இது பற்றி சில மாதங்களுக்கு முன்னம் சாட்ல்லில் அறிய முடிந்து. இப்போது உங்களால் உறுதிப்படுத்த முடிகிறது.
தோழமையுடன் இ.அரவிந்த்...

Kalaiyarasan said...

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, அரவிந்த். நேற்று ஒலிபரப்பாகிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்த பின்னர் அவசர அவசரமாக எழுதியது இந்தக் கட்டுரை. இன்னும் எழுத வேண்டிய கதைகள் நிறைய இருக்கின்றன.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.....

வித்தியாசமான தகவல்...

farook.m said...

HI BROTHER AGAIN ME..NICE ARTICLE.