மார்க்சியம் தோற்றுப்போன சித்தாந்தம் என்று பேசுவோர் முதலில் அதில் தாக்கம் செலுத்தும் ஹெகலியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவ அறிஞர் உருவாகிய தத்துவார்த்த கோட்பாடுகள் ஹெகலியம் என்று அழைக்கப் படுகின்றன. கார்ல் மார்க்ஸ் இளைஞனாக இருந்த காலத்தில் அவரும் தம்மை ஒரு ஹெகலியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டார். அந்தளவுக்கு ஹெகலின் தத்துவக் கூறுகள் மார்க்சியத்தில் தாக்கம் செலுத்துகின்றன.
ஹேகல் 1807 ம் ஆண்டு வெளியிட்ட "ஆன்மாவின் தோற்றப்பாடுகள்" நூலின் மூன்று முக்கிய கருதுகோள்கள்:
- 1. அன்னியமாதல்
- 2. பண்டமாதல்
- 3. தன்னிலை அறிதல்
- அன்னியமாதல் என்பது மனிதர்கள் ஒருவரோடொருவர், தமக்குள் கூட முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள்.
- அது பண்டமாகுதலை நோக்கி இழுத்து செல்கிறது. அதாவது சமூகம், சட்டம், ஒழுக்க நெறி போன்றவை மனிதர்களால் உருவாக்க்ப் பட்டன. காலப்போக்கில் இவற்றை தாமே உருவாக்கினோம் என்பதை மனிதர்கள் மறந்து விடுகின்றனர். அது மட்டுமல்ல அவை பகைமை கொண்ட சக்திகளாக மனிதர்களுக்கு எதிராக திருப்பி விடப் படுகின்றன. அவை மனிதர்கள் பண்டங்களாக நடத்துகின்றன.
- ஒரு மனிதன் தானே உருவாக்கிய உலகில் தான் ஒரு அன்னியனாக மாறி விட்டதை உணர்வது தன்னிலை அறிதல் எனப்படும். அப்போது சுய அறிவுக்கான கதவு திறந்து விடப் படுகிறது. வரலாற்று இயங்கியல், பிரதானமான பாடம்:
- எஜமான், அடிமைகளுக்கு இடையிலான உறவு.
- சமுகம் எதேச்சதிகார தன்மை கொண்ட மனிதர்களால் ஆளப் பட்டு வந்தது. காரணம் ஏனையோர் அடிமைகளாக இருந்தனர்.
- அடிமைகள் தமக்குள் சமமானவர்களாக இருந்தனர். அத்துடன் அவர்கள் எல்லோரும் எஜாமானில் தங்கி இருந்தனர்.
- ஒரு எஜமான் ஆதிக்கம் செலுத்துவதற்கு அவருக்கு கீழ்ப்படிவான மக்கள் தேவை. அதனால் அவர் கூட அடிமைகளில் தங்கி இருந்தார். இதனால் அடிமைகளை நன்றாக பராமரிக்க வேண்டிய தேவை உண்டாகிறது.
- இங்கு ஒரு இயங்கியல் விதி உருவாகிறது. அன்னியமாதலில் இருந்து பரஸ்பர அங்கீகாரம் என்ற கட்டத்திற்கு செல்கிறது. அதனால் வரலாறு முழுவதும் சுதந்திர வேட்கைக்கான கதைகளாக உள்ளன.
- அடிமைத்தனம் என்ற கருதுகோள், சுதந்திரம் என்பதன் எதிர்க் கருதுகோளாக உள்ளது. இந்த எதிர்வினை அடிமைத்தளைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமான சமுதாயத்தை உருவாக்குகிறது.
- இந்த வரலாற்று பண்பாட்டுத் தளமானது ஒரு வினையில் (thesis) இருந்து, அதன் எதிர்வினையான (antithesis) இன்னொரு பண்பாட்டு தளத்திற்கு செல்கிறது. இந்த இரண்டும் இணைந்து மூன்றாவதானதொரு பண்பாட்டுத் தளம் இதன் விளைவாக (synthesis) உண்டாகிறது.
- ஹேகலை பொறுத்த வரையில் ஒவ்வொரு விளைவும் (synthesis) முற்போக்கானது. ஏனென்றால் அது கடந்த காலத்தில் இருந்த பிரச்சினைகளை ஏற்பட்ட அழுத்தங்களை களைந்து புதிய அழுத்தங்களை கொண்டு வருகின்றது. இருப்பினும் இந்த இயங்கியலானது எதிர்காலத்தில் உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கான கூறுகளைக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளும் புறக்கணிக்கத் தக்கது.
- ஹேகலின் Logica நூலில் தத்துவம் ஒரு முற்போக்கான இயக்கத்தை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது சொந்த தத்துவத்தை இதன் விளைவாக synthesis ஆக காண்கிறார்.
ஹேகலின் தவறு என்ன?
- தத்துவத்தின், சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியை பிரதிநிதித்துவப் படுத்திய, அப்போது அவர் வாழ்ந்து கொண்டிருந்த பிரஷிய- ஜேர்மன் தேசம் நாகரிகத்தின் இறுதிக் கட்டத்தில் நிற்பதாகக் கருதினார். இந்தக் கோட்பாட்டை கார்ல் மார்க்ஸ் மறுதலித்தார். அதை நிரூபிப்பது போன்று ஜேர்மனியில் அடுத்து நடந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்தன.
- ஹேகல் 1831 ல் இறந்தார். கார்ல் மார்க்ஸ் 1818 ல் பிறந்தார்.
- 1848 ம் ஆண்டு ஜேர்மன் புரட்சி நடந்தது. அது ஒரு லிபரல் புரட்சி. அதன் விளைவாக மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொண்டனர். (அந்தக் காலத்தில் தனி மனித சுயநிர்ணயம் முக்கியமாக கருதப் பட்டது.) மேலும் சோஷலிஸ்டுகள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை பெற்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் இவற்றை வர்க்கப் போராட்டமாகப் பார்த்தனர்.
- கார்ல் மார்க்ஸ் ஹேகலின் தத்துவங்களை நிராகரிக்கவில்லை. ஆனால் அவற்றில் இருந்த குறைபாடுகளை, போதாமைகளை தனது தத்துவத்தால் நிவர்த்தி செய்து கொண்டார்.
- "தத்துவ அறிஞர்கள் இந்த உலகை பல வழிகளிலும் விளங்கப் படுத்தி உள்ளனர். இந்த உலகை மாற்றுவதே அதன் நோக்கம்." - கார்ல் மார்க்ஸ்
No comments:
Post a Comment