Thursday, March 28, 2013

சுற்றுலாப் பயணிகளை கவரும் கம்யூனிச சொர்க்கம்மாவோவின் மரணத்திற்குப் பின்னர், சீனாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய டென்ங்சியாபிங், சோஷலிசத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, சந்தைப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, சீனாவின் சோஷலிச கட்டுமானங்கள் படிப்படியாக தகர்க்கப்பட்டு, முதலாளித்துவ பொருளாதாரம் புகுத்தப் பட்டது. இதனால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்ட கம்யூன் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இன்று சீனாவுக்கு செல்லும் யாரும், முதலாளித்துவ சீனாவை தான் தரிசிப்பார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த சோஷலிச சீனா, எப்படி இருந்திருக்கும் என்பது இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தெரியாது. ஆனால், இன்றைக்கும் ஓரிடத்தில் பழைய சோஷலிச கட்டுமானங்களை கொண்ட கிராமம் (அல்லது நகரம்) ஒன்று, திறந்த வெளி அருங்காட்சியகம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. சீனாவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் வாழும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அந்த இடத்திற்கு சென்று வருகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, அன்றைய கம்யூனிச சீன எப்படி இருந்திருக்கும் என்று, அங்கு செல்பவர்கள் கண்டு களிக்கலாம்.

நாஞ்சிசுன் (Nanjiecun) என்ற ஊரில், மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர், முதலாளித்துவ சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, கம்யூனிசக் கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முடிவு செய்தனர். அவர்களுக்கு அயலில் இருக்கும் ஊர்கள் எல்லாம், முதலாளித்துவத்திற்கு மாறியதால், ஒரு பக்கம் ஏழைகளும், மறுபக்கம் பணக்காரர்களும் அதிகரித்தனர். அந்த ஊர்களில், வேலயில்லாத் திண்டாட்டம், ஊழல், திருட்டு, விபச்சாரம், போதைவஸ்து பாவனை என்று, முதலாளித்துவத்திற்கே உரிய பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டன. பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் தோன்றின.  ஆனால், நாஞ்சிசுன் மக்கள், அவற்றைப் பற்றிய எந்தக் கவலையுமற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
அதை ஏன் சொர்க்கம் என்று அழைக்க வேண்டும்? நாஞ்சிசுன் நகர தெருக்கள் சுத்தமாக வைத்திருக்கப் படுகின்றன. தெருவில் பிச்சை எடுப்போரைக் காண முடியாது. அங்கே வேலையில்லாப் பிரச்சினை என்ற பேச்சே கிடையாது. எல்லோருக்கும் தொழில் வாய்ப்புண்டு. வீடின்றி யாரும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசதியான வீடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் அது போன்ற வீடுகளில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கலாம். நாஞ்சிசுன் வாழ் மக்கள், அந்த வசதியான வீடுகளுக்கு வாடகை கட்டுவதில்லை என்பது தான் விசேஷம். வீடு அவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றது. வீட்டு பாவனைக்கு தேவையான மின்சாரம் கூட இலவசமாகக் கிடைக்கின்றது. 

பெற்றோர், பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்கு என்று, பணம் சேர்க்கத் தேவையில்லை. பாலர் பாடசாலையில் இருந்து, பல்கலைக்கழகம் வரையில் கல்வி இலவசம். எதிர்பாராமல் வரும், மருத்துவ செலவுக்காவும் பணத்தை சேமித்து வைத்திருக்க தேவையில்லை. சாதாரணமாக வைத்தியரிடம் பரிசோதிப்பது முதல், அறுவைச் சிகிச்சைகள் வரையில் அனைத்தும் இலவசம். இதை எல்லாம், சீனாவின் பிற பகுதிகளில் நினைத்தும் பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, இந்தியாவில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவளிப்பதற்காக, ஒரு சராசரி குடிமகன் என்ன பாடுபட வேண்டுமோ, அதே நிலைமை தான் இன்றைய சீனாவிலும் உள்ளது. 


வெறும் 3500 பேரை சனத்தொகையாக கொண்டிருந்தால், அது ஒரு கிராமம். ஆனால், நாஞ்சிசுன் ஒரு நகரம் போலக் காட்சியளிக்கின்றது. ஒரு நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் அங்கே உண்டு. நமது நாட்டில், தினசரி எத்தனை பேர்  கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர்? பிள்ளைகளின் படிப்புக்காக, வேலை வாய்ப்புக்காக, மருத்துவ வசதிக்காக, இவ்வாறு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு நகரங்களில் குடியேறுகின்றனர். இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் அது தான் நிலைமை. ஆனால், நகரங்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும், கிராமங்களில் கிடைத்தால், யாராவது குடிபெயர யோசிப்பார்களா? 

விரும்பினால், ஒரு சுற்றுலாப் பயணியாக, மற்ற இடங்களை பார்த்து விட்டு வரலாம். அதைத் தான் நாங்கள் கம்யூனிசம் என்று சொல்கிறோம். அதாவது, ஒரு கம்யூனிச சமுதாயத்தில், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து விடும். முன்பு சோஷலிச நாடுகளாக இருந்த, ரஷ்யாவோ, சீனாவோ அந்தளவு வளர்ச்சி அடைந்து விடவில்லை, என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், சில இடங்களில் அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடந்துள்ளன. நாஞ்சிசுன் கம்யூன் அப்படியான மாதிரிக் கிராமங்களில் ஒன்று. கடந்த முப்பது வருடங்களாக, அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது ஒரு சாதனை தான். 

ஒரு கம்யூன் எப்படி இயங்குகின்றது? சுருக்கமாக சொன்னால், அது ஒரு தனி நாடு. பாதுகாப்பு போன்ற சில விடயங்களைத் தவிர, தனது பொருளாதாரத்தை தானே தீர்மானித்துக் கொள்கின்றது. கம்யூன் உறுப்பினர்களுக்கு இடையில் அந்தஸ்து வேறுபாடு கிடையாது. சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு கிடையாது. எல்லோரும் சமமாக மதிக்கப் படுகின்றனர். 

ஒரு கம்யூனில், அதன் "குடி மக்கள்", கூட்டுத்துவ உழைப்பை செலுத்துகின்றனர். தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொள்கின்றனர். பால், இறைச்சி போன்றவற்றிற்காக, விலங்குப் பண்ணைகளை அமைகின்றனர். உணவை பதப் படுத்துவதற்கு, அல்லது அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை பாவனைப் பொருட்களாகுவதற்காக, தொழிற்சாலைகளை கட்டுகின்றனர். அவற்றை சுற்றி, சேவைத் துறைகளும் உருவாகின்றன. நாஞ்சிசுன் கிராமம், தனக்கென்று சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளுமளவிற்கு, அது பல high tech தொழிலகங்களை கொண்டுள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளில் பணி புரிவோர் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆனால், உழவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது சேவையை வழங்குகின்றனர். 

ஒரு கம்யூனில், பணப் புழக்கம் கிடையாது. அதனால், அங்கே லஞ்சம், ஊழலும் கிடையாது. நாம் பயன்படுத்தும் நாணயத் தாளுக்கு பதிலாக, ஒரு பொருளின், சேவையின் பெறுமதி கணக்கிடப் படுகின்றது. இன்றைய நாகரிக உலகில், வங்கி அட்டைகளையும், கடன் அட்டைகளையும் மட்டுமே பாவிக்கும் மக்களும், காசை கண்ணால் காண்பதில்லை. 

கம்யூன் மக்களின் உழைப்பு அதிகரிக்கும் பொழுது, அவர்களின் செல்வமும் அதிகரிக்கின்றது. இன்று நாஞ்சிசுன் கிராமம், அயலில் உள்ள நூற்றுக் கணக்கான கிராமங்களை விட  "பணக்கார கிராமமாக" உள்ளது.  நாஞ்சிசுன் கம்யூனில் வசிக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அயல் கிராமங்களில் இருந்து வேலை தேடி வந்தவர்கள், என்பது குறிப்பிடத் தக்கது. 

வேலை வாய்ப்பு, அதிக சம்பளம் போன்ற காரணங்களுக்காக ஒரு நகரத்திற்கு, அல்லது பணக்கார நாடொன்றுக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் போன்று தான், அவர்களும் நாஞ்சிசுன் கம்யூனில் தங்கி இருக்கின்றனர். "குடிவரவாளர்களான" அயல் கிராம தொழிலாளர்களுக்கு, இலவச தங்குமிடமும், உணவும் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல, அவர்கள் தமது சொந்த ஊரில் சம்பாதிப்பதை விட அதிகளவு சம்பளம் பெறுகின்றனர். 

சீன முதலாளித்துவ ஆதரவாளர்கள், நாஞ்சிசுன் கம்யூனைப் பற்றி குறை சொல்லாமல் சும்மா இருக்கவில்லை. சீன அரசில், சில மேல் மட்ட நண்பர்களின் செல்வாக்கு, அவர்களின் உதவியால் கிடைக்கும் கடன்கள், குடியேற்ற தொழிலாளரின் கூலி உழைப்பு போன்ற பல காரணங்களினால் தான் அந்தக் கம்யூன் இயங்கிக் கொண்டிருப்பதாக குறை கூறுகின்றனர். 

ஆனால், இதே மாதிரியான குற்றச் சாட்டுகள், இஸ்ரேலை ஸ்தாபித்த கிப்பூட்ஸ் பண்ணைகள் மீதும் சுமத்தப் பட்டன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில், பாலஸ்தீனத்தில் குடியேறிய மார்க்சிய யூதர்கள், அங்கே கம்யூனிசப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களை உருவாக்கினார்கள். அவர்களுக்கு சர்வதேச யூத நிதியத்தில் இருந்து கடனுதவி கிடைத்தது. மேலும், அயல் கிராமங்களில் இருந்த பாலஸ்தீன கூலித் தொழிலாளர்களின் உழைப்பையும் பயன்படுத்தினார்கள். 

சீனா முழுவதிலும் இருந்து, தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாஞ்சிசுன் கம்யூனை பார்வையிட வந்து செல்கின்றனர். "கம்யூனிச சுற்றுலா" வருபவர்களிடம் இருந்தும், அந்த கிராமத்திற்கு மேலதிக வருமானம் கிடைக்கிறது. அங்கிருக்கும் முப்பதடி உயரமான மாவோ சிலை, அதற்கு அருகில் உள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும் சுற்றுலாப் பயணிகளை கவருகின்றன. அதற்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். திரும்பிப் போகும் பொழுது, உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பதற்காக, பல நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கின்றனர்.  

மேலதிக தகவல்களுக்கு: 
1.In China, a Place Where Maoism Still Reigns
2.Nanjie Cun: the village that time forgot

கீழே உள்ளது ஒரு ஜெர்மன் மொழி ஆவணப்படம். நாஞ்சிசுன் கம்யூன் மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாக படம் பிடித்துக் காட்டுகின்றது. மொழி தெரியாதவர்களும் பார்த்து இரசிக்கலாம்:************************************

கம்யூனிச சமுதாயங்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:
ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்

10 comments:

kavignar said...

super very interesting. This kind of changes only everybody ,every village, every country needs...thanks to introduce about it. vanakkam

ப.கந்தசாமி said...

Super!!!!!!!!!

பாண்டியன் said...

எல்லாம் சரி தான், கம்யூனிசம் சொர்க்கம்னா அகதியா போறவன் சீனாவுக்கு போகாம்ம, எதக்கய்யா அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஒடுறான், கம்யுனிசம் பேசற அகதிகளுக்கு வட அமெரிக்கா கண்ணுக்கு தெரியுது. தென் அமெரிக்கா கண்ணுக்கு தெரியலயா! பிழைக்கிறதுக்கு வேற கிரகத்துக்கு போனாலும் போவீங்க. ஆனா சீனா, க்யுபாக்கு போக மாட்டீங்க, ஆனா சீனாவை சொர்க்கம்ப்பீங்க. இநத முரண்பாடுதான் கம்யுனிசமோ.

Kalaiyarasan said...

மலையரசன்,
தமிழீழம் கேட்கும் ஈழத் தமிழர்கள் எதற்காக கொழும்பிற்கு குடிபெயர்கிறார்கள், என்று ஸ்ரீலங்கா அரசு கேட்பது போலுள்ளது உங்களது கேள்வி. ஒரே நாட்டுக்குள் மக்கள் இடம்பெயர்வதையும், வசதிகளை தேடுவதையும் தடுக்க முடியாது. அரசியல் அகதிகளும், பொருளாதார அகதிகளும், வேலை தேடுவோரும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு காரணம் காலனிய கால வரலாற்றில் மறைந்துள்ளது. அமெரிக்கா முதல், அவுஸ்திரேலியா வரையில் பரந்து விரிந்திருந்த, சூரியனும் மறையாத, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த பிரஜைகள், தொழில் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அந்தப் பழக்கம் இன்னமும் தொடர்கின்றது. இன்றைக்கும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா என்று புலம்பெயர விரும்பும் தமிழர்கள், அங்கெல்லாம் ஆங்கிலம் பேசுவதால் "வாழ்க்கை இலகுவாக" இருக்கும் என்று ஒரு காரணத்தை கூறுகின்றனர். இன்றைக்கும் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுவதாக, படித்த தமிழர்கள் நினைப்பதற்கு அதுவே காரணம். காலனிய எஜமானர்களின் நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தான் பிற மேற்கத்திய நாடுகளையும் கண்டுபிடித்தார்கள். நாங்கள் முதலில் எமது காலனிய எஜமானர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வோம். அதற்குப் பிறகு, முதலாளித்துவ நாடுகள் சொர்க்கமா, அல்லது கம்யூனிச நாடுகள் சொர்க்கமா என்று கேட்போம்.

Unknown said...

gr8 article

MOHAMED AMEER said...

super!!!!!!!!!!!!!!!!!! very interesting. This kind of changes only everybody ,every village, every country needs...thanks for your article.

Anonymous said...

you should have explored more about how the economy is floating day to day life..

ஒரு பொருளின், சேவையின் பெறுமதி கணக்கிடப் படுகின்றது//

can a doctor's service be equal to school teacher or a sweeper's service?

//இன்றைக்கும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா என்று புலம்பெயர விரும்பும் தமிழர்கள், அங்கெல்லாம் ஆங்கிலம் பேசுவதால் "வாழ்க்கை இலகுவாக" இருக்கும் என்று ஒரு காரணத்தை கூறுகின்றனர்.// Its not about them. malaiyarasan asking particularly "you" why are you skipping and confusing. why cant you move to Nanje cun now?

அந்தப் பழக்கம் இன்னமும் தொடர்கின்றது//

Why are you hiding behind words? Who resisted you go to china?

You are sitting comfortably in a capitalist country and enjoying all freedom and writing china is a heaven what an irony?

Kalaiyarasan said...

//Its not about them. malaiyarasan asking particularly "you" why are you skipping and confusing. why cant you move to Nanje cun now? //

மலையரசனின் கேள்வியும், அதற்கு வக்காலத்து வாங்கும் உங்களது கூற்றும் அர்த்தமற்ற அபத்தங்கள். நேபாளத்தில் மன்னராட்சி நடந்த காலத்தில், "உலகில் ஒரேயொரு இந்து நாடு", அதாவது சட்டப்படி இந்து தேசம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அப்படியானால், இந்தியாவில், இலங்கையில் இந்து மத கொள்கையை ஆதரிப்பவர்கள் ஏன் நேபாளத்திற்கு போகவில்லை என்று கேட்பீர்களா? நான் சீனாவில் Nanje cun சென்று வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அங்குள்ளவர்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள், தமக்கென ஒரு கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள், அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். நான் வாழும் நாட்டில், நான் வாழும் ஊரில் அப்படி ஒரு சமுதாயம் உருவாக்கி இருந்தால், அந்த இடத்தில் ஏன் வாழவில்லை என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. மேலும், முதலாளித்துவ நாடுகள் என்ற முன்னாள் காலனியாதிக்க நாடுகளுக்கும், முன்னாள் காலனிகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மறைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். உங்களது கொள்கைக்கு ஏற்றவாறு வரலாற்றைத் திரிப்பது கண்டிக்கத் தக்கது. ஐரோப்பியர்களால் சுரண்டப்பட்ட காலனியை சேர்ந்த மக்கள், அங்கு சுரண்டிய பணத்தை சேர்த்து வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கு சென்று தங்குவதில் என்ன தவறு? அதற்கான எல்லாவித உரிமைகளும் அவர்களுக்குண்டு.

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

பிரகாஷ் said...

இதே போன்று எமது தேசங்களிலும் கம்யூன் சமுதாயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு கடுமையாக பாடுபட வேண்டும். அப்படி உருவாகினால் சீனா செல்லவேண்டிய தேவை இல்லை. ஆனால் இதில் பின்னூட்டமிடுபவர்கள் கவனிக்கத்தவறிய (கவனிக்க விரும்பாத) விடயம் கம்யூனிசத்தை தலை முழுகி விட்ட சீனாவில் முப்பது வருட காலமாக இயங்கிவரும், கம்யூனிசத்தை கைவிட விரும்பாத ஒரு கிராமத்தை பற்றியே இக்கட்டுரை பேசுகின்றது என்பதை. இது ஒரு வித விதண்டாவாத மனநிலை.