Monday, December 07, 2009

பெர்லினில் கட்டப்படும் "வர்க்கத் தடுப்பு சுவர்கள்"

"கம்பனியின் பங்குதாரர் கூட்டத்தினை பெர்லினில் எனது வீட்டிற்கு அருகில் உள்ள 'கிளப்' பில் நடத்த விரும்பினேன். நாங்கள் அதி தீவிர முதலாளித்துவவாதிகள் என்று கூறி இடம் தர மறுத்து விட்டனர். மேற்கு ஜெர்மனியில் இருந்து வருகை தந்த கூட்டாளிகளுக்கு அதை நம்பவே முடியவில்லை." - Weyel, Fianancial Times

பெர்லின் மதில் வீழ்ந்த இருபது ஆண்டுகளுக்கு பிறகும், அந்த நகரம் இரண்டாக பிரிந்திருக்கிறது. பெர்லின் நகருக்கு மெருகூட்டும் வனப்பான புதிய பங்களாக்களை கட்டும் செல்வந்தர்கள், தம்மை சுற்றி உயர்ந்த மதில்களை எழுப்பிக் கொள்கின்றனர். மதிலுக்கு வெளியே, வேலை இழந்த ஏழைகள் கூட்டம் சினத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றது. பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களான பிராட் பிட், அன்ஜெலினா ஜோலி ஆகியோர் கூட, வீடு வாங்கி குடியேற விரும்பும் அளவிற்கு, பெர்லின் செல்வந்தர்களை கவரும் காந்தமாக உள்ளது. பெர்லின் நகரில் ரியல் எஸ்டேட் பெறுமதி கூடிக் கொண்டே செல்வதால், வசதியற்ற ஏழைகள் நகரத்தை விட்டு தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருக்கிறார்கள். இதனால் சாதாரண உழைக்கும் வர்க்க இளைஞர்கள் மத்தியில் "முதலாளித்துவ எதிர்ப்புக் காய்ச்சல்" பரவி வருகின்றது. பணக்காரர்களை பெர்லின் நகரை விட்டு விரட்டுவதற்கு அவர்கள் புதுமையான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Kreuzberg என்பது, பெர்லினில் உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் புறநகர்ப் பகுதி. அந்தப் பகுதி காவல்துறை உயர் அதிகாரி, "உங்கள் ஆடம்பர கார்களை இங்கே நிறுத்தாதீர்கள்." என அறிவுரை கூறுகின்றார். அனேகமாக பணக்காரர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த Porsche, Mercedes வகை கார்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களில், பெர்லின் நகரெங்கும் முன்னூறுக்கும் அதிகமான ஆடம்பர கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெர்லின் நகரம் செல்வந்தர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்ட வன்முறை என்று பொலிஸ் குறிப்பிடுகின்றது.எந்த இடத்தில், எத்தனை கார்கள் கொளுத்தப் பட்டுள்ளன என்ற தகவல் பின்வரும் இணையத்தளத்தில் திரட்டப்படுகின்றது. ( http://www.brennende-autos.de/ )

டிசம்பர் 4 ம் திகதி, பெர்லின் treptow மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஆளும்கட்சிகளின் அலுவலகங்களும் தாக்கப்பட்டு, சுவர்களில் போர் எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன. Berliner Morgenpost என்ற பத்திரிகை தனக்கு உரிமை கோரும் மின்னஞ்சல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இடதுசாரி இயக்கம் ஒன்று கையொப்பமிட்டுள்ள உரிமை கோரும் அஞ்சல், ஆளும் கட்சியினரை "போர் வெறியர்கள்" என்று விபரித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக ஜெர்மன் படையினரை அனுப்புவதற்கு பாராளுமன்றம் முடிவெடுத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
ஹம்பூர்க் நகரிலும் முகமூடி அணிந்த நபர்களால் ஒரு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. வாசலில் நின்ற பொலிஸ் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த தாக்குதல்கள் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டிருப்பதாகவும், "இது அரசுக்கு எதிரான போர்" என்றும் பொலிஸ் தலமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் தொழிற்சங்கம், சம்பவங்களின் தீவிரம் கருதி உள்துறை அமைச்சருடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிறேமன் நகரில் நடைபெறும் கூட்டத்தில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. காவலர்கள் தொகையை அதிகரித்தல். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல். பொலிஸ் மீது தாக்குபவர்களுக்கு அதிக தண்டனை வழங்குதல், போன்ற பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலதிக விபரங்களுக்கு:
German concern over left-wing violence

No comments: