Friday, April 05, 2013

போர்க் குற்றவாளிகளை தண்டிப்பது எப்படி? - ஆர்ஜெந்தீன படிப்பினைகள்


உங்கள் நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் அல்லது இடதுசாரிகள் இருக்கிறார்களா? உலக நாடுகளில், மிக அதிகமாக வேட்டையாடப் பட்டு, அழித்தொழிக்கப் படும்  இனங்களில் அதுவும் ஒன்று. அவர்களை யாரும் சீண்டிப் பார்க்கலாம், மிரட்டலாம், அடிக்கலாம், சித்திரவதை செய்யலாம், பாலியல் வல்லுறவு செய்யலாம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கூட கொலை செய்யலாம். ஒட்டுமொத்தமாக இனப்படுகொலையும் செய்யலாம். இதையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாது. ஐ.நா. மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. மனித உரிமை ஸ்தாபனங்களுக்கு அதைப் பற்றி ஆராய நேரம் கிடையாது. ஊடகங்களைப் பொறுத்தவரையில், அதெல்லாம் செய்திகளே அல்ல. இது போன்ற சூழ்நிலை தான் உலகம் முழுவதும் நிலவுகின்றது. 

உலகப் புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த நாடான, ஆர்ஜெந்தீனாவில், 1976 ம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ அதிகாரிகள்; அரச எதிர்ப்பாளர்களான கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், மற்றும் பல இடதுசாரிகளை வேட்டையாடி அழித்தார்கள். அமெரிக்கா போன்ற "மனித உரிமைக் காவலர்களின்" ஆசீர்வாதத்தில் நடக்கும், "கம்யூனிச இனவழிப்பு", தேவைப்படும் போதெல்லாம் எல்லா மூன்றாமுலக நாடுகளிலும் அரங்கேற்றப்படும். இராணுவ சர்வாதிகாரி விடெலாவின் ஆட்சிக் காலத்தில், சுமார் முப்பதாயிரம் "அரச எதிர்ப்பாளர்கள்" கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று அஞ்சப் படுகின்றது. பெரும்பான்மையானோர் "காணாமல்போனோர்" பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்கள் எவ்வாறு கொல்லப் பட்டனர் என்பதை, அந்த அடக்குமுறை அரசில் பணியாற்றிய சில அதிகாரிகள், பின்னாளில் சாட்சியம் அளித்தனர். 

கம்யூனிஸ்ட் கட்சி, அல்லது ஏதாவது ஒரு இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், எல்லோரும் இரவோடிரவாக கடத்தப்பட்டு, தலைநகர் புவனஸ் அயர்சில் உள்ள கல்லூரி ஒன்றில் அடைத்து வைக்கப் பட்டனர். அங்கே வைத்து கடுமையாக சித்திரவதை செய்யப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்களும் சித்திரவதைக்கு தப்பவில்லை. ("மாற்றுக் கருத்தாளர்களின்" மனைவிகளாக இருந்தாலே, அது ஒரு குற்றமாக கருதப் பட்டது.) அந்தக் காலங்களில், நிறைய கர்ப்பிணிப் பெண்கள், வதை முகாம்களில் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.  மருத்துவ வசதிகளின்றி, தாதி மாரின் உதவியின்றி குழந்தை பெற வேண்டிய நிலைமை. அந்தப் பெண்கள் நிறைமாதக் கர்ப்பிணிகளாக இருந்த காலத்தில், அவர்களை  சித்திரவதை செய்த கொடியவர்கள், ஈன்ற குழந்தையை தாய்க்கும் காட்டாமல் பறித்துச் சென்றார்கள். 

அன்றே பிறந்த சிசுக்கள் மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த குழந்தைகளையும் தாய், தந்தையரிடம் இருந்து பிரித்து எடுத்துச் சென்றனர். கம்யூனிஸ்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும் மகனாக, மகளாக பிறந்தது தான், அந்தக் குழந்தைகள் செய்த ஒரேயொரு குற்றம். கம்யூனிஸ்டுகளின்  குழந்தைகளை, வலதுசாரி இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களிடம், அல்லது மேட்டுக்குடி குடும்பங்களிடம் வளர்ப்பதற்காக தத்துக் கொடுத்தனர். குழந்தைகளை மட்டுமல்ல, விபரம் அறியாத சிறு வயது பிள்ளைகளையும், பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு இடங்களில் வளர்த்தார்கள்.  அந்தக் குழந்தைகளுக்கு, சொந்தப் பெற்றோர் பற்றிய விபரங்கள் மறைக்கப்பட்டன. வேறு பெயர்கள் சூட்டப் பட்டன. போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. மேட்டுக்குடி வளர்ப்புப் பெற்றோரால், அந்தப் பிள்ளைகள் "கம்யூனிச விரோத கருத்துகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு" வளர்க்கப் பட்டனர். "கம்யூனிசத்தை வெறுப்பவன், அப்பன் பெயர் தெரியாத பிள்ளையாக இருப்பான்!" யாரும் கோபப் பட வேண்டாம். ஒரு காலத்தில், ஆர்ஜென்தீனாவில் அப்படி சொல்லக் கூடிய நிலைமை இருந்தது.





வதை முகாம்களில், சித்திரவதை செய்யப்பட்ட கைதிகள் கொல்லப் பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டதும், அவர்களை விமானப்படை விமானங்களில் ஏற்றிச் சென்றார்கள். விமானங்கள், கரையில் இருந்து வெகு தூரம், கடலின் மேல் பறக்கும் நேரம், கைதிகளை தூக்கிக் கடலில் போட்டார்கள். இவ்வாறு, காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க முடியாதவாறு, அனைத்துத் தடயங்களும் அழிக்கப் பட்டன. ஒரு மிகப்பெரிய வதை முகாம், அதன் தேவை முடிந்தவுடன் இருந்த இடம் தெரியாமல் முற்றாக அழிக்கப் பட்டது. புவனர்ஸ் அயர்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இயங்கிய வதை முகாம் மட்டும் இன்றைக்கும் நினைவுச் சின்னமாக நிலைத்து நிற்கின்றது. அங்கு கைதிகளாக அடைக்கப்பட்ட 5000 பேரில், 200 பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்திருக்கிறார்கள். 

ஆர்ஜென்தீனாவில் நடந்த போர்க்குற்றங்கள், அல்லது மனித குலத்திற்கு எதிரான படுகொலைகளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் ஒரு தடவையேனும், சம்பிரதாயபூர்வமான விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை. 30000 பேரின் படுகொலைக்கு காரணமானவர்களை  விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டுமென்று, எந்தவொரு உலக நாடும் கேட்கவில்லை. ஆனால், ஆர்ஜெந்தீன மக்கள் அதற்காக போராடினார்கள். கடுமையான இராணுவ சர்வாதிகார அடக்குமுறைக்கு மத்தியில், காணாமல்போன பிள்ளைகளின் அன்னையர்கள் போராடினார்கள். வயதான மூதாட்டிகள், தங்கள் காணாமல்போன உறவுகளை தேடி, இராணுவ தலைமையகம் முன்பு ஒன்று கூடினார்கள்.

Plaza de Mayo  என்ற சதுக்கத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். Plaza de Mayo என்பது, 1890 ம் ஆண்டு, ஸ்பெயினிடம் இருந்து ஆர்ஜெந்தீனா சுதந்திரமடைந்த நினைவுச் சின்னம் ஆகும். அந்த சதுக்கத்தில், ஆரம்பத்தில் பத்துப் பேர் கூட சேராத போராட்டத்தை, பொது மக்கள் புறக்கணித்தார்கள். பொது மக்கள் அவர்களை,  "கிறுக்குப் பிடித்த அன்னையர்" என்று கேலி செய்தனர்.  காணாமல்போன பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை தேடி, ஆற்றாமையினால் அழுது கொண்டே போராடத் தொடங்கிய தாய்மார், பாட்டிமாரின் போராட்டம், "Madres de Plaza de Mayo" என்ற பெயரில் அமைப்பு வடிவம் எடுத்தது. 

"Madres de Plaza de Mayo" அல்லது பிளாசா டெ மாயோவின் அன்னையர் என்ற அமைப்புக்கு, வெளிநாடுகளில் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். ஆர்ஜெந்தீன சர்வாதிகார அரசை எதிர்த்தும், காணாமல்போன 30000 பேருக்கு நீதி கோரியும் தத்தமது நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்வதேச ஒருமைப்பாடு இருந்தால், எதையும் சாதிக்கலாம், போர்க்குற்றவாளிகளையும் தண்டிக்கலாம் என்பதற்கு, ஆர்ஜெந்தீன அன்னையர் அமைப்பு ஒரு உதாரணமாகும். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், ஆர்ஜெந்தீன அன்னையர் அமைப்பும், துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பும் சேர்ந்து, "காணாமல்போதலுக்கு எதிரான சர்வதேச கமிட்டி"  (ICAD) ஒன்றை உருவாக்கினார்கள். அதில் பல சர்வதேச ஆர்வலர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ICAD  அமைப்பின் நெதர்லாந்துக் கிளையை ஸ்தாபித்த காலத்தில் இருந்தே, நானும் அந்தக் கமிட்டியில் ஒரு அங்கத்தவராக இருந்து வருகின்றேன். அதனால், ஆர்ஜெந்தீன மக்களின் போராட்டத்தில், நானும் சிறிதளவு பங்களிப்பை செலுத்தி உள்ளேன்.  ICAD அமைப்பின் உருவாக்கம், ஆர்ஜெந்தீன அன்னியர்களின் போராட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே. அதை விட, பல அமெரிக்க - ஐரோப்பிய கம்யூனிஸ்ட் அனுதாபிகள், இடதுசாரிகள், அன்னையர் அமைப்பிற்கு தம்மாலியன்ற பொருளுதவி வழங்கி உள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவில், நியூயோர்க் நகர மருத்துவர்கள் சிலரின் முயற்சி திருப்புமுனையாக அமைந்தது. 

தமது போராட்டத்தில் முன்னேற்றம் கண்டு வந்த ஆர்ஜெந்தீன அன்னையர்களுக்கு ஒரு பிரச்சினை எழுந்தது. அறியாப் பருவத்தில், பறித்தெடுக்கப் பட்ட குழந்தைகள், இன்று வளர்ந்து பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களாக இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? காணாமல்போன அல்லது கொலை செய்யப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள் இவர்கள் தான் என்பதை, உறுதிப் படுத்துவது எப்படி? அதிர்ஷ்டவசமாக அப்போது மருத்துவத்துறையில் வளர்ந்திருந்த மரபணு (DNA) அறிவியல் கைகொடுத்தது. அன்னையரின் போராட்டத்திற்கு ஆதரவான, நியூயோர்க்கை சேர்ந்த மருத்துவர்கள், இலவசமாக மரபணு  பரிசோதனைகளை செய்து தருவதற்கு முன்வந்தார்கள். காணாமல்போனவர்களின் உறவினர்களின் மரபணுவுடன், பிள்ளைகளின் மரபணு ஒப்பிட்டுப் பார்க்கப் பட்டது. இதற்கிடையே, எண்பதுகளில் நடந்த மால்வினாஸ் (போல்க்லாந்து) யுத்த தோல்வியினால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக,  இராணுவ சர்வாதிகார ஆட்சி நிலைகுலைந்தது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த ஆட்சிமாற்றம், அன்னையர் அமைப்பின் போராட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. 

இவ்விடத்தில் ஒரு விடயத்தை நாம் மறந்து விடக் கூடாது. 1976 ம் ஆண்டு, ஆர்ஜந்தீனாவில் இராணுவ சதிப்புரட்சி நடந்து, இராணுவ அதிகாரிகள் ஆட்சி நடத்தினாலும், பெரும்பான்மை மக்கள் அடக்குமுறையை உணராமல் இருந்தனர். அதாவது, நாட்டில் எல்லாம் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. 1978 ம் ஆண்டு, சர்வதேச கால் பந்து விளையாட்டுப் போட்டிகள் நடக்குமளவிற்கு, ஆர்ஜந்தீனாவில் "இயல்பு நிலை" நிலவியது.  அப்படியான "அமைதியான" காலகட்டத்தில் தான், ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். தமது அயலில், அப்படியான கொடுமைகள் நடப்பதை, பெரும்பான்மையான ஆர்ஜெந்தீன மக்கள் அறியாமல் இருந்தனர். அதனால் தான், Plaza de Mayo வில் தங்கள் உறவுகளைத் தேடி அழுது கொண்டிருந்த அன்னியர்களின் போராட்டம் அவர்களுக்கு  புதுமையாகப் பட்டது. அதனால் தான், மக்கள் அவர்களுக்கு "கிறுக்குப் பிடித்த அன்னையர்கள்" என்று பட்டப் பெயர் சூட்டினார்கள். 

அதாவது, ஒரு காலத்தில் மக்கள் வலதுசாரி ஆட்சியாளர்களின் தேசியவாத பரப்புரைகளுக்கு மயங்கிக் கிடந்தனர். சர்வதேச சமூகமும், அடக்குமுறையாளர்களின் பக்கம் நின்றதால், எந்த வழியிலும் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்ற ஸ்ரீலங்கா அரசு,  ஈழப்போரின் இறுதியில் வன்னியில் நடந்த படுகொலைகளை, சிங்கள மக்கள் அறிய விடாமல் மறைத்து வந்தது. ஆனால், போருக்குப் பின்னராவது, சில சர்வதேச ஊடகங்கள் கவனமெடுத்து,  படுகொலைகள் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. அதனால், குறைந்த பட்சம், ஓரளவு ஆங்கிலப் புலமை பெற்ற சிங்களவர்களாவது, தமக்கு மறைக்கப் பட்ட உண்மைகளை தெரிந்து கொண்டனர். 

ஆர்ஜெந்தீன விவகாரத்தில், அப்படி எதுவும் நடக்கவில்லை.  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், அமெரிக்கா ஆர்ஜன்தீனாவுக்கு எதிராக தீர்மானம் எதையும்  கொண்டு வரவில்லை. இன்று வரையில், எந்தவொரு சர்வதேச ஊடகமும் ஆர்ஜெந்தீன படுகொலைகள் குறித்து அதிக அக்கறை காட்டவில்லை. ஏனென்றால், படுகொலை செய்யப் பட்ட மக்கள், "கம்யூனிஸ்டுகள்" என்று கருதப் பட்டவர்கள் என்பதால், யாரும் அவர்களுக்காக கண்ணீர் சிந்தவில்லை. அப்படியான சந்தர்ப்பத்தில், அன்னையர் அமைப்பின் போராட்டமானது, போர்க்குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புமளவிற்கு வெற்றி பெற்றுள்ளமை, ஒரு மாபெரும் சாதனை ஆகும். 

ஒரு நாட்டில் இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமானால், முதலின் அந்த நாட்டில் புரட்சிகர சமூக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆர்ஜெந்தீன அன்னையர்களின் போராட்டத்தில் இருந்து, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் இவை. சர்வதேச மூலதனத்தினால் முண்டு கொடுக்கப்பட்ட, சர்வாதிகாரி விடெலா அரசின் வீழ்ச்சி. தொன்னூறுகளில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி.  அதன் காரணமாக ஸ்தம்பிதமடைந்த ஆர்ஜெந்தீன பொருளாதாரம். நலிவடைந்த மக்களின் அரசுக்கு எதிரான எழுச்சி. அதனால் ஏற்பட்ட புதிய இடதுசாரி அலை, என்பன யாரும் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கின. உண்மையான ஜனநாயக சூழலில் நடந்த பொதுத் தேர்தலில்,  இடதுசாரி வேட்பாளர் Néstor Kirchner வெற்றி பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டார். அவர் மக்கள் பிரதிநிதியாக தெரிவானவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று, கடந்த கால இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர்களை, பகிரங்கமாக "போர்க்குற்றவாளிகள்" என்று அறிவித்தார். அரச அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த, விடெலா போன்ற போர்க்குற்றவாளிகளின் படங்கள் அப்புறப் படுத்தப் பட்டன. 

ஆர்ஜன்தீனாவின் மக்கள் அரசு, போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த முன்னாள் ஆட்சியாளர்கள், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டனர். "கிறுக்குப் பிடித்த அன்னையர்களின்" வாக்குமூலங்களை  போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தலைமைக் குற்றவாளியான விடெலாவுக்கு ஐம்பதாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அவருடன் ஒத்துழைத்த பிற குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். காணாமல்போனவர்களின் குழந்தைகள், தமது பெற்றோரை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களின் தாய், தந்தையர்கள் கொல்லப் பட்டு விட்டாலும்; தமது பேரப் பிள்ளைகளை காணாமல் தேடிக் கொண்டிருந்த தாத்தா மார், பாட்டி மாரின் அரவணைப்பு கிடைத்தது. 

அன்னையர் அமைப்பின் நீண்ட போராட்டத்தின் விளைவாக, கடந்த கால ஆட்சியாளர்களின் குற்றங்களை அறிந்து கொண்ட ஆர்ஜெந்தீன மக்கள், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதே நேரத்தில், "மனித உரிமைகளின் காவலர்களான மேற்கத்திய நாடுகள் என்ன செய்தன? முன்னாள் போர்க்குற்றவாளிக்ளுடன் உறவு முறை கொண்டாடினார்கள். நெதர்லாந்தின் மன்னராக முடி சூடிக் கொள்ளவிருக்கும் வில்லம் அலெக்சாண்டர், சொறேகீத்தா என்ற போர்க்குற்றவாளியின் மகளை திருமணம் முடித்தார். போர்க்குற்றவாளிகளுடன் ஒத்துழைத்த, இரண்டு இடதுசாரி ஆர்வலர்கள் காணாமல்போன சம்பவத்திற்கு காரணமான எசுயிஸ்ட் பாதிரியார்  Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டார். நாங்கள் "சர்வதேச சமூகம்" என்று மதிப்பளிக்கும் மேற்கத்திய நாடுகள், உண்மையில் யாருடைய பக்கம் நிற்கின்றனர் என்பதை, பல தடவைகள் தெளிவாக உணர்த்தி உள்ளனர். நாங்கள், அவர்களின் சுயரூபத்தை இன்னமும் புரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 


*************************************

ஆர்ஜெந்தீன அன்னையர் அமைப்பின் போராட்ட வரலாறு பல்வேறு ஆவணப் படங்களாக பதிவு செய்யப் பட்டுள்ளது. நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்ட ஆவணப் படம் ஒன்றை இங்கே பார்வையிடலாம்:
De dwaze oma's van Argentinië (Holland Doc)


ஆர்ஜெந்தீனா பற்றிய முன்னைய பதிவுகள்:
1. ஆர்ஜென்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி
2. புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி!


Wednesday, April 03, 2013

ஆதித் தமிழரின் பெருமைக்குரிய பொதுவுடைமை நாகரீகம்


"கம்யூனிச சித்தாந்தம் என்பது, அழிந்து போன கடந்த காலம் மட்டுமல்ல, அது ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் சொந்தமான, தமிழர்களுக்கு அந்நியமான கொள்கை..." என்று இன்றைக்கும் பல தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த "அப்பாவி" தமிழர்கள், ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய தேசியவாதத்தையும், முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். ஆனால், பொதுவுடைமை கொள்கை, தமிழர்களின் பழம்பெரும் பண்பாடு என்பதை அறியாது இருக்கின்றனர். சுமார் 150 வருடங்களுக்கு முன்னர், கம்யூனிசத்தை நவீன அரசியல் சித்தாந்தமாக நிலைநாட்டிய, கார்ல் மார்க்சும், எங்கெல்சும் தமது நூல்களில் ஆதி கால கம்யூனிச சமூக கட்டமைப்புகளை உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளனர். அவர்கள் தமிழர்களைப் பற்றியும் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். எங்கெல்ஸ் எழுதிய, "குடும்பம், அரசு, தனிச் சொத்து ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் பின்வரும் வாசகங்கள் எழுதப் பட்டுள்ளன.

"சொந்தங்களுக்கு இடையிலான உறவு முறைப் பெயர்கள், தென்னிந்தியாவில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், நியூயோர்க் மாநிலத்தில் வாழும் செனெகா இரோகுவாஸ் (செவ்விந்தியர்) மத்தியிலும், இன்று வரையில் ஒரே மாதிரி புழங்குகின்றன.....
ஒரு இரோகுவாஸ் ஆண், தங்களது சொந்தப் பிள்ளைகளை மட்டும் மகன்கள், மகள்கள் என்று அழைப்பதில்லை. சகோதரர்களின் பிள்ளைகளையும் அவ்வாறு அழைக்கின்றனர். சகோதரர்களின் பிள்ளைகளும் அவரை அப்பா (பெரியப்பா/சித்தப்பா) என்று அழைக்கும். மறு பக்கத்தில், அவர் தனது சகோதரிகளின் பிள்ளைகளை மருமகன்கள், மருமக்கள் என்று அழைக்கின்றார். சகோதரிகளின் பிள்ளைகளும் அவரை மாமா என்று அழைக்கின்றன. அதே போன்று, இரோகுவாஸ் பெண் தனது சகோதரிகளின் பிள்ளைகளை மகன்கள், மகள்கள் என்று அழைக்கின்றார். அந்தப் பிள்ளைகள் அவரை அம்மா (பெரியம்மா/சித்தி) என்று அழைக்கின்றன.  சகோதரர்களின் பிள்ளைகள், ஒன்றையொன்று அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று உறவுமுறை கொண்டாடுகின்றன. மறுபக்கத்தில், ஒரு பெண்ணின் பிள்ளைகளும், அவளது சகோதரனின் பிள்ளைகளும், மச்சான், மச்சாள் உறவுமுறை கொண்டாடுகின்றன." - எங்கெல்ஸ்

கம்போடியாவிலும், மெக்சிகோவிலும் தமிழரின் பூர்வீகம் தேடி அலைபவர்கள், தமிழகம் தவிர்ந்த பிற இந்திய பகுதிகளில் அதனை தேடுவதில்லை. அதற்கு காரணம், "தேசியம்" என்ற பிரிட்டிஷாரால் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேசியவாத கோட்பாடு, எப்போதும் "உன்னத நாகரீகம்" பற்றிய கதையாடல்களை மட்டுமே விரும்புகின்றது. அது மண்ணுக்கேற்ற தேசியமாக வளர்த்தெடுக்கப் படவில்லை. மண்ணுக்கேற்ற தமிழ் தேசியமானது, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த தமிழரின் பூர்வீகத்தையும், இந்தியாவிலேயே வேரூன்றிய பழம்பெரும்  பொதுவுடைமை நாகரீகத்தையும் அறிந்து வைத்திருக்கும். இந்த இரண்டையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், பல்வேறு இனங்கள் கலந்து உருவான தற்காலத் தமிழர்களிடம் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. ஆதிவாசிகள், அல்லது பழங்குடி இனங்கள் என்று அழைக்கப்படும் மக்களிடமே, தமிழரின் பூர்வீகம் குறித்த இரகசியம் மறைந்திருக்கிறது.

தமிழர், மலையாளிகள்,தெலுங்கர், கன்னடர் ஆகிய தென்னிந்திய இனங்களை, "திராவிடர்கள்" என்று மானிடவியல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். ஆனால், திராவிடர்கள் தென்னிந்தியாவில் மட்டும் வாழ்கின்றனரா?  இந்த இனங்களை திராவிடர்கள் என்று அழைப்பதை விரும்பாதவர்கள்,  "பூர்வீகத் தமிழர்கள்" என்று கருதிக் கொள்கின்றனர். ஒரே மாதிரியான தோற்றம், கலாச்சாரம், மொழிகளை கொண்ட தென்னிந்திய இனங்களை, திராவிடர் என்றோ, தமிழர் என்றோ அவரவர் வசதிக்கேற்றவாறு அழைத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில், இந்தியா முழுவதும், திராவிடர்/தமிழர் பரந்து வாழ்ந்தார்கள் என்பதனை பலர் ஏற்றுக் கொண்டாலும், அதனை நிரூபிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.  அதற்கு பெரிதாக சிரமப் படத் தேவையில்லை.

தேசியவாத அரசியலில் மிகவும் பிரபலமான "ஆரியர்-திராவிடர் கோட்பாடு", மிகவும் இலகுபடுத்தப் பட்டும், தவறாகவும் புரிந்து கொள்ளப் படுகின்றது. இவர்கள் எப்போதும் நாகரீகமடைந்த மொழிகளையே கணக்கில் எடுக்கிறார்கள். பழங்குடி இனங்களை கண்டு கொள்வதில்லை. நாகரீகமடைந்த திராவிட மொழிகளான, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்ல, தமிழ் கூட கணிசமான அளவு சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன. இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்த மொழிக் கலப்பினால் தான் அவை நாகரீகமடைந்தன. சமஸ்கிருதத்துடன் கலக்காமல், தமது சுயத்தை பாதுகாத்த மொழிகளை பேசியவர்கள், இன்றைக்கும் "பழங்குடி இனங்கள்" என்று அழைக்கப் படுகின்றனர்.

இந்தியாவில் மிகப்பெரிய ஆதிவாசி இனங்களில் ஒன்றான, "கோண்டு" பழங்குடி இன மக்கள் திராவிடர்கள் ஆவர். அவர்களின் உருவத் தோற்றம் அதனை உறுதிப் படுத்துகின்றது. கோண்டுகள் (தெலுங்கு மொழியில்: மலைவாசிகள்) பேசும் மொழி, திராவிட மொழிகளில் ஒன்றாக சேர்க்கப் பட வேண்டும். ஆனால், திராவிட/தமிழர் இன உணர்வு அரசியல் பேசுவோர் கூட அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது ஏன் என்று தெரியவில்லை. இது ஒன்றும் அற்ப விடயமல்ல. கோடிக்கணக்கான கோண்டு இன மக்கள், மத்திய இந்தியப் பகுதிகளில் வாழ்கின்றனர். இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேஷ், ஓடிஸா, சட்டிஸ்கார் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர். அவர்கள் முரியா, குட்டியா, என்று பல உப பிரிவுகளாக பிரிந்துள்ளனர். 

ஒரு காலத்தில், கோண்டுகளின் மன்னர்கள், மாபெரும் ராஜ்ஜியங்களை   ஆண்டார்கள். இன்றைய வட, மத்திய இந்தியாவில் பெரும் பகுதியை அது உள்ளடக்கி இருந்தது. அந்நியர்களின் படையெடுப்பு, பலவீனமான நிர்வாகம், புராதன ஆயுதங்கள் போன்ற குறைபாடுகள் காரணமாக, ராஜ்ஜியத்தை இழந்தார்கள். ஆரம்பகால அந்நியப் படையெடுப்பாளர்கள் ஆரியர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், பதினான்காம் நூற்றாண்டில் மொகலாயர் காலத்திலும் கோண்டு ராஜ்ஜியம் இருந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில், மராட்டிய மன்னர்களின் படையெடுப்பின் பின்னர் தான் அது முற்றாக அழிந்துள்ளது. அதன் பிறகு, கோண்டுகளின் வாழிடங்கள், மெல்ல மெல்ல அந்நிய இனங்களினால் ஆக்கிரமிக்கப் பட்டன. இறுதியில், அவர்கள் காடுகளையும், மலைகளையும் நோக்கி விரட்டப் பட்டனர். ஹிந்திக் காரர்கள், மராட்டியர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் போன்ற பிற "நாகரீகமடைந்த இனங்கள்", கோண்டுகளின் எதிரிகளாக இருந்துள்ளன. ஒரு காலத்தில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட மக்கள், "பழங்குடி இனமாக" மாறிய, சுருக்கமான கதை இது. "பழங்குடி இனம் என்றால், நாகரீகமடையாத காட்டுவாசிகள், அவர்களுக்கென்று வரலாறு கிடையாது," என்ற பொதுவான தப்பெண்ணத்தை இது தவிடுபொடியாக்குகின்றது. 

பிற்காலத்தில், கோண்டு மக்கள் இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டாலும்; அவர்களுக்கே உரிய தனித்துவமான  கலை, கலாச்சாரங்களை, இன்றைக்கும் விடாது பின்பற்றி வருகின்றனார். அதில் ஒன்று, கோட்டுல் (Ghotul) சமூக அமைப்பு. தமிழில் "கொட்டில்" என்ற சொல்லும், அந்த கலாச்சார அமைப்பில் இருந்து வந்திருக்கலாம். கோட்டுல் சமூகமானது, ஒரு புராதன கால பொதுவுடைமை அமைப்பாகும். அதாவது அங்கே ஒரு கூட்டுத்துவ, தோழமை கலாச்சாரம், சிறு வயதில் இருந்தே வளர்க்கப் படுகின்றது. மனித நாகரீகம் தோன்றிய ஆரம்ப காலங்களில், உலகம் முழுவதும் பொதுவுடைமை சமுதாயங்கள் இருந்ததாக மார்க்சியம் கூறுகின்றது. ஆனால், மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாத முதலாளித்துவவாதிகள், அந்தக் கோட்பாட்டை நிராகரித்து வந்துள்ளனர். உலகம் முழுவதும் தனியுடமை சமுதாயமே இருந்தது என்பது அவர்களது நம்பிக்கை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் அப்படி நம்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு அருகிலேயே, சில நூறு மைல்களுக்கு அப்பால், புராதன பொதுவுடைமை சமுதாயத்தின் எச்சங்கள் இன்றைக்கும் உள்ளன என்ற உண்மை தெரியாது.

கோட்டுல் சமூகம் என்பது, ஒரு சிறுவர்களின் குடியரசு. அது போன்ற புராதன கால பொதுவுடைமை சமூகங்களை பின்பற்றித் தான், முன்னாள் சோவியத் யூனியனில், "கொம்சொமோல்" என்ற இளைஞர், மாணவர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அது ஒரு நவீன கால அமைப்பு. இரண்டுக்கும் இடையில் கோட்பாட்டு ரீதியிலான ஒற்றுமை இருந்தாலும், வித்தியாசங்களும் உண்டு.  இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய கிரேக்க ஜனநாயக அரசுக்கும், இன்றைய மேற்கத்திய ஜனநாயக அரசுகளுக்கும் இடையிலான வித்தியாசம் போன்றது. கோண்டு பழங்குடி இன மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும், இன்றைக்கும் கோட்டுல் கலாச்சாரம், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கின்றது.

ஒரு ஊரில், பெரியவர்களும், பதின்ம வயது சிறுவர்களும் சேர்ந்து, பெரியதொரு கொட்டிலை கட்டுவார்கள். அதிலே அதிக பட்சம் அறுபது, எழுபது சிறுவர்கள் தங்க முடியும். கொட்டில் கட்டி முடிந்ததும், அங்கு வசிக்க வரும் சிறுவர்களுக்கு பெரியவர்கள் வகுப்புகள் எடுப்பார்கள். பெரும்பாலும் அது பாலியல் சம்பந்தமான கல்வியாக இருக்கும். அது மட்டுமல்லாது, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். "நாகரீகமடைந்த" இந்திய சமூகத்தில், பாலியல் சம்பந்தமான அறிவு புகட்டல் பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப் படவில்லை.  இன்றைக்கும், சராசரி இந்தியர்கள் மத்தியில் பாலியல் ஒரு பேசாப் பொருளாகவே இருக்கின்றது. ஆனால், பழங்குடியின மக்கள் சிறு வயது முதலே பாலியல் அறிவு பெற்றவர்களாக வளர்கின்றனர்.

பொதுவாக, இந்தியப் பழங்குடி இனங்கள் மத்தியில், சுதந்திரமான பாலியல் உறவுகள் அங்கீகரிக்கப் பட்டாலும், கோண்டு மக்களின் கொட்டில் அமைப்பு முறை, அதிலிருந்து மாறுபடுகின்றது. கொட்டில் சமூகத்தில் வசிக்க நேரும் சிறுவர்களுக்கு பாலியல் சுதந்திரம் வழங்கப் படுகின்றது. அதே நேரம், கட்டுப்பாடாக இருக்கவும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால் அந்த மக்களிடையே, போட்டி, பொறாமை, பிறன்மனை நோக்குதல், கள்ள உறவு, விபச்சாரம் போன்ற தீமைகள் அறவே இல்லை எனலாம். மேற்கொண்டு இதைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, எல்வின் என்ற மானிடவியல் ஆராய்ச்சியாளர் எழுதிய நூலில் இருந்து சில பகுதிகளை தருகிறேன்.

"அவுஸ்திரேலியா, ஆசியா முதலிய கண்டங்களில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களிடையே இத்தகைய ஸ்தாபனங்கள் பரவி இருந்தன. ஆனால் முரியா மக்களிடையே (கோண்டு இனப் பிரிவு) இயங்கிய கோட்டுல் தான் உலகிலேயே மிகச் சிறந்த அமைப்பாக விளங்கிற்று என்று சொல்லலாம்....."

"முரியா மக்களில் மணமாகாத சிறுவர்களும், சிறுமிகளும் அந்தக் கோட்டுல்  அமைப்பில் அங்கத்தினர்களாக  இருப்பது அவசியம். அங்கத்தினர் பதவி பெறுவதற்கு விரிவான பல பயிற்சிகள் உண்டு.... சிறுவர்களின் தலைவனுக்கு சார்த்தார் என்று பெயர்; சிறுமிகளின் தலைவிக்கு பெலோசா என்று பெயர் கொடுக்கப்பட்டது. அங்கத்தினர்களில் பையன்களுக்கு செலிக் என்றும், பெண்களுக்கு மோட்டியாரி என்றும் பெயர்கள் வழங்கின. சமூக சம்பந்தமான நிகழ்ச்சிகளில் செலிக்குகளுக்கும், மோட்டியாரிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப் பட்டன."

 "இந்தப் பழைய முறையின் மாற்றுருவமான இரண்டாவது வகை கோட்டுலில், நிரந்தர உறவுகள் தடை செய்யப் பட்டன. ஒரு குறிப்பிட்ட மோட்டியாரி தனக்கு சொந்தமானவள் என்று எந்த செலிக்கும் சொல்லிக் கொள்ள முடியாது. ஒரு சிறுவன், ஒரு சிறுமியுடன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து உறவு கொள்ளக் கூடாது. தொடர்ந்து நீடிக்கும் உறவைத் தடுப்பதற்கும், உடைமை, பொறாமை உணர்ச்சிகளை அகற்றுவதற்கும், சமுதாய ரீதியில் பொதுவுடைமை கொண்டாடி இயங்குவதற்கும் உதவும் முறையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோட்டுல் திருமணம், கோட்டுல் தோழமை என்ற தொடர்புகள் கிடையாது. ஒவ்வொருவரும் மற்ற எல்லோருக்கும் உரித்தானவர்கள் என்ற சூழ்நிலை நிலவிற்று....."

"இல்லற ஒழுக்கத்திலும், மண வாழ்க்கை உறவில் தாம்பத்திய விசுவாசத்திலும், முரியா மக்களை விட உறுதியான உணர்வு கொண்டவர்கள் கிடையாது என்பது ஒரு ரசமான விடயம். மணமான பெண்கள் சோரம் போவது மிக அபூர்வம்...."
"நம்முடைய நாகரிக வாழ்வின் மாசுகளான கள்ளத்தனமான ஒழுக்கக்கேடுகள் கோட்டுல் இளைஞர்களிடம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.... வேசிப் பழக்கம் நினைவிலும் நடக்கக் கூடாத விஷயமாக இருந்தது. மோட்டியாரிப் பெண் இவளும் தன்னுடைய உடலை பணத்திற்கு விற்க சம்மதிக்க மாட்டாள்."
(எல்வின் கண்ட பழங்குடி மக்கள், விழுதுகள் பதிப்பகம்)

கோட்டுல் வாழ்வில், எந்தத் தருணத்திலும் சிறுவர்கள், சிறுமிகள் வேறு வேறாக பிரித்து வைக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்றாக உணவு உண்ணுகின்றனர். நதியில், குளத்தில் ஒன்றாக நீராடுகின்றனர். எல்லோரும் ஒரே இடத்தில், ஒன்றாக படுத்து உறங்குகின்றனர். இத்தகைய பாலியல் சமத்துவத்தை, "நாகரீகமடைந்த இந்தியர்களிடம்" எதிர்பார்க்க முடியாது. மேற்கத்திய நாடுகளில், 20 ம் நூற்றாண்டில் தான், பாடசாலைகளில் பாலியல் கல்வி அறிமுகப் படுத்தப் பட்டது. "நாகரீகமடைந்த இந்தியாவில்" இன்னமும் அது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் கோட்டுல் முகாமில், பாலியல் கல்வி சிறுவர்களுக்கு கற்பிக்கப் படுகின்றது. அதனால் பால்ய பருவத்தில் கர்ப்பமடைவதும் தவிர்க்கப் படுகின்றது. (இன்றைக்கு பாலியல் கல்வி புகட்டப்படாத பல நாடுகளில், சிறுமிகள் கர்ப்பமடைவது ஒரு சமூகப் பிரச்சினையாக உள்ளது.)  எல்வின் எழுதியதைப் போல, அது ஒரு பல்கலைக்கழகம். மாணவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாகவும் இருக்கின்றனர். கோட்டுல் முகாமில் சேரும் சிறுவர்கள், பாலியல் கல்வி மட்டும் கற்பதில்லை. பயிர் செய்வது உட்பட பல தொழில்நுட்ப அறிவையும் பெற்றுக் கொள்கின்றனர்.

கோண்டு பழங்குடி மக்கள் மத்தியில், எந்தக் காலத்திலும் தனியுடைமை பொருளாதார உறவுகள் இருந்ததில்லை. நிலம் அனைவருக்கும் பொதுவானது. விவசாயம் செய்வதானாலும், வேட்டையாடுவதானாலும் எல்லோரும் கூட்டு உழைப்பை வழங்குவார்கள். அவற்றில் கிடைக்கும் விளை பொருட்களும் அனைவருக்கும் பொதுவானது. கோண்டு மக்களின் பொதுவுடைமை கலாச்சாரம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலம் வரையில் எந்த இடையூறுமின்றி தொடர்ந்தது. இந்தியா முழுவதிலும், முதலாளித்துவ பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், பழங்குடி இனத்தவர்களின் வாழிடங்களில் பெரியதொரு பிரச்சினையை எதிர்நோக்கினார்கள். இந்தியாவில் உள்ள நிலங்கள் எல்லாம், யாரோ ஒருவருக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றினார்கள். பழங்குடி இனத்தவரின் நிலங்கள் பொதுவுடமையாக இருந்ததால், அதனை "இந்திய அரசுக்கு சொந்தமான நிலம்" என்று பிரகடனம் செய்தார்கள்.

அமெரிக்க கண்டத்தை காலனிப் படுத்திய ஸ்பானிஷ்காரர்கள், "ஆண்டவரின் பெயரால், இந்த நிலங்கள் எல்லாம் ஸ்பெயின் மன்னருக்கு சொந்தமானவை...." என்று, யாருமற்ற வெட்ட வெளியில் நின்று அறிவித்து விட்டு, பூர்வகுடியினரின் அபகரித்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர்களும் அதைத் தான் இந்தியாவில் செய்தனர். "சுதந்திரமடைந்த" இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, உள்ளூர் இந்தியர்களும், ஆங்கிலேயரின் காணிச் சட்டத்தை பின்பற்றினார்கள். நர்மதா அணைக்கட்டு திட்டத்திற்காக, கோண்டு பழங்குடியினரை அவர்களின் வாழிடங்களில் இருந்து விரட்டினார்கள். இந்திய அரசு, பழங்குடியின மக்களின் நிலங்களை, டாட்டா, வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டது. இரும்புத் தாது, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக, பழங்குடியின மக்களின் கிராமங்களை அழித்து, அவர்களை இடம்பெயர வைத்தார்கள்.

பலமான அரச இயந்திரத்தை எதிர்ப்பதற்கு திராணியற்ற கோண்டு பழங்குடியின மக்களை, மாவோயிஸ்டுகள் ஒன்று திரட்டி திரட்டி போராட வைத்தார்கள். இன்றைக்கு, மாவோயிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவான, மக்கள் விடுதலைப் படையில், ஆயிரக் கணக்கான பழங்குடி இன மக்கள் போராளிகளாக சேர்ந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் கூட, அம்பு, வில் போன்ற புராதன ஆயுதங்களை மட்டுமே கண்ட மக்கள், இன்றைக்கு AK - 47, M - 16,  LMG போன்ற நவீன ஆயுதங்களை கையாளுமளவிற்கு வளர்ந்துள்ளனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், கம்யூனிசம் என்பது கடந்த காலம் என்றும், இனிமேல் உலகில் எங்குமே கம்யூனிச இயக்கங்கள் தோன்றாது என்றும் பலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் பல படித்தவர்கள் கூட, அத்தகைய மூட நம்பிக்கையை கொண்டுள்ளனர். அப்படியான பின் நவீனத்துவ காலகட்டத்தில், இந்தியாவில் மாவோயிஸ்டுகள், இன்று அரசுக்கு சவால் விடும் சக்தியாக வளர்ந்தது எப்படி?

நேபாளத்தில், ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களும் தான், மாவோயிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள். பெரும்பான்மையான போராளிகள், அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் தான். அதே போன்று, இந்திய மாவோயிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கமும், பழங்குடியின மக்களின் ஆதரவினால் தான் வளர்ந்தது. முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்வதற்காக, அல்லும் பகலும் மாடாக உழைக்கும், "நாகரீகமடைந்த மனிதர்களான" எமக்குத் தான், கம்யூனிசம் ஒரு கற்பனைக் கதையாக தெரிகின்றது. புராதன கம்யூனிச சமுதாயத்திலேயே இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியின மக்களுக்கு அது ஒன்றும் புதினமல்ல. கோண்டு பழங்குடியின கிராமங்களுக்கு  சென்ற மாவோயிஸ்டுகள், அங்கு தமது கொள்கையை பிரகடனம் செய்த பொழுது, அவர்கள் உள்ளூர் மக்களால் வரவேற்கப் பட்டதில் வியப்பில்லை. எமக்குத் தான் அது புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ஏனென்றால், நாங்கள் ஆங்கிலேயரின் உடை உடுத்தி, ஆங்கிலேயரின் கல்வி கற்று, ஆங்கிலேயர்கள் போன்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். பிரிட்டனில் ஒரு கம்யூனிசப் புரட்சி நடந்தால் மட்டுமே, நாங்கள் அதனை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றத் தயாராக இருக்கிறோம்.

***************************

உசாத்துணை:
1. எல்வின் கண்ட பழங்குடிகள், வெரியர் எல்வின், தமிழில் சிட்டி (வெளியீடு: விழுதுகள் பதிப்பகம்)
2. Adivasi, Het andere India, Frits Cowan (Koninklijk Instituut voor de Tropen)
3.The Origin of Family, Private Property and State, Friedrich Engels (குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)

இணையத் தளங்கள்:
Ghotul, http://en.wikipedia.org/wiki/Ghotul Madia ghotul residence for adolescents

Madia ghotul residence for adolescents from Indian Tribal Heritage on Vimeo.

Sunday, March 31, 2013

ஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை!


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை! சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி விடப் பட்டு, உயிர் பிழைத்து எழுந்தார். அதன் பிறகு நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்தார். இன்றைக்கும் பலர், இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் படவில்லை என்று நம்புகின்றனர். அதற்கு, அவர்கள் நிறைய காரணங்களை கூறுகின்றனர். 

இயேசுவை ஆணியால் அறைந்த காரணத்தினால், இரத்தப் பெருக்கு ஏற்பட்டு, மூச்சடக்கி மரணமடைந்திருக்கலாம் என்று தான் பொதுவாக நம்பப் பட்டது. இன்று, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள சில கிறிஸ்தவ பக்தர்கள், ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளி அன்று, தம்மை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர். சில மணி நேரங்களின் பின்னர், ஆணிகள் அகற்றப்பட்டு, சிலுவையில் இருந்து இறக்கி விடப் படுகின்றனர். இன்று வரையில் யாரும் சிலுவையில் சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அதாவது, சிலுவையில் ஆணியால் அறையப் பட்டாலும், சில மணிநேரங்களில் மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அதற்கு நாள் கணக்காகலாம். மேலும், இந்தியாவில் சில யோகிகள், இறந்தது போல மூச்சடக்கி வைத்திருக்கும் யோகா பயிற்சியை செய்து காட்டியுள்ளனர். 

இயேசு முப்பது வயதில் பிரசங்கம் செய்யத் தொடங்குவதற்கு முந்திய காலத்தை பற்றி, விவிலிய நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், இன்றுள்ள விவிலிய நூலில் சேர்த்துக் கொள்ளப் படாத சில நூல்கள் உள்ளன. "ஞானிகள்" (கிரேக்க மொழியில் ஞோஸ்தி, http://en.wikipedia.org/wiki/Gnosticism) என்ற கிறிஸ்தவ பிரிவினர், அந்த காலகட்டத்தில் இயேசு இந்தியா சென்றிருந்தார் என்றும், அங்கு இறையியல், யோகா போன்றவற்றை பல முனிவர்களிடம் இருந்து கற்றறிந்து கொண்டதாக நம்புகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவானவர், மரணிப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர், " என் இறைவா, என் இறைவா, என்னை ஏன் கைவிட்டீர்?" என்று தனது இயலாமையை ஆண்டவரிடம் முறையிட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள், இயேசுவின் கூற்றை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம். அந்தப் பிரபலமான வாக்கியம், உண்மையில் (யூதர்களின் பைபிளான) பழைய ஏற்பாட்டில் எழுதப் பட்டுள்ளது. தாவீது மன்னன் எழுதிய, திருப்பாடல்கள் என்ற நூலில் உள்ளது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு, திருப்பாடல்களில் ஒன்றை பாடியிருக்க வேண்டும்.
" என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?"   (திருப்பாடல் 22-1, திருவிவிலியம்) 

பழைய ஏற்பாட்டில், திருப்பாடல்களில், தாவீது மன்னன் எழுதிய பாடல் வரிகள், இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை எமக்கு நினைவு படுத்துகின்றன!  அப்படி  என்ன எழுதியிருக்கிறது என்பதை, நீங்களாகவே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்:

 " நானோ ஒரு புழு, மனிதனில்லை; 
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; 
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; 
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 
" ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும், தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்","  என்கின்றனர். 
என்னைக் கருப்பையினின்று வெளிக் கொணர்ந்தவர் நீரே; 
என் தாயிடம் பால் குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே! 
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே! 
என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; 
ஏனெனில், ஆபத்து நெருங்கி விட்டது; 
மேலும், உதவி செய்வார் யாருமில்லை. 
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; 
பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; 
இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். 
நான் கொட்டப்பட்ட நீர் போல் ஆனேன்; 
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; 
என் இதயம் மெழுகு போல் ஆயிற்று; 
என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. 
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; 
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; 
என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். 
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; 
நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; 
என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். 
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; 
அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். 
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; 
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; 
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; 
இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; 
காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்."   
(திருப்பாடல் 22:6-21, திருவிவிலியம்)


இயேசு இறந்த பின்னர், அவரை சிலுவையில் இருந்து இறக்கி கீழே வைத்ததாக, பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமான பாலஸ்தீனத்தில், யூதர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தனர்.  வெள்ளி மாலை, யூதர்களின் "சபாத்" (ஹீபுரு மொழியில்: சனிக்கிழமை) பண்டிகை நாள் ஆரம்பமாகின்றது. கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை போன்று, முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்று, யூதர்களுக்கு சனிக்கிழமை (சபாத்) புனித நாளாகும். 

அன்றைய காலங்களில், பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமர்கள், யூத மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட கைதிகள் அனைவரையும் சபாத் வருவதற்கு முன்னர், சிலுவையில் இருந்து இறக்கி விடுவார்கள். ஆகவே, ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, எப்படியும் அன்று மாலைக்குள் அவிழ்த்து விட்டிருப்பார்கள். 

அப்படிப் பார்த்தால், அன்று இயேசு சில மணி நேரங்களே சிலுவையில் தொங்கியிருப்பார். அதற்குள், ஒரு சராசரி மனிதனுக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அன்றைய காலத்தில் இருந்த ரோமர்களின் தண்டனை முறைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று, பல அறிஞர்களும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். (Jesus did not die on cross, says scholar, http://www.telegraph.co.uk/news/religion/7849852/Jesus-did-not-die-on-cross-says-scholar.html)  

ஆபிரஹாம் முதல் முகமது வரையிலான இறைதூதர்கள் வரிசையில், இயேசுவையும் ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களும், இயேசு சிலுவையில் கொல்லப் படவில்லை என்றே நம்புகின்றனர். திருக்குரானிலும் அதனை உறுதிப் படுத்தும் வாசகங்கள் உள்ளன.


"மரியாளின் புதல்வனும், இறைத்தூதருமான ஈசா (கிறிஸ்து)வை, அவர்கள் கொன்றதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் சிலுவையில் அவரது மரணத்தை உண்டாக்கவில்லை..."  (திருக் குரான் 4:157)


குரானிலும், அரபு மொழியிலும் "ஈசா" என்ற சொல்லால், இயேசு கிறிஸ்துவை அழைக்கின்றனர். (ஈசா என்பது, ஈசன் என்ற சம்ஸ்கிருத/தமிழ்ச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) பழைய ஹீபுரு அல்லது அராமி மொழியில், இயேசுவை யாசு (Yazu) என்று அழைப்பார்கள். (யேசுஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து தான், ஆங்கிலச் சொல்லான "ஜீசஸ்" வந்தது.) இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், காஷ்மீரில், ஸ்ரீநகர் நகரத்திற்கு அருகில், இயேசுவின் சமாதி உள்ளதாக, அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். 

ஸ்ரீநகரில் உள்ள புனிதரின் சமாதியில் Yuz Asaf என்று எழுதப் பட்டுள்ளது. "யூசப், யாசு, இயேசு, ஈசா", எல்லாம் ஒரே மாதிரியான பெயர்களாக தோன்றவில்லையா? சிலுவையில் இருந்து உயிர் தப்பிய இயேசு, காஷ்மீர் வந்து சேர்ந்தார். அங்கு தனது மதப் பிரசங்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இறுதிக் காலத்தையும் காஷ்மீரில் கழித்துள்ளார். இவ்வாறு, காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினர் இன்னமும் நம்புகின்றனர்.  

காஷ்மீர் முஸ்லிம்களில்,  "அஹ்மதியா" என்ற ஒரு பிரிவினர், இயேசு கிறிஸ்துவையும் முக்கியமான இறைதூதராக நம்புவதால், பிற முஸ்லிம்களிடம் இருந்து அந்நியப் பட்டுள்ளனர். காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்னமும் அங்கேயுள்ள "இயேசுவின் சமாதியை" தரிசிக்கலாம். (Is the tomb of Jesus at Khanyar Rozabal in Kashmir?, http://www.youtube.com/watch?v=7aauXxuLHnQ


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்ததால் கொல்லப் படவில்லை. பெரிய வெள்ளி என்பது, இயேசு சிலுவையில் இறந்த நாளைக் குறிக்கவில்லை. ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும்  உயிர்த்த ஞாயிறும் அல்ல. அப்படியானால், நாம் எதற்காக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றோம்? 


"ஈஸ்டர்" என்பது, கிறிஸ்துவுக்கு முந்திய ஐரோப்பியரின் மத நம்பிக்கையில் வரும் தேவதை ஒன்றின் பெயர். (Ēostre, http://en.wikipedia.org/wiki/%C4%92ostre) அந்த பெண் தெய்வத்தின் பண்டிகைக்  காலம், வசந்த காலத்தின் வருகையை கொண்டாடுவதற்காக ஏற்படுத்தப் பட்டது. அன்று இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்கள், புல்வெளியில் முயல் துள்ளி விளையாடுவதைக் கண்டால், வசந்த காலம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டார்கள். அதனால் இன்றைக்கும் ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் பண்டிகை அன்று, முயல் வடிவிலான சாக்லேட், பிஸ்கட் என்பன செய்து உண்கிறார்கள். 


ஈஸ்டர் பண்டிகையின் இன்னொரு சடங்காக முட்டை வைக்கப் படுகின்றது. வாழ்க்கையின் முடிவில்லாத சுழற்சியை, ஒரு தத்துவமாக உணர்த்தும் முட்டையும் கிறிஸ்துவுக்கு முந்திய, ஐரோப்பியரின் வேற்று மத நம்பிக்கை தான். இன்றைய மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் ஒரு கிறிஸ்தவ மதப் பண்டிகையாக கருதப் படுவதில்லை. 

ஈஸ்டர் என்றால், முயல், முட்டை வடிவில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் தான் பலருக்கு நினைவுக்கு வரும். முன்னாள் ஐரோப்பிய காலனிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மட்டுமே, பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) என்பன கிறிஸ்தவ மதப் பண்டிகைகள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.



கிறிஸ்தவ பண்டிகைகள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!
2.கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

கிறிஸ்தவ மதம் பற்றிய வேறு பதிவுகள்:
1.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
2.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
3.கிறிஸ்தவம்: .அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

Thursday, March 28, 2013

சுற்றுலாப் பயணிகளை கவரும் கம்யூனிச சொர்க்கம்



மாவோவின் மரணத்திற்குப் பின்னர், சீனாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய டென்ங்சியாபிங், சோஷலிசத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, சந்தைப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, சீனாவின் சோஷலிச கட்டுமானங்கள் படிப்படியாக தகர்க்கப்பட்டு, முதலாளித்துவ பொருளாதாரம் புகுத்தப் பட்டது. இதனால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்ட கம்யூன் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இன்று சீனாவுக்கு செல்லும் யாரும், முதலாளித்துவ சீனாவை தான் தரிசிப்பார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த சோஷலிச சீனா, எப்படி இருந்திருக்கும் என்பது இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தெரியாது. ஆனால், இன்றைக்கும் ஓரிடத்தில் பழைய சோஷலிச கட்டுமானங்களை கொண்ட கிராமம் (அல்லது நகரம்) ஒன்று, திறந்த வெளி அருங்காட்சியகம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. சீனாவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் வாழும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அந்த இடத்திற்கு சென்று வருகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, அன்றைய கம்யூனிச சீன எப்படி இருந்திருக்கும் என்று, அங்கு செல்பவர்கள் கண்டு களிக்கலாம்.

நாஞ்சிசுன் (Nanjiecun) என்ற ஊரில், மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர், முதலாளித்துவ சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, கம்யூனிசக் கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முடிவு செய்தனர். அவர்களுக்கு அயலில் இருக்கும் ஊர்கள் எல்லாம், முதலாளித்துவத்திற்கு மாறியதால், ஒரு பக்கம் ஏழைகளும், மறுபக்கம் பணக்காரர்களும் அதிகரித்தனர். அந்த ஊர்களில், வேலயில்லாத் திண்டாட்டம், ஊழல், திருட்டு, விபச்சாரம், போதைவஸ்து பாவனை என்று, முதலாளித்துவத்திற்கே உரிய பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டன. பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் தோன்றின.  ஆனால், நாஞ்சிசுன் மக்கள், அவற்றைப் பற்றிய எந்தக் கவலையுமற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 




அதை ஏன் சொர்க்கம் என்று அழைக்க வேண்டும்? நாஞ்சிசுன் நகர தெருக்கள் சுத்தமாக வைத்திருக்கப் படுகின்றன. தெருவில் பிச்சை எடுப்போரைக் காண முடியாது. அங்கே வேலையில்லாப் பிரச்சினை என்ற பேச்சே கிடையாது. எல்லோருக்கும் தொழில் வாய்ப்புண்டு. வீடின்றி யாரும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசதியான வீடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் அது போன்ற வீடுகளில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கலாம். நாஞ்சிசுன் வாழ் மக்கள், அந்த வசதியான வீடுகளுக்கு வாடகை கட்டுவதில்லை என்பது தான் விசேஷம். வீடு அவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றது. வீட்டு பாவனைக்கு தேவையான மின்சாரம் கூட இலவசமாகக் கிடைக்கின்றது. 

பெற்றோர், பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்கு என்று, பணம் சேர்க்கத் தேவையில்லை. பாலர் பாடசாலையில் இருந்து, பல்கலைக்கழகம் வரையில் கல்வி இலவசம். எதிர்பாராமல் வரும், மருத்துவ செலவுக்காவும் பணத்தை சேமித்து வைத்திருக்க தேவையில்லை. சாதாரணமாக வைத்தியரிடம் பரிசோதிப்பது முதல், அறுவைச் சிகிச்சைகள் வரையில் அனைத்தும் இலவசம். இதை எல்லாம், சீனாவின் பிற பகுதிகளில் நினைத்தும் பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, இந்தியாவில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவளிப்பதற்காக, ஒரு சராசரி குடிமகன் என்ன பாடுபட வேண்டுமோ, அதே நிலைமை தான் இன்றைய சீனாவிலும் உள்ளது. 


வெறும் 3500 பேரை சனத்தொகையாக கொண்டிருந்தால், அது ஒரு கிராமம். ஆனால், நாஞ்சிசுன் ஒரு நகரம் போலக் காட்சியளிக்கின்றது. ஒரு நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் அங்கே உண்டு. நமது நாட்டில், தினசரி எத்தனை பேர்  கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர்? பிள்ளைகளின் படிப்புக்காக, வேலை வாய்ப்புக்காக, மருத்துவ வசதிக்காக, இவ்வாறு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு நகரங்களில் குடியேறுகின்றனர். இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் அது தான் நிலைமை. ஆனால், நகரங்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும், கிராமங்களில் கிடைத்தால், யாராவது குடிபெயர யோசிப்பார்களா? 

விரும்பினால், ஒரு சுற்றுலாப் பயணியாக, மற்ற இடங்களை பார்த்து விட்டு வரலாம். அதைத் தான் நாங்கள் கம்யூனிசம் என்று சொல்கிறோம். அதாவது, ஒரு கம்யூனிச சமுதாயத்தில், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து விடும். முன்பு சோஷலிச நாடுகளாக இருந்த, ரஷ்யாவோ, சீனாவோ அந்தளவு வளர்ச்சி அடைந்து விடவில்லை, என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், சில இடங்களில் அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடந்துள்ளன. நாஞ்சிசுன் கம்யூன் அப்படியான மாதிரிக் கிராமங்களில் ஒன்று. கடந்த முப்பது வருடங்களாக, அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது ஒரு சாதனை தான். 

ஒரு கம்யூன் எப்படி இயங்குகின்றது? சுருக்கமாக சொன்னால், அது ஒரு தனி நாடு. பாதுகாப்பு போன்ற சில விடயங்களைத் தவிர, தனது பொருளாதாரத்தை தானே தீர்மானித்துக் கொள்கின்றது. கம்யூன் உறுப்பினர்களுக்கு இடையில் அந்தஸ்து வேறுபாடு கிடையாது. சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு கிடையாது. எல்லோரும் சமமாக மதிக்கப் படுகின்றனர். 

ஒரு கம்யூனில், அதன் "குடி மக்கள்", கூட்டுத்துவ உழைப்பை செலுத்துகின்றனர். தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொள்கின்றனர். பால், இறைச்சி போன்றவற்றிற்காக, விலங்குப் பண்ணைகளை அமைகின்றனர். உணவை பதப் படுத்துவதற்கு, அல்லது அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை பாவனைப் பொருட்களாகுவதற்காக, தொழிற்சாலைகளை கட்டுகின்றனர். அவற்றை சுற்றி, சேவைத் துறைகளும் உருவாகின்றன. 



நாஞ்சிசுன் கிராமம், தனக்கென்று சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளுமளவிற்கு, அது பல high tech தொழிலகங்களை கொண்டுள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளில் பணி புரிவோர் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆனால், உழவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது சேவையை வழங்குகின்றனர். 

ஒரு கம்யூனில், பணப் புழக்கம் கிடையாது. அதனால், அங்கே லஞ்சம், ஊழலும் கிடையாது. நாம் பயன்படுத்தும் நாணயத் தாளுக்கு பதிலாக, ஒரு பொருளின், சேவையின் பெறுமதி கணக்கிடப் படுகின்றது. இன்றைய நாகரிக உலகில், வங்கி அட்டைகளையும், கடன் அட்டைகளையும் மட்டுமே பாவிக்கும் மக்களும், காசை கண்ணால் காண்பதில்லை. 

கம்யூன் மக்களின் உழைப்பு அதிகரிக்கும் பொழுது, அவர்களின் செல்வமும் அதிகரிக்கின்றது. இன்று நாஞ்சிசுன் கிராமம், அயலில் உள்ள நூற்றுக் கணக்கான கிராமங்களை விட  "பணக்கார கிராமமாக" உள்ளது.  நாஞ்சிசுன் கம்யூனில் வசிக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அயல் கிராமங்களில் இருந்து வேலை தேடி வந்தவர்கள், என்பது குறிப்பிடத் தக்கது. 

வேலை வாய்ப்பு, அதிக சம்பளம் போன்ற காரணங்களுக்காக ஒரு நகரத்திற்கு, அல்லது பணக்கார நாடொன்றுக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் போன்று தான், அவர்களும் நாஞ்சிசுன் கம்யூனில் தங்கி இருக்கின்றனர். "குடிவரவாளர்களான" அயல் கிராம தொழிலாளர்களுக்கு, இலவச தங்குமிடமும், உணவும் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல, அவர்கள் தமது சொந்த ஊரில் சம்பாதிப்பதை விட அதிகளவு சம்பளம் பெறுகின்றனர். 

சீன முதலாளித்துவ ஆதரவாளர்கள், நாஞ்சிசுன் கம்யூனைப் பற்றி குறை சொல்லாமல் சும்மா இருக்கவில்லை. சீன அரசில், சில மேல் மட்ட நண்பர்களின் செல்வாக்கு, அவர்களின் உதவியால் கிடைக்கும் கடன்கள், குடியேற்ற தொழிலாளரின் கூலி உழைப்பு போன்ற பல காரணங்களினால் தான் அந்தக் கம்யூன் இயங்கிக் கொண்டிருப்பதாக குறை கூறுகின்றனர். 

ஆனால், இதே மாதிரியான குற்றச் சாட்டுகள், இஸ்ரேலை ஸ்தாபித்த கிப்பூட்ஸ் பண்ணைகள் மீதும் சுமத்தப் பட்டன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில், பாலஸ்தீனத்தில் குடியேறிய மார்க்சிய யூதர்கள், அங்கே கம்யூனிசப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களை உருவாக்கினார்கள். அவர்களுக்கு சர்வதேச யூத நிதியத்தில் இருந்து கடனுதவி கிடைத்தது. மேலும், அயல் கிராமங்களில் இருந்த பாலஸ்தீன கூலித் தொழிலாளர்களின் உழைப்பையும் பயன்படுத்தினார்கள். 

சீனா முழுவதிலும் இருந்து, தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாஞ்சிசுன் கம்யூனை பார்வையிட வந்து செல்கின்றனர். "கம்யூனிச சுற்றுலா" வருபவர்களிடம் இருந்தும், அந்த கிராமத்திற்கு மேலதிக வருமானம் கிடைக்கிறது. அங்கிருக்கும் முப்பதடி உயரமான மாவோ சிலை, அதற்கு அருகில் உள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும் சுற்றுலாப் பயணிகளை கவருகின்றன. அதற்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். திரும்பிப் போகும் பொழுது, உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பதற்காக, பல நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கின்றனர்.  

மேலதிக தகவல்களுக்கு: 
1.In China, a Place Where Maoism Still Reigns
2.Nanjie Cun: the village that time forgot

கீழே உள்ளது ஒரு ஜெர்மன் மொழி ஆவணப்படம். நாஞ்சிசுன் கம்யூன் மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாக படம் பிடித்துக் காட்டுகின்றது. மொழி தெரியாதவர்களும் பார்த்து இரசிக்கலாம்:



************************************

கம்யூனிச சமுதாயங்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:
ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்

Tuesday, March 26, 2013

வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்



ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று நடந்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியை சேர்ந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள், சைப்ரஸ் நாட்டு வங்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.  அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மக்களின் சேமிப்புப் பணத்தில் இருந்து ஒரு தொகை, வெளிநாட்டு கடனை அடைக்க பயன்படுத்தப் படப் போகின்றது. ஒரு சேமிப்பாளர் ஒரு இலட்சம் யூரோக்களுக்கு அதிகமாக பணம் வைப்பிலிட்டு இருந்தால், அந்த தொகையில் பத்து சத வீதம் கழிக்கப் பட வேண்டும். 

சைப்ரஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான Laiki Bank, முதலாளித்துவ பயங்கரவாதிகளால் முற்றாகத் தகர்க்கப் பட்டுள்ளது. இந்த "பயங்கரவாத தாக்குதல்" காரணமாக, ஆயிரக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவி என்ற பெயரில், ஐரோப்பிய ஒன்றிய வழங்கிய கடனை அடைப்பதற்காக, இன்னும் பல்லாயிரம் வேலைகள் பறிக்கப் படவுள்ளன. இதனால், சைப்ரஸ் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப் படுவதுடன், வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரிக்கும். 

மேற்கு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர், தமது சேமிப்புப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் வைப்பிலிட விரும்புவதில்லை. ஆனால், இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ விடுமுறையை கழிப்பதற்கு செல்லும் நேரம், அங்குள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட்டு விட்டு வருவார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "ஐரோப்பிய வங்கிகளில் சேமிப்பு பணத்திற்கு கொடுக்கும் வட்டி வீதம் குறைவு. நமது நாட்டு வங்கிகளில், பல மடங்கு அதிகமான வட்டி கொடுக்கிறார்கள்."  குறைந்த வட்டி கொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் வங்கிகளுக்கும், அதிகளவு வட்டி கொடுக்கும் கீழைத்தேய நாடுகளின் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

மேற்கத்திய நாடுகளில் உள்ள வங்கிகளில், ஏற்கனவே வட்டி வீதம் குறைவாக இருப்பது மட்டுமல்ல, அது பண வீக்கத்திற்கு ஏற்ப அதிகரிப்பதில்லை என்பது ஒரு தீமை தான். அதே நேரத்தில், குறைந்தளவு வட்டி கொடுத்தாலும், வங்கித் துறையும், அரசுகளும் நிலையானவை. பெரும் மூலதனத்தின் நேரடிப் பயன்களை அனுபவிப்பவை. அதனால் எமது பணத்திற்கு ஒரு பாதுகாப்புக் கிடைக்கின்றது. அதற்கு மாறாக, கீழைத்தேய வங்கிகளிடம் என்ன குறைகள் உள்ளன? அண்மையில் சைப்ரசில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்தக் குறைபாட்டை புரிந்து கொள்வோம். 

ஒரு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் தீவு, எழுபதுகளில் நடந்த போர் காரணமாக இரண்டாகப் பிரிந்தது. மூன்றில் ஒரு பங்கு வடக்கு சைப்ரசை, துருக்கிப் படைகள் ஆக்கிரமித்தன. துருக்கி மொழி பேசும் சைப்ரஸ் மக்களுக்கான பாதுகாப்பு பிரதேசமாக, "வடக்கு சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் தனிநாடு போன்று இயங்கி வருகின்றது. ஆனால், அதனை எந்தவொரு உலக நாடும் அங்கீகரிக்கவில்லை. கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும் தெற்கு பகுதி மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சைப்ரஸ் குடியரசு ஆகும். நாங்கள் சைப்ரஸ் என்று சொன்னால், அந்தப் பகுதியைத் தான் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த சைப்ரஸ், மூன்றாமுலக நாடுகள் போன்று வறிய நாடாக இருந்தது. பலர் பிரிட்டனுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து, ஊருக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், துருக்கியுடனான போர் முடிந்த பின்னர், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. சூரிய வெப்பத்தை தேடி வரும், குளிர் வலைய மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த, உல்லாசப் பிரயாணிகளின் வருகை.  
2. வங்கித் துறையின் அபார வளர்ச்சி. கறுப்புப் பண முதலைகள், தமது பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சைப்ரஸ் உதவியது. சாதாரணமாக, சைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டாலே போதும். அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது மட்டுமல்ல, ஒரு நாடு கடந்த கம்பனி அமைப்பதற்கான சட்டங்களும் இலகுவானவை. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, பெரும் வணிக நிறுவனம் ஒன்று அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மிகக் குறைவு. (மேற்கு ஐரோப்பாவில் 30% - 40% கார்ப்பரேட் வரி கட்ட வேண்டும். சைப்ரசில் வெறும் 10% மட்டுமே!) 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், வர்த்தகம் செய்வது என்ற போர்வையின் கீழ், ஊர் மக்களின் பணத்தை சுரண்டி கொழுத்த பணக்கார மாபியா கும்பல், சைப்ரஸ் நாட்டை புகலிடமாக கருதியதில் வியப்பில்லை. அங்கே பெயருக்கு ஒரு கம்பனியை பதிவு செய்து விட்டு, ரஷ்யாவில் கிடைத்த இலாபம் என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை, சைப்ரஸ் கணக்கிலத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்படி மாற்றுவதன் மூலம், வரி ஏய்ப்புச் செய்து இன்னும் நிறைய சம்பாதித்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய பணக்காரர்கள், ரஷ்ய உழைக்கும் மக்களிடம் சுரண்டிய பணத்தை, தனது காலடியில் கொண்டு வந்து கொட்டுவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும். 

ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரஸ் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மீட்பு நிதி அளித்து விட்டு, அந்தக் கடனை அறவிடுவதற்காக, சைப்ரஸ் மக்களின்  பணத்தில் ஒரு பகுதியை, மறைமுகமாக கொள்ளையடித்து விட்டது. ஏற்கனவே இது போன்ற நெருக்கடி வரப் போகின்றது என்று, சைப்ரஸ் ஜனாதிபதி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு எச்சரித்திருக்கிறார். அவர்கள் தமது பணத்துடன், வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். இவ்வாறு கோடிக் கணக்கான பணம், திருட்டுத் தனமாக  சைப்ரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இறுதியில் பாதிக்கப் பட்டது, மத்தியதர வர்க்க சைப்ரஸ் மக்கள் தான். (குவைத் போன்ற வளைகுடா நாடுகளைப் போன்று, சைப்பிரஸ் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒப்பந்த அடிப்படையில் வந்து வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தான் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குகிறார்கள்.)

இப்போது எமது அடிப்படைக் கேள்விக்கு வருவோம். சைப்ரஸ் நாட்டின் பொருளாதார பிரச்சினை எங்கே, எப்படி ஆரம்பமாகியது ? நான்கு வருடங்களுக்கு முன்னர், கிரேக்க நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அனைவருக்கும் நினைவிருக்கலாம். கிரேக்க பெரும்பான்மையினரைக் கொண்ட சைப்ரஸ் நாட்டவர்கள், தீவிரமான கிரேக்க தேசியவாதிகள். நீண்ட காலமாக "தாய் நாடான" கிரேக்கத்துடன் சேர்ந்திருக்க விரும்பி வந்தனர். இன்றைக்கும், சைப்ரஸ் தேசியக் கொடியுடன், கிரேக்க கொடியும் பறப்பதை, அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் அவதானித்திருக்கலாம். சைப்ரஸ் நாட்டு வங்கிகளும், கோடீஸ்வரர்களும், தமது "தாய் நாடான" கிரேக்கத்தில் முதலிட்டு வந்தனர். 

கிரேக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்த பின்னர், "தொப்புள்கொடி உறவுகளை" காப்பாற்றும் நோக்கில், பல கோடி பெறுமதியான அரச கடன் பத்திரங்களை சைப்ரஸ் வங்கிகள் வாங்கின. ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு வங்குரோத்தான நிலையை அடைந்தது. "ஐயா, உங்கள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் கடனில் ஒரு பகுதியை இரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் ..." என்று தொப்புள் கொடி உறவுகளிடம் கையை விரித்தது. அதனால் வந்தது கேடு. பெருமளவு சைப்ரஸ் நிதி, கிரேக்கத்தில் முடங்கி விட்டதால், சைப்ரஸ் வங்கித் துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆனால், அந்த உண்மையை  தமது வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியுமா? 

வங்கியில் நாம்  போட்டிருக்கும் சேமிப்புப் பணத்திற்கு, "வட்டி எங்கிருந்து வருகின்றது?" என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?  ஆகாயத்தில் இருந்து கடவுள் அள்ளிக் கொட்டுகிறாரா ? "பக்தர்களே, உங்கள் வீடுகளில் லட்சுமி படத்தை வைத்து, தினந் தோறும் பூஜித்து வந்தால், லட்சுமி கையில் இருந்து பணம் கொட்டுவது போல, வீட்டிலும் பணம் கொட்டும்..." என்று ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றுவது போல, வங்கிகள் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், எமது முதலீட்டுக்கு கிடைக்கும் இலாபப் பங்கும், கடனாக கொடுத்த தொகைக்கு கிடைக்கும் வட்டியும், யாரோ ஒருவரது உழைப்பில் இருந்து சுரண்டப் பட்ட பணம் தான். அந்த பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து விட்டால், வாத்தும் செத்து விடும், பொன் முட்டையும்  கிடைக்காது. 

வங்கிகள் நமது சேமிப்புப் பணத்தை, அப்படியே பத்திரமாக பூட்டி வைப்பதில்லை. நமது பணத்தை எடுத்து, இன்னொருவருக்கு கடனாக கொடுக்கின்றன. அந்தக் கடனாளி, வங்கி நிர்ணயிக்கும் வட்டியை கட்டி வருகிறார். கடனாளியிடம் வங்கி அறவிடும் வட்டியானது, நமது சேமிப்பு பணத்திற்கு வங்கி கொடுக்கும் வட்டியை விட அதிகமாகும். நமது சேமிப்புக்கு கொடுக்கும் வட்டியை விட, பல மடங்கு வருமானம் வங்கிக்கு கிடைக்கிறது. தற்போது கடனாளியான கிரேக்கம் கையை விரித்து விட்டதால், சைப்ரஸ் வங்கிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், மறுபக்கத்தில் சேமிப்பாளர்களுக்கு மாதாமாதம் வட்டி கட்டியாக வேண்டிய நிலைமை. அதாவது வங்கியின் கணக்குப் புத்தகத்தில், ஒரு பக்கம் "மைனஸ்", இன்னொரு பக்கமும் "மைனஸ்" என்று இழப்பு ஏற்படுகின்றது. அதுவே சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. 

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி பற்றிய அறிவிப்பு வெளியானவுடனே,  சைப்ரஸ் நாட்டு வங்கிகள், குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. அதன் அர்த்தம், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, வங்கி அட்டையை பயன்படுத்தி கடையில் எதையும் வாங்க முடியாது. நாணயத் தாள்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இன்டர்நெட் மூலமான பணப்பரிமாற்றமும் தடுக்கப் பட்டது. "வளர்ச்சி அடைந்த" மேற்கத்திய நாடுகளில், பெரும்பாலான மக்கள் எந்நேரமும் பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதில்லை. எல்லா இடங்களிலும், ATM மெஷின்களும், வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியும் இருப்பதால், பணம் வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

"பணத்தையே கண்ணால் காணாத அளவுக்கு நாகரிக வளர்ச்சி கண்ட சமூகத்தில்", ஒரு வாரத்திற்கு வங்கிகள் எதுவும் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்து விட்டால், அன்றாட உணவிற்கே பணமின்றி கஷ்டப் பட வேண்டியிருக்கும். அந்த திகில் காட்சிகளை சைப்ரஸ் மக்கள் நேரடியாக அனுபவித்தார்கள். நல்ல வேளையாக, தினசரி குறிப்பிட்டளவு பணம் மட்டும் எடுக்கலாம் என்று மட்டுப் படுத்தப் பட்டது. அதுவும் இல்லையென்றால்? "நான் இத்தனை காலமும் முதலாளித்துவத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தை குறை சொல்பவர்களை எதிர்த்து திட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நானும் அவர்களைப் போல குறை கூறத் தொடங்கி விட்டேன்..." என்று பல சைப்ரஸ் பிரஜைகள் தமது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்க்கின்றனர்.  

வங்கிகள் திறக்கப் பட்டால், பொதுமக்கள் வங்கியில் போட்டிருக்கும் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நிலவியது. அது உண்மை தான். வங்கிகள் மீது நம்பிக்கையிழந்த பொதுமக்கள், தமது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் வழித்து துடைத்து எடுத்துக் கொண்டு, தப்பினோம், பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடிப்போகத் தான் நினைப்பார்கள். பொது மக்கள் தமது பணத்தை மீளப்பெற்றுக் கொண்டால், தவிர்க்கவியலாது வங்கிகள் திவாலாகும். பொது மக்களின் சேமிப்புத் தொகையில் பத்து வீதத்தை கழித்து, வெளிநாட்டு கடன்களை அடைக்கும் திட்டத்திற்கு, சைப்ரஸ் மக்கள் எதிர்த்து வந்தார்கள். இவ்வளவு காலமும் சொகுசாக வாழ்ந்த மக்கள், தாமாகவே வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  மக்களின் எதிர்ப்பலையை கண்டு அஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. IMF, ஐரோப்பிய வங்கிகளின் திட்டத்தினை, ஒரு ஐரோப்பிய நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக எதிர்த்துள்ளமை இதுவே முதல் தடவை. 

துபாய் போன்று, சைப்ரசும் வீட்டுமனைகள் கட்டி விற்று வந்தது. அதுவும் சைப்ரசின் தேசியப் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. சைப்பிரசில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கியது. அதன் மூலம், சில வருடங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில், குறைந்தது முப்பதாயிரம் பணக்கார ரஷ்யர்கள் சைப்பிரசில் வீடுகளை வாங்கியுள்ளனர். சைப்ரசில் ஏராளமான ரஷ்ய பணக்காரர்கள் வசிப்பதால், ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் நிதியுதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், ரஷ்யாவோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு தட்டிக் கழித்து விட்டது.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், சைப்ரஸ் என்று அடுத்தடுத்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப் பட்டுள்ளன. அது போன்று, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற "பணக்கார" ஐரோப்பிய நாடுகளும், எதிர்காலத்தில் பாதிக்கப் படுமா?  இன்றைய நிலையில், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏன் அப்படி? ஏனென்றால், இவற்றை  "Triple - A நாடுகள்" என்று பொருளாதார நிபுணர்கள் வகைப் படுத்தி உள்ளனர். அதன் அர்த்தம், இந்த நாடுகள் எந்த நிபந்தனையுமின்றி கடனுதவி பெறலாம். அதாவது, முதலீட்டாளர்கள் இந்த நாட்டு பொருளாதாரம் பாதுகாப்பானது என்று இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நெருக்கடியினால் பாதிக்கப் பட்ட நாடுகள் மீது அந்த நம்பிக்கை கிடையாது. அதனால், அவை கடன் கேட்டாலும் பல கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகு தான் பெற்றுக் கொள்கின்றன. 

"மன்னிக்கவும், எல்லாமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகள் அல்லவா? இப்படி எல்லாம் பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா?" ஆம், முதலாளித்துவ பொருளாதார விதிகளின் படி அது நியாயமானது. இதனை புரிந்து கொள்ள கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலை படிக்க வேண்டும். உலகில் சில நாடுகளில் மட்டுமே, மூலதனம் குவிந்துள்ளது. சர்வதேச மூலதனம் எந்த நாடுகளில் உள்ளதோ, அந்த நாடுகள் மட்டுமே உலகில் பலமானவை. "அதிக பலசாலியே வெல்வான்" என்பது அனைத்து முதலாளித்துவ ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்ட தத்துவம் ஆகும். இதையே ஜோர்ஜ் ஆர்வெல், விலங்குப் பண்ணை என்ற நாவலில் அழகாக எழுதி இருந்தார். "அடிப்படையில் எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால், சில விலங்குகள்  பிற விலங்குகளை விட அதிகம் சமமானவை." ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் அனைத்து நாடுகளும் சமமானவை என்று கடதாசியில் எழுதி உள்ளது. ஆனால், நடைமுறையில் ஜெர்மனி போன்ற பெருமளவு மூலதனத்தை திரட்டியுள்ள நாடுகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன."