Wednesday, April 03, 2013

ஆதித் தமிழரின் பெருமைக்குரிய பொதுவுடைமை நாகரீகம்


"கம்யூனிச சித்தாந்தம் என்பது, அழிந்து போன கடந்த காலம் மட்டுமல்ல, அது ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் சொந்தமான, தமிழர்களுக்கு அந்நியமான கொள்கை..." என்று இன்றைக்கும் பல தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த "அப்பாவி" தமிழர்கள், ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய தேசியவாதத்தையும், முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். ஆனால், பொதுவுடைமை கொள்கை, தமிழர்களின் பழம்பெரும் பண்பாடு என்பதை அறியாது இருக்கின்றனர். சுமார் 150 வருடங்களுக்கு முன்னர், கம்யூனிசத்தை நவீன அரசியல் சித்தாந்தமாக நிலைநாட்டிய, கார்ல் மார்க்சும், எங்கெல்சும் தமது நூல்களில் ஆதி கால கம்யூனிச சமூக கட்டமைப்புகளை உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளனர். அவர்கள் தமிழர்களைப் பற்றியும் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். எங்கெல்ஸ் எழுதிய, "குடும்பம், அரசு, தனிச் சொத்து ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் பின்வரும் வாசகங்கள் எழுதப் பட்டுள்ளன.

"சொந்தங்களுக்கு இடையிலான உறவு முறைப் பெயர்கள், தென்னிந்தியாவில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், நியூயோர்க் மாநிலத்தில் வாழும் செனெகா இரோகுவாஸ் (செவ்விந்தியர்) மத்தியிலும், இன்று வரையில் ஒரே மாதிரி புழங்குகின்றன.....
ஒரு இரோகுவாஸ் ஆண், தங்களது சொந்தப் பிள்ளைகளை மட்டும் மகன்கள், மகள்கள் என்று அழைப்பதில்லை. சகோதரர்களின் பிள்ளைகளையும் அவ்வாறு அழைக்கின்றனர். சகோதரர்களின் பிள்ளைகளும் அவரை அப்பா (பெரியப்பா/சித்தப்பா) என்று அழைக்கும். மறு பக்கத்தில், அவர் தனது சகோதரிகளின் பிள்ளைகளை மருமகன்கள், மருமக்கள் என்று அழைக்கின்றார். சகோதரிகளின் பிள்ளைகளும் அவரை மாமா என்று அழைக்கின்றன. அதே போன்று, இரோகுவாஸ் பெண் தனது சகோதரிகளின் பிள்ளைகளை மகன்கள், மகள்கள் என்று அழைக்கின்றார். அந்தப் பிள்ளைகள் அவரை அம்மா (பெரியம்மா/சித்தி) என்று அழைக்கின்றன.  சகோதரர்களின் பிள்ளைகள், ஒன்றையொன்று அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று உறவுமுறை கொண்டாடுகின்றன. மறுபக்கத்தில், ஒரு பெண்ணின் பிள்ளைகளும், அவளது சகோதரனின் பிள்ளைகளும், மச்சான், மச்சாள் உறவுமுறை கொண்டாடுகின்றன." - எங்கெல்ஸ்

கம்போடியாவிலும், மெக்சிகோவிலும் தமிழரின் பூர்வீகம் தேடி அலைபவர்கள், தமிழகம் தவிர்ந்த பிற இந்திய பகுதிகளில் அதனை தேடுவதில்லை. அதற்கு காரணம், "தேசியம்" என்ற பிரிட்டிஷாரால் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேசியவாத கோட்பாடு, எப்போதும் "உன்னத நாகரீகம்" பற்றிய கதையாடல்களை மட்டுமே விரும்புகின்றது. அது மண்ணுக்கேற்ற தேசியமாக வளர்த்தெடுக்கப் படவில்லை. மண்ணுக்கேற்ற தமிழ் தேசியமானது, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த தமிழரின் பூர்வீகத்தையும், இந்தியாவிலேயே வேரூன்றிய பழம்பெரும்  பொதுவுடைமை நாகரீகத்தையும் அறிந்து வைத்திருக்கும். இந்த இரண்டையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், பல்வேறு இனங்கள் கலந்து உருவான தற்காலத் தமிழர்களிடம் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. ஆதிவாசிகள், அல்லது பழங்குடி இனங்கள் என்று அழைக்கப்படும் மக்களிடமே, தமிழரின் பூர்வீகம் குறித்த இரகசியம் மறைந்திருக்கிறது.

தமிழர், மலையாளிகள்,தெலுங்கர், கன்னடர் ஆகிய தென்னிந்திய இனங்களை, "திராவிடர்கள்" என்று மானிடவியல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். ஆனால், திராவிடர்கள் தென்னிந்தியாவில் மட்டும் வாழ்கின்றனரா?  இந்த இனங்களை திராவிடர்கள் என்று அழைப்பதை விரும்பாதவர்கள்,  "பூர்வீகத் தமிழர்கள்" என்று கருதிக் கொள்கின்றனர். ஒரே மாதிரியான தோற்றம், கலாச்சாரம், மொழிகளை கொண்ட தென்னிந்திய இனங்களை, திராவிடர் என்றோ, தமிழர் என்றோ அவரவர் வசதிக்கேற்றவாறு அழைத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில், இந்தியா முழுவதும், திராவிடர்/தமிழர் பரந்து வாழ்ந்தார்கள் என்பதனை பலர் ஏற்றுக் கொண்டாலும், அதனை நிரூபிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.  அதற்கு பெரிதாக சிரமப் படத் தேவையில்லை.

தேசியவாத அரசியலில் மிகவும் பிரபலமான "ஆரியர்-திராவிடர் கோட்பாடு", மிகவும் இலகுபடுத்தப் பட்டும், தவறாகவும் புரிந்து கொள்ளப் படுகின்றது. இவர்கள் எப்போதும் நாகரீகமடைந்த மொழிகளையே கணக்கில் எடுக்கிறார்கள். பழங்குடி இனங்களை கண்டு கொள்வதில்லை. நாகரீகமடைந்த திராவிட மொழிகளான, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்ல, தமிழ் கூட கணிசமான அளவு சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன. இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்த மொழிக் கலப்பினால் தான் அவை நாகரீகமடைந்தன. சமஸ்கிருதத்துடன் கலக்காமல், தமது சுயத்தை பாதுகாத்த மொழிகளை பேசியவர்கள், இன்றைக்கும் "பழங்குடி இனங்கள்" என்று அழைக்கப் படுகின்றனர்.

இந்தியாவில் மிகப்பெரிய ஆதிவாசி இனங்களில் ஒன்றான, "கோண்டு" பழங்குடி இன மக்கள் திராவிடர்கள் ஆவர். அவர்களின் உருவத் தோற்றம் அதனை உறுதிப் படுத்துகின்றது. கோண்டுகள் (தெலுங்கு மொழியில்: மலைவாசிகள்) பேசும் மொழி, திராவிட மொழிகளில் ஒன்றாக சேர்க்கப் பட வேண்டும். ஆனால், திராவிட/தமிழர் இன உணர்வு அரசியல் பேசுவோர் கூட அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது ஏன் என்று தெரியவில்லை. இது ஒன்றும் அற்ப விடயமல்ல. கோடிக்கணக்கான கோண்டு இன மக்கள், மத்திய இந்தியப் பகுதிகளில் வாழ்கின்றனர். இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேஷ், ஓடிஸா, சட்டிஸ்கார் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர். அவர்கள் முரியா, குட்டியா, என்று பல உப பிரிவுகளாக பிரிந்துள்ளனர். 

ஒரு காலத்தில், கோண்டுகளின் மன்னர்கள், மாபெரும் ராஜ்ஜியங்களை   ஆண்டார்கள். இன்றைய வட, மத்திய இந்தியாவில் பெரும் பகுதியை அது உள்ளடக்கி இருந்தது. அந்நியர்களின் படையெடுப்பு, பலவீனமான நிர்வாகம், புராதன ஆயுதங்கள் போன்ற குறைபாடுகள் காரணமாக, ராஜ்ஜியத்தை இழந்தார்கள். ஆரம்பகால அந்நியப் படையெடுப்பாளர்கள் ஆரியர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், பதினான்காம் நூற்றாண்டில் மொகலாயர் காலத்திலும் கோண்டு ராஜ்ஜியம் இருந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில், மராட்டிய மன்னர்களின் படையெடுப்பின் பின்னர் தான் அது முற்றாக அழிந்துள்ளது. அதன் பிறகு, கோண்டுகளின் வாழிடங்கள், மெல்ல மெல்ல அந்நிய இனங்களினால் ஆக்கிரமிக்கப் பட்டன. இறுதியில், அவர்கள் காடுகளையும், மலைகளையும் நோக்கி விரட்டப் பட்டனர். ஹிந்திக் காரர்கள், மராட்டியர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் போன்ற பிற "நாகரீகமடைந்த இனங்கள்", கோண்டுகளின் எதிரிகளாக இருந்துள்ளன. ஒரு காலத்தில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட மக்கள், "பழங்குடி இனமாக" மாறிய, சுருக்கமான கதை இது. "பழங்குடி இனம் என்றால், நாகரீகமடையாத காட்டுவாசிகள், அவர்களுக்கென்று வரலாறு கிடையாது," என்ற பொதுவான தப்பெண்ணத்தை இது தவிடுபொடியாக்குகின்றது. 

பிற்காலத்தில், கோண்டு மக்கள் இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டாலும்; அவர்களுக்கே உரிய தனித்துவமான  கலை, கலாச்சாரங்களை, இன்றைக்கும் விடாது பின்பற்றி வருகின்றனார். அதில் ஒன்று, கோட்டுல் (Ghotul) சமூக அமைப்பு. தமிழில் "கொட்டில்" என்ற சொல்லும், அந்த கலாச்சார அமைப்பில் இருந்து வந்திருக்கலாம். கோட்டுல் சமூகமானது, ஒரு புராதன கால பொதுவுடைமை அமைப்பாகும். அதாவது அங்கே ஒரு கூட்டுத்துவ, தோழமை கலாச்சாரம், சிறு வயதில் இருந்தே வளர்க்கப் படுகின்றது. மனித நாகரீகம் தோன்றிய ஆரம்ப காலங்களில், உலகம் முழுவதும் பொதுவுடைமை சமுதாயங்கள் இருந்ததாக மார்க்சியம் கூறுகின்றது. ஆனால், மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாத முதலாளித்துவவாதிகள், அந்தக் கோட்பாட்டை நிராகரித்து வந்துள்ளனர். உலகம் முழுவதும் தனியுடமை சமுதாயமே இருந்தது என்பது அவர்களது நம்பிக்கை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் அப்படி நம்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு அருகிலேயே, சில நூறு மைல்களுக்கு அப்பால், புராதன பொதுவுடைமை சமுதாயத்தின் எச்சங்கள் இன்றைக்கும் உள்ளன என்ற உண்மை தெரியாது.

கோட்டுல் சமூகம் என்பது, ஒரு சிறுவர்களின் குடியரசு. அது போன்ற புராதன கால பொதுவுடைமை சமூகங்களை பின்பற்றித் தான், முன்னாள் சோவியத் யூனியனில், "கொம்சொமோல்" என்ற இளைஞர், மாணவர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அது ஒரு நவீன கால அமைப்பு. இரண்டுக்கும் இடையில் கோட்பாட்டு ரீதியிலான ஒற்றுமை இருந்தாலும், வித்தியாசங்களும் உண்டு.  இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய கிரேக்க ஜனநாயக அரசுக்கும், இன்றைய மேற்கத்திய ஜனநாயக அரசுகளுக்கும் இடையிலான வித்தியாசம் போன்றது. கோண்டு பழங்குடி இன மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும், இன்றைக்கும் கோட்டுல் கலாச்சாரம், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கின்றது.

ஒரு ஊரில், பெரியவர்களும், பதின்ம வயது சிறுவர்களும் சேர்ந்து, பெரியதொரு கொட்டிலை கட்டுவார்கள். அதிலே அதிக பட்சம் அறுபது, எழுபது சிறுவர்கள் தங்க முடியும். கொட்டில் கட்டி முடிந்ததும், அங்கு வசிக்க வரும் சிறுவர்களுக்கு பெரியவர்கள் வகுப்புகள் எடுப்பார்கள். பெரும்பாலும் அது பாலியல் சம்பந்தமான கல்வியாக இருக்கும். அது மட்டுமல்லாது, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். "நாகரீகமடைந்த" இந்திய சமூகத்தில், பாலியல் சம்பந்தமான அறிவு புகட்டல் பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப் படவில்லை.  இன்றைக்கும், சராசரி இந்தியர்கள் மத்தியில் பாலியல் ஒரு பேசாப் பொருளாகவே இருக்கின்றது. ஆனால், பழங்குடியின மக்கள் சிறு வயது முதலே பாலியல் அறிவு பெற்றவர்களாக வளர்கின்றனர்.

பொதுவாக, இந்தியப் பழங்குடி இனங்கள் மத்தியில், சுதந்திரமான பாலியல் உறவுகள் அங்கீகரிக்கப் பட்டாலும், கோண்டு மக்களின் கொட்டில் அமைப்பு முறை, அதிலிருந்து மாறுபடுகின்றது. கொட்டில் சமூகத்தில் வசிக்க நேரும் சிறுவர்களுக்கு பாலியல் சுதந்திரம் வழங்கப் படுகின்றது. அதே நேரம், கட்டுப்பாடாக இருக்கவும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால் அந்த மக்களிடையே, போட்டி, பொறாமை, பிறன்மனை நோக்குதல், கள்ள உறவு, விபச்சாரம் போன்ற தீமைகள் அறவே இல்லை எனலாம். மேற்கொண்டு இதைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, எல்வின் என்ற மானிடவியல் ஆராய்ச்சியாளர் எழுதிய நூலில் இருந்து சில பகுதிகளை தருகிறேன்.

"அவுஸ்திரேலியா, ஆசியா முதலிய கண்டங்களில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களிடையே இத்தகைய ஸ்தாபனங்கள் பரவி இருந்தன. ஆனால் முரியா மக்களிடையே (கோண்டு இனப் பிரிவு) இயங்கிய கோட்டுல் தான் உலகிலேயே மிகச் சிறந்த அமைப்பாக விளங்கிற்று என்று சொல்லலாம்....."

"முரியா மக்களில் மணமாகாத சிறுவர்களும், சிறுமிகளும் அந்தக் கோட்டுல்  அமைப்பில் அங்கத்தினர்களாக  இருப்பது அவசியம். அங்கத்தினர் பதவி பெறுவதற்கு விரிவான பல பயிற்சிகள் உண்டு.... சிறுவர்களின் தலைவனுக்கு சார்த்தார் என்று பெயர்; சிறுமிகளின் தலைவிக்கு பெலோசா என்று பெயர் கொடுக்கப்பட்டது. அங்கத்தினர்களில் பையன்களுக்கு செலிக் என்றும், பெண்களுக்கு மோட்டியாரி என்றும் பெயர்கள் வழங்கின. சமூக சம்பந்தமான நிகழ்ச்சிகளில் செலிக்குகளுக்கும், மோட்டியாரிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப் பட்டன."

 "இந்தப் பழைய முறையின் மாற்றுருவமான இரண்டாவது வகை கோட்டுலில், நிரந்தர உறவுகள் தடை செய்யப் பட்டன. ஒரு குறிப்பிட்ட மோட்டியாரி தனக்கு சொந்தமானவள் என்று எந்த செலிக்கும் சொல்லிக் கொள்ள முடியாது. ஒரு சிறுவன், ஒரு சிறுமியுடன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து உறவு கொள்ளக் கூடாது. தொடர்ந்து நீடிக்கும் உறவைத் தடுப்பதற்கும், உடைமை, பொறாமை உணர்ச்சிகளை அகற்றுவதற்கும், சமுதாய ரீதியில் பொதுவுடைமை கொண்டாடி இயங்குவதற்கும் உதவும் முறையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோட்டுல் திருமணம், கோட்டுல் தோழமை என்ற தொடர்புகள் கிடையாது. ஒவ்வொருவரும் மற்ற எல்லோருக்கும் உரித்தானவர்கள் என்ற சூழ்நிலை நிலவிற்று....."

"இல்லற ஒழுக்கத்திலும், மண வாழ்க்கை உறவில் தாம்பத்திய விசுவாசத்திலும், முரியா மக்களை விட உறுதியான உணர்வு கொண்டவர்கள் கிடையாது என்பது ஒரு ரசமான விடயம். மணமான பெண்கள் சோரம் போவது மிக அபூர்வம்...."
"நம்முடைய நாகரிக வாழ்வின் மாசுகளான கள்ளத்தனமான ஒழுக்கக்கேடுகள் கோட்டுல் இளைஞர்களிடம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.... வேசிப் பழக்கம் நினைவிலும் நடக்கக் கூடாத விஷயமாக இருந்தது. மோட்டியாரிப் பெண் இவளும் தன்னுடைய உடலை பணத்திற்கு விற்க சம்மதிக்க மாட்டாள்."
(எல்வின் கண்ட பழங்குடி மக்கள், விழுதுகள் பதிப்பகம்)

கோட்டுல் வாழ்வில், எந்தத் தருணத்திலும் சிறுவர்கள், சிறுமிகள் வேறு வேறாக பிரித்து வைக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்றாக உணவு உண்ணுகின்றனர். நதியில், குளத்தில் ஒன்றாக நீராடுகின்றனர். எல்லோரும் ஒரே இடத்தில், ஒன்றாக படுத்து உறங்குகின்றனர். இத்தகைய பாலியல் சமத்துவத்தை, "நாகரீகமடைந்த இந்தியர்களிடம்" எதிர்பார்க்க முடியாது. மேற்கத்திய நாடுகளில், 20 ம் நூற்றாண்டில் தான், பாடசாலைகளில் பாலியல் கல்வி அறிமுகப் படுத்தப் பட்டது. "நாகரீகமடைந்த இந்தியாவில்" இன்னமும் அது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் கோட்டுல் முகாமில், பாலியல் கல்வி சிறுவர்களுக்கு கற்பிக்கப் படுகின்றது. அதனால் பால்ய பருவத்தில் கர்ப்பமடைவதும் தவிர்க்கப் படுகின்றது. (இன்றைக்கு பாலியல் கல்வி புகட்டப்படாத பல நாடுகளில், சிறுமிகள் கர்ப்பமடைவது ஒரு சமூகப் பிரச்சினையாக உள்ளது.)  எல்வின் எழுதியதைப் போல, அது ஒரு பல்கலைக்கழகம். மாணவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாகவும் இருக்கின்றனர். கோட்டுல் முகாமில் சேரும் சிறுவர்கள், பாலியல் கல்வி மட்டும் கற்பதில்லை. பயிர் செய்வது உட்பட பல தொழில்நுட்ப அறிவையும் பெற்றுக் கொள்கின்றனர்.

கோண்டு பழங்குடி மக்கள் மத்தியில், எந்தக் காலத்திலும் தனியுடைமை பொருளாதார உறவுகள் இருந்ததில்லை. நிலம் அனைவருக்கும் பொதுவானது. விவசாயம் செய்வதானாலும், வேட்டையாடுவதானாலும் எல்லோரும் கூட்டு உழைப்பை வழங்குவார்கள். அவற்றில் கிடைக்கும் விளை பொருட்களும் அனைவருக்கும் பொதுவானது. கோண்டு மக்களின் பொதுவுடைமை கலாச்சாரம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலம் வரையில் எந்த இடையூறுமின்றி தொடர்ந்தது. இந்தியா முழுவதிலும், முதலாளித்துவ பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், பழங்குடி இனத்தவர்களின் வாழிடங்களில் பெரியதொரு பிரச்சினையை எதிர்நோக்கினார்கள். இந்தியாவில் உள்ள நிலங்கள் எல்லாம், யாரோ ஒருவருக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றினார்கள். பழங்குடி இனத்தவரின் நிலங்கள் பொதுவுடமையாக இருந்ததால், அதனை "இந்திய அரசுக்கு சொந்தமான நிலம்" என்று பிரகடனம் செய்தார்கள்.

அமெரிக்க கண்டத்தை காலனிப் படுத்திய ஸ்பானிஷ்காரர்கள், "ஆண்டவரின் பெயரால், இந்த நிலங்கள் எல்லாம் ஸ்பெயின் மன்னருக்கு சொந்தமானவை...." என்று, யாருமற்ற வெட்ட வெளியில் நின்று அறிவித்து விட்டு, பூர்வகுடியினரின் அபகரித்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர்களும் அதைத் தான் இந்தியாவில் செய்தனர். "சுதந்திரமடைந்த" இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, உள்ளூர் இந்தியர்களும், ஆங்கிலேயரின் காணிச் சட்டத்தை பின்பற்றினார்கள். நர்மதா அணைக்கட்டு திட்டத்திற்காக, கோண்டு பழங்குடியினரை அவர்களின் வாழிடங்களில் இருந்து விரட்டினார்கள். இந்திய அரசு, பழங்குடியின மக்களின் நிலங்களை, டாட்டா, வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டது. இரும்புத் தாது, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக, பழங்குடியின மக்களின் கிராமங்களை அழித்து, அவர்களை இடம்பெயர வைத்தார்கள்.

பலமான அரச இயந்திரத்தை எதிர்ப்பதற்கு திராணியற்ற கோண்டு பழங்குடியின மக்களை, மாவோயிஸ்டுகள் ஒன்று திரட்டி திரட்டி போராட வைத்தார்கள். இன்றைக்கு, மாவோயிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவான, மக்கள் விடுதலைப் படையில், ஆயிரக் கணக்கான பழங்குடி இன மக்கள் போராளிகளாக சேர்ந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் கூட, அம்பு, வில் போன்ற புராதன ஆயுதங்களை மட்டுமே கண்ட மக்கள், இன்றைக்கு AK - 47, M - 16,  LMG போன்ற நவீன ஆயுதங்களை கையாளுமளவிற்கு வளர்ந்துள்ளனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், கம்யூனிசம் என்பது கடந்த காலம் என்றும், இனிமேல் உலகில் எங்குமே கம்யூனிச இயக்கங்கள் தோன்றாது என்றும் பலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் பல படித்தவர்கள் கூட, அத்தகைய மூட நம்பிக்கையை கொண்டுள்ளனர். அப்படியான பின் நவீனத்துவ காலகட்டத்தில், இந்தியாவில் மாவோயிஸ்டுகள், இன்று அரசுக்கு சவால் விடும் சக்தியாக வளர்ந்தது எப்படி?

நேபாளத்தில், ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களும் தான், மாவோயிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள். பெரும்பான்மையான போராளிகள், அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் தான். அதே போன்று, இந்திய மாவோயிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கமும், பழங்குடியின மக்களின் ஆதரவினால் தான் வளர்ந்தது. முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்வதற்காக, அல்லும் பகலும் மாடாக உழைக்கும், "நாகரீகமடைந்த மனிதர்களான" எமக்குத் தான், கம்யூனிசம் ஒரு கற்பனைக் கதையாக தெரிகின்றது. புராதன கம்யூனிச சமுதாயத்திலேயே இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியின மக்களுக்கு அது ஒன்றும் புதினமல்ல. கோண்டு பழங்குடியின கிராமங்களுக்கு  சென்ற மாவோயிஸ்டுகள், அங்கு தமது கொள்கையை பிரகடனம் செய்த பொழுது, அவர்கள் உள்ளூர் மக்களால் வரவேற்கப் பட்டதில் வியப்பில்லை. எமக்குத் தான் அது புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ஏனென்றால், நாங்கள் ஆங்கிலேயரின் உடை உடுத்தி, ஆங்கிலேயரின் கல்வி கற்று, ஆங்கிலேயர்கள் போன்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். பிரிட்டனில் ஒரு கம்யூனிசப் புரட்சி நடந்தால் மட்டுமே, நாங்கள் அதனை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றத் தயாராக இருக்கிறோம்.

***************************

உசாத்துணை:
1. எல்வின் கண்ட பழங்குடிகள், வெரியர் எல்வின், தமிழில் சிட்டி (வெளியீடு: விழுதுகள் பதிப்பகம்)
2. Adivasi, Het andere India, Frits Cowan (Koninklijk Instituut voor de Tropen)
3.The Origin of Family, Private Property and State, Friedrich Engels (குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)

இணையத் தளங்கள்:
Ghotul, http://en.wikipedia.org/wiki/Ghotul Madia ghotul residence for adolescents

Madia ghotul residence for adolescents from Indian Tribal Heritage on Vimeo.

3 comments:

சேக்காளி said...

//ஆங்கிலேயர்கள் போன்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்//
"போன்று தான்" செயல் பட முடியும்.ஆக முடியாது.

சேக்காளி said...

ஆக வேண்டிய அவசியம் என்ன.நாம் நாமாக வாழ்வோம்.

Kaththukutti Communist said...

ஆரியர் ஒரு இனம் இல்லை.என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.இது உண்மையா? அந்த புத்தகத்தின் பெயர் ஆரியர் வரலாறு I &II உங்களுக்கு தெரியுமா?