Wednesday, December 02, 2009

ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்


1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பேரிடியாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று, இரண்டு என அரச படையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரிய தொகை இழப்பு அப்போது தான் ஏற்பட்டது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கூட்டம் தமிழர்களை தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.

கொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழ பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. 90 வீதமான தமிழரின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்க பிரிவை சேர்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒரு போதும் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்கு தப்பவில்லை. உண்மையில் 1983 ம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தான் தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்கு தமிழர்கள் பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விட பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்தித்தார்கள்.

வழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஓரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றனர். வசதியிருந்தாலும் சொத்துகளை விட்டுச் செல்ல மனமற்றவர்களும், பிரயாண செலவுக்கே பணமற்ற ஏழை மக்களும், நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர்வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்த வர்க்கத்தை சேர்ந்தவராயினும் தேசப்பற்று காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.

83 ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின் மீது வெறுப்பும், தமிழ் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவர்க்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வு பூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கி தள்ளியது. புதிதாக சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக் கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் தோல்வி, சாத்வீக போராட்டத்தின் இயலாமையாக புரிந்து கொள்ளப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக் கட்சிகள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி "காணாமல்போனார்கள்." சில நாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வரும். பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது. இரண்டிலுமே மரணத்திற்கான சாத்தியக்கூறு இருப்பது முக்கிய காரணம். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றி பகிரங்கமாகவே பேசப்பட்டது.

இராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் தகர்ப்பு ஆகிய கெரில்லா தாக்குதல்களால் நிலை குலையும் படையினர், தமிழ்ப் பொது மக்களை கொன்று பழி தீர்த்துக் கொண்டனர். சில நேரம் காரணமின்றியும் படுகொலைகள் இடம்பெறும். பத்து பொதுமக்களை கொன்றால், அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச ஊடகங்கள் கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக சிங்களப் பொது மக்களுக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது, போராளிக் குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத் தந்தது. போர் சிலரை அரசியல்மயப் படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின் கரைகளுக்கு போய்ச் சேர்ந்தனர். மன்னார் தீவில் இருந்து அக்கரையில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கி.மி. தூரம் தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக் கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக்கரை நோக்கி சென்றன.

போராளிகள் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும். போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாக செல்லும். அதே நேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தபடுவதால், வேகம் குறைவாக செல்லும். மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாக போவதில்லை. இருப்பினும் இரவில் போகும் படகுகளை காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது. நடுக்கடலில் சுடப்பட்டு செத்தவர்களை விட, அதிக பாரத்தால் படகு கவிழ்ந்து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வீதமாகிலும் இந்தியக் கரையை அடைவதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகொன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டிய போதும், படகு மூழ்கி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருவரும் தமது இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டோம். ராமேஸ்வரம் அகதிகளைப் பதியும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.

ராமேஸ்வரத்தில் எம்மை பதிவு செய்த அதிகாரிகள், மண்டபம் இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழப் பதிந்து ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. எம்மோடு வந்த சிறு பிள்ளைகள் அச்சத்துடன் ஓடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. நாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப்பதாக, பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.

1984 ம் ஆண்டு, இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிரகாரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம்களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவ முகாம்களை சுற்றி வளைத்து காவலரண்களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும். சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடாநாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்.

1987 ம் ஆண்டு, இலங்கை இராணுவம் பெரும் படையெடுப்புடன் வட மராட்சி பிரதேசத்தை கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்தி வந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குவகித்தனர். 1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவு கட்டியது. இந்திய இராணுவம் தரையிறங்கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானமும் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழதமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. ஆனால் ரோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களை கூட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாக பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காக செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் தெரிய வந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம் அப்போதே செயல் வடிவம் பெற்றிருந்தது.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றோரில் பல வகையானவர்கள் அடங்குவர். மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத்தவர்களை விட வசதி குறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண்மையில் இருந்த பூகோள அனுகூலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதைவிட யாழ்ப்பாண மீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாக சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பியவர்கள்.

முதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர். வயிறு நிறைய சாப்பிட முடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட, குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில், எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும். இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் தாரளமாக வந்தது. அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியானவர்கள் பிற்காலத்தில் கொழும்பு நகரிலும் பெருகினர். அந்நிய நாணயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.

பல வருடங்களுக்குப் பின்னர், நெதர்லாந்து நாட்டின் பிரஜையாக இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதி முகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரை சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான வீட்டில், நண்பரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது. நான் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது, நண்பர் ஒழுங்காக பணம் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டார்கள். நான் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். அகதிகளுக்கான உதவிப்பணம், அங்கேயுள்ள வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்கு போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது, என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கு அதை புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. "ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங்களுக்கு தெரியாதா? அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா?" என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.

கொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த அண்ணனுக்கு, மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியை கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப் பட்டது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால், அங்கே ஒரு நாள் கூட தங்கியிருக்க முடியாதென்பது யதார்த்தம். தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.

பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கி விடும் பெற்றோரையும், பணம் சில நேரம் மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள். வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்த போது, பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர். அதே நேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும் பணம் குறைந்து விடுமோ, அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம். ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.


(...to be continued)

"(உயிர்நிழல்" (January-July 2009) இதழில் பிரசுரமானது.)
____________________________________________________________________


தொடரின் முன்னைய பதிவுகள்:
4.ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்
3. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்
2.தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்
1.கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்

2 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான கட்டுரை! ஆரம்பத்தில் 13 இராணுவ வீரர்கள் இறந்த பொழுது திருநேல்வேலியில் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பலரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை எழுதவில்லையே!

Kalaiyarasan said...

நன்றி, தங்கமுகுந்தன்.
தமிழ் அகதிகளின் புலம்பெயர்வுக்கான காரணங்களை அலசுவதே கட்டுரையின் நோக்கம். அதனால் தான் வேறு பல தகவல்களை சுருக்கிக் கொண்டேன்.