பெரும்பாலான ஈழத் தமிழர்கள் மத்தியில் பௌத்த மதம் குறித்து முற்றிலும் தவறான, கற்பனாவாதமான கண்ணோட்டம் உள்ளது. இது ஒரு வகையில் மதங்களுக்கு அல்லது மத நம்பிக்கையாளர்களுக்கு இடையிலான புரிந்துணர்வுக் குறைபாட்டால் எழுகிறது. சில நேரம், வரட்டுத்தனமாக நாத்திகம் பேசுவோரும் குருட்டுத்தனமான மத வெறுப்புவாதிகளாக உள்ளனர். இதற்குப் பின்னால் இனத்துவ, சாதிய பகை முரண்பாடுகளும் மறைந்துள்ளன.
பௌத்த மதத்தில் சிறுவர்கள் துறவறம் பூணுவது பற்றிய விவாதம் ஒன்றில், பல ஈழத்தமிழ் "அறிவுஜீவி"(?)களின் மதம் குறித்த அறியாமை தெளிவாக வெளிப்பட்டது. அவர்கள் எல்லோரும் சைவ மதத்தவராக பிறந்து வளர்ந்திருந்த போதிலும் சைவ மத அடிப்படைகள் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை! ஆன்மீக அறிவு சிறிதுமின்றி எந்நேரமும் ஒரு பக்கச் சார்பான அரசியல் வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களாக உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இனவாதம் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் வாழும் மக்களின் மத உணர்வுகளும் இனவாதிகளால் அரசியல் மயப் படுத்தப் படுகின்றன. இதற்கு சிங்களவர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் விதிவிலக்கு அல்ல.
தமிழக வரலாற்றில் பௌத்த மதம் முற்றாக அழித்தொழிக்க பட்ட பின்னர் தான், அங்கு சனாதன- சைவமதக் காலம் ஆரம்பமாகியது. அதுவரை காலமும் இந்து மதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரியதாக கருதப் பட்டு வந்த படியால், சாதாரண தமிழ் மக்கள் பௌத்த, சமண மதங்களை பின்பற்றி வந்தனர். அந்த மத நூல்கள் தமிழில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். இந்த குறைபாட்டை உணர்ந்து கொண்ட நாயன்மார்கள், தமிழில் தேவாரங்களை பாடத் தொடங்கினார்கள். அதன் ஊடாக ஆன்மீகக் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இவ்வாறு தான் பல பௌத்த, ஜைன மதக் கருத்துகள் சைவ மதத்தின் பேரில் பரப்பப் பட்டன.
சிவ புராணத்தில் உள்ள பின்வரும் வரிகள் பௌத்த மதம் போதிக்கும், மறுபிறப்பு சுழற்சி எனும் சம்சாரா சக்கரத்தை நினைவுபடுத்துகிறது. சொல்லுக்கு சொல், வரிக்கு வரி ஒரே மாதிரி இருப்பது குறிப்பிடத் தக்கது:
//புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.//
(திருவாசகம்/சிவபுராணம் உரை 26-32)
இருப்பினும் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடையலாம் என சிவபுராணம்/சைவ மதம் முடித்து விடுகிறது. இந்த இடத்தில் தான் பௌத்த மதம் முரண்படுகிறது.
இவ்வாறு மறுபிறப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால், மனிதன் அதிலிருந்து மீள முடியாது. அதைத் தான் சம்சார சக்கரமும் உணர்த்துகிறது. ஆனால், இப் பிறவியில் தியானம் செய்து நிர்வாண நிலையை (முக்தி பெறுதல்) அடைவதன் மூலம், இந்த சுழற்சியில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று பௌத்த மதம் போதிக்கிறது. அதற்கு முதல் இவ்வுலக ஆசா பாசங்கள் உருவாக்கும் "துக்கதில்" இருந்து விடு பட வேண்டும். துக்கம் என்பது வருந்துவது மட்டுமல்ல. பொன், பொருள் அனுபவிக்கும் ஆசையும் துக்கம் தான்.
பலர் இதை உணராமல் இருப்பதற்கு அப்பாவித்தனமான அறியாமை மட்டும் காரணம் அல்ல. உண்மையை காண மறுக்கும் குருட்டுத்தனமான அறியாமை முக்கிய தடைக் கல்லாக உள்ளது. அதனால் தான், பௌத்த மதத்தில் துறவறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. துறவு என்பது உண்மையைத் தேடி, ஞானோதயம் அடைவதற்கான வழி. வெறுமனே சொந்த, பந்தங்களை வெறுத்து, சிற்றின்ப இச்சைகளை அடக்குவது மட்டும் துறவறம் அல்ல. மெய்யறிவு குறித்த தேடுதலும், படிப்பதும், விவாதிப்பதும் துறவிகளின் கடமை. அத்துடன் தினசரி குறிப்பிட்ட நேரம் தியானம் செய்வதும் அவசியம். இதையெல்லாம் சாதாரண மனிதர்களும் செய்யலாம்.
பௌத்த மடாலயங்களில் மிக இளம் வயதில் துறவிகளாக சேரும் சிறுவர்களும் தியானப் பயிற்சி எடுக்கின்றனர். (இது குறுகிய காலம் தான். முடியாதவர்கள் விலகிக் கொள்ளலாம்.) பணத்தை பயன்படுத்தாமல், தானமாகக் கொடுக்கும் உணவை உண்டு, எளிமையாக வாழக் கற்றுக் கொள்கின்றனர். இதனை "மூளைச்சலவை... சிறுவர் துஸ்பிரயோகம்... அடிப்படை மனித உரிமை மீறல்..." என்றெல்லாம் புலம்புவோர் தமது அறியாமையை வெளிப்படுத்தி விடுகின்றனர். உண்மையில் இவர்கள் தான், சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும், பரிதாபத்திற்குரிய ஆத்மாக்கள்!
சைவ மதத்தில் முக்தி அடைவது தொடர்பான ஆன்மீகக் கருத்துக்கள், இலங்கையில் பாடசாலைகளில் கற்பிக்கப் படும் சைவநெறி பாடநூலில் எழுதப் பட்டுள்ளன. சைவ மத ஆன்மீக அடிப்படைகளை படிக்காமல், ஒருவர் BA பட்டம் பெற முடியாது. குறைந்த பட்சம் அவற்றை கவனமாகப் படித்திருந்தாலாவது, இந்த "அறிவுஜீவிகளுக்கு"(?) புரிந்திருக்கும். என்ன செய்வது? ஈழத்தமிழரிலும் "படித்தவர்"(?) எல்லோரும் அறிவாளிகள் அல்லவே? இந்தக் காலத்தில் பணம், பொருள் தேடி, வசதியாக வாழ்வதற்காகவே படிக்கிறார்கள். இல்லற வாழ்வை அனுபவிக்கும் சுகவாசிகள் துறவற வாழ்வை வெறுப்பதில் வியப்பேதும் இல்லை.
இந்து மதத்திலும் யோகா போன்று தியானப் பயிற்சிகள் உள்ளன. பண்டைய இந்துக்கள் அவர்களை யோகிகள் என்று அழைத்தனர். சிவபெருமான் கூட ஒரு யோகி தான். சிவனின் படத்தை பார்த்தாலே தெரியும். அவரும் புத்தர் மாதிரி தியானத்தில் அமர்ந்திருப்பார். இருப்பினும், இன்று வரையில் இந்து மதத்தில் பிறந்த சிறுவர்கள் துறவறம் பூணுவதில்லை. அதற்குக் காரணம், இந்து மதம் பௌத்த மதம் போன்று ஒரு நிறுவனமயப் படுத்தப் பட்ட மதம் அல்ல. பௌத்தம் மட்டுமல்ல, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள் தான், உண்மையில் நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள். இந்து என்பது ஒரு மதமே அல்ல. அது இந்தியாவின் பூர்விக மதங்களுக்கு சூட்டப் பட்ட பொதுப் பெயர்.
இன்றும் இந்து மதத்தில் பிறந்து வளர்ந்த "அறிவுஜீவிகள்" சிலரிடம் பிற மதங்கள் குறித்து நிறைய அறியாமை, தப்பெண்ணம் காணப்படுகின்றது. இந்த விடயத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்களிடம் ஓரளவு புரிந்துணர்வு உள்ளது. அதற்குக் காரணம் நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள் சிறு வயதிலேயே தமது தத்துவார்த்த அடிப்படைகளை சொல்லிக் கொடுத்து விடுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்து மதத்தில் அந்த நிலைமை இல்லை.
இதற்கு ஒரு சிறந்த தீர்வு, பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு எல்லா மதங்களைப் பற்றியும் கற்பிக்க வேண்டும். இது ஏற்கனவே கம்யூனிச நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப் பட்டு வந்த நடைமுறை. முன்பு சோவியத் யூனியன் போன்ற சோஷலிச நாடுகளில் சமய பாடம் இருக்காது. அதற்குப் பதிலாக எதிக்ஸ் என்ற ஒரு பாடம் இருக்கும். அதில், உலகில் உள்ள அனைத்து மதங்களினதும் தத்துவ சாராம்சம் சொல்லிக் கொடுக்கப் படும். இதனாம் மாணவர்களுக்கு பரந்த உலக அறிவு கிடைத்து வந்தது.
1 comment:
Get Best SEO Services in Chennai from Eumaxindia – We are Leading SEO & Digital Marketing Company in Chennai, offering numerous packages to meet your business requirements.
<a href="https://eumaxindia.com/best-seo-company-in-chennai/”> SEO Agency Chennai</a>
Post a Comment