
உங்கள் நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் அல்லது இடதுசாரிகள் இருக்கிறார்களா? உலக நாடுகளில், மிக அதிகமாக வேட்டையாடப் பட்டு, அழித்தொழிக்கப் படும் இனங்களில் அதுவும் ஒன்று. அவர்களை யாரும் சீண்டிப் பார்க்கலாம், மிரட்டலாம், அடிக்கலாம், சித்திரவதை செய்யலாம், பாலியல் வல்லுறவு செய்யலாம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கூட கொலை செய்யலாம். ஒட்டுமொத்தமாக இனப்படுகொலையும் செய்யலாம். இதையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாது. ஐ.நா. மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. மனித உரிமை ஸ்தாபனங்களுக்கு அதைப் பற்றி ஆராய நேரம் கிடையாது. ஊடகங்களைப் பொறுத்தவரையில், அதெல்லாம் செய்திகளே அல்ல. இது போன்ற சூழ்நிலை தான் உலகம் முழுவதும் நிலவுகின்றது.
உலகப் புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த நாடான, ஆர்ஜெந்தீனாவில், 1976 ம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ அதிகாரிகள்; அரச எதிர்ப்பாளர்களான கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், மற்றும் பல இடதுசாரிகளை வேட்டையாடி அழித்தார்கள். அமெரிக்கா போன்ற "மனித உரிமைக் காவலர்களின்" ஆசீர்வாதத்தில் நடக்கும், "கம்யூனிச இனவழிப்பு", தேவைப்படும் போதெல்லாம் எல்லா மூன்றாமுலக நாடுகளிலும் அரங்கேற்றப்படும். இராணுவ சர்வாதிகாரி விடெலாவின் ஆட்சிக் காலத்தில், சுமார் முப்பதாயிரம் "அரச எதிர்ப்பாளர்கள்" கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று அஞ்சப் படுகின்றது. பெரும்பான்மையானோர் "காணாமல்போனோர்" பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்கள் எவ்வாறு கொல்லப் பட்டனர் என்பதை, அந்த அடக்குமுறை அரசில் பணியாற்றிய சில அதிகாரிகள், பின்னாளில் சாட்சியம் அளித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி, அல்லது ஏதாவது ஒரு இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், எல்லோரும் இரவோடிரவாக கடத்தப்பட்டு, தலைநகர் புவனஸ் அயர்சில் உள்ள கல்லூரி ஒன்றில் அடைத்து வைக்கப் பட்டனர். அங்கே வைத்து கடுமையாக சித்திரவதை செய்யப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்களும் சித்திரவதைக்கு தப்பவில்லை. ("மாற்றுக் கருத்தாளர்களின்" மனைவிகளாக இருந்தாலே, அது ஒரு குற்றமாக கருதப் பட்டது.) அந்தக் காலங்களில், நிறைய கர்ப்பிணிப் பெண்கள், வதை முகாம்களில் குழந்தைகளை பெற்றெடுத்தனர். மருத்துவ வசதிகளின்றி, தாதி மாரின் உதவியின்றி குழந்தை பெற வேண்டிய நிலைமை. அந்தப் பெண்கள் நிறைமாதக் கர்ப்பிணிகளாக இருந்த காலத்தில், அவர்களை சித்திரவதை செய்த கொடியவர்கள், ஈன்ற குழந்தையை தாய்க்கும் காட்டாமல் பறித்துச் சென்றார்கள்.
அன்றே பிறந்த சிசுக்கள் மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த குழந்தைகளையும் தாய், தந்தையரிடம் இருந்து பிரித்து எடுத்துச் சென்றனர். கம்யூனிஸ்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும் மகனாக, மகளாக பிறந்தது தான், அந்தக் குழந்தைகள் செய்த ஒரேயொரு குற்றம். கம்யூனிஸ்டுகளின் குழந்தைகளை, வலதுசாரி இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களிடம், அல்லது மேட்டுக்குடி குடும்பங்களிடம் வளர்ப்பதற்காக தத்துக் கொடுத்தனர். குழந்தைகளை மட்டுமல்ல, விபரம் அறியாத சிறு வயது பிள்ளைகளையும், பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு இடங்களில் வளர்த்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கு, சொந்தப் பெற்றோர் பற்றிய விபரங்கள் மறைக்கப்பட்டன. வேறு பெயர்கள் சூட்டப் பட்டன. போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. மேட்டுக்குடி வளர்ப்புப் பெற்றோரால், அந்தப் பிள்ளைகள் "கம்யூனிச விரோத கருத்துகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு" வளர்க்கப் பட்டனர். "கம்யூனிசத்தை வெறுப்பவன், அப்பன் பெயர் தெரியாத பிள்ளையாக இருப்பான்!" யாரும் கோபப் பட வேண்டாம். ஒரு காலத்தில், ஆர்ஜென்தீனாவில் அப்படி சொல்லக் கூடிய நிலைமை இருந்தது.

வதை முகாம்களில், சித்திரவதை செய்யப்பட்ட கைதிகள் கொல்லப் பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டதும், அவர்களை விமானப்படை விமானங்களில் ஏற்றிச் சென்றார்கள். விமானங்கள், கரையில் இருந்து வெகு தூரம், கடலின் மேல் பறக்கும் நேரம், கைதிகளை தூக்கிக் கடலில் போட்டார்கள். இவ்வாறு, காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க முடியாதவாறு, அனைத்துத் தடயங்களும் அழிக்கப் பட்டன. ஒரு மிகப்பெரிய வதை முகாம், அதன் தேவை முடிந்தவுடன் இருந்த இடம் தெரியாமல் முற்றாக அழிக்கப் பட்டது. புவனர்ஸ் அயர்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இயங்கிய வதை முகாம் மட்டும் இன்றைக்கும் நினைவுச் சின்னமாக நிலைத்து நிற்கின்றது. அங்கு கைதிகளாக அடைக்கப்பட்ட 5000 பேரில், 200 பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்திருக்கிறார்கள்.
ஆர்ஜென்தீனாவில் நடந்த போர்க்குற்றங்கள், அல்லது மனித குலத்திற்கு எதிரான படுகொலைகளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் ஒரு தடவையேனும், சம்பிரதாயபூர்வமான விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை. 30000 பேரின் படுகொலைக்கு காரணமானவர்களை விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டுமென்று, எந்தவொரு உலக நாடும் கேட்கவில்லை. ஆனால், ஆர்ஜெந்தீன மக்கள் அதற்காக போராடினார்கள். கடுமையான இராணுவ சர்வாதிகார அடக்குமுறைக்கு மத்தியில், காணாமல்போன பிள்ளைகளின் அன்னையர்கள் போராடினார்கள். வயதான மூதாட்டிகள், தங்கள் காணாமல்போன உறவுகளை தேடி, இராணுவ தலைமையகம் முன்பு ஒன்று கூடினார்கள்.
Plaza de Mayo என்ற சதுக்கத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். Plaza de Mayo என்பது, 1890 ம் ஆண்டு, ஸ்பெயினிடம் இருந்து ஆர்ஜெந்தீனா சுதந்திரமடைந்த நினைவுச் சின்னம் ஆகும். அந்த சதுக்கத்தில், ஆரம்பத்தில் பத்துப் பேர் கூட சேராத போராட்டத்தை, பொது மக்கள் புறக்கணித்தார்கள். பொது மக்கள் அவர்களை, "கிறுக்குப் பிடித்த அன்னையர்" என்று கேலி செய்தனர். காணாமல்போன பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை தேடி, ஆற்றாமையினால் அழுது கொண்டே போராடத் தொடங்கிய தாய்மார், பாட்டிமாரின் போராட்டம், "Madres de Plaza de Mayo" என்ற பெயரில் அமைப்பு வடிவம் எடுத்தது.

ICAD அமைப்பின் நெதர்லாந்துக் கிளையை ஸ்தாபித்த காலத்தில் இருந்தே, நானும் அந்தக் கமிட்டியில் ஒரு அங்கத்தவராக இருந்து வருகின்றேன். அதனால், ஆர்ஜெந்தீன மக்களின் போராட்டத்தில், நானும் சிறிதளவு பங்களிப்பை செலுத்தி உள்ளேன். ICAD அமைப்பின் உருவாக்கம், ஆர்ஜெந்தீன அன்னியர்களின் போராட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே. அதை விட, பல அமெரிக்க - ஐரோப்பிய கம்யூனிஸ்ட் அனுதாபிகள், இடதுசாரிகள், அன்னையர் அமைப்பிற்கு தம்மாலியன்ற பொருளுதவி வழங்கி உள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவில், நியூயோர்க் நகர மருத்துவர்கள் சிலரின் முயற்சி திருப்புமுனையாக அமைந்தது.
தமது போராட்டத்தில் முன்னேற்றம் கண்டு வந்த ஆர்ஜெந்தீன அன்னையர்களுக்கு ஒரு பிரச்சினை எழுந்தது. அறியாப் பருவத்தில், பறித்தெடுக்கப் பட்ட குழந்தைகள், இன்று வளர்ந்து பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களாக இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? காணாமல்போன அல்லது கொலை செய்யப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள் இவர்கள் தான் என்பதை, உறுதிப் படுத்துவது எப்படி? அதிர்ஷ்டவசமாக அப்போது மருத்துவத்துறையில் வளர்ந்திருந்த மரபணு (DNA) அறிவியல் கைகொடுத்தது. அன்னையரின் போராட்டத்திற்கு ஆதரவான, நியூயோர்க்கை சேர்ந்த மருத்துவர்கள், இலவசமாக மரபணு பரிசோதனைகளை செய்து தருவதற்கு முன்வந்தார்கள். காணாமல்போனவர்களின் உறவினர்களின் மரபணுவுடன், பிள்ளைகளின் மரபணு ஒப்பிட்டுப் பார்க்கப் பட்டது. இதற்கிடையே, எண்பதுகளில் நடந்த மால்வினாஸ் (போல்க்லாந்து) யுத்த தோல்வியினால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, இராணுவ சர்வாதிகார ஆட்சி நிலைகுலைந்தது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த ஆட்சிமாற்றம், அன்னையர் அமைப்பின் போராட்டத்திற்கு சாதகமாக அமைந்தது.
இவ்விடத்தில் ஒரு விடயத்தை நாம் மறந்து விடக் கூடாது. 1976 ம் ஆண்டு, ஆர்ஜந்தீனாவில் இராணுவ சதிப்புரட்சி நடந்து, இராணுவ அதிகாரிகள் ஆட்சி நடத்தினாலும், பெரும்பான்மை மக்கள் அடக்குமுறையை உணராமல் இருந்தனர். அதாவது, நாட்டில் எல்லாம் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. 1978 ம் ஆண்டு, சர்வதேச கால் பந்து விளையாட்டுப் போட்டிகள் நடக்குமளவிற்கு, ஆர்ஜந்தீனாவில் "இயல்பு நிலை" நிலவியது. அப்படியான "அமைதியான" காலகட்டத்தில் தான், ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். தமது அயலில், அப்படியான கொடுமைகள் நடப்பதை, பெரும்பான்மையான ஆர்ஜெந்தீன மக்கள் அறியாமல் இருந்தனர். அதனால் தான், Plaza de Mayo வில் தங்கள் உறவுகளைத் தேடி அழுது கொண்டிருந்த அன்னியர்களின் போராட்டம் அவர்களுக்கு புதுமையாகப் பட்டது. அதனால் தான், மக்கள் அவர்களுக்கு "கிறுக்குப் பிடித்த அன்னையர்கள்" என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.
அதாவது, ஒரு காலத்தில் மக்கள் வலதுசாரி ஆட்சியாளர்களின் தேசியவாத பரப்புரைகளுக்கு மயங்கிக் கிடந்தனர். சர்வதேச சமூகமும், அடக்குமுறையாளர்களின் பக்கம் நின்றதால், எந்த வழியிலும் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்ற ஸ்ரீலங்கா அரசு, ஈழப்போரின் இறுதியில் வன்னியில் நடந்த படுகொலைகளை, சிங்கள மக்கள் அறிய விடாமல் மறைத்து வந்தது. ஆனால், போருக்குப் பின்னராவது, சில சர்வதேச ஊடகங்கள் கவனமெடுத்து, படுகொலைகள் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. அதனால், குறைந்த பட்சம், ஓரளவு ஆங்கிலப் புலமை பெற்ற சிங்களவர்களாவது, தமக்கு மறைக்கப் பட்ட உண்மைகளை தெரிந்து கொண்டனர்.
ஆர்ஜெந்தீன விவகாரத்தில், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், அமெரிக்கா ஆர்ஜன்தீனாவுக்கு எதிராக தீர்மானம் எதையும் கொண்டு வரவில்லை. இன்று வரையில், எந்தவொரு சர்வதேச ஊடகமும் ஆர்ஜெந்தீன படுகொலைகள் குறித்து அதிக அக்கறை காட்டவில்லை. ஏனென்றால், படுகொலை செய்யப் பட்ட மக்கள், "கம்யூனிஸ்டுகள்" என்று கருதப் பட்டவர்கள் என்பதால், யாரும் அவர்களுக்காக கண்ணீர் சிந்தவில்லை. அப்படியான சந்தர்ப்பத்தில், அன்னையர் அமைப்பின் போராட்டமானது, போர்க்குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புமளவிற்கு வெற்றி பெற்றுள்ளமை, ஒரு மாபெரும் சாதனை ஆகும்.
ஒரு நாட்டில் இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமானால், முதலின் அந்த நாட்டில் புரட்சிகர சமூக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆர்ஜெந்தீன அன்னையர்களின் போராட்டத்தில் இருந்து, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் இவை. சர்வதேச மூலதனத்தினால் முண்டு கொடுக்கப்பட்ட, சர்வாதிகாரி விடெலா அரசின் வீழ்ச்சி. தொன்னூறுகளில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி. அதன் காரணமாக ஸ்தம்பிதமடைந்த ஆர்ஜெந்தீன பொருளாதாரம். நலிவடைந்த மக்களின் அரசுக்கு எதிரான எழுச்சி. அதனால் ஏற்பட்ட புதிய இடதுசாரி அலை, என்பன யாரும் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கின. உண்மையான ஜனநாயக சூழலில் நடந்த பொதுத் தேர்தலில், இடதுசாரி வேட்பாளர் Néstor Kirchner வெற்றி பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டார். அவர் மக்கள் பிரதிநிதியாக தெரிவானவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று, கடந்த கால இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர்களை, பகிரங்கமாக "போர்க்குற்றவாளிகள்" என்று அறிவித்தார். அரச அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த, விடெலா போன்ற போர்க்குற்றவாளிகளின் படங்கள் அப்புறப் படுத்தப் பட்டன.
ஆர்ஜன்தீனாவின் மக்கள் அரசு, போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த முன்னாள் ஆட்சியாளர்கள், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டனர். "கிறுக்குப் பிடித்த அன்னையர்களின்" வாக்குமூலங்களை போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தலைமைக் குற்றவாளியான விடெலாவுக்கு ஐம்பதாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அவருடன் ஒத்துழைத்த பிற குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். காணாமல்போனவர்களின் குழந்தைகள், தமது பெற்றோரை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களின் தாய், தந்தையர்கள் கொல்லப் பட்டு விட்டாலும்; தமது பேரப் பிள்ளைகளை காணாமல் தேடிக் கொண்டிருந்த தாத்தா மார், பாட்டி மாரின் அரவணைப்பு கிடைத்தது.
அன்னையர் அமைப்பின் நீண்ட போராட்டத்தின் விளைவாக, கடந்த கால ஆட்சியாளர்களின் குற்றங்களை அறிந்து கொண்ட ஆர்ஜெந்தீன மக்கள், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதே நேரத்தில், "மனித உரிமைகளின் காவலர்களான மேற்கத்திய நாடுகள் என்ன செய்தன? முன்னாள் போர்க்குற்றவாளிக்ளுடன் உறவு முறை கொண்டாடினார்கள். நெதர்லாந்தின் மன்னராக முடி சூடிக் கொள்ளவிருக்கும் வில்லம் அலெக்சாண்டர், சொறேகீத்தா என்ற போர்க்குற்றவாளியின் மகளை திருமணம் முடித்தார். போர்க்குற்றவாளிகளுடன் ஒத்துழைத்த, இரண்டு இடதுசாரி ஆர்வலர்கள் காணாமல்போன சம்பவத்திற்கு காரணமான எசுயிஸ்ட் பாதிரியார் Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டார். நாங்கள் "சர்வதேச சமூகம்" என்று மதிப்பளிக்கும் மேற்கத்திய நாடுகள், உண்மையில் யாருடைய பக்கம் நிற்கின்றனர் என்பதை, பல தடவைகள் தெளிவாக உணர்த்தி உள்ளனர். நாங்கள், அவர்களின் சுயரூபத்தை இன்னமும் புரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
*************************************
ஆர்ஜெந்தீன அன்னையர் அமைப்பின் போராட்ட வரலாறு பல்வேறு ஆவணப் படங்களாக பதிவு செய்யப் பட்டுள்ளது. நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்ட ஆவணப் படம் ஒன்றை இங்கே பார்வையிடலாம்:
De dwaze oma's van Argentinië (Holland Doc)
De dwaze oma's van Argentinië (Holland Doc)
ஆர்ஜெந்தீனா பற்றிய முன்னைய பதிவுகள்:
1. ஆர்ஜென்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி2. புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி!