Monday, May 04, 2015

நோர்வீஜிய இளம் கம்யூனிஸ்டுகளுடன் சில நாட்கள்


வட ஐரோப்பிய நாடான நோர்வேயில், அரசியல் கட்சிகள் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடியும். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அப்படி அனுமதிப்பதில்லை. அங்குள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான Tjen folket (மக்கள் சேவையாளர்கள்) அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதனால், இன்று அந்தக் கட்சியின் எழுபது சதவீத உறுப்பினர்கள் முப்பது வயதிற்கும் குறைவான இளையோர் என்பது குறிப்பிடத் தக்கது.

நோர்வேயில் ஒரு பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி (Norges Kommunistiske Parti) இருக்கிறது. அது இப்போதும் இயங்கி வருகின்றது.  ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தமையினால், அந்த நாட்டில் புதியதொரு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது.

எழுபதுகளில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாணவர் எழுச்சிக்குப் பின்னர், மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. நோர்வேயில் அது Arbeidernes Kommunistparti (AKP) என்ற பெயரில் கட்சியாக இயங்கியது. ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுடன் வளர்ந்து வந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின்னர் பின்னடவை எதிர்நோக்கியது.

முன்னாள் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து உருவான Rødt (சிவப்பு), தற்போது ஒரு தீவிர இடதுசாரிக் கட்சியாக மட்டும் இருக்கிறது. கோட்பாடுகளை கைவிட்டு விட்டு, இடதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகின்றது. அதனால், அவர்களுடன் முரண்பட்ட கொள்கைப் பற்றுக் கொண்ட பிரிவினர், Tjen folket கட்சியை ஸ்தாபித்தார்கள். Tjen folket தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. இனவெறிக்கு எதிரான வெகுஜன அமைப்பு போன்றவற்றின் ஊடாக, மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது.

ஒரு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக தன்னை அடையாள படுத்தும் Tjen folket, இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் சித்தாந்தம் போதித்து வருகின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அரசியல் வகுப்புகளில் ஆயிரக் கணக்கான இளையோர் பங்குபற்றுகின்றனர். கார்ல் மார்க்சின் மூலதனம் முதல், மாவோவின் மேற்கோள்கள் வரை அனைத்து மார்க்சிய நூலகளையும் கற்று விவாதித்து வருகின்றனர். தாம் கற்றறிந்த விடயங்களை புதிதாக சேரும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துக் கூறி வருகின்றனர். இதன் மூலம் கட்டுக்கோப்பான, கொள்கைப் பிடிப்பு கொண்ட கட்சியாக இருந்து வருகின்றது.

2011 - 2012 காலப் பகுதியில், நான் நோர்வேயில் உள்ள Tromsø எனும் நகரில் வசித்து வந்தேன். அங்கு வேலை செய்த காலத்தில், Tjen folket கட்சியுடன் தொடர்பேற்பட்டது. அரசியல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Tromsø வில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த நேரம் எடுத்த படம் மேலே உள்ளது.

அந்தப் பாடசாலையில் உள்ள உணவுச்சாலைக்கு அருகில், Tjen folket கட்சியின் துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள், மற்றும் மார்க்சிய- லெனினிச தத்துவார்த்த நூல்கள் காட்சிக்கு வைத்திருந்தோம். பெருமளவு மாணவர்கள் வந்து பார்த்து, அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அரச பாடத் திட்டத்தில், கம்யூனிசம் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப் பட்ட போதிலும், மாணவர்களுக்கு அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இருந்துள்ளது. அதனால், பல வகையான கேள்விகளை கேட்டு, தமது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

இங்கேயுள்ள படத்தில் எனக்கு அருகில் நிற்கும் இரண்டு இளைஞர்களுக்கும், வயது 17 க்கு மேலே இருக்காது. இருவரும் மிக இளம் வயதிலேயே புரட்சிகர அரசியலுக்கு வந்தவர்கள். மிகத் தீவிரமான கம்யூனிச ஆர்வலர்கள். பிரச்சாரம் மட்டுமல்லாது, சுவரொட்டிகள் ஓட்டுவது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற வெளி வேலைகளிலும் ஈடுபடுவதுண்டு.

அநேகமாக, நோர்வே அரசு எம் மீது எந்த அடக்குமுறையும் பிரயோகிப்பதில்லை. ஆனால், தீவிர வலதுசாரி இளைஞர்கள் தெருவில் சண்டைக்கு வருவார்கள். பல சமயங்களில், நாஸிகளுடன் கைகலப்புக்கு செல்லாமல் தவிர்ப்பதே பெரிய பாடாக இருக்கும். கட்சியில் புதிதாக சேரும், 14, 15 வயதும் ஆகாத இளைஞர்கள் கூட, பாசிஸ்டுகளுக்கு எதிரான  போராட்ட உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். 

இந்தப் படத்தில், எனக்கு இடதுபுறத்தில் நிற்கும் இளந் தோழர், நோர்வேயின் உச்சியில் உள்ள பின்மார்க் என்ற மாகாணத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள். 2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், நோர்வே முழுவதும் ஜெர்மன் நாஸி படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டது. அவர்களை எதிர்த்து போரிட்ட சோவியத் படைகள், அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் வருவதற்கு முன்னரே, பின்மார்க் பகுதியை விடுதலை செய்திருந்தன. அதனால், பொதுவாகவே பின்மார்க் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர். இதனை அந்த இளந் தோழருடனான உரையாடலின் போது அறிந்து கொள்ள முடிந்தது. 



இது தொடர்பாக Tjen folket கட்சியின் இணையத் தளத்தில் வந்த தகவலின் இணைப்பு: 


No comments: