Sunday, December 28, 2014

"கம்யூனிசமும் கத்தரிக்காயும்" : காடு சினிமா ஓர் அறிமுகம்


கத்தி சினிமாப் படத்தில் கம்யூனிசமும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. ஆனால், சமூகவலைத் தளங்களில் அதைச் சுற்றி நடந்த விவாதங்கள், வியாக்கியானங்கள் ஏராளம். அதில் நூறில் ஒரு பங்கு கூட, "காடு" திரைப் படம் பற்றிப் பேசப் படவில்லை. காடு படத்தில், "கத்தரிக்காயை வைத்தே கம்யூனிச விளக்கம்" கொடுக்கப் படுகின்றது. அதைப் பற்றி பேசினால், "கத்தரிக்காய் சாப்பிடும் பொழுதெல்லாம் கம்யூனிசம் நினைப்பு வந்து தொலைக்கும்" என்ற எச்சரிக்கை உணர்வுடன் பலர் தவிர்த்திருக்கலாம்.

வேலு காட்டுக்குள் வாழும் எழுதப் படிக்கத் தெரியாத கதாநாயகன். அவனுக்கு ஒரு படித்த நண்பன் கருணா.வனத்துறை அதிகாரியாக வர விரும்பிய கருணா, வேலை கிடைக்காத காரணத்தினால் சந்தன மரம் கடத்தி அகப்படுகிறான். ஆனால், தனக்குப் பதிலாக வேலுவை பொலிசில் மாட்டி விடுகிறான். அதைத் தொடர்ந்து வேலு வெளியே வர முடியாதவாறு பொய்க் குற்றச்சாட்டுகளை சோடித்து சிறைக்கு அனுப்புகிறான். அதே நேரத்தில், கருணா எதிர்பார்த்த வனத்துறை அதிகாரி வேலை கிடைக்கிறது. சந்தன மரக் கடத்தல்காரர்களுடன் ஒத்துழைப்பதுடன், சூழ்ச்சி செய்து தனது ஊர் மக்களையே வெளியேற்றுகின்றான்.

இதற்கிடையே, செய்யாத குற்றத்திற்காக சிறைக்குள் அடைக்கப்பட்ட வேலுவுக்கு, அரசியல் ஞானோதயம் பிறக்கிறது. புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்காக, சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சமுத்திரக்கனி மூலம் அரசியல் உணர்வு பெறுகிறான். இறுதியில், காடும் காடு சார்ந்த மக்களினதும் அரசியல் உரிமைகள் பற்றிய தெளிவு பெற்ற கதாநாயகன் வேலு, விடுதலையான பின்னர் போராட்டம் நடத்துகிறார்.

இந்தப் படத்தில், கம்யூனிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? போன்ற விடயங்களை, மிகவும் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். உரிமைகளுக்காக சிறைக் கைதிகள் நடத்தும் ஒன்று பட்ட போராட்டம், சிறைச்சாலையும் புரட்சியின் கூடாராம் தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

சிறைக் கைதிகள் சேகுவேரா தனது மகளுக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கிறார்கள். உண்மையில், பல கைதிகள் சிறையில் தான் சேகுவேராவின் பெயரைக் கேள்விப் பட்டிருப்பார்கள். அவர்கள் சேகுவேராவின் புத்தகம் வாசிக்கும் அளவிற்கு அரசியல் அறிவு பெறுகிறார்கள் என்பதை படத்தில் பல காட்சிகளின் ஊடாக காட்டி இருக்கிறார்கள்.

சிறைக்குள் சென்ற கைதிகள் அரசியல் உணர்வு பெறுவது, நிஜத்தில் பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவில் நக்சல்பாரி போராட்டம் நடந்த காலத்தில், சிறைச் சாலைகள் புரட்சியை போதிக்கும் பள்ளிக்கூடங்களாக இருந்தன. இத்தாலியிலும் அதே காலகட்டத்தில் Brigate Rosse (செம்படை) இயக்கம், இதற்காகவே தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்திருந்தது.

காடு படத்தில் வரும் புரட்சியாளர் பற்றிய பின்னணி விபரங்கள் எதுவும் கொடுக்கப் படவில்லை. ஆனால், அவர் பேசும் வசனங்கள் மனதில் தைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சாக்ரடீஸ் மாதிரி, காவலர்களின் அழுத்தம் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் நேரத்திலும், "நீங்கள் வெறும் அம்புகள் தான்... எனது போராட்டம் உங்களுக்கும் சேர்த்து தான்..." என்று கூறும் காட்சி வருகின்றது.

நல்ல உணவு வேண்டுமென்பதற்காக, சிறைக் கைதிகள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுகிறார்கள். இதுவும் உண்மையில் பல நாடுகளில் நடந்துள்ளது. பெரு நாட்டில் நடந்த மாவோயிச ஒளிரும் பாதை கைதிகளின் சிறைச்சாலைப் போராட்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

கம்யூனிசம் பேசுவது, தமிழ் மண்ணுக்கு அந்நியமான விடயம், என்று நினைத்துக் கொண்டிருக்கும் மேட்டுக்குடியினர், காடு படத்தை பார்க்க வேண்டும். காட்டையும், அதன் வளத்தையும் பாதுகாப்பது கம்யூனிசம் என்றால், காட்டை அழிப்பது முதலாளித்துவம் என்று பொருளாகும். காட்டில் வாழும் மக்களின் போராட்டமும் மண் உரிமைப் போராட்டம் தான்.

காடு படத்தில் வரும் சில வசனங்கள்: 
  • “இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் வைச்சது.. உன்னோட குடும்பச் சொத்து.. அதை ஒருத்தன் வெட்டுனா அவனை நீ வெட்டு..”
  • “உலகத்தில் சமாதானம் முன் வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகாரம்தான் ஜெயிச்சிருக்கு.”
  • “உரிமைகளை முழுமையாக பெற ஒரே வழி போராடி பெறுவதுதான். அப்படி பெற்ற உரிமைகள்தான் நீடிச்சு நிலைச்சு நிக்கும்..”

3 comments:

வலிப்போக்கன் said...

தாங்கள் விமர்சித்ததால் அவசியம் படம் பார்க்க வேண்டும் என்ற உந்ததல் உள்ளது. ஆனால் தியேட்டரில் சென்று பார்க்கமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

Kalaiyarasan said...

Balachandran Prasanna:
27 November · Edited ·

//உலகமயமாக்கல் ,தனியார்மய தாராளமய சூழலில் பழங்குடிகளும் ,விவசாயிகளும், தொழிலாளிகளும் ,நடுத்தர வர்கத்தினரும் வாழவே முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் பழைய பாணி மசாலா படங்கள் செல்லுபடி ஆவதில்லை . சமூக பிரச்சனைகளை பற்றி கொஞ்சமாவது யதார்த்தமாய் பேசுகிற படங்கள் தான் இனி ஓடும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது .அஞ்சானின் தோல்வியையும் கத்தி யின் வெற்றியையும் ஒப்பிடுக . ரஜினியின் லிங் காவும் அணைக்கட்டு பிரச்சனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவே அறிகிறோம் . இந்த பின்னணியில் காடு படம் வெளிவந்திருக்கிறது . சாதி கட்சியின் முக்கிய பிரமுகரும் ரியல் எஸ்டேட் பெரும் புள்ளியுமான நேருநகர் நந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார் . காளபட்டியின் தலித் சேரியை எரித்து சாம்பலாக்கியவர்கள் , நிலகொள்ளையர்கள்l, கந்துவட்டி மாபியாக்கள்,
இப்போது நமக்கு முற்போக்கு , சமூகநீதி ,சுற்றுச்சூழல் ,கம்யூனிசம் ,ஆகியவற்றை போதனை செய்து கல்லா கட்ட புறப்பட்டிருக்கிறார்கள்.//

Pathman said...

http://runtamil.tv/watch-kaadu-tamil-movie-online/ இந்த இணைப்பில் இந்தப் படம் பார்க்கலாம் தெளிவான பிரதி நான் முன்பு தெளிவற்ற பிரதி பார்த்து இப்பொழுது தெளிவான் பிரதி பார்க்கிறேன் , வேலு கருணா என்ற பெயர்கள் தர்செலான பெயர்களா அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையும் , கருணாவையும் குறிக்கும் பெயரா