Friday, December 12, 2014

மூலதனம் கற்போம் - 3 : மதிப்பின் இரு வடிவங்கள்

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் 
(பாகம் - 3) 


 பிரிவு 3 - மதிப்பின் வடிவம் அல்லது பரிவர்த்தனை மதிப்பு

இரும்பு, துணி, தானியம் போன்று இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் வெளித்தெரியும் பௌதிக வடிவம் காரணமாக விற்பனைக்கான சரக்குகளாக இருக்கின்றன. அவை பயன் மதிப்பையும், அதே நேரம் மதிப்பையும் தம்முள் கொண்டுள்ளன என்பதை இது வரையும் பார்த்தோம். அந்த மதிப்புக்கு பின்னால், மனித உழைப்பும், சமுதாயப் பெறுமதியும் இருக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம்.

எமது கண்களுக்கு தெரியும், மதிப்பு எனும் ஆரம்பக் கட்டத்திற்கு திரும்பி வருவோம். விற்பனைக்கான ஒவ்வொரு சரக்கும், அவற்றின் பௌதிக தன்மைகளுக்கு அப்பால் ஒரு பொதுவான மதிப்பைக் கொண்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது இரும்பு, துணி, தானியம் என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பொருட்கள். ஆனால், அவற்றின் விலைகளை துல்லியமாக நிர்ணயிக்கிறோம். எப்படி?

ஒரு சரக்கு, வேறு வகையை சேர்ந்த இன்னொரு சரக்குடன் கொண்ட மதிப்பு சார்ந்த சாதாரண மனித உழைப்பு பற்றிப் பார்த்தோம். பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு மதிப்பு அங்கே இருக்க வேண்டும். நவீன காலத்தில், அந்தப் பொதுவான மதிப்பு பணம் எனும் ஒன்றால் தீர்மானிக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆயினும், நாங்கள் இங்கே ஓர் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். பணம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் என்ன? அது எப்படி தோன்றியது? பணத்தின் மதிப்பு என்ன? ஒரு பொதுவான மதிப்பு எப்படிப் பணமாக மாறியது? முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் செய்ய விரும்பாத வேலை இது. அவர்கள் ஒரு பொருளின் மதிப்பு எப்படிப் பணமாகிறது என்று ஆராய்வதில்லை. ஏனென்றால், மதிப்புக்குப் பின்னால் உள்ள மனித உழைப்பு ஓர் அடிமையுடையதாக கூட இருக்கலாம். அது பற்றி மார்க்ஸ் கொடுக்கும் விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.


1. மதிப்பின் இரு துருவங்கள் : ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும்  

நாம் முன்னர் பார்த்த உதாரணத்தில், துணியானது சட்டையின் மதிப்பாக இருக்கின்றது. அதே நேரம், சட்டை துணியின் மதிப்பை அடையாளப் படுத்துகின்றது. துணி தனது மதிப்பை நேரடியாக காட்டினால், சட்டை துணியின் மதிப்பை மறைமுகமாக காட்டுகின்றது. சட்டையை துணியுடன் ஒப்பிட்டு, துணியின் மதிப்பை நிர்ணயிக்கிறோம். அதனால் துணியின் மதிப்பானது "ஒப்பீட்டு வடிவம்" ஆகும்.

அதே நேரம், இன்னொரு பொருளான சட்டையை, அதனுடன் மாறுபட்ட துணியுடன் சமப்படுத்துகின்றோம். அது "சமத்துவ வடிவம்" ஆகும். ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும், ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள, ஒன்றை விட்டு மற்றதை பிரிக்க முடியாத தன்மைகள் ஆகும். உதாரணத்திற்கு, காந்தம் ஒன்றின் இரண்டு துருவங்களும், ஒன்றோடொன்று எதிரானதாக இருந்தாலும், ஒரே பொருளின் பகுதிகள் தான்.

உலகில் யாரும் ஒரே மாதிரியான பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதில்லை. சட்டைக்கு பதிலாக சட்டையை, அல்லது துணிக்கு பதிலாக துணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். 2 மீட்டர் துணி = 2 மீட்டர் துணி. இதற்கு ஓர் அர்த்தமும் கிடையாது. எனவே துணியின் மதிப்பை, வேறொரு பொருளுடன் ஒப்பிடுவதன் மூலம் தான் அதன் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதற்கு முதலில் அந்த வேறொரு பொருளை சமப் படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

2 மீட்டர் துணி = ஒரு சட்டை என்று பார்த்தோம். அப்படியானால், ஒரு சட்டையின் பெறுமானம், 2 மீட்டர் துணிக்கு சமமானது என்றும் அர்த்தமாகின்றது. இந்த ஒப்பீட்டை மறு பக்கமாக திருப்பி விட்டுப் பார்த்தால், சட்டை துணியின் மதிப்பையும், அதே நேரம் தனது மதிப்பையும், தானே தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அதனால், இவ்விரண்டு பொருட்களிலும் உள்ள, காந்தம் போன்ற எதிரெதிர் துருவங்கள் தான், ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துகின்றன.

ஓரிடத்தில், ஒரு சரக்கின் பெறுமதி அதன் ஒப்பீட்டு வடிவமா, அல்லது சமத்துவ வடிவமா என்பதை, இடம், கேள்வி என்பன தீர்மானிக்கின்றன. அந்தச் சரக்கின் மதிப்பு முக்கியமா, அல்லது அது இன்னொரு பொருளின் மதிப்புக்கு மாற்றீடாக பயன்படுகிறதா என்பதைப் பொறுத்தது.

இனி, மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தையும், சமத்துவ வடிவத்தையும் தனித் தனியாக, விரிவாகப் ஆராய்வோம்.



2. மதிப்பின் ஒப்பீட்டு வடிவம்

(அ.) ஒப்பீட்டு வடிவத்தின் உள்ளடக்கம்

நடைமுறை வாழ்க்கையில், இரண்டு சரக்குகளின் மதிப்புகளை, நாங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு அளக்கிறோம். 2 மீட்டர் துணி = 1 சட்டையா அல்லது 5 சட்டைகளா? குறிப்பிட்ட அளவிலான துணியின் பெறுமானம் எத்தனை சட்டைகளுக்கு சமமானது என்று தான் பார்க்கிறோம். இதன் மூலம், நாங்கள் துணியின் மதிப்பு தான் தெரிவிக்கப் படுகின்றது. எப்படி? அதற்கு சமமாக சட்டையை கொண்டு வந்து நிறுத்துகிறோம். அதாவது, சட்டை ஒரு கண்ணாடி மாதிரி செயற்படுகின்றது. துணியின் பிம்பத்தை பிரதிபலிக்கின்றது.

மதிப்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான், சட்டையுடன் பரிவர்த்தனை செய்கின்றோம். இதனை ஒரு இரசாயனவியல் சூத்திரத்தின் மூலம் புரிய வைக்கலாம். பியூட்றிக் அமிலம், புரோபைல் பார்மேட் இரண்டும் வேறு பட்ட பொருட்கள். ஆனால் இரண்டுமே கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூலப் பொருட்களை சம விகிதங்களில் (C₄H₈O₂) கொண்டுள்ளன.

சட்டையை துணிக்கு சமமான பொருளாக கருதுவதன் மூலம், சட்டையில் மறைந்திருக்கும் உழைப்பை, துணியில் மறைந்திருக்கும் உழைப்புடன் சமப் படுத்துகின்றோம் என்பது தான் அதன் அர்த்தம். நெசவு செய்வதும், தைப்பதும் இரண்டு வேறு பட்ட தொழில்கள் தான். ஆனால், நெசவுக்கு பின்னால் மறைந்துள்ள மனித உழைப்பை பெயர்த்தெடுத்து, தையலுக்கு பின்னால் உள்ள மனித உழைப்புடன் பொதுவாக்குகின்றோம்.

மனித உழைப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மதிப்பைத் தீர்மானிக்கின்றது. ஆனால், அதுவே மதிப்பாக இருப்பதில்லை. ஒரு பொருளில் உருக் கொள்ளும் பொழுது அதன் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. துணியின் மதிப்புகளின் சேர்க்கையாக சட்டை உள்ளது. துணிக்கு சமமான பொருளாக ஒரே இயல்பைக் கொண்டுள்ளது. ஆனால், சட்டை தான் இங்கே மதிப்பை பிரதிபலிக்கிறது.

சட்டை தனியாக இருந்தால் அது மதிப்பெதையும் காட்டுவதில்லை. துணியோடு ஒப்பிடும் போது தான் அது தன் மதிப்பைப் பெறுகின்றது. உதாரணத்திற்கு, சாதாரண உடையில் இருப்பவருடன் ஒப்பிடும் பொழுது, கோட்டு சூட்டு போட்ட ஆசாமி மதிப்புக்கு உரியவராகத் தெரிகின்றார். ஆடம்பர ஆடை அணிந்தவரின் மதிப்பானது, சாதாரண ஆடை அணிந்தவருடன் ஒப்பிடுவதனாலேயே தெரிவிக்கப் படுகின்றது.

ஒப்பீட்டு வடிவத்தில், சட்டை துணியுடன் சமமாக்கும் பொழுது, சட்டை எனும் உருவமானது மதிப்பின் உருவமாகின்றது. அதாவது ஒரு பொருளின் மதிப்பு இன்னொரு பொருளின் பயன்மதிப்பு ஆகும். மதிப்பு என்ற வகையில் துணியும் சட்டையும் ஒன்று தான். அதாவது, துணியின் மதிப்பு தற்போது சட்டை என்ற வடிவத்தைப் பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ மதத்தில், அதன் நம்பிக்கையாளர்கள், ஏசு கிறிஸ்து எனும் மேய்ப்பனின் ஆடுகளாக கருதப் படுவது போன்ற மாற்றம் இது.

துணியும், சட்டையும் உதாரணத்தை உலகில் உள்ள எல்லா சரக்குகளுக்கும் பொருத்திப் பார்ப்பலாம். சரக்கு X ஒன்றின் மதிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக, சரக்கு Y உள்ளது. மனித உழைப்பின் பொருள் வடிவமான சரக்குகள், ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதன் மூலம், தமக்கிடையிலான மதிப்பை தெரிவிக்கின்றன. பயன்மதிப்பு கொண்ட Y, தன்னுடன் உறவு கொண்ட X இன் மதிப்பை தெரிவிக்கிறது. இவ்வாறு ஒரு பொருளின் மாயன் மதிப்பின் ஊடாக, இன்னொரு பொருளின் மதிப்பை தெரிவிப்பதானது மதிப்பின் ஒப்பீட்டு வடிவம் ஆகின்றது.


(ஆ) ஒப்பீட்டு மதிப்பின் அளவு வழி தீர்மானிப்பு

ஒவ்வொரு சரக்கும் பத்து மூட்டை அரிசி, இருபது கிலோ மிளகாய்த் தூள், என்றெல்லாம் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. எந்த சரக்கின் எந்த அளவிலும் மனித உழைப்பு மறைந்துள்ளது. எமது உதாரணத்தில், துணியை சட்டைக்கு சமமாக்குவது மட்டுமல்லாது, 2 மீட்டர் துணி என்று ஒரு திட்டவட்டமான அளவையும் தீர்மானிக்கிறோம். 

இரண்டு மீட்டர் துணி = ஒரு சட்டை என்ற சமன்பாடு, அதாவது துணியின் பெறுமானத்தை சட்டைக்கு சமப் படுத்தும் போது, இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் ஒரே அளவான உழைப்பு செலவாகி உள்ளது என்பதை உறுதிப் படுத்துகின்றோம். ஆனால், உழைப்பு நேரம் என்பது, உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு மாறு படும். அதை நாங்கள் இங்கே பரிசீலிக்க இருக்கிறோம்.

உதாரணம் 1 : சட்டையின் மதிப்பு மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், துணியின் மதிப்பு மாறுகின்றது. பருவ மழை வீழ்ச்சி குறைந்து விட்டதால், அல்லது நிலம் தரிசாகிப் போனதால், துணி உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் இரட்டிப்பாகின்றது. அப்படியானால் துணியின் மதிப்பும் இரண்டு மடங்காகும். முன்பு 2 மீட்டர் துணியில் அடங்கியுள்ள உழைப்பில் சரி பாதி தான், தற்போது ஒரு சட்டைக்கு சமமானது. அப்படியானால், 2 மீட்டர் துணி = 2 மீட்டர் சட்டை என்று சமன்பாட்டை மாற்ற வேண்டும். 

அதே நேரம், நெசவு இயந்திரங்கள் கணணி மயப் பட்டதன் விளைவாக துணி செய்வதற்கான உற்பத்தி நேரம் சரி பாதியாகக் குறைகின்றது. அப்படியானால், துணியின் மதிப்பும் சரி பாதியாகக் குறைகிறது. ஆகவே இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை ஆகின்றது. சரக்கு B இன் மதிப்பு (இங்கே சட்டை) மாறாதிருந்தால், அதன் ஊடாக தெரிவிக்கப் படும் சரக்கு A இன் மதிப்பு நேர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

உதாரணம் 2 : தற்போது துணியின் மதிப்பு மாறாமல் இருக்கிறது, ஆனால் சட்டையின் மதிப்பு மாறுபடுகின்றது. ஒரு சட்டை தைக்க அவசியமான உழைப்பு நேரம் இரு மடங்காகிறது. அதனால் இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை என்றாகிறது.

மறு பக்கம், சட்டையின் மதிப்பு சரி பாதியாகக் குறைந்தால், இரண்டு மீட்டர் துணி = இரண்டு சட்டைகள் ஆகின்றன. சரக்கு A (இங்கே:துணி) இன் மதிப்பு மாறாதிருந்தால், சரக்கு B (இங்கே : சட்டை) மூலமாக தெரிவிக்கப் படும் அதன் மதிப்பு, எதிர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களையும் ஒப்பு நோக்கினால், ஒப்பீட்டு மதிப்பின் மாற்றம் முற்றிலும் மாறுபட்ட எதிரெதிர் காரணிகளினால் ஏற்படலாம் என்பதைக் காண்கிறோம். ஒரு சரக்கின் மதிப்பு மாறாதிருந்தாலும், அதன் ஒப்பீட்டு மதிப்பு மாறலாம். மதிப்பு மாறினாலும் ஒப்பீட்டு மதிப்பு மாறாமல் இருக்கலாம்.

இந்த உதாரணங்களை நாங்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெறால், நிஜ வாழ்க்கையில், இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் பாத்திரத்தை பணம் வகிக்கின்றது. நாட்டில் எதற்காக பணத்தின் பெறுமதி கூடிக் குறைகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மேற்படி உதாரணங்கள் உதவும்.


3. மதிப்பின் சமத்துவ வடிவம் 

சமத்துவ வடிவம் மூன்று குணங்களை கொண்டுள்ளது:
1. ஒரு சரக்கின் பயன் மதிப்பு, தனக்கு எதிரான மதிப்பின் விம்பம் ஆகின்றது.
2. ஒரு சரக்கில் மறைந்துள்ள உழைப்பு, அதன் எதிரில் உள்ள சரக்கின் நேரடியான உழைப்பின் உருவமாகிறது.
3. தனி நபர்களின் உழைப்பு, சமூகத் தன்மையுள்ள உழைப்பின் வடிவத்தைக் கொண்டுள்ளது.

மேற்கொண்டு இவற்றை விரிவாகப் பார்ப்போம்.

A எனும் பொருளும், B எனும் பொருளும் உறவு கொள்ளும் நேரம், B இன் உடல் A இன் மதிப்பாகிறது. ஒரு சரக்கு தனது சொந்த உடலை, சொந்த மதிப்பின் வெளிப்பாடாக காட்டிக் கொள்ள முடியாது. அதனால் வேறொரு சரக்கின் பயன் மதிப்பை ஏற்றுக் கொள்வது அவசியமானது.

சரக்குகளின் பயன் மதிப்புகள் ஒரே அளவில் சமப் படுத்தக் கூடியவை என்பதை, பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். தராசு ஒன்றை எடுத்துக் கொள்வோம். எமக்கு ஐந்து கிலோ கிழங்குகள் தேவை. தராசின் ஒரு தட்டில் சில கிழங்குகளை போடுவோம். அடுத்த தட்டில் ஐந்து கிலோ இரும்புத் துண்டை எடுத்துப் போடுகிறோம். இங்கே இரும்பு தன்னை இரும்பாகக் காட்டிக் கொள்வதில்லை. எடை அளக்கும் பொருளாக உள்ளது.

எடை என்ற வகையில், இரும்பும், கிழங்கும் ஒன்று தான். வெவ்வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இரண்டும், ஒரே கனமாக இல்லையென்றால், அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொள்ள முடியாது. தராசின் உதாரணத்தில், இரும்புத் துண்டு எடையை மட்டுமே குறிப்பது போன்று, எமது முன்னைய உதாரணத்தில் சட்டை துணியுடனான மதிப்பை மட்டுமே தெரிவிக்கின்றது.

ஆயினும், தராசின் ஒப்புவமை அது மட்டும் தான். எடை அளக்கும் இரும்புத் துண்டு, கிழங்கின் எடையை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால், சட்டையும், துணியும் இயற்கையல்லாத ஒன்றின் (உழைப்பு) மதிப்பை தெரிவிக்கின்றன. அது ஒரு வித்தியாசம் ஆகும்.

துணியின் ஒப்பீட்டு வடிவம், அதன் குணங்களில் இருந்து வேறுபட்ட சட்டையை போல் இருக்கிறது என்றால், அதன் அடிமட்டத்தில் சமூக உறவு மறைந்திருக்கிறது என்று அர்த்தம். சமத்துவ வடிவில் இது நேர்மாறாக காட்டிக் கொள்ளும். சரக்காகிய சட்டை அது உள்ள நிலையிலேயே மதிப்பை தெரிவிக்கின்றது. அது இயற்கையாக கிடைத்த மதிப்பின் வடிவம்.

சட்டை, துணியுடன் சமமான நிலையில் இருக்கும் உறவு நீடிக்கும் வரை தான் இது பொருந்தும். அதாவது, ஒப்பிடுவதற்கு துணி இல்லா விட்டால், சட்டைக்கும் மதிப்பு இருக்காது. விம்பங்களின் விநோதங்களில் இது முக்கியமானது. குடி மக்கள் இருப்பதால் தான், ஒருவர் அரசராக இருக்கிறார். மாறாக, அவர் அரசராக இருப்பதால் தான், தாங்கள் குடி மக்களாக இருப்பதாக எல்லோரும் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் முக்கியத்துவம் பல வகையானது. அது வெப்பத்திலும், குளிரிலும் இருந்து எமது உடலைப் பாதுகாக்கின்றது. சமத்துவ வடிவத்தை காட்டுகின்றது. அதே நேரம், பரிவர்த்தனை செய்து கொள்ளத் தக்கதாக உள்ளது. சமத்துவ வடிவத்தின் இந்த புதிரான தன்மை, முதலாளிய பொருளாதார அறிஞர்கள் அதைப் பணமாக புரிந்து கொள்ளும் வரையில் தெரிய வருவதில்லை.

அவர்கள் சரக்குகளுக்கு மாற்றீடாக தங்கம், வெள்ளியை கொண்டு வருவதன் மூலம், அந்த மாயத் தன்மையை விளக்க முனைகின்றனர்.  நமது முன்னைய உதாரணமான, "2 மீட்டர் துணி = 1 சட்டை" என்ற சாமானிய மதிப்புத் தெரிவிப்பு அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

சமத்துவமாக்குவதற்கு பயன்படும் சரக்கின் உடல் உருவம், நேரடியான மனித உழைப்பின் பொருள் வடிவமாக உள்ளது. அதே நேரம், மறைபொருளான உழைப்பின் உற்பத்தி வடிவமாகவும் இருக்கிறது. தையலிலும், நெசவிலும் மனித உழைப்புச் சக்தி செலவிடப் படுகின்றது. எனவே மனித உழைப்பு என்ற பொதுவான குணத்தை பெற்றுள்ளன. ஆனால், மதிப்புத் தெரிவிப்பில் ஒரு தலை கீழ் மாற்றம் ஏற்படுகின்றது.

அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். எடுத்துக் காட்டாக, நெசவு தான் துணியின் மதிப்பை உருவாக்குகிறது. அதற்கு காரணம், அது நெசவு என்பதால் அல்ல, மனித உழைப்பு என்ற பொதுக் குணத்தை கொண்டிருக்கும் காரணத்தினால் தான். இந்த உண்மையை நிரூபிப்பது எப்படி? நெசவு மூலம் உற்பத்தி செய்யப் பட்ட ஒரு பொருளை, இன்னொரு வடிவமான தையல் மூலம் உற்பத்தி செய்யப் பட்ட சட்டைக்கு சமமாக நிறுத்துவதன் மூலம் நிரூபிக்கலாம்.

இவ்வாறு ஒரு பொருளின் குறுக்கப் பட்ட மனித உழைப்பு, அதன் எதிரில் உள்ள நேரடியான மனித உழைப்பின் விம்பம் ஆகின்றமை, சமத்துவ வடிவின் இரண்டாவது குணம் ஆகும்.

தையலில் உள்ள திண்மையான உழைப்பு, துணியில் உறைந்துள்ள உழைப்புடனும் சேர்ந்து வருவதால், அது சமூகப் பெறுமானம் உள்ள உழைப்பாக மாறுகின்றது. இவ்வாறு தனியாட்களின் உழைப்பு, சமூகத் தன்மை கொண்ட உழைப்பெனும் வடிவம், சமத்துவ வடிவத்தின் மூன்றாவது விசேட குணமாகும்.

இயற்கையில் உள்ள இவ்வாறான பொருளாதார வடிவங்களை, பொருட்களின் குணாம்சங்களை, மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில் பகுப்பாய்வு செய்துள்ளார். சரக்குகளின் பண வடிவம் உயர்நிலை வளர்ச்சி என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், வேறொரு சரக்குடன் ஒப்பிடும் பொழுது, அதன் மதிப்பு விருப்பம் போல எடுத்துக் கொள்ளப் படுகின்றது என்று கூறுகின்றார்.

அரிஸ்டோட்டிலின் உதாரணம்: "5 படுக்கைகள் = ஒரு வீடு".  அதே 5 படுக்கைகளை குறிப்பிட்ட அளவு பணத்திற்கு சமமானதாக ஆக்கலாம். வீடு பண்பு வழியில் படுக்கைக்கு சமமான மதிப்புருவமாக்கப் பட வேண்டியது அவசியம் என்கிறார். "சமத்துவம் இல்லாமல் பரிவர்த்தனை இருக்க முடியாது. பொதுவான அளவீடு இன்றி சமத்துவம் இருக்க முடியாது." என்பது அரிஸ்டோட்டிலின் வாதம். ஆனால் மேலும் அவர் கூறும் பொழுது: "யதார்த்த வாழ்வில், பல்வேறு பட்ட பொருட்களை ஒன்றுக்கொன்று அளப்பது சாத்தியமில்லை." என்கிறார்.

இங்கே அவர் பொருட்களின் தரங்களை, தன்மைகளை அளப்பதை தான் அப்படிக் குறிப்பிடுகிறார். நடைமுறை வாழ்கையை இலகுவாக்குவதற்கான, ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே, இந்த அளவிடல் முறையை பின்பற்றலாம் என்பது அவரது முடிவு.

ஆகவே, மதிப்பு பற்றிய கருத்தியலின் பற்றாக்குறை காரணமாக, அரிஸ்டோட்டில் தனது பகுப்பாய்வு தோல்வியடைந்ததாக கூறுகின்றார். படுக்கைகளையும், வீட்டையும் சமமாக்கும் அந்தப் "பொதுத் தன்மை" எது? அரிஸ்டோட்டில் அப்படியொன்று இருக்க முடியாது என்கிறார். ஏன் இருக்க முடியாது? படுக்கையுடன் ஒப்பிடும் பொழுது, வீடானது சமமான, அடையாள படுத்தத் தக்க ஏதோ ஒன்றை தன்னுள் கொண்டுள்ளது. அது தான் மனித உழைப்பு.

சரக்குகளுக்கு மதிப்பை கொடுப்பது உழைப்பு தான் என்பதை, அரிஸ்டோட்டில் பார்க்க விடாமல் ஒன்று தடுத்து விட்டது. அன்றைய கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களின் சமத்துவமின்மை மட்டுமல்லாது, உழைப்புச் சக்திகளின் சமத்துவமின்மையையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மதிப்பின் வடிவத்தை தீர்க்கும் புதிரானது, மக்கள் மனதில் மனிதர்கள் சம உரிமை கொண்டவர்கள், மனித உழைப்பு சமத்துவமானது, என்ற கருத்தியல் நிலை பெறும் காலத்தில் தான் தீர்க்கப் படும். பொருட்களின் வடிவம், பொதுவான மனித உழைப்பின் உற்பத்தியாக கருதப் படும் ஒரு சமுதாயத்தில் அது சாத்தியமாகும். சரக்குகளின் உரிமையாளர்கள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சமுதாயத்தில் அது புரிந்து கொள்ளப் படும்.

இருப்பினும், சரக்குகளின் மதிப்பின் வெளிப்பாட்டில் ஒரு சமத்துவ உறவு இருக்கின்றது என்ற உண்மையை அரிஸ்டோட்டில் என்ற மேதை கண்டுபிடித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாய நிலவரங்கள் மட்டுமே, சமத்துவ உறவின் பின்னால் என்ன இருந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க விடாமல் அவரைத் தடுத்து விட்டன.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 

No comments: